IIN 5

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

இரக்கமற்ற நபர்களுடன் இருப்பது அவர்களுக்கு நெருங்கியவர்களைப் பாதிக்கிறது. தீவிரமான உளப்பிறழ்வுக் குறைபாடு கொண்டவர்களுடன் வாழ்பவர்கள் சோர்வடைந்துவிடுகின்றனர் என்கிறார் மார்ஷ். உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதே பெரும்பான்மையான உளப்பிறழ்வுக்குறைபாடு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக மார்ஷ் கூறுகிறார். பொதுவாக, உளப்பிறழ்வுக் குறைபாடு பெண் கைதிகளுடன் ஒப்பிடும் போது ஆண் கைதிகளிடம் அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

         -An article from BBC

இனியாவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நான்காவது நாள் அவளது மரணம் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது. அவள் சமூக வலைதளங்கள் மூலம் ஓரளவுக்கு அறியப்பட்டவள் என்பதால் இன்னுமே அவளது மரணத்துக்குக் காரணமான கொலைகாரனைப் பிடிக்காமல் காவல்துறை தாமதம் செய்வதாக ஆங்காங்கே சலசலப்பு எழுந்தது.

‘எக்ஸ்’ வலைதளத்தில் ‘ஜஸ்டிஸ் ஃபார் இனியா’ என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்ட் ஆகிவிட தேசியளவில் கவனம் பெற்றது இனியாவின் மரணம்.

பொன்மைலைவாசிகள் காவல்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் அகதிகள் முகாமில் அடைபட்ட உணர்வுடன் உலாவிக்கொண்டிருந்தார்கள்.

கலிங்கராஜனுக்கோ காவல் ஆய்வாளர் மார்த்தாண்டனைக் கண்டாலே எட்டிக்காயாகக் கச்க்க துவங்கியது. இன்னும் எத்தனை நாட்கள் விசாரணை என்ற பெயரில் மகளின் சடலத்தை ஒப்படைக்காமல் தாமதிப்பார்கள் என தனது வழக்கறிஞரை வைத்து கலகம் செய்தார் மனிதர்.

அவரது அச்செயல் இன்னுமே அவர் மீதான சந்தேகத்தை மார்த்தாண்டனுக்கு வலுவாக்கியது.

இந்நிலையில் தொழிலதிபர் ஒருவரைச் சந்திக்க சென்னைக்குச் சென்ற ரோஷண் அங்குள்ள காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான். தொழிலதிபரின் வீட்டில் இரவில் சந்தேகத்துக்கு இடமான சத்தங்கள் கேட்பதாக அண்டைவீட்டார் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்ப்பட்டவனைப் பொன்மலைக்கு அனுப்ப வலுவான காரணம் தேவைப்பட்டது காவல் அதிகாரிகளுக்கு.

இது குறித்து உதவி ஆணையர் கமலேஷ் மார்த்தாண்டனிடம் பேசினார்.

“ரோஷணை எந்த ஆதாரத்தை வச்சு அரெஸ்ட் பண்ணப்போறிங்க?:

“இனியாவோட பாடி இருந்த நிலமை இது ஏதோ கல்ட் கும்பலோட வேலைனு உறுதி பண்ணுது… அந்தப் பொண்ணோட அப்பாவுக்கு அவளைச் சுத்தமா பிடிக்காது, தொழில் வேற டல்லடிச்சிருக்கு… அவரும் அவரோட செகண்ட் ஒய்பும் ரோஷணோட சாத்தான் வழிபாட்டு குரூப்ல சேர தயாரா இருந்தாங்கனு ரோஷணோட தம்பி ராக்கி வாக்குமூலம் குடுத்திருக்கான்… அந்த ரோஷண் கலிங்கராஜன் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனதுக்கு பெரியவர் முருகையாவோட வாக்குமூலம் சாட்சியா இருக்கு”

“இது எல்லாம் சர்கம்ஸ்டான்சியல் எவிடென்ஸ் மார்த்தாண்டன்… வீ நீட் டேரக்ட் எவிடென்ஸ் லைக் வீடியோ ஃபூட்டேஜ், ஆடியோ கிளிப்ஸ், ஐ விட்னஸ்… அப்பிடி ஏதாச்சும் கிடைச்சுதா?”

கமலேஷ் வீடியோ ஆதாரம் என்றதும் மார்த்தாண்டனுக்கு ஏகலைவனின் தேயிலைத்தோட்டம் நினைவுக்கு வந்தது. காட்டுப்பாதை வரை சி.சி.டி.வி கவர் செய்யுமென ராக்கி விசாரணையின் போது கூறினான் அல்லவா!

அப்படி என்றால் கட்டாயம் இனியாவின் சடலத்தை அங்கே கொண்டு வந்து போட்டது யாரென சி.சி.டி.வியில் பதிவாகியிருக்குமே.

“சி.சி.டி.வி ஆதாரத்தோட வர்றேன் சார்… வீ நீட் டு ப்ரிங் ரோஷண் அண்டர் அவர் கஷ்டடி அட் எனி காஸ்ட்… அவனோட மூடநம்பிக்கை சாத்தான் வழிபாட்டால இன்னொரு உயிர் போறதுக்குள்ள இது நடக்கணும்”

“என் நோக்கமும் அதுதான் மார்த்தாண்டன்”

கமலேஷிடம் பேசிவிட்டு மார்த்தாண்டன் சக்கரவர்த்தி தேயிலை தோட்டத்திற்கு கிளம்பினார். ஊருக்குள் நுழைந்ததும் நிஷாந்த் எதிர்பட்டான்.

காவல் அதிகாரியின் வாகனத்தைக் கண்டதும் நிஷாந்தின் முகத்தில் ஒருவித பதற்றம் பரவியது.

அந்த வாகனம் தேயிலை தோட்டத்தை நோக்கி செல்லவும் விறுவிறுவென அவனும் அங்கே போனான்.

மார்த்தாண்டன் அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தை நோக்கி விரைய “சார்” என்றபடி அவரைப் பின்தொடர்ந்தான் நிஷாந்த்.

திரும்பிப் பார்த்த மார்த்தாண்டன் யார் நீ என்பது போல பார்க்க நிஷாந்த் அவனே அறிமுகமாகிக்கொண்டான்.

“நான் ஏகலைவன் மாமாவோட நெஃப்யூ… மாமா இங்க இல்ல… அவர் கொல்லம் போறதுக்காக ரெடியாகிட்டிருக்கார்”

“ஓ! ஜஸ்ட் கால் ஹிம்… நான் அவர் கிட்ட பேசணும்”

நிஷாந்த் உடனே ஏகலைவனின் மொபைலுக்கு அழைத்தான்.

“இன்ஸ்பெக்டர் நம்ம எஸ்டேட் ஆபிசுக்கு வந்திருக்கார் மாமா”

மறுமுனையில் ஏகலைவன் அலுவலகத்துக்குக் கிளம்பி வருவதாகச் சொல்லியிருக்கவேண்டும். ஏனெனில் குறுகிய நேரத்தில் அழைப்பு துண்டிக்கபப்ட்டுவிட்டது.

“மாமா இப்ப வந்துடுவார் சார்… அப்புறம்… இனியாவோட மர்டர் கேஸ்ல ஏதாச்சும் உண்மை தெரிஞ்சுதா சார்?”

தயக்கத்துடன் கேட்டவனை மேலும் கீழுமாக அளவிட்டார் மார்த்தாண்டன்.

“உனக்கு இனியாவைப் பத்தி ஏதாவது தெரியுமா?” என்று அவர் கேட்கையில் வியர்த்து வழிய ஆரம்பித்தான்.

“அது.. அவ என்னோட ஃப்ரெண்ட் சார்”

“ஓ! எத்தனை வருசமா?”

“ரெண்டு வருசமா சார்”

“இனியாவுக்கும் ரோஷணுக்கும் ஏதாச்சும் பிரச்சனை இருந்துச்சா?”

மார்த்தாண்டன் கேட்டதும் “தெ… தெரியாது சார்” என திணறினான் அவன்.

அப்போது ஏகலைவனும் வந்துவிட்டான். வந்தவனின் உடல்மொழியில் அத்துணை பதற்றம்.

“வாங்க சார்… என்ன விசயம்?”

“தேவைப்பட்டா உங்க கிட்ட உதவி கேக்குறேன்னு சொன்னேன்ல… இப்ப “உங்க எஸ்டேட் ஆபிசுக்கு வெளிய இருக்குற சி.சி.டி.வியோட ஃபூட்டேஜ் எனக்குத் தேவைப்படுது… செக் பண்ணிட்டு இந்த பென்ட்ரைவ்ல ஒரு காப்பி தர முடியுமா?”

ஏகலைவனின் பதற்றம் அதிகரித்தது. நிஷாந்தின் நிலையும் அதுவே.

“க… கண்டிப்பா சார்… நிஷாந்த் நீ வீட்டுக்குக் கிளம்பு… அக்காவுக்குக் கால் உளைச்சலாம்… மருந்து வாங்க உன்னைத் தேடுனாங்க” என்று சொல்லி மருமகனை அனுப்பிவிட்டு மார்த்தாண்டனுடன் சி.சி.டி.வி கண்ட்ரோல் அறைக்குச் சென்றான் அவன்.

அங்கே அமர்ந்திருந்த ராக்கி மார்த்தாண்டனைப் பார்த்ததும் பரபரப்புடன் எழுந்தான்.

“செவ்வாய்கிழமை மானிங்ல இருந்து புதன்கிழமை ஈவ்னிங் வரைக்கும் சி.சி.டி.வி ஃபூட்டேஜ் வேணும் ராக்கி”

ஏகலைவனுக்கு முன்னே அவனிடம் ஆணையிட்டார் மார்த்தாண்டன். அவன் கண்களில் மிரட்சி! என்ன செய்வதென முதலாளியிடம் கண்களால் அனுமதி கேட்டான்.

ஏகலைவனின் கண்கள் அவர் சொன்னதை செய்யும்படி ஆணையிடவும் ராக்கி தயக்கத்தோடு பழைய பதிவுகளைத் தேட ஆரம்பித்தான்.

மார்த்தாண்டன் திரையில் ரோஷணைக் காண்பதற்காக ஆவலோடு காத்திருந்தார்.

ராக்கியின் கைகள் விசைப்பலகையில் நடுங்கிய வண்ணம் செவ்வாய்கிழமைக்கான வீடியோவைத் தேட அந்தோ பரிதாபம் திங்கள் இரவு வீடியோவுக்குப் பிறகு வியாழனன்று பதிவான வீடியோ தான் இருந்தது.

ராக்கி எச்சிலை விழுங்க மார்த்தாண்டனின் முகமோ ஏமாற்றத்தில் கொந்தளித்தது.

“செவ்வாய்கிழமை, புதன்கிழமை ஃபூட்டேஜ் எங்க போச்சு?”

ஏகலைவனின் முகபாவனையிலும் சில மாற்றங்கள்! மார்த்தாண்டன் ராக்கியையும் அவனையும் மாறி மாறி பார்த்தார்.

“அது எப்பிடி இனியா காணாம போன நாள், அவ டெட்பாடி கிடைச்ச நாளோட ஃபூட்டேஜஸ் மட்டும் டெலீட் ஆகிருக்கு?”

ராக்கி நடுங்கிக்கொண்டே இருக்கவும் அவனது சட்டையைக் கொத்தாகப் பற்றினார் மார்த்தாண்டன்.

“ராஸ்கல் உண்மைய சொல்லு! நீ தான ஃபூட்டேஜை டெலீட் பண்ணுன?”

“இல்ல சார்… எனக்கு எதுவுமே தெரியாது” அவன் அழ ஆரம்பித்தான்.

ஏகலைவன் அவனை விடுமாறு மார்த்தாண்டனிடம் கூற அவரோ “இவன் எவிடென்சை அழிச்சிருக்கான் மிஸ்டர் ஏகலைவன்… ரோஷணுக்கு எதிரா இருந்தது இந்த வீடியோ ஃபூட்டேஜ் மட்டும் தான்… அதை அழிச்சிட்டா அண்ணனை காப்பாத்திடலாம்னு நினைச்சு ப்ளான் பண்ணி காய் நகர்த்திருக்கான்.. இவனும் ரோஷணுக்கு உடந்தையா இருந்திருப்பானோனு சந்தேகம் வருது” என்றார்.

ராக்கி பரிதாபமாக அழுதான். அவனது அழுகை மார்த்தாண்டனை அசைக்கவில்லை. அந்தப் பெண் இனியாவைத் துடிக்க துடிக்க கொல்லும்போது அவளும் இப்படி தானே அழுதிருப்பாள் என்ற எண்ணமே அவரைக் கோபத்துக்குள்ளாக்கியது.

அவனை இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றினார். காவல் நிலையத்துக்கு வந்ததும் துணை ஆய்வாளர் மகேந்திரனிடம் ராக்கியை ஒப்படைத்தார்.

ஏகலைவனின் தேயிலை தோட்ட அலுவலகத்தில் சரியாக செவ்வாய் மற்றும் புதன் கிழமைக்கான சி.சி.டி.வி பதிவுகள் மட்டும் அகற்றப்பட்டிருப்பதைக் கூறினார்.

“நீ என்ன பண்ணுவியோ தெரியாது.. இவன் வாய்ல இருந்து உண்மை வரணும்” என்று அவர் கட்டளையிட மகேந்திரனும் ராக்கியை இழுத்துச் சென்றார்.

“சார் நான் எதுவும் பண்ணல… என்னை நம்புங்க சார்… எனக்கு எதுவுமே தெரியாது சார்” என அலறிய ராக்கியின் குரல் மார்த்தாண்டனின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.

அதை விட அவரது கோபத்தை அதிகரிக்கும் சம்பவம் ஒன்று சரியாக பதினைந்து நிமிடத்தில் அங்கே அரங்கேறியது. அச்சம்பவத்தின் காரணக்கர்த்தா பாதிரியார் பவுல்.

ஏகலைவன் வாயிலாக ராக்கியை மார்த்தாண்டன் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற தகவல் அவரை அடைந்ததும் உடனே அங்கே கிளம்பி வந்துவிட்டார்.

அவரைப் பார்த்ததும் எரிச்சல் மண்டியது மார்த்தாண்டனுக்கு.

“இங்க எதுக்கு வந்திங்க ஃபாதர்?”

“ராக்கியை பலவந்தமா நீங்க போலீஸ் ஸ்டேசனுக்கு இழுத்துட்டு வந்ததா எனக்குச் செய்தி கிடைச்சுது இன்ஸ்பெக்டர்”

ஆமா… ரோஷண் மாட்டிக்கக்கூடாதுனு ராக்கி சி.சி.டி.வி ஃபூட்டேஜை டெலீட் பண்ணிருக்கான்… இனியாவோட மர்டர்ல ராக்கிக்கும் சம்பந்தம் இருக்கும்னு எனக்கு டவுட்”

“இதுக்குலாம் உங்க கிட்ட ஆதாரம் இருக்குதா இன்ஸ்பெக்டர்?”

“இருந்த ஆதாரத்தை ராக்கி அழிச்சிட்டானே”

“நீங்க மர்டரரைக் கண்டுபிடிக்க முடியாத ஏமாற்றத்தை ராக்கி கிட்ட காட்டுறிங்களோனு எனக்குச் சந்தேகமா இருக்கு… நான் இதை இப்பிடியே விடப்போறதில்ல… எம்.எல்.ஏ மூலமா மூவ் பண்ணுறேன்”

பாதிரியார் பவுலின் வளர்த்த பாசம் அவரை அப்படி பேச வைத்துவிட்டது. அவர் தன் மீது போட்ட பழியில் மார்த்தண்டன் வெகுண்டெழுந்தார்.

“ஷட்டப்… என் ஸ்டேசனுக்கு வந்து உங்க இன்ஃப்ளூயன்சை காட்டி அக்யூஸ்டை தப்பிக்க வைக்கப்பாக்குறிங்கனு என்னாலயும் சொல்ல முடியும் ஃபாதர்… இந்தப் பசங்க மேல அப்பிடி என்ன ஸ்பெஷல் கேர் உங்களுக்கு? சர்ச் ஃபாதர் கிட்ட வளர்ந்தவன்ல ஒருத்தன் சாத்தானைக் கும்பிட்டு நரபலி குடுக்குறான், இன்னொருத்தன் போதைக்கு அடிமையானவன்… இந்த மாதிரி ரெண்டு தறுதலைங்களுக்குச் சப்போர்ட் பண்ணி உங்க மரியாதைய கெடுத்துக்காதிங்க ஃபாதர்… உங்களை மாதிரி ஆளுங்களால தான் இனியா போல அப்பாவி பொண்ணுங்க மரணத்துக்கு நியாயம் கிடைக்குறதுல சிக்கல் வருது”

பாதிரியார் பவுல் மார்த்தாண்டனின் கோபத்தைக் கண்டு வாயடைத்துப் போனார்.

பின்னர் நிதானமாக “ரோஷண் மேல உங்க சந்தேகம் நியாயமானது… ஆனா ராக்கி பாவம்… போதைக்கு அடிமையாகி வழிமாறிப்போனவனை ரொம்ப கஷ்டப்பட்டு நான் நல்வழிப்படுத்தி காலேஜுக்கு அனுப்பிட்டிருக்கேன் இன்ஸ்பெக்டர்… அவன் மனம் திருந்தி வாழுற பையன்… ரோஷணையும் திருத்திடணும்னு அடிக்கடி என் கிட்ட சொல்லுவான்… ப்ளீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு அப்பாவியைக் குற்றவாளி பட்டியல்ல சேர்த்துடாதிங்க”

மார்த்தாண்டனும் நிதானத்துக்கு வந்தார்.

“ஓ.கே… அப்ப அந்த சி.சி.டி.வி ஃபூட்டேஜ் டெலீட் ஆனதுக்கு யார் காரணம்? ரோஷண் செவ்வாய்கிழமைல இருந்து பொன்மலைல இல்லனு சொல்லுறாங்க… அவன் உங்க யார் பார்வைக்கும் படாம இருந்திருக்கான்ங்கிறது தான் உண்மை… அதை நான் நிரூபிப்பேன்… பட் அவன் வேலைய ராக்கி தான் பாத்திருக்கான்… சோ செவ்வாய்கிழமைல ஆரம்பிச்சு புதன்கிழமை இனியாவோட பாடி அங்க யாராலயோ கொண்டு வரப்பட்ட வரைக்கும் ரெக்கார்ட் ஆனதை சி.சி.டி.வில இவனும் பாத்திருப்பான்னு தானே அர்த்தம்”

பாதிரியார் வந்தது அறிந்து மகேந்திரன் ராக்கியை அழைத்து வந்தார். பவுலைக் கண்டதும் “ஃபாதர் நான் எந்தத் தப்பும் பண்ணல” என அழுதபடி ஓடி வந்து அவரை அணைத்தான் ராக்கி.

பவுலின் கண்களில் வேதனை சொட்டியது.

“பயப்படாத ராக்கி.. நீ தப்பு பண்ணிருக்க மாட்டனு நான் நம்புறேன்”

மார்த்தாண்டன் தொண்டையைச் செருமியவர் “உன்னையும் ரோஷணையும் தவிர சி.சி.டி.வி ரெக்கார்ட் எல்லாம் ஸ்டோர் ஆகுற லேப்டாப்பை வேற யார் ஆக்சஸ் பண்ணுவாங்க?” என்று கேட்க

“அந்த லேப்டாப் பாஸ்வேர்ட் புரொடக்டட் சார்.. என்னையும் அண்ணனையும் தவிர ஏகலைவன் சாரும் எஸ்டேட் மேனேஜரும் அதை ஆக்சஸ் பண்ணுவாங்க” என்றான் ராக்கி.

மார்த்தாண்டனுக்குச் சுற்றி சுற்றி வழக்கு ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறதே என்ற இயலாமையில் கோபம் துளிர்த்தது.

“நான் ராக்கிய அழைச்சிட்டுப் போகலாமா?” என பாதிரியார் கேட்டதும் மறுக்கப்போன மார்த்தாண்டனின் செவிகளில் “இந்தப் பையனை அனுப்பிவச்சிடுவோம் சார்… இப்ப தான் இவனோட முதலாளி ஏகலைவன் பேசுனதா கமிஷ்னர் சார் லைன்ல வந்தார்… இவன் ஒன்னும் தெரியாத அப்பாவி, நம்ம இவன் தான் குற்றவாளினு ஜோடிக்கிறதா அந்தாளு சொல்லிருக்கார் போல… ஏற்கெனவே மீடியா ப்ரஷர் அதிகமா இருக்குறதால இந்தப் பையனை அனுப்பிவைக்கச் சொல்லிட்டார் கமிஷ்னர் சார்” என்றார் மகேந்திரன்.

அந்த நிமிடத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் அதிகார வர்க்கத்தின் கோரக்கரங்கள் தன்னைக் கட்டுப்படுத்திவிட்டன என்ற கசப்பான உண்மையை ஏற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார் மார்த்தாண்டன்.

ராக்கியைத் தன்னோடு அழைத்துக்கொண்டு பாதிரியார் கிளம்பியதும் இறுகிய முஷ்டிகளை ஓங்கி மேஜையில் அறைந்து தனது இயலாமையைக் காட்டிக்கொண்டார் அவர்.

“கேஸ் ஆரம்பிச்ச இடத்துலயே வந்து நிக்குது… என்ன செய்யுறதுனே தெரியலய்யா”,

அவர் சலித்துக்கொள்ள மகேந்திரனுக்கும் சலிப்பு தட்டியது. அப்போது “இன்ஸ்பெக்டர் சார்” என்று முதிய குரல் ஒன்று கேட்டது.

வந்தவர் முருகையா. கான்ஸ்டபிளைப் பார்த்து வழக்கு என்ன கோணத்தில் நகர்கிறதென கேட்க வந்திருப்பார் போல. மார்த்தாண்டனும் அடிக்கடி அவரை காவல் நிலையத்தில் பார்த்திருக்கிறார். எனவே அவரது வருகை ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை.

“உங்க முதலாளி அனுப்பி வச்சாரா பெரியவரே?”

சலித்த குரலில் கேட்ட மார்த்தாண்டனுக்கு முருகையா சொன்ன பதிலில் அவரும் மகேந்திரனும் திகைத்துப் போனார்கள்.