7 – மின்னல் பூவே

அத்தியாயம் – 7

நெற்றியை அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டாள் உத்ரா.

அவளின் முகத்தில் கவலையில்லை. வேதனை இல்லை.

என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டானே என்று அழுது புலம்பவும் இல்லை.

என்னைச் சண்டைக்காரி என்று சொல்லிவிட்டானே என்று கோபத்தில் கொந்தளிக்கவும் இல்லை.

எந்த உணர்வுகளுமே அவளிடம் தென்படவில்லை.

வெளிப்பார்வைக்கு மரத்துப் போனவள் போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மனம் வருத்தமும், வேதனையுமாகத் ததும்பி நின்று தத்தளித்தது.

“என்ன உத்ரா இப்படித் தனியா வந்து உட்கார்ந்துட்ட?” என்று கேட்ட படி அவளின் அருகில் அமர்ந்தாள் புவனா.

மறுநாள் காலையில் விரைவாகவே கல்லூரிக்கு வந்திருந்த உத்ரா அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டாள்.

“சும்மா தான்…” என்ற உத்ரா தோழியைப் பார்த்துச் சோர்வாகப் புன்னகைத்தாள்.

உதடுகள் சிரித்தாலும், கண்கள் சிரிக்கவில்லை. முகம் வெளிப்படுத்தா வலியைக் கண்கள் வெளிப்படுத்தின.

“என்னாச்சு உத்ரா? உன்கிட்ட ஏதோ மாற்றம் தெரியுது?” புவனா விசாரிக்க, உத்ரா மௌனமாக இருந்தாள்.

“நேத்து முகில்கிட்ட ப்ரபோஸ் பண்ண போறதா சொன்னீயே, பண்ணிட்டியா?” என்று கேட்டாள்.

“பண்ணிட்டேன்…” சாப்பிட்டேன் என்பது போல உத்ரா சாதாரணமாகச் சொல்ல,

“முகில் என்ன சொன்னார்?” என்று யோசனையுடன் கேட்டாள் புவனா.

உத்ரா தோழியைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தாள்.

அவளின் விரக்தி புவனாவைத் தாக்க, தோழியை நெருங்கி அமர்ந்தவள், அவளின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள்.

“முகில் மறுத்துட்டாரா?”

“ம்ம்… இந்தச் சண்டைக்காரியை எல்லாம் அவருக்குப் பிடிக்காதாம். அவங்க வீட்டுக்கு அமைதியான, அடக்கமான பொண்ணு தான் வேணுமாம்…” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.

புவனாவிற்கு வருத்தமாக இருந்தது. உத்ரா அமைதியானவளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவளின் குணத்தை யாராலும் குறை சொல்ல முடியாது.

அது அந்த முகிலுக்குப் புரியாமல் போனதே! என்று நினைத்துக் கொண்டாள்.

சில நொடிகள் அங்கே அமைதி நிலவியது.

“உன்னைப் பத்தி, உன் குணத்தைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் உத்ரா. ஆனாலும் சும்மா தான் கேட்கிறேன். தப்பா எடுத்துக்காதே!” என்று தயக்கத்துடன் மென்று முழுங்கினாள் புவனா.

“எதுக்கு இப்படித் தயங்குற? என்ன கேட்கணுமோ கேளு…” என்றாள்.

“நீ கொஞ்சம் அமைதியான பொண்ணா இருந்திருந்தால் உன்னை இப்படி ஒருவர் நிராகரிக்கும் நிலை வந்திருக்காது இல்லையா உத்ரா?” என்று தயக்கத்துடன் கேட்ட புவனாவை சிறு புன்னகையுடன் பார்த்தாள் உத்ரா.

‘இப்படி மனம் ரணமான நிலையிலும் இவளால் எப்படிச் சிரிக்க முடியுது?’ என்று தோழியை வியந்து பார்த்தாள் புவனா.

“எதுக்குச் சிரிக்கிற உத்ரா?”

“ஒருத்தரோட குணம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது புவி? ஒருத்தர் நடந்து கொள்ளும் முறையை வைத்து, அப்படித்தானே?” என்று கேட்க,

‘ஆமாம்’ என்று புவனா தலையை ஆடினாள்.

“அப்போ நான் கொஞ்சம் தைரியமா நடந்து கொண்டது என்னை ஒரு அடாவடி பொண்ணா பார்க்கிறவங்களுக்குக் காட்டியிருக்கு.

சோ, என் குணம் என்னன்னு மற்றவங்க வரையறுத்தது இவள் கோபக்காரி, அடாவடி பண்றவ, தகராறு பண்றவ, வம்பை எல்லாம் விலைக்கு வாங்கிட்டு வர்றவ.

இது எல்லாம் நான் தைரியமா இருந்ததுக்கு எனக்குக் கிடைத்த பரிசு…” என்று சொல்லி அசட்டையாகக் கையை வீசினாள்.

“இதே நான் குறும்புத்தனத்தோட இருந்திருந்தா என்ன சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிற? அப்பயும் ஏதாவது கண்டிப்பா குறை சொல்லுவாங்க. நான் மட்டும் இல்லை. எல்லாப் பொண்ணுங்களுக்கும் இதே நிலைமை தான். எப்படி இருந்தாலும் அதுக்கு ஒரு விமர்சனம் வரத்தான் செய்யும்…”

“நீ சொல்றதும் சரிதான்…” என்றாள் புவனா.

“ஒரு பொண்ணு கொஞ்சம் ஜாலியா, குழந்தை மாதிரி விளையாட்டு தனமா இருந்தா லூசு பட்டம் கட்டி அவளை ஒரு அரைவேக்காடுன்னு சொல்றதையும் நாம பார்க்கத்தானே செய்றோம்?

ஆனா உண்மையில் அப்படிக் குழந்தைத்தனமா இருப்பது வரம். தனக்கு வரும் பிரச்சனையை விளையாட்டா எடுத்துக்கிட்டு அவளால் சமாளித்து வெளிய வர முடியலாம்.

இல்லை தனக்கு வரும் பிரச்சனையையே அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னையும் சந்தோஷமா வச்சுக்கிட்டு அவளைச் சுத்தி இருக்குறவங்களையும் சந்தோஷமா வச்சுக்க முடியும்.

ஆனா அவள் அப்படிச் செய்தா அவ லூசு, அரைவேக்காடு. ம்கூம்..” என்று இகழ்வாக உதட்டை சுளித்துக் கொண்டாள்.

“எல்லோராலயும் அந்த விளையாட்டு தனத்தோட இருக்க முடியாது. ஆனா அப்படி இருக்குறவளையும் அரைவேக்காடுனு சொல்லித் தட்டிக் கழிச்சு அவளை இறுகிப் போக வைப்போம்.

அடுத்து என்னை மாதிரி அடாவடி. தைரியமா பேசி நம்மைச் சுத்தி நடக்குற அநியாயத்தைப் பயந்து ஒளியாம வாயைத் திறந்து கேட்டுட்டா அவளுக்கு ரவுடி, அடாவடி, அடங்காபிடாரினு பேர் வச்சு முத்திரை குத்திட வேண்டியது.

என்ன நடந்தாலும் பொறுத்துக்கிட்டு அமைதியா போற பொண்ணுங்களை மட்டும் தான் பிடிக்கும்னா அப்போ அவங்க பொண்ணுங்களைத் தேடலை ஒரு அடிமையைத் தேடுறாங்க.

அப்படி அடிமையா கண்டிப்பா என்னால் இருக்க முடியாது. நான் இப்படித் தான்!

நான் ஒன்னும் கெட்டவளோ, அகங்காரியோ கிடையாது. ஆனா பார்க்கிறவங்களுக்கு அப்படித் தெரிஞ்சா அதுக்கு நான் பொறுப்பில்லை. நான் நல்லவள்னு என் மனசுக்கு தெரியும். எனக்கு அது போதும்…” என்று தன் மன ஆதங்கத்தை எல்லாம் கொட்டினாள் உத்ரா.

“ஆனா முகில்? உன் காதல்?” என்று கேட்டாள் புவனா.

“என் காதலுக்கு என்ன? அது என் மனசு முழுசும் நிறைஞ்சு கிடக்கு…”

“முகில் உன்னை வேண்டாம்னு சொன்னப் பிறகுமா?” வியப்பாகக் கேட்டாள்.

“முகில் என்ன வேண்டாம்னு சொல்லிட்டா அவர் மேல நான் வச்ச காதல் இல்லைன்னு ஆகிடுமா? அவர் எப்படின்னு தெரிஞ்சே தானே காதலிச்சேன்.

என்ன என்னை ஏத்துக்க டைம் எடுத்துப்பாங்கனு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனா இப்படி ஒரேடியா என்னை வேண்டாம்னு சொல்வாங்கனு எதிர்பார்க்கலை…” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

“அது உனக்கு வருத்தமா இல்லையா?”

“வருத்தம், வேதனை, வலி, தவிப்பு எல்லாம் உள்ளுக்குள்ள ரணமா இருக்கு. இதயத்தையே இரண்டா வெட்டிப் போட்டது போல வலிக்கத்தான் செய்யுது. அதுக்காக உட்கார்ந்து அழ முடியலையே. ஏன்னா நான் தான் திமிர்ப்பிடித்தவள் ஆச்சே!” என்று சொல்லித் தோழியைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள் உத்ரா.

தன் வேதனையையும் பொறுத்துக் கொண்டு சிரிக்கும் தோழியின் சிரிப்பை பார்த்துப் புவனாவிற்குத் தான் அழுகை வரும் போல் இருந்தது.

“முகில் கிட்ட திரும்ப ஒருமுறை பேசிப் பார்க்கலாமே உத்ரா?” என்று மனம் தாங்காமல் கேட்டாள்.

“பேசி என்ன ஆகப் போகுது? திரும்பத் திரும்பத் தொந்தரவு பண்றேன்னு என் மேல எரிச்சல் அதிகமாகுமே தவிர, நல்ல எண்ணம் வராது. அதோட காதலை பிச்சையா கேட்கவும் எனக்கு விருப்பம் இல்லை…” என்றாள்.

“சரி விடு. வா கிளாஸ்க்குப் போகலாம். காதல் தான் தோத்துப் போச்சு. படிப்பிலாவது பாஸ் பண்ண பார்க்கிறேன்…” என்ற உத்ரா தோழியுடன் வகுப்பிற்குச் சென்றாள்.

அதன் பிறகு நாட்கள் மிக வேகமாகச் சென்றது.

முகில்வண்ணனின் நினைவுகள் அவளின் மனதை ஒருபக்கம் அழுத்திக் கொண்டிருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் படிப்பில் கவனம் வைக்க முயன்றாள் உத்ரா.

உத்ராவை சாதாரணமாகப் பார்ப்பவர்களிடம் அவளுக்கு ஒரு காதல் தோல்வி உண்டு என்று சத்தியம் செய்து சொன்னால் கூட நம்ப மாட்டார்கள்.

தன் வேதனையைத் தனக்குள்ளேயே முழுங்கிக் கொண்டு நடமாடினாள்.

அவளின் தந்தை வீரபத்ரன் விடுமுறை முடிந்து மீண்டும் ராணுவத்திற்குச் சென்றிருந்தார்.

அன்னை, தந்தையிடம் தன் காதல் விஷயத்தைச் சொன்னதோடு முகில்வண்ணனின் மறுப்பையும் சொல்லியிருந்தாள் உத்ரா.

“விடுமா, உன்னைப் போலத் தைரியமான பொண்ணு அந்த மடப்பயலுக்குக் கிடைக்கக் கொடுத்து வைக்கலை…” என்று சொல்லி மகளைத் தேற்றியிருந்தார் வீரபத்ரன்.

மகளின் இந்தத் தைரியமான குணத்தால் அவளின் வாழ்க்கையே சிக்கலாகுமோ என்று அஜந்தா தான் தவித்துப் போனார்.

“அப்படி எல்லாம் எதுவும் நடக்காதுமா. அவள் படிப்பு முடியட்டும். அதுக்குப் பிறகு என்ன செய்றதுன்னு பார்க்கலாம்…” மனைவியையும் தேற்றியிருந்தார் வீரபத்ரன்.

“ஆனா இப்போ அவள் வருத்தப்படுவாளேங்க…”

“ம்ம், உத்ரா ஒரு பையனை விரும்புறேன்னு வந்து சொன்னப்ப நமக்குக் கொஞ்சம் அதிர்ச்சியா தானே இருந்தது. ஆனா என்ன நம்ம பொண்ணை நல்லபடியா வளர்த்திருக்கோம் அவளுக்கே நல்லது கெட்டது தெரியுது. என்ன விஷயமா இருந்தாலும் நமக்கிட்ட சொல்லும் படியும் வளர்த்திருக்கோம்.

“அவள் சொன்னப்ப நானும் அந்தப் பையனைப் பற்றி விசாரிச்சேன். ரொம்ப அமைதியான பையன். விசாரிச்ச வரை எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. மகள் ஆசைப்பட்டவன் நல்லவனா இருக்கான்னு நானும் தான் சந்தோஷப்பட்டேன்.

ஆனா இப்போ அவன் மறுத்துட்டான்னு தெரிஞ்ச பிறகு எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு. அதுக்காக என்ன செய்ய முடியும்? அவளைப் பத்திரமா பார்த்துக்கோ. தனியா விடாதே!

புள்ள உள்ளுக்குள்ள எவ்வளவு வேதனையை வச்சுருக்காளோ. நாம வருத்தப்படுவோம்னு காட்ட யோசிப்பாள். அதனால் அவளை எப்படி இயல்பாக்க முடியும்னு பார். படிப்பில் கவனம் செலுத்த வை…” என்று நீண்ட அறிவுரையே சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்.

கணவர் சொன்னது போல உத்ராவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார் அஜந்தா.

உத்ராவும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

தன்போக்கில் கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள்.

முகில்வண்ணனிற்குக் கல்லூரி இறுதி தேர்வுகள் நெருங்க, அவன் அதில் மூழ்கி இருந்தான்.

இதனிடையே கேம்பஸ் இன்டர்வ்யூவிற்குக் கம்பெனிகளிலிருந்து கல்லூரிக்கு வர ஆரம்பித்திருக்க, அதிலும் கலந்து கொண்டிருந்தான்.

வேறு எதைப் பற்றியும் சிந்திக்கக் கூட அவனுக்கு நேரமிருக்கவில்லை.

தன் முன்னேற்றத்தில் மட்டும் கவனமாக இருந்தான்.

உத்ராவை வழியில் எங்கேயாவது பார்க்க நேரிட்டால் கூட, கண்டுகொள்ளாமல் செல்ல ஆரம்பித்தான்.

அதைவிட உத்ராவும் அவன் வழியில் குறுக்கிடவில்லை.

‘இவளா தன்னிடம் காதல் சொன்னவள்?’ என்று அவன் நினைக்கும் வண்ணம் அவனின் வழியில் குறுக்கிடாமல் விலகிச் சென்றாள்.

‘தான் நன்றாகத் தான் அவளுக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறோம் போல. அதான் தன்னிடம் திரும்பக் காதல் என்று சொல்லிக் கொண்டு வரவில்லை’ என்று அவனையே மெச்சி கொண்டு திருப்தியும் பட்டுக்கொண்டான்.

அன்று ஒரு நேர்முகத்தேர்வு இருக்க, அதற்குத் தயாராகி வந்திருந்தான்.

இன்னும் சற்று நேரத்தில் நேர்முகத்தேர்வு நடக்குமிடத்திற்குச் செல்ல வேண்டும்.

ஆனால் இரவு வெகு நேரம் கண்விழித்துப் படித்தது இப்போது தலைவலியை வரவைத்திருந்தது.

தலைவலியுடன் நேர்முகத்தேர்விற்குச் சென்று எதுவும் சொதப்பி விடுவோமோ என்று நினைத்தவன், கேண்டினில் சென்று ஒரு காஃபி அருந்தி விட்டு வரலாம் என்று அங்கே சென்றான்.

அங்கே ஒரு டேபிளில் தன் தோழிகள் படை சூழ அமர்ந்திருந்தாள் உத்ரா.

“ஹாஹா… உனக்குக் கொழுப்புடி. ப்ரொபஸரையா கேலி பண்ற? இரு, ஒரு நாளைக்குப் போட்டுக் கொடுக்கிறேன்…” என்று உத்ரா ஏதோ தோழியிடம் சொல்லி சிரித்துப் பேசிக் கொண்டிருக்க,

அவளை அங்கே பார்த்த முகிலின் முகம் ஒரு நொடி மாறியது.

ஆனால் அடுத்த நொடியே ‘அவள் இருந்தால் எனக்கென்ன?’ என்று நினைத்துக் கொண்டவன், ஒரு காஃபியை வாங்கி அவளுக்கு முதுகை காட்டியது போல் ஒரு இருக்கையில் அமர்ந்து அருந்த ஆரம்பித்தான்.

“ஏய் புவனா, உனக்கும் வாய் கூடிப் போச்சு. என்னை என்ன உன்னைப் போலத் தத்தின்னு நினைச்சீயா? அதெல்லாம் எனக்கே தெரியும். நீ ரொம்பப் பீலா உடாதே…” என்று உத்ராவின் குரல் உரத்துக் கேட்டது.

தோழிகளுக்குள் ஏதோ அரட்டை என்று புரிந்தது.

ஆனால் உத்ராவின் உற்சாகமான குரலும், அவளின் சந்தோஷக் கூச்சலும் முகில்வண்ணனின் தலைவலியை அதிகரிக்க வைப்பது போல் இருந்தது.

‘ச்சே, என்ன பொண்ணுடா இவ? இப்படியா கத்துவா? அதை விடக் கொஞ்சம் கூட நான் அவள் காதலை நிராகரித்த வருத்தம் இருக்கான்னு பார்?

சும்மா தான் அன்னைக்குக் காதல்னு சொல்லி உளறினாளோ? எனக்கு என்னமோ இவள் உண்மையா என்னைக் காதலிச்சிருப்பாள்னு தோணலை. இல்லனா நான் மறுத்த பின்னாடியும் இப்படி அவளால் சிரிக்க முடியுமா என்ன?

அவளின் காதல் மீதே சந்தேகம் கொண்டான் முகில்வண்ணன்.

எனக்குக் காதல் தோல்வி என்று அவள் எந்நேரமும் அழுது கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான் போலும்.

அப்படி முடங்கி உட்கார்ந்து அழக் கூடியவள் உத்ரா அல்ல என்று அவனுக்கு இன்னும் புரியவில்லை.

‘அவள் எப்படி இருந்தால் என்ன? என் பக்கம் மீண்டும் திரும்பாமல் இருந்தாலே எனக்குப் போதும்’ என்று நினைத்தவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.

வாய் தோழிகளிடம் அரட்டை அடித்தாலும் உத்ராவின் கண்கள் அவனைத் தான் வட்டமிட்டன என்று அறியாமல் போனான் முகில்வண்ணன்.

‘என்னை, என் காதலை உங்களுக்கு உணர்த்தணும்னு எனக்குத் தோணுது முகில். ஆனா அது கூட என் காதலை உங்க மேல திணிக்கிற மாதிரி ஆகிடும்னு தான் உங்களை விட்டு விலகி நிற்கிறேன்.

ஆனா இப்படி விலகி நிற்பது ரொம்ப வேதனையா இருக்கு முகில். ஏன் முகில் கொஞ்சம் கூட ஆராயாம என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்காம நீங்களா ஒரு முடிவுக்கு வந்தீங்க?

சண்டைக்காரியா இருந்தாலும் நானும் ஒரு உணர்வு உள்ள பொண்ணு தானே! எல்லாப் பொண்ணுங்க போலத்தானே எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கும். அதை ஏன் யோசிக்காம போனீங்க?’ என்று சென்று கொண்டிருந்த முகிலின் முதுகைப் பார்த்து தனக்குள்ளேயே கேள்விக் கேட்டுக் கொண்டாள் உத்ரா.

அவனை விட்டு விலகி நிற்கும் ஒவ்வொரு நொடியும் அவளின் கண்கள் கலங்கவில்லை என்றாலும் உள்ளம் கலங்கித்தான் போனது.

அன்று நடந்த கேம்பஸ் இண்டர்வ்யூவில் முகில்வண்ணன் சிறப்பாகச் செய்திருக்க, படிப்பு முடிந்ததும் வேலையில் சேரச் சொல்லியிருந்தனர்.

அவனின் படிப்பும் விரைவிலேயே முடிய, கல்லூரி வாழ்க்கையை முடித்துக் கொண்டு அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்தான் முகில்வண்ணன்.