IIN 4

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தோராயமாக ஒவ்வொரு நூறு பேரிலும் ஒருவர் அல்லது இருவர் உளப்பிறழ்வுக்கான பண்புகளைக் கொண்டிருக்கிறார்கள் என உளவியலாளர்கள் மற்றும் உளவியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொது மக்களில் 30 சதவிகிதம் பேர் உளப்பிறழ்வுக்கான பண்புகளை வெளிப்படுத்துவதாக மார்ஷ் கூறுகிறார். உளப்பிறழ்வுக் குறைபாடு உடையவர்கள், நெருங்கிய நட்பைப் பேண சிரமப்படுகிவார்கள். மேலும், ஆபத்தான சூழ்நிலைகளை ஏற்படுத்துபவர்களாகவும் அச்சூழ்நிலையில் தங்களை உட்படுத்திக்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் இம்மனநிலை அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

         -An article from BBC

பொன்மலை காவல்நிலையம்….

காவல் ஆய்வாளர் மார்த்தாண்டன் முன்னே அமர்ந்திருந்தான் ராக்கி என்ற ரக்‌ஷன். வெடவெடவென்ற ஒல்லி தேகம் நடுங்குவதை மார்த்தாண்டனால் கண்கூடாக காண முடிந்தது. சற்று முன்னர் தான் கலிங்கராஜனை விசாரித்திருந்தார். அந்த மனிதர் புதிதாக எதுவும் சொல்லவில்லை. அவரது வாக்குமூலம் வீடியோவாக்கப்படுவதைக் கவனித்தவருக்குக் கலக்கம். கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டுக் கிளம்பினார்.

அடுத்து அழைத்துவரப்பட்டவன் ரக்‌ஷன்.

அவனை ஊன்றி கவனித்தவராக “நீ தான இனியாவோட டெட்பாடியை முதல்ல பாத்தவன்?” என்று கேட்டார்.

“ஆமா சார்”

“அந்த நேரத்துல காட்டுப்பாதையில உனக்கு என்ன வேலை? எதுக்காக நீ அங்க போன?”

“என் அண்ணன் ரோஷண் சக்கரவர்த்தி டீ எஸ்டேட்ல சி.சி.டி.வி சிஸ்டம் கண்காணிக்குற வேலை பாக்குறான் சார்… அவனுக்கு நைட் டியூட்டி தான் இருக்கும்… ஒரு வாரமா அவன் ஊர்ல இல்லாததால நான் அவனுக்குப் பதிலா நைட் அங்க போவேன் சார்… மானிங் ஃபைவ் ஓ க்ளாக் எனக்கு டியூட்டி முடிஞ்சதும் திரும்பி வர்றப்ப காட்டுப்பாதை பக்கத்துல யாரோ படுத்து இருக்குற மாதிரி தெரிஞ்சுது… ஒருவேளை யாரும் குடிச்சிட்டு விழுந்து கிடப்பாங்களோனு சந்தேகப்பட்டு அங்க போனேன்”

“குடிகாரன் மேல உனக்கு என்னப்பா அவ்ளோ கருணை?”

இப்போது ராக்கி தயங்கினான். மார்த்தாண்டன் அவன் முன்னே தண்ணீர் பாட்டிலை நகர்த்தவும் எடுத்துக் குடித்தான்.

அவனது உடல்மொழியை மார்த்தாண்டன் கவனிக்கிறார் என்பதை அறியாதவனாகப் பேச ஆரம்பித்தான்.

“எங்க ஊர் காட்டுல நரி, ஓநாய் எல்லாம் உண்டு சார்… சமயத்துல அங்க போனவங்க ஓநாய் கிட்ட கடி வாங்கிட்டு வந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கு… அதான் படுத்திருந்தவங்களை எழுப்பி என் கூட அழைச்சிட்டுப் போகலாம்னு நினைச்சேன்… கிட்ட போய் பாத்தா அங்க…. அங்க..”

“அங்க இனியாவோட டெட்பாடிய பாத்து பேய்னு நினைச்சு பயந்து ஃபாதர் கிட்ட ஓடிவந்த… அதான?”

“ஆமா சார்”

“ஓ.கே… உன் அண்ணன் ரோஷண் சாத்தானை வழிபடுற கல்ட் குரூப் ஒன்னு வச்சிருக்கான்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க… இதுல்லாம் உண்மையா? அந்த குரூப் ஆளுங்களை உனக்குத் தெரியுமா? நீயும் அதுல ஒரு மெம்பரா?”

மார்த்தாண்டன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக ராக்கி திருதிருவென விழித்தான்.

“அண்ணனோட குரூப்புக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது சார்… நான் காலேஜ் செகண்ட் இயர் படிச்சிட்டிருக்கேன்”

“ஓ! கலிங்கராஜனுக்கும் உன் அண்ணனுக்கும் என்ன சம்பந்தம்?”

ராக்கி சற்று தயங்கினான். விசாரணை அறைக்கு வெளியே யாரோ ஒரு காவலர் லத்தியை தரையில் அடிக்கும் சத்தம் கேட்டதும் அவன் உடம்பு தூக்கிவாரிப்போட்டது.

“க…க… கலிங்கராஜன் சார்… சாரோட ஒய்ப் கிளாரா அண்ணனோட கல்ட் குரூப்ல நம்பிக்கை உள்ளவங்க… அவங்க தான் கலிங்கராஜன் சார் கிட்ட அண்ணனை அறிமுகப்படுத்தி வச்சாங்க”

மார்த்தாண்டனால் அவன் சொன்னதை நம்ப முடியவில்லை.

கிளாராவா சாத்தான் வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவள்?

“எதுக்காக?”

“கலிங்கராஜன் சாரோட பிசினஸ்ல வர வர சரிவு அதிகமாகிடுச்சு… பிசினஸ்ல லாபம் வரணும்னு சாத்தான் கிட்ட வேண்டிக்கிட்டு பலி குடுத்துட்டா அவரோட தொழில் பழையபடி லாபமா இயங்க ஆரம்பிச்சிடும்னு அவங்க நம்புனாங்க”

அதோடு ராக்கி முடித்துக்கொண்டான். அதை சொல்லி முடிப்பதற்குள் வியர்த்து வழிந்திருந்தான் அவன்.

அனைத்தும் வீடியோவாக பதிவேற்றப்பட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்த மார்த்தாண்டன் முறுவலித்தபடி “சிகரெட் நிறைய பிடிப்பியோ? இந்த வயசுலயே உதடு கறுத்துப் போய் இருக்கு” என்று சம்பந்தமில்லாமல் பேசவும் அவனது திகைப்பு அதிகரித்தது.

“சார்…”

“வெறும் சிகரெட் மட்டும் தானா? இல்ல கஞ்சா, எல்.எஸ்.டி மாதிரி பவர்புல்லான போதையா?”

“ஐயோ சார்! சிகரெட் மட்டும் தான்… அதையும் பவுல் ஃபாதர் சொன்னதால இப்ப நிறுத்திட்டேன்”

“ஃபாதர் பவுல்?”

“ஆமா சார்… எங்கம்மா இறந்ததுல இருந்து ஃபாதரோட பராமரிப்புல தான் வளந்தோம்”

அடுத்த முறுவல் வெடித்தது மார்த்தாண்டனின் இதழில்.

“சர்ச் ஃபாதரோட பராமரிப்புல வளந்த உன் அண்ணன் சாத்தானை வழிபடுறான்… கேக்கவே வினோதமா இருக்குல்ல?”

ராக்கியிடமிருந்து பதில் வரவில்லை. அதையும், பவுல் பாதிரியாருக்கும் இந்தச் சகோதரர்களுக்கும் இடையே இருந்த இணைப்பைப் பற்றியும் குறித்துக்கொண்டார் அவர்.

“நீ போகலாம் ராக்கி… நீ இன்னும் என்னோட சஸ்பெக்ட் லிஸ்டுல தான் இருக்க… இந்த கேஸ் முடியுற வரைக்கும் நீ பொன்மலைய விட்டு எங்கயும் போகக்கூடாது”

சரியெனத் தலையாட்டிய ராக்கி நாற்காலியிலிருந்து எழுந்து வெளியேறினான். விசாரணை அறையை விட்டு அவன் சென்றதும் உதவி ஆய்வாளர் மகேந்திரனிடம் ரோஷணைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா என விசாரித்தார் மார்த்தாண்டன்.

“அவன் சென்னைல இருக்குறதா நம்பத் தகுந்த வட்டாரத்துல இருந்து செய்தி கிடைச்சிருக்கு சார்… அங்க ஒரு பிசினஸ்மேன் வீட்டுல அவனை அடிக்கடி பாக்க முடியுதுனு எனக்குச் செய்தி குடுத்தவர் சொன்னார்”

மார்த்தாண்டன் புருவம் சுருக்கினார்.

“பிசினஸ்மேனுக்கும் இவனுக்கும் என்னய்யா சம்பந்தம்? கலிங்கராஜன் வீட்டுக்கும் அடிக்கடி போக வர இருந்திருக்கான்… அந்தப் பிசினஸ்மேன் யாருனு விசாரிக்கச் சொல்லு… அப்ப தான் நம்ம தேடுற லீட் கிடைக்கும்”

“சரி சார்”

“அவனைத் தீவிரமா வாட்ச் பண்ணி கேப் கிடைச்சா அரெஸ்ட் பண்ணிடனும்யா… அவன் மேல என் சந்தேகம் அதிகமாகுது”

சரியென சொல்லிவிட்டு மகேந்திரன் வெளியேறியதும் தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்தார் மார்த்தாண்டன்.

ரோஷண் – கலிங்கராஜன் – கிளாரா இந்த மூவரும் ஒரே புள்ளியில் இணைவதால் இனியாவின் மரணத்துக்கான காரணம் இம்மூவராக இருப்பார்களோ என்ற சந்தேகம் அவருக்கு.

ஆனால் பிரேத பரிசோதனையில் இனியா வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக வந்துள்ளது. என்ன தான் பிடிக்காத மகளாக இருந்தாலும் எந்த தகப்பனும் மகளை யாரோ ஒருவன் வன்புணர்வு செய்யும் கொடூரம் நடக்கவிடமாட்டான்.

ஆணவக்கொலை செய்யத் துணியும் காட்டுமிராண்டி தந்தை கூட செய்யக் கூசும் குற்றம் அல்லவா அது.

இதற்கெல்லாம் முடிவு கிடைக்க வேண்டுமாயின் ரோஷணைக் கைது செய்வது ஒன்றே வழி.

மார்த்தாண்டன் வீடியோ ரெக்கார்டிங்கை நிறுத்திவிட்டு வெளியேறியபோதே உதவி ஆணையர் கமலேஷிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

“இனியா மர்டர் கேஸ் என்ன லெவல்ல இருக்கு? அடாப்சி முடிஞ்ச பாடியை ஏன் இன்னும் அவங்க பேரண்ட்ஸ் கிட்ட ஒப்படைக்காம இருக்கிங்க?”

“சார் அந்தப் பொண்ணோட பேரண்ட்ஸ் தான் என் சஸ்பெக்ட் லிஸ்டுல முதல் மூனு  இடத்துல இருக்காங்க”

“என்ன சொல்லுறிங்க மார்த்தாண்டன்?”

மார்த்தாண்டன் கமலேஷிடம் இதுவரை நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் கூறினார்.

“சோ ரோஷணை அரெஸ்ட் பண்ணுனா இந்தக் கேஸ் முடிவுக்கு வரும்னு சொல்லுறிங்க?”

“ஆமா சார்… அவன் இப்ப சென்னைல இருக்கான்… சென்னைல எந்த ஜூரிஸ்டிக்சன்னு தெரிஞ்சுக்கிட்டு அங்க உள்ள போலீஸ் மூலமா அவனை அரெஸ்ட் பண்ணி நம்ம கஸ்டடிக்குக் கொண்டு வந்துட்டா ஈசியா அவன் கிட்ட வாக்குமூலம் வாங்கிடலாம்”

“ஓ.கே… நீங்க அவன் இருக்குற இடம் பத்தி விசாரிங்க… அவனை அரெஸ்ட் பண்ணுறதை பத்தி சம்பந்தப்பட்ட ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் கிட்ட நான் பேசுறேன்”

கமலேஷ் அழைப்பைத் துண்டித்ததும் மார்த்தாண்டன் அமைதியாக யோசனையில் ஆழ்ந்தார்.

இனியாவை செவ்வாய்கிழமை கடைசியாகப் பார்த்தவர் முருகையா. அவரது கூற்றுப்படி அடிக்கடி கலிங்கராஜன் வீட்டுக்கு ரோஷண் வந்தது புலனாகிறது.

அவளது சடலத்தை முதலில் கண்டவன் ராக்கி ரோஷணின் தம்பி. அவனது வாக்குமூலம் கலிங்கராஜனும் கிளாராவும் தொழில் வளரவேண்டுமென சாத்தான் வழிபாட்டில் இணையவிருந்ததை உறுதி செய்திருக்கிறது.

எனவே இனியாவின் மரணம் நிச்சயமாக ரோஷணின் கையால் தான் நேர்ந்திருக்கவேண்டும். பிடிக்காத மகளைச் சாத்தானுக்குப் பலியிட்டுத் தொழிலை வளர்க்க முடிவு செய்த கலிங்கராஜன் மகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவன் அவளைக் கொடூரமாகச் சிதைத்து கொல்வதற்கு முன்னர் வன்புணர்வுக்கு ஆளாக்கியிருக்கவேண்டும்.

சாத்தான் வழிபாட்டை நம்புபவர்கள் அருவருப்பான காரியங்கள் செய்து சாத்தானை மகிழ்விப்பார்கள் என எங்கோ படித்தது நினைவில் வந்தது அவருக்கு.

தனது ஊகம் தான் உண்மயென நூறு சதவிகித நம்பிக்கை வந்துவிட்டது மார்த்தாண்டனுக்கு.

அதே நேரம் நிஷாந்தைக் காய்ச்சியெடுத்துக்கொண்டிருந்தான் ஏகலைவன்.

“கூடாநட்பு கேடாய் முடியும்னு எத்தனை தடவை சொன்னேன்? கேட்டியா நீ? இப்ப போலீசோட சந்தேகம் எல்லாம் உன் ஃப்ரெண்ட் ராக்கியோட அண்ணன் மேல தான்… நீ சொன்னனு அவனுக்கு என் எஸ்டேட்ல வேலை போட்டுக் குடுத்தேன் பாரு, என்னைச் சொல்லணும்”

“ரோஷண் அண்ணா அப்ப நல்லவரா தான் இருந்தார் மாமா” என்றான் நிஷாந்த் தலையைக் குனிந்தபடி.

“அவன் உன் கிட்ட நடிச்சிருப்பான்… அதைக் கூட புரிஞ்சிக்க முடியாத முட்டாள் நீ”

ஏகலைவன் ஏகவசனத்தில் மகனைத் திட்டுவதைக் கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருந்தார் அவனது அன்னையும் ஏகலைவனின் ஒன்றுவிட்ட தமக்கையுமான சாவித்திரி.

“ரோஷண் பண்ணுன தப்புக்கு இவன் என்ன செய்வான் தம்பி?” என்றார் அவர்.

ஏகலைவனுக்கு வந்ததே கோபம்.

“நீ குடுக்குற செல்லத்தால தான் இவன் கெட்டுப்போயிட்டான்கா… கலிங்கராஜனோட பொண்ணை இவன் காதலிச்சிருக்கான்… அது தெரியுமா உனக்கு?”

சாவித்திரியின் தலையில் யாரோ இடியை இறக்கினார்கள். பயத்தில் மேனி நடுங்க மகனைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தார்.

“தம்பி என்னடா சொல்லுறான்? உண்மையா இதெல்லாம்? நீ இனியாவைக் காதலிச்சியா?”

“ஆமாம்மா”

ஏகலைவன் சிகையைக் கோதியபடி சோபாவில் தொப்பென அமர்ந்தான்.

“அது மட்டுமில்ல… கடைசியா இவன் தான் இனியாவ காட்டுப்பாதைல பாத்திருக்கான்”

அடுத்த இடி! இம்முறை சாவித்திரியோடு நிஷாந்தும் அதிர்ந்து போனான். யாருக்கும் தெரியாதென அவன் நினைத்த உண்மை மாமனுக்குத் தெரிந்த அதிர்ச்சி!

நிலைகுலைந்து போனார் சாவித்திரி. கணவரின் மரணத்துக்குப் பிறகு புகுந்தவீட்டுச் சொந்தங்கள் கை கழுவியதால் விருதுநகரிலிருந்து பிறந்த ஊரான பொன்மலைக்கு வந்தவர் அவர்.

இங்கே தனக்கும் தனது மகனுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. கூடவே ஏகலைவன் இருக்கிறான் என்ற நிம்மதி.

ஏகலைவன் உதவியால் மகனை நன்றாகப் படிக்கவைத்து நல்ல நிலைக்கு வரவைக்க வேண்டுமென போராடிக்கொண்டிருந்தவருக்கு மகனின் இந்தக் காதல் விவகாரம் பெரும் வேதனையைக் கொடுத்தது.

“உனக்கு எப்பிடி இவங்க சந்திச்சது தெரியும் தம்பி?”

“என் எஸ்டேட் சி.சி.டி.வில இவனும் அந்தப் பொண்ணு இனியாவும் காட்டுப்பாதைல நடந்து பேசிக்கிட்டே காட்டுக்குள்ள போனது பதிவாகிருக்கு”

நிஷாந்த் ஓடி வந்து ஏகலைவனின் காலில் விழுந்தான்.

“நானும் இனியாவும் காட்டுக்குள்ள போனது உண்மை தான் மாமா… நான் அவளை அழைச்சிட்டுப் போகல… என்னை அங்க இனியா தான் கூட்டிட்டுப் போனா”

ஏகலைவனின் புருவங்கள் சுழித்தன.

“ஏன் கூட்டிட்டுப் போனா?”

“நம்ம ஊர் காட்டுக்குள்ள ராமபாணம் பூக்கொடி நிறைய வளர்ந்து இருக்குமாம்… அது அவளுக்கு ரொம்ப பிடிச்ச பூவுனு சொன்னா… அதோட மணம் நைட் நேரம் முருகன் கோவில் வரைக்கும் காத்துல மிதந்து வரும்னு ஆசையோட அவ சொன்ன விதத்துல என் புத்தி வேலை செய்ய மறந்துடுச்சு மாமா… அவளுக்கு அந்தச் செடி வேணும்னு சொன்னதால நான் உதவிக்குப் போனேன்”

அதோடு நிறுத்தினான் அவன். ஏகலைவனின் முகத்தில் கோபம் குறைந்து சாந்தம் குடியேறியது. திடீரென எப்படி முகம் மாறியது என சாவித்திரி அதிசயிக்கும்போதே “அப்புறம்?” என்றான் அவன்.

“அப்புறம் சென்னைல இருந்து தேவநாதன் சார் கால் பண்ணுனார்… நம்ம ஊர் முருகன் கோவில்ல இந்த வருசம் தைப்பூசம் திருவிழா நடக்கலனு வருத்தமா பேசுனார்… மாசி திருவிழாவ ஜாம் ஜாம்னு நடத்தணும்னு சொன்னார்… அதுக்காக ரெண்டு லட்சம் டொனேசன் தர்றதா அவர் சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு… இனியா கிட்ட அதை ஷேர் பண்ணுனதும் அவளும் சந்தோசப்பட்டா… புதுசா வளர்ந்த கொடியை அவளே வேரோட பிடுங்கிக்கிறதா சொன்னா… அதனால அவளைக் காட்டுக்குள்ள விட்டுட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன்… அப்புறம் சென்னைக்குக் கிளம்பிப்போயிட்டேன் மாமா”

ஏகலைவனின் கோபம் எல்லாம் நிஷாந்த் ‘ராமபாணம் மலர்க்கொடியைப் பற்றி பேசியதும் அப்படியே தணிந்து போனது.

சாவித்திரி அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தார்.

“என் மகன் இந்த கேஸ்ல சிக்கிடக்கூடாது ஏகலைவா… எனக்குனு இருக்குறது இவன் மட்டும் தான்… இவனுக்கு எதுவும் ஆச்சுனா நானும் செத்துடுவேன்”

“ஏன்மா இப்பிடிலாம் சொல்லுற?”

அழுதபடியே அன்னையின் கையைப் பிடித்தான் நிஷாந்த்.

ஏகலைவன் தொண்டையைச் செருமினான்.

“இதெல்லாம் இனியா மாதிரி பணக்காரவீட்டுப்பொண்ணைக் காதலிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் நிஷாந்த்… உன்னை மாதிரி பசங்களுக்கு வாழ்க்கையில முன்னேறணுங்கிற வெறி வரணுமே தவிர காதல் கண்றாவி எல்லாம் வரக்கூடாது”

“முதல்ல நான் இனியாவ ஃப்ரெண்டாதான் நினைச்சேன் மாமா… அவளோட நல்ல குணம் பிடிச்சுப் போய் காதலிக்க ஆரம்பிச்சேன்”

“அதை மறந்துடு… இன்னொரு தடவை உன்னால அக்கா பரிதவிக்கக்கூடாது நிஷாந்த்” என அவனிடம் கண்டிப்பு தொனியில் கூறினான்.

துவண்டு போன தமக்கையிடம் “அந்த சி.சி.டி.வி ஃபுட்டேஜை ராக்கி உட்பட யாருக்கும் தெரியாம நான் டெலீட் பண்ணிட்டேன்கா” என்றான் அமைதியாக.

சாவித்திரியின் கண்களில் நன்றியுணர்ச்சி! கரங்கூப்பினார் அவர்.

“இனியாச்சும் படிப்பைத் தவிர வேற எதை பத்தியும் யோசிக்காத நிஷாந்த்… இந்த கேஸ் உன் பக்கம் திரும்பாது… திரும்பாம நான் பாத்துக்குறேன்” என உறுதியளித்தான் அவன்.

“ரொம்ப நன்றி தம்பி…  இந்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேனோ?” என்றபடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் சாவித்திரி.

அன்னையும் மகனும் அங்கிருந்து போனதும் ஏகலைவன் எழுந்தவன் தனது தோட்டத்திற்கு சென்றான்.

அவனது விழிகள் தேடுதல் வேட்டையில் இறங்கி இறுதியாக தோட்டத்தின் மூலையில் படர்ந்திருந்த ராமபாணம் மலர்க்கொடியிடம் வந்து நின்றன.

அதனருகே போனவன் வெடித்து மலரத் தயாராக இருக்கும் மலர் மொக்கு ஒன்றை விரலால் வருடினான். அந்நேரத்தில் விசித்திரமான புன்னகை ஒன்று அவனது இதழில் உதயமானது.

அவனுக்கு மிகவும் பிடித்த மலர் அது. காரணம் அவனது அவளுக்கு ராமபாணம் என்ற நித்தியமல்லியின் நறுமணம் என்றால் கொள்ளைப்பிரியம். ஒவ்வொரு முறை கொடியில் மொக்கு மலர்ந்து நறுமணம் வீசும்போது அவள் தன் அருகாமையில் இருப்பதாக உணர்வான் ஏகலைவன்! இப்போதும் அதே உணர்வு! அவளின் வெண்டைப்பிஞ்சு விரல்கள் அவனது நீண்ட விரல்களோடு கோர்த்துக்கொள்ள கண்களை மூடி ஸ்பரிசத்தை அனுபவிக்க ஆரம்பித்தான் அவன்.