7 – ஞாபகம் முழுவதும் நீயே

அத்தியாயம்– 7

வினய், பவ்யா இருவரும் மணக்கோலத்தில் அந்தப் பங்களாவினுள் ஜோடியாகக் காலடி எடுத்து வைத்தார்கள்.

காலையில் தான் இருவருக்கும் ஒரு பெரிய திருமண மண்டபத்தில் வைத்து விமர்சையாகத் திருமணம் முடிந்திருந்தது. இருவரின் முகமும் திருமணப் பூரிப்பில் நிறைந்திருந்தது.

அந்தப் பெரிய பங்களாவில் நெருங்கிய சில உறவினர்கள் இருந்ததால் அந்த இடமே சிறிது சலசலப்பாக இருந்தது.

மணமக்களைக் கூடத்தில் அமர வைத்துச் சில சடங்கு சம்பிரதாயங்கள் செய்து முடிக்கும் முன் வினய் திணறிப் போனான்.

குளிர்ச்சியான ஊரில் இருந்துவிட்டு வந்ததாலோ என்னவோ இந்த ஊரின் உஷ்ணமும், திருமணக் கூட்டமும், மாலை, சடங்கு எல்லாம் அவனுக்குக் கசகசப்பை உண்டாக்க அவ்வப்போது அவஸ்தையாக உணர்ந்தான்.

கணவனின் அருகில் அமர்ந்திருந்த பவ்யாவாலும் அவனின் அவஸ்தையை உணர முடிந்தது. காலையில் மணமேடையிலும் அவ்வப்போது அவன் அப்படித் தான் இருந்தான் என்று உணர்ந்திருந்தாள் .

இப்போதும் அப்படி இருக்க, அவனுக்கு என்ன பிரச்சனையோ என்று தோன்றியது. ஆனால் இப்பொழுது தங்களைச் சுற்றிலும் உறவினர்கள் இருக்க அவனிடம் காரணம் கேட்க முடியாமல் புதுப்பெண்ணின் நாணத்துடன் அமைதியாக இருந்தாள்.

நேரம் செல்லச்செல்ல புத்தம் புதிய மனைவியின் அருகாமையைக் கூட ரசிக்க முடியாமல் ‘எப்போது தன் அறைக்குப் போக முடியும்?’ என்ற எண்ணம் மட்டுமே வினய்யின் மனதில் சுழல ஆரம்பித்தது.

அவனின் அந்த அசவுகரியம் பவ்யாவிற்கு வித்தியாசமாகத் தோன்ற உறவினர்களையும் பொருட்படுத்தாது கேள்வியாகக் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அருகில் இருந்தவளின் பார்வையை உணர்ந்து மனைவியின் புறம் திரும்பியவன், ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்த, அந்தப் புன்னகையைப் பார்த்துக் கொண்டே ‘என்னாச்சு?’ எனக் கண்களால் வினவினாள்.

அவளின் கேள்வியைப் புரிந்து கொண்டவன் மெல்ல மனைவியின் காதின் புறம் சாய்ந்து “ட்ரஸ் மாத்தணும் பவி!” என்று தன் வேட்டி, சட்டையைக் காட்டினான்.

அவனின் அருகாமையில் தன்னியல்பாக உள்ளுக்குள் சிலிர்த்தவள், சுற்றுப்புறத்தை உணர்ந்து மெல்ல விலகி கொண்டே “ஓ…!” என்று மட்டும் சொன்னாள். கணவன் அந்த உடையில் அசவுகரியமாக உணர்கின்றான் என்று அவளுக்குப் புரிந்தது.

ஆனால் இது அவனின் வீடு. அவள் அந்த வீட்டிற்குப் புதியவள். அதுவும் புது மணப்பெண். இப்போது தான் என்ன செய்ய முடியும்? என்று புரியாமல் குழம்பியவள் தன் உறவுகளைத் தேடினாள்.

கனகதாராவும், மைத்ரியும் அங்கே இருந்த உறவினர்களோடு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மைத்ரியும் எதேச்சையாகப் பவ்யாவின் புறம் திரும்ப, அவளை அழைத்தாள்.

அருகில் வந்த மைத்ரியிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் அவளின் அம்மாவிடம் சொல்ல, அவர் தன் கணவரை தேடினார். அமுதவன் மூலமாகச் சில நொடிகளில் விஷயம் ரங்கநாதன் காதிற்குச் சென்றது.

அவர் ஒரே மகன் திருமணம் கோலாகலமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றி சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். விஷயம் தெரியவும், அவர் சிறிது தூரத்தில் இருந்தே மகனை முறைத்துப் பார்த்தார்.

அவருக்கும் குறையாமல் தந்தையை முறைத்த வினய், ‘இப்போ சம்மதம் சொல்லுங்க. இல்லைனா நானே எழுந்து போய்டுவேன்’ என்பது போலப் பார்த்து வைத்தான்.

வினய்யின் இத்தனை ஆர்ப்பாட்டத்திற்குக் காரணம் ரங்கநாதன் தான். அவன் நினைத்திருந்தால் யாரிடமும் சொல்லாமல் அவனின் அறைக்கு எழுந்து போயிருக்க முடியும். ஆனால் அப்படி மகன் எதுவும் செய்துவிடுவானோ என்று நினைத்துத் தான் முதல் நாளே ரங்கநாதன் நிறைய அறிவுரை செய்திருந்தார்.

உறவினர்கள் முன்னாடி எதுவும் கடுப்பாகச் செய்து விடாதே என்று. அதுவும் நாம் இங்கே இருக்கும் வரை உறவினர்கள் மத்தியில் நல்ல பெயருடன் மட்டுமே இருக்க வேண்டும். உன் திருமணத்தில் எதுவும் குறை சொல்வது போல் நடந்தால் அது காலத்திற்கும் உறவினர் மத்தியில் பேசப்படும். அதனால் உன் அமெரிக்க அலப்பறையை இங்கே காட்டி கெட்டப் பெயர் வாங்கி விடாதே என்று என்னென்னமோ சொல்லி அவனை ஒரு வழி ஆக்கிவிட்டிருந்தார். அவரிடம் மீண்டும் அறிவுரை கேட்க விருப்பம் இல்லாமல் தான் அடக்கி வாசித்தான்.

ஆனால் அந்தச் சீதோஷ்ண நிலை அவனைச் சும்மா இருக்க விடவில்லை. அதனால் இப்போது அப்பாவை கடுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவரைப் பார்த்துக் கொண்டே “இந்த அப்பாவை…?” என்று மெல்லிய குரலில் கடுப்புடன் வினய் முணுமுணுத்துக் கொண்டிருந்த போது பவ்யாவின் அருகில் வந்த மைத்ரி, “பவ்யா வா ட்ரெஸ் சேன்ஞ் பண்ணலாம். அப்படியே அண்ணாவையும் பண்ணிட்டு வர சொல்லு” என்று சொன்னவள் குரலில் கேலி இழைந்தோடியது.

அவளின் பேச்சு வினய்யின் காதிலும் விழ ‘என்ன இந்தப் பொண்ணு நம்மளை கேலி பண்ணுதா?’ என்பது போல அவளைப் பார்க்க, அவள் பார்வை தூரத்தில் இருந்த ரங்கநாதன் மீது இருக்கவும், ‘ஓ…! அவர் தான் சொல்லி விட்டாராக்கும்? இப்பவாவது மனசு வந்ததே?’ என்று நினைத்துக் கொண்டவன் பவ்யா எழுவதற்கு முன் தான் எழுந்து நின்றான்.

அவன் வேகத்தில் பவ்யா, மைத்ரி இருவருக்குமே சிரிப்பு வர தன்னை அடக்கிக் கொண்டார்கள்.

எழுந்து நின்றவன் அவன் மட்டும் செல்லாமல் ‘நீயும் என் கூட வர்றீயா?’ என்பது போலப் பவ்யாவை பார்த்து வைத்தான். ஆனால் அவனுக்கு முந்தி கொண்டு “நீ வா பவ்யா! நமக்குக் கீழே ஒரு ரூம் கொடுத்துருக்காங்க. அங்கே போவோம்” என்று மைத்ரி, வினய்யைக் கேலி பார்வை ஒன்றை பார்த்துக் கொண்டே பவ்யாவை அழைத்துச் சென்றாள். அவளும் கணவனை ஓரப்பார்வையால் பார்த்துக் கொண்டே மைத்ரியின் பின் சென்றாள்.

அவர்கள் போவதையே கடுப்புடன் பார்த்த வினய் விரைந்து தன் அறைக்குச் சென்று வேகத்துடன் கதவை அடைத்தான்.

அறைக்குள் நுழைந்ததும் அவசர அவசரமாக வேறு உடைக்கு மாறியவன், பட்டெனப் படுக்கையில் விழுந்து மூச்சை இழுத்துவிட்டு மனதை அமைதியாக வைத்து பவ்யாவின் முகத்தை மனதில் கொண்டு வந்தவன் “செம்ம அழகுடா பவி நீ!” என்று கொஞ்சிக் கொண்டான்.

“உன்னை இப்பயே என் பக்கத்தில் வச்சுக்கணும் போல இருக்கே. ஆனா இந்தப் பெருசுங்க விடாதுங்க. இதுக்குத் தான் யூஎஸ்லயே இருக்கணும்னு சொல்றது. அங்கனா இப்படியா கூட்டமா இருக்கும்? கல்யாணத்தை முடிச்சதும், உன்னைக் கட்டிப்பிடிச்சிருந்தா கூடத் தப்பில்லை அங்க. ஆனா இங்க கையைப் பிடிச்சா கூடக் கேலியா பார்க்குறாங்க. இரு உன்னை நாளையில் இருந்து தனியா தூக்கிட்டு போய்டுறேன்” என்று தனக்குள் புலம்பிக் கொண்டே விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வினய் சென்னை வந்து நான்கு நாட்கள் தான் ஆகியிருந்தன. திருமணம் முடிவாகி இருந்த இத்தனை நாட்களில் பவ்யாவுடன் சில முறைகள் பேசியிருந்தான். ஆனால் அது எல்லாம் அவனின் தேர்வு சமயம் என்பதால் ஸ்வீட் நத்திங்ஸ் தான் பேச முடிந்தது. அதனால் இன்னும் இதுவரை அவர்களுக்குள் வெளிநாட்டு வாழ்க்கை பற்றிப் பேசிக்கொள்ளவில்லை.

வினய்க்கும் கேட்க தோன்றவில்லை. ஏனெனில் ரங்கநாதன் நான் பவ்யாவிடம் கேட்டு விட்டேன். அவளும் சம்மதம் சொல்லி விட்டாள் என்று அவனிடம் சொல்லிவிட்டதால் தந்தையின் சொல்லை உறுதியாக நம்பிவிட்டவனுக்கு மேலும் அது பற்றி விசாரிக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தது.

அதோடு அவனுக்கு மாணவனுக்கு வழங்கப்படும் ஸ்டூடென்ட் விசா முடிந்து விட்டதால், இனி திரும்ப அவனுக்கு அங்கே செல்ல விசா புதுப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் பிசினஸ் ஒன்று ஆரம்பித்து அங்கே நிரந்தரமாகத் தங்கும் முடிவில் இருந்தான். திருமணம் முடிந்ததும் காலையிலேயே அதைப் பதிவும் செய்து விட்டார்கள். அது இப்போது வழமையாக நடப்பது தான் என்பதால் பவ்யாவிற்கும், அவள் வீட்டினருக்கும் அதைப் பற்றி எந்த ஆட்சேபனையும் எழவில்லை.

ஆனால் வினய் திருமணச் சான்றிதழ் வந்ததும் தன்னுடன் சேர்த்துப் பவ்யாவிற்கும் விசாவிற்கு ஏற்பாடு செய்யும் முடிவில் இருந்தான்.

ரங்கநாதன் இருவரும் அங்கே கொஞ்சம் செட்டில் ஆனதும் நானும் வந்து விடுகிறேன் என்று வினய்யை சமாளித்து வைத்திருந்தார்.

வினய் அவர் சொன்னதை எல்லாம் முழுமையாக நம்பினான். ஏனெனில் தன் ஆசைக்குத் தந்தை என்றுமே மறுப்பு சொல்லாதவர் என்று அறிந்தவன் அவன். கேட்டதெல்லாம் எப்படியும் அவனுக்கு ரங்கநாதன் கிடைக்கச் செய்து விடுவார். இதுவரை அவனின் வாழ்க்கையில் பெரிய ஏமாற்றம் எதையும் சந்தித்தது இல்லை. அதற்கு முதன்மை காரணம் ரங்கநாதன். மகனின் ஆசையை எதையும் அவர் நிறைவேற்றாமல் விட்டது இல்லை.

அதுவும் வினய்யின் விருப்பங்கள் பல அவரின் எண்ணத்தோடு ஒத்துப்போக, இதுவரை தடையின்றி நிறைவேற்றி வைத்தார். ஆனால் இப்போது அவன் கேட்டது வாழ்வாதாரம் பற்றிய விஷயம். பலருக்கு சொந்த ஊர், சொந்த மண் என்ற ஒரு பிடிப்பு இருக்கும். அது ரங்கநாதனுக்கும் இருந்தது. அவருக்கு அதோடு இருந்த முக்கியமான ஒன்று தன் சொந்த உழைப்பில் உருவாக்கிய கம்பெனி மீது இருந்த பிடிப்பு.

இத்தனை நாளும் தன் கருத்தோடு ஒத்துப்போன மகன் இப்போது தன் உழைப்பையே விற்று விட்டு வெளிநாட்டு வாழ்க்கை வாழ்வு வாழ அழைக்கவும், அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. வினய்யிடம் பேசி பார்த்தும் அவன் கேட்காமல் போனதால், அவர் மகனை தன் வழிக்குக் கொண்டு வர செயல் நடவடிக்கை நடத்தி காட்டி கொண்டிருந்தார்.

ஆனால் வினய்யோ தந்தை இதுவரை தனக்கு எதுவும் தடை செய்யாததால் இந்த விஷயத்திலும் செய்யமாட்டார் என்ற எண்ணம் அவனுள்ளே வலுவாக இருந்ததால், அவரின் இந்த நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளாமல் போனான். தனக்காகத் தன் தந்தை அனைத்தையும் கச்சிதமாகச் செய்து தருவார் என்ற நம்பிக்கையான எண்ணம் அவனை எதையும் சந்தேகிக்கவே விடவில்லை.

அதனால் இப்போது புது மணமகனாகக் கனவில் மூழ்கி இருந்தான். திருமணச் சான்றிதழ் வர நாட்கள் ஆகும் என்பதால் அதுவரை தன் மனதை கவர்ந்த மனைவியிடம் மட்டும் நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான். பிஸ்னசை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டால் மனைவியுடன் செலவழிக்கும் நேரம் குறைந்து விடும் என்பதால் அதுவரை இருக்கும் ஒவ்வொரு நொடியையும் தன் இல்லற வாழ்வில் மட்டுமே செலவழிக்க எண்ணி இருந்தான்.

இன்று இரவு என் பவி என் கையில் என்ற கனவில் மூழ்கி இருந்தவனுக்கு மனம் இலவம் பஞ்சாகப் பறந்து கொண்டிருந்தது.

அவனின் கனவில் உலா வந்த ஏகாந்த வேளையும் வர தன் பவியைத் தன்னவளாய் மாற்றிக் கொண்டான்.

***

குளித்து முடித்து வெட்கத்தில் பூத்த முகத்துடன் சமையலறையில் வாணலியில் இருந்த காயை வதக்கிக் கொண்டிருந்தவளின் இடையை இரு வலிய கரங்கள் சூழ்ந்து கொண்டன.

அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரனான வினய்க்குக் கைகளில் ரோமம் நிறைய இருக்கும், அந்தக் கரங்களின் முரட்டுத்தனத்திற்கு அந்த ரோமமும் வலிமை சேர்த்தார் போலப் பவ்யாவிற்குத் தோன்றும். தன்னை அணைத்த கைகளில் இருந்த ரோமத்தை தன் ஒரு விரலால் சுற்றி ஒரு இழு இழுத்தாள்.

குளித்து முடித்த மனைவியின் மேனியில் வந்த வாசத்தை அவள் முதுகில் முகம் தேய்த்துச் சுகித்துக் கொண்டிருந்த வினய் அவள் செய்த சேட்டையில் அவள் இடுப்பில் இருந்த கையைச் சட்டென உதறினான்.

“ஸ்ஸ்… ஆ…! என்ன பவி இப்படி இழுத்துட்ட எனக்கு வலிக்குது” என்று சிறுவன் போல் முகத்தைச் சுருக்க, ‘ஐயோ…! வேகமாதான் இழுத்துட்டேனோ?’ என்று பதறிப்போன பவ்யா அவன் கரங்களைப் பிடித்துத் தான் இழுத்த இடத்தில் தேய்த்து விட்டாள்.

தன்னைக் கணவன் எதுவும் சொல்லிவிடுவானோ என்று பயந்து போய்க் கவலையாகக் கையைத் தேய்த்துவிட்டுக் கொண்டே வினய்யின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

அவனோ கையைத் தேய்ப்பதற்காகத் தன் பக்கம் திரும்பி தன்னை நெருங்கி நின்றிருந்த மனைவியைக் கள்ளப்பார்வை பார்த்தபடி கண்களால் அவளின் சிறு அசைவையும் அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான்.

அவனின் கள்ளப்பார்வை கண்டு சுதாரித்த பவ்யா வேகமாக அவனுக்கு முதுகு காட்டி திரும்பப் போக அவளைத் திரும்ப விடாமல் தடுத்து நிறுத்தியவன் அவளை மென்மையாக அணைத்துக் கழுத்தில் முகம் புதைத்து மீண்டும் வாசனையை நுகர ஆரம்பித்தான்.

அவன் கைகளில் வாகாக அடங்கிக்கொண்டே “ம்ம்… வினு விடுங்க! பசிக்கிதுன்னு சொன்னீங்களே? சமைச்சு முடிச்சுறேன்” என்று முணங்கினாள்.

“ம்ம்… பசிக்குது! சாப்பிடணும் தான். ஆனா இப்போ வேண்டாம்” என்று அவளின் தோளில் இருந்து கொண்டே முணுமுணுத்தவன் அவள் மேனியில் தன் கைகளை உலாவ விட்டான்.

கணவனின் தீண்டலில் கரைந்த பவ்யா “நோ…! என்னை விடுங்க. முதலில் சமையலை முடிச்சுட்டு சாப்பிடுவோம். அப்புறம் எனக்கு ரொம்பப் பசிக்குது உடனே சாப்பாடு வேணும்னு நீங்க தான் நேத்து போலக் கத்துவீங்க” என்று சொன்னவள் குரலில் சிணுங்கல் இருந்தது.

நேற்றும் இது போல் சமைக்க விடாமல் செய்து விட்டு, பின்பு ‘இன்னுமா சாப்பாடு ரெடி ஆகல?’ என்று அவன் கேட்டதை வைத்து இன்று மறுத்தாள்.

ஆனால் மனைவியின் மறுப்பை மெல்ல அடக்கியவன், அவள் கழுத்தில் இருந்த தன் முகத்தை நிமிர்த்தி அவள் முகத்தில் தன் அதரங்களைப் பயணிக்க வைத்தவன், “சாப்பாடு அப்புறம் சாப்பிடுறேன். இப்ப நீ போதும்” என்றவன் அவளைப் பேச விடாமல் அவளின் இதழ்களையும் அடக்க ஆரம்பித்தான் தன் இதழ்களால்.

கணவனின் தாக்குதலில் பவ்யாவும் உடன் பட, அவனுடன் தானும் கரைய ஆரம்பித்தாள்.

நிமிடங்கள் கரைந்தோட இப்போது படுக்கை அறையில் இருந்த வினய், தன் அருகில் இருந்த தன்னவளின் நெற்றியில் இதழ் ஒற்றி அவளை அணைத்துக் கொண்டவன் அவள் காதில் “பவிமா பசிக்குது” என்று செல்லமாய் அவளைச் சீண்ட ஆரம்பித்தான்.

கணவனின் சீண்டலில் சிலிர்த்தவள், அவனை விட்டு எழுந்து அமர்ந்து, விழி விரித்து முறைத்துப் பார்த்தாள்.

அவள் முறைப்பில் “ஆ…! நான் பயந்துட்டேனே!” என்று இன்னும் சீண்டியவனின் தோளில் ஒரு அடியை வைத்தவள், “நாம பேசாம அந்த வீட்டிலேயே இருந்திருக்கலாம். எப்பபாரு உரசிக்கிட்டே இருக்குறது. ஒழுங்கா சமைக்கக் கூட விடுறது இல்ல” என்று செல்லமாகச் சலித்துக் கொண்டே எழுந்து சமையலறை நோக்கி சென்றாள்.

அவளின் பின் தானும் வந்தவன் தோளில் கையைப் போட்டு “அங்க இப்படி ப்ரீயா இருக்க முடியாதே? அப்பா இருப்பார்னு அடக்கி வாசிக்கணும். அதுவும் வேலைகாரங்க வேற இருப்பாங்கனு தானே உன்னை இங்க கடத்திட்டு வந்தேன்” என்றவன் அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பி “இப்ப பாரு நாம நினைச்ச நேரம், நினைச்சபடி இருக்க முடியுது” என்று சொல்லி கண் சிமிட்டினான்.

அவனின் சொல்லில் வெட்கம் சூழ, அதைக் கணவனின் தோளில் சாய்ந்தே மறைத்தாள்.

தொலை தொடர்பில்லா
தொலைதூரம்
தொலைந்து போகவேண்டும்!
என்னுள் தொலைந்தவனு(ளு)டன்…!

கணவன், மனைவி இருவரும் வினய்க்கு சொந்தமான மூன்று படுக்கை அறைக் கொண்ட ப்ளாட்டில் இருந்தார்கள்.

இருவரும் இங்கே வந்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. வினய்யின் பங்களாவில் நான்கு நாட்கள் மட்டும் இருந்தவர்கள் பின்பு இங்கே வந்துவிட்டார்கள்.

வினய்யின் யோசனை தான் இது. தேனிலவிற்கு வெளியூர் சென்று வெளியே சுத்தி நேரத்தை போக்குவதற்குப் பதில் உன்னுடன் ஒவ்வொரு நொடியும் உன் அருகிலேயே இருக்க இங்கே தான் சரி என்று சொல்ல, பவ்யாவும் சரி என்று தலையசைக்க, ரங்கநாதனும் அவர்கள் இன்னும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இதுவே நல்லது என்று சந்தோஷமாக அனுப்பி வைத்திருந்தார்.

புதுமணத் தம்பதிகளுக்கே உரிய வகையில் தங்கள் இல்லற வாழ்க்கையை இருவரும் சுகித்துக் கொண்டிருந்தனர்.

தம்பதிகள் தங்களுக்கு மட்டும் நேரம் செலவழித்துக் கொள்ளட்டும் என்று பெரியவர்களும் விட்டு விட்டதால், அவர்களின் நேரம் இனிமையாகச் சென்று கொண்டிருந்தது.

வினய்யும் விசாவிற்கு விண்ணப்பித்த பிறகு அதற்கு அலையவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் இருக்கும் நேரத்தை தன்னவளுடன் மட்டும் கழிக்க நினைத்தான்.

வினய் தந்தையுடன் சேர்ந்து அலுவலகப் பொறுப்பை எடுத்துக் கொண்டுவிட்டால் தன்னுடன் இருக்கும் நேரம் குறைந்து விடும். சிறிது நாட்களாவது தங்களுக்கே மட்டுமான பொழுதை ரசிப்போம் என்று நினைத்தாள் பவ்யா. அதையும் விடத் தேனிலவிற்கு எதுவும் வெளிநாட்டிற்குச் செல்வோம் என்று கிளம்பாமல் இங்கே வந்து இருப்பதில் அவளுக்கு இன்னும் பூரணச் சந்தோசம்.

ஆளுக்கு ஒரு காரணம் நினைத்துக் கொண்டார்களே தவிரத் தங்கள் எண்ணங்களை இருவருமே மனதுவிட்டு பேசிக் கொள்ளவில்லை.

புதுமண உறவு அவர்களை வேறு எதுவும் யோசிக்கவும் விடவில்லை.

புயலுக்கு முன் அமைதி என்பது போல இல்லற வாழ்வு இன்பத்தில் நாட்கள் அழகாக நகர்ந்துக் கொண்டிருந்தன.

மூன்று வார தனிமை வாழ்விற்குப் பிறகு வினய்யின் வீட்டிற்கு இருவரும் செல்ல, வெளியுலக வாழ்வு அவர்களைச் சூழ ஆரம்பிக்க… தம்பதிகள் பிரிந்து தனித் தனியாகச் செல்வதற்கான பிரச்சனையும் அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தது.