IIN 60

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

Humanistic therapy என்பது மனப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் எந்தளவுக்கு சூழலை நல்லவிதமாகக் கையாள முடிகிறதென்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. இதில் அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்றவை குறித்து நோயாளிகளுக்குக் கவுன்சலிங் அளிக்கப்படும். மானுட தத்துவ அறிஞர்களான ஜேன் பால் சார்ட்டர், மார்ட்டர் பபர் மற்றும் சோரன் கியர்கெகார்ட் இந்த வகை தெரபியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்கள். ஹியூமானிஸ்டிக் தெரபி மூன்று வகைப்படும். Client Centered therapy, Gestalt therapy, Existential therapy ஆகியவையே அந்த மூன்று வகைகள். மனப்பிறழ்வுக்குறைபாட்டுக்கு ஆலோசனை வழங்கும் தெரபிஷ்டுகள் இவற்றில் ஏதோ ஒன்றை மட்டும் நம்புவதில்லை. நோயாளியின் பாதிப்புக்குத் தகுந்தாற்போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தெரபிகளை கூட்டாக கொடுத்து அவர்களை குணப்படுத்த முயல்வார்கள்.

                                     -American Psychological assoiciation

பிக் ஷாப்பருக்குள் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணிற சட்டையில் இருந்த பழுப்பு வண்ண கறை இரத்தம் தான் என்பதில் மகேந்திரனுக்கும் இதன்யாவுக்கும் எந்த ஐயமும் இல்லை. ஆனால் யாருடைய உதிரம் அது என்பது தான் சந்தேகம்.

“இதை ஃபாரன்சிக் லேபுக்கு அனுப்பி இனியா கேஸ் சாம்பிள்சோட மேட்ச் பண்ணி பாக்க சொல்லவும் முடியாது.. பிகாஸ் கேஸ் முடிஞ்சு போச்சு” என்றார் மகேந்திரன் சலிப்போடு.

அவர் சலித்துக்கொள்ளும்போது மார்த்தாண்டன் வந்துவிட்டார்.

“குட்மானிங் மேடம்” என்றவர் மகேந்திரனின் கையிலிருந்த லத்தியில் தொங்கிய சட்டையைப் பார்த்துவிட்டு “இது யாரோட சட்டை? எதுக்குயா இதை இப்ப லத்தில தொங்கவிட்டுருக்க?” என்று வினவினார்.

மகேந்திரனுக்குப் பதிலாக இதன்யா அவரது கேள்விக்குப் பதில் அளித்தாள்.

“நேத்து நான் சர்சுக்குப் போயிருந்தேன்… அங்க திடீர்னு ராக்கி கையில ஒரு பிக் ஷாப்பரோட வந்தான்… என்னைப் பாத்ததும் டென்சன் ஆகிட்டான்… நான் பிக் ஷாப்பர்ல என்ன இருக்குனு கேட்டதும் சர்ச்ல இருந்து ஓடி ஃபாதர் வீட்டுக்குள்ள புகுந்துக்கிட்டான்… அவர் கிட்ட கேட்டதுக்கு அது என்னவோ சண்டே க்ளாஸ் குழந்தைங்களுக்காக வாங்குன ட்ரஸ்னு சொன்னார்… பட் அன்னைக்கு நைட் தூக்கம் வரலனு நான் கோவில் பக்கம் வாக் போனேன்… அங்க ஃபாதர் இந்த பிக் ஷாப்பரை கன்ஸ்ட்ரக்சன் வேலைக்கு வந்த ஆள் கிட்ட குடுத்து என்னவோ சொன்னார்… உடனே அந்தாளு இதை மண்ணுல புதைச்சிட்டான்.. அடையாளத்துக்கு ஒரு செங்கல்லை வச்சிட்டுப் பொனான்… அவன் போனதும் புதைச்சு வச்சிருந்த பிக் ஷாப்பரை நான் எடுத்துட்டேன்”

“ஃபாதர் இதை புதைக்கச் சொன்னாரா?” கேள்வியோடு சட்டையை அப்படியும் இப்படியுமாகப் பார்த்த மார்த்தாண்டன் தொப்பியைக் கழற்றிவிட்டு சிகையைக் கோதிக்கொண்டார்.

“இந்தக் கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறமும் எல்லாம் புதிரா இருக்குதே மேடம்… என்ன தான் செய்யுறது?”

இதன்யா மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சில நிமிடங்கள் யோசித்தவள் “கலிங்கராஜன் கிட்ட பேசி கேஸை ரீ-ஓப்பன் பண்ணச் சொன்னா அவர் ஒத்துப்பாரா?” என்று கேட்க

“வாய்ப்பு இல்ல மேடம்.. எந்தப் புருசன் தனக்கு துரோகம் பண்ண நினைச்ச பொண்டாட்டிக்கு உதவி செய்யணும்னு நினைப்பான்? அந்தாளு விட்டா போதும்னு இந்த ஊரை விட்டே ஓடிட்டார்… சான்ஸ் ரொம்ப கம்மி” என்றார் மார்த்தாண்டன்.

மகேந்திரனோ லத்தியில் தொங்கிய சட்டையை பிக் ஷாப்பரில் வைத்தார்.

“அவரைத் தவிர வேற யாரும் பெட்டிசன் போட முடியாது” என்று பெருமூச்சுவிட்டாள் இதன்யா.

“அவர் கிட்ட பேசிப் பாக்க நான் தயார் மேடம்… பட் அந்தாளுக்கு ஏன் இந்தக் கேசை ரீ-ஓப்பன் பண்ணுறது முக்கியம்னு புரியவைக்க நமக்குச் சில ஆதாரங்கள் வேணும்… இந்தச் சட்டை, அதைக் குடுத்த ஃபாதரைக் காரணம் காட்டுனாலும் அந்தாளு ஒத்துக்க வாய்ப்பில்ல… வீ நீட் சாலிட் ப்ரூஃப்ஸ்” என்றார் மார்த்தாண்டன்.

மூவரும் அடுத்து என்ன செய்வதென புரியாமல் திகைப்போடு இருக்கும்போது பொன்மலை முருகன் கோவிலின் பக்கவாட்டுச்சுவரின் கட்டுமான வேலைகள் ஆரம்பித்திருந்தது.

கான்க்ரீட் கலவை கலக்கும் இயந்திரங்கள் சிமெண்ட் கலவையைக் கலக்கிக்கொண்டிருந்தன. அதனருகே நின்று கொண்டிருந்தான் பாதிரியாரிடமிருந்து பிக் ஷாப்பரை வாங்கி மண்ணில் புதைத்து வைத்த ஆடவன்.

அவன் கண்களில் இருந்த பதபதைப்பு அடங்கவில்லை. கண்களால் மணல் குவியல்களை ஆராய்ந்தான்.

“அடையாளத்துக்கு வச்ச செங்கல் இருக்கு… ஆனா பையைக் காணும்… பை மட்டும் எப்பிடி காணாம போயிருக்கும்?” எனத் தனக்குள் பேசிக்கொண்டான் அவன்.

அச்சமயத்தில் அங்கே வந்தார் பாதிரியார் பவுல். அவனைக் கண்களால் தனியே வருமாறு அழைத்தார் அவர்.

அந்த ஆடவனும் வர “சொன்ன வேலை முடிஞ்சுதா?” என விசாரித்தார் பாதிரியார்.

“இல்லங்க ஃபாதர்… அந்த மண் குவியல்ல தான் பையை புதைச்சு வச்சிருந்தேன்… ஆனா காலையில பாத்தா பை இல்ல”

“நல்லா யோசிச்சுப் பாரு… இங்க தான் வச்சியா?”

“அடையாளத்துக்குச் செங்கல்லை கூட வச்சேனுங்க ஃபாதர்… யாருக்குமே சந்தேகம் வர வாய்ப்பில்ல”

“அப்புறம் எப்பிடி பை காணாம போச்சு? அந்தப் பையில இருந்த சட்டைய அப்பவே எரிச்சிருக்கலாம்… இதன்யா மேடமோட கண் கழுகு கண் மாதிரி… நான் என்ன செஞ்சாலும் அவங்க கண்டுபிடிச்சுடுவாங்கனு தான் உன் கிட்ட கொண்டு வந்து குடுத்தேன்… நீ என்ன பண்ணி வச்சிருக்க பாரு”

வருத்தமாக ஒலித்தது பாதிரியாரின் குரல். அந்த ஆடவனோ தலைகுனிந்து நின்றான்.

“கான்க்ரீட் கலவை மிசின்ல சட்டைய போட்டு அதை சுவரோட சுவரா வச்சு பூசிடலாம்னு இருந்தேனுங்க ஃபாதர்” என்றவனை அதிருப்தியாய் பார்த்தார்.

“என்ன தான் சாத்தானைக் கும்பிடுற குரூப்பா இருந்தாலும் கோவில் சுவருக்குள்ள அந்தச் சட்டைய வச்சு பூசி மறைக்கணு,ம்னு நினைச்சது தப்பு.. உன் கிட்ட ஆதாரத்தைக் குடுத்து அழிக்கச் சொன்னாரே அந்த மனுசனைச் சொல்லணும்” எனக் கடிந்த பாதிரியார் பவுல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

 அங்கிருந்து சென்றவர் தேவாலயத்திற்குள் வந்து இயேசுநாதரின் முன்னே மண்டியிட்டுக் கைகூப்பினார்.

“நான் செஞ்சது தவறு தான்… குடும்பத்தைத் துறந்து இந்த அங்கியை போட்டப்பவே பந்தம் பாசத்தை என் மனசுல இருந்து தூக்கிப் போட்டிருக்கணும்… அதை செய்யாததோட விளைவு இன்னைக்கு மாபெரும் பாவத்துக்குத் துணையா நானும் இருக்க வேண்டிய கட்டாயம்… இந்தப்  பாவியை மன்னிச்சிடுங்க கர்த்தரே!”

அவரைக் கர்த்தர் மன்னிப்பாரோ இல்லையோ வாழும் காலம் முழுவதும் அவரது மனசாட்சி மன்னிக்காது என்பது திண்ணம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையோடு உலாவியபோது பொன்மலை முருகன் கோவிலில் பக்கவாட்டுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டுக் பங்குனி உத்திர திருவிழாவும் ஆரம்பித்தது.

பிழைப்பிற்காக பொன்மலையிலிருந்து வெவ்வேறு நகரங்களுக்குப் புலம்பெயர்ந்த குடும்பங்கள் எல்லாம் திருவிழாவுக்காக ஊருக்கு வந்துவிட மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது அந்த மலை கிராமம்.

ஐந்து நாட்கள் திருவிழா என்பதால் சீரியல் விளக்கு சரங்கள் ஊரெங்கும் கம்பம் நாட்டி தொங்கவிடப்பட்டு இரவில் மினுக் மினுக் என மினுங்கி ஊருக்குத் திருவிழா கலையைக் கொடுத்தன.

ஐந்து நாட்களும் கோவிலில் மூன்று வேளைகள் அன்னதானம் நடைபெறுமென அறிவித்திருந்தார்கள். ஊரிலிருந்து பிழைக்க சென்று வசதியாய் வாழும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேளைக்குப் பொறுப்பேற்றிருந்தார்கள்.

முதல் நாள் காலையில் இட்லி பொங்கல் சாம்பார் சட்னியோடு பொன்மலையிலுள்ள காவல் நிலையத்துக்கு பெரிய டிபன் கேரியர்களில் அன்னதான சாப்பாடு அனுப்பிவைக்கப்பட்டது.

“இன்னைக்குப் பொன்னுரங்கம் ஐயாவோட கட்டளை… அவரு தான் ஸ்டேசன்ல இருக்குற எல்லாருக்கும் மூனு வேளை சாப்பாடும் குடுத்துவிட்டுடணும்னு ஆர்டர் போட்டிருக்காருங்க சார்” என பணியாட்கள் சொல்லிவிட்டு சாப்பாட்டை வைத்துச் சென்றார்கள்.

பிற மதத்தினர் வீடுகளுக்கும் இவ்வாறு அன்னதான உணவு அனுப்பப்பட்டது. அன்று மதியம் கலிங்கராஜனின் கட்டளை என்று சொல்லிவிட்டு ரசூல் பாய் வீட்டில் சாப்பாடு கொடுத்துவிட்டுப் போனார் பொன்னுரங்கம் வீட்டு பணியாள் ஒருவர்.

இனியா அப்போது தான் முபீனாவை கணினி வகுப்பிலிருந்து அழைத்து வந்திருந்தாள். மதியவுணவை கலிங்கராஜனின் தரப்பு ஆட்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். சித்ரான்னங்களோடு சாதம், சாம்பார், மூன்று வகை காய்கள் என அன்னதான சாப்பாடு தடபுடலாய் இருக்க அதைச் சாப்பிட்டபடியே

“கலிங்கராஜன் வந்திருக்கார்னா கட்டாயம் குழந்தைங்களும் வந்திருப்பாங்க தானே பாய்?” என்று கேட்டாள் அவள்.

“குழந்தைங்க வரல மேடம்… அவங்க மூனு பேருக்கும் ஸ்கூல்ல இருந்து கொடைக்கானல்ல சம்மர் கேம்ப் அரேஞ்ச் பண்ணிருக்காங்களாம்… அங்க போயிட்டாங்கனு கோவில்ல வச்சு பாத்தப்ப கலிங்கராஜன் சொன்னார்”

இது எதேச்சையாக நடந்தது போல தெரியவில்லை இதன்யாவுக்கு.

அமைதியாகச் சாப்பிட்டவள் இரவு திருவிழா பார்க்க அருமையாக இருக்குமென அஸ்மத் சொன்னதால் அதைக் காண ஆவலாகத் தயாரானாள்.

அஸ்மத்திடமிருந்து காட்டன் சேலை ஒன்றை வாங்கி கட்டிக்கொண்டு பளீரென தயாரானவளைப் பக்கத்துவீட்டுப்பெண்மணி மீனா கோவிலுக்கு அழைத்துப் போனார்.

கோவில் படியெங்கும் பக்தர்கள் வெள்ளம். விளக்குகள் மலர் அலங்காரங்கள் என ஜொலித்தது பொன்மலை முருகனின் கோவில்.

கோவிலை அடைந்ததும் முருகனுக்கு நடந்த அபிசேக ஆரத்தியை கண்கொட்டாமல் பார்த்தாள் இதன்யா. அவளது அன்னைக்காக வீடியோ எடுக்கவும் தவறவில்லை அவள்.

விபூதி குங்கும பிரசாதத்தை மீனாவோடு சேர்ந்து வாங்கிக்கொண்டவள் மார்த்தாண்டனும் மகேந்திரனும் காக்கி பேண்ட் மற்றும் டீசர்ட் அவதாரத்தில் வரவும் புன்னகைத்தாள்.

அவர்களிடம் அர்ச்சகர் திருநீறு மற்றும் குங்குமத்தைக் கொடுக்க முருகனைத் தரிசனம் செய்துவிட்டு இதன்யாவின் அருகே வந்து நின்றார்கள் இருவரும்.

மீனாவுக்கு அவர்களைக் கண்டதும் மருட்சி. ஆனால் இதன்யா அவர்களிடம் சகஜமாக உரையாடவும் மிரட்சி அகல அவர்கள் பேசுவதைக் கவனித்துக்கொண்டு நின்றார்.

“கோவிலுக்கு ஓடியாடி வேலை செய்யுறான் பாருங்க” என்று ராக்கியைக் கைகாட்டினார் மகேந்திரன்.

அவனோடு ஒட்டிக்கொண்டு திரிந்த நிஷாந்தும் வேலை செய்ய சளைக்கவில்லை. மீனாவோடு வந்ததிலிருந்து இதன்யா கவனிக்கத் தானே செய்தாள்.

எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த கலிங்கராஜன் இவர்களைப் பார்த்ததும் நழுவப்போக மீனாவோ கிராமத்துப்பெண்களின் வெள்ளந்தி குணத்தோடு

“அண்ணே சொகமா இருக்கியளா? நீங்க மட்டும் வந்திருக்கிய? பிள்ளைங்களை காணுமே?” என விசாரித்ததும் வேறு வழியின்றி புன்னகைத்தபடி அங்கே வந்தார்.

“அவங்களுக்கு ஸ்கூல்ல இருந்து சம்மர் கேம்ப் அரேஞ்ச் பண்ணிருக்காங்கம்மா… கொடைக்கானல் போயிருக்காங்க மூனு பேரும்” என்றார் அவர்.

“என்னண்ணே நீங்க விவரம் புரியாத ஆளா இருக்கிய? கொடைக்கானலும் நம்ம ஊரு மாதிரி தான? இங்க இருந்து பிள்ளையளை பாளையங்கோட்டைக்குக் கூட்டிட்டுப் போயி மறுபடியும் நம்ம ஊரு மாதிரி மலை மேல உள்ள ஊருக்கு அனுப்பி வச்சதுக்குப் பதிலா நம்ம ஊருக்கே கூட்டிட்டு வந்திருக்கலாம்.. நம்ம ஊரு மாதிரி வருமா பாளையங்கோட்டை? அங்க வெக்கை தாங்கலனு என் நாத்தனா பிள்ளைங்களை இங்க கொண்டு வந்து தள்ளிட்டா… அதுங்களுக்கும் பரிட்சை லீவு”

மீனா வாய் ஓயாமல் பேசினாலும் தர்க்கரீதியாகக் கலிங்கராஜனின் செயல்களிலுள்ள விசித்திரத்தைச் சுட்டிக்காட்டவும் மூன்று காவல்துறை விழிகளும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன.

அப்போது தான் அக்காட்சி அரங்கேறியது. ஊர்த்திருவிழாவுக்குக் கோவில் கமிட்டி சார்பாக வேலை செய்யும் இளைஞர்கள் அனைவரும் ஒரே வண்ணத்தில் ஊர்ப்பெயர் பொறித்த டீசர்ட் அணிந்து ஆங்காங்கு உலா வந்தார்கள். அவர்களில் ராக்கியும் நிஷாந்தும் கூட அடக்கம்.

அந்த டீசர்ட் அணிந்த இளைஞன் ஒருவனின் முதுகுப்புறம் இதன்யாவுக்கும் அவளோடு நின்றவர்களுக்கும் தெரிந்தது. அந்த இளைஞனை மையல் பார்வை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் நிஷாந்தின் சென்னை காதலி பிரகதி.

அவளைப்  பார்த்ததும் மீனாவுக்கு வாய்க்கொள்ளா புன்னகை!

“எம்மா பிரகதி” அவர் அன்பாய் அழைத்தது அவளது செவியில் விழவில்லை. ஒலிபெருக்கியில் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா’ என சூலமங்கலம் சகோதரிகள் இன்னிசை பாடியதன் விளைவு.

அத்தருணத்தில் அந்த இளைஞன் திரும்பினான். அது நிஷாந்த் அன்றி வேறு யாராக இருக்க முடியும்!

அவனது சிரிப்பு எப்படி இதன்யாவுக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்ததோ அதை விட அதிகமாகக் கலிங்கராஜனை சினங்கொள்ள வைத்தது.

இனியாவைக் காதல் என்ற பெயரில் காட்டுக்குள் அழைத்துச் சென்றவனை அவரால் இன்று வரை மன்னிக்க முடியவில்லை. ஆனால் கோபத்தை மனதுக்குள் புதைத்துக்கொண்டு வெளிப்பார்வைக்கு இயல்பாக நடமாடிக்கொண்டிருக்கிறார்.

அப்படியிருக்கையில் நிஷாந்த் இன்னொரு பெண்ணோடு சிரித்துப் பேசுவதைச் சகஜமாக கடக்குமளவுக்கு அவருக்குப் பெரிய மனது இல்லை.

பற்களை அவர் நறநறவென கடிக்கும்போதே “எப்ப கலிங்கா, கொஞ்சம் வா” என்று பொன்னுரங்கம் அவரை அழைத்துச் சென்றுவிட

“நான் பிரகதி கிட்ட பேசிட்டு வந்துடுறேன் மேடம்” என மீனா நகர்ந்துவிட இதன்யா மற்ற இருவரிடமும் அவளைத் தான் நிஷாந்துடன் சென்னையில் ஒரு கபேயில் வைத்து பார்த்தேன் என்று கூறினாள்.

“இந்தப் பொண்ணை திருவிழாக்கு வரச் சொல்லுறளவுக்கு இவனுக்கு எங்க இருந்து இவ்ளோ தைரியம் வந்துச்சு? இந்த மாதிரி கிராமங்கள்ல ஆண் பெண் பழக்கத்துக்கு ஒரு எல்லை உண்டுனு தெரிஞ்சும் இவன் சிரிச்சு சிரிச்சுப் பேசுறான்னா சம்திங் ராங் மேடம்” என்றார் மார்த்தாண்டன் நிஷாந்தையும் பிரகதியையும் பார்த்தபடியே.

அவர்கள் மீனாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் அங்கே வந்தார் ஒரு வழுக்கைத்தலை ப்ளஸ் கண்ணாடி மனிதர். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கலாம்.

“தேவாண்ணே” என மீனா அழைத்தபோதே அவர் நிஷாந்தின் வழக்கில் அவனுக்காக அலிபி சொன்ன பேராசிரியர் தேவநாதன் என்பது மூவருக்கும் புரிந்துபோனது.

“இவரைப் பாக்க சென்னைக்குப் போனதா சொல்லித் தானே நிஷாந்த் இனியா கேஸ்ல இருந்து தப்பிச்சான்” என மகேந்திரன் சொல்லும்போதே நிஷாந்தும் தேவநாதனும் காவல்துறையினர் மூவரையும் பார்த்துவிட்டனர்.

இவ்வளவு நேரமிருந்த முகங்கொள்ளா சிரிப்பு விடைபெற்றுவிட்டது அவர்களிடமிருந்து. தேவநாதன் பிரகதியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட நிஷாந்தும் நழுவினான்.

மீனா மீண்டும் இதன்யாவிடம் வந்தார்.

“அக்கா இப்ப நிஷாந்த் கிட்ட ஒருத்தர் வந்து பேசுனாரே அவர் யாரு?” என தெரியாதது போல விசாரித்தாள் இதன்யா.

“அவரு தான் தேவாண்ணன்… நம்ம ஊர்க்காரரு தான்.. வேலைக்காக மெட்ராசுல குடும்பத்தோட தங்கி இருக்காங்க… அங்க நின்னுச்சே பிரகதி பொண்ணு, அது அவரு மக தான்” என்று சொல்லி மீனா சொன்ன அடுத்த நொடி மூவரின் விழிகளும் இரகசியமாகப் பேசிக்கொண்டன.

 நிஷாந்துக்காக தேவநாதன் சாட்சி சொல்லியிருக்கிறார். அவரது மகள் நிஷாந்தின் இரகசியக்காதலி. அவர்கள் மூவரும் ஏகலைவன் எப்போது நிஷாந்தை வாரிசாக அறிவிப்பான் என காத்திருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் போதுமே சில முடிச்சுகள் அவிழ்வதற்கு! சில பொய்கள் அம்பலப்படுவதற்கு!

xr:d:DAF-I-2c3BQ:233,j:1407798519776754374,t:24040219

இதன்யா – மார்த்தாண்டன் – மகேந்திரன் மூவரும் நிஷாந்த் மற்றும் தேவநாதனின் ஏமாற்று நாடகத்தால் தாங்களும் ஏமாந்துவிட்டோமோ என கடுப்படைந்த நேரத்தில் யாரும் பார்க்காதபடி நிஷாந்தின் டீசர்ட் காலரைக் கொத்தாகப் பற்றி கோபத்தோடு அவனை கோவிலின் பின்பக்கம் இழுத்துப்போனார் கலிங்கராஜன்.