IIN 25

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சைக்கோபாத்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அதில் குழப்பமான குடும்ப வாழ்க்கை, பெற்றோர்களின் வழிகாட்டுதல் போதுமான அளவில் இல்லாமை, போதைக்கு ஆளான பெற்றோரின் கொடுமை மற்றும் சமூக விரோதப்போக்கு, மோசமான உறவுகள், விவாகரத்து, வளர்ச்சிக்குப் பாதகமான சூழல் போன்றவை கட்டாயம் இடம்பெறும். இத்தகைய நபர்கள் தங்களது மனரீதியான குறைபாட்டால் தங்களை ஒரு சிறைக்கைதியைப் போல உணரலாம். அதனால் தங்களையும் சாதாரணமாக வாழும் மற்ற நபர்களையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. அவர்களுக்கு இருக்கும் எவையெல்லாம் தனக்கு மறுக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கவும் செய்வார்கள். தங்களது முரட்டுத்தனமான சுபாவத்தால் ஒருவிதமான தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளப்படுகிறார்கள் இவர்கள். தங்களையே களங்கப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் தங்களைப் பற்றி விவரம் மற்றவர்களுக்குத் தெரிய வருவதற்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. காரணம், அப்படி தெரியவருமாயின் தங்களை அவர்கள் நிராகரித்துவிடுவார்களோ என்ற பயத்தால் வெகு கவனமாக தங்களது மனப்பிறழ்வுக்குறைபாட்டை, உண்மையான இயல்பை மறைத்துக்கொள்வார்கள். இது அவர்களை தர்மச்சங்கடத்தில் ஆழ்த்தும். தனது உண்மையான இயல்பை மறைத்து மற்றவர்களுடன் இணைந்து சாதாரணமாக வாழ்வதா அல்லது தனது குறைபாட்டை மனதில் வைத்து அனைவரிடமிருந்தும் ஒதுங்கி தனிமையில் வாழ்வதா என அடிக்கடி குழம்பித் தவிப்பார்கள் இவர்கள். மற்றவர்களின் அன்பையும் காதலையும் பார்த்து தங்களுக்கு அது கிடைக்காது என சோர்ந்து போவார்கள்.

               -From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens

காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கும், செய்தி தொலைகாட்சி நிருபர்களுக்கும் காவல்துறை சார்பில் அதிகாரப்பூர்வமான செய்தியறிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. அதைத் தாண்டி அவர்களிடம் சில வார்த்தைகள் பேச விரும்புவதாக இதன்யா கூறவும் அங்கே சின்ன சலசலப்பு எழுந்தது.

“இந்த கேஸ் எவ்ளோ சென்சிடிவானதுனு உங்க எல்லாருக்குமே தெரியும்… அப்பிடி இருந்தும் சில சேனல்ல அதிகாரப்பூர்வ அறிக்கைய போலீஸ் டிப்பார்ட்மெண்ட் தரப்புல ரிலீஸ் பண்ணுறதுக்குள்ள விக்டிம் பத்தி தப்பு தப்பா நியூஸ் போட ஆரம்பிச்சாச்சு… அதோட விளைவு சோசியல் மீடியால விக்டிமை ‘ஸ்லட்ஷேம்’ செய்யுற வக்கிரமான ஆளுங்க அவங்க வேலைய ஆரம்பிச்சிட்டாங்க… நம்ம தமிழ் சமுதாயம் நாகரிகமானது, முற்போக்கு சிந்தனை உள்ளதுனு சொல்லுறதுலாம் வெறும் வெளிப்பூச்சு வார்த்தை தான்… இந்த கேஸ்ல விக்டிம் எவ்ளோ கொடூரமா இறந்தாங்கனு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்…  ஷீ டிண்ட் டிசர்வ் திஸ் கைண்ட் ஆப் டெத்… அவ கொலை செய்யப்படுறதுக்கு முன்னாடி கொடூரமா அனுபவிச்ச சித்திரவதை எந்தப் பொண்ணுக்கும் நடக்கக்கூடாத கொடுமை… ஆனா அவ காதலன் கூட உறவு வச்சுக்கிட்டதால இந்தக் கொடுமைக்கும், கொடூரமான சாவுக்கும் தகுதியானவளா மாறிட்டானு ஒவ்வொருத்தரும் கமெண்ட்ல அந்தப் பொண்ணை இன்னொரு தடவை கொடுமையா சாகடிக்கிறாங்க… கொஞ்சம் யோசிங்க, நம்ம வீட்டுப்பொண்ணுக்கு இப்பிடி ஒரு மரணம் நடந்திருந்தா இவளுக்கு இந்தத் தண்டனை தேவை தான்னு வெட்டி நியாயம் பேசுவோமா?”

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

“அப்ப திருமணத்துக்கு முந்தைய உடலுறவை நீங்க ஆதரிக்கிறிங்களா மேடம்?”

இதன்யா அவரைச் சூடாய் பார்த்ததும் கப்சிப்பானார்.

“ப்ரீ-மேரிட்டல் செக்ஸ் எப்பவுமே சரினு நான் சொல்லமாட்டேன்…. சுயக்கட்டுப்பாடும் ஒழுக்கமும் ஒவ்வொரு மனுசனுக்கும் அவசியம்… ஆனா சூழ்நிலையால சலனப்பட்டுத் தப்பு பண்ணுனதுக்காக அவங்களைக் கொடூரமா கொன்னதை நியாயப்படுத்தலாமா சார்? அந்த இடத்துல இருந்த பொண்ணு எப்பிடிப்பட்டவளா வேணாலும் இருக்கட்டும், அவளை வன்புணர்வு செய்ய எந்த ஆம்பளைக்கும் அதிகாரம் இல்ல… இந்தக் கேஸ்ல கில்லர் சைக்காலஜிக்கலி பாதிக்கப்பட்ட ஒருத்தனா இருக்கலாம்னு ஒரு சந்தேகம் இருக்கு… ஆனா அந்தக் கில்லரை விட ஆயிரம் மடங்கு கொடூரமான சைக்கோபாத்கள் நமக்கு மத்தியில நல்லவங்கங்கிற போர்வையில நடமாடுறதை சோசியல் மீடியா கமெண்ட் செக்சனைப் பாத்தா தெரிஞ்சிக்கலாம்… விக்டிம் இப்ப உயிரோட இல்ல… பதில் சொல்ல முடியாத இடத்துல இருக்கிறவங்க மேல வக்கிரமான குற்றச்சாட்டு வைக்குறது, கட்டிப்போட்டு இடுப்புக்குக் கீழ அடிக்கிறதுக்குச் சமம்… நல்ல மனுசங்க செய்யுற காரியம் இல்ல அது”

“விக்டிம் மேல தப்பு இல்லனே வச்சிப்போம் மேடம்… அதுக்காக கமெண்ட் பண்ணுன ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போய் பதில் சொல்லிட்டு இருக்கமுடியுமா?” இது இன்னொரு நிருபரின் கேள்வி.

“சொல்ல முடியாது… பட் சமூக வலைதளத்துல இந்த கேஸ் விக்டிமை பத்தி அருவருப்பான கமெண்ட்ஸ் பாஸ் பண்ணுறவங்க மேல சைபர் க்ரைம் மூலமா ஆக்சன் எடுக்கலாம்… ஆபாசமான கமெண்ட் போடுறதுக்கு முன்னாடி தப்பு பண்ணுறோம்ங்கிற பயம் அவங்களுக்கு வரும்… விக்டிமோட ஃபாதர் இது சம்பந்தமா சைபர் க்ரைம்ல சில யூடியூபர்ஸ் மேல கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணிருக்கார்… அவங்களை அரெஸ்ட் பண்ணுறதுக்கான வேலை நடந்துக்கிட்டே இருக்கு… பேச்சு சுதந்திரத்துக்கும் வக்கிரத்தை கக்குறதுக்கும் வித்தியாசம் இருக்குங்கிறதையும் போலீஸ் டிப்பார்ட்மென்ட் தானே புரியவைக்கணும்… இந்த கேஸ் இன்னும் முடியல… எங்க என்கொயரி டீமோட பார்வை சஸ்பெக்ட் லிஸ்டுல இருக்குற ஒவ்வொருத்தர் மேலயும் இருக்கு… சோ உங்களோட அசெம்சனை வச்சு இறந்து போன பொண்ணு மேல சேறு பூசாதிங்க”

பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு இதன்யா அங்கிருந்து கிளம்பினாள்.

“வேலைனு வந்துட்டா எமோசன்ஸ் பாக்கக்கூடாதுனு சொல்லுற இதன்யாவா விக்டிமுக்காக இவ்ளோ தூரம் ப்ரஸ் மீட்ல பேசுனது?” என உதவி ஆணையர் கமலேஷ் அதிசயிக்க

“இது ஒரு பொண்ணோட நடத்தை சம்பந்தப்பட்ட விசயமாச்சே சீனியர்… அதான் இந்த விசயத்துல என் கொள்கைய மறந்து பேசிட்டேன்… நானும் ரத்தமும் சதையுமுள்ள மனுசி தானே?”

அவரிடம் விடைபெற்று பொன்மலை காவல் நிலையத்துக்குப் பைக்கில் கிளம்பியபோது பாதி வழியில் குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெறும் விவாகரத்து வழக்கிற்கான ஹியரிங்கில் கலந்துகொள்வது பற்றி நினைவுறுத்த அவளது எண்ணுக்கு அழைத்தார் வழக்கறிஞர்.

பைக்கை நிறுத்திவிட்டு மொபைல் அழைப்பை ஏற்றவள் மறுநாள் காலையில் விமானம் மூலம் சென்னைக்கு வந்துவிடுவதாகக் கூறினாள்.

இதற்காக கடந்த வாரமே விமான பயணச்சீட்டை ஆன்லைனில் புக் செய்திருந்தாள் அவள்.

பைக்கைக் கிளப்பிக்கொண்டு பொன்மலை காவல்நிலையத்துக்கு வந்தவள் சிறப்பு விசாரணைக்குழுவிலிருந்த மற்ற மூவரிடமும் மறுநாள் மதியம் சென்னைக்கு விமானத்தில் செல்லவிருப்பதைக் கூறினாள்.

“நான் சென்னைல இருந்து திரும்பி வர த்ரீ டேய்ஸ் ஆகும்… அதுக்குள்ள முக்கியமான விசயம் எதுவும் தெரிய வந்துச்சுனா தயங்காம கால் பண்ணுங்க… லீவை கேன்சல் பண்ணிட்டு வந்துடுவேன்”

“கண்டிப்பா மேடம்”

சொன்னபடி மறுநாள் காலையில் உடமைகள் அடங்கிய ஷோல்டர் பேக்கோடு கிளம்பியவள் மலையிலிருந்து கீழே செல்ல போலீஸ் வாகனத்தை உபயோகிக்க வேண்டாமென நினைத்து எப்போதும் மலை மேல் ஆட்களை அழைத்து வரும் ஜீப் ஓட்டுனரிடம் முன்னரே சொல்லி வைத்திருந்தாள்.

அவளது கெட்டநேரம் ஏற்பாடு செய்த ஜீப் பாதி வழியில் பழுதாகி  நின்றுவிட எப்படி விமானம் ஏறுவதற்கு தூத்துக்குடி விமானநிலையம் செல்வதென திகைத்துப்  போனாள் இதன்யா.

அப்போது தான் ஏகலைவனின் கார் வந்தது. இதன்யாவைக் கண்டதும் காரை நிறுத்தினான் அவன்.

“ஹலோ மேடம்! விசாரணையே வேண்டாம்னு எங்க ஊரை விட்டுக் கிளம்பிட்டிங்களா?” என்றபடி இறங்கி வந்தான் அவன்.

கிளாராவின் கேவலமான நடத்தைக்குப் பிறகு அவனைக் கண்டாலே அனிச்சையாக இதன்யாவுக்குள் அசூயை வந்துவிடும்.

இப்போதும் அதே உணர்வோடு பேசாமல் இருக்கலாம் தான். ஆனால் அவனது கிண்டலுக்குப் பதில் சொல்லாமல் அமைதி காக்க பிடிக்கவில்லை.

“அவ்ளோ சீக்கிரம் ஓடுற ஐடியா எனக்கு வராது சார்… விசாரணை இன்னும் முடிஞ்சிடல… எங்க சஸ்பெக்ட் லிஸ்டுல இன்னும் ஏழு பேர் இருக்காங்க… அவங்களை எல்லாம் விசாரிக்காம நான் எப்பிடி போவேன்? பை த வே, அந்த ஏழு  பேர்ல நீங்களும் ஒருத்தர்”

ஏகலைவனின் நிலையை அவனுக்கு உணர்த்தும் விதமாகப் பதிலளித்தாள் இதன்யா.

அவனோ அதை கேட்டுச் சத்தமாக நகைத்தான்.

“நீங்க சந்தேகப்படுற அளவுக்கு நான் என்ன செஞ்சிட்டேன் மேடம்?”

“உங்களைப் பாக்குறப்பலாம் அமெரிக்கன் சைக்கோ கில்லர் டெட் பண்டி தான் ஞாபகம் வர்றார் மிஸ்டர் ஏகலைவன்… த மோஸ்ட் கரிஷ்மாட்டிக் சைக்கோ கில்லர் அந்தாளு… பொன்மலையோட எலிஜிபிள் பேச்சிலரான உங்களுக்கும் அதே சார்ம், அதே கரிஷ்மா இருக்கு… இப்பிடிப்பட்ட ஆளுங்களைச் சந்தேகப்படலனா தான் தப்பு… அதோட கோர்ட்டே உங்களை விசாரிக்கணும்னு ஆர்டர் போட்டிருக்கு சார்”

“சஸ்பெக்ட்ல ஆரம்பிச்சு சைக்கோ பட்டம் வரைக்கும் நீங்க குடுத்தாலும் எங்க ஊருக்கு வந்த போலீஸ் ஆபிசர் இப்பிடி அம்போனு நிக்குறதை பாத்துட்டு உதவி செய்யாம போறதுல எனக்கு உடன்பாடு இல்ல… எங்கயோ கிளம்பிப் போறிங்கனு தெரியுது… நான் பிசினஸ் ட்ரிப்பா சென்னைக்குக் கிளம்புறேன்… மதியம் எனக்குத் தூத்துக்குடி ஏர்ப்போர்ட்ல ஃப்ளைட்… என் கூட வாங்க… சிட்டில கொண்டு போய் விட்டுடுறேன்”

இதன்யாவுக்கு ஏனோ அவனோடு போக மனம் வரவில்லை. ஏகலைவன் அவளது சந்தேகப்பார்வையைக் கவனித்துவிட்டான்.

“உங்க நிலமை புரியுது மேடம்… பட் நான் ஒன்னும் தனியா வரல… ட்ரைவர் இருக்கார்… தைரியமா நீங்க என் கூட கார்ல வரலாம்”

இதன்யா கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். இதற்கு மேலும் தாமதித்தால் அவளால் விமானத்தைப் பிடிக்கவியலாது. எனவே ஏகலைவனின் காரில் ஏறினாள்.

அவள் பின்னிருக்கையில் அமரவும் கார் கிளம்பியது.

“மேடம் எங்க போகணும்?”

கார் ஓட்டுனர் கேட்க “ஏர்ப்..” என ஆரம்பித்தவள் “என்னைச் சிட்டில இறக்கிவிட்டுருங்க” என்று முடித்தாள்.

பாதியில் வார்த்தையை மாற்றியதைக் கவனித்துவிட்ட ஏகலைவன் “நீங்களும் ஏர்ப்போர்ட் தான் போகணுமா? ஒன்னும் பிரச்சனை இல்ல… என் கூடவே வரலாம்” என்றான் தாராள மனதுடன்.

“இல்ல” என மறுக்க வந்தவளிடம் “நான் சஸ்பெக்ட் தான் மேடம்… அக்யூஸ்ட் இல்ல… என் கூட நீங்க வந்தா யாரும் உங்களைத் தப்பு சொல்லமாட்டாங்க” என்று சொல்லி வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் ஏகலைவன்

இதன்யாவுக்கும் அதற்கு மேல் அவனிடம் வாதிட விருப்பமில்லை. கார் ஓட்டுனரிடம் அவன் இலகுவாகப் பேசுவதைக் கவனித்தபடி பயணித்தாள்.

தூத்துக்குடி விமானநிலையத்தில் இறங்கியதும் ஏகலைவனிடமும் ஓட்டுனரிடமும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பியவள் விமானத்தில் அவன் தனக்கு அடுத்த இருக்கையில் அமரவும் திகைத்துப் போய்விட்டாள்.

“ஹலோ” என சினேகமாகக் கையசைத்தவனிடம் செய்த உதவிக்காக சிரித்து வைத்தாள்.

“என்ன விசயமா சென்னைக்குப் போறிங்க மேடம்?”

சாதாரணமாகத் தான் அவன் கேட்டான். ஆனால் இதன்யாவுக்கு அப்படி தோன்றாததால் “கொஞ்சம் பெர்ஷனல் வேலை” என்று சுருக்கமாக பேச்சை முடித்துக்கொண்டாள்.

“ஓஹ்! எப்ப ரிட்டர்ன்?”

“வேலை முடியுறதைப் பொறுத்து திரும்புவேன்”

சில நிமிடங்கள் அமைதி காத்தவன் “தேங்க்ஸ்” என்றதும் எதற்கு என்பதைப் போல பார்த்தாள் இதன்யா.

“நிஷாந்த் மேல நம்பிக்கைக்கு வச்சு லாயரை ஸ்டேசனுக்குள்ள அலோ பண்ணுனதுக்கு” என்றான் அவன்.

“ரூல் என்னவோ அதை தான் நான் செஞ்சேன்… இதுக்கு ஏன் சார் தேங்க்ஸ்?”

“எத்தனை ஆபிசர்ஸ் ரூல்சை மதிக்குறாங்க? நிஷாந்த் தரப்புல நியாயம் இருக்குனு புரிஞ்சுக்கிட்டு அவன் மேல இரக்கப்பட்டிருக்கிங்கனு தெரியுது… அதுக்குத் தான் தேங்க்ஸ்”

“ஓ.கே… ஐ அக்செப்ட் யுவர் தேங்க்ஸ்”

ஏனோ பேச்சை நீட்டிக்கும் எண்ணமில்லாமல் பட்டு கத்தறித்தாற்போல முடித்துக்கொண்டாள் இதன்யா.

விமானம் சென்னைக்கு வந்து சேரும்வரை ஏகலைவனும் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. விமானநிலைய வழிமுறைகளை முடித்துக்கொண்டு அவனும் வெளியேறிவிட இதன்யா கேப் புக் செய்துவிட்டுக் காத்திருக்க ஆரம்பித்தாள்.