AO 7

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அன்பு 7

ஞாயிறு காலை 8 மணிக்கே தோழிகளை பார்க்க செல்வதாக கூறிவிட்டு,  தவமலர் நேராக சென்றது புனர்வி வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவில் யோகமித்ரனை சந்திப்பதற்காக,

ஞாயிறன்று அவளை வீட்டிற்கு வருமாறு புனர்வி தான் அழைத்தாள். வெள்ளியன்று மாலை கல்லூரியிலிருந்து கிளம்பும் போது, “ஞாயிற்றுக்கிழமை மயூ அத்தானோட அவங்க ப்ரண்ட் நவிரனும் அத்தையை பார்க்க வீட்டுக்கு வராங்களாம் தவா, ஏதோ நம்மக்கிட்ட முக்கியமான விஷயம் பேசணுமாம், அதனால உன்னையும் அத்தான் வீட்டுக்கு வரச் சொன்னாங்க,” என்று புனர்வி சொல்லவும்,

“எதுக்குடீ.. நம்மக்கிட்ட நவிரனுக்கு பேச என்ன இருக்கு? நம்மள அவங்களுக்கு தெரியவே தெரியாதே, என்னன்னு கேட்டீயா?” என்று கேட்டாள்.

“கேட்டேன் தவா, அத்தான் ஞாயிற்றுக்கிழமை பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்று புனர்வியும் பதில் கூறினாள். 

இருவரும் பேசிக் கொண்டிருக்க, ராகமயாவோ அமைதியாக வந்தாள். “என்னடீ, சைலண்டா வர” என்று தவமலர் அவளிடம் கேட்க,

“நவிரன் மயூரோட ப்ரண்டா இருக்கலாம், ஆனா அன்னைக்கு புனர்வியை பத்தி தெரிஞ்சதும் அவங்க எப்படி நடந்துக்கிட்டாங்க, அவங்க வீட்டுக்கு வரணுமான்னு யோசிக்கிறேன். ஆனா அவங்களை வர வேண்டாம்னு நான் எப்படி சொல்ல முடியும்? அதான் அமைதியா இருக்கேன்.” என்றாள்.

“அதிதி தேவோ பவன்னு சொல்வாங்களே ராகா, நம்ம எதிரியா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்தா அவங்களை வரவேற்று உபசரிக்கணும், அப்படியிருக்க நவிரன் அந்த அளவுக்கு என்ன தப்பு செஞ்சாங்க? என்னைப்பத்தி தெரியாது தானே? முதல்முறை என்பதால அப்படி நடந்துக்கிட்டாங்க, இனியுமா அப்படி நடந்துப்பாங்க?” என்று புனர்வி கேட்டாள்.

“புனர்வி சொல்றதும் சரி தானே ராகா, என்னையும் புனர்வியையும் பார்த்தாலே வாந்தி வருதுன்னு சொன்ன ஆளுங்களையெல்லாம் டெய்லி காலேஜில் சந்திச்சிக்கிட்டு தான் இருக்கோம், ஏன் அன்னைக்கு என்னை கருப்புன்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டு போனவனை, மறுநாளே தைரியமா சந்திச்சு என்னன்னு கேட்கலையா? புனர்வியே அதை பெருசா எடுத்துக்காத போது, நீ அவளை பலவீனப்படுத்தறது போல பேசாத” என்று தவமலர் சொல்லவும்,

“அப்படியில்ல தவா, வீட்டில் தான் அவ முகத்தையெல்லாம் மூடாம சகஜமா இருப்பா, நவிரன் வந்தா இவ முகத்தை மூடிக்கிட்டு இருப்பா, அதுக்கு தான் சொன்னேன்.” என்று ராகமயா கூறினாள்.

“அத்தைக்காகவும் மயூ அத்தானுக்காகவும் ஒருநாளைக்கு தானே ராகா, நவிரன் இருக்கும்வரை முகத்தை மூடணும்னு கட்டாயம் கிடையாதே, என்னைப் பார்க்க பிடிக்கலன்னா நவிரன் வேணும்னா சீக்கிரம் கிளம்பி போகட்டும், அதனால நமக்கென்ன? இதுக்காக அத்தையும் அத்தானும் கோபப்பட போறதில்லையே” என்று புனர்வி சொல்லவும்,

“அப்படி சொல்லு புவி, அதானே யாருக்காகவும் நாம நம்மள மாத்திக்க வேண்டியதில்ல, நாம நாமளா இருப்போம், அதை விரும்புறவங்க நம்மக் கூட இருக்கட்டும், வேண்டாம்னு நினைக்கறவங்க விலகட்டும்,” என்ற தவமலர் புனர்விக்கு ஹைஃபை கொடுத்தாள்.

“உனக்கே பிரச்சனையில்லைன்னா நான் என்ன சொல்லப் போறேன் புவி, உன்னோட மயூ அத்தான் யாரை வேணும்னாலும் கூப்பிட்டுக் கொண்டு வரட்டும்,” என்று ராகமயா கூறினாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது கௌசல்யா அவர்களை தேடி அங்கு வந்தாள்.

“ஹாய் மேம்” என்று மூவரும் ஒன்று போல் கூற,

“என்ன இன்னும் இங்கேயே இருக்கீங்க? வீட்டுக்கு போகலையா?” என்று கௌசல்யா கேட்க,

“இதோ கிளம்ப வேண்டியது தான் மேம், அதுக்குள்ள உங்களை பார்த்ததும் நல்லதுக்கு தான் மேம், தனா சார் பேரண்ட்ஸை பார்க்க போனீங்களே, என்ன சொன்னாங்கன்னு சொல்லவே இல்லையே, உங்களை அவங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று புனர்வி திருப்பிக் கேட்டாள்.

“எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்னு கேட்கிறாங்க புவி” என்று அவள் சொல்லவும்,

“வாவ் சூப்பர் மேம், அப்போ சீக்கிரம் கல்யாண சாப்பாடு போட போறீங்கன்னு சொல்லுங்க,” என்று ராகா கூறினாள்.

அதற்கு கௌசல்யா முகம் மாறவும்,

“ஏன் மேம் என்னாச்சு?” என்று தவமலர் கேட்க,

“அம்மாவும் அப்பாவும் இன்னும் ஒத்துக்கல தவா, தனாவோட அம்மா, அப்பா வீட்டுக்கு வந்து பேசறதா சொல்றாங்க, ஆனா அதுக்கு கூட எந்த பதிலும் சொல்லாம அமைதியா இருக்காங்க, இவங்களை நம்பி அவங்களை எப்படி வரச் சொல்றது? அதான் என்ன செய்றதுன்னு புரியாம சுத்திக்கிட்டு இருக்கேன்.” என்று வருத்தத்தோடு கூறினாள்.

“கவலைப்படாதீங்க மேம், சீக்கிரமா உங்க அம்மா, அப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்க பாருங்க,” என்று புனர்வி சொல்லவும், மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர்.

“அந்த நம்பிக்கையில் தான் நானும் இருக்கேன், பார்ப்போம் என்ன நடக்குதுன்னு,” என்றவள்,

“சரி நான் வந்ததே வேற ஒரு முக்கியமான விஷயத்துக்காக, நேத்து என்னோட மித்ரன் அண்ணா வந்தாங்களே, அது உன்கிட்ட மன்னிப்பு கேட்க தான் தவா,” என்று விஷயத்தை சொல்ல,

“அதெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்ல மேம், பெண் பார்க்க வருவதும், பிடிக்கலன்னா சொல்றதும் நம்ம நடைமுறையில் இருப்பது தானே மேம், அதுக்காக எதுக்கு மன்னிப்பெல்லாம்,” என்று தவமலர் கூறினாள்.

“இருந்தாலும் மித்ரன் அண்ணா விஷயத்தில் நடந்ததே வேற,” என்று அவன் அவளிடம் கூறியதை தவமலருக்கு எடுத்து கூறியவள்,

“அண்ணா போட்டோ பார்த்திருந்தாங்கன்னா நேர்ல வந்து கஷ்டப்படுத்தியிருக்க மாட்டாங்க தவா, அண்ணா உன்னை பிடிக்கலன்னு சொன்ன காரணத்தை கேட்டு உங்கம்மா வேற அழுதாங்களாம், அதான் மித்ரன் அண்ணா உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினைக்கிறாங்க, காலேஜில் உன்னை சந்திச்சு பேசறது அவ்வளவா நல்லா இருக்காது, அதான் வெளியில் ஏதாவது ஒரு இடத்தில் உன்னை சந்திச்சு மன்னிப்பு கேட்கணும்னு நினைக்கிறாங்க,” என்று கூற,

“மேம் அதெல்லாம் தான் தேவையில்லைன்னு சொல்லிட்டேனே, அப்புறம் வெளியே போய் சந்திச்சு பேசறதெல்லாம் எதுக்கு? என்று கேட்ட தவமலர்,

” ஏய் எதுக்கு டீ அமைதியா இருக்கீங்க, அதெல்லாம் தேவையில்லைன்னு மேம்கிட்ட சொல்லுங்க” என்று மற்ற இருவரையும் உசுப்பி விட்டாள்.

“தவா சொல்றதும் சரி தான், அதான் உங்க அண்ணா மேல தப்பில்லன்னு புரிய வச்சிட்டீங்களே, அதுக்குப்பிறகு எதுக்கு மேம் மன்னிப்பெல்லாம்?” என்று புனர்வி கேட்க,

“எங்க தவா அதெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டா, அது நான் சொல்ல வேண்டியதில்லை, உங்களுக்கே தெரியும், அதனால உங்க அண்ணனை ரிலாக்ஸா இருக்க சொல்லுங்க,” என்று ராகமயா கூறினாள்.

“நீங்க சொல்றதெல்லாம் அண்ணாக்கிட்ட சொல்லிட்டேன், ஆனாலும் நேர்ல பார்த்து மன்னிப்பு கேட்டா தான் திருப்தின்னு சொல்றாங்க, நீ அண்ணாவை தனியா மீட் செய்ய வேண்டாம், நானும் உன்கூட வரேன், ஞாயிற்றுக்கிழமை போகலாமா?” என்று கௌசல்யாவும் பிடிவாதமாக அவளை வரவைக்கும் முயற்சியை செய்தாள்.

தவமலரை கருப்பு என்று யோகமித்ரன் வேண்டாமென்று சொன்னாலும், அவளுடன் பேசி பார்த்தால், ஒருவேளை அவளை பிடிக்கலாம், தவமலரை தன் அண்ணன் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கௌசல்யாவிற்கு தோன்றவே தான், அவர்களை மீண்டும் ஒருமுறை சந்திக்க வைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினாள்.

“அய்யோ மேம் ஞாயிற்றுக்கிழமை புனர்வி வீட்டுக்கு போறதா இருக்கேன்,” என்று தவமலர் மறுக்க பார்க்க,

“அப்போ புனர்வி வீட்டு பக்கத்தில் எங்கேயாச்சும் அண்ணாவை சந்திக்கலாம், அதிக நேரமெல்லாம் தேவையில்லை, சும்மா ஒரு பத்து நிமிஷம் போதும்,” என்று அவள் கேட்க,

அதற்கு மேல் மறுக்க முடியாமல் தவமலரும் சரியென்று ஒத்துக் கொண்டாள்.

பின்னர் தான் பூங்காவில் சந்திக்கலாம் என்று கௌசல்யா சொல்ல, அவளும் அதற்கு சரியென்று தலையசைத்தாள். காலையில் கிளம்பும் போது தன் பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்ல நினைத்தவள், பின் அவனை சந்தித்து பேசிய பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து புறப்பட்டாள்.

வரும்வழியில் தான், தனக்கு ஒரு முக்கிய வேலை இருப்பதால், தன்னால் வர முடியாது என்று கௌசல்யா சொல்லவும், பேசாமல் அவனை சந்திக்காமல் சென்றுவிடலாம், இல்லை புனர்வி அல்லது ராகாவை துணைக்கு அழைக்கலாம் என்று நினைத்தவள், 

பின்னரோ, “அவனை தனியா சந்திக்க எதுக்கு பயப்படணும்? அவன் என்ன புலியா? சிங்கமா? என்னை கடித்தா விழுங்கிடுவான் என்று மனதில் சொல்லிக் கொண்டு அவனைப் பார்க்கச் சென்றாள்.

காலை உணவு தயாராக இருக்க புனர்வியும் ராகமயாவும் அதையெல்லாம் உணவு மேசையில் கொண்டு வந்து வைத்தனர். “என்ன இன்னும் மயூரையும் அவனோட ப்ரண்ட் நவிரனையும் காணலை, சாப்பாடு நேரம் நெருங்குது, போன் செஞ்சு கேளு புவிம்மா,” என்று சாம்பவி சமையலறையிலிருந்து குரல் கொடுக்கவும், வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

“அத்தான் வந்தாச்சு அத்தை,” என்று குரல் கொடுத்தவள், 

“ஹே ராகா போய் கதவை திற,” என்று சொல்லியப்படியே, அறைக்குள் இருக்கும் தன் துப்பட்டாவை எடுக்க உள்ளே சென்றாள்.

“அன்னைக்கு அப்படி பேசினா, இப்போ முகத்தில் துப்பட்டாவை கட்டப் போறா, இவளை,” என்று வாய்க்குள் முனகியப்படியே ராகமயா கதவை திறக்க,

“ஹாய்,” என்று மயூரன் அவளைப் பார்த்து கையசைக்க, அவளோ அவனையும் அருகில் நின்றிருந்த நவிரனையும் முறைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.

“ஹே மயூர், ராகாக்கு இன்னும் என்மேல இருக்க கோபம் குறையல போல,” என்று நவிரன் சொல்ல,

“உன் மேல மட்டும் தானா? என் மேலேயும் தான்,” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்,

“அதெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு தான் நவிர், அப்புறம் சரியாகிடுவா,  சரி வா உள்ளே போகலாம்,” என்று அவனை வீட்டுக்குள் அழைத்து வந்தான்.

“அத்தை அவங்க வந்துட்டாங்க, நீங்க போய் பேசுங்க, நான் தோசை சுடுகிறேன்.” என்று சாம்பவியை வெளியே அனுப்பிவிட்டு, ராகா தோசை சுட,

வெளியே வந்த சாம்பவியோ, “வாப்பா நவிரா, நல்லா இருக்கீயா?” என்றுக் கேட்டப்படி அவர்கள் அருகில் சென்றார்.

“நான் நல்லா இருக்கேன் ம்மா, நீங்க எப்படி இருக்கீங்க?” என்று நவிரனும் நலம் விசாரித்தான்.

“நல்லா இருக்கேன் ப்பா, நீ கலிஃபோர்னியால செட்டில் ஆகற ஐடியாவில் இருப்பதாக மயூ சொன்னான். ஆனா நீ திரும்ப இந்தியா வந்ததில் சந்தோஷம், அதுவும் சென்னைக்கு வந்திருக்க நல்லதுக்கு தான், ஆமாம் எப்போ வேலையில் சேரணும்?”  என்று கேட்க,

“இன்னும் ரெண்டு நாளில் வேலைக்கு போக ஆரம்பிச்சிடுவேன் ம்மா,” என்று பதில் கூறிய நவிரனின் கண்கள் புனர்வியை தேடியது.

“நல்லது ப்பா, சரி போய் கைகழுவிட்டு வாங்க, சாப்பிடலாம்,” என்று அழைத்த சாம்பவி,

“புவிம்மா,” என்று குரல் கொடுக்க, புனர்வி அறையிலிருந்து வெளியே வந்தாள். அதுவும் முகத்தை மூடியப்படி,

“தவமலர் வர்றாதா சொன்னீங்களே, இன்னும் காணும், இங்க வந்து தானே சாப்பிட்றதா சொன்னா?” என்று சாம்பவி அவளிடம் கேட்க,

“எப்படியோ காலையில் வீட்டில் சாப்பிட்டு தான் கிளம்புவா அத்தை, இல்லன்னாலும் பரவாயில்லை அவ வந்ததும் நாங்க 3 பேரும் சாப்பிட்டுக்கிறோம், முதலில் இவங்க ரெண்டுப்பேரையும் சாப்பிட சொல்வோம்,” என்றவள்,

“வாங்க நவிரன், வாங்க அத்தான்,” என்று இருவரையும் அழைத்தாள்.

ராகமயா என்ன செய்கிறாள் என்று பார்க்க சாம்பவி சமையலறைக்குச் செல்ல, மயூரனோ கைகழுவ சென்றான். அவன் பின்னே சென்றுக் கொண்டிருந்த நவிரன், அவனுக்கு பின்னே வந்த புனர்வியை திரும்பி பார்த்து, “நீங்க எனக்காக பார்த்து உங்க முகத்தை மறைக்கணும்னு அவசியமில்ல, நீங்க துப்பட்டாவை கழட்டிட்டு ஃப்ரியா இருங்க,” என்று கூற,

“எனக்கு இதில் எந்த கஷ்டமுமில்ல, எனக்கு வேண்டாம்னு தோனியதுன்னா நானே கழட்டிடுவேன், உங்களுக்காக தான் நான் முகத்தை மூடியிருப்பதா நினைச்சுக்க வேண்டாம்,” என்று அவளும் பட்டென்று பதில் கூறினாள்.

“என்னை உங்களுக்கு பிடிக்கலயா? ஏதோ என்னை விலக்கி வச்சு பேசறது போல இருக்கு உங்க பேச்சு, இன்னைக்கு மட்டுமில்ல, அன்னைக்கு ஏர்போர்ட்லயே அப்படி தான் பேசினீங்க, நான் வந்ததை டிஸ்டர்பா நினைக்கிறீங்களா?” என்று அவன் கேட்க,

“எது நீங்க கலிஃபோர்னியால இருந்து வந்ததையா சொல்றீங்க?” என்று அவள் திருப்பிக் கேட்டாள்.

“இல்ல இங்க வீட்டுக்கு வந்ததை சொன்னேன்,” என்று பதில் கூறியவன், ஏதோ யோசனையோடு அவளைப் பார்க்க, 

“இல்ல ஏர்போர்ட்லயே ஒருமாதிரி நடந்துக்கிட்டதா சொன்னீங்களே, அதான் கேட்டேன். என்னோட பேச்சே இப்படித்தான், சரி சீக்கிரம் கைகழுவிட்டு வாங்க சாப்பிடலாம்,” என்று சொல்லிவிட்டு அவளும் சமையலறைக்குள் சென்றாள்.

வமலருக்காக யோகமித்ரன் பூங்காவின் வாயிலிலேயே  காத்துக் கொண்டிருக்க, உள்ளே வந்ததும் அவனைப் பார்த்தவள், “ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா?” என்றுக் கேட்டாள்.

“ஆமாம் அரைமணி நேரமா? அதனால ஒன்னும் பிரச்சனையில்லை,” என்று அவன் சொல்ல,

“உங்களுக்கு பிரச்சனையில்லாம இருக்கலாம், ஆனால் எனக்கு ஒருமாதிரி இருக்கே, இப்படி எனக்காக காத்திருந்து என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் என்ன? முடிஞ்சு போன விஷயத்தை அப்படியே விட்டுடலாமே,” என்றாள்.

“எதுவா இருந்தாலும் உள்ளே போய் பேசலாமே,” என்று அவன் சொல்ல,

“மன்னிப்பு தானே, இங்கேயே கேட்டா, சரி போனா போகுது மன்னிச்சிட்டேன்னு சொல்லி நானும் இப்படியே கிளம்பிடுவேன்,” என்று மனதில் நினைத்தவள், அதை வெளியே சொல்லாமல், அவனுக்கு முன் பூங்காவின் உள்ளே நுழைந்து, ஆட்கள் இல்லாத இடம் ஒன்றை தேர்ந்தெடுத்தவள்,

அவள் பின்னாலேயே வந்தவனை பார்த்து, “சொல்லுங்க மிஸ்டர் யோகன், என்ன சொல்லணும்?” என்றாள்.

“என்னன்னு கூப்பிட்டீங்க, யோகனா? எங்க வீட்டிலேயும் நண்பர்களும் மித்ரா, மித்ரன் அப்படித்தான் கூப்பிடுவாங்க,”

“அதுக்கு இப்போ என்ன? உங்க முழுப்பேர் கூப்பிட கஷ்டமா இருந்ததுன்னு சுருக்கி கூப்பிட்டேன், யார் என்ன எப்படி கூப்பிடுவாங்கன்னு என்னை ஆராய்ச்சி செய்ய சொல்றீங்களா? இப்போ என்ன பேச கூப்பிட்டிங்களோ அதை சொல்லுங்க? என் ஃப்ரண்ட்ஸ் எனக்காக காத்திருப்பாங்க,”

“அது கௌசி உங்கக்கிட்ட சொல்லியிருப்பா, நான் உங்க வீட்டுக்கு வர வரைக்கும் நான் உங்க போட்டோ பார்க்கல, வந்த இடத்தில் இந்த கல்யாணம் வேண்டாம்னு நாசுக்கா சொல்ல தான் நினைச்சேன், ஆனா அம்மா, அப்பா உங்களுக்கு நம்பிக்கை கொடுப்பது போல பேசவும், வேற வழியில்லாம தான் உண்மையை சொல்ல வேண்டியதா போச்சு, கண்டிப்பா உங்க மனசு வருத்தப்பட்டிருக்கும், அதான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்க நினைச்சேன்,”

“எதுக்கு என்னோட மனசு கஷ்டப்படணும்? நான் கருப்பா இருக்கேன், அது எனக்கு தெரிஞ்ச உண்மை தானே, அது ஒன்னும் நோய் கிடையாதே, என்னோட அப்பா கருப்பா இருக்கார், அதனால நானும் கருப்பா இருக்கேன். இதில் நான் வருத்தப்பட என்ன இருக்கு? ஒருவிதத்தில் நீங்க வெளிப்படையா உண்மையை சொன்னது சரிதான், 

ஆனா நீங்க வெளிப்படையா சொன்னது எனக்கு பெருசா தெரியல, ஆனா எங்க அம்மா ரொம்ப சென்சிட்டிவ், கருப்பா இருக்கறதால எனக்கு கல்யாணம் நடக்கறது கஷ்டமோன்னு தினம் தினம் வருத்தப்படுவாங்க, எத்தனையோ பேர் போட்டோ பார்த்தே வேணாம்னு சொல்லிட்டாங்க,

உங்க வீட்டில் தான் போட்டோ பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்லி வீட்டுக்கு வந்தீங்க, அதுக்குப்பிறகு ஏதோ ஒரு காரணம், என்னை பிடிக்கல, இல்ல வேற ஏதோ காரணம் இந்த சம்பந்தம் தட்டி போச்சுன்னா பரவாயில்லை, ஆனா நான் கருப்புன்னு சொல்லி வேண்டாம்னா அது என்னோட அப்பா, அம்மாக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை கொடுக்கும்னு நினைச்சு பார்த்தீங்களா?

உங்க அப்பா, அம்மா நம்பிக்கை கொடுக்கறது போல பேசினாங்கன்னு சொல்றீங்களே, வீட்டில் பேசினது தான் நம்பிக்கை கொடுப்பதா? அதுக்கு முன்னமே  பெண்ணை பிடிச்சிருக்கு மேற்கொண்டு நேர்ல பார்த்துட்டு பேசலாம்னு சொல்றதே ஒரு நம்பிக்கை கொடுக்கறது போல தானே, அதை யோசிக்க மாட்டீங்களா?”

“இதில் என்னோட தப்பு இல்லங்க, என்னோட அம்மா, அப்பா தப்பு இது,”

“உங்க அப்பா, அம்மாக்குள்ள இருக்க எண்ணம் உங்களுக்கு தெரியாதுங்கிறது போல பேசறீங்க, அவங்க சொத்து, பணம், நகை இதெல்லாம் எதிர்பார்க்கிறாங்கன்னு உங்களுக்கு தெரியும் தானே, உங்களுக்கு அழகான படிச்ச வேலைக்கு போற பெண் வேணும், 

உங்க அப்பா, அம்மா எண்ணம் தெரிஞ்சும் நீங்க அமைதியா இருக்கீங்கன்னா என்ன அர்த்தம்? அப்போ நீங்க எதிர்பார்க்கும் அழகோட சொத்து பத்தும் சேர்ந்து வந்தா ஓகே அப்படின்னு தானே நினைக்கிறீங்க,”

“அய்யோ அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லங்க,”

“அப்போ உங்க அம்மா, அப்பா இப்படி ஒரு எண்ணத்தோடு பெண் பார்க்க போனா நீங்க ஏன் கூட வர்றீங்க, எனக்கு பிடிச்சிருந்தா தான் வருவேன்னு தெளிவா அவங்கக்கிட்ட சொல்லியிருக்கலாமே,

உங்க அப்பா, அம்மா கட்டாயத்துக்காக வந்து நேரா அங்க என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டீங்க சரி. ஒருவேளை அவங்க நீ ஒத்துக்கலன்னா செத்துடுவேன் சொல்லி மிரட்டி கூட்டிட்டு வந்து அதுக்காக பிடிக்கலன்னாலும் என்னை கல்யாண செய்ய ஒத்துகிட்டிருந்தா, அப்புறம் நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்குமா?” என்று அவனைப் பார்த்து கோபமாக கேட்டவள்,

பிறகு தான் என்ன கேட்டிருக்கிறோம் என்பதை புரிந்து, “சாரி யோகன், ஏதோ எக்ஸாம்பிள்க்கு சொல்லணும்னு இப்படி பேசிட்டேன், சாரி.” என்றாள்.

“எனக்கு புரியுதுங்க,” என்று அவன் சொல்லவும்,

“அதாவது இனி அப்படி ஒரு சூழல் அமையாதுன்னு என்ன நிச்சயம்? உங்களை கலந்துக்காம உங்க பெத்தவங்க திரும்ப திரும்ப இந்த தப்பை செய்தா, ஒவ்வொரு இடத்திலும் போய் எனக்கு பெண்ணை பிடிக்கல, பெண்ணை பிடிக்கலன்னு சொல்லிக்கிட்டு இருப்பீங்களா? 

சாதாரணமாக சொன்னா நீங்க கேட்க மாட்டீங்கன்னு உங்களை எமோஷனல் ப்ளாக்மெயில் செஞ்சா என்ன செய்வீங்க? பிடிக்காத பெண்ணை கல்யாணம் செய்து, வாழ்க்கை முழுசும் கஷ்டப்படுத்துவீங்களா?

என்னை கேட்டா, அழகு மட்டும் போதும்னு நினைக்கிற உங்க எண்ணமும் தப்பு. சொத்து, அந்தஸ்துன்னு பார்க்கும் உங்க அப்பா, அம்மா எண்ணமும் தப்பு. ஒரு பெண்ணோட அழகுக்கும் அந்தஸ்த்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீங்க, அந்த பெண்ணோட மனசை பாருங்க, 

முதல் பார்வையிலேயே ஒருத்தரை பத்தி தெரிஞ்சிக்க முடியாது தான், முதலில் நம்மை கவர்வது அவங்களோட புறத்தோற்றமா தான் இருக்கும், அதில் தப்பும் இல்ல, ஆனா அதுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைக்காதீங்க, ஏன்னா அழகு நிரந்தரமில்ல, 

என்னடா இவ, மன்னிப்பு கேட்க வந்தா ஒரு வார்த்தையில் மன்னிச்சிட்டேன்னு சொல்லிட்டு போகாம, நின்னு நமக்கு அட்வைஸ் செய்றாளேன்னு நீங்க நினைக்கலாம், நீங்க செஞ்சது தப்புன்னு உணர்ந்ததால தானே மன்னிப்பு கேட்க நினைச்சீங்க, அப்பவே அதுக்கு மன்னிப்பு அவசியமில்ல, அதே சமயம் இதை சொன்னா நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு எனக்கு தோனியது, அதான் மனசுல தோனியதை பேசிட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க,”

“அய்யோ மலர், நீங்க பேசினது தப்பே இல்ல, கரெக்டா தான் சொன்னீங்க, அழகான பெண்ணை கல்யாணம் செய்துக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு தான், ஆனா அதுக்காக ஒவ்வொரு பெண்ணா பார்த்து, அவங்களை கஷ்டப்படுத்தறது போல பிடிக்கலன்னு சொல்வதில் எனக்கும் உடன்பாடில்லை, 

இதுவரை எத்தனையோ ஜாதகம் கொண்டு வந்து வீட்டில் காண்பிச்சாங்க, என்னோட அம்மா, அப்பா எண்ணம் தெரிஞ்சு தான், எனக்கு பிடிச்ச பெண்ணுன்னு தோனியதுன்னா வரேன்னு சொல்லி தட்டி கழிச்சேன். அதான் இந்தமுறை போட்டோ காண்பிக்காம நேரடியா கூட்டிட்டு வந்துட்டாங்க, நான் பார்த்த முதல் பெண் நீங்க தான், அதிலேயும் இப்படி ஒரு சொதப்பல நடந்துடுச்சு, இனி கவனமா இருப்பேன். 

அதேசமயம் என்னை மன்னிச்சதுக்கும் நன்றி. உண்மையிலேயே நீங்க ஒரு வித்தியாசமான கேரக்டர், இந்த விஷயத்தை ரொம்ப சாதாரணமாக எடுத்துக்கிட்டீங்க, உங்களை திரும்ப பார்த்து பேசவும் தான் அது புரிஞ்சுது. உண்மையிலேயே நீங்க க்ரேட் மலர்.”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல, நீங்க என்னை பெண் பார்க்க வரும்போது என்னோட மனசுல எந்த எதிர்பார்ப்பும் வச்சுக்கல, அதான் நீங்க என்னை பிடிக்கலன்னு சொன்னதும் அதை என்னால சாதாரணமா எடுத்துக்க முடிஞ்சுது, ஆனாலும் என்னோட அம்மா வருத்தப்பட்டாங்கல்ல அதுக்காக உங்களை முறைச்சு என்னோட ரியாக்‌ஷனை வெளிப்படுத்திட்டேன். அதோட அது முடிஞ்சதா தான் நினைக்கிறேன்.”

“கண்டிப்பா இப்படி பேசறதுக்கு நல்ல பக்குவம் வேணும் மலர், சூப்பர்.”

“சரி நான் எதுக்கு வந்தேனோ அதை பேசியாச்சுல்ல, நான் கிளம்பறேன். அப்புறம் இன்னொரு விஷயம், என்னை எல்லோரும் தவா இல்லன்னா தவமலர்னு தான் கூப்பிடுவாங்க,”

“உங்க முழுப்பெயர் சொல்லி கூப்பிட கஷ்டமா இருந்ததுன்னு தான் சுருக்கி கூப்பிட்டேன், யார் எப்படி என்ன கூப்பிடுவாங்கன்னு என்னை ஆராய்ச்சி செய்ய சொல்றீங்களா?” என்று அவள் முன்பு கூறியதையே கூறியவன்,

“இப்படி சுருக்கி கூப்பிட்றது எனக்கு பிடிச்சிருக்கு,” என்று சொல்ல,

“இவன் கூப்பிட்டான்னு இவன் கூட பேச வந்ததே தப்பு,” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்,

“சரி நான் வரேன்,” என்று அவனை ஒருமுறை முறைத்துவிட்டு அவள் அங்கிருந்து செல்ல, போகும் அவளை யோகமித்ரன் ரசனையோடு பார்த்திருந்தான்.

சாப்பிட்டு முடித்ததும் நவிரனும் மயூரனும் எழுந்து கைகழுவி விட்டு வந்து வரவேற்பறையில் அமர, அவர்களோடு உடன் சேர்ந்து சாம்பவியும் சாப்பிட்டவர், அவர்களோடு வந்து அமர்ந்து, “டிஃபன் எப்படி இருந்தது நவிரா?” என்றுக் கேட்க,

“ரொம்ப சூப்பர் ம்மா, எல்லாமே எனக்கு பிடிச்ச சமையல் இட்லிக்கு சாம்பார், தோசைக்கு வடகறி, பொங்கல்க்கு தேங்காய் சட்னி, மெதுவடை, பூரி மசாலா இப்படி எனக்கு பிடிச்ச காம்பினேஷனோட இன்னைக்கு டிஃபன் செமயா இருந்தது. கடந்த 3 வருஷமா என்னோட சமையல் சாப்பிட்டு நாக்கு செத்து போயிருந்துச்சு, இன்னைக்கு தான் நல்ல சாப்பாடு சாப்பிட்டேன். என்ன எல்லாத்தையும் மொத்தமா சாப்பிட முடியல, டிஃபன்க்கே இத்தனை டிஷ், எதுக்கும்மா ஏதாச்சும் ஒன்னு ரெண்டு செய்திருக்கலாமில்ல,” என்றான்.

“உனக்குன்னு இல்லப்பா, மயூரன் வாரத்தில் ஒருநாள் தான் என் கையால சாப்பிடுவான்னு ரெண்டு மூனு அயிட்டம் செய்வேன், இன்னைக்கு நீயும் வரவே கூட கொஞ்சம் செஞ்சோம் அவ்வளவு தான், தனியா ஒன்னும்  கஷ்டப்படலயே, இவங்க ரெண்டுப்பேரும் தான் எனக்கு உதவினாங்களே,” என்று சாம்பவியுடன் வந்த ராகாவையும் புனர்வியையும் காட்டி சொன்னவர்,

“அதுவும் என்னல்லாம் செய்யலாம்னு புவி தான் மெனு தயார் செஞ்சா, அது உனக்கு பிடிச்சதா அமைஞ்சு போச்சு,” என்று  சொன்னதும், நவிரன் புனர்வியை பார்த்தான்.

“இதெல்லாம் அத்தானுக்கும் பேவரிட் தானே அத்தை, அதான் இந்த மெனு சொன்னேன். அப்படித்தானே அத்தான்,” என்று அவள் மயூரனிடம் கேட்க,

“ஆமாம் எனக்கும் இந்த காம்பினேஷன் பிடிக்கும் தானேம்மா?” என்று மயூரன் பதில் கூறினான்.

“ம்ம் அத்தானுக்கு பிடிச்ச மெனுவா சொன்னா மட்டும் போதாது, அதெல்லாம் சமைக்க கத்துக்கிட்டு கல்யாணத்துக்கு பிறகு அத்தானுக்கு செஞ்சும் கொடுக்கணும் புவி, நீ என்னடான்னா ஒரு தோசை சுடவே திணருற,” என்று ராகமயா அவளை கேலிச் செய்ய,

“ம்ம் நீ மட்டும் சமைக்க தெரிஞ்சது போல அவளை கேலி செய்றீயா? ரெண்டுப்பேரும் படிப்பை முடிங்க, முதலில் ஒரு மாசம் வீட்டில் உட்கார வச்சு உங்களுக்கு சமையல் கத்துக் கொடுக்கணும், அப்புறம் கல்யாணத்துக்கு பிறகு மயூர்க்கு பிடிச்சதை புவி அவ கையாலே செஞ்சு போடுவா, நீ மட்டும் என்ன? உனக்கு கல்யாணம் ஆனதும் உன்னோட கணவருக்கு சூப்பரா சமைக்க போற பாரு,” என்று சாம்பவி கூறவும், ராகமயா மயூரன் முகத்தை பார்த்தாள்.

இவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த நவிரனோ, “ஹே மயூர், உனக்கும் புவிக்கும் கல்யாணமா?” என்றுக் கேட்க, மயூரன் புனர்வியின் முகத்தை பார்த்தான்.

நவிரன் கேட்ட கேள்வியில் சாம்பவியோ, “என்ன மயூர், உனக்கும் புவிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சதை நீ நவிரன்கிட்ட சொல்லலையா? ஏன் சொல்லலை?” என்று கேட்க,

“அது வந்தும்மா, அது..” என்று மயூரன் என்ன சொல்வதென்று தயங்கும் போதே,

“ஹலோ கைஸ், என்று தவமலர் சாதாரணமாக சாத்தி வைத்திருந்த கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

” வாம்மா தவா,” என்று சாம்பவி அவளை அழைக்க,

“ஹே நவிர், இது தான் டா த்ரீ ரோஸஸ்ல ஒரு ரோஸ் தவமலர்.” என்று மயூரன் நவிரனிடம் அறிமுகப்படுத்த,

“ஹாய் நவிரன்,” என்று தவமலரே அவனுக்கு கைகுலுக்க, அவனும் அவளைப் பார்த்து ஹாய் என்றான்.

“என்ன எல்லாம் ஹாயா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கீங்க, என்னை விட்டு சாப்பிட்டாச்சா?” என்று அவள் கேட்க,

“ஹே தின்னி, இன்னும் நானும் ராகாவும் சாப்பிடல, ஆமாம் வீட்டில் சாப்பிட்டு வரலையா?” என்று புனர்வி கேட்டாள்.

“அது ஞாயிற்றுக்கிழமை எப்படியோ மயூ அத்தானுக்காக ஸ்பெஷலா செய்வீங்க, இதில் நவிரன் வேற வந்திருக்காங்க, அதான் இன்னும் ஸ்பெஷலா இருக்குமேன்னு சாப்பிடாமலே வந்துட்டேன். ஆமாம் வெஜ்ஜா இல்ல நான்வெஜ்ஜா?”

“ம்ம் காலையில் வெஜ் தான், மதியம் தான் நான்வெஜ். சரி வா சாப்பிடலாம்,” என்று அவளை கையோடு இழுத்துச் சென்ற புனர்வி,

“ஆமாம் யோகமித்ரன்கிட்ட பேசினியா?” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்டப்படி உணவு மேசைக்கு செல்ல, ராகமயாவும் பின்னாலேயே சென்றாள்.

“சரி நான் அவங்களுக்கு தோசை சுட்றேன், நீங்க பேசிக்கிட்டு இருங்க,” என்று சாம்பவியும் எழுந்து சென்றதும்,

அதுதான் தக்க சமயம் என்பது போல,”ஹே மயூர், உனக்கும் புவிக்கும் நிச்சயம் ஆனதை ஏன் டா என்கிட்ட சொல்லல? இதுக்கும் புவி உனக்கு எந்த முறையில் ரிலேஷன்னு கேட்டதுக்கு கூட விஷயத்தை சொல்லலையே, 

அதுவுமில்லாம நாம ஒன்னா வொர்க் பண்ணும் போது,  நீ வேற யாரையோ காதலிச்சதா தானே சொன்ன? அப்புறம் எப்படி டா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட?” என்று நவிரன் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்க, 

சாப்பிட்டு முடித்ததும் செய்து வைத்த கேரட் அல்வாவை சாப்பிடுவதாக நவிரன் சொல்லவே, அதை ராகமயாவிடம் சாம்பவி கொடுத்தனுப்ப, அதை கொண்டு வந்த அவளோ நவிரன் கேள்வியில் அதிர்ந்து நின்றாள்.

ஊஞ்சலாடும்..