AO 11

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அன்பு 11

கௌசல்யா ஆள்விட்டு அனுப்பவும், அவள் அருகே செல்ல வேண்டுமென்று ராகமயாவும் தவமலரும் மணப்பந்தல் அருகே செல்ல, அப்போது தான் அங்கு புனர்வி இல்லை என்பதை இருவருமே கவனித்தனர்,

“புவி எங்கப் போனா?” இருவரும் ஒருவரையொருவர் மாற்றிக் கேட்டுக் கொள்ள, கௌசல்யாவும் இருவரிடமும் அதே கேள்வியை கேட்டாள்.

அவ்விடத்தை சுற்றி பார்வையை ஓடவிட்டவர்கள், அவள் எங்கேயாவது தென்படுகிறாளா? என்று பார்த்தனர். மயூரன், சாம்பவி, செல்லதுரை, சௌந்தரி என்று அனைவரிடமும் விசாரிக்க, யாருக்குமே அவள் இங்கு இருந்து சென்றது தெரியவில்லை, 

இவர்கள் இங்கு அவளை தேடிக் கொண்டிருந்த நேரம், புனர்வியோ கோவிலுக்கு அருகில் உள்ள குளக்கரையில் மீன்களுக்கு பொறி போட்டப்படி அமர்ந்திருந்தாள். அவளைத் தேடி வந்த நவிரனும் அவள் குளக்கரை படிக்கட்டில் அமர்ந்திருப்பதை பார்த்து அவள் அருகே சென்றான்.

வந்ததிலிருந்து தவமலரிடம் பேச வேண்டுமென்று நினைத்தாலும், ஒருபுறம் புனர்வியையும் அவன் கவனித்துக் கொண்டு தானிருந்தான்.

கௌசல்யாவை அழைத்து கொண்டு வரும்போதே அவள் கண்கள் அவனை பார்த்து வியப்பைக் காட்டியதை அவனும் அறிந்தான். அவளது முகத்தை நேருக்கு நேராகவே பார்க்க தயங்கியவனுக்கு, இன்று அவள் முகத்தை மூடாத போதும், பார்த்தப்படியே இருந்தான். அதிலும் அவளது கண்களில் தெரிந்த மாற்றம் கூட அவனால் கண்டுப்பிடிக்க முடிந்ததில் அவனுக்கே அதிசயம் தான்,

தவமலரும் புனர்வியும் சேர்ந்து வந்ததில் அவன் அவளைத்தான் பார்க்கிறான் என்பதை அவள் அறிந்திருப்பாளா? என்றும் தெரியவில்லை, அருகே வந்த பின்பும் கூட அவளிடம் அவன் பேச முயற்சிக்கவில்லை,

முதல் சந்திப்பில் அவன் நடந்துக் கொண்ட முறைக்கு, அடுத்த சந்திப்பில் வீட்டிலேயும் அவள் முகத்தை மூடியப்படி இருந்தாள். அதனால் இப்போது அவளை நேருக்கு நேராக பார்க்கும் போது, அவள் தன் முகத்தை மறைத்துக் கொள்ள நினைக்கலாம், அவளுக்கு அந்த  சங்கடத்தை கொடுக்க வேண்டாம் என்பதால் அவளை கண்டுக் கொள்ளாதது போல் இருந்தான்.

தவமலர் அவனிடம் விஷயத்தை சொல்ல வந்த போது கூட, அவனுக்கு கேட்காதபடி தவமலரிடம் ஏதோ சொன்னதையும் கவனித்தப்படி தான் இருந்தான்.

பின் தவமலரோடு பேச வந்த பின்பும் கூட அடிக்கடி புனர்வியை பார்த்தப்படி தான் இருந்தான். அப்படித்தான் யாரோ ஒரு பெண்மணி அவளை தனியாக அழைத்து சென்று ஏதோ பேசியதை கவனித்தான். அந்த பெண்மணி மாப்பிள்ளையின் அன்னை என்பது கூட அவனுக்கு தெரியாது.

அவர் பேசும் போது அவரின் முகபாவனையையும், அதற்கு புனர்வியின் முகம் வாடியதையும் அவன் கவனித்தான். பின் அவள் இவர்கள் இருந்த பக்கம் பார்வையை திருப்பியதையும், பின் அங்கிருந்து சென்றதையும் பார்த்தான்.

மிகவும் தீவிரமாக விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்ததால், அவன் பார்வை வேறு பக்கம் சென்றதை தவமலரும் கவனிக்கவில்லை.

மின்மினி பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டி இருந்ததால், அப்போதே புனர்வியின் பின்னால் போக தயாராக இருந்த காலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நவிரன் பெரும்பாடு பட வேண்டியிருந்தது.

தவமலர் சொல்லி முடித்ததும், தான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அடுத்து புனர்வி எங்கே போயிருப்பாள் என்ற கேள்வியோடு அவளை தேடி வந்தவன் தான், சிறிது நேரத்தில் அவள் குளக்கரைக்கு வந்ததை பார்த்து அவள் அருகில் வந்தான்.

குளத்தில் மீன்களுக்கு பொறியை போட, அதை கூட்டமாக வந்து மீன்கள் சாப்பிடுவதை பார்த்து புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தவளை தன் அலைபேசியில் உள்ள கேமராவில் அழகாக சில படங்கள் எடுத்தான். பின், “க்கூம்” என்று கணைத்து தன் வருகையை தெரிவிக்க, அவள் அதே புன்னகையோடு திரும்பவும், அவள் முகத்தையும் அதே கேமராவில் பதிவு செய்தான்.

கண்களில் வியப்பைக் காட்டியபடியே எழுந்தவளுக்கு என்னவோ அவன் முன் இந்தமுறை முகத்தை மறைக்க தோன்றவில்லை. அவனது அந்த செய்கை அவளுக்கு அப்படி தோன்ற வைத்ததோ என்னவோ?

“காட்டுங்க நான் நல்லா இருக்கேனான்னு பார்க்கிறேன்?” என்று எழுந்து அவனது அலைபேசியை வாங்கி தன் புகைப்படங்களை பார்த்தாள்.

“போட்டோ நல்லா வந்திருக்கே? என்ன மொபைல் இது?” என்று கேட்டப்படி, அதன் ஆராய்ச்சியில் இறங்கினாள்.

“ஆமாம் அங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் கல்யாணம் நடக்கப் போகுது. நீங்க ஏன் இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க?”

“எதுக்கு இன்னும் வாங்க, போங்கன்னு மரியதையா கூப்பிட்றீங்க? உங்களை விட சின்னப் பெண் தானே? நீ, வா, போன்னு சொல்லுங்க, நான் தப்பால்லாம் எடுத்துக்க மாட்டேன்.”

“ம்ம் எனக்குமே அது ஒருமாதிரி தான் இருந்தது, இப்போ சொல்லிட்டல்ல, அப்படியே கூப்பிட்றேன். ஆனா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம இதுதான் முக்கியமான விஷயம்னு பேசற பார்த்தீயா? அது எனக்கு வேற ஒருத்தரை ஞாபகப்படுத்துது.” என்றதும் அவனை கூர்மையாக பார்த்தவள், 

பின் சாதாரணமாக, “ஆமா நீங்க இங்க என்ன செய்றீங்க?” என்றதும் புன்னகைத்தவன்,

“உன்னை தேடி தான் வந்தேன். ஆமாம் அந்த லேடி யாரு? உன்கிட்ட என்ன சொன்னாங்க? எதுக்கு இங்க வந்து இருக்க?” என்று கேட்டதும்,

“நான் யாரும் கவனிக்கலன்னு நினைச்சேன், நீங்க பார்த்துட்டீங்களா?” என்றவள்,

“அவங்க தான் தனா சாரோட அம்மா, அதான் கல்யாண மாப்பிள்ளை அம்மா, நான் மேடையில் நிற்க கூடாதுன்னு சொன்னாங்க, எல்லாம் என்னையே பார்ப்பாங்களாம், எல்லோருக்கும் நான் ஏன் காட்சி பொருளா இருக்கணும்னு கேட்கிறாங்க? அதுவும் சரிதானே? அதான் வந்துட்டேன், 

கௌசல்யா மேம் கூடவே இருக்க சொன்னதால தான் நானும் அங்க போனேன். இப்போ அவங்க கல்யாண சடங்கில் கவனமா இருப்பாங்க? அதான் ராகாவும் தவாவும் அங்க இருக்காங்கல்ல, அதனால நான் இல்லாதது அவங்களுக்கு பெருசா தெரியாது. நான் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கேன்.” என்றாள்.

“ஆமாம் அங்க இருக்க எல்லோரும் என்ன நினைக்கிறாங்கன்னு ஒவ்வொருத்தரோட மனசை படிச்சு அவங்க தெரிஞ்சிக்கிட்டாங்களா? அவங்க சொன்னாங்கன்னு நீ இங்க வந்து இருக்க? கல்யாணத்தை பார்க்க வந்தவங்களுக்கு நீயேன் காட்சி பொருளா இருக்கப் போற, இல்லை உன்னை பார்ப்பவங்க எல்லோரும் அவங்களை போலவே நினைப்பாங்களா? இல்லை அப்படி நினைக்கிறாங்கன்னு நீ எங்கேயும் போகக் கூடாதா? இதெல்லாம் அவங்க முடிவு செய்ய அவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?

நீ கௌசல்யாக்காக தானே வந்திருக்க, அவங்க தானே நீ இருக்கணும்னு நினைக்கிறாங்க, அவங்க உணர்வுக்கு நீ மதிப்பு கொடுக்க வேண்டாமா? உன்னை இருக்க வேண்டாம்னு சொன்னது அவங்களோட வருங்கால மாமியாரா இருக்கலாம்,

ஆனா அவங்க சொல்ற எல்லாத்துக்கும் கட்டுப்படணும்னு கௌசல்யாக்கு எந்த அவசியமுமில்ல, அழகா, பளிச்சுன்னு உடை உடுத்திக்கிறது மட்டும் தான் கல்யாணத்துக்கு வர்றதுக்கான தகுதியா? நல்ல மனசு வேணும், மன நிறைவோட தம்பதிகளை வாழ்த்தணும், அவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கணும், அந்த தகுதி உனக்கு இருக்கு, நீ கண்டிப்பா அங்க இருக்கணும்,”

“அங்க இருந்தா மட்டுமில்ல, நான் எங்க இருந்தாலும் மேம் நல்லா சந்தோஷமா வாழணும்னு தான் நினைப்பேன். என் மனசு அங்க தான் இருக்கும்,”

“இருக்கலாம், ஆனா நீ பக்கத்தில் இருக்கணும்னு அவங்க நினைச்சாங்கல்ல, இவ்வளவு நேரம் கூட இருந்துட்டு, இப்போ இல்லன்னா அவங்க என்னவோ ஏதோன்னு நினைக்க மாட்டாங்களா?

உன்னோட ஃப்ரண்ட்ஸும் தான், திடீர்னு நீ அங்க இல்லன்னதும் உன்னை தேடாம இருப்பாங்களா? கண்டிப்பா இந்நேரம் உன்னை தேட ஆரம்பிச்சிருப்பாங்க, உன்னோட அத்தை, மயூர், எல்லாம் யாருக்காக இந்த கல்யாணதுக்கு வந்திருக்காங்க, நீ சொல்லி தானே? ஏன் மயூரனும் என்கிட்ட நீயும் வரணும் டா, நாமல்லாம் போனா புவி சந்தோஷப்படுவான்னு தான் சொல்லி என்னை கூப்பிட்டான். இப்போ உன்னை அங்க வேணாம்னு சொல்றாங்கன்னு தெரிஞ்சா, அங்க யாருக்கும் இருக்க மனசு வராது, அப்படியே கௌசல்யாக்காக அங்க இருந்தாலும், மனசு முழுக்க உன்னை தான் சுத்திக்கிட்டு இருக்கும், அப்புறம் மன நிறைவா தம்பதிகளை எப்படி வாழ்த்துவாங்க?

கடமையேன்னு இருந்துட்டு, கல்யாணம் முடிஞ்சதும் சாப்பிடாம கூட கிளம்பி வந்துடுவாங்க? அப்புறம் அது கௌசல்யாக்கு தெரிஞ்சா எவ்வளவு கவலைப்படுவாங்க, யாரோ ஒருத்தர் உன்னை ஒதுக்கினதுக்காக இத்தனை பேரை நீ கஷ்டப்படுத்த போறீயா?

” இப்போ என்னை என்ன செய்ய சொல்றீங்க?”

“அங்க கல்யாணம் நடக்கிற இடத்துக்கு வா.” என்று கூறியவன், அடுத்து அவளை பேச விடாது அவளது கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

“அய்யோ நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க,” என்று அவள் சொன்னதையும் காதில் வாங்கவில்லை.

வர்கள் கோவிலில் நுழைந்த போதே, மயூரன், ராகமயா, தவமலர் மூவரும் அவள் கோவிலுக்குள் இல்லை என்று தெரிந்து, கோவிலுக்கு வெளியே பார்க்க வர இருந்தனர்.

அதற்குள் இருவரையும் பார்த்துவிடவே, “ஹே புவி எங்க டீ போன, கௌசல்யா மேம் உன்னை கேட்டுக்கிட்டே இருந்தாங்க,” என்று தவமலர் சொல்ல,

நவிரனை அர்த்தமாய் பார்த்தவள், “ஒன்னுமில்லடீ போன் வந்ததுன்னு பேச போனேன், அப்படியே குளம் இருக்கவும், அதுல தண்ணீர் இருக்கான்னு பார்க்க போயிட்டேன்.” என்று காரணம் கூறினாள்.

ஆனால் நவிரன் அவளை கைப்பிடித்து அழைத்து வந்தது, திருமண சடங்குகள் நடந்துக் கொண்டிருக்க, இப்படி குளத்தை பார்க்க சென்றதாக சொன்னது இது எதையும் அவர்களால் நம்ப முடியவில்லை.

“ஹே புவி, நீ இப்படியெல்லாம் கேர்லெஸ்ஸா இருக்க மாட்டீயே, என்ன நடந்ததுன்னு சொல்லு.” என்று ராகமயா கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல ராகா,” என்று அவள் ஏதோ சொல்ல வர,

“புவி தன்னோட முகத்தை மறைச்சுக்காம கல்யாணத்தில் நடமாடினதை பார்த்துட்டு  யாரோ என்னவோ சொல்லியிருக்காங்க, அதான் யாருக்கும் சொல்லாம அவ வெளிய போயிட்டா, நான் பேசி புரிய வச்சு கூட்டிட்டு வரேன். என்று நவிரன் விளக்கம் கொடுத்தான்.

அதை வியப்பாக பார்த்த ராகமயா, “நவிரன் இதை நீங்களா சொல்றீங்க? அதிசயம் தான்,” என்று சொல்ல,

“ராகா,” என்று மயூரன் அவளை அதட்டினான்.

அதில் தன் தவறு புரிந்து, “சாரி நவிரன்.” என்று ராகமயா அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.

“ராகா நினைப்பதில் தப்பில்ல மயூர், நான் நடந்துக்கிட்டதுக்கு யாரா இருந்தாலும் அப்படி தான் நினைப்பாங்க, என்னோட பிரச்சனை எனக்கே புரியாத ஒன்னு தான், புவியோட முகத்தை பார்த்து நான் அருவருப்பா நினைக்கல, அதேசமயம் அதை சகஜமா ஏத்துக்கிட்டு என்னால பேசவும் முடியல, அதான் அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டேன். ஆனா அதுக்காக புவி என்கிட்ட முகத்தை காட்டாம ஒதுங்கியிருக்கணும்னு நான் சொன்னா முட்டாள். நான்தான் அதை ஏத்துக்க பழகிக்கணும், அதுக்கு தான் நானும் முயற்சி செய்றேன்.” என்றதும், யாருக்குமே அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“சரி, நாம யாரும் அங்க இல்லன்னா, மேம் ஏதோ பிரச்சனைன்னு நினைக்கப் போறாங்க, வாங்க போகலாம்,” என்று தவமலர் கூறியதும், அனைவரும் மண்டபத்தை நோக்கிச் சென்றனர்.

அவர்கள் சென்ற நேரம் புரோகிதர் தாலியை தொட்டு ஆசிர்வதிக்க கொடுத்தனுப்பியிருந்தார். மூவரும் மணப்பந்தல் அருகே செல்லவும் அவர்களை பார்த்த கௌசல்யா ஜாடையிலேயே ஏதாவது பிரச்சனையா? என்று கேட்கவும், மூவரும் ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தனர். 

பின் தாலியை தொட்டு அனைவரும் ஆசிர்வாதம் செய்ததும் புரோகிதர் அதை தனசேகரின் கையில் கொடுத்து மந்திரங்களை உச்சரிக்க, அவன் அதை கௌசல்யாவின் கழுத்தில் அணிவித்து அவளை மனைவியாக்கிக் கொண்டான்.

அதற்கு பின் வந்த சடங்குகள் முடிந்து ஓரளவுக்கு வந்திருந்தவர்களெல்லாம் கிளம்பியிருக்க, மணமக்களின் அருகே வந்த புனர்வி, “மேம் இங்க இருந்து நேரா உங்க வீட்டுக்கு தான் போறீங்களா மேம்,” என்றுக் கேட்க,

“இல்லை புவி, தனா வீட்டுக்கு போய் கொஞ்சம் சடங்குகளெல்லாம் செய்யணுமாம், அதை முடிச்சிட்டு சாயந்தரம் தான் எங்க வீட்டுக்கு போகணும்,” என்று அவள் பதில் கூறினாள்.

“சரி மேம், எல்லாம் நல்லப்படியா நடக்கும் கவலைப்படாதீங்க, அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் மேம், உங்க கல்யாணத்தில் உங்க சார்பா வாழ்த்த எங்களை தவிர யாருமில்லைன்னு சொன்னீங்கல்ல, அதுக்காக நான் ஒரு ஏற்பாடு செய்திருக்கேன். அதுக்கு நீங்களும் தனா சாரும் வரணும், கண்டிப்பா அதைப் பார்த்து நீங்க நிறைவா உணருவீங்க,” என்று சொல்ல,

“அப்படியா? அப்போ கண்டிப்பா வரோம், நான் தனாக்கிட்ட சொல்றேன்.” என்றவள், தனசேகரிடம் விஷயத்தை கூற, அவன் பெற்றோரோடு சேர்ந்து தான் வீட்டுக்கு செல்ல வேண்டுமென்பதால், நால்வரும் புனர்வி சொல்லும் இடத்திற்கு சென்றுவிட்டு பிறகு வீட்டுக்கு போகலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

புனர்வியை சார்ந்தவர்களுக்கு அவள் எங்கே அழைத்து செல்ல போகிறாள்? என்று தெரிந்ததால், அவர்களும் வீட்டுக்கு போகாமல் அவளோடு செல்ல தயாராக இருந்தனர். நவிரன், யோகமித்ரனுக்கு விஷயம் தெரியாது என்றாலும் இருவரும் அவர்களோடு செல்ல முடிவெடுத்தனர்.

இதில் தனசேகரின் காரில் அவனும் கௌசல்யாவும் மற்றும் அவன் பெற்றோரும் செல்ல திட்டமிட, மற்றவர்களில் மயூரனும் யோகமித்ரனும் மட்டுமே கார் எடுத்து வந்திருக்க, செல்லதுரை வாடகை காரில் தான் சௌந்தரியை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். காலையில் கௌசல்யாவோடு மூன்று தோழிகளும் தனசேகர் ஏற்பாடு செய்திருந்த வாடகை காரில் வந்திருக்க, இப்போது அனைவரும் ஒரே இடத்திற்கு பயணம் செய்வதால், எப்படி செல்வது என்ற குழப்பம் வர,

“அப்பா, அம்மா, சாம்பவி அத்தையை உங்க கார்ல அழைச்சிட்டு போங்க, நாங்க கால் டாக்சி புக் செஞ்சு வரோம், மயூ அத்தான்.” என்று தவமலர் மயூரனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“என்னோட கார்ல நான் தனியா தானே போறேன், நீங்கல்லாம் என்னோட வாங்க,” என்று யோகமித்ரன் அவர்களை அழைக்க,

“எதுக்கு உங்களுக்கு கஷ்டம்? நாங்க கால் டாக்ஸில வரோம்,” என்று தவமலர் மறுத்தாள்.

“ஒரே இடத்துக்கு போகப் போறோம், இதில் என்னோட கார்ல இடம் இருக்கும்போது எதுக்கு வீண் செலவு.” என்றவன்,

“அங்கிள் நீங்க சொல்லுங்க, நான் சொல்றது சரி தானே, நீங்க என்னோட கார்ல வரணும் அங்கிள்.” என்று செல்லதுரையிடம் அனுமதி கேட்டான்.

அவருக்குமே என்ன சொல்வதென்று தெரியவில்லை, திருமணம் நடைப்பெற்றுக் கொண்டு இருந்த சமயத்தில் ராகமயாவிடம் நின்று பேசிக் கொண்டிருந்தவன், பின் மணப்பந்தல் அருகே செல்வதற்கு முன், செல்லத்துரை மற்றும் சௌந்தரியின் அருகே வந்து நின்று,

“எப்படியிருக்கீங்க அங்கிள்? நல்லா இருக்கீங்களா ஆன்ட்டி?” என்று இருவரையும் பார்த்து நலம் விசாரித்தான்.

தவமலர் பெற்றோர்களிடம் எதையும் மறைப்பதில்லை, யோகமித்ரனை சந்தித்த அன்றே வீட்டில் அவன் மன்னிப்பு கேட்ட விஷயத்தையும், அவன் பெற்றோர்கள் செய்த குளறுபடிகளையும் சொல்லியிருந்தாள். அதேபோல் கௌசல்யாவின் திருமணம் நடைபெற அவன் தான் முக்கிய காரணம் என்பதையும் சொல்லி, “யோகன் நல்ல ஆள் தான் இல்லப்பா, நான் கூட முதலில் பார்த்தப்போ, அவங்க அப்பா, அம்மா போல நினைச்சேன் ப்பா.” என்று மனதில் உள்ளதை மறைக்காமல் கூறியிருந்தாள்.

யோகமித்ரனை குறித்து மகள் மனதில் சலனம் உண்டாகியிருக்குமோ என்று கூட செல்லதுரைக்கு சிறியதாக மனதில் சந்தேகம் உருவாகியிருந்தது. இந்த திருமணத்திற்கு பிறகு மகள் அவனை சந்திக்காமல் இருப்பது நல்லது என்றுக் கூட அவர் நினைத்திருந்தார். அதனால் இப்போது வந்து நலம் விசாரிக்கும் அவனிடம் பேசலாமா? என்று மனம் யோசித்தாலும், “ம்ம் நல்லா இருக்கேன் தம்பி,” என்று தானாகவே அவர் வாய் பதிலுரைத்தது.

“என்ன ஆன்ட்டி பேச மாட்றீங்க? என் மேல கோபமா?” என்று சௌந்தரியை பார்த்து அவன் கேட்க, அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை, 

மகள் கூறிய விஷயத்தை வைத்து, “பையன் நல்லவனா தான் இருக்கான். இந்த சம்பந்தம் கூடி வந்திருக்க கூடாதா? என்று தான் அவர் மனம் நினைத்தது.

இதில் இப்போது சிறிது நேரத்திற்கு முன் அவன் ராகமயாவிடம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த போது கூட, என்னோட மகளை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டானே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

அவர் அமைதியாக இருக்க, ” அய்யோ முடிஞ்சு போனதை எதுக்கு தம்பி பேசிக்கிட்டு, மனசுல கொஞ்சம் வருத்தம் இருந்தது உண்மை தான், ஆனா நீங்க மன்னிப்பு கேட்ட விஷயத்தை தவமலர் சொன்னதும், அது கூட மறைஞ்சிடுச்சு தம்பி, இப்போ உங்க சித்தப்பா, சித்தி ஸ்தானத்தில் இருந்து நீங்க தான் உங்க தங்கச்சிக்கு கல்யாணம் செய்றீங்கன்னு தெரிஞ்சப்போ உங்க மேல மதிப்பு தான் உண்டாகுது.” என்று மனதில் நினைத்திருந்ததை செல்லதுரை வெளிப்படையாக கூறினார்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை நவிரனோடு பேசிக் கொண்டிருந்த தவமலரும் கவனித்தாள். உண்மையில் அதனால் தான் நவிரன் அடிக்கடி புனர்வியை பார்த்துக் கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை.

இப்போது காரில் வரச் சொல்லி யோகமித்ரன் கேட்கவும், அவர் பதில் சொல்ல தடுமாற, அவர்களுக்குள்ளான விஷயங்கள் எதுவும் தெரியாத நவிரனோ, “ம்ம் கால் டாக்ஸி புக் செஞ்சு அது வரதுக்குள்ள டைம் ஆயிடும், இவர் சொல்றது நல்ல ஐடியா தானே அங்கிள்.” என்று  கூறினான்.

இதற்கு மேல் மறுத்தால் அது சங்கடத்தை உண்டாக்கும் என்பதை புரிந்ததால் செல்லதுரை சரியென்று தலையாட்ட,

“அப்போ நீங்க, அம்மா, சாம்பவி அத்தை 3 பேரும் யோகன் கார்ல வாங்கப்பா, நாங்க மயூ அத்தான் கார்ல வரோம்,” என்று யோசனை கூறிய தவமலர், மயூரனின் காரில் தோழிகளோடு பின் இருக்கையில் அமர்ந்தாள். அவள் தன் காரில் வர விரும்பவில்லை என்பதை அறிந்த யோகமித்ரனுக்கு அது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு பெரியவர்களை காரில் ஏற்றினான்.

நவிரன் அருகில் அமர மயூரன் தன் காரை எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்ட மற்ற இரு கார்களும் அதன் பின்னால் சென்றது.

வர்கள் அனைவரும் சென்றது ஒரு இல்லத்திற்கு, அது ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கியிருக்கும் இல்லம், இரண்டு மூன்று பேரோடு சேர்ந்து சாம்பவியும் அந்த குழந்தைகளை பராமரிக்கிறார். அவர்களின் மருத்துவ செலவுக்கு அதிக பணம் செலவாகும் என்பதால், அதற்கான நிதி திரட்டும் முயற்சியில் தான் இவர்கள் தற்போது ஈடுபட்டு ஓரளவுக்கு அதில் வெற்றியும் அடைகின்றனர்.

கௌசல்யாவின் திருமணத்தை முன்னிட்டு ஒருவேளை உணவு வழங்கவே புனர்வி அவர்களை கூட்டிக் கொண்டு வந்தாள்.

இந்த விவரங்களை கௌசல்யாவிடமும் தனசேகரிடமும் கூறி அவர்களை உள்ளே அழைக்க, “ஒரு நிமிஷம்,” என்று கூறிய தனசேகர்,

“இங்க தான் அழைச்சிட்டு வரப் போறதா முன்னமே சொல்லியிருந்தா, நான் வந்திருக்கவே மாட்டேன். ஏதோ அனாதை இல்லம், முதியோர் இல்லம், ஆதரவில்லாதவங்க இல்லம்னு தேர்ந்தெடுத்து அவங்களுக்கு சாப்பாடு போட்ருந்தா பரவாயில்லை, அதைவிட்டுட்டு நம்ம கல்யாணம் ஆகியிருக்க இன்னைக்கு இந்த இடத்துக்கா வரணும்?” என்று அங்கிருந்த அனைவருக்கும் கேட்கும்படி அவன் சத்தமாக சொல்ல,

“அதானே, இங்க வந்தா மனசு நிறையுமா? இப்படிப்பட்ட ஒரு நோயோட இருக்க இந்த பிள்ளைங்களுக்கு என்னோட மகனும் மருமகளும் சாப்பாடு போடணுமா?” என்று அவனது அன்னையும் பேசினார்.

“இங்கப் பாருங்கம்மா, அவங்களை தொட்டா இந்த நோய் தொத்திக்காது, அதுவுமில்லாம பாவம் அம்மா, அப்பாவும், சில மருத்துவமனைகளும்  செய்ற அலட்சியத்தால பிறக்கும் போதே இந்த குழந்தைங்க இந்த பாதிப்போட பிறக்கிறாங்க, இதில் இவங்க தப்பு என்ன இருக்கு? இந்த ஹெச்ஐவி பாதிப்பை பற்றி கூட அவங்களுக்கு புரியாத வயசு, அந்த பாதிப்பு தனக்கு இருக்கு, அதனால என்ன ஆகும்னு கூட புரியாது. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஒரே ஆதரவு, வெறும் பணம் கொடுப்பது மட்டுமல்ல, 

அடிக்கடி இவங்களை வந்து பார்ப்பதும் பேசறதும் தான், உங்க கையால ஒருவேளை சாப்பாடு போட்டு சந்தோஷமா பேசினீங்கன்னா, அதுவே உங்களை நல்லப்படியா வச்சிக்கும்,” என்று சாம்பவி கூறினார்.

“இருக்கட்டும் ம்மா, அது தான் அந்த பிள்ளைகளோட சந்தோஷம்னா, நீங்கல்லாம் நிரந்தரமா கூடவே இருங்க, சந்தோஷமா பார்த்துக்கோங்க, யாரு வேண்டான்னு சொன்னது, எங்களை இருக்க சொல்றதில் உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? வேணும்னா பத்தாயிரமோ இருபதாயிரமோ கேட்டு வாங்கிக்கங்க, ஆனா நாங்க உள்ள வர மாட்டோம்.” என்று சொன்ன தனாவின் அன்னை,

“நல்ல ஃப்ரண்ட்ஸ் பிடிச்சு வச்சிருக்கம்மா நீ, அதிகப்பிரசிங்கிகளா இருக்குங்க, இந்த முகத்தை வச்சிக்கிட்டு மேடையில் வந்து நிற்காதன்னு சொன்னா, வேணும்னே திமிரா மேடையில் வந்து நிக்குது, இப்போ இப்படி ஒரு இடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கு, உனக்கு நல்ல ஃப்ரண்ட்ஸே கிடைக்கலையா?” என்று கௌசல்யாவை பார்த்து கூறினார்.

அவரது பேச்சு அங்கே மற்றவர்களுக்கு ஒருவிதமான சங்கடத்தை கொடுத்தது. 

“என்ன தனா, உங்க அம்மா இப்படி பேசறாங்க, அமைதியா இருக்கீங்க, அதான் சாம்பவி அம்மா தெளிவா சொல்றாங்களே, நம்ம வாழ்க்கை நல்லப்படியா தொடங்கணும்னு தான் இவங்க இந்த ஏற்பாட்டை செஞ்சுருக்காங்க, அதுக்காகவாவது உள்ள வாங்க,” என்று கௌசல்யா அவனை அழைக்க,

“அம்மா சரியா தான் பேசறாங்க, எனக்கும் நீ இவங்களோட ஃப்ரண்ட்ஷிப் வச்சிக்கிறது பிடிக்கல, ஏதோ காலேஜ்ல பார்த்த, பேசினன்னு சொன்னப்போ அது காலேஜோட முடிஞ்சிடும்னு பார்த்தேன். ஆனா நீ அவங்களை முக்கியமா கல்யாணத்துக்கு கூட்டிட்டு வர,

இங்கப்பாரு 3 பேருக்கும் பிரச்சனை இருக்கு, அதனால ஃப்ரண்டா இருந்து ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் தேடிக்கிறாங்க, ஆனா உனக்கு என்ன குறை? எதுக்கு இவங்க ஃப்ரண்ட்ஷிப் உனக்கு? கடவுள் புண்ணியத்தில் நாம அழகா, ஆரோக்கியமா இருக்கோம், நமக்கு இவங்க ஆதரவு எதுக்கு?” என்று அவன் கௌசல்யாவை பார்த்துக் கேட்க,

“ஹலோ, வயசு ஆக ஆக அழகு, ஆரோக்கியம் எல்லாம் அப்படியே இருக்கும்னு சொல்ல முடியாது. அதை புரிஞ்சுக்கிட்டு பேசுங்க,” என்று மயூரன் கோபப்பட,

“அது நடக்கும் போது பார்த்துக்கலாம்,” என்ற தனசேகர்,

“இங்கப்பாரு கௌசல்யா, உன்னோட அழகு தான், காதல்ங்கிற பேர்ல என்னை உன் பின்னாடி சுத்த வச்சுது, இப்போதும் நீ அழகா, ஆரோக்கியமா இருக்கணும், அதுதான் நம்ம கல்யாண வாழ்க்கைக்கு சந்தோஷத்தை கொடுக்கும்னு நினைக்கிறேன். நீ என்னோட பேச்சுக்கு மதிப்பு கொடுக்கிறதா இருந்தா, உள்ள போகாத, உடனே இங்கிருந்து கிளம்பு.” என்று கட்டளையிட,

கௌசல்யா என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற்றத்தோடு நிற்க, யோகமித்ரனுக்கு தனசேகரின் நடவடிக்கை கோபத்தை அளித்தாலும், இன்று தான் தன் தங்கைக்கு திருமணம் ஆகியிருக்கிறது என்ற ஒரே காரணத்தால், கோபத்தை கட்டுக்குள் வைத்தவன், கௌசல்யாவின் அருகில் வந்து,

“இப்போதைக்கு தனா தான் உனக்கு முக்கியம், உனக்காக தானே இந்த ஏற்பாட்டை புனர்வி செய்திருக்காங்க, நீ இங்க இல்லன்னாலும் கண்டிப்பா பிள்ளைங்க மனசு நிறையும் போது அது உனக்கு வாழ்த்தா மாறும், இப்போ நீ தனா கூட வீட்டுக்கு போ. உன் சார்பா நான் இங்க இருந்து எல்லாம் முடிஞ்சதும் வீட்டுக்கு வரேன்.” என்று கூற,

அவளோ புனர்வியின் முகம் பார்த்தாள். “யோகன் சொல்றது சரி தான் மேம், நீங்க வீட்டுக்கு போங்க, உங்க சார்பா நாங்க எல்லோரும் குழந்தைங்க கூட இருக்கோம்.” என்று புனர்வி கூற,

“ஆமாம் மேம் வீட்டுக்கு போங்க,” என்று ராகாவும் தவமலரும் கூறினர். கௌசல்யாவும் கண்ணீரோடு தலையாட்டிவிட்டு தன் கணவனோடு கிளம்பினாள்.

அவர்கள் சென்றதும், “நான் மேம்க்கிட்ட சொல்லிட்டு செஞ்சுருக்கணும், எல்லாம் என் தப்பு தான்,” என்று புனர்வி வருத்தத்தோடு சொல்ல,

“தனசேகர் இப்படி நடந்துப்பாருன்னு நம்ம யாருக்கும் தெரியாதில்லையா? தெரிஞ்சிருந்தா இப்படி அவரை கூட்டிட்டு வந்திருப்போமா?” என்று நவிரன் கூறினான்.

“எனக்கு காலையிலேயே அவரை பார்த்தப்போ கொஞ்சம் சந்தேகமா தான் இருந்தது, புவி பத்தி காலையிலேயே ஒருமாதிரி பேசினாங்க, அதை நாங்க கேட்டோம், ஆனா மேம்க்காகன்னு அமைதியா இருந்துட்டோம்,” என்று தவமலர் கூற,

“கௌசல்யா அந்த பையனை காதலிச்சு தானே கல்யாணம் செஞ்சுக்குச்சு, இப்படின்னு முதலிலேயே அவளுக்கு தெரியலையா? அப்பா, அம்மாவும் ஆதரவா இல்ல, இப்படி கல்யாணம் ஆன முதல் நாளே கடுமையா நடந்துக்கிட்டானே அந்த பையன்,” என்று சௌந்தரி வருத்தப்பட்டார்.

“கௌசல்யா தனாவை காலேஜ் படிக்கும் போதிலிருந்து காதலிக்கிறா, நானும் நாலஞ்சு தடவை பார்த்திருக்கேன். ஆனா இப்படி நடந்து ஒருமுறை கூட பார்த்ததில்ல, தெரிஞ்சிருந்தா கல்யாணத்துக்கு அவசரப்பட்ருக்க மாட்டேன்.” என்று யோகமித்ரன் வருத்தப்பட,

“இதில் ஒன்னும் பயப்பட தேவையில்லை தம்பி, தனசேகர் தன்னைப் பத்தியும் தன்னை சார்ந்தவங்களை பத்தியும் மட்டும் யோசிக்கிற ஆள், வெளிப்புற தோற்றத்துக்கு மதிப்பு கொடுப்பவன்,  மத்தவங்களுக்கு உதவும் குணம் இல்ல, அதிலும் இப்படியான வியாதின்னா அதில் தனக்கு ஏதாவது பிரச்சனை ஆகுமோன்னு பயப்பட்றான், மத்தப்படி மனைவி மேல அன்பா தான் இருப்பான், தேவையில்லாம பயப்பட வேண்டாம் ப்பா,” என்று சாம்பவி தான் யோகமித்ரனுக்கு ஆறுதல் கூறினார்.

“சரி லேட்டாகுது வாங்க, மணி பன்னிரெண்டு ஆகுது, குழந்தைங்களுக்கு பசிக்குமில்ல,” என்று ராகமயா சொல்லவும், அனைவரும் உள்ளே சென்றனர்.

மூன்று தோழிகளையும் பார்த்த பிள்ளைகள் அக்கா அக்கா என்று அவர்களை சுற்றி சுற்றி வந்தனர். சாம்பவி, மயூரன், செல்லதுரை, சௌந்தரி என்று அனைவரிடமும் தெரிந்தது போல் நன்றாக பேசியவர்கள், நவிரனையும் யோகமித்ரனையும் தெரியாதது போல் பார்த்தனர்.

“இவங்க யோகன் அங்கிள், இவங்க நவிரன் அங்கிள்.” என்று புனர்வி அவர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினாள். அவர்களும் ஒவ்வொருவராக இருவருக்கும் கை குலுக்கினர். அடுத்த சில மணி நேரங்கள் அந்த பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக கழிந்தது.

அனைவரும் குழந்தைகளிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பும் நேரம், யோகமித்ரன் ஒரு குறிப்பிட்ட தொகையை நிரப்பி அந்த காசோலையை சாம்பவியிடம் கொடுத்தவன்,

“கௌசல்யாக்காக தானே இந்த ஏற்பாடு, அதனால இந்த பணத்தை வச்சிக்கோங்க,” என்று கொடுத்தான்.

“அய்யோ யோகன், இதுக்கு நாங்க பணமெல்லாம் எதிர்பார்க்கல, மேமும் தனா சாரும் அவங்க கையால குழந்தைங்களுக்கு சாப்பாடு போட்டு, கொஞ்ச நேரம் கூட இருக்கணும்னு நினைச்சோம், அதனால பணமெல்லாம் வேண்டாம்.” என்று புனர்வி கூறினாள்.

“அதில்ல புவி, நான் பணம் கொடுக்கிறது தனா அவங்க அம்மா சொன்னது போல இல்ல, கௌசல்யாக்கு மனசு இங்கேயே தான் இருக்கும், கூட தான் இருக்க முடியல, அவ சார்பா இந்த பணத்தை குழந்தைங்க சிகிச்சைக்காக பயன்படுத்துக்கிட்டீங்கன்னா, அவளுக்கு திருப்தியா இருக்குமில்ல, எனக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யணும்னு தோனுது, அதான் இப்போதைக்கு என்னால முடிஞ்சது, இதுவரை இப்படி ஒரு இல்லம் இருப்பது எனக்கு தெரியாது, இனி நானும் இங்க அடிக்கடி வருவேன்.” என்று யோகமித்ரன் சொல்ல, தவமலர் அவனையே பார்த்தப்படி நின்றிருந்தாள்.

“சரி தம்பி கொடுங்க,” என்று அதை வாங்கிக் கொண்ட சாம்பவி,

“கண்டிப்பா இதை குழந்தைங்க சிகிச்சைக்கு உபயோகப்படுத்திப்போம்.” என்று கூறினார்.

“அம்மா மயூர் உங்களைப்பத்தி நிறைய சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா நேர்ல பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, எனக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யணும்னு இருக்கு, இப்போ எதுவும் கொண்டு வரல, இன்னொரு நாள் கண்டிப்பா செய்றேன் ம்மா, யோகன் சொன்னது போல நானும் நேரம் கிடைக்கும்போது இங்க வருவேன்.” என்று நவிரன் கூறினான்.

அடுத்து அவர்கள் வீட்டிற்கு கிளம்ப தயாராக, சாம்பவி, புனர்வி, ராகமயா மூவரையும் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு மயூரனும் நவிரனும் அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு செல்ல வேண்டுமென்பதால், தவமலரை யோகமித்ரனின் காரில் ஏறச் சொல்ல,

“உனக்கு வரப் பிடிக்கலன்னா பரவாயில்லை மலர், நான் நீங்க வீட்டுக்கு போக ஒரு கால் டாக்ஸி புக் பண்றேன்,” என்று யோகமித்ரன் அலைபேசியை ஆராய, அவள் அமைதியாக காரில் ஏறி அமர்ந்தாள். அவள் அமர்ந்ததை பார்த்து அவளின் பெற்றோரும் காரில் ஏறி அமர, அவன் மகிழ்ச்சியோடு காரில் ஏறி அமர்ந்து அதை ஓட்டினான்.

ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றபின், யோகனின் கார் வேறு திசையில் தவமலரின் வீட்டை நோக்கிச் செல்ல, மயூரனின் கார் வேறு திசையில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென அவர்கள் வாகனத்திற்கு முன்பு இரண்டு வாகனம் தள்ளி, ஒரு கார் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்தவர்கள், ரத்த வெள்ளத்தில் விழ,

காரிலிரிந்து மயூரன் அவசரமாக இறங்கி அவர்களுக்கு உதவி செய்யப் போக, இரண்டுப் பக்கமும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த சாம்பவியும் ராகமயாவும் கூட இறங்கி வேகமாக அங்குச் சென்றனர். முகத்தை மூடாததால் கொஞ்சம் தயங்கிய புனர்வியும் பின் இறங்கி வெளியில் சென்று பார்க்க போக, நவிரனும் இறங்கினான்.

அவன் இறங்கியதை பார்த்தவள், “நீங்க ஏன் இப்போ இறங்குறீங்க? உங்களுக்கு தான் இப்படி ஆக்ஸிடெண்ட்ல்லாம் பார்க்க முடியாதே, ரத்தத்தை பார்த்தா உங்களுக்கு அலர்ஜியில்ல, அதனால கார்லயே இருங்க,” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல,

அவனை நன்கு அறிந்தவள் போல் சொல்லிவிட்டு செல்பவளை அவன் அதிர்ச்சியும் வியப்புமாய் பார்த்தப்படி நின்றிருந்தான்.

ஊஞ்சலாடும்..