IIN 26

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சைக்கோபாத்கள் அதிகபட்ச வெளிப்புறத் தூண்டுதலால் முட்டாள்தனமான சாகச மனநிலையில் இருப்பார்கள். காரணம் அவர்களின் இயல்புக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் பிறருடன் நடக்கும் மோதல்கள். இந்த முட்டாள்தனமான சாகச மனநிலையைக் கட்டுப்படுத்த முடியாத தங்களது இயலாமையை எண்ணி அவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் தங்களது இயல்பிலிருந்து மாற விரும்பினாலும், பயமுணராத்தன்மை, அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் திறன் இல்லாமை, எதிர்மறை மனநிலை, விரக்தி, மனச்சோர்வு இதெல்லாம் அவர்களை மாறவிடுவதில்லை.

               -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens

குடும்பநல நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தாள் இதன்யா. இன்னும் ஒரு ஹியரிங்குக்குப் பிறகு விவாகரத்து கிடைத்துவிடும் என்றார் வழக்கறிஞர்.

முன்னாள் கணவனிடம் பேசக்கூட விருப்பமின்றி நீதிமன்றத்திலிருந்து கிளம்பிவிட்டாள் அவள். நீதிமன்றத்தில் நுழைந்ததிலிருந்து அவளது மொபைல் சைலண்ட் மோடுக்குப் போயிருந்தது.

அதை கூட கவனியாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தவள் ஏதோ உறுத்தவும் மொபைலை எடுத்துப் பார்த்தாள். ஏகப்பட்டத் தவறிய அழைப்புகளைத் தொடுதிரை சிவப்பு வண்ணத்தில் காண்பிக்கவும் கொஞ்சம் பரபரப்பானாள்.

ஏனெனில் அழைத்திருந்தவர் முரளிதரன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு முன்னரே வந்திருந்த அழைப்புகளைப் பார்த்தால் ஏதோ பிரச்சனை என புரிந்தது.

சற்றும் தாமதிக்காமல் முரளிதரனின் எண்ணுக்கு அழைத்தாள் இதன்யா. முரளிதரனும் “சாரி மேடம்… ஒரு முக்கியமான விசயத்தை கன்வே பண்ணணும்னு உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்… சீரியசான விசயம் மேடம்” என்றார் பரபரப்புடன்.

“சொல்லுங்க முரளி சார்”

“இங்க இன்னொரு மர்டர் நடந்திருக்கு இதன்யா மேடம்”

இன்னொரு கொலையா? இப்போது முரளிதரனின் பரபரப்பு இதன்யாவையும் தொற்றிக்கொண்டது.

“யாரு? எங்க?”

“இனியாவோட டெட்பாடி கிடைச்ச அதே இடத்துல மேடம்… இறந்து போனது கலிங்கராஜன் வீட்டு வாட்ச்மேன் பெரியவர் முருகையா”

இனியாவுக்காக மெய்யாக வருந்திய ஒரு உயிர் போய்விட்டது. பெருமூச்சுவிட்ட இதன்யா “மர்டருக்கான காரணம் என்னனு தெரிஞ்சுதா?” என்று கேட்க

“இனியாவ கொலை பண்ணுன அதே பாணில கொலைகாரன் இவரையும் கொன்னிருக்கான் மேடம்” என்றார் முரளிதரன்.

“வாட்?”

“பெரியவரோட முகத்துல ஆசிட் ஊத்தி தோலை உரிச்சிருக்காங்க மேடம்… கழுத்தை நெறிச்சுக் கொன்னுருக்கான் கில்லர்”

“இப்ப நிலவரம் என்ன? ஏதாச்சும் எவிடென்ஸ் சிக்குச்சா?”

“மோப்பநாய் டீம் வச்சு அந்த இடத்தைச் சுத்தித் தேடுனதுல்ல ஒரு ஷூ தடம் மட்டும் கிடைச்சிருக்கு… அந்த ஷூ தடம் காட்டுக்குள்ள இருக்குற குகை பக்கம் போயிருக்கு மேடம்… குகையில சில வெப்பன்ஸ் கிடைச்சிருக்கு… ஆசிட் பாட்டில்சும் கிடைச்சிருக்கு… ஃபாரன்சிக் டீம் அதெல்லாம் கலெக்ட் பண்ணிருக்காங்க… பெரியவரோட பாடிய அடாப்சிக்கு அனுப்பிருக்கோம்”

“நான் லீவைக் கேன்சல் பண்ணிட்டு வர்றேன் முரளி சார்”

இதன்யா அவரிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

எதிரில் கவலையோடு வந்த தாய் மயூரியைக் கவனியாமல் தனது அறைக்குள் போக முற்பட்டாள். ஆனால் மயூரி அதற்கு விடவேண்டுமே!

“நேத்து வந்த… முழுசா ஒரு நாள் கூட எங்களோட இருக்க முடியல… உனக்குனு ஒரு குடும்பம், பிள்ளைக்குட்டி வேண்டாமாடி?” என கவலையோடு கேட்டவரை அதிருப்தியாய் ஒரு பார்வை பார்த்தவள்

“என் குடும்பம் இதுதான்மா… குழந்தை வேணும்னா அப்புறமா சொந்தக்கார குழந்தை எதாச்சும் தத்தெடுத்துக்குறேன்… இப்ப நான் பொன்மலைக்குக் கிளம்பணும்… தயவுபண்ணி கண்ணைக் கசக்கி போறப்ப என்னை டென்சன் ஆக்காத” என்று சிடுசிடுத்தாள்.

மயூரிக்குக் கண்களில் கண்ணீர் பொங்கியதும் அமைதியாய் தந்தையிடம் ஒரு பார்வை வீச்சு.

வாசுதேவன் மனைவியை சமாதானப்படுத்த ஆரம்பித்தார்.

இதன்யா தனது அறைக்குப் போய் உடைமைகளை எடுத்து வைத்தாள். விமானப்பயணச்சீட்டு கிடைப்பது குதிரைக்கொம்பு. எனவே டாக்சியில் பொன்மலைக்குப் போய்விடலாமென நம்பிக்கைக்குரிய ஓட்டுநர் ஒருவரை மொபைலில் அழைத்து விசாரித்தாள்.

அவரும் வருவதாகக் கூறிவிட உடனே நடையைக் கட்டலாமென நினைத்தவளுக்கு அன்னையின் வாடிய முகம் நினைவுக்கு வரவும் தனது ஷோல்டர் பேக்கோடு ஹாலுக்கு விரைந்தாள்.

“இவ கொஞ்சம் இறங்கி வரலாம்ங்க… மாப்ளை தான் இவ ஒர்க் நேச்சரைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுறேன்னு போனவாரம் வந்தப்ப சொன்னாரே… நீங்க இதன்யா கிட்ட பேசி புரியவைங்க”

மயூரி வாசுதேவனிடம் கண்ணீருடன் சொல்லிக்கொண்டிருந்தார். அதை கேட்ட இதன்யாவுக்கு முன்னாள் கணவன் ப்ராணேஷ் மீது வந்த கோபத்துக்கு அளவில்லை. இதோடு ஆயிரத்து எண்ணூறாவது முறை இப்படி கூறுகிறான் அவன்.

அவன் இந்த ஜென்மத்தில் இதன்யாவின் வேலையைப் பற்றி புரிந்துகொள்ளப்போவதில்லை. இம்மாதிரி பிசினஸ்மேன்கள் எல்லாம் சினிமா கதாநாயகிகள், மாடல் அழகிகளை ஏன் மணமுடித்துக்கொள்கிறார்கள் என்று இப்போது புரிந்தது அவளுக்கு.

சமுதாயத்திற்கு இவள் என் மனைவியென அறிமுகப்படுத்தி வைக்க ஒரு அலங்கார  பொம்மை இவர்களுக்குத் தேவை. மேற்சொன்னவர்கள் தான் இவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவர்கள். தன்னைப்போல ஒரு காவல்துறை அதிகாரி பிசினஸ்மேனை மணந்தது தான் தவறு என நொந்துகொண்டவள் தந்தையிடம் வந்தாள்.

“நெக்ஸ்ட் டைம் ப்ராணேஷ் வந்தார்னா இனிமே பேசுறதுக்கு எதுவுமில்லனு சொல்லிடுங்கப்பா… இந்தக் கேஸ் முடியுற வரைக்கும் என்னால அடிக்கடி கால் பண்ணி பேச முடியாது… சோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க… கணேஷ் அண்ணாவோட டாக்சியைத் தான் புக் பண்ணிருக்கேன்.. நான் கிளம்புறேன்பா” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே வெளியே டாக்சி வந்துவிட்டது.

“இதன்யாம்மா” என்று கணேஷ் அழைப்பது கேட்டது.

“அண்ணா வந்துட்டார்… நான் போயிட்டு வர்றேன்மா… டேக் கேர்பா”

இதன்யா டாக்சியில் அமரவும் அது கிளம்பியது. பயணத்தில் யோசனைவயப்பட்டவளுக்கு மார்த்தாண்டனிடமிருந்து வாட்சப்பில் தகவல்கள் சுடச்சுட கிடைத்தன.

பெரியவரின் உடலைக் காலையில் எஸ்டேட்டிலிருந்து திரும்பிய கூலியாள் ஒருவர் பார்த்திருக்கிறார். அவர் போட்ட கூச்சலில் ஊர் மக்கள் ஓடி வந்து பார்த்து காவல்துறைக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

கலிங்கராஜனிடம் விசாரித்தாலோ பெரியவர் இரு தினங்களுக்கு முன்னரே விடுமுறை எடுத்துவிட்டாரென பதில் வந்திருக்கிறது. பெரியவரின் வீடு இருப்பதும் பொன்மலை தான். அவருக்கென குடும்பம் எதுவும் கிடையாது. ஒண்டிக்கட்டையாக வாழ்ந்தவராம்.

கலிங்கராஜனின் வீட்டில் அவர் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு மேலாய் வேலை செய்திருக்கிறார். அவரைப் பற்றி தவறாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார் மார்த்தாண்டன்.

அனைத்தையும் கேட்டவளுக்கு அவரைக் கொல்லும் அளவுக்கு யாருக்குக் கோபம் இருக்க முடியுமென்ற யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.

டாக்சி பொன்மலையை அடைந்தபோது இருட்டிவிட்டது. நேரே காவல்நிலையத்துக்கே வந்துவிட்ட இதன்யா அங்கே மகேந்திரன் மட்டும் இருக்கவே அவரிடம் மற்ற விபரங்களைக் கேட்டறிந்தாள்.

யாரெல்லாம் சந்தேகப்பட்டியலில் உள்ளார்கள் என்று விசாரித்தாள்.

“பெரியவர் முருகையாக்கும் கலிங்கராஜன் வீட்டுல இருந்த மத்த சர்வெண்ட்சுக்கும் அடிக்கடி பிரச்சனை வருமாம் மேடம்… அவங்க எல்லாரையும் சஸ்பெக்டா சேர்த்திருக்கோம்”

“ஃபாரன்சிக் டீம் எப்ப தகவல் சொல்லுவாங்க?”

“நாளைக்குச் சொல்லுறதா சொன்னாங்க மேடம்”

“ப்ரைமரி சஸ்பெக்ட்னு யாராச்சும் இருக்காங்களா?”

“கலிங்கராஜனோட நம்பிக்கைக்குரிய டிரைவர் ஜான்… அந்தாளு ஒரு தடவை முருகையாவை கொலை பண்ணிடுவேன்னு மிரட்டிருக்கான்… அந்தாளை அரெஸ்ட் பண்ணுறதுக்காக கலிங்கராஜன் வீட்டுக்குப் போனோம்… ஆனா கலிங்கராஜனோட ஒய்புக்கு அவர் எங்க போனார்னு தெரியல… கலிங்கராஜன் அவரோட பொண்ணை பத்தி சோசியல் மீடியால தாறுமாறா வர்ற செய்திகளைக் கேள்விப்பட்டதுல இருந்து வீட்டை விட்டு வேற எங்கயும் போறதில்லனு சொன்னார்… ஜான் ரெண்டு நாளுக்கு முன்னாடியே இன்னைக்கு அவன் குடும்பத்தைப் பாக்கப் போகணும்னு லீவ் கேட்டதா சொன்னார்… வேற யாரும் யூஸ்புல்லா எந்தத் தகவலும் சொல்லல… அவன் சொந்த ஊர் பூங்குன்றம்… அவனோட குடும்பத்தைப் பாக்கப் போனதா ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்த கலிங்கராஜனோட டாட்டர் ஜென்னி சொல்லிச்சு… இன்னும் கொஞ்சநேரத்துல அவனை அரெஸ்ட் பண்ணி அழைச்சிட்டு வந்துடுவாங்க மேடம்”

“இந்தக் கேசுக்கும் இனியா கேசுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கும்னு தோணுதா?”

“கொலை செய்யப்பட்ட விதத்தைத் தவிர இப்போதைக்க்கு வேற எந்தச் சம்பந்தமும் இல்ல மேடம்… சப்போஸ் ஃபாரன்சிக் டீம் எடுத்துட்டுப் போன எவிடென்ஸை பொறுத்து தான் ரெண்டு கேசுக்கும் எதாச்சும் சம்பந்தம் இருக்குதானு கண்டுபிடிக்க முடியும்”

இதன்யா அனைத்தையும் கேட்டவள் மனதில் ஏதோ நெருடவும் “மிஸ்டர் ஏகலைவன் ஊர்ல தான் இருக்காரா மகேந்திரன் சார்?” என்று கேட்க

“அவர் பிசினஸ் மீட்டிங்குக்காக சென்னைக்குப் போனதா அவரோட சர்வெண்ட் சொன்னார் மேடம்… இன்னும் அவர் ஊருக்குத் திரும்பல” என்றார் மகேந்திரன்.

முருகையாவால் தான் இனியாவின் வழக்கில் ரோஷணின் பங்கு பற்றி தான் தெரிந்துகொண்டதாக மார்த்தாண்டன் கூறியிருந்தார். கொலைகாரனைப் பற்றி பெரியவருக்கு ஏதேனும் உண்மை தெரிந்து அதனால் அவரை அவன் கொன்றிருப்பானோ என்ற சந்தேகம் இதன்யாவுக்கு.

அவரை இறுதியாக யார் பார்த்தார்கள் எங்கே பார்த்தார்கள் என்பது பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை என்று மார்த்தாண்டன் வாட்சப்பில் தகவல் சொல்லியிருந்தார்.

மகேந்திரன் விசாரணைக்குழு அலுவலகத்தை விட்டு வெளியேற முற்படவும் “மகேந்திரன் நம்ம ஸ்டேசனுக்குப் பெரியவர் அடிக்கடி வருவார்னு மார்த்தாண்டன் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்… அவருக்குப் பழக்கமான ஆள் இங்க யாருனு தெரியுமா?” என்று வினவினாள் இதன்யா.

“கான்ஸ்டபிள் கனகசுப்புரத்தினம் கூட பெரியவரை அடிக்கடி பாத்திருக்கேன் மேடம்”

“அவர் இருந்தார்னா வரச் சொல்லிட்டுப் போங்க”

மகேந்திரன் அங்கிருந்து வெளியேறியவர் கான்ஸ்டபிளை இதன்யா அழைப்பதாகச் சொல்லி விசாரணை அலுவலக அறைக்கு அனுப்பி வைத்தார்.

உள்ளே வந்த கனகசுப்புரத்தினத்திடம் பெரியவர் முருகையா பற்றி ஏதாவது விபரம் தெரியுமா என விசாரித்தாள் அவள்.

“அந்தப் பெரியவருக்கு இறந்து போன இனியா பொண்ணு மேல தனிப்பாசம் மேடம்… அவளுக்கு நியாயம் கிடைக்கணும்னு அடிக்கடி புலம்புவாரு… குடும்பம்னு யாருமே கிடையாது அவருக்கு… தொண்ணூத்து மூனுல தாமிரபரணில வெள்ளம் வந்துச்சுல, அப்ப அவரோட மனைவியும் மகனும் வெள்ளத்துல அடிச்சிட்டுப் போனதா சொல்லிருக்கார்… கலிங்கராஜன் குடும்பத்தைத் தவிர அவருக்காக யோசிக்கிறவங்க யாருமே கிடையாதுனு சொல்லுவார்”

“கலிங்கராஜன் அவரை மரியாதையா நடத்துவாரா?”

“கலிங்கராஜனும் அவரோட ஒய்பும் பெரியவருக்கு எல்லா மரியாதையும் குடுப்பாங்கனு அவர் சொல்லிருக்கார்… அந்த வீட்டுல உள்ள குழந்தைங்களும் அவரைத் தாத்தானு கூப்பிட்டு மரியாதையா நடந்துப்பாங்களாம்… ஆனா அந்த வீட்டுல இருந்த மத்த சர்வெண்ட்ஸ் கூட அவருக்கு எப்பவுமே ஒத்துப்போகாதுனு சொல்லுவார் மனுசன்… விசுவாசம் இல்லாதவங்கனு அவங்களை என் காதுபட நிறைய தடவை திட்டிருக்கார்… இனியாவை கூட அந்த வீட்டுல இருக்குற சர்வெண்ட்சுக்கு அவ்ளோவா பிடிக்காதுனு சொல்லுவார்”

“ஓ! சரி… நீங்க போகலாம்”

கான்ஸ்டபிளை அனுப்பிவைத்துவிட்டு இதன்யா தனது நாற்காலியில் போய் அமர்ந்தாள்.

மார்த்தாண்டன் வெகுநேரம் கழித்து வந்தார். வந்தவரின் முகம் கலங்கியிருந்தது. இதன்யாவுக்குப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

இதன்யாவுக்குச் சல்யூட் வைத்தவர் அவள் தண்ணீர் தம்ளரை நகர்த்தவும் எடுத்து அருந்தினார்.

“உக்காருங்க மார்த்தாண்டன்”

சோகமாக அமர்ந்தவர் இதன்யாவின் அளவிடும் பார்வையைப் பார்த்துவிட்டு “நானும் எமோஷனல் ஆகவேண்டாம்னு முயற்சி பண்ணுனேன் மேடம்… பட் என்னால முடியல… அந்தப் பெரியவர்… ப்ச்… பாவம் மேடம்… ஐ நோ, எவ்ரிபடி வில் டை ஒண்டே, பட் நோபடி டிசர்வ் திஸ் கைண்ட் ஆப் ப்ரூட்டல் டெத்… ரொம்ப கொடூரமா கொன்னுருக்காங்க, இனியாவை கொன்ன மாதிரியே”

இதன்யா இம்முறை அவருக்கு அறிவுரை எல்லாம் கூறவில்லை. கொஞ்சம் நிதானத்துக்கு வரட்டுமென காத்திருந்தார்.

“இவரோட உதவியால இந்தக் கேஸ்ல நிறைய டர்னிங் பாயிண்ட் வந்துச்சு… இன்னும் எதுவும் ஆதாரம் இவருக்குக் கிடைச்சிருக்குமோ? அதுக்காக கொலை நடந்திருக்குமோ?”

தன் பாட்டுக்கு ஊகங்களைக் கூறினார் அவர்.

“ஜானை அரெஸ்ட் பண்ணப் போனவங்க வரட்டும் மார்த்தாண்டன்… அப்புறம் உண்மை தெரிய வரும்”

இருவரும் ஜானைக் காவலர்கள் அழைத்து வரட்டுமென காத்திருந்தார்கள்.