IIN 100

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் சாத்தான் வழிபாடு நடத்தும் குழுக்கள் இருப்பதாக காவல்துறையின் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் என்கிறது இவ்வறிக்கை. இதில் கலந்துகொள்வதற்கான நோக்கங்கள் – அதீத சக்தி வேண்டும், பணக்காரனாகும் ஆசை, எதிரிகளை அழிக்க வேண்டும் – இவையே ஆகும். இதை எல்லாம் சாத்தான் செய்வார் என்று அவர்கள் அழுத்தமாக நம்புகின்றனர். இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களுக்கு பெரிய போதைப்பொருள் மாஃபியாக்களின் ஆதரவு இருக்கிறது. இத்தகைய வழிபாட்டு கூட்டங்களில் தங்களது போதைப்பொருட்களை விற்று அவர்கள் கல்லா கட்டுகிறார்கள். சில சாத்தான் வழிபாட்டு குழுக்களில் கொடூரமான உடலை வதைத்து வழிபடும் சடங்குகள், மோசமான பாலுறவு நடத்தைகள் போன்றவை எல்லாம் நடக்கும். இத்தகைய சாத்தான் குழுக்களைத் தடுக்க தனி சட்டங்கள் கேரளாவில் இல்லை. ஆனால் மூடநம்பிக்கையின் அடிப்படையில் நரபலி கொடுப்பதை இந்தியன் பீனல் கோடின் பிரிவு 302 எதிர்க்கிறது. அதை செய்கிறவர்கள் இந்தப் பிரிவின்படி கொலைக்குற்றவாளிகள். பிரிவு 153A மதங்களுக்கிடையே விரோதப்போக்கை உருவாக்கும் நபர்களைத் தண்டிக்கும் பிரிவாகும். இது சாத்தானிஷத்தை பரப்பி மதக்கலவரத்துக்குத் தூண்டுபவர்களைத் தண்டிக்கும். பிரிவு 295A மதவுணர்வுகளைப் புண்படுத்த வேண்டுமென்றே சில காரியங்களைச் செய்யும் நபர்களைத் தண்டிக்கும் பிரிவு. சாத்தான் வழிபாடு என்ற பெயரில் பிற மதவுணர்வுகளைக் கேலிக்கூத்தாக்குபவர்கள் இப்பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். ‘கேரளா ஸ்டேட் ரிஃபார்ம்ஸ் கமிஷன்’ மூடப்பழக்கவழக்கங்களை ஒழிப்பதற்காகவும், இத்தகைய மூடநம்பிக்கைகளால் விளையும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு உண்டாக்கவும் 2019ல் ஒரு சட்ட வரைவைச் சமர்ப்பித்தார்கள்.

                                                           -From Internet

 இதன்யா தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு போலீஸ் குவாட்டர்சிலிருந்து வெளியேறினாள். முரளிதரனும் அவளோடு வர  இருவரும் குவாட்டர்ஸ் வளாகத்தை விட்டு வெளியேறினர்

வெளியே ரசூல் பாய் காரோடு காத்திருந்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்தனர் மார்த்தாண்டனும் மகேந்திரனும்.

இதன்யாவைப் பார்த்ததும் அவளது உடைமைகளை வாங்கி பின்னே ஏற்றினார்கள். அஸ்மத்தும் முபீனாவும் அவளிடம் வாய்ப்பு கிடைக்கும்போது பொன்மலைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்கள்.

“கண்டிப்பா வருவேன்… அதே மாதிரி நீங்களும் சென்னைக்கு வரணும்… முபீக்கு அங்க நிறைய ப்ளேசஸ் சுத்திக்காட்டுறதுக்காக செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்”

“இவளுக்குக் காலேஜ் ஆரம்பிச்சுதுனா அங்க வர நேரமிருக்காதே?” என்ற அஸ்மத்திடம்

“அப்ப சென்னைல உள்ள காலேஜ்ல சேர்த்துவிடுங்க… நான் அம்மா அப்பா எல்லாரும் முபீய பாத்துப்போம்”

“இன்ஷா அல்லா! சென்னைல எனக்கு சீட் கிடைக்கட்டும்” என்ற முபீனாவின் பேச்சில் சென்னைக்குச் செல்லவேண்டுமென்ற ஆவல் கொட்டிக் கிடந்தது.

“ரிசல்ட் வந்து மார்க் ஷீட் வந்ததும் நான் ரசூல் பாய் கிட்ட பேசுறேன்” என்று அவளுக்கு வாக்களித்தாள் இதன்யா.

மார்த்தாண்டனிடமும் மகேந்திரனிடமும் கை  குலுக்கினாள் அவள்.

“உங்க ரெண்டு பேர் கூட வொர்க் பண்ணுனதுல ரொம்ப சந்தோசம்… சீக்கிரம் புரமோசன் கிடைக்கும்… சப்போஸ் சென்னை பக்கம் புரமோசன் கிடைச்சுதுனா என்ன ஹெல்பா இருந்தாலும் எனக்குக் கால் பண்ணுங்க”

இருவரிடமும் பேசி விடைபெறப்போன சமயத்தில் சாவித்திரியும் நிஷாந்தும் வேகமாக நடந்து அங்கே வந்தார்கள்.

சாவித்திரி இதன்யாவின் கைகளைப் பற்றிக்கொண்டார்.

“நிஷாந்த் எல்லாத்தையும் சொன்னான் மேடம்… உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்லுறதுனு தெரியல… இவன் இப்ப என் தம்பியோட கம்பெனில சேரப்போறான்… அவன் இடத்துல இருந்து இனிமே இவன் தான் சக்கரவர்த்தி குரூப்பை வழிநடத்தப் போறான்… உங்க ஆசிர்வாதம் அவனுக்கு எப்பவும் வேணும்… மேடம் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க நிஷாந்த்”

நிஷாந்த் இதன்யாவின் காலில் விழப்போனான். அவனைத் தடுத்தவள் கையைப் பற்றிக் குலுக்கி வாழ்த்து தெரிவித்தாள்.

“ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் நியூ அட்டெம்ப்ட்… வொர்க் ஹாட் அண்ட் பி ஹானஸ்ட்… டேக் கேர் ஆப்  யுவர் மாம்… ஹி ட்ரஸ்ட்ஸ் யூ அ லாட்.. அந்த நம்பிக்கைய எப்பவும் காப்பாத்தணும்… அண்ட் இப்பவும் சொல்லுறேன், ஒரு இனியாவோட உன் வாழ்க்கை முடிஞ்சு போயிடாது… உன் வருங்காலம் ரொம்ப அழகான சர்ப்ரைசஸை உனக்குக் குடுக்கும்”

நிஷாந்தின் முகத்தில் நம்பிக்கை துளிர் விட்டது.

“நீங்க சொன்ன வார்த்தைகளை எப்பவும் ஞாபகம் வச்சுப்பேன் மேடம்”

“குட்… அண்ட் உன் ஃப்ரெண்ட் ராக்கி., அவனைத் தனியா விட்டுடாத… இன்னொரு ரோஷண் வந்தா இந்த ஊரு தாங்காது”

நிஷாந்த் அவள் சொன்ன விதத்தில் சத்தமாகச் சிரித்தான்.

“கண்டிப்பா மேடம்”

“ஓ.கே நான் கிளம்புறேன்” என்று விடைபெற்றவள் காரிலேறும் முன்னர் மகேந்திரனிடம் “நீங்க அன்னைக்குக் கேட்ட கேள்விக்கு இப்ப வரைக்கும் எனக்குப் பதில் தெரியல மகேந்திரன்… ஃபியூச்சர்ல அது யாருனு தெரிஞ்சா எனக்குக் கொஞ்சம் இன்ஃபார்ம் பண்ணுங்க… ஏன்னா அந்தக் கேள்விக்குப் பதில் தெரியுற வரைக்கும் என்னால மிஸ்டர் ஏகலைவனை மறக்கவே முடியாது” என்று சொல்ல

“கண்டிப்பா மேடம்… என் வேலையோட வேலையா அந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடிக்குற வேலையையும் பாத்து சீக்கிரம் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுவேன்” என்றார் மகேந்திரன் நம்பிக்கையோடு.

இதன்யா புன்சிரிப்போடு காரிலேறி அமர்ந்தாள். முரளிதரனும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு காரினுள் அமர ரசூல் பாய் காரைக் கிளப்பினார்.

வந்த கடமையைச் சரிவர ஆற்றிவிட்ட திருப்தியோடு பொன்மலையை விட்டுக் கிளம்பிய இதன்யாவின் மனதின் ஓரமாக ரசூல் பாய் வீட்டுச் சாப்பாட்டில் விஷம் வைத்தது யாரென்ற கேள்வி நிரந்தரமாக உறைந்துவிட அதைக் கடந்தும் எழுந்தது ப்ராணேஷின் நினைவுகள்.

உடனே மொபைலை எடுத்தவள் அவனுக்கு அழைப்பு விடுத்தாள். இனி அவளது வாழ்க்கையின் சரிபாதியானவனையும் பற்றி அவள் யோசித்தாகவேண்டுமே!

ரசூல் பாயின் கார் கண்ணை விட்டு மறைந்ததும் அனைவரும் அவரவர் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.

சாவித்திரியும் நிஷாந்தும் கூட ஏகலைவனின் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். ஆம்! அவர்கள் இங்கே குடிபெயர்ந்துவிட்டார்கள். இதுவும் மனுவேந்தனின் ஏற்பாடு தான்.

“நாய் வேசம் போட்டா குரைக்கணும் சாவித்திரிம்மா.. சக்கரவர்த்தி குரூப்போட டைரக்டர் இந்த மாதிரி வீட்டுல இருந்தா நல்லாவா இருக்கும்? ஏகலைவன் சாரோட பங்களா சும்மா தானே இருக்குது… சார் உங்களை அங்க தங்கிக்க சொன்னார்… உங்க மகன் கிட்ட சொன்னா முரண்டு பிடிப்பான்… நீங்களே புரியவைங்க” என்று சொல்லிவிட்டார் அவர்.

பின்னர் சாவித்திரி மகனிடம் பேச்சாய் பேசி கரைத்து ஏகலைவனின் பங்களாவுக்கு மூட்டை முடிச்சோடு குடிபெயர்ந்தார்.

அவர்களது பொருட்களை அங்கே இடம் மாற்ற கிளாராவும் குமாரியும் உதவினார்கள். இனி அவர்கள் அண்டை வீட்டார்கள் அல்லவா! ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது இயல்பு தானே!

நிஷாந்த் அந்த வீட்டுக்குள் வந்ததும் செய்த முதல் காரியம் ஏகலைவனின் அறைக்குப் பூட்டு போட்டது தான்.

“அந்தாளோட ரூமை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாதும்மா” என்று சாவித்திரியிடமும் கண்டிப்பாக கூறியிருந்தான்.

சக்கரவர்த்தி குழுமத்தின் டைரக்டர் என்ற முறையில் அவன் அங்கே பணியாற்றினால் மாத ஊதியம் வழங்கப்படும். அது போல டைரக்டருக்குரிய எல்லா வசதிகளையும் அனுபவிக்கலாம் என மனுவேந்தன் சொல்லியிருந்தார்,.

“இந்த சொத்து எல்லாம் திடீர்னு கிடைச்ச மாதிரி வசதி வாய்ப்புகளும் திடீர்னு கிடைக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல..,. முதல்ல இதுக்கு என்னை நானே தகுதிப்படுத்திக்குறேன்… அதுக்கு அப்புறம் டைரக்டருக்கு உள்ள உரிமைய நான் அனுபவிச்சுக்குறேன்” என்று சொல்லிவிட்டான் நிஷாந்த்.

சக்கரவர்த்தி குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவன் என்ற முறையில் இனி அவன் உழைக்க வேண்டும். அலுவலைக் கவனிக்க வேண்டும். வணிகத்தை உயர்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்திட வெவ்வேறு இடங்களுக்குப் பயணிக்க வேண்டும்!

கிட்டத்தட்ட அவன் வாழ்க்கை தலைகீழாக மாறியிருந்தது. வீட்டுக்குள் வந்ததும் தனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான் நிஷாந்த்.

மறுநாள் அவன் மனுவேந்தனோடு மும்பைக்குப் பயணமாக வேண்டும். அங்கே நடக்க போகிற பங்குதாரர்களின் பொது கூட்டத்தில் தான் அவன் சக்கரவர்த்தி குழுமத்தின் இயக்குனராக நியமிக்கப்பட போகிறான்.

எவ்வளவு பெரிய விசயம்! இதை எல்லாம் பார்க்க நீ இல்லையே இனியா என்ற ஆதங்கத்துடன் எதிர் சுவரைப் பார்த்தான். அதில் ஆளுயரப் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தாள் இனியா.

அப்புகைப்படத்தினருகே வந்தவன் “நீ இருக்குறப்ப நான் சாதாரண குடும்பத்து பையன்… இப்ப என் நிலமை உயரப்போகுது இனியா… எங்க இருந்தாலும் நீ எனக்காக சந்தோசப்படுவனு தெரியும்… இதைவிட எனக்கு அதிகமான சந்தோசத்தை தந்தது எது தெரியுமா? உன்னைக் கொன்னவன் இனிமே வெளிய வர முடியாதபடி ஜெயிலுக்குள்ள கிடக்குறது… என் மாமா மேல எனக்கு டவுட் வந்தப்ப நான் சொல்லிருந்தா கூட யாரும் நம்பிருக்க மாட்டாங்க,… ஆனா இதன்யா மேடம் மாமாவோட இன்னொரு பக்கத்தை கண்டுபிடிப்பாங்கனு நம்புனேன்… ஆனா அவரு அவங்களையே தூக்கி சாப்பிட்டுட்டார்… இனிமே எதுவும் நடக்காதுனு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைஞ்சப்ப இதன்யா மேடம் மறுபடியும் வந்தாங்க… உன் கேசும் மறுபடி ஓப்பன் ஆச்சு… அப்பவும் இதன்யா மேடமால மாமாவோட நோக்கத்தை சரிவர புரிஞ்சிக்க முடியல… இந்த நேரத்துல தான் நான் ஒரு காரியம் பண்ணுனேன்” என்றவன் புகைப்படத்தில் தெரிந்தவளின் முன்னே இரு காது மடல்களையும் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்பவனைப் போல நின்றான்.

“உனக்கு இதெல்லாம் பிடிக்காதுனு தெரியும் இனியா… ஆனா இதன்யா மேடமுக்கும் மாமாக்கும் ஒரு உரசலை உண்டாக்குனதா தான் அவங்க கவனம் அவர் மேல விழும்னு நான் ஒரு காரியம் பண்ணுனேன்… ஊர்த்திருவிழால மாமாவோட கட்டளை அன்னைக்கு ரசூல் பாய் வீட்டுக்கு அனுப்புன சாப்பாட்டுல விஷம் கலந்தேன்”

அந்த இடத்தில் நிறுத்தியவனின் முகம் சோகமானது.

“இது தப்பு தான்… அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டு ரசூல் பாய் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனதா கேள்விப்பட்டதும் மனசுக்குக் கஷ்டமா தான் இருந்துச்சு… ஆனா அதை விட உனக்கு நியாயம் கிடைக்கணும், மாமா மேல எனக்கு வந்த சந்தேகம் சரியா தப்பானு தெரிஞ்சேயாகணும்.. அதனால அப்பிடி செஞ்சிட்டேன் இனியா… நான் எதிர்பாத்த மாதிரியே மாமாவை இதன்யா மேடம் சந்தேகப்பட்டாங்க… அந்த இடத்துல தான் இந்தக் கேஸ் ரீ-ஓப்பன் ஆகுறதுக்கான விதை விழுந்துச்சு… நான் மட்டும் அன்னைக்குச் சாப்பாட்டுல விஷத்தைக் கலக்கலனா மேடம் மாமாவை கண்டுக்காம விட்டிருப்பாங்க… உனக்கும் நியாயம் கிடைச்சிருக்காது… நான் செஞ்ச இந்த ஒரு தப்பை மட்டும் நீ மன்னிச்சிடு இனியா”

தன் மனதிலிருந்த இரகசியத்தை, இதன்யாவே விடைகாணாமல் விட்டுப் போன இரகசியத்தைக் காற்றாய் கரைந்த காதலியின் புகைப்படத்திடம் சொல்லிவிட்டு நிம்மதியாய் மெத்தையில் விழுந்து கண்களை மூடிக்கொண்டான் நிஷாந்த்.

யாரோ அவனது சிகையை கோதுவது போன்ற உணர்வு!

“இனியா” என்றான் அவன்.

யாருமில்லை அங்கே. ஆனால் அவனது காதில் மட்டும் “இனிமே இப்பிடி செய்யமாட்டிங்க தானே?” என்ற இனியாவின் குரல் விழுந்தது.

கண்களை மூடிக்கொண்டே “சத்தியமா தப்பு பண்ணமாட்டேன் இனியா” என்று கற்பனைக்காதலியிடம் பேசினான் நிஷாந்த்.

நமக்கு வேண்டுமானால் இனியா இறந்திருக்கலாம்! அவளது இறுதி நிமிடங்களில் குகையில் சைக்கோவோடு போராடி ஓய்ந்திருக்கலாம்! ஆனால் நிஷாந்துக்கு அவள் இன்னும் உயிரோடு இருக்கிறாள்! அவனது மூச்சுக்காற்றில் இரத்தவோட்டத்தில் கலந்து அவனோடு பிணைந்திருக்கிறாள்! அவன் செய்யும் நன்மை, தீமை, நியாய அநியாயங்களைக் கவனித்துக்கொண்டே இருக்கிறாள்! என்று அவன் தனது இறுதி நிமிடங்களை நெருங்குகிறானோ அன்று தான் இனியாவிற்கும் இறுதி நிமிடங்கள் வந்து சேரும்! அதுவரை இனியா நிஷாந்துக்குள் அவனுடன் உறைந்திருக்கட்டும்!

முடிவுற்றது!