IIN 27

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சமுதாயத்தில் ஒதுக்கப்படுவது, தனக்கென யாருமில்லாத தனிமையோடு உணர்வுரீதியான வேதனையும் சேர்ந்து ஒரு சைக்கோபாத்தை குற்றங்களைச் செய்யத் தூண்டுகின்றன. இந்த உலகமே அவர்களுக்கு எதிராக இருப்பதாக நம்புகிறார்கள் அவர்கள். கூடவே தங்களின் வினோத ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் தங்களுக்கு இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள். சைக்கோபாத் சீரியல் கொலைகாரர்களான ஜெஃப்ரி டாமர் மற்றும் டெனிஸ் நில்சன் கூற்றுப்படி அவர்களைப் போன்ற சைக்கோபாத் கொலைகாரர்கள் அடிக்கடி உலகத்துடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொள்வதாகவும் அதன் மூலம் அவர்களின் சைக்கோபாத் குணம் இன்னும் தூண்டப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். அவர்களின் சோகமும், வேதனையும் அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் செய்யப்போகும் குற்றச்செயல்களில் குரூரம் அதிகரிக்குமென கூறியிருக்கிறார்கள் இருவரும்.
               -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens

ஜானைக் காவலர்கள் கைது செய்து கொண்டு வந்தார்கள். அவர் முகத்தில் எந்த உணர்ச்சிகளுமில்லை. முதியவர் ஒருவரை இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்த குற்றவுணர்ச்சி கிஞ்சித்துமில்லை.

ஆனால் தாங்கள் கைது செய்யப் போன போது தப்பிக்க முயற்சித்ததாக காவலர் ஒருவர் கூறினார்.

இது இனியாவின் கொலை வழக்கோடு சம்பந்தப்படாத வழக்கு என்பதால் மகேந்திரனும் மார்த்தாண்டனும் விசாரிக்கட்டுமென ஒதுங்கிக்கொண்டாள் இதன்யா.

ஜானை லாக்கப்பில் அடைத்துவிட்டு வந்த மகேந்திரன் மார்த்தாண்டனிடம் விசாரணையை ஆரம்பிக்கலாமா என கேட்டார்.

அவர் நிலையான மனநிலையில் இருந்தால் அல்லவா பதில் அளிப்பார்.

“மார்த்தாண்டன் சார்”

இதன்யா உலுக்கியதும் இயல்புக்கு வந்தவர் “சஸ்பெக்டை அரெஸ்ட் பண்ணியாச்சா?” என்று கேட்டபடி எழுந்தார்.

“லாக்கப்ல இருக்கான் சார்… நீங்க வந்திங்கனா என்கொயரிய ஆரம்பிச்சிடலாம்”

மார்த்தாண்டன் அங்கிருந்து வெளியேற இதன்யா அவரைத் தொடர்ந்து சென்றாள்.

ஜானை விசாரணை அறைக்குள் அழைத்துச் செல்வதைப் பார்த்தபடி வெளியே நின்றாள். இனியா வழக்குக்கும் இந்த வழக்குக்கும் தொடர்புள்ளதாக ருசுவாகும் வரை இந்த வழக்கு அவளது அதிகாரத்திற்குள் வராது.

தனது சந்தேகப்பட்டியலில் உள்ளவர்களை அடுத்த கட்ட விசாரணைக்கு உட்படுத்துவதைப் பற்றிய யோசனை அவளுக்குள் ஓடியது.

முரளிதரன் காவல் நிலையத்துக்கு வந்ததும் அதை பற்றி பேசிவிட்டுப் போகலாமென காத்திருக்க ஆரம்பித்தாள்.

மகேந்திரனும் மார்த்தாண்டனும் விசாரணை அறைக்குள் போய் பதினைந்தாவது நிமிடம் தடவியல் துறையிலிருந்து கொடுக்கப்பட்ட அறிக்கையோடு முரளிதரன் வந்தார்.

வந்தவரிடம் இனியாவின் படுகொலைக்கும் முருகையாவின் கொடூர மரணத்துக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என விசாரித்தாள் அவள்.

“மர்டர் நடந்த விதம் தவிர வேற எந்த தொடர்பும் இருக்கிறதா தெரியல மேடம்… ஃபாரன்சிக் டீம் கலெக்ட் பண்ணுன பயலாஜிக்கல் எவிடென்ஸ் அடிப்படையா வச்சு சஸ்பெக்ட்ஸோட டி.என்.ஏவை கலெக்ட் பண்ணி டி.என்.ஏ ப்ரொஃபைலிங் பண்ணுனா தான் நமக்கு ஏதாச்சும் உபயோகமான தகவல் கிடைக்கும்” என்றார் முரளிதரன்.

“ஹூம்”

பெருமூச்சுவிட்டவளுக்கு அடுத்தக்கட்டமாக யாரை விசாரிக்கலாமென்ற கேள்வி. அதை முரளிதரனிடம் கேட்க அவரோ “எனக்கு மிஸ்டர் கலிங்கராஜன் வீட்டுல இருக்குற சர்வெண்ட்ஸ் மேல டவுட் வருது மேடம்… விசாரிச்சவரைக்கும் அவங்க யாருக்கும் இனியா மேல பெருசா எந்த பச்சாதாபமும் கிடையாது… அந்தப் பொண்ணு கூட அங்க இருக்குற எல்லாருக்குமே பிரச்சனை நடந்திருக்கு… இந்த ஜானும் இன்னொரு லேடியும் ஏதோ தப்பு பண்ணுறதா அந்தப் பொண்ணு சந்தேகப்பட்டிருக்கானு கலிங்கராஜன் வீட்டுல இருக்குற ஹவுஸ்கீப்பர் லேடி சொன்னாங்க…. சப்போஸ் ஒரு குரூப் ஆப் பீபிள் இனியாவோட மர்டர்ல சம்பந்தப்பட்டிருந்தாங்கனா அதுல கட்டாயம் கலிங்கராஜனோட சர்வெண்ட்சுக்கும் பங்கு இருக்கும் மேடம்… அதோட அந்த ரெண்டு பேரும்…” என்றவர் விசாரணைக்குழுவின் அறையில் தாங்கள் இப்போது இல்லை என்றதும் பேச்சை நிறுத்தினார்.

இதன்யாவுக்கு அவர் சொல்ல வருவது புரிந்தது.

“கரெக்ட்.. நம்ம அடுத்து விசாரிக்க வேண்டிய ஆள் குமாரியும் நவநீதமும்… நாளைக்கே அந்த வேலையை ஆரம்பிச்சிடலாம் முரளி சார்”

இதன்யாவும் முரளிதரனும் பேசிக்கொண்டிருக்கையிலேயே மகேந்திரன் கோபத்தோடு விசாரணையறையிலிருந்து வெளியே வருவதும் அதே நேரம் அரசு மருத்துவமனை பரிசோதனைக்கூடத்திலிருந்து வந்த ஊழியர் உள்ளே செல்வதும் நடந்தேறியது.

“என்னாச்சு மகேந்திரன்?”

பெரிய பெரிய மூச்சுகளை எடுத்துத் தன்னைச் சமனப்படுத்திக்கொண்டு வந்த மகேந்திரன் “அந்தாளு எதுவும் தெரியாது எதுவும் தெரியாதுனு மட்டும் சொல்லுறான் முரளி சார்… இப்ப வரைக்கும் வாயைத் திறந்து உண்மைய சொல்லமாட்றான்… அந்தாளுக்கும் முருகையாவுக்கும் இருந்ததுலாம் சாதாரண  பிரச்சனையாம்… தலை சுத்துது சார்” என்றார் முயன்று வருவித்த பொறுமையோடு.

முரளிதரன் மகேந்திரனின் தோளில் தட்டிக்கொடுத்தார்.

“டி.என்.ஏ டெஸ்ட் ரிசல்ட் வரட்டும்… எல்லா உண்மையயும் வெளிய வரவச்சிடலாம்… டென்சன் ஆகாதிங்க… இந்தக் கேசை முடிச்சிட்டுச் சீக்கிரமா எங்களுக்கு ஹெல்ப் பண்ண வாங்க” என்று ஊக்கப்படுத்தினார் அவர்.

மகேந்திரனுக்குச் சலிப்பு இருந்தாலும் முரளிதரனின் வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையில் சமாதானமானார்.

“நாளைக்கு நானும் இதன்யா மேடமும் மறுபடி கலிங்கராஜன் சார் வீட்டுக்கு என்கொயரிக்காக போறோம்… ரெண்டு மர்டர் கேசும் ஏதோ ஒரு புள்ளில இணையும்னு எனக்குத் தோணுது” என்றார் முரளிதரன்.

இதன்யாவும் முரளிதரனும் காவல் நிலையத்திலிருந்து வெளியேறினார்கள்.

மார்த்தாண்டன் இன்னும் விசாரணை அறையிலிருந்து வெளியே வரவில்லை. அரசு மருத்துவமனை பரிசோதனைக்கூட ஊழியர் வெளியேறியதும் மகேந்திரன் மீண்டும் அந்த அறைக்குள் சென்றார்.

“சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார்… எனக்கும் பெரியவருக்கும் சின்ன சின்ன பிரச்சனை வந்தது உண்டு… ஆனா அது எல்லாமே வேலை நேரத்துல வந்த பிரச்சனை… அவர் மட்டும் தான் கலிங்கராஜன் ஐயா குடும்பத்துக்கு விசுவாசமா இருக்குற மாதிரி ஓவரா சீன் போடுவாரு… அதனால தான் எனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வரும்”

“அப்ப அவரோட கொலைக்கும் உனக்கும் சம்பந்தமில்ல?”

“நிஜமா எந்தச் சம்பந்தமும் இல்ல சார்… அந்தாளு ஒன்னும் அவ்ளோ நல்லவன் இல்ல… இனியா  பொண்ணுக்கும் நிஷாந்துக்கும் காதல் கனெக்சன் குடுத்தவரே அந்தாளு தான்… அந்தப் பொண்ணு வீட்டுக்குத்  தெரியாம நிஷாந்தை பாக்கப் போறது அவருக்குத் தெரியும்… ஒரு தடவை அதை நான் கவனிச்சு ஐயா கிட்ட சொல்லிட்டேன்… அந்தக் கோவம் அவருக்கு நிறையவே இருந்துச்சு… இனியாவுக்கும் அதுக்கு அப்புறம் என்னைப் பிடிக்காம போயிடுச்சு… அந்தப் பொண்ணு மனசை விஷமாக்குனவரு இந்த முருகையா”

மூச்சு வாங்க ஜான் பேசிக்கொண்டிருக்க “இதனால தான் உன் மேல சந்தேகம் வருது” என்று குறுக்கிட்டது மார்த்தாண்டனின் குரல்.

உடனே ஜான் கப்சிப்பாகிவிட்டார்.

“விடுங்க சார்… நாளைக்கு டி.என்.ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வரும்ல… அப்ப இவனைக் கவனிச்சிக்கலாம்” என்றார் மகேந்திரன்.

மார்த்தாண்டனோ ஜானின் முகபாவனையைத் தான் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது முகத்தில் அதீத நம்பிக்கை தெரிந்தது.

எந்தத் தப்பும் செய்யவில்லை என்றாலோ தப்பு செய்துவிட்டுத் தடயத்தை அழித்தாலோ மட்டுமே இத்தகைய அதீத நம்பிக்கை குற்றம் சாட்டப்பட்டவரிடம் வெளிப்படும்.

இதில் ஜான் தப்பு செய்யாதவரா அல்லது தடயங்களை அழித்த புத்திக்கூர்மை கொண்ட கொலைகாரனா என்பதை மறுநாள் வரவிருக்கும் தடயவியல் அறிக்கை தான் முடிவு செய்யும்.

அதே நேரம் காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய இதன்யா பொடிநடையாக போலீஸ் குவார்ட்டர்சுக்குப் போகலாமென நடையைக் கட்டினாள். முரளிதரனுக்கு ஊருக்குள் சில வேலை இருந்ததால் அவர் அதைக் கவனிக்கப் போய்விட்டார்.

தனியே நடந்து போன இதன்யா தன்னைக் கடந்து போன ஊர்க்காரர்களையும் வீடுகளையும் பார்த்தபடியே சென்றாள்.

தேவாலயத்தைக் கடக்கும்போது யாரோ அங்கிருந்து வெளியேறுவது தெரிந்தது. நெடுநெடு உயரமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட ஓங்குதாங்கான உருவம் அது.

பார்க்கும் யாருக்கும் சந்தேகத்தைக் கொடுக்கக்கூடிய தோற்றம். யாரும் தன்னைப் பார்க்கக்கூடாதென்ற எண்ணம் அவ்வுருவம் மறைந்து மறைந்து தேவலாயத்திலிருந்து வெளியே வந்ததிலிருந்தே தெரிந்தது.

பொன்மலை மலைவாசஸ்தலம். இருள் கிளம்பியதும் இலவச இணைப்பாக குளிரும் வந்து ஒட்டிக்கொள்ளும் அங்கே.

அந்த உருவம் சாதாரண ஆளாகக் கூட இருக்கலாம். குளிருக்காக ஹூடி டீசர்ட் அணிந்திருக்கலாம். இப்படி எத்தனையோ ‘கலாம்’களால் அவ்வுருவத்தை அவள் சந்தேகிக்கவில்லை.

அந்நேரத்தில் தேவாலயத்திலிருந்து வெளியே வந்தார் பாதிரியார் பவுல்.

அந்த உருவத்திடம் ஏதோ பேசித் தோளில் தட்டிக்கொடுத்தார் அவர்.

அந்த உருவமும் தலையாட்டிவிட்டுக் கிளம்பியது.

இதன்யாவுக்கு இப்போது அந்த உருவத்தைப் பின் தொடர்வதை விட பாதிரியாரிடம் வந்தவன் யாரென விசாரிப்பதே பெரியதாகத் தோன்றியது.

அவள் கேள்விப்பட்ட வரை பாதிரியார் பவுலைப் பற்றி மார்த்தாண்டன் கூறிய விவரங்கள் யாவுமே சந்தேகத்தைக் கிளப்புவதாகவே அமைந்தன.

அவரை இன்னும் சந்தேகப்பட்டியலில் சேர்க்கவில்லை தான். அதற்காக அவரது நடத்தை சந்தேகப்படும் வகையில் இல்லை என்றும் சொல்ல முடியாதே!

எனவே சாதாரணமாகப் பேசுவதைப் போல பாவ்லா செய்துகொண்டு தேவாலயத்திற்கு விரைந்தாள்.

இதன்யாவைப் பார்த்ததும் அதிர்வார் என நினைத்த பவுல் பாதிரியாரோ அதற்கு மாறாக புன்னகைத்தார்.

“வாங்க மேடம்”

“எப்பிடி இருக்கிங்க ஃபாதர்?”

குசலம் விசாரிப்பது போலக் காட்டிக்கொண்டாலும் அவளது விழிகள் தேவாலயத்தின் உள்ளே அங்குமிங்கும் அலைபாய்வதைக் கண்டுகொண்டார் அவர்.

“வாங்களேன் எங்க சர்ச்சை ஒரு தடவை பாத்த மாதிரி இருக்கும்” என அவர் அழைக்க இதன்யாவும் செருப்பைக் கழற்றிவிட்டு ஷோல்டர் பேக்கோடு உள்ளே நுழைந்தாள்.

பெரிய தேவாலயம் தான். கொஞ்சம் ஆங்கிலேயே பாணி கட்டிடக்கலை. அதைப் பாதிரியாரிடம் கேட்டபோது “பிரிட்டிஷ் பீரியட்ல திருநெல்வேலி கலெக்டரோட ஃபேமிலி பொன்மலைல தான் தங்குவாங்க… இந்த ஹில் ஸ்டேசனோட வெதர் க்ரேட் பிரிட்டன் வெதரோட ஒத்துப்போகுமாம்… அவங்களுக்காக கட்டப்பட்ட சர்ச்… அப்பப்ப கொஞ்சம் ரினோவேட் மட்டும் பண்ணிருக்கோம்” என்று தேவாலய வரலாற்றை விளக்கினார் அவர்.

“ஓ! ரொம்ப அழகா இருக்கு… டிவைன்ஃபுல்லாவும் இருக்கு”

மெய்யாகவே உணர்ந்து சொன்னாள் இதன்யா.

அப்போது “ஃபாதர் சண்டே க்ளாஸ்..” என்றபடி ராக்கி வந்து சேர இதன்யாவின் பார்வை அவன் புறம் திரும்பியது.

அவளைப் பார்த்ததும் வார்த்தைகள் வேலைநிறுத்தம் செய்ய பயத்தில் திணறிப்போனான் அவன்.

இதன்யாவோ புன்னகைத்தாள்.

“இப்ப நீ சஸ்பெக்டும் இல்ல… நான் உன்னை விசாரிக்கிற போலீஸ் ஆபிசரும் இல்ல.. ஜஸ்ட் இந்த சர்ச்சைப் பாக்க வந்தேன்… சோ நீ இவ்ளோ தூரம் பயப்பட தேவையில்ல ரக்சன் அலையஸ் ராக்கி”

கிண்டல் கலந்து அவள் சொன்ன தொனியில் பயம் குறைந்தாலும் திணறல் குறைவேனா என்றது ராக்கிக்கு.

“ஓ.கே ஃபாதர்… நான் இங்க இருந்தா இவன் பேசமாட்டான்… நான் கிளம்புறேன்… இன்னொரு நாள் சர்ச்சைப் பொறுமையா வந்து பாக்குறேன்” என்று கிளம்பி இரண்டு எட்டுகள் எடுத்து வைத்து பின்னர் திடீரென நினைவு வந்தது போல தலையில் தட்டித் திரும்பினாள் இதன்யா.

“ஃபாதர்… நான் இங்க வர்றதுக்கு முன்னாடி யாரோ ஒருத்தர் இங்க இருந்து போன மாதிரி தெரிஞ்சுதே,… யார் அது? மிஸ்டர் ஏகலைவனா?”

அந்த உருவத்தின் தோற்றத்திற்கு பொருத்தமான ஒருவனைக் குறிப்பிட்டுக் கேட்கவும் பாதிரியாருக்கு அவளது கேள்வி சந்தேகமாகத் தோன்றவில்லை. எனவே தயங்காமல் “நோ” என்றார்.

கூடவே “பக்கத்து கிராமத்துல இருக்குற முத்துங்கிற பையன்… ரொம்ப திறமைச்சாலி… டிரைவரா வேலை பாக்குறான்… ரீசண்டா ரோட்ல போறப்ப ரெண்டு நாய்கள் அவனோட கார்ல அடிபட்டுடுச்சாம்… அதுவும் உயிர் தானே ஃபாதர், நான் பாவமன்னிப்பு கேக்க விரும்புறேன்னு சொல்லி கேட்டுட்டுப் போறான்” என்றார்.

நாய்களை அடித்துப் போட்டதற்கு பாவமன்னிப்பா? வினோதமாக இருந்தது இதன்யாவுக்கு. இருப்பினும் ஜீவகாருண்யம் அதிகம் கொண்ட மக்களையும் அவள் பார்த்திருக்கிறாளே! எனவே அப்படியா என்ற ரீதியில் கேட்டுவிட்டு அங்கிருந்து போலீஸ் குவார்ட்டர்சுக்குக் கிளம்பினாள் அவள்.