8 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 8

அன்று டவுனிற்குச் செல்ல கிளம்பினாள் தேன்மலர்.

அந்த ஊரில் பேருந்து நிற்கும் மரத்தடியில் காத்திருந்த போது, அந்த ஊரை சேர்ந்த நான்கைந்து பேரும் காத்திருந்தனர்.

பேருந்து வரவும் அதில் ஏறினாள். பேருந்து கிளம்பும் நேரத்தில் ஓடி வந்து ஏறினான் ராமர்.

பேருந்தில் அமர இடமில்லாமல் நிற்க தான் வேண்டியதாக இருந்தது. தேன்மலர் முன்பக்கம் நிற்க, அவள் பார்வைக்குப் படாதவாறு பின்னால் நின்று கொண்டான் ராமர்.

பேருந்து அடுத்தடுத்த ஊர்களுக்குச் செல்லும் போது ஆட்கள் நிறையப் பேர் ஏறினர்.

கூட்டம் நெருக்க நெருக்கத் தேன்மலர் பின்னால் நகர, ராமர் முன்னால் நகர்ந்து கொண்டே வந்தான்.

ஒரு கட்டத்தில் அவளின் பின்னால் நெருக்கமாக வந்து நின்றான் ராமர்.

ஆண்களை உரசாமல் நிற்க வேண்டும் என்று ஏற்கனவே கம்பியின் அருகில் தான் ஒட்டிக் கொண்டு நின்று வந்து கொண்டிருந்தாள்.

அப்படியிருக்க, அவளின் பின் நின்ற ராமர் வேண்டுமென்றே இடம் இல்லாதது போல், அவளை அவ்வப்போது லேசாக உரச ஆரம்பித்தான்.

“ம்ப்ச்…” என்று எரிச்சலுடன் உச்சுக் கொட்டியவள், இன்னும் தன்னை ஒடுக்கி கொண்டாள்.

ஆனால் வேண்டுமென்றே இடிப்பவன் தள்ளியா செல்வான்? அவனின் கைகள் அவ்வப்போது அவளின் இடையை உரச ஆரம்பித்தது.

அசூசையுடன் முகத்தைச் சுளித்தவள் முகத்தைத் திருப்பி எவன் அவன் என்று பார்த்தாள்.

அங்கே நின்று கொண்டிருந்த ராமரை கண்டவள் முகம் மாறியது. ‘இவனா?’ என்று நினைத்தவள் தன் அசூசையை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் கடுமையாக முறைக்க ஆரம்பித்தாள்.

அதற்கு எல்லாம் அசராதவன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான் ராமர்.

திக்கென்று உள்ளுக்குள் அதிர்ந்து போனாள் தேன்மலர். இவ்வளவு பேர் இருக்கும் இடத்தில் என்ன தைரியத்தில் இப்படியெல்லாம் செய்கிறான்? என்று நினைத்தவள் எரிச்சலுடன் அவனைப் பார்த்தாள்.

“இப்ப நீ நகர்ந்து போகலைனா செருப்பால அடிப்பேன்…” அனல் தெறித்தது அவளின் வார்த்தைகளில்.

அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாதவன், அவள் காதோரமாக மெல்ல குனிந்து, “முடிஞ்சா அடி. ஆனா அப்புறமேட்டுக்கு நடக்கப் போறதையும் மனசுல வச்சுக்கிட்டு அடி…” என்றான் நக்கலாக.

அவனை விட்டு சட்டென்று தன் முகத்தை விலக்கிக் கொண்டவள், புரியாத குழப்பத்துடன் பார்த்தாள்.

“பேசாம டவுன்னுக்குப் போய்டு இருக்குறவனை நீ தேன் ராவுக்கு வூட்டுப் பக்கம் வான்னு கூப்பிட்டன்னு சொல்லுவேன். அதுக்கு நா மறுத்ததுக்கு மேல கைப்போட்டான்னு அபாண்டமா ஏ மேல பழி போடுறன்னு சொன்னேன்னு வச்சுக்கோ… இங்கன இருக்குற சனம் அம்புட்டும் நா சொல்லுறதை தேன் நம்பும். உம்மை நம்பும்னு நினைக்கிற?” என்று கேட்டவனின் கண்களும் எள்ளி நகையாடின.

அவன் வார்த்தை ஒவ்வொன்றும் அவளைச் சரியாகச் சென்று தாக்க, விக்கித்து உள்ளுக்குள் குமைந்து போனாள் தேன்மலர்.

அவளின் உடலும், உள்ளமும் கூசிப் போனது. அங்கிருக்கும் ஒருவர் கூடத் தன் பேச்சை நம்பமாட்டார்கள். அவனைத் தான் நம்புவார்கள் என்ற உண்மை உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் சுரீரென்று இறங்கியது.

“நீ கூப்பிடலைனாலும் இன்னைக்கு ராவுக்கு ஒ வூட்டுக்கு நா வரத்தேன் போறேன். இம்புட்டு நாளும் ஒ ஆத்தா பின்னாடி ஒளிஞ்சிக்கிட்ட. இன்னைக்கு எப்படி ஒளியிறன்னு நானும் பார்த்துப் போடுறேன்…” என்று தெனாவட்டாகச் சொன்னவனை அதிர்ந்து பார்த்தாள் தேன்மலர்.

அவளின் பார்வையைக் கண்டு வெற்றி பார்வை பார்த்தவன், “ராவுக்குத் தயாரா இரு…” என்று சொல்லி விட்டு அடுத்து வந்த ஊரில் இறங்கிச் சென்று விட்டான் ராமர்.

இத்தனை ஜனங்கள் சுற்றி இருந்தும் அந்த ராமரை ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத தனம் அவளின் மனதை போட்டு அறுக்க, உள்ளுக்குள் துடியாய் துடித்துப் போனாள் தேன்மலர்.

அவன் அவளைச் சீண்டுவது இது முதல் முறை அல்ல. பல முறை நடந்திருக்கிறது.

சிலர் தேன்மலரை பெண் கேட்ட போது தான் ராமரும் அவள் வழியில் குறுக்கிட்டான்.

மாநிறமாக இருந்தாலும், அவளின் களையான முகமும், கட்டுகோப்பான உடலும் அவனைக் கவர்ந்து இழுத்திருந்தது.

அவளை எங்கே பார்த்தாலும் சீண்ட ஆரம்பித்தான். சீண்டிக் கொண்டிருந்தவன் ஒரு நாள் நேரடியாக வீட்டிற்கே வந்து விட்டான்.

அவளைத் தனக்குப் பிடித்திருப்பதாகச் சொல்லி முத்தரசியிடம் பெண் கேட்டான்.

அவரோ “ஒ அப்பா அம்மாவோட வந்து பொண்ணு கேளு, தர்றேன்” என்றார்.

ஆனால் அவனோ “உம்ம மாதிரி குடும்பத்துப் பொண்ணைக் கேட்டு எல்லாம் ஏ அப்பா, அம்மா வர மாட்டாங்க. கட்டிக்கிட போற நா பொண்ணு கேட்டு வந்துருக்கேன், போதாதா?” என்று அலட்சியமாகக் கேட்டான்.

அவன் பெண் கேட்ட விதத்தில் முத்தரசிக்குச் சந்தேகம் வர, “பொண்ணு கொடுத்தா வூரைக் கூட்டியாவது தாலி கட்டுவியா?” என்று கேட்க,

“வூரை கூடி எல்லாம் ஏ அம்மா, அப்பா பார்க்கிற பொண்ணைத் தான் கட்டிக்குவேன்” என்றான் திமிராக.

“அப்போ எம் பொண்ணை ஏன் கேட்டு வந்துருக்க?” தனக்கே காரணம் தெரிந்தாலும் அவன் வாயிலிருந்தே வரட்டும் என்று நினைத்துக் கேட்டார்.

“உம்ம பொண்ணும் ஏ பொஞ்சாதியா தேன் இருப்பா” என்றான்.

“ஓஹோ! வூரைக் கூட்டி ஒ அம்மா, அப்பா பார்த்து வைக்கிற கல்யாணம் வூருக்கு. நீ மட்டும் ரகசியமா எங்கிட்ட பொண்ணு கேட்டு கட்டின எம் பொண்ணு ஒ வப்பாட்டியோ?” என்று எகத்தாளமாகக் கேட்டார்.

“சரியா புரிஞ்சிக்கிட்டீகளே. பின்ன உமக்குப் புரியாம இருக்குமா?” என்று கிண்டலாகச் சிரித்தவனைக் கனல் கண்களால் பார்த்தார் முத்தரசி.

“என்ன பெரிய பத்தினி பரம்பரை மாதிரி முறைக்கிறீரு? வேசி பரம்பரை தானே நீரு. உம்ம பொண்ணை நா வப்பாட்டியா வச்சுக்கிறதே பெருசு…” என்றவன் குரல் எள்ளி நகையாடியது.

“ஆமாடா, உம்மைப் போல ஆம்பள இனத்தால வேசியான பரம்பரை தேன் ஏ பரம்பரை. இதைச் சொல்ல எமக்கு வெட்கமில்லை. ஏ பரம்பரையை வேசியாக்கின உம்ம போல ஆம்பள இனம் தேன் அதுக்கு வெட்கப்படணும்” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவர்,

“நீ சொன்ன வேசி பரம்பரை ஏ ஆத்தாளோட போச்சு. நானும், எம் பொண்ணும் பத்தினி பரம்பரை தேன். வாழ்ந்தா உன்னோட மட்டும்தேன் வாழ்வேன்னு எவன் வாரானோ அவனுக்குத் தேன் எம் பொண்ணைக் கொடுப்பேன். வப்பாட்டியா வச்சுக்க நாங்க ஒன்னும் வக்கத்து போயிடலை.

போய்டு… இன்னொருக்கா பொண்ணு கேட்டு ஏ வூட்டுப் பக்கம் வந்த? நீ ஆம்பளயா இருந்தாத்தானே வப்பாட்டியா இருக்கக் கூப்பிடுவ… நீ ஆம்பிளைனே வெளியே சொல்லிக்க முடியாம ஆக்கித் போடுவேன். போ…” கண்களை உருட்டி, நாக்கை மடித்து உக்கிரமாகப் பேசிய முத்தரசி பேச்சோடு நிற்க மாட்டார் என்பதை எடுத்துரைக்க, அரண்டு பின்னால் ஓர் எட்டு எடுத்து வைத்தான் ராமர்.

அன்று முத்தரசியின் அதட்டலுக்கு அரண்டு ஓடியவன் தான் அதன் பிறகு அவர்கள் வீட்டுப் பக்கம் கூட அவன் சென்றது இல்லை.

ஆனால் தேன்மலர் மீதான அவனின் மயக்கம் மட்டும் தெளியவே இல்லை.

அவனுக்குத் திருமணம் முடிந்து, ஒரு ஆண் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கு நான்கு வயது ஆனப்பிறகும் கூட, தேன்மலர் மீது அவன் வைத்த வக்கிர பார்வை மாறவே இல்லை.

முத்தரசி இருந்த வரை அடக்கி வாசித்தவனுக்கு இப்போது அவர் இல்லை என்றதும் அவனின் ஆசை அத்துமீறி செல்ல ஆரம்பித்தது.

அன்னையின் பாதுகாப்பில் இதுவரை ராமரை போலான பார்வையிலேயே துகிலுரியும் ஆண்களின் பார்வையிலிருந்து தப்பித்து வந்த தேன்மலர் இன்று மாட்டிக் கொண்ட உணர்வில் அவளின் உடலில் ஒரு நடுக்கம் ஓடியது.

ராமர் மட்டுமல்ல. தேன்மலரை பெண் கேட்ட சில ஆண்களும் மனைவி இருக்கும் போதே அவளையும் இரண்டாம் தாரமாகவோ, ஊருக்குத் தெரியாமல் வப்பாட்டியாகவோ இருக்கத்தான் பெண் கேட்டனர்.

அப்படிப் பெண் கேட்டு வந்தவர்களை எல்லாம் விரட்டியடித்தார் முத்தரசி.

தன்னைப் பெண் கேட்டவர்கள் எல்லாம் ஒழுக்கம் இல்லாத ஆண்களாக இருக்க, அதனாலேயே எந்த ஆண்மகனும் வேண்டாம். தனக்குக் கல்யாணமும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் தேன்மலர்.

இப்போது ராமர் இரவில் வீடு தேடி வருவேன் என்று சொல்லிவிட்டு சென்றதே மனதில் ஓட அவளின் முகம் இறுகி போனது.

டவுனிற்குச் சென்று தன் வேலையை இயந்திர கதியில் முடித்தவள், தான் வாங்க நினைக்காத சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீடு சென்று சேர்ந்தாள்.

தேன்மலரின் ஆரம்பப் பதட்டம், படபடப்பு, பயம் அனைத்தும் நேரம் ஆக ஆகத் தணிந்து நிதானம் வந்து ஒட்டிக் கொண்டது.

அன்னையின் அறிவுரைகள், ஆலோசனைகள் அனைத்தும் அவளின் மனதில் ஓட ஆரம்பித்தது.

‘நாம பத்தினியா வாழ நினைச்சாலும் நம்மைப் பரத்தையா மாத்த எந்தப் பரதேசியாவது படையெடுத்து வந்துட்டே தேன் இருப்பான். அதுக்கு எல்லாம் உடஞ்சி போகாத! கலங்கி போகாத! நீ பயந்து நடுங்கினா பரதேசி பாய் போட்டுப் படுக்கலாம் வானு தேன் கூப்பிடுவான்.

நம்ம கண்ணே அவனைச் சுட்டெரிக்கணும். நீ முறைக்கிற முறையில் அவனே உம்மை விட்டு அரண்டு தள்ளி நிக்கோணும். மொத பயத்த விடு! நம்மைப் பார்த்து அவன் தேன் பயப்படணும்…’ என்று முத்தரசி அவளுக்கு எடுத்துச் சொல்லியிருந்தார்.

ஆனால் காலையில் சட்டென்று தான் பயந்தது நினைவில் வர, தன் தவறு அவளுக்குப் புரிந்தது.

இதுவரை வெளியே எங்கே சென்றாலும் முத்தரசியுடன் தான் செல்வாள் என்பதால் அவரே அவளுக்கு வேலியாக இருந்து காத்துக் கொண்டார்.

முதல் முதலாகத் தான் தனியாக நின்றதால் தான் பயம் தன்னை ஆட்கொண்டு விட்டதும் புரிந்தது.

இனி தன் பயத்தை எங்கேயும், எவ்விடத்திலும் காட்டக் கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.

மதிய அளவில் வீடு வந்து சேர்ந்தவள் மனது முழுதாகத் தெளிந்திருக்க, அன்றாட வேலையில் மூழ்க ஆரம்பித்தாள்.

மதிய உணவை ராசுவிற்குப் போட்டு விட்டு அது உண்டு முடித்ததும் தன் அருகில் அழைத்தாள்.

அதுவும் வாலை ஆட்டிக் கொண்டு அருகில் வர, அதன் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தாள்.

“இன்னைக்கு ஒரு பரதேசி எம்மைச் சீண்டிப் பார்த்துட்டான் ராசு. நானும், அம்மாவும் ஒழுக்கமா வாழ்ந்துகிட்டு இருந்தோம். அம்மா போனதும் நா வழி மாறி போயிடுவேன்னு நினைச்சான் போல அந்தப் பரதேசி. ஏ உடம்புல ஏ அம்மா ரத்தந்தேன் ஓடுதுன்னு மறந்து போயிட்டான்.

ராவுக்கு வீடு தேடி வருவானாம். வரட்டும்! இன்னைக்கு நா ஒரு கை பார்க்கிறதுல அந்தக் கேடுகெட்ட நாய் பொம்பள சுகத்தையே மறந்து போயிடணும்…” ராசுவிடம் சொல்லியவளின் கண்கள் அக்னியாக ஜொலித்தன.

அவளின் கோபத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிந்தது ராசு.

மாலை சென்று இரவும் வந்தது.

இரவு உணவு முடிந்ததும் ராசு திண்ணையில் படுத்துக் கொள்ள, “ராசு, எவன் வந்தாலும் உம்மைத் தான்டி தேன் அவன் ஏ கிட்ட வரணும். முழிப்பா இரு. தூங்கிப் போடாதே…” என்றாள்.

ராசுவும் புரிந்து கொண்ட பாவனையில் வாலை ஆடியது.

உள்ளே சென்றவள் கதவை சாற்றித் தாழ் போட்டாள். உள்ளறைக்குச் சென்றவள் அங்கிருந்த அன்னையின் புகைப்படத்தைப் பார்த்தாள்.

“நீர் தேன் எமக்குப் பலத்தைக் கொடுக்கணும் அம்மா…” என்று தாயிடம் வேண்டிக் கொண்டாள்.

கீழே பாய் விரித்துப் படுத்துக் கொண்டாள்.

ராசு இருக்கும் போது அவளுக்கு எந்தக் கவலையும் தேவையில்லை என்று தான் தோன்றியது.

அதனால் அமைதியாகக் கண்களை மூடிக் கொண்டாள்.

நேரம் செல்ல “வவ்.. வவ்…” என்று ராசுவின் சத்தம் கேட்டது.

‘வந்துட்டான் பரதேசி…’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அடுத்தச் சத்தத்திற்காகக் காத்திருந்தாள்.

ராசுவில் பாய்ச்சலில் ராமரின் அலறல் கேட்க அவள் காத்திருக்க, அதற்கு மாறாக, ‘வெவ்…’ என்ற ராசுவின் தீனமான குரல் தான் அவளின் காதுகளை வந்தடைந்தது.

அதுவே ராசுவிற்கு ஆபத்து என்பதை உணர்த்த, தேன்மலரின் மனம் திக்கென்று அதிர்ந்தது.

ராசுவை ஏதோ செய்து விட்டான் என்று அவளின் உள்ளம் பதறியது.

‘ராசு’ என்று அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள்.

அப்போது கதவு தட்டப்பட்டது.

“ஏய், கதவை திறடி…” என்று கதவை தட்டினான் ராமர்.

தன் அதிர்வை, பயத்தைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேன்மலர்.

“ஏய், இப்ப கதவை திறக்க போறீயா இல்லையாடி. பரத்தைக்கு என்னடி பாதுகாப்பு? இந்த நேரம் நா வருவேன்னு கதவை திறந்து வச்சுருக்க வேணாமா?” என்றான் அதிகாரமாக.

தேன்மலரின் முகம் இறுகி போனது.

“ஒ நாயி இப்ப மயக்கமாத்தேன் கிடக்கு, நீ தொறக்கலைனா அது பரலோகம் போய்ச் சேர்ந்துரும்…” என்றான் குரூரமாக.

அவளின் இறுக்கத்தையும் மீறி அவள் உடல் லேசாக நடுங்கியது.

“சரிதேன். இந்த நாயி உசுரோட இருந்தா தானே இதைக் காவலுக்கு வச்சுக்கிட்டு நீ பதுங்குவ. இன்னையோட இது சோலி முடிஞ்சது…” என்றவனின் குரலில் அடுத்த நிமிடம் கதவை திறந்தாள் தேன்மலர்.

கதவை திறந்த அடுத்த நிமிடம், “ஏன்டா, நீ கதவத் தட்டி வாடின்னு கூப்பிட்டதும் வர்றதுக்கு நா என்ன உமக்கு வாக்கப்பட்டாடா வந்துருக்கேன், வக்கத்தப் பயலே!” என்று ஆத்திரமாகக் கேட்டவள் தன் கையில் இருந்த உலக்கையை அவனை நோக்கி ஓங்கினாள்.

தன்னிச்சையாக அவன் சட்டென்று நகர, தலையை நோக்கி பாய்ந்த உலக்கை இடம் மாறி அவனின் தோளை பதம் பார்த்தது.

“ஆ…” என்று தோளை பிடித்துக் கொண்டு வலியில் கத்தியவன் முகத்தில் ஆத்திரம் தாண்டவமாட, தன் வலியை ஓரம் கட்டிவிட்டு அவளை நோக்கி பாய்ந்தான் ராமர்.

அதில் சட்டென்று சுதாரித்து விலகி உலக்கையால் மீண்டும் அவனை அடிக்கப் போனாள்.

ஆனால் அவனோ அதை எதிர்பார்த்தவன் போல ஆத்திரம் தலைக்கேற, உலக்கையைப் பலம் கொண்டு பிடித்து இழுக்க, உலக்கை அவளின் கையை விட்டு அவனின் கை போய்ச் சேர்ந்தது.

இதை எதிர்பாராத தேன்மலர் திடுக்கிட்டு விழித்தாள். சட்டென்று ஒருவித பயம் அவளை ஆட்கொள்ள முயன்றது.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உலக்கையைத் தூர எறிந்து விட்டு அவளின் மீது பாய்ந்தான் ராமர்.

பட்டென்று தன் பயத்தை உதறியவள், “பத்தினியா வாழணும்னா பத்திரகாளியா மாறினா கூடத் தப்பில்லை தேனு…” என்ற அன்னையின் குரல் அவளுக்குள் ஒலிக்க, பத்திரகாளியாக மாறி அவனை உக்கிரமாகப் பார்த்தவள் அவளின் இடுப்பில் சொருகியிருந்த புத்தம் புதிய கத்தியை வெளியே எடுத்தாள்.

அவளின் மீது பாய்ந்து கொண்டிருந்தவன், கத்தியை எதிர்பாராமல் வேகமாக ஓர் அடி பின்வாங்கினான்.

“மருவாதையா இங்கன இருந்து போய்டு. இல்ல, அப்படியே குத்தி கிழிச்சுடுவேன்…” என்றாள் ஆக்ரோஷமாக.

“ஏய், என்னடி பண்ற? கத்தியை கீழே போடு…” என்று கத்தினான்.

“நீ மொதல வூட்டை விட்டு வெளியே போ…” கத்தியை காட்டிய படியே மிரட்டினாள்.

குத்தி விடுவாளோ என்று பயந்தவன், மெல்ல பின் வாங்கினான்.

வீட்டை விட்டு அவன் படியில் காலை வைக்கும் வரை கத்தியை நீட்டிய படியே முன்னால் நகர்ந்தவள் கதவின் அருகில் வந்ததும் ஒரு கையால் கதவை மூட போக, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டவன் வேகமாக அவளின் கத்தி இருந்த கையை வளைத்துப் பிடித்துக் கத்தியைப் பறித்துத் தூர எறிந்தான் ராமர்.

இதை எதிர்பாராத தேன்மலர் சட்டென்று பலம் இழந்தவளானாள்.

“பொட்டச்சி உமக்கு எம்புட்டு திமிருடி…” என்று வஞ்சினத்துடன் கேட்டவன் அவளின் கையைப் பிடித்து இழுத்து அணைத்தான்.

அவன் கைகளுக்குள் அடங்காமல் துள்ளியவள், அவனின் கையில் நறுக்கென்று கடித்தாள். அவன் கையை உதற, அந்த இடைவெளியில் தப்பித்து வீட்டை விட்டு வெளியே ஓடினாள்.

அவ்வளவு போராடியும் தோற்று போன உணர்வு ஆட்கொண்டது. இதற்கு மேலும் ஒற்றை ஆளாகப் போராட மனதிலும், உடலிலும் வலுவிழந்தார் போல் உணர்ந்தவள் தன்னைக் காத்துக் கொள்ள வேறு வழி தேடி ஓடினாள்.

வீட்டிற்கு வெளியே வாசலில் ராசு மயங்கி கிடந்தது.

அதைப் பார்த்து முணுக்கென்று அவளின் கண்களில் நீர் கோர்த்தது.

ஆனால் அதைப் பார்க்க நேரமில்லாமல் ராமர் பின்னால் துரத்திக் கொண்டு வர, ஊருக்குள் சென்றுவிடும் முடிவுடன் வயலுக்குள் இறங்கி ஓடினாள்.

“ஏய், ஓடாதே! நில்லுடி. நீ எங்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது…” என்று கத்தியபடி அவளை விடாமல் துரத்தினான் ராமர்.

மானம் காக்க தலைதெறிக்க ஓடிய தேன்மலர், முன்னால் தள்ளாடிய படி நடந்து சென்று கொண்டிருந்தவனைப் பார்க்காமல் அவனின் மீது பலமாக மோதினாள்.

“ஐயோ! என்னைய எவனோ தள்ளி விட்டுட்டான். எவன்டா அவன்? விழப்போறேனே… ஏய் என்னைய பிடி… பிடி…” என்று அலறியபடி தேன்மலரை பிடித்தவன், நிலை தடுமாறி அவளையும் இழுத்துக் கொண்டு வயலுக்குள் விழுந்தான் வைரவேல்.