IIN 6

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

கனடாவைச் சேர்ந்த உளவியலாளர் ராபர்ட் ஹேர் உளப்பிறழ்வுக் குறைபாட்டை உறுதி செய்வதற்கான செக்லிஸ்டை 1970களில் உருவாக்கினார். தற்போது PCL-R என்று அழைக்கப்படுவது அந்த செக்லிஸ்டின் திருத்தப்பட்ட வடிவமே. உளப்பிறழ்வுக் குறைபாட்டின் அறிகுறிகளை அளவிட உலகளவில் இதுவே சிறந்த முறையாகத் திகழ்ந்து வருகிறது. இது சமூக விரோத நடவடிக்கை மற்றும் தான் நினைத்ததை அடைவதற்காக விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அடுத்தவர்களைத் தவறான முறையில் கையாளுவது போன்றவற்றை அளவிட சிறந்த முறையாக உளவியல் துறையில் பயன்படுத்தப்படுகிறது.

         -An article from BBC

பொன்மலை காவல்நிலையத்தில் விசாரணை அறையில் அமரவைக்கப்பட்டிருந்தான் ரோஷண். தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தவனை அன்று மதியம் தான் சென்னை காவல் அதிகாரிகள் இங்கே ஒப்படைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

மார்த்தாண்டன் இனியாவின் சடலத்தைப் பிரதே பரிசோதனை செய்த மருத்துவக்குழுவின் தலைமை மருத்துவரிடம் சில சந்தேகங்களைக் கேட்க சென்றவர் இன்னும் வரவில்லை.

அவருக்குப் பதிலாக துணை ஆய்வாளர் மகேந்திரன் அவனை விசாரிப்பதற்காக தயாரானார். வந்ததிலிருந்து எதுவும் பேசாதவன் இப்போது மட்டும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவா போகிறான் என்ற ரீதியில் கான்ஸ்டபிள்கள் அவநம்பிக்கையுடன் அவர்களின் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

மகேந்திரன் விசாரணையறைக்குள் வந்தவர் தலை குனிந்து அமர்ந்திருந்த ரோஷண் முன்னே அமர்ந்தார்.

அவரைப் பார்த்ததும் தலையை உயர்த்தியவனின் முகத்தில் எதைப் பற்றிய கவலையுமில்லாத சிரிப்பொன்று ஒட்டியிருந்தது.

“என்னடா சிரிப்பு? வாழ வேண்டிய பொண்ணைச் சாத்தான் வழிபாடுங்கிற பேருல கொடூரமா சிதைச்சுக் கொன்னுட்டுக் குற்றவுணர்ச்சி இல்லாம எப்பிடி உன்னால சிரிக்க முடியுது?”

“நான் இனியாவ கொல்லலை சார்”

சட்டென ஸ்விட்ச் போட்டாற்போல சிரிப்பு நின்றுவிட கண்கள் மகேந்திரன்மீது நிலைகுத்த, தலையை ஆட்டியபடி அவன் சொன்ன விதம் ஒரு நொடி அவரையே பயமுறுத்திவிட்டது.

“இனிமே உன்னால சட்டத்துல இருந்து தப்பிக்க முடியாது ரோஷண்… செஞ்ச தப்பை ஒத்துக்க… ஏன் இனியாவைக் கொடூரமா கொலை பண்ணுன?”

“நான் அவளைக் கொல்லலை சார்”

சைக்கோ போல அவன் சொன்னதையே சொல்ல மகேந்திரனுக்குக் கோபம் வந்துவிட்டது.

“ராஸ்கல் பொய்யா சொல்லுற|?”

வீடியோ பதிவை நிறுத்திவிட்டு அவன் கன்னத்தில் பளாரென அறைந்தார் மகேந்திரன். போலீஸ் அடியைப் பற்றி தனியாகச் சொல்லவேண்டுமா என்ன?

மகேந்திரன் வலு கூட்டி அறைந்ததில் உதடு கிழிந்து உமிழ்நீரோடு உதிரமும் சேர்ந்து வடிந்தது ரோஷணின் மோவாயில்.

அவன் தலையை ஆட்டிச் சிரித்தபடி இரத்தத்தைச் சுவைப்பதைப் பார்த்த மகேந்திரனுக்கு அருவருப்பு கூடியது.

“உண்மைய சொல்லுடா… இல்லனா போலீஸ் ட்ரீட்மெண்டை ஆரம்பிக்க வேண்டியதா இருக்கும்” என்றார் அவர்.

அவரது பேச்சை ரோஷண் செவிமடுத்தால் தானே?

கோபத்தோடு இன்னொரு முறை அறையப் போனவர் “இன்னொரு தடவை அடிச்சிங்கனா என்னைக் கொடுமை பண்ணி செய்யாத தப்பை ஒத்துக்க வச்சிங்கனு மாஜிஸ்ட்ரேட் முன்னாடி சொல்லுவேன்” என்றபடி அவன் முகத்தை மறைத்துக்கொண்டதும் பற்களைக் கடித்தார்.

நிமிர்ந்த ரோஷண் அலட்சியச்சிரிப்போடு “நான் இனியாவ கொன்னதுக்கு உங்க கிட்ட என்ன ஆதாரம் இருக்கு சார்? அவ காணாம போன அன்னைக்கு நான் பொன்மலையில இல்ல… நான் சென்னைக்குப் போயிட்டிருந்தேன்” என்றான்.

மகேந்திரன் வீடியோ பதிவை ஆன் செய்தார்.

“சோ செவ்வாய்கிழமை நீ இங்க இல்ல?”

“ஆமா”

“நீ இன்னைக்குத் தான் சென்னைல இருந்து திரும்பி வர்ற?”

“ஆமா சார்”

“அப்ப புதன்கிழமை மதியம் முருகையா கிட்ட காட்டுப்பாதைல என்ன நடந்துச்சுனு விசாரிச்சவன் நீ இல்ல?”

இப்போது ரோஷணின் சைக்கோத்தனமான நிலைகுத்திய பார்வையும், தலையாட்டலும் அலட்சிய சிரிப்பும் நின்றது. திடுக்கிட்ட பாவனை அவனது முகத்தில்.

“ந… நானா?” தடுமாறினான் அவன்.

“ஆமாடா… நீ தான்”

ரோஷண் மாட்டிக்கொண்டோமே என பதற்றமாவதை மகேந்திரனால் புரிந்துகொள்ள முடிந்தது.

“இனியாவோட டெட்பாடி கிடந்த இடத்துல நீ ரொம்ப நேரமா நின்னிருக்க… உன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்கக்கூடாதுனு மாஸ்க், கூலிங் க்ளாஸ்னு போட்டு உன் முகத்தை மறைச்சிருந்திருக்க… அதையும் தாண்டி முருகையா உன்னை அடையாளம் கண்டுபிடிச்சிட்டார்… அவர் கிட்ட இங்க என்ன நடந்துச்சுனு கேசுவலா விசாரிச்சிருக்க நீ… உன்னை அவர் கிட்ட காட்டிக் குடுத்தது உன்னோட நெத்தியில இருக்குதே இந்த தழும்பு தான்… நீ அடிக்கடி கலிங்கராஜனோட வீட்டுக்குப் போக வர இருந்திருக்க… அதனால உன் குரலும் அவருக்கு அத்துப்படி”

மார்த்தாண்டன் வழக்கு ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து நிற்பதாக சலித்தபோது முருகையா வந்தார் அல்லவா!

அவரது முதலாளி அனுப்பினாரா என்று கேட்டதற்கு முருகையா சொன்ன பதில் தான் சென்னை போலீசாரின் கட்டுப்பாட்டிலிருந்த ரோஷணை பொன்மலைக்கு வரவைத்திருந்தது.

“முதலாளி ஐயாக்காக நான் வரலை சார்… நான் சின்னம்மாக்கு நியாயம் கிடைச்சிடாதானு ஒவ்வொரு நாளும் பொன்மலை முருகன் கோவிலுக்குப் போறதா நினைச்சு தான் இந்த போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து விசாரிச்சுட்டுப் போறேன்… இப்ப நான் கான்ஸ்டபிள் ஐயாவ பாக்க வந்தப்ப நீங்க ரோஷண் பயலை பத்தி பேசுனது என் காதுல விழுந்துச்சு…. அவன் ஒன்னும் செவ்வாகிழமை வெளியூருக்குப் போகலங்க சார்… நான் அவனை புதன்கிழமை சின்னம்மாவோட சடலம் கிடந்த காட்டுப்பாதை பக்கத்துல பாத்தேன்… முகத்தை மறைச்சுட்டு வந்து நின்னான்… அவன் நெத்தி தழும்பை வச்சு கண்டுபிடிச்சு ஏன் நிக்குறனு கேட்டதுக்கு இங்க இன்னைக்குக் காலையில என்ன நடந்துச்சுனு விசாரிச்சான் அவன்… முருகன் மேல சத்தியமா அது ரோஷண் பய தான் சார்… அவன் ஏன் பொய் சொல்லுறான்னு புரியமாட்டேங்குது… நான் சொன்ன தகவல் உங்களுக்கு உதவியா இருக்குமானு தெரியல… ஆனா ஒரு பொய்ய அவன் உண்மையாக்கப் பாக்குறது தெரிஞ்சும் நான் எப்பிடி சும்மா இருக்க முடியும்? சொல்லுங்க”

அந்தப் பெரியவர் ரோஷணை புதன்கிழமை காட்டுப்பாதை பக்கம் பார்த்த சாட்சி என்று காவல் உதவி ஆணையர் கமலேஷிடம் கூறினார் மார்த்தாண்டன்.

“இதுவும் டேரக்ட் எவிடென்ஸ் இல்ல மார்த்தாண்டன்… பட் ரோஷண் பொய் சொன்னதை வச்சு பாக்குறப்ப இந்த ஐ விட்னஸை அடிப்படையா வச்சு அவனை ப்ரைமரி அக்யூஸ்ட்டா விசரிக்கலாம்… அவனை உங்க கஷ்டடிக்குக் கொண்டு வரவேண்டிய வேலையை நான் கவனிக்குறேன்”

அதன் பின்னர் தான் ரோஷண் இங்கே அழைத்துவரப்பட்டான்.

“அந்தக் கிழவனை அப்பவே போட்டுத் தள்ளிருக்கணும்” என்று வாய்க்குள் முணுமுணுத்தான் ரோஷண்.

மகேந்திரன் கோபத்தோடு “என்னடா முணுமுணுக்கிற?” என்றதும்

“நான் அங்க வந்ததுக்குக் காரணம் அது இல்ல சார்” என்றான்.

“வேற என்ன காரணம்?”

“என்னோட கல்ட் குரூப்ல மாசம் ஒரு தடவை சாத்தானுக்கு அனிமல் ஆஃபரிங் பண்ணுவோம்”

“உயிர் பலி தானே?”

“ஆமா சார்… அதுக்கு இரத்தவாடை உள்ள இடமா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு… அதனால தான் அங்க நின்னு பாத்தேன்… அங்க என்னால சாத்தானை உணர முடிஞ்சுது சார்… இனியாவைக் கொன்னது அந்தச் சாத்தான் தான்”

மகேந்திரன் அவனை அடிக்காத குறையாக முறைத்தார்.

“டேய் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு… இன்னொரு தடவை சாத்தான் அது இதுனு பொய் சொன்ன, பொடதியில ஒன்னு வச்சிடுவேன்”

“நீங்க நம்ப மாட்டிங்கனு தெரியும் சார்… ஆனா இது தான் நடந்த உண்மை… நான் சாத்தானை வழிபடுறவன்… என் பாதைக்குச் சிலரைத் திருப்புற முயற்சில இறங்கி அதுல ஜெயிக்கவும் செஞ்சிருக்கேன்… குடும்ப வாழ்க்கையில நிம்மதி இல்லாதவங்க, தொழில்ல நொடிஞ்சு போனவங்க, நோயால கஷ்டப்படுறவங்களை எல்லாம் நான் சாத்தானோட அருளால குணப்படுத்திருக்கேன்… இப்ப சென்னைக்குப் போனது கூட பிசினஸ் மேன் ஒருத்தரோட வீட்டுல சாத்தான் வழிபாடு நடத்த தான்”

“உன் வழிபாட்டுல ஆடு கோழி மட்டும் தான் பலி குடுப்பியா? மனுசங்களை பலி குடுக்குறதும் சாத்தான் வழிபாட்டுல இருக்குதுனு கேள்விப்பட்டேன்”

“எங்களை பத்தி தப்பா பரப்பிவிடப்பட்ட செய்தி சார்… எந்தக் கட்டுப்பாடும் தடைகளும் இல்லாத வாழ்க்கை தான் சாத்தானிசத்தோட கொள்கை… சக மனுசனைக் கொல்லுறது இல்ல”

மகேந்திரன் தனக்கு லெக்சர் கொடுத்தவனை ஏளனச்சிரிப்புடன் ஏறிட்டார்.

“இனியா மாதிரி அழகான பொண்ணுங்களை சாத்தானுக்குப் பலி குடுத்தா உன் பலம் அதிகமாகும்னு ஒரு நாள் அவளை நீ மிரட்டுனதுக்கு ஐ விட்னஸ் இருக்கு ரோஷண்… சாமர்த்தியமா பேசுறதா நினைச்சு எங்க நேரத்தை வீணாக்காத”

“நான் அப்பிடி சொன்னது அவளைப் பயமுறுத்துறதுக்காக… அவ அடிக்கடி என் வழில குறுக்க வந்தா… வேற வழியில்லாம மிரட்டுனேன்… மத்தபடி அவளைக் கொல்லணும்ங்கிற நோக்கம் எனக்குக் கிடையாது”

“சரி அதை உண்மைனு வச்சுப்போம்… புதன்கிழமை வரைக்கும் பொன்மலைல இருந்தவன் ஏன் செவ்வாய்கிழமையே சென்னைக்குப் போயிட்டதா பொய் சொன்ன?”

கண்கள் நிலைகுத்த என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்தான் ரோஷண்.

அப்போது விசாரணை அறைக்கு வெளியே ஏதோ கூச்சல் கேட்டது.

மகேந்திரன் என்னவென பார்க்கும்போதே கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளே வந்தார்.

“இனியா பொண்ணோட அப்பா வந்திருக்கார் சார்… ரொம்ப கோவமா கத்துறார்”

“அந்தாளுக்கு என்ன வேணுமாம்யா?”

கான்ஸ்டபிளின் கண்கள் ரோஷணைச் சுட்டியதும் மகேந்திரன் எரிச்சலோடு எழுந்து வெளியே போனார்.

அங்கே கலிங்கராஜன் காச் மூச்சென கத்திக்கொண்டிருந்தார்.

“எங்க அவன்? அவனை என் கையால கொன்னா தான் என் மகளோட ஆத்மா சாந்தியடையும்”

“சார் சும்மா கத்தாதிங்க”

“எல்லாருமா சேர்ந்து அவனைக் காப்பாத்த பாக்குறிங்களா? நான் விடமாட்டேன்… என் சொத்து முழுக்க அழிஞ்சாலும் பரவால்ல, அவனைத் தூக்குமேடைக்கு அனுப்பாம ஓயமாட்டேன் நான்”

மகேந்திரனைப் பார்த்ததும் கொஞ்சம் அமைதியானார் அவர்.

“ஏன் சார் இங்க வந்து கலாட்டா பண்ணுறிங்க? இப்ப தான் ரோஷணை விசாரிச்சிட்டிருக்கேன்… அவன் உண்மைய சொன்னதும் ரோஷண், நீங்க, உங்க ஒய்ப் மூனு பேரும் ஒன்னா ஜெயில்ல தானே இருக்கப்போறிங்க… அது வரைக்கும் பொறுமையா இருங்க” என்றார் மகேந்திரன்.

உடனே கலிங்கராஜன் பம்மினார்.

“நானும் கிளாராவும் என்ன பண்ணுனோம் சார்?”

“உங்க பிசினஸ் லாபமா போகணும்னு இனியாவ ரோஷணை வச்சு சாத்தானுக்குப் பலி குடுத்திருக்கிங்க… இதுக்கு உங்க ஒய்பும் உடந்தை… உங்களுக்கு இனியாவை சுத்தமா பிடிக்காதது தான் இந்தக் கொடூரமான நரபலிக்குக் காரணம்”

மகேந்திரன் பேசிக்கொண்டிருப்பதை ரோஷண் விசாரணை அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

கோணல் சிரிப்புடன் அங்கிருந்து வெளியே வந்தவனைப் பார்த்ததும் கலிங்கராஜனுக்கு வெறியானது.

“உன்னைச் சும்மா விடமாட்டேன் ராஸ்கல்”

“தொழில்ல லாபம் வரணும்னா நான் என்ன செய்யணும்னு என் கிட்ட கெஞ்சுனது சாருக்கு மறந்து போச்சு போல”

கொஞ்சமும் பயமின்றி ரோஷண் கூற கலிங்கராஜனின் ஆவேசம் அடங்கியது.

“போங்க சார்… நான் அமைதியா இருக்குற வரைக்கும் தான் நீங்களும் உங்க மனைவியும் இந்த ஊர்ல மரியாதையா நடமாட முடியும்… வீணா என்னைச் சீண்டி பிரச்சனைல மாட்டிக்காதிங்க”

மகேந்திரன் கலிங்கராஜனைச் சந்தேகமாகப் பார்க்க அவரோ பெட்டிப்பாம்பாக அடங்கி இடத்தைக் காலி செய்தார்.

ரோஷண் சைக்கோத்தனமான சிரிப்போடு மீண்டும் விசாரணை அறைக்குள் போனான்.

அதே நேரம் இனியாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த குழுவிலிருந்த மருத்துவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார் ஆய்வாளர் மார்த்தாண்டன்.

“இனியாவோட பி.எம் ரிப்போர்ட்ல நிறைய குளறுபடி நடந்திருக்கு இன்ஸ்பெக்டர்… எனக்கு சீஃப் டாக்டர் மேல சந்தேகம்… அதை பத்தி பேச தான் உங்களை இங்க வரச் சொன்னேன்”

“சொல்லுங்க சார்… என்ன சந்தேகம் உங்களுக்கு?”

“அந்தப் பொண்ணு இனியாவோட உடம்புல இருந்து ஃபாரன்சிக் டீம் எடுத்த ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ்ல மேக்சிமம் கண்டாமினேட் ஆகிடுச்சு…. பயாலஜிக்கல் எவிடென்ஸ், டி.என்.ஏ வச்சு டெஸ்ட் பண்ணுனப்ப உங்களோட சஸ்பெக்ட்ஸ் கூட அது மேட்ச் ஆகல… இனியா கேஸ்ல இனிமே டேரக்ட் எவிடென்ஸ் கிடைக்குறது கஷ்டம் சார்… முக்கியமான விசயம் என்னனா அந்தப் பொண்ணோட ஜெனிட்டல்ல கிடைச்ச செமன், ஸ்பெர்ம் எவிடென்ஸ் ஒருத்தரோடது இல்ல… அன்பார்சுனேட்லி இனிமே அந்த செமன் எவிடென்ஸை வச்சும் அக்யூஸ்ட் யாருனு கண்டுபிடிக்க வாய்ப்பில்ல… காலம் கடந்து போயிடுச்சு சார்”

மார்த்தாண்டன் அதிர்ந்து போனார்.

“வாட் டூ யூ மீன்?”

“இனியா வாஸ் ப்ரூட்டலி ரேப்ட் அண்ட் கில்ட் பை மோர் தன் ஒன் பெர்சன்”

மருத்துவர் சொன்னதும் அடுத்ததாக வழக்கில் முளைத்த திருப்புமுனையைப் பார்த்து மலைத்துப் போனார் மார்த்தாண்டன். இனியாவின் தந்தையும் கிளாராவும் இந்தக் குற்றத்தில் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட நபர்களாக இருக்க வேண்டுமானால் வாய்ப்புள்ளது. ஆனால் குற்றத்தில் ஈடுபட்டவர்களாக அவர்கள் இருக்க வாய்ப்பேயில்லை.

ரோஷண் ஒரு குற்றவாளி என்றால் இன்னொருவன் யாராக இருக்கக்கூடும்? இது உண்மையாக இருக்குமா? அல்லது மருத்துவர் தனது கவனக்குறைவால் தவறாக அனுமானித்திருப்பாரா? உறுதி செய்துகொள்ள மீண்டும் ஒரு முறை அவரிடம் கேட்டார் மார்த்தாண்டன்.

“அப்பிடினா கில்லர் ஒருத்தனா இருக்க வாய்ப்பில்லனு சொல்ல வர்றீங்களா டாக்டர்?”

“என்னால அடிச்சுச் சொல்ல முடியும் இன்ஸ்பெக்டர்… கண்டிப்பா இந்தக் கொலைல ஒன்னுக்கும் மேற்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்டிருக்காங்க… என் கணிப்புப்படி ரெண்டு பேர்”

“இதை ஏன் பி.எம் ரிப்போர்ட்ல சொல்லல?”

“சீஃப் டாக்டரோட ஈகோ என்னோட முடிவை பி.எம் ரிப்போர்ட்ல ஆட் பண்ண அனுமதிக்கல… இவ்ளோ ஏன் அப்பர் பாடி எக்சாமைன் பண்ணுறதுக்கு முன்னாடி என்னை அனுப்பி வச்சிட்டார் அவர்”

மார்த்தாண்டன் நெற்றியை ஆட்காட்டிவிரலால் கீறிக்கொண்டார்.

இந்த மாதிரி அரசு அதிகாரிகளின் அர்த்தமற்ற ஈகோவால் எத்தனை வழக்குகள் திசை மாறிப் போயிருக்கும்! பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு நியாயம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கும்! யாருக்குத் தெரியும்? சிலருக்கு நீதி மறுக்கப்பட்டும் இருக்கலாம். தாமதமாக வழங்கப்படும் நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் தானே!

“எனிவே, இப்ப நான் சொன்னதை சீஃப் டாக்டர் கிட்ட டிஸ்கஸ் பண்ணுனிங்கனா என்னோட வேலைக்குக் கூட அவர் உலை வைக்கலாம்”

“முடிவா என்ன தான் சொல்லுறிங்க டாக்டர்?”

“இன்னும் என்னென்ன உண்மைகள் போஸ்ட் மார்ட்டம்ல மறைக்கப்பட்டுச்சுனு தெரியல சார்… செகண்ட் அடாப்ஸி தான் இதுக்குத் தீர்வு”

மருத்துவரிடம் பேசிவிட்டு வந்த மார்த்தாண்டனுக்கு இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு இனியாவின் உடலை அனுப்புவது அவ்வளவு சுலபமில்லை என்று தோன்றியது.

அந்தப் பெண்ணிற்கு வேண்டியவர்களுக்கு அவள் மரணத்தில் சந்தேகம் எழுமாயின், முதல் பிரேத பரிசோதனையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை எனும் பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகி இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு உத்தரவு வாங்கலாம்.

ஆனால் இங்கே இனியாவைப் பெற்ற தந்தையே சந்தேகப்படுவோர் பட்டியிலில் இடம்பெற்றிருக்கையில் யார் அவளுக்காக நீதிமன்றம் வரை போவார்கள்?

மார்த்தாண்டனின் மனம் முதல் முறையாக கொலையான பெண்ணிற்காக இவ்வளவு தூரம் யோசித்தது. அவளை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களைச் சட்டத்தின் முன்னே நிறுத்தும் வெறி அவருக்குள் வந்தது.