9 – ஞாபகம் முழுவதும் நீயே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்- 9
அடுத்து வந்த ஒரு மாதத்தில் வினய் சில ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான்.
அவனுக்கு மனைவி, தந்தையின் பேச்சு காதிலேயே விழவில்லை. தன் முடிவில் உறுதியாக இருந்தான்.
சிறு வயதில் இருந்தே கேட்டதெல்லாம் கிடைத்து வந்ததின் பலன் அவன் மூளையை யாரின் பேச்சையும் கேட்காத அளவிற்கு மாற்றி வைத்திருந்தது.
ஒற்றை மகன் என்ற செல்லத்தில் அவன் ஆசைப்பட்டதெல்லாம் செய்து கொடுத்தார் ரங்கநாதன்.
அம்பிகாவும் சிறிது கண்டிப்புடன் இருந்தாலும் மகன் கெஞ்சி வேண்டுவதை மறுப்பு சொன்னதில்லை.
‘இல்லை’ என்ற சொல் இல்லாமல் வளர்ந்தவனுக்கு இப்போது ஒன்றுக்கு இரண்டு பேராக அவனுக்குச் சொன்ன மறுப்பும், தந்தை தன்னைத் தடுத்து நிறுத்தவே செய்து வைத்த திருமணமும், தன்னுடன் ஒரே உயிராய் ஒரு மாதம் வாழ்ந்த மனைவி தன் பேச்சிற்குச் செவி சாய்க்காததும், நான் நினைத்ததை அடைந்தே தீர்வேன் என்ற அவனின் உறுதியும், தன் வாழ்க்கை இனி வெளிநாட்டில் தான் என்ற கண்மூடித்தனமான கொள்கையும், நான் இப்படித் தான் என் சொல்லுக்குச் செவி சாய்க்காத யாரும் எனக்குத் தேவை இல்லை என்ற முடிவை சர்வ சாதாரணமாக எடுக்க வைத்தது.
தன்னிடம் கோபம் கொண்டு கத்தினாலும் பரவாயில்லை மகனை விட்டுவிடவே கூடாது என்று ரங்கநாதனும் அவனுக்கு மேல் உறுதியாக இருந்து அவனின் தந்தை நான் என்பதை நிரூபித்தார்.
தந்தை, மகனுக்கு இடையே அல்லாடி போனது பவ்யா தான். அதோடு கணவனுக்குத் தான் சலைத்தவள் இல்லை என்பது போல் வெளிநாடு வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாள்.
இரணமாகி போயிருந்த பவ்யாவின் மனமும், வெளிநாட்டு வாழ்க்கையால் அவள் அடைந்த இழப்புகளும், அவளை வேறு சிந்திக்க விட வில்லை. கணவனை எப்படியும் தடுத்து நிறுத்தியே தீருவேன் என்பது போல வினய்யிடம் பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தாள்.
“இங்க பாருங்க வினய். நிஜமா நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி உங்க இந்த முடிவு எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா கட்டாயம் உன்கிட்ட அப்பயே இதைப் பற்றிப் பேசியிருப்பேன். இப்பயும் ஒன்னும் கெட்டு போகலை. ப்ளீஸ் வினு… இங்கேயே இருப்போம். நான் ஏன் வேணாம்னு சொல்றேன்னு என் காரணத்தையாவது கேளுங்க. அதை விட்டு எதையும் காதில் வாங்காமல் இருந்தால் எப்படி?” என்று கெஞ்சலாகக் கேட்டாள்.
ஆனால் அனைத்தும் செவிடன் காதில் ஓதிய சங்கு தான் என்று நிரூபித்தது வினய்யின் செய்கை.
தன்னவளாய் வந்தவள் தன் பேச்சை கேட்காத கோபம் வந்து அவனை ஆட்டிப் படைக்க… அவளிடம் நின்று பேசுவதைக் கூடத் தவிர்த்தான்.
அவன் அப்படி விலகி சென்றதில் வேதனையடைந்த பவ்யா மாமனாரிடம் போய் நின்றாள்.
“ஏன் மாமா இப்படிச் செய்தீங்க? அவர் கூடப் பாரின் போற பொண்ணா பார்த்து முடிச்சு வச்சுருக்கலாம்ல? ஏன் இப்படி எங்க இரண்டு பேர் வாழ்க்கையையும் பாழாக்கி வச்சுருக்கிங்க?” என்று கேட்டவள் “வினு இப்ப என் உயிர் தான். ஆனா என்னால இப்ப அவர் வாழ்க்கையும் இல்லை பாழாகி போயிருச்சு. வினு எனக்கு வேணும் மாமா… இங்கேயே வேணும். அவரை என்னாலே இனி யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது. அவரை எப்படியாவது இங்கேயே இருக்க வைங்க. வெளிநாட்டு வாழ்க்கையில் அவர் என் கையை விட்டு போனா என்னால தாங்கவே முடியாது” என்றாள்.
ரங்கநாதனுக்கு மருமகளின் வருத்தம் கஷ்டமாக இருந்தது. அவளிடம் சமாதானமாகப் பேசியவர் மகனிடம் பேச போனார்.
“இங்கே பாரு வினய்! பவ்யாக்காகனாலும் உன் முடிவை மாத்திக்கக் கூடாதா? அவள் வெளிநாட்டு வாழ்க்கையால பாதிக்கப்பட்டவடா. இப்ப உன்னையும் இழக்க கூடாதுன்னு நினைக்கிறா… இங்கேயே இருந்துறேன்” என்று கேட்டார்.
அவரை அலட்சியமாகப் பார்த்தவன் “ஓ…! இது என்னை இங்க இருக்க வைக்க அடுத்தப் பிளானா? ஆனா நான் இனி நீங்க என்ன சொன்னாலும் நம்புறதா இல்லை. அவளும் உங்களுக்கு ஜால்ரா தானே? உங்களோட சேர்ந்து அவளும் நாடகம் போட கத்துகிட்டா போல” என்று சொல்லியவன் அவர் பேச்சை நம்பாமல் போனான்.
எதுவும் புரிந்து கொள்ளாமல் கடிவாளம் கட்டிய குதிரை போல அவன் இருப்பது கடுப்பை உண்டாக்க… “இப்படிச் சொன்னதையே சொல்லிட்டு இருந்தா நீ பிசினஸ் செய்ய எந்த உதவியும் செய்ய மாட்டேன். அதோட வேற எந்தவிதமான ஹெல்பும் என் சைடில் இருந்து உனக்குக் கிடைக்காது. அதையும் ஞாபகத்தில் வச்சுகிட்டு எதுவும் முடிவு பண்ணு” என்றவர் கோபமாக அங்கிருந்து நகர்ந்தார்.
அவரின் பேச்சில் சிறிது நேரம் அதிர்ந்து நின்றவன் பின்பு அலட்சியமாகத் தோளை குலுக்கிவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிட்டவன் போல அடுத்த வேலைகள் செய்தான்.
கணவனின் மறுப்பு பவ்யாவின் மனதை பாதிக்க அது இரவெல்லாம் கனவாக அவளைத் துரத்தியது.
அன்று இரவு “அப்பா வேண்டாம்… வேண்டாம்…!” என்று முகம் பயத்தில் வெளுறி இருக்க, தாங்க முடியாத வேதனையுடன் அனத்த ஆரம்பித்தாள். அவளின் புலம்பல் காதில் விழாத அளவு வினய் அயர்ந்த உறக்கத்தில் இருந்தான்.
நேரம் செல்லச் செல்ல பவ்யாவின் புலம்பல்கள் அதிகம் ஆனது. ஒரு கட்டத்தில் “அம்மாமா…மா…!” என்ற படி அலறிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். அவளின் சத்தத்தில் வினய்யும் பதறி எழுந்தான்.
ஒரே அறையில் இருந்தாலும் வினய் அவளிடம் சரியாகப் பேசுவது இல்லை என்பதால் அந்தப் பெரிய படுக்கையில் ஆளுக்கு ஒரு மூலையில் இருவரும் படுத்திருந்தனர்.
பவ்யா பயந்து அலறி படுக்கையின் ஓரத்தில் அமர்ந்திருக்க, அவளின் அந்த நிலையைக் கண்டும் அமைதியாக இருக்க முடியாமல் அருகில் நகர்ந்து சென்ற வினய் “என்னாச்சுப் பவி? எதுவும் கனவா?” என்று கேட்டான்.
இன்னும் கனவில் வந்த காட்சிகளில் இருந்து வெளியே வராத பவ்யா கணவனின் கேள்வியில் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.
பயந்து நடுங்கும் குழந்தையென மனைவி விழிப்பதை பார்த்து இன்னும் அவளின் அருகில் அமர்ந்தவன் அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு “ஒன்னும் இல்லை. கனவு தானே? ஒன்னும் செய்யாது” என்று சமாதானம் செய்தான்.
சிறிது நாட்களுக்குப் பிறகு கிடைத்த கணவனின் இதமான பேச்சும், அணைப்பும் பவ்யாவை பலவீனமாக்க, அவன் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
அவளின் அழுகை புரியாமல் இதமாக அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தான்.
அவனின் ஆறுதலில் கூட அவளின் வேதனை அடங்க மறுக்க, “வேண்டாம் வினு. வெளிநாடு நமக்கு வேண்டாம். இத்தனை நாளும் நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்ச அன்பு இனியும் மாறவே கூடாது. அதுக்கு நாம அங்க போகக் கூடாது வினு. இங்கேயே இருப்போம் வினு. சரின்னு சொல்லுங்க வினு” என்று தன் போக்கில் அவனின் தோள் வளைவில் இருந்தபடியே கெஞ்ச ஆரம்பித்தாள்.
அவள் பேசுவதற்கு முன் வரை மனைவியைத் தட்டி கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டிருந்த வினய்யின் கைகள் அசைவற்று அப்படியே நின்றது. அவனின் முகம் இறுகி போனது.
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே தன் தோளில் இருந்து அவளை விளக்கி தன்னை நேராகப் பார்க்க வைத்த வினய் “சோ…? என்னை இருக்க வைக்க வித விதமான பிளான்ல இது உன்னோட பங்கோ? கனவு, அழுகை எல்லாம் நடிப்பு. அப்படித் தானே…?” என்று கடுமையாகக் கேட்டான்.
அவனின் குற்றச்சாட்டில் அதிர்ந்து விழித்தவள் “ஐயோ…! இல்லை வினு. என் பாதிப்போட பலன் தான் கனவு. ரொம்ப நாளா வராம இருந்த கனவு இப்ப எப்படி வந்துச்சுன்னு தெரியலை. எல்லாமே உண்மைதான் வினு” என்று மேலும் விளக்கம் சொல்ல போனவளை கை காட்டி நிறுத்தியவன்,
“சும்மா ஏதாவது காரணம் சொல்லாதே! இதுக்கு முன்ன என் அப்பா கம்பெனில தானே வேலை பார்த்த? அதான் அவர் உன் கூடச் சேர்ந்து பிளான் பண்ணி எல்லாம் பண்ணிருக்கார். இப்போ உன் டர்ன் போல. நீ ஒரு கதை, நாடகம் போடுற. வெளிநாடு போறது என்ன அவ்வளவு பெரிய கொலை பாதகமான விஷயமா என்ன? ஏன் மாமனாரும், மருமகளும் இப்படி என்னை நம்ப வச்சு ஏமாத்துறீங்க” என்று சத்தமாகக் கத்தினான்.
அவனின் கத்தலில் பயந்து போனவள் “இல்லை வினு. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்” என்று சொன்னவளை மேலும் பேச விடாமல் “போதும்… எதுவும் நான் கேட்க தயாரில்லை. உன் மேல எனக்கு நிறைய அன்பு இருக்கு. அதை உன் நடிப்பு மூலமா நீயே அழிச்சுறாதே. நான் இங்கே இருந்தா தானே உன் நடிப்பை சகிக்க வேண்டி இருக்கும்” என்றவன் விருட்டென எழுந்துப் பக்கத்து அறைக்குச் சென்று கதவைப் பட்டென அடித்துச் சாற்றிக் கொண்டான்.
அவனின் செயலில் விக்கித்துப் போனாள் பவ்யா. அறைக்குள் சென்ற வினய் அங்கிருந்த கட்டிலில் வேதனையுடன் கண்களை மூடி கொண்டான். “ஏன் பவி நீயும் என் பேச்சை கேட்காம எங்க அப்பா கூடச் சேர்ந்துகிட்டு இப்படிப் பண்ற?” என்று முணுமுணுத்தான்.
அவளை விட்டு பிரிந்து வேறு அறைக்கு வந்தது அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. ஒருமாதம் அனுபவித்த தாம்பத்தியம் வேறு பவ்யாவை நாட விரும்பினாலும், தன் சொல் கேட்காதவளிடம் இனி தான் எதுவும் பெறுவதா என்ற வீம்பு வந்து அவன் மனதை அடக்க, அவள் பக்கம் செல்ல விரும்பிய மனதை தன் வேலையில் செலுத்தினான்.
அதன் விளைவாக அவனின் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தது. அதுவும் இங்கே செயல்படும் கம்பெனி ஒன்றின் சார்பாக அவர்கள் கிளை அலுவலகமான அமெரிக்கக் கம்பெனியில் மேனேஜ்மெண்ட் பிரிவில் வேலை உறுதியாக, அவர்களே விசாவிற்கு ஏற்பாடு செய்வதாகவும் சொல்லி விட, சந்தோசத்தின் உச்சியில் மிதந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் அந்தச் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளக் கூட ஆள் இல்லாமல் போனது அவனுக்குக் கஷப்பாக இருந்தது.
அதுவும் தந்தைக்குத் தெரிந்தால் இன்னும் தான் குதிப்பார் என்று அமைதியானவன் விசா வந்து கிளம்பும் நாள் வரை அந்த வீட்டில் யாரோ ஒருவன் போல இருந்தான்.
மூவரும் ஆளுக்கு ஒரு மூலையில் இருக்கப் பணம் இருந்தும் அங்கே நிம்மதி என்பது இல்லாமல் வீடே வெறிச்சோடி இருந்தது.
அன்றைக்குப் பிறகு அவனை அப்படியே விட்டுவிட மனம் இல்லாமல் மீண்டும் ஒரு நாள் “வினு…!” என்று அழைத்தபடி அருகில் வந்த மனைவியை யாரோ போல் பார்த்தவன் ‘என்ன?’ என்பது போலப் பார்வையால் கேட்டான்.
அவன் பேசாமல் இருந்தது பவ்யாவிற்கு மனதை அறுத்தது. அதோடு சொந்தம் கூட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு அப்படி என்ன வெளிநாட்டு மோகம்? என்ற கோபமும் எழுந்தது.
ஆனாலும் தான் பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் பேச ஆரம்பித்தாள் “நீங்க என்கிட்டே சரியா பேசி ஒரு மாசம் ஆகப் போகுது. ஏன் இப்படிப் பிடிவாதமா இருக்கீங்க வினு? உங்க பிடிவாதத்தில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து தான் பாருங்களேன்” என்றாள்.
“ஏன்…? அதையே நானும் திருப்பிக் கேட்கலாம் தானே பவி? நீ என் கூட வர்றேன்னு சொன்னா நமக்குள்ள எதுக்குப் பிரச்சனை வரப் போகுது சொல்லு? இப்ப கூட வர்றியா சொல்லு… நாம போகலாம். எனக்கு இந்த ஊர்ல இருக்குற ஒவ்வொரு நொடியும் இந்தப் புழுதியும், சூடும், குப்பையும் எரிச்சலா இருக்கு. எப்படா அமெரிக்கா போவோம்னு இருக்கேன்” என்றவன் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்து “நான் சொன்னபடி போகத்தான் போறேன். ஏன் பிசினஸ் பண்ணத்தான் யூஎஸ் போக முடியுமா என்ன? நான் இப்ப எனக்குன்னு ஒரு வேலை வாங்கிட்டேன்” என்று சொல்லி நிறுத்தியவன் “யூஎஸ்ல” என்று அழுத்தி சொன்னான் வினய்.
அவன் சொன்னதைக் கேட்டு “என்… என்ன?” என்று தலை கிறுகிறுத்துப் போனவள் சில நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டு “இல்ல…! நீங்க போகக் கூடாது! போகவே கூடாது…” என்று கத்தினாள்.
அவள் அதிர்வை கொஞ்சமும் லட்சியப் படுத்தாமல் “சரி தான்… சும்மா கத்தாதே! நான் போகத் தான் போறேன். அதுவும் இன்னும் இரண்டு நாளில். உனக்கு விருப்பம்னா என் கூடத் தாராளமா வரலாம். என் கம்பெனியில் வொய்ப்பைக் கூட்டிட்டுப் போகவும் ஆப்சன் உண்டு. என்ன சொல்ற? போவோமா?” என்று கேட்டான்.
அவன் பேச்சில் பவ்யா கண்ணில் கண்ணீர் நிற்காமல் வழிய செய்வதறியாது நின்றிருந்தாள்.
பின்பு அவன் அருகில் வந்தவள் அவன் முகத்தைக் கைகளில் ஏந்தி “வினு!” என்று உதடுகள் துடிக்க அழைத்தவள் அவன் முகத்தோடு தன் முகத்தை உரசிவிட்டு அவனை விட்டு விலகி நின்றவள் “ஏன்? ஏன் இப்படிப் பண்றீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவனின் மார்பில் மாறி மாறி அடிக்க ஆரம்பித்தாள்.
மனதின் வலி அவளைக் கட்டுப்பாடற்று போக வைக்க “வேணாம்… வேணாம்…! போக வேணாம்…!” என்று புலம்பி அழுதவள் அதற்கு மேல் தாங்க முடியாமல் அவன் மார்பிலேயே சாய்ந்து அழுதாள்.
அவள் செய்கைகள் வினய்க்குப் புரியவே இல்லை. அழுகிறாள்… அடிக்கிறாள்… கத்துகிறாள்…. வெளிநாட்டிற்கு போவது என்ன அவ்வளவு கொடூரமான காரியமா என்ன? என்னைத் தடுக்க இவள் எப்படி வேண்டுமானாலும் நடிப்பாளா? என்று அவனுக்குக் கோபம் தான் வந்தது.
அதனால் தன் முன் மடிந்து அமர்ந்திருந்த மனைவியைக் கண்டு கொள்ளாமல் தன் அறைக்குச் சென்றவன் சிறிது நேரம் கழித்து ஒரு பெரிய சூட்கேசுடன் வெளியே வந்தான். அந்த நேரத்தில் ரங்கநாதன் வீட்டில் இல்லை என்பதால் இன்னும் ஒருவருக்கு விளக்கம் சொல்லிவிட்டு செல்ல தேவையில்லை என்று அலட்சியமாக எண்ணியவன் பவ்யாவின் எதிரே வந்து நின்றான்.
பெட்டியுடன் நிற்கும் கணவனை அவள் புரியாமல் பார்க்க “நான் கிளம்புறேன் பவ்யா! நாளை மறுநாள் எனக்கு ப்ளைட். அதுவரை இந்த வீட்டில் இருப்போம்னு தான் இருந்தேன். ஆனா நீ போடுற நாடகத்தை எல்லாம் பார்க்க பார்க்க எரிச்சலா வருது. இன்னும் எங்க அப்பான்னு ஒருத்தர் வந்து ஒன்னை மாதிரியே ஒரு நாடகம் போடுவார். அதையும் பார்க்க எனக்குத் தெம்பில்லை.
அதான் இப்பயே கிளம்புறேன். ஒரு ஓட்டலில் தங்கிட்டு அங்கே இருந்தே நான் கிளம்பிருவேன். ஒருவேளை என்னைக்காவது என்கிட்ட வரணும்னு தோணினா போன் போடு. நான் அங்கே போய்ட்டு நம்பர் அனுப்புறேன்” என்றவன் அவள் பதிலுக்குப் பேச வந்ததைக் கூடக் கண்டு கொள்ளாமல் வாசலை நோக்கி சென்றே விட்டான்.
சற்றுமுன் என்ன நடந்தது? என்று கூடப் புரிந்து கொள்ள முடியாமல் மரமாய் நின்றாள் பவ்யா.
அவளின் கண்ணில் இருந்து வந்த கண்ணீர் ‘நான் தான் இனி உனக்குச் சொந்தம்’ என்பது போலக் கண்ணைத் தாண்டி வெளியே வந்து அவளைத் தழுவ ஆரம்பித்தது.
அந்த நேரம் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி இல்லாததால் தனிமை சூழ்ந்த அந்த வீட்டில் கண்ணீரே துணையாகக் கொண்டு நின்றாள்.
மனம் முழுவதும் ரணமாக வலித்தது. அதையும் விடத் தன் பேச்சை ஆரம்பம் முதல் நாடகம் என்று சொல்லி தன்னைத் தட்டிக் கழித்த கணவனின் செய்கை அவளின் மனதை இறுக வைத்தது.
மனம் இறுக கண்ணீருடன் அமர்ந்திருந்தவளை பார்த்த ரங்கநாதன் பதறிப் போனார்.
அவர் வந்த காரின் சத்தம் கூடப் பவ்யாவின் கவனத்தைக் கலைக்கவில்லை.
பதறி விசாரித்த மாமனாருக்கு இறுக்கமாகவே நடந்ததைச் சொன்னாள்.
ரங்கநாதனுக்குக் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. மகன் மாறுவான் என்று காத்திருந்தால் வேலை தேடி செல்வான் என்று அவர் எதிர்ப்பார்க்கவே இல்லை.
ஏனெனில் அவனுக்கு வெளிநாட்டு வாழ்க்கையின் மீது எவ்வளவு பற்றோ அதே போலச் சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் பற்று இருந்தது. அதற்காகப் படிக்கும் காலத்திலேயே தந்தையிடம் அது பற்றி நிறைய யோசனை சொல்லியிருக்கிறான். அப்போது அவன் இந்த யோசனையை எல்லாம் இப்போது உள்ள கம்பெனியில் செயல் படுத்தினால் இன்னும் நாம வளரலாம் என்று கூட நினைத்திருக்கிறார்.
ஆனால் மனைவி, தந்தை, பிசினஸை விட வெளிநாட்டு வாழ்க்கை தான் முக்கியம் என வேலை தேடி அதில் சேர்வான் என்று நினைக்காததால் சிறிது அசால்ட்டாகவே இருந்து விட்டார்.
இப்போது விஷயம் அறிந்ததும் நான் அழைத்து வருகிறேன் என்று கோபமாக வெளியே கிளம்பப் போனவரை தடுத்து நிறுத்தினாள் பவ்யா.
“ஏன்மா என்னைத் தடுக்குற? இன்னும் நடுவில் ஒருநாள் இருக்கே? அதுக்குள்ள அவன் எங்க தங்கி இருக்கான்னு பார்த்து கூட்டிட்டு வர்றேன்” என்றார்.
“இல்ல மாமா வேண்டாம்! அவர் முடிவில் எவ்வளவு உறுதியா இருக்கார்ன்னு அவர் காட்டிட்டார். அவர் மனைவி நான் மட்டும் எப்படி இருப்பேன்? நானும் என் முடிவில் உறுதியா இருக்கேன். அவர் ஆசை படி போகட்டும் மாமா. அங்க போயே இருக்கட்டும்” என்றாள் அழுத்தமாக.
“என்னமா சொல்ற?” என்று திகைப்பாக அவர் கேட்க…
“ஆமாம் மாமா. போகட்டும் விடுங்க. வருவார்… அவரா திரும்ப வருவார். அவருக்கு வாழ்க்கையில் வெறுமைனா என்னனு தெரியலை. ஆனா அந்த வெறுமையை அனுபவிச்சவ நான். அந்த வெறுமையை அவரும் ஒருநாள் உணருவார். அப்ப என்னைத் தேடி வருவார். அதுவரை அவரை நீங்க வர வைக்க எதுவும் செய்ய வேண்டாம்” என்று உறுதியாகச் சொன்னவள் “நான் உங்களுக்குக் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று அமைதியாக உள்ளே சென்றாள்.
ரங்கநாதன் செய்வதறியாது திகைத்துப் போனவர் அடுத்து என்ன செய்ய என்று புரியாமல் சோஃபாவில் அமர்ந்தார்.
பவ்யா திரும்ப வரவும், “என்னம்மா இப்படி எல்லாம் பேசுற? அவனை எப்படியும் நீ இங்க இருக்க வச்சுருவேன்னு நினைச்சேனே” என்று அவர் புலம்பலாகச் சொல்ல …
தன் கண்ணில் வலியை காட்டிய பவ்யா “ஸாரி மாமா! என்னால நீங்க நினைச்சதை செய்ய முடியலையே. என்ன செய்ய?” என்று கேட்டவள் குரலில் வெறுமை இருக்க… அதைக் கவனித்தவர் அதற்கு மேல் மருமகளிடம் எதுவும் கேட்காமல் அமைதியாகி போனார்.
அவர் ஒன்று நினைக்க எல்லாம் தலைகீழாக நடந்ததில் மனதளவில் சோர்ந்து போனார்.
அறைக்கு வந்த பவ்யா படுக்கையில் விழுந்தாள். அது வினய்யின் அறை தான். ஆனால் கடந்த ஒரு மாதமாக அது அவள் அறை மட்டுமே. பவ்யாவின் மீது இருந்த கோபத்தில் வேறு அறையில் கணவன் தங்க போய்விட்டதால் அவள் மட்டும் இங்கே இருந்தாள். அன்றைக்கு அவன் பேசி விட்டு சென்ற பிறகு அறை மாற்றலுக்குச் சில முறை பேசிப் பார்த்தாள். ஆனால் பதிலுக்கு அவனிடம் இருந்து கிடைத்த அலட்சியத்தில் கணவனே ஆனாலும் அதற்கு மேல் அவனிடம் இறங்கி போகப் பிடிக்காமல் ஒதுங்கிக் கொண்டாள்.
ஆனால் பாரின் போகும் விஷயத்தில் அப்படி விட அவளால் முடியாமல் தான் அதைப் பற்றி அவனிடம் பேசிக் கொண்டே இருந்தாள். ஆனால் அதற்கு இன்று கணவன் முற்றுப்புள்ளி வைப்பான் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை.
வலி என்றால் வலி அப்படி ஒரு வலி வலித்தது. உடலும், மனமும் வலி மட்டுமே நிறைந்திருப்பதாகத் தோன்றியது. அதனைப் போக்க வேண்டியவனோ தன் கையை விட்டு போய்விட்டான். என் வாழ்க்கை வெறுமைக்கு மட்டும் சொந்தமா? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
அவள் வாழ்க்கையில் அவளுக்கு விழுந்த இரண்டாவது அடி. உயிரையே ஊடுருவும் வலியில் கண்ணீரும் வற்றிப் போனது போலக் கண்கள் காய்ந்து இருந்தது. அடுத்து என்ன செய்யப் போகின்றேன் நான்? என்று விடை தெரியாத கேள்வியுடன் படுத்திருந்தாள்.
மேலும் நான்கு நாட்கள் சென்றிருந்த நிலையில் தன் உடைமைகளை எடுத்து ஹாலில் வைத்திருந்தாள் பவ்யா.
அவளிடம் பேசி அலுத்துப் போனவராகச் செய்வதறியாது நின்றிருந்தார் ரங்கநாதன்.
வீட்டில் மாற்றி மாற்றி நடந்த விஷயங்களில் ஏற்கனவே சோர்ந்து போயிருந்தார். அந்த நிலையில் ஒரு நல்ல செய்தி கிடைத்தும் முழுதாக இன்புற முடியாமல் மருமகளும் பெட்டி படுக்கையுடன் கிளம்புவது அவருக்குத் துயரத்தைத் தந்திருந்தது. அவரின் நிலையில் தான் அங்கே பவ்யாவின் மாமா அமுதவனும், அத்தை கனகதாராவும் நின்றிருந்தார்கள்.
மைத்ரி, பவ்யாவின் கையைப் பிடித்த படி அவளின் அருகில் அமர்ந்திருந்தாள்.
இரண்டு நாட்கள் முன் பவ்யாவை பார்க்க வந்த அமுதவன் தம்பதிகளுக்கு இங்கே நடந்த பிரச்சனை தெரியவர, ரங்கநாதனை அன்றே கேள்வி கேட்டு குடைந்தெடுத்து விட்டார்கள்.
“அவளுக்குத் தாய் தகப்பன் ஸ்தானத்தில் நாங்க இருக்கோம். நீங்க எப்படி இப்படி ஒரு பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கலாம்? முன்னாடியே சொல்லிருந்தா உங்க வீட்டு சம்பந்தமே வேணாம்னு சொல்லிருப்போம். வெளியே நல்ல குடும்பம்னு உங்களைப் பற்றி எல்லாரும் சொன்னதால் தான் பொண்ணு கொடுத்தோம். உங்க வசதி, வாய்ப்புக்காக இல்லை. இப்ப எங்க பொண்ணு தனியா நிக்குதே. இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?” என்று அமுதவன் பவ்யாவின் சார்பில் நியாயம் கேட்க…
ரங்கநாதன் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் அமுதவன் மீண்டும் சத்தம் போட அவரைப் பவ்யாதான் பேசி சமாதானம் படுத்த வேண்டியதாய் இருந்தது.
அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று பேச்சுவரும் போதே அதற்கு முன் தான் ஒரு விஷயம் சொல்லப் போவதாகச் சொன்ன பவ்யா “இன்னைக்குக் காலையில் எழும் போது ஒரு மாதிரியா இருந்துச்சுன்னு நாள் பார்த்து செக் பண்ணினேன். அப்போதான் நான் இப்ப கன்சீவ்வா இருக்கேன்னு தெரிஞ்சது” என்று அவள் மெல்ல சொல்ல…
அங்கே இருப்பவர்களுக்கு என்ன மாதிரி பாவனைக் காட்டுவது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்த ரங்கநாதன் “ரொம்பச் சந்தோஷம்மா” என்று குரல் நெகிழ சொன்னவர் பின்பு ஏதோ யோசித்தபடி “நீ வேணும்னா வினய்கிட்ட போய்ருமா. நான் இங்கேயே இருக்கேன். எப்பவாவது அவன் மனம் மாறுச்சுனா இங்கே வாங்க. இல்லனா கூடப் பரவாயில்லை. ஆனா என்னால வர முடியாதுமா. நான் நீ கிளம்ப ஏற்பாடு பண்றேன்” என்றார்.
அவர் சொன்னதற்கு மறுப்பாகத் தலையசைத்த பவ்யா “இல்ல மாமா. அது நடக்காது. முன்ன விட இப்போ தான் என் உறுதி கூடி இருக்கு. என் பிள்ளை இந்த மண்ணுல தான் பிறந்து வளரணும். நான் இங்கே தான் இருக்கப் போறேன். நான் சொன்ன மாதிரி உங்க பிள்ளையே என்னை இல்ல எங்களைத் தேடி வருவார்” என்று நம்பிக்கையாகச் சொன்னவள் அடுத்து அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியையும் தந்தாள்.
“நான் அந்தப் பிளாட்ல போய் இருக்கப் போறேன் மாமா. அந்தப் பிளாட்ல தங்க நீங்க அனுமதி தரணும்” என்றாள்.
“என்னம்மா சொல்ற நீ?” என்று ரங்கநாதன் அதிர…
“பவ்யா என்ன பேசிட்டு இருக்க? ஒன்னு உன் புருஷன் கூடப் போய் இரு. இல்லனா இங்க இரு. உனக்கு இங்க இருக்கப் பிடிக்கலைனா நம்ம வீட்டுக்கு வா. அதை விட்டுட்டு நீ மட்டும் தனியா பிளாட்ல போய் என்ன செய்யப் போற?” என்று கோபமாகக் கேட்டார் கனகதாரா.
“இல்ல அத்தை! நான் முடிவு செய்துட்டேன். இங்க வெறும் ரங்கநாதன் மருமகள் என்ற அடையாளத்தோட மட்டும் நான் இருக்க விரும்பல. வினய் இங்க இல்லாதப்ப நான் மட்டும் இங்க இருந்து வசதியா வாழ்றதுல எனக்கு விருப்பம் இல்லை. அதுவும் இல்லாம இந்த வீட்டில் நான் சந்தோஷமா இருந்த நாட்களை விடக் கண்ணீர் விட்ட நாட்கள் தான் அதிகம். ஆனா அந்தப் பிளாட் அப்படி இல்லை. சின்னச் சின்னச் சந்தோஷமா எனக்கு அள்ளி கொடுத்த வீடு அது. வினய் வர்ற வரை நான் அங்க தான் இருக்கப் போறேன். நாங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருந்த நிகழ்வுகளை நினைச்சுகிட்டே அங்கே இருந்துருவேன். என்னை இத்தனை நாளா உங்க பொண்ணா பார்த்துக்கிட்டீங்க. இனியும் உங்களுக்கு நான் தொந்தரவு தர மாட்டேன்” என்றாள்.
அவளின் வார்த்தையில் முறைத்தவர் “உன்னைத் தொந்தரவுனு நாங்க சொன்னோமா? இப்படிப் பேசினா அடி தான் விழும்” என்று உரிமையாகக் கோபப்பட்டார்.
அவரின் உரிமையில் நெகிழ்ந்தவள் “இந்தப் பாசம் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் அத்தை” என்றாள்.
“உன் முடிவில் மாற்றமே இல்லையாமா?” என்று கேட்டார் ரங்கநாதன்.
அவரை அமைதியாகப் பார்த்தவள் “ஸாரி மாமா!” என்று மட்டும் சொல்ல…
“என்னம்மா இது? அவன் ஒருபக்கம் போய்ட்டான். நீ ஒரு பக்கம் போறேங்கிற. நான் ஒரு பக்கம் இருக்கப் போறேன். இருக்குற மூணு பேர் கூட ஆளுக்கு ஒரு தீவுல இருக்கப் போறோமா? இப்பதான் என் அம்பிகாவோட இழப்பு எனக்கு ரொம்பப் பெருசா தெரியுது. அவ மட்டும் இருந்திருந்தா இப்படிக் குடும்பம் துண்டாக விடுவாளா?” என்று மனைவியின் நினைவில் வருந்தி கண்கலங்க சொன்னார்.
அவரின் கலக்கம் அவளுக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால் தான் மட்டும் இங்கே இருந்து என்ன பண்ணமுடியும்? நான் தனியாக இங்கே வருந்திக் கொண்டு இருந்தால் அதைப் பார்த்து அவர் தானே மிக வருந்துவார் என்று நினைத்தவள் தனியாகச் சென்று விட்டாள்.
கர்ப்பிணி என்பதால் அவளைத் தனியே விடாமல் அவள் கூடவே இருக்கும் வகையில் ஒரு வேலையாளை துணைக்கு வைத்தார்.
வினய் சொல்லி சென்றது போலவே அவனின் நம்பரை மனைவிக்கு அனுப்பி வைத்தான்.
அனுப்பி மட்டுமே வைத்தான். தன் போனுக்கு வந்த அந்தத் தகவலை பார்த்த பவ்யா பார்க்க மட்டுமே செய்தாள். அவனுக்கு அழைக்கவில்லை. அவர்களுக்கு என்று ஒரு குழந்தை வரப் போவதை சந்தோஷமாகச் சொல்ல அவளுக்கு ஆசை அதிகமாக இருந்தது. ஆனால் அவனிடம் இனி தானாகப் பேசப் போவதில்லை என்ற முடிவில் இருந்ததால் சொல்லாமல் விட்டுவிட்டாள். தன்னை உதறி சென்றவனிடம் பிள்ளையைக் காட்டி வர வைப்பதா என்ற எண்ணமும் தலை தூக்க பேசுவதைத் தவிர்த்து விட்டாள்.
ஆனால் அவளைப் பார்க்க வந்த ரங்கநாதன் வினய் எதுவும் பேசினானா என்று விசாரித்த போது அவளுக்கு வந்த தகவலை மட்டும் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டாள்.
அவளை வினோதமாகப் பார்த்தாலும் ஒன்றும் சொல்ல முடியாமல் அந்த நம்பரை எடுத்து மகனுக்கு அழைத்தார்.
அவர் அழைத்த நேரம் அதிகாலை என்பதால் தூக்க கலக்கத்தில் போனை எடுத்தான்.
“சொல்லாம கொள்ளாம ஓடி போற அளவுக்கு அய்யா பெரிய மனுஷன் ஆகிட்டீங்க?” என்று எடுத்ததும் ரங்கநாதன் கேட்க…
தந்தையின் குரலை கேட்டதும் வினய்க்குத் தூக்கம் பறந்தே போனது. ஆனாலும் திருப்பிப் பேசாமல் அமைதியாக இருந்தான்.
அவனின் மௌனத்தில் கோபம் கொண்டவர் “அப்பன்கிட்ட பேசக்கூட உனக்கு வலிக்குது. அப்படித்தானே?” என்று கேட்டவர் அவரே தொடர்ந்து “நீ பேசலைனா போ! நான் சொல்ல வந்ததைச் சொல்லிடுறேன். உன் பொண்டாட்டி இப்ப கர்ப்பமா இருக்கா. அதோட நீ இல்லாத என் வீட்டில் இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு உன் பேர்ல இருக்குற பிளாட்ல வந்து தனியா இருக்கா. இது ஒரு அப்பனா உனக்குச் சொல்ல வேண்டிய தகவலை சொன்னேன். அவ்வளவு தான் வச்சிறேன்” என்று அவனிடம் மேலும் பேச்சை வளர்க்காமல் வைத்து விட்டார்.
அவர் வைத்த ஒரு அரைமணி நேரத்திற்குப் பிறகு வினய்யிடம் இருந்து பவ்யாவிற்கு அழைப்பு வந்தது.
அப்போது ரங்கநாதன் கிளம்பிவிட்டதால் அவள் மட்டுமே வீட்டில் இருந்தாள்.
இப்போது போனை ஆன் செய்து விட்டு அவள் அமைதியாக இருக்க “இங்க வந்துறேன் பவி” என்று கரகரத்த குரலில் அழைத்தான்.
அவன் அழைப்பில் பவ்யாவிற்குக் கண்ணீர் குளம் கட்டியது. அதை அணைப் போட்டு விட்டு “முடியாது வினு” என்று அழுத்தமாக உரைத்தாள்.
அவளின் பதிலில் பட்டெனக் கடும் கோபத்துடன் போனை வைத்து விட்டான் வினய்.
அதன் பிறகு அவனும் அழைக்கவில்லை. அவளும் அழைக்கவில்லை. அவரவர் நிலையில் இருந்து இருவருமே இறங்கி வருவதாக இல்லை.
அதோடு பவ்யா வேலைக்குச் செல்லவும் ஆரம்பித்தாள். தன் செலவுக்குத் தானே பார்த்துக் கொண்டாள். அதிலும் ரங்கநாதனால் மருமகள் பேச்சுக்கு தான் தலையாட்ட முடிந்தது.
ரங்கநாதன் மகனுக்கு அடிக்கடி போன் செய்து பேசுவார். அதில் பாதி நேரம் திட்ட தான் செய்வார் என்பதால் மகனும் கடுப்புடன் தான் பேசுவான்.
கவின் பிறந்ததும் ரங்கநாதன் மகனுக்கு அழைத்துத் தகவல் சொன்னார். வினய் அமைதியாகக் கேட்டுக் கொண்டானே தவிர எந்த விதமான பிரதிபலிப்பும் காட்ட வில்லை.
“உன் மனம் அப்படியாடா கல்லா போய்ருச்சு?” என்று திட்டி விட்டு வைத்தவர், அதன் பிறகு அவரும் வெகு நாட்கள் மகனிடம் பேசுவதைத் தவிர்த்தார். ஆனாலும் தொடர்பை முற்றிலும் அறுத்துக் கொள்ள முடியாமல் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
நாட்களும் ஓட அவரவரின் பிடிவாதமே பிரதானமாகப் போக யார் முதலில் தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வருவார்கள் என்ற கேள்வியுடன் நாட்கள் நகர்ந்தன.
பிடிவாதம்! அங்கே மலை போல் உயர்ந்து நின்று ஆட்சி செய்தது.