IIN 15

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

தொண்ணூறுகளில் ஆட்டிசம் ஆராய்ச்சி சமூகத்தினர் தங்களை சமுதாயம் இழிவாக நடத்தக்கூடாதென்பதற்காக எடுத்த தெளிவான முயற்சிகள் என்னைக் கவர்ந்தன. தங்களைப் பற்றிய உண்மைகள், தங்களது ஆட்டிசம் குறைப்பாட்டைப் பற்றிய தெளிவான செய்திகளை அவர்கள் பகிர்ந்துகொள்ள தவறவில்லை. இதைப் போன்ற தைரியமான முன்னெடுப்புகளை செய்யாத வரை உளப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டமே என்கிறார் மார்ஷ். அதாவது உளப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் தோழமைகளும் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் உதவிகளையும் சரியான நேரத்தில் பெறமுடியாது. இது அனைவரையுமே பாதிக்கும் என்கிறார் அவர்.

         -An article from BBC

விசாரணை அறையில் இதன்யாவின் முன்னே தலை குனிந்து அமர்ந்திருந்தான் நிஷாந்த். இவ்வளவு நேரம் இருந்த கையறுநிலையில் சிக்கிய பாவப்பட்ட இளைஞனின் தோற்றம், கதறல் எல்லாம் அடங்கி கப்சிப்பென உட்கார்ந்திருந்தவனுக்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் தான் அவனும் இனியாவும் காட்டுக்குள் போன வீடியோவை ஒளிபரப்பிக் காட்டியிருந்தாள் அவள்.

அதற்கு முன்னர் வரை ஒன்றுமறியாதவன் போல “எனக்கும் இனியாக்கும் இடையில நல்ல நட்பு இருந்துச்சு மேடம்… நான் செவ்வாய்கிழமை சென்னைக்குக் கிளம்பிட்டேன்” என்று ரீல் ஓட்டியவன் இப்போது தலையைக் கூட நிமிர்த்தவில்லை.

அவனது இந்த அப்பாவித்தோற்றத்தைப் பார்க்க பார்க்க இதன்யாவோடு அமர்ந்திருந்த மார்த்தாண்டனுக்கு எரிச்சல் மிகுந்தது.

“இந்த வீடியோல இருந்தவன் நீ தான? பதில் சொல்லுறியா? இல்ல போலீஸ் ட்ரீட்மெண்டை ஆரம்பிக்கணுமா?” என அதட்டினார் அவர்.

அவரது அதட்டலில் உடல் தூக்கிவாரிப்போட நிமிர்ந்தவனின் முகமெங்கும் பயம்!

எச்சிலை விழுங்கி தனது பயத்தை அப்பட்டமாகக் காட்டிக்கொண்டான்.

“டைம் வேஸ்ட் பண்ணாம உண்மைய சொன்னா நல்லது நிஷாந்த்”

வெகு சிரமத்தோடு பொறுமை காத்தபடி கூறினாள் இதன்யா.

“என்ன நடந்துச்சுனு சொல்லப்போறியா? இல்லையா?” என மார்த்தாண்டன் லத்தியை ஓங்கியதும்

“வேண்டாம் சார் வேண்டாம் சார்… நான் நடந்ததை சொல்லிடுறேன்” என்று நடுங்கியவன் அன்றொரு நாள் ஏகலைவனிடம் சொன்ன அதே கதையைச் சொன்னான்.

அவன் ராமபாணம் கொடி என்றதும் ஏகலைவனின் வீட்டுத்தோட்டத்தின் முகப்பில் சிறிய தொட்டியில் அச்செடியைப் பார்த்த நினைவு வந்தது இதன்யாவுக்கு. மாமனும் மருமகனும் எதையோ மறைக்கிறார்கள் என்று மனதுக்குள் கருவிக்கொண்டாள்.

அடுத்த நொடி நிஷாந்த் கொடுத்த வாக்குமூலத்தில் இருந்த பொய்கள் அவளை நிதானமிழக்கச் செய்தன. உடனே சப்பென அவன் கன்னத்தில் அறை விழுந்தது.

“மேடம்…” கன்னம் வலிக்க பொறி கலங்கிப் போனான் நிஷாந்த்.

“என்னடா மேடம்? இனியா கிட்ட நீ பேசுன ஒவ்வொரு சாட் காப்பியும் என் கிட்ட இருக்கு… நீ தான் அவளைக் காட்டுக்கு வர்றீயானு கேட்டிருக்க… இப்ப அவ தான் செடி பறிக்க கூப்பிட்டானு பொய்யா சொல்லுற? ராஸ்கல்”

நிஷாந்த் அழ ஆரம்பித்தான். அவன் மூளையில் ஏதேதோ சிந்தனைகள்! அழுதவண்ணம் என்ன நடந்ததென சொல்ல ஆரம்பித்தான்.

“நான் தான் இனியாவ காட்டுக்கு வரச் சொன்னேன் மேடம்… அவ கூட தனியா பேசணும்னு அங்க வரச் சொன்னேன்… நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறது அவங்கப்பாக்குத் தெரிஞ்சு மொபைலை பிடுங்கி வச்சிட்டார்… ரொம்ப கஷ்டப்பட்டு இனியா அவருக்குத் தெரியாம மொபைலை எடுத்து வச்சுக்கிட்டா… நாங்க ஊர்ல எங்கயாச்சும் மீட் பண்ணுனா அவர் கண்டுபிடிச்சிடுவார்னு காட்டுக்குள்ள வரச் சொன்னேன்”

“குறிப்பா அன்னைக்கு ஏன் வரச் சொன்ன?”

“நான்…”

பேச்சு தடுமாறியது ரோஷணுக்கு. அந்தத் தடுமாற்றமே அவன் இப்போதும் எதையோ மறைக்கிறான் என்பதை அங்கிருந்த இருவருக்கும் புரிய வைத்தது.

அந்நேரத்தில் யாரோ விசாரணை அறை கதவைத் தட்டினார்கள்.

மார்த்தாண்டன் போய் திறந்தார்.

கான்ஸ்டபிள் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

“என்னய்யா விசயம்?”

“சார் ப்ளட் சாம்பிள் எடுக்க ஆள் வந்திருக்காங்க”

“ஓ! அவங்களை மட்டும் வரச் சொல்லு”

“அப்புறம்…”

“என்னய்யா? எதுவா இருந்தாலும் சொல்லு…. ரோஷண் விவகாரத்துல கவனக்குறைவா இருந்து பெரிய இழப்பு நடந்து போச்சு… அது ரிபீட் ஆகக்கூடாது”

“நிஷாந்தோட அம்மாவும் ஃபாதர் பவுலும் மேடமை பாக்கணும்னு வெயிட் பண்ணுறாங்க”

“மேடம் என்கொயரில பிசினு சொல்லி வெயிட் பண்ண வை… காத்திருக்கட்டும், ஒன்னும் தப்பில்ல… ப்ளட் சாம்பிள் எடுக்க வந்தவங்களை மட்டும் இங்க அனுப்பு”

கான்ஸ்டபிள் நிஷாந்தின் இரத்த மாதிரி எடுக்க வந்தவரை மட்டும் விசாரணை அறைக்கு அனுப்பி வைத்தார்.

“ஜி.ஹெச் லேப்ல இருந்து வர்றேன் சார்” என்றார் அம்மனிதர்.

“யுவர் ஐ.டி ப்ளீஸ்” ரோஷண் விவகாரம் கற்றுக்கொடுத்த பாடம் மார்த்தாண்டனுக்கு மறக்குமா என்ன?

வந்திருந்தவர் அரசு மருத்துவமனை பரிசோதனைக்கூடத்தில் வேலை பார்க்கும் ஊழியர் என்று பணி அடையாள அட்டையைச் சரிபார்த்த பிறகே விசாரணை அறைக்குள் அனுமதித்தார்.

அந்நபரை நிஷாந்த் மிரட்சியாகப் பார்த்தான்.

அவர் இரத்தம் எடுக்க சிரிஞ்சுடன் வரவும் “மேடம்….” என பயந்தவனை

“அசால்டா ஒரு மர்டரை பண்ணிட்ட… ப்ளட் சாம்பிள் குடுக்க மட்டும் பயமா இருக்கா?” என கடிந்தார் மார்த்தாண்டன்.

இரத்த மாதிரி எடுக்கப்பட்டதும் அந்த ஊழியரிடம் எப்போது சோதனை முடிவு வருமென விசாரித்தாள் இதன்யா.

“நாளைக்கு ஈவ்னிங் வரும் மேம்”

“ஓ.கே… நீங்க போகலாம்”

அவர் வெளியேறியதும் “இன்னைக்கு என்கொயரி போதும் மார்த்தாண்டன்… இவன் சொன்னது எல்லாம் ரெக்கார்ட் ஆகிடுச்சானு பாத்துடுங்க” என்றபடி எழுந்தாள் இதன்யா.

இன்னும் அவன் முழு உண்மையைச் சொல்லவில்லையே என்பது போல பார்த்த மார்த்தாண்டனிடம் வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என கண்ணால் சைகை காட்டிவிட்டுப் போனாள் அவள்.

வெளியே வந்ததும் கான்ஸ்டபிள் ஒருவர் இதன்யாவிடம் அவளைப் பார்க்க பாதிரியார் பவுலும், சாவித்திரியும் காத்திருப்பதாகக் கூறினார்.

அவர்களை தங்களின் அலுவலக அறைக்கு அனுப்புமாறு சொல்லிவிட்டு அங்கே போய்விட்டாள் இதன்யா.

இருவரும் உள்ளே வந்ததும் அமரச் சொன்னாள்.

சாவித்திரி கண்ணீருடன் “என் புள்ள எந்தத் தப்பும் பண்ணிருக்கமாட்டான் மேடம்” என்க

“அப்ப எதுக்கு பயந்து அழுறிங்க? அவனை விசாரணைக்குத் தான் அழைச்சிட்டு வந்திருக்கோம்… உண்மைய மறைக்காம சொல்லிட்டான்னா அவனோட வாக்குமூலத்தை வாங்கிட்டு விட்டுடுவோம்மா… அழாதிங்க” என்றாள் இதன்யா இலகுவாக.

அவளது பார்வை சாவித்திரி கொண்டு வந்த எவர்சில்வர் பாத்திரத்தில் பாய்ந்தது.

“என்ன இது?”

“நிஷாந்துக்குச் சாப்பாடு”

“கான்ஸ்டபிள்”

அந்த அறையே அதிரும்படி கத்தினாள் இதன்யா. அடுத்த நொடி கான்ஸ்டபிள் கனகசுப்புரத்தினம் ஓடோடி வந்தார்.

“சஸ்பெக்டை பாக்க வர்ற யாரும் எதுவும் கொண்டு வரக்கூடாதுனு சொன்னேனா இல்லையா? செக் பண்ணமாட்டிங்களா நீங்க?” என அவள் அதட்டவும்

“சாப்பாடு தான்னு விட்டுட்டோம் மேடம்” என்றார் அவர்.

“இப்பிடி தான் ஒருத்தன் மாத்திரை கவர்ல ஹாக்‌ஷா ப்ளேடை ஒளிச்சு கொண்டு வந்தான்… நம்ம தவறுகள்ல இருந்து பாடம் கத்துக்கணும்… இந்தச் சாப்பாட்டை கொண்டு போய் வெளிய கொட்டுங்க”

பெண் அதிகாரி இரக்கம் காட்டுவார் என நம்பிய சாவித்திரிக்கு இப்போது நிராசை!

“என் மகன் பசி தாங்க மாட்டான் மேடம்” தாயுள்ளம் மகனுக்காகப் பேசியது.

“கான்ஸ்டபிள் கிட்ட பணம் குடுத்துட்டுப் போங்க… அவர் வாங்கிக் குடுத்துடுவார்… என் அனுமதி இல்லாம உங்க வீட்டுச்சாப்பாடு, வேற எந்தப் பொருளும் உள்ள வரக்கூடாது… இப்ப நீங்க போகலாம்”

“என் மகனை நான் பாக்கலாமா மேடம்? ஒரே ஒரு தடவை… கான்ஸ்டபிள் முன்னாடி பேசிட்டுப் போயிடுறேன்”

சாவித்திரி கெஞ்சவும் கான்ஸ்டபிளை அழைத்து நிஷாந்துடன் பேச வைக்கும்படி அனுப்பிவைத்தாள் இதன்யா.

பாதிரியார் பவுலிடம் “சொல்லுங்க ஃபாதர்… இந்த தடவை உங்க இன்ஃப்ளூயன்சை என் கிட்ட காட்டலாம்னு வந்திருக்கிங்களா?” என்று வினவ

“இல்ல மேடம்… ராக்கி மேல என்ன தப்புனு அவனை அரெஸ்ட் பண்ணிருக்கிங்கனு கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்னு வந்திருக்கேன்” என்றார் அவர் நிதானமாக.

இதன்யா ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி போலி மெச்சுதல் காட்டினாள்.

“நாங்க அவனை அரெஸ்ட் பண்ணல… விசாரணை கைதியா அழைச்சிட்டு வந்திருக்கோம்… தட்ஸ் ஆல்”

“இனியாவோட மர்டர் என்கொயரி தானே? அதுல அவனுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லனு..”

“யார் சொன்னாங்க ஃபாதர்?”

பாதிரியார் வாயடைத்துப்போனார் இப்போது.

“இனியாவைக் கொலை பண்ணுன கில்லர் கிடைக்குற வரைக்கும் சஸ்பெக்ட் லிஸ்டுல இருக்குற எல்லாரையும் விசாரிக்குறதுக்கு எங்க டீமுக்கு பவர் இருக்கு… அந்தக் கில்லர்… ப்ச்… கில்லர்ஸ் கிடைக்குற வரைக்கும் இப்பிடி அடிக்கடி விசாரணைக்கு அவனை அழைச்சிட்டு வருவோம்… இப்ப அழைச்சிட்டு வந்ததுக்கான காரணம் ஊர்க்காரங்க பயன்படுத்தாத ரகசிய வழில ராக்கிக்கு என்ன வேலை? அதுவும் கையில சாத்தானிக் பைபிளை வச்சுக்கிட்டு? இதுவும் கேசுக்குத் தேவையான டீடெய்ல் தான்… பிகாஸ் இனியா மர்டர் பண்ணப்பட்ட விதம் கல்ட் குரூப்பால நரபலி குடுக்கப்பட்ட விக்டிம்களோட ஒத்துப்போகுது… சோ கில்லர்ல ஒருத்தன் கட்டாயம் கல்ட் குரூப் மெம்பரா தான் இருக்கணும்… இப்ப ஃபாதருக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்”

இதன்யாவின் நீண்ட விளக்கத்திற்கு பிறகு பாதிரியார் பவுலால் எதுவும் பேச முடியவில்லை.

“என்னாச்சு ஃபாதர்? ரோஷண் தான் கடவுளை மறுதலிச்சான்னு நினைச்சோமே இப்ப ராக்கியும் அந்த லிஸ்டுல சேர்ந்துட்டானேனு யோசிக்கிறிங்களா? உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி… ராக்கி ரோஷணோட சாத்தான் வழிபாட்டுக் குரூப்ல ரொம்ப நாளா மெம்பரா இருந்திருக்குறான்… இதை ரோஷண் அவன் வாயால லை டிடெக்டிங் டெஸ்டுல சொல்லிருக்கான்… அவன் மட்டுமில்ல, உங்க ஊருல ரொம்ப நல்லவங்கங்கிற போர்வையில உலாவுற நிறைய பேர் அந்தச் சாத்தான் வழிபாட்டு குரூப்ல இருக்காங்க… அவங்களை எப்ப விசாரிக்கணுமோ அப்ப விசாரிப்போம்… இப்ப நீங்க கிளம்பலாம்”

பாதிரியாரின் முகமே மாறிவிட்டது. கிறிஸ்தவன் இல்லை என்றாலும் ராக்கியாவது இறைபக்தியோடு இருப்பான் என நினைத்து எவ்வளவு ஆதரவு கொடுத்திருப்பார்? தன்னிடமே பொய் சொல்லியிருக்கிறானே என்று மனம் நொந்து காவல் நிலையத்திலிருந்து வெளியேறினார் அவர்.

அதே நேரம் விசாரணை அறையின் இன்னொரு பிரிவில் முரளிதரனிடம் ராக்கி சில உண்மைகளைச் சொல்லிக்கொண்டிருந்தான்.

“அண்ணனோட கல்ட் குரூப்ல இருந்து அவரை எப்பிடியாச்சும் காப்பாத்திடணும்னு நினைச்சேன்… ஆனா என்னால முடியல… ஒரு கட்டத்துல நானும் அதுல மெம்பர் ஆகிட்டேன்… அங்க இருந்து தான் போதைப்பழக்கம் எனக்கு வந்துச்சு…. ஃபாதர் என்னை போதையில இருந்து மீட்கணும்னு ரொம்ப முயற்சி பண்ணுனார்… அவர் கிட்ட மாறுன மாதிரி நடிச்சிட்டு நம்ம குரூப்ல இருந்துக்கனு அண்ணா சொன்னான்… நாங்க மன்த்லி ஒன்ஸ் சந்திக்கிற இடத்துக்குப் போயிட்டிருந்தப்ப தான் சார் என்னைப் பிடிச்சிட்டார்”

மகேந்திரன் முரளிதரனிடம் “இவன் சொன்னதை முழுசா நம்பிடாதிங்க சார்… இத்தனை வருசம் சொந்தப் பிள்ளைங்க மாதிரி வளர்த்த ஃபாதரையே நடிச்சு ஏமாத்திருக்கான் பாருங்க” என்றார் கடுப்புடன்.

உடனே பொறித்தட்டினாற்போல “ஏய் உங்க கல்ட் குரூப் எங்க கூடுவிங்க?” என அவர் கேட்க

“காட்டுக்குள்ள ரிசர்வ் ஃபாரஸ்ட் ஏரியாக்கு ரொம்ப முன்னாடி ஆதிகாலத்து குகை ஒன்னு இருக்கு… அதுக்குள்ள தான் நாங்க ஒன்னு கூடி சாத்தானை ஆராதிப்போம்” என்றான் அவன்.

“அந்தக் காட்டுக்குள்ள அனிமல்ஸ் தொந்தரவு இருக்கும்னு சொன்னாங்களே?” என முரளிதரன் சந்தேகமாகக் கேட்க

“அது… அது… சாத்தான் அருளால எங்க கல்ட் குரூப் ஆளுங்க வந்தாலே நரி, ஓநாய் எல்லாம் விலகிப்போயிடும்” என்று தடுமாற்றத்துடன் பதிலளித்தான் ராக்கி.

உடனே இத்தகவலை இதன்யாவிடம் சொல்லுமாறு மகேந்திரனை அனுப்பி வைத்தார் முரளிதரன்.

அதைக் கேட்டதும் இதன்யா “இனியா எங்க கொலை செய்யப்பட்டாங்கிற கேள்விக்கு இப்ப வரைக்கும் பதில் கிடைக்கலனு சொன்னிங்கல்ல… அந்தப் பதில் நாளைக்குக் கிடைக்கும்” என்றாள்.

மகேந்திரனோடு அந்த அறையிலிருந்த மார்த்தாண்டனும் புரியவில்லை என்பது போல பார்த்தார்கள்.

“இனியா ஃபேஸ்ல அனிமல் ஃபூட்மார்க் இருக்குனு பி.எம் ரிப்போர்ட்ல வந்தப்பவே அவ காட்டுக்குள்ள கொல்லப்பட்டிருக்கணும்னு எனக்குத் தோணுச்சு… அந்தக் குகைய சோதனை போட்டுட்டா இன்னும் நிறைய ஆதாரம் கிடைக்கும்னு தோணுது மார்த்தாண்டன்”

“அந்தக் காட்டுக்குள்ளவா? மோப்பநாயோட போன டீமையே அங்க ஒரு ஓநாய் புரட்டி எடுத்துடுச்சு மேடம்” என்றார் மார்த்தாண்டன்.

இதன்யா நெற்றியில் ஆட்காட்டிவிரலால் தட்டிக்கொண்டவள் புருவங்கள் சுருங்க “ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ் கிட்ட பேசி அவங்க வழிகாட்டுதலோட போகலாம் மார்த்தாண்டன்… சில சிக்கலான கேசுக்கு அடுத்த டிப்பார்ட்மெண்டோட துணையும் அவசியம்… நான் ரேஞ்சர் கிட்ட பேசுறேன்.. அவங்க டீமோட ராக்கிய அழைச்சிக்கிட்டு அங்க நாளைக்கே போறோம்” என்றாள்.

“அப்ப நிஷாந்தோட டி.என்.ஏ டெஸ்ட் விவகாரம்?”

“நாளைக்கு ஈவ்னிங் ரிப்போர்ட் வர்ற வரைக்கும் சும்மா இருக்கணுமா? அதுக்கு மத்தில இந்த வேலைய முடிச்சிடலாம்” என்றவள் மகேந்திரனும் மார்த்தாண்டனும் ஏதோ யோசனையோடு தலையாட்டவும் சிரித்தாள்.

“எப்பவுமே ஒரு குறிப்பிட்ட நபரையோ குறிப்பிட்ட கோணத்தையோ மட்டுமே பாத்துக்கிட்டிருந்தா நம்மளால குற்றவாளிய கண்டுபிடிக்க முடியாது… எல்லா ஆங்கிள்லயும் யோசிக்கணும்” என்றாள்.

தாங்கள் ஒரே கோணத்தில் மட்டுமே யோசித்து ரோஷணைத் தவிர வேறு யாரையும் கவனிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய தர்க்கப்பிழை என உணர்ந்ததார்கள் இருவரும்.

இதன்யாவோ மறுநாள் காட்டுக்குள் போவதற்கு முன்னர் மிச்செல்லைச் சந்திக்கவேண்டுமென தீர்மானித்துக்கொண்டாள். அதற்கான காரணம் அவள் மட்டுமே அறிந்த ஒன்று!