IIN 14

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

உளப்பிறழ்வுக்கான காரணங்கள் என்னவென இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும் வளர்ந்து வரும் ‘நியூரோ இமேஜிங்’ ஆராய்ச்சியானது மனித மூளையிலுள்ள நரம்பியல் அசாதாரணங்களையும் அதன் அறிகுறிகளையும் அடையாளம் கண்டுள்ளது. உதாரணமாக உளப்பிறழ்வுக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆண்களின் மூளைக்குப் பயம் என்ற உணர்வை உணரும் தன்மை குறைவு என்கிறது அந்த ஆராய்ச்சி. இதே அறிகுறி சில பெண்களுக்கும் இருக்கலாமென அந்த ஆராய்ச்சி கூறுகிறது. மூளையிலுள்ள உணர்வுகளைக் கையாளக்கூடிய பகுதியான அமிக்டலாவின் நரம்பியல் சுற்றுகளில் ஏற்படும் சில வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். ஆனால் இந்த ஆராய்ச்சி முடிவுகள் மட்டும் போதுமானவை அல்ல. இன்னும் ஆழமான ஆராய்ச்சிகள் நடைபெற்றால் மட்டுமே தெளிவான தரவுகள் கிடைக்கும்.

                                                    -An article from BBC

சைபர் க்ரைம் பிரிவிலிருந்து இனியாவின் மடிக்கணினி மற்றும் மொபைலைச் சோதித்த பிறகு கிடைத்த செய்திகள் அந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த ஆரம்பித்தன.

இனியா கடந்த சில மாதங்களாக யாரோ ‘ஈ.டி.எஸ்’ என்ற நபரிடம் முகப்புத்தக மெசஞ்சர் வழியாக சாட் செய்திருப்பது தெரிய வந்திருந்தது. அதில் அந்நபரை விரைவில் சந்திக்க விரும்புவதாகச் சொல்லியிருந்தாள். பின்னர் ஏனோ அவரை ப்ளாக் செய்திருந்தாள். அவர்களின் மொத்த சாட் பட்டியலும் வந்திருந்தது. அதை ஓரமாக வைத்த இதன்யா வாட்சப் பற்றிய தகவல்களை வாசிக்க ஆரம்பித்தாள்.

இனியாவின் மொபைலிற்கு கடைசியாக வந்த வாட்சப் தகவல் நிஷாந்தின் மொபைல் எண்ணிலிருந்து வந்திருக்கிறது. அதை அவன் அனுப்பிய வேகத்தில் அழித்திருக்கிறான்.

அப்படி அழிக்கப்பட்டச் செய்தியில் இருந்தது “நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் காட்டுக்குள்ள போகலாமா?” என்ற கேள்வியே!

மார்த்தாண்டனின் முன்னே தான் சைபர் க்ரைம் அளித்த தகவல்கள் அடங்கிய கோப்பினை வாசித்தாள் இதன்யா. அதை கேட்டதும் அவரது இரத்தம் கொதித்தது.

ஏற்கெனவே அவன் இனியாவோடு காட்டுக்குள் போன வீடியோ ஃபூட்டேஜைப் பார்த்து மனிதர் கொந்தளிப்பில் இருந்தார். இந்தச் செய்தி கிடைத்ததுமே அவனை கைது செய்ய பரபரத்தது அவரது கரம்.

“அவசரப்படாதிங்க மார்த்தாண்டன்… செகண்ட் பி.எம் ரிப்போர்ட்ல வந்த முடிவை மறந்துட்டிங்களா? இனியாவை ப்ரூட்டலா ரேப் பண்ணி கொன்னவங்க ரெண்டு பேர்… அதுல ஒருத்தன் நம்ம கணக்குப்படி நிஷாந்த்னு வச்சுப்போம்… இன்னொருத்தன் யாரா இருக்க முடியும்? நிஷாந்தை அவசரமா அரெஸ்ட் பண்ணுனா அவன் சுதாரிச்சிட மாட்டானா? நம்ம அவசரப்பட்டா ரோஷணுக்கு நடந்த அதே சம்பவம் நிஷாந்துக்கும் நடக்கும்… இப்ப நம்ம நிதானமா நிஷாந்தோட நடவடிக்கைகளை வாட்ச் பண்ணனும்… இன்னொரு விசயம், இந்த ஆபிஸ் ரூம்ல நம்ம பேசுற எந்த டீடெய்லும் நாலு சுவரைத் தாண்டி வெளிய போகக்கூடாது”

“நீங்க எங்களை நம்பலாம் மேடம்”

நிஷாந்தின் நடவடிக்கைகளைக் கவனிக்க மகேந்திரன் பொன்மலைக்குள் அனுப்பப்பட்டார். மார்த்தாண்டனுக்கோ நிஷாந்த் பெயரை நினைத்ததுமே ஏகலைவன் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

“இதுல ஏகலைவனோட பங்கு இருக்குமோனு சந்தேகமா இருக்கு மேடம்” என்றார் அவர்.

“அவரை இன்னும் விசாரிக்கல தானே? இன்னைக்கு நானே நேர்ல போய் விசாரிச்சிடுறேன்… நீங்க செய்ய வேண்டிய வேலை என்னனா…”

இதன்யா கொடுத்த இரகசிய வேலையைச் செய்து முடிப்பதாக வாக்களித்தார் மார்த்தாண்டன்.

“ரோஷணுக்கு ஒரு லை டிடெக்டிங் டெஸ்ட் எடுத்திங்கல்ல? அந்த வீடியோ ஃபூட்டேஜ் கிடைக்குமா மார்த்தாண்டன்? அதுல நம்ம கேசுக்குத் தேவையான டீடெய்ல்ஸ் எதுவும் இருக்கலாம்” என்று கேட்க

“இப்பவே கொண்டு வர்றேன் மேடம்” என்று கையோடு ஒரு பெண்ட்ரைவையும் கோப்பினையும் கொண்டு வந்து கொடுத்தார் மார்த்தாண்டன்.

“நீங்க போகலாம்”

மார்த்தாண்டன் இதன்யா கொடுத்த வேலையை முடிக்க கிளம்ப அவளும் முரளிதரனும் ஏகலைவனின் தேயிலை தோட்டத்திற்கு விசாரணைக்காக கிளம்பினார்கள்.

அங்கே போனாலோ அன்று ஏகலைவன் அலுவலகம் வரவில்லை என்றார்கள். வீட்டில் இருப்பவனிடம் விசாரணை செய்ய சிறப்பு விசாரணை குழு வருவதாகத் தகவல் சொல்லும்படி அவனது உதவியாளனிடம் சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து நடையைக் கட்டினார்கள்.

சில நிமிடங்களில் முரளிதரனும் இதன்யாவும் ஏகலைவனின் வீட்டில் இருந்தார்கள்.

அவன் இயல்பாகவே வரவேற்றான். காபி தேநீர் வேண்டுமா என உபசரிக்கப்போனவனைத் தடுத்துவிட்டு வந்த வேலையைப் பார்ப்போமென கூறினாள் இதன்யா.

“ஓ.கே” என்றபடி அமர்ந்தான்.

“சுத்தி வளைக்காம டேரக்டா விசாரணைக்குப் போயிடலாம் மிஸ்டர் ஏகலைவன்… முதல் கேள்வி, ரோஷண் பத்தி தெரிஞ்சும் நீங்க ஏன் அவனை வேலைய விட்டு அனுப்பல?” – முரளிதரன்.

“எனக்குத் திறமையான சர்வெண்ட்சை அல்ப காரணத்துக்காகத் துரத்தப் பிடிக்காது சார்” என்றான் அவன்.

“அவனோட சாத்தான் வழிபாடு, சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் இதுல்லாம் உங்களுக்கு அல்பமா தோணுதா மிஸ்டர் ஏகலைவன்?” இம்முறை கேள்வி இதன்யாவிடம் இருந்து வந்தது.

“அவனால என் ஆபிஸ்ல எந்தக் குழப்பமும் வந்தது கிடையாது… அவன் சாமிய கும்பிட்டாலோ சாத்தானைக் கும்பிட்டாலோ எனக்கென்ன? எனக்கு உண்மையா வேலை பாத்தான், நான் அவனை வெளிய அனுப்பாம வச்சுக்கிட்டேன்… தட்ஸ் ஆல்”

“அவனை உங்க கிட்ட சிபாரிசு செஞ்சது உங்க மருமகன் நிஷாந்த்… நிஷாந்தை பத்தி உங்க ஒபீனியன்?”

“ரொம்ப நல்ல பையன்… உதவுற மனப்பான்மை உள்ளவன்… ஊர்ல யார் கிட்ட விசாரிச்சாலும் அவனை பத்தி நல்லவிதமா தான் சொல்லுவாங்க”

“ஏன்? ஏகலைவனோட மருமகன்ங்கிறதாலயா?”

இதன்யா ஆராய்ச்சிப்பார்வையோடு கேட்கவும் புன்னகை ஏகலவைனிடம்.

“வெல்! உங்க எஸ்டேட் கூலியாள் செங்கோடன்னு ஒருத்தன் தான் ரோஷணுக்கு ஹை டோஸ் டேப்ளட்டையும் ஹாக்‌ஷா ப்ளேடையும் கொண்டு வந்து குடுத்திருக்கான்… இதுக்கு என்ன பதில் வச்சிருக்கிங்க?”

“அப்பிடி யாரும் என் எஸ்டேட்ல வேலை பாக்கல… உங்களுக்குச் சந்தேகமா இருந்துச்சுனா என் மேனேஜர் கிட்ட பே-ரோல் காப்பி கொண்டு வரச் சொல்லுறேன்… செக் பண்ணி பாருங்க… எட்டு சூப்பர்வைசர்ஸ் இருக்காங்க… அவங்க கிட்டவும் நீங்க தாராளமா விசாரிக்கலாம்”

முரளிதரனும் இதன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“இனியாவோட பாடிய அவங்க பேரண்ட்ஸ் கிட்ட குடுக்குறதுக்காக மினிஸ்டர் மூலமா ஏன் ப்ரஷர் குடுத்திங்க? உங்களுக்கு இதுல என்ன லாபம்?”

ஏகலைவனின் சிரிப்பு நின்றது. கண்களில் தீவிர பாவனை.

“அந்தப் பொண்ணு ஒரு குட்டி தேவதை… அவ உடம்பை உங்க டிப்பார்ட்மெண்ட் கசாப்புக்கடை ஆடு மாதிரி கூறு போட்டதுக்கு அப்புறமும் எந்த உருப்படியான உண்மையையும் கண்டுபிடிக்கல… உங்களுக்கு அது உயிரில்லாத உடம்பா இருக்கலாம்… ஆனா அவளைப் பெத்தவருக்கு செத்தாலும் அவ மக தான்… அவரோட கண்ணீரைப் பாக்க முடியாம நான் வாலண்டியரா போய் கேட்டேன்… கலிங்கராஜனுக்கும் என் உதவி தேவைப்பட்டுச்சு… அதான் பண்ணுனேன்”

“நீங்க நல்லா சமாளிக்கிறிங்க… ஆனா நீங்க நிறைய உண்மைகளை வெளிய வரவிடாம தடுக்கப் பாத்ததால உங்களையும் நாங்க சஸ்பெக்ட் லிஸ்டுல வச்சிருக்கோம்… எங்க விசாரணைக்கு நீங்க ஒத்துழைப்பிங்கனு நம்புறோம்” என்றபடி எழுந்தாள் இதன்யா.

அப்போது வெளியே ஏதோ கூச்சல் கேட்டது. இதன்யாவும் முரளிதரனும் வெளியே போய் பார்க்க அங்கே மார்த்தாண்டனும் மகேந்திரனும் நிஷாந்தையும் ராக்கியையும் மடக்கிப் பிடித்து வைத்திருந்தார்கள்.

இதன்யா – முரளிதரனைத் தொடர்ந்து வந்த ஏகலைவன் இக்காட்சியைக் கண்டதும் “ஏன் இவங்களைப் பிடிச்சு வச்சிருக்கிங்க?” என கோபமாகக் கேட்க

“உங்களுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்ல சார்” என்ற மகேந்திரன் இதன்யாவுக்குப் பதில் அளித்தார்.

“நிஷாந்த் இன்னைக்கு மும்பைக்குக் கிளம்பப்போறதா சொன்னான் மேடம்… நம்ம விசாரணைய பத்தி யாரோ இவனுக்குத் தகவல் குடுத்ததால இவனும் இவன் அம்மாவும் ஊரை விட்டு ஓடப் ப்ளான் போட்டிருக்கணும்”

அவனைக் காவல் வாகனத்தில் ஏற்றும்படி பணித்தாள் இதன்யா.

“உங்க இஷ்டத்துக்கு அவனை அழைச்சிட்டுப் போகமுடியாது மேடம்… என் லாயர் வந்ததும்…” என ஆரம்பித்த ஏகலைவனைக் கோபத்தோடு உறுத்து விழித்தாள் அவள்.

“இவன் இனியாவோட காட்டுக்குள்ள போன வீடியோ ஃபூட்டேஜ் என் கிட்ட இருக்கு… இந்த ஆதாரம் போதுமா மிஸ்டர் ஏகலைவன்?”

அடிக்குரலில் அவள் சொன்னதும் ஏகலைவனுக்குப் பதற்றம். செவ்வாய்கிழமை வீடியோ பதிவை அழித்தவன் அவன் தானே! பின்னர் எங்கிருந்து தகவல் கிடைத்திருக்குமென அவன் யோசிக்கும்போதே மகேந்திரன் நிஷாந்தைக் காவல் வாகனத்துக்கு இழுத்துச் சென்றார்.

மார்த்தாண்டனிடம் சிக்கியிருந்த ராக்கி அவன் பங்குக்கு முரண்டு பிடித்தான்.

“நீங்க சொன்ன வேலைய முடிச்சிட்டேன் மேடம்… இப்ப இவனை அரெஸ்ட் பண்ணலனா தப்பாயிடும்” என்று மட்டும் சொன்னார் மார்த்தாண்டன்.

ராக்கியும் காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டான். இக்காட்சியை சாந்திவனத்தின் வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் மிச்செல். அவள் கண்களில் கண்ணீர்! கூடவே எதையோ சாதித்த உணர்வு! சோகமே உருவாய் இருந்த இந்தச் சிறுபெண்ணிடம் திடீரென ஏற்பட்ட இம்மாற்றம் எப்படி சாத்தியமென இதன்யா யோசித்தபோதே சாவித்திரி அழுது அரற்றியபடி ஓடி வந்தார்.

வந்தவர் இதன்யாவின் கால்களில் விழப்போனார்.

“நில்லுங்கம்மா” என அதட்டி அவரை விலக்கி நிறுத்தினாள் அவள்.

“என் மகன் அப்பாவி மேடம்… அவனை போலீஸ் கேஸ்னு இழுத்துட்டுப் போய் அவன் வாழ்க்கைய கேள்விக்குறி ஆக்கிடாதிங்க… எனக்குனு இருக்குறவன் இவன் மட்டும் தான்”

கரங்கூப்பி அழுதார் சாவித்திரி.

“ஆண்பிள்ளைய பெத்த உங்களுக்குப் பொண்குழந்தைய பறிகொடுத்தவரோட வேதனை புரியாதும்மா… இனியாவோட ப்ரூட்டல் மர்டர் கேஸ்ல உங்க ஊருல இருக்குற ஒவ்வொருத்தரும் எங்க பார்வைக்கு சஸ்பெக்ட்ஸ் தான்… மடியில கனமில்லனா வழியில பயமில்லனு சொல்லுவாங்க… உங்க மகன் தப்பு பண்ணலனா ஏன் ஊரை விட்டு ஓடப் பாக்குறான்? அவனை எங்க கஷ்டடில வச்சு விசாரிக்க தேவையான ஆதாரம் இருக்கு… மனசாட்சினு ஒன்னு இருந்துச்சுனா தயவுபண்ணி ஒதுங்கி நில்லுங்க”

சாவித்திரியிடம் கறாராகப் பேசிய இதன்யா திகைப்பில் உறைந்து போன ஏகலவைனிடம் “இந்த தடவை நீங்க என்ன முயற்சி பண்ணுனாலும், ஃபாதர் அவரோட இன்ஃப்ளூயன்சை பயன்படுத்துனாலும் இந்த ரெண்டு பேரையும் எங்க விசாரணை வளையத்தை விட்டு வெளிய கொண்டு வரமுடியாது மிஸ்டர் ஏகலைவன்… ஐ ஷ்வேர்” என்று சொல்லிவிட்டு முரளிதரனோடு காவல் நிலையத்துக்குக் கிளம்பினாள்.

அங்கே போனதும் விசாரணையறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள் இருவரும். முரளிதரன் அவர்களோடு இருக்க மற்ற மூவரும் சிறப்பு விசாரணைக்குழுவிற்கான அறைக்குள் போனார்கள்.

“என்ன நடந்துச்சு மார்த்தாண்டன்? ஏன் ராக்கிய பிடிச்சு வச்சிருந்திங்க?”

“நீங்க சந்தேகப்பட்ட மாதிரி காட்டுக்குப் போக பொன்மலையில வேற எதுவும் வழியிருக்கானு பாக்கப் போனேன் மேடம்… பொன்மலை சர்ச்ல இருந்து ஒரு ஒத்தையடி பாதை சக்கரவர்த்தி டீ எஸ்டேட்டுக்குப் போகுது… அங்க இருந்து பிரிஞ்சு போற கிளை பாதைல போனா காட்டுக்குள்ள போயிடலாம்… இந்தப் பாதைல முள்ளம்பன்றி நடமாட்டம் இருக்கும்னு ஊர்க்காரங்க போறதில்லனு கேள்விப்பட்டேன்… அதோட இந்தப் பாதையில யார் போனாலும் ஊருக்குள்ள இருந்து பார்க்க முடியாத அளவுக்கு மரம் அடர்ந்து வளர்ந்திருக்கு… அடிக்கடி அந்தப் பாதைய யூஸ் பண்ணுறவங்க சாத்தான் வழிபாடு பண்ணுற கல்ட் குரூப் மட்டும் தான்னு ஒருத்தர் சொன்னார்… அந்தப் பாதையில போனப்ப ராக்கியை அங்க பாக்க முடிஞ்சுது… கையில இதை வச்சிருந்தான்”

தனது முதுகுப்புற டீசர்ட்டில் ஒளித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்தார்.

அது ஆண்டன் லாவே என்பவரால் எழுதப்பட்ட ‘சாத்தானிக் பைபிள்’ என்ற புத்தகம்.

“என்னைப் பாத்ததும் தப்பிச்சு ஓடப்பாத்தான்… நான் மடக்கிப் பிடிச்சிட்டேன்… இவனுக்கும் இந்தக் கேஸுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு என் மனசு இப்பவும் சொல்லுது மேடம்… இனியா இறந்த விதம், ரோஷண் தற்கொலை எல்லாமே இந்தக் கொலையில சம்பந்தப்பட்டவன் சைக்காலஜிக்கலி அன்ஸ்டேபிளா இருக்கலாம்னு சந்தேகப்படவைக்குது” என்றார் மார்த்தாண்டன்.

இதன்யா அந்தப் புத்தகத்தையும் விசாரணை அறையையும் மாறி மாறி பார்த்தவள் “இனியாவ கொன்னது ஏன் இவங்க ரெண்டு பேரா இருக்கக்கூடாது?” என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள்.

 ரோஷண் விவகாரத்தில் நேர்ந்த தவறு மீண்டும் நடக்கக்கூடாதென்ற உறுதியோடு “விசாரணைய ஆரம்பிக்கலாமா மார்த்தாண்டன்?” என்றாள் அவள்.