6 – மின்னல் பூவே!

அத்தியாயம் – 6

“வாட்!” அதீதமாக அதிர்ந்து போனான் முகில்வண்ணன்.

நிச்சயமாக இப்படி ஒரு வார்த்தை அவளிடமிருந்து வருமென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

“யெஸ், நான் உங்களை விரும்புறேன் முகில். அதுவும் ஒரு வருஷமா…” என்றாள் உத்ரா.

“என்ன…?” என்று மீண்டும் அதிர்ந்தவன் அடுத்த நொடி கேட்கக் கூடாத வார்த்தையைக் கேட்டுவிட்டது போல முகத்தைச் சுளித்தான்.

“என்ன பேசுற நீ? லவ்வா? ஏதாவது உளறாதே! போ…” என்றான்.

“சீரியஸா சொல்லிட்டு இருக்கேன் முகில். காதல் விஷயத்தை எல்லாம் விளையாட்டா எடுத்துக்கிற ஆள் இல்லை நான்…” என்றாள்.

அடுத்து அவளிடம் என்ன பேசுவது என்ற தடுமாற்றத்துடன் வார்த்தை வராமல் திகைத்து நின்றது என்னவோ முகில் தான்.

இன்னும் அவனால் அவள் காதல் சொன்ன அதிர்விலிருந்து வெளியே வர முடியவில்லை.

அவன் மனநிலை புரிந்தது போல அவனின் முகத்தையே சில நொடிகள் அமைதியாகப் பார்த்தாள்.

“நான் சண்டைப் போடுவதை எல்லாம் பார்த்து என்னை நீங்க தவறா புரிஞ்சு வச்சுருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா நீங்க தவறா நினைக்கிற அளவுக்கு நான் கெட்டவள் இல்லை முகில்…” என்றாள் மென்மையான குரலில்.

அவன் எரிச்சலுடன் பார்க்க, “ப்ளீஸ், என்னை அப்படிப் பார்க்காதீங்க முகில். என் மனசு முழுக்க ஆக்கிரமிச்சிருக்கிற நீங்க என்னைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பை உமிழ்வதை விட எனக்கு வேற எதுவும் கொடுமையான விஷயம் இல்லை முகில்…” என்றவள் குரல் லேசாகக் கரகரத்தது.

‘இவளா? மின்னல் போலப் பளிச் பளிச்சென்று அடுத்தவரை அடித்து விடும் இவளின் குரலில் கரகரப்பா?’ என்பது போல் அவளை அதிசயமாகப் பார்த்தான் முகில்வண்ணன்.

காதல் என்று வந்து விட்டால் கடுமையானவர்கள் கூடக் கனிந்து விடுவர்.

இங்கே உத்ரா கடுமையானவள் கூட இல்லையே?

சற்றுத் தைரியமானவள்! அநியாயம் என்று பட்டுவிட்டால் தட்டிக் கேட்கும் துணிச்சல்மிக்கவள்!

துணிச்சல்மிக்கவர்களிடம் மென்மை இருக்காது என்று யார் சொன்னதோ?

முகிலுக்கு அது வித்தியாசமாகத்தான் தெரிந்தது.

“உங்க பைனல் இயர் முடிய இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. அதுக்குள்ள என் காதலை உங்ககிட்ட சொல்லிடணும்னு தான் இந்த நாளை தேர்ந்தெடுத்தேன். இப்போ திடீர்னு வந்து என் லவ்வை சொன்னது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்.

கொஞ்ச நாள் என் காதலைப் பற்றி யோசிங்க. என்னைப் பத்தி யார்கிட்டயாவது விசாரிக்கணும்னாலும் கூட விசாரிங்க. கல்யாணம்னா பொண்ணு பத்தி விசாரிக்க மாட்டோமா என்ன?

அது போல் விசாரிங்க. அப்புறம் என்னைப் பிடிச்சுருந்தா வந்து சொல்லுங்க. உங்க பதிலுக்காகக் காத்திருக்கேன்…” என்ற உத்ரா அவனின் முகத்தை ஆசையாகப் பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் படபடவெனச் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுக் கிளம்பிய போது தான் அது வரை அதிர்ச்சியில் உறைந்திருந்த முகில் பட்டென்று தலையைக் குலுக்கிக் கொண்டு நிகழ்வுக்கு வந்தான்.

“உத்ரா நில்லு…” நடந்து கொண்டிருந்தவளை வேகமாக நிறுத்தினான்.

அவள் சட்டென்று நின்று அவனின் புறம் திரும்பினாள்.

“என் பதிலை தெரிஞ்சுக்கிட்டுப் போ…” என்றான்.

மீண்டும் அவனின் அருகில் வந்தவள், “இல்ல முகில், நீங்க நல்லா யோசிச்சுட்டு…” என்று அவள் சொல்லும் போதே,

“யோசிக்க ஒன்னுமில்லை உத்ரா…” என்று இடைவெட்டினான்.

“ஏன் முகில்?” என்று கேட்டவளிடம் லேசான பதட்டம்.

“உன்னைப் பத்தி யோசிக்கவோ, விசாரிக்கவோ எதுவுமில்லை உத்ரா…”

“முகில்…” என்று அவள் தயக்கமாக அழைக்க,

“உன்னைப் பத்தி விசாரிக்க என்ன இருக்கு உத்ரா? நீ எப்படிப்பட்டவள்னு எனக்கே தெரியும் போது தனியா விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை…” என்றான் உறுதியாக.

‘என்ன தெரியும் என்பது போல?’ அவள் யோசனையுடன் பார்த்தாள்.

“நீ சரியான கோபக்காரி. எதுக்கு எடுத்தாலும் சண்டைப் போடுறவ. யார்கூடச் சண்டைப் போடலாம்னு எந்த நேரமும் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்ப்பவள். சட்டுசட்டுனு கை நீட்டி அடிக்கிறவள்னு தான் எனக்குத் தெரியுமே. இதுக்கு மேல தெரியுறதுக்கு என்ன இருக்கு?”

“நான் தேவையில்லாம யார் கூடவும் சண்டைப் போடலை முகில்…”

“தேவை இருக்கோ இல்லையோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா உன்னை நான் நல்லவிதமா பார்த்ததை விடச் சண்டைக்காரியாத்தான் அதிகம் பார்த்திருக்கேன்…”

“அது என்னோட துரதஷ்டம் தான் முகில். என்னைக்காவது நீங்க என்னைப் பார்க்க மாட்டீங்களான்னு பல நாள் உங்க பின்னாடி எதிர்பார்ப்போட சுத்தியிருக்கேன். ஆனா நீங்க ஒரு நாள் கூட அப்போ என்னைப் பார்க்கலை…” என்றவளின் குரலில் வருத்தம் இருந்தது.

அவள் தன் பின்னால் சுற்றினாள் என்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஒருத்தி தன் பின்னால் சுற்றியது கூடத் தெரியாமல் இருந்திருக்கிறோமே என்று அவனின் மீதே அவனுக்குக் கோபம் வந்தது.

தெரிந்திருந்தால் இதற்கு முன்பே முற்றுப்புள்ளி வைத்திருக்கலாமே என்று தான் தோன்றியது.

இப்போதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை. இந்த நொடியில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று நினைத்தவன் பேச ஆரம்பித்தான்.

“எனக்கு எந்தச் சண்டை சச்சரவும் பிடிக்காது உத்ரா. என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலை அமைதியா இருக்கணும் என்பது தான் என்னோட விருப்பம். வழிய சண்டை வந்தாலும் விலகிப் போறவன் நான்.

ஆனா வழிய போய்ச் சண்டையை இழுத்து விடுகிறவள் நீ. அதுக்கு உதாரணமா அன்னைக்குக் குருவை அடிச்சது, உன் கிளாஸ் பையனை அடிச்சது, ஏன் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூடக் குருகிட்ட சண்டை போட்டவள் தானே நீ…” என்றான்.

“இந்தச் சம்பவங்களை மட்டுமே வச்சு என் கேரக்டரை முடிவு பண்ணாதீங்க முகில். இந்தச் சம்பவங்கள் நடந்த சூழ்நிலை பற்றி உங்களுக்குத் தெரிஞ்சாலே என்னைப் பத்திப் புரிஞ்சிப்பீங்க…” என்றாள்.

“இல்ல…” என்று அவன் ஏதோ சொல்ல வர,

“இப்படிக் காரணம் சொல்லி என் செயல்களை விளக்கித் தெளிவுபடுத்தித் தான் என்னைப் புரிய வைக்க வேண்டியது இருக்கே என்று நினைக்கும் போது கஷ்டமாத்தான் இருக்கு முகில்.

ஆனால் சில நேரம் பேசினால் தான் என் பக்க நியாயமும் புரியும் என்னும் போது என் செயல்களைத் தெளிவுபடுத்த பேச வேண்டியது கட்டாயமா ஆகிடுது முகில். ப்ளீஸ் கொஞ்ச நேரம் பொறுமையா கேளுங்க…” என்றாள்.

அவள் சொல்லும் விளக்கத்தை எல்லாம் கேட்க அவனுக்குப் பொறுமையே இல்லை. அப்படி என்ன பெரிதாகச் சொல்லி விடப் போகிறாள் என்ற அலட்சியம் தான் வந்தது.

“குருவை அடிச்சதுக்குக் காரணம் ஓரளவு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அதோட அதில் என் ப்ரண்டோட பர்சனலும் அடங்கியிருக்கு. என் கிளாஸ் பையனை அடிச்ச காரணம் என் அப்பா, அம்மாகிட்ட கூடச் சொல்லலை. ஏன் என் பிரண்ட்ஸ்கிட்ட கூடச் சொல்லலை.

ஆனா உங்ககிட்ட சொல்ல எனக்கு எந்தத் தயங்கமும் இல்லை. ஒரு பொண்ணு மத்தவங்ககிட்ட சொல்ல தயங்குற விஷயத்தைத் தனக்கு உரிமையானவனிடம் எந்தத் தயக்கமும் இல்லாம சொல்லுவா.

உங்களை என் உரிமையானவராத்தான் நினைக்கிறேன்…” என்றவள் சில நொடிகள் மௌனமாக இருந்தாள்.

அவளின் தயக்கத்தை வினோதமாகப் பார்த்தான் முகில்வண்ணன். அதோடு அவள் தன்னை உரிமையானவன் என்று சொன்னது மனதை நெருடியது.

தன் தொண்டையை லேசாகச் செருமி கொண்டவள், “அன்னைக்குக் கிளாஸ் போர்ட்ல பூக்கள் படம் வரைஞ்சிருந்தது. அந்தப் பூக்களைப் பார்த்துத் தான் கமெண்ட் அடிச்சான்…” என்றவள் மேலே சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

“ம்ப்ச், அவன் கூசாம சொல்லிட்டான். என்னால் இன்னும் அதை ஜீரணிக்க முடியலை முகில். பூவை ரசிப்பதைக் கூட ஒரு பொண்ணோட அந்தரங்கத்தோட சம்பந்தப்படுத்தி ரசிக்கும் வக்கிரபுத்தி அவனுக்கு.

அந்தப் பூக்களை வரைஞ்சது நான் தான். நான் என்னையே வரைஞ்சது போலச் சொல்லி அவன் என்னையும் சேர்த்துத் தான் கமெண்ட் அடிச்சான்…” என்று சொல்லிவிட்டு லேசான சங்கடத்துடன் அவன் முகம் பார்த்தாள் உத்ரா.

கேட்ட முகிலுக்கு என்ன ரியாக்ஷன் காட்டுவது என்றே புரியவில்லை. சில நொடிகள் ஸ்தம்பித்து நின்று விட்டான்.

இப்படி ஒரு காரணத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவளின் சங்கடம் அவனுக்குப் புரிந்தது.

ஆனால் அதற்காக…? என்று நினைத்தவன் அதற்கு மேல் யோசிக்க மறுத்தான்.

“இதை நான் யார்கிட்ட சொல்ல முடியும்? அதான் சஸ்பெண்ட் ஆனாலும் பரவாயில்லைனு பிரின்ஸ்பால் கேட்டப்ப கூடச் சொல்லலை…”

“இப்போ குருக்கிட்ட சண்டை போட்டதா சொன்னீங்க. ஆனா ஏன் தெரியுமா?” என்றவள் அவன் முகம் பார்த்தாள்.

அவனோ எந்தச் சலனமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான்.

“இன்னைக்கு நான் பரதம் ஆடப் பரதநாட்டிய ட்ரெஸ் போட்டுருக்கணும். ஆனா நான் ஒரு பொண்ணுக்கிட்ட சுடிதார் கடன் வாங்கி டான்ஸ் ஆடினேன். காரணம் குரு தான். என் பரதநாட்டிய ட்ரெஸை கிழிச்சுட்டான். அதுக்கு அவன்கிட்ட சண்டை கூடப் போடலை. ஏன் கிழிச்சன்னு தான் கேட்டேன்…” என்றாள்.

“ஏன் கிழிச்சிருக்கப் போறான்? நீ அவனை அடிச்ச. அவன் பதிலுக்கு அந்த வேலை பார்த்துட்டான். சோ, இதில் முதல் காரணம் நீ தான். உன்னோட திமிரான பழக்கம் தான் காரணம்…” என்று அவளையே குற்றம் சொன்னான் முகில்வண்ணன்.

“அவன் பக்கம் தப்பு இருக்கப் போய்த்தானே முகில் நான் தலையிட்டேன். என்ன நடந்தாலும் அமைதியா போனா அவன் செய்த தப்பை யார் சொல்றது முகில்?”

“அவன் செய்த தப்பை சொல்ல நீ யார்? அவன் என்னமோ செய்துட்டுப் போறான்னு இருக்க வேண்டியது தானே? ஆனா நீ இருக்க மாட்ட. ஏன்னா உன் பிகேவியர் அப்படித்தான். எப்போ, எங்கே வம்பு கிடைக்கும் சண்டை போடலாம். அவங்களை அடிக்கலாம்னு காத்திருக்கிற நீ எல்லாம் எனக்குச் செட் ஆக மாட்ட…” என்றான் கடுமையாக.

“கண்ணு முன்னாடி ஒரு பிரச்சனை நடக்குறப்பவும், என்னை அநாகரிகமா பேசினாலும் கண்டுக்காம போனால் தான் நான் நல்ல பொண்ணா? உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை முகில்…”

“நீ நல்ல பொண்ணா கெட்டப் பொண்ணான்னு எல்லாம் நான் ஆராய்ச்சி பண்ணலை. அது எனக்குத் தேவையும் இல்லை. எனக்குன்னு வர்ற பொண்ணு அமைதியானவளா இருக்கணும்.

என்னோட வாழ்க்கையை நிம்மதியா கொண்டு போறவளா, அதை மேலும் அழகாக்குறவளா தான் எனக்கு வேணுமே தவிர, எந்த நேரம் என்ன வம்பை இழுத்துட்டு வருவாளோன்னு பயப்பட வைக்கிற உன்னைப் போல ஆள் இல்லை…”

அவனின் பேச்சில் ஒரு எரிச்சல், ஒவ்வாமை, நீ எல்லாம் என் பக்கத்தில் நிற்க கூடத் தகுதியில்லாதவள் என்ற பாவனையை ஒவ்வொரு வார்த்தையிலும் வெளியிட்டான் முகில்வண்ணன்.

தான் விரும்புகிறவன் வாயிலிருந்து தன்னைப் பற்றி வந்த வன்மையான வார்த்தைகளைக் கேட்க முடியாமல் கண்களில் வலியைத் தேக்கி அவனைப் பார்த்தாள் உத்ரா.

அவன் அமைதி விரும்பி என்று அவளுக்குத் தெரியும். அந்த அமைதிதான் அவளை ஈர்த்தது என்று சொல்ல வேண்டும். தாங்கள் இருவருமே குணத்தில் வித்தியாசப்பட்டவர்கள் என்று அவளுக்குத் தெரிந்தே தான் அவனை விரும்பினாள்.

விருப்பம்! இன்னார் இன்னாரைத்தான் விரும்ப வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு வருவது இல்லையே?

ஆரம்பத்தில் தன்னை ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும், யோசித்து, தன்னைப் புரிந்து கொண்டு நல்ல பதிலை சொல்லுவான் என்ற எதிர்ப்பார்ப்பு அவளிடம் இருந்தது.

ஆனால் முகில்வண்ணன் அவளைப் பற்றிச் சிறிதும் யோசிக்க விரும்பவில்லை. அவன் பார்த்தவரையில் உத்ராவின் நடவடிக்கைகள் எதுவுமே அவனுக்கு உவப்பானதாக இருந்தது இல்லை.

அவளுடன் பாட்டுப் பாடவே நிறைய யோசித்தவன் அவன். தான் மறுத்துக் கொண்டே இருந்தால் அதுவே தன்னையும், அவளையும் இணைத்துக் கவனித்துப் பார்க்க வைத்து விடுமோ என்று நினைத்தே அவளுடன் பாட சரி என்று சொன்னான்.

பாடி முடித்தவுடன் ‘ஹப்பா! இனி அவள் அருகில் இருக்கும் தொல்லை இல்லை’ என்ற நிம்மதி தான் அவனுக்கு உண்டானது.

ஒருவரை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தால் அவர்கள் நல்லதே செய்தாலும் அது தவறாகத் தான் தெரியும்.

உத்ரா இப்படிப்பட்ட பெண் தான் என்று ஒரு முத்திரையை அவனின் மூளையில் பதித்து வைத்திருந்தான் முகில்வண்ணன்.

அதைத் தாண்டி சிந்திக்க அவன் முயலவில்லை. முயல அவனுக்கு விருப்பமும் இல்லை என்பதே உண்மை.

சாதாரணமாகவே தன்னுடன் அவளின் பெயர் பேசப்பட்டு விடக்கூடாது என்று நினைப்பவன் வாழ்க்கை துணையாக நினைக்க யோசிப்பானா என்ன? யோசிக்காமல் வார்த்தையை விட ஆரம்பித்தான்.

“அதை விட இப்போ கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாம நீயே வந்து காதலை சொல்ற. விசாரிக்கச் சொல்ற. உரிமையானவன்னு என் சம்மதம் இல்லாமலேயே நீயே உரிமையை எடுத்துக்கிற. இந்த மாதிரியான உன்னோட அதிரடி எல்லாம் எனக்குச் சரிவராது.

எல்லாத்தையும் விட முக்கியமா என் வீட்டுக்கு ஒரு அமைதியான குணமான பொண்ணைத்தான் என் பெத்தவங்க மருமகளா கொண்டு வர நினைப்பாங்க. அவங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நீயும் இல்லை. உன்னைப் போல ஒரு பொண்ணு எனக்குத் தேவையும் இல்லை.

நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும், யாரை விரும்பணும்னு நானே முடிவு பண்ணிக்கிறேன். இன்னொரு முறை காதல், யோசிங்க, முடிவு சொல்லுங்கன்னு என் முன்னாடி வந்து நின்னுடாதே. உன்னைத் திரும்பப் பார்க்க கூட எனக்கு விருப்பம் இல்லை.

என் நிம்மதிக்கு உலை வைக்கும் எதையும் என் வாழ்க்கையில் நான் அனுமதிப்பது இல்லை. உன் வழி வேற, என் வழி வேற. என் வழியில் இனி குறுக்கிடாதே!” என்றவன் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டான்.

அவளின் மனம் கவர்ந்தவன் தன் உணர்வுகளை, காதலை கொன்று விட்டுச் செல்வதை உணர்வுகளற்று உறைந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் உத்ரா.