5 – ஞாபகம் முழுவதும் நீயே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம்- 5
கவின் அவன் அன்னைக்குச் சந்தோஷமாக முத்தம் கொடுக்க… மகனை செல்லமாக முறைத்து ‘அப்படியே அப்பா போலப் பிடிவாதம்’ என்று அலுத்துக் கொண்டாள் பவ்யா.

மேலே கவினைத் தூக்கி சென்றவளை, அங்கே மூன்று அறைகள் இருந்தும் சரியாக வினய்யின் அறையின் புறம் கைகாட்டி அங்கே போகச் சொன்னான்.

கணவனின் அறையைக் கண்டதும் பவ்யா உள்ளே செல்ல தயங்கி நிற்க, அன்னை தன்னை அழைத்துச் செல்லாமல் தாமதிப்பதைப் பொறுக்க முடியாமல், அந்த அறையின் கதவையே வெறித்துக் கொண்டிருந்தவளின் தோளில் கைவைத்து உலுக்கினான். மகனை திரும்பி பார்த்து, “இன்னைக்கு நீ ரொம்பச் சேட்டை செய்ற…” என்று கடிந்து கொள்ள, கவினின் முகம் சுருங்கியே போனது.

மகனின் முகத்தை அப்படிப் பார்க்க முடியாமல் வெளியே தாழ் மட்டும் போட்டிருந்த கதவை திறந்து தயக்கத்துடன் உள்ளே அடி எடுத்து வைத்தவளின் மேனியில் சிலிர்ப்பு ஓடிச்சென்றது.

யாரும் இப்போது உபயோகிக்காத அறை என்றாலும் அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதால் அறைச் சுத்தமாக இருந்தது.

உள்ளே கால் வைத்ததும் கவின், பவ்யாவின் இடுப்பை விட்டுக் கீழே இறங்கி தளிர் நடை போட்டு அறையைச் சுற்றி வர ஆரம்பித்தான்.

பவ்யா இந்த அறைக்குள் வந்து வருடங்கள் ஆகிவிட்டது. அறைக்குள் நுழைந்ததில் இருந்து தன் மண வாழ்க்கை முதல் முதலில் தொடங்கிய இடம் என்ற எண்ணம் அவளைத் தன் திருமணம் முடிந்த நாளுக்கு இழுத்துச் செல்ல முயன்றது.

கவின் அறைக்குள் நுழைந்ததும் அங்கே இருந்த பொருட்கள் அனைத்தையும் தொட்டு பார்த்தவன் இறுதியாகச் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தின் முன் வந்து நின்றான்.

அது வினய்யும், பவ்யாவும் மணக்கோலத்தில் இருந்த பெரிய புகைப்படம். அதைப் பார்த்து “ம்மா… ப்பா” என்று அழைத்துக் கொண்டே அவனுக்கு எட்டாத தூரத்தில் இருந்த படத்தைத் தொட முயல, நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டிருந்த பவ்யா மகனின் அழைப்பில் அருகில் சென்று அவனைத் தூக்கிக் கொண்டாள்.

புகைப்படம் எட்டும் தூரத்திற்கு வந்ததும் குதூகலித்த கவின் படத்தில் இருந்த அப்பா, அம்மாவின் பிம்பத்தைத் தடவித் தடவி பார்த்தான்.

கவின் தடவி கொண்டிருக்கும் போதே பவ்யாவின் கைகளும் நீண்டு படத்தைத் தொட்டது. குறிப்பாக வினய்யின் முகத்தை விரல்கள் வருட ஆரம்பித்தன.

தாங்கள் தம்பதிகளாக இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும், பவ்யாவின் மனது அந்த நொடிகளுக்கே பாய்ந்து சென்றுவிட்டது.

இன்பமும், துன்பமும் இணைந்தது தான் வாழ்க்கை என்பது போல, தன் வாழ்க்கையில் வந்த இன்பமான இனிய நினைவுகளையும், துன்பம் தந்து தன்னைத் தகிக்க வைத்த நினைவுகளையும் மனப்பெட்டகத்தில் இருந்து எடுத்து பார்க்க ஆரம்பித்தாள்.

****

அன்று வார விடுமுறை என்பதால் வரும் நாட்களுக்குத் தேவையான வீட்டுப் பொருட்களை வாங்கி வைத்து விட்டு வீட்டை ஒதுங்க வைத்தான். அப்பொழுது அவனின் தொலைபேசியில் ஏதோ குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வர எடுத்துப் பார்த்தான் வினய்.

அது ஒரு மின்னஞ்சல். யார் அனுப்பியது என்று பார்க்க பவ்யாவின் பெயர் அதில் தெரிந்தது.

என்றும் போல் இன்றும் அவள் பெயரை பார்த்ததும் அதை அலட்சியப்படுத்திவிட்டு, வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு மாலையளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றான்.

அவன் சென்று நின்ற இடம் ஒரு பப். வழக்கம் போல மதுவை வாங்கி வாயில் சரித்துக் கொண்டு, அங்கே ஆடிக் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அன்று ஒரு நாள் இரவு பாடலில் வந்த தந்தை, குழந்தை காட்சியைப் பார்த்துவிட்டு அப்போது மட்டுமே குடிக்காமல் பாட்டிலை கீழே வைத்தான்.

ஆனால் அதன் பிறகு பழகிய பழக்கம் என்னை எடுத்துக் கொள் என அவன் மூளையைப் பிராண்ட திரும்பவும் குடிக்க ஆரம்பித்தவன், அதன் பிறகு அந்த மது செய்த மாயத்தில் அவன் பார்த்த அந்தக் காட்சி கூட இப்போது ஞாபகத்தில் இல்லை.

அதன் பின் மது வினய்யை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டது.

மதுவில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தவனின் எதிரே “ஹாய் வினய்!” என்று ஆர்ப்பாட்டமாக அழைத்துக் கொண்டே வந்து நின்றாள் எலீனா.

வினய் அவளின் வரவை புரியாத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவனின் அருகில் ஒரு இருக்கையை நெருக்கி போட்டு அமர்ந்தவள்,

(ஆங்கில உரையாடல்) “வீக்லி நீ இங்க வருவேன்னு தெரியும் வினய். அதான் நானும் வழக்கமா போற பப் போகாம உன்னைப் பார்க்கவே இங்க வந்துட்டேன்” என்றவள் அவனின் ஒரு கையை எடுத்து தன் கைக்குள் பிணைத்துக் கொண்டாள்.

அவள் ‘ஹாய்’ சொன்ன போது பதிலுக்கு ‘ஹாய்’ மட்டும் சொன்ன வினய் திரும்ப மதுவை உறிஞ்ச ஆரம்பித்தான்.

அவள் கையைப் பிணைத்துக் கொண்ட போது இருவர் கையையும் ஒரு நொடி கூர்ந்து பார்த்தவன் பின்பு எதுவும் சொல்லாமல் கருமமே கண்ணாயிருந்தான்.

எலீனா அவன் கையைப் பிடித்துக் கொண்டே தான் வாங்கியிருந்த மதுவை உறிஞ்சியவள் “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வினய்” என்று அவனைக் கண்ணால் பருகிக் கொண்டே சொல்ல…

வினய் அமைதியாக “பேசு எலீனா!” என்றான்.

இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எலீனா ஏதோ கேட்க அதற்கு வினய் அலட்டாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஒருகட்டத்தில் பேசிக் கொண்டே வினய் பிணைந்திருந்த தங்கள் கையைப் பார்க்க, அதைப் புரிந்த எலீனாவும் தன் கையை விலக்கிக் கொண்டாள்.

கைகள் விலகியதும் அவளைப் பார்த்து இதழ் பிரியாத புன்னகை ஒன்றை சிந்தியவன் பேச்சை நிறுத்தி விட்டு குடிக்க ஆரம்பித்தான்.

அவளும் சட்டென்று அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விட்டாள்.

அவள் செல்வதைப் பற்றிக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் மது அருந்துவது ஒன்றே தன் கடமை என்பது போல அதை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான் வினய்.

அப்போது அவனின் எதிரே மீண்டும் நிழலாட இப்பொழுது யார் என்பது போல நிமிர்ந்து பார்க்க, ரிதேஷ் நின்றிருந்தான்.

அவனை இந்த நேரத்தில் இங்கே வந்ததை ஆச்சரியமாகப் பார்த்தவன் “என்ன ரிதேஷ்… நீ எப்படி இந்த நேரத்தில் ஷீலுவை தனியா விட்டுட்டு வந்த?” என்று கேட்க…

“ஒன்னும் இல்லை வினய். இன்னைக்குக் கொஞ்சம் டென்ஷனா இருந்துச்சு. அதான் ஷீலுவை சமாளிச்சிட்டு இங்கே வந்தேன். மாத்திரை போட்டு தூங்கிட்டா. அதுனால தான் ரிலாக்ஸா இங்க வந்துட்டேன். சரி அது இருக்கட்டும். நான் உள்ள வரும் போது உன்கிட்ட எலீனா என்னமோ பேசிட்டு இருந்ததைப் பார்த்தேன். என்ன விஷயம்? உன்னைத் தேடி இங்கேயே வந்துட்டா?” என்று விஷமமாகக் கண் சிமிட்டியபடி கேட்டான்.

அவனில் கிண்டலில் வறட்சியாகச் சிரித்தவன் “நீ சொன்னது தான். அவ என்னை விரும்புறா போலனு சொன்ன இல்ல? அதைத் தான் அவ சொல்லிட்டு போறா” என்று வறண்ட குரலில் சொன்னான்.

“வாவ்…! சூப்பர் வினய்! ஆமா நீ சம்மதம் சொல்லிட்டியா?” என்று ரிதேஷ் பரபரப்பாகக் கேட்டான்.

“ப்ச்ச்…! நடக்காத காரியத்தை இனி பேசாதேனு சொல்லி அனுப்பி வைச்சேன்” என்று அலட்சியமாகச் சொல்ல…

“என்ன சொல்ற வினய்? ஏன் நடக்காது? ஒருவேளை வெளிநாட்டு பொண்ணுனா உன் வீட்டில் வேணாம்னு சொல்லிருவாங்களா?” என்று கேட்டவனை அழுத்தமாகப் பார்த்து, “அது தெரியலை. ஆனா நான் கல்யாணம் முடிச்சா என்னைப் பிடிச்சு ஜெயிலில் வேணா போடுவாங்க” என்றான்.

“என்ன வினய் இதுக்குப் போய் ஜெயிலில் போடுவாங்களா? என்ன தண்ணி அதிகமாகி உளறுரியா?” என்று கேட்டான்.

“நான் உளறலை தெளிவாத்தான் இருக்கேன். முதல் பொண்டாட்டி இருக்கும் போது இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஜெயிலில் போடாம என்ன பண்ணுவாங்க?” என்று சொல்ல…

தன் மதுவை குடித்துக் கொண்டிருந்த ரிதேஷிற்கு புரை ஏறியது.

தன் தலையைத் தானே தட்டி சமாளித்தவன் “என்ன உனக்குக் கல்யாணம் ஆகிருச்சா?” என்று முகத்தில் அதீத அதிர்ச்சியைக் காட்டி கேட்டான்.

“ஹ்ம்ம்…!” என்று தலையசைத்த வினய் அமைதியாக இருந்தான்.

“ஓ…!” என்று கேட்ட ரிதேஷும் சிறிது நேரம் அமைதி காத்தவன் “சொல்லவே இல்லை?” என்று மெதுவாகக் கேட்டான்.

ஏற்கெனவே ரிதேஷிடம் மறைத்ததில் குற்ற உணர்வில் இருந்த வினய் இப்போது எப்படி இவனுக்கு விளக்க என்று புரியாமல் அமைதியாக இருந்தான்.

பின்பு மெல்ல “சாரி ரிதேஷ்! சொல்லக் கூடாதுன்னு இல்ல. சொல்ல சந்தர்ப்பம் வரலை. ரியலி சாரி” என்றான்.

ரிதேஷுக்கும் நண்பனாகப் பழகியும் அவன் தன் திருமணத்தைப் பற்றி இத்தனை நாட்கள் வினய் தன்னிடம் சொல்லாத வருத்தம் இருந்தது. ஆனால் சாரி கேட்பவனிடம் இதற்கு மேல் என்ன சொல்ல என்று மௌனமாக இருந்தான். பின்பு மெல்ல “எப்போ?” என்று கேட்டான்.

“நாலு வருஷம் ஆகப் போகுது” என்று சொல்லி நிறுத்தியவன், பின்பு தொடர்ந்து மெல்லிய குரலில் “ஒரு பையன் இருக்கான்” என்றான்.

ரிதேஷ் இப்பொழுது முன்பை விட அதிர்ச்சியைக் காட்டினான். தான் இத்தனை நாளும் சொல்லாதது நண்பனை அதிர்ச்சி அடைய வைத்து விட்டது என்று புரிந்து கொண்ட வினய் என்ன சொல்லி அவனைச் சமாதானம் சொல்வது என்று புரியாமல் வினய்யும் பேசாமல் அமர்ந்திருந்தான்.

தான் வாங்கி வந்த மொத்த மதுவையும் தன் தொண்டையில் சரித்துக் கொண்ட ரிதேஷ் “ஆனா நீ உன் குடும்பத்தைப் பற்றி ஒன்னும் சொன்னதே இல்லையே? அட்லீஸ்ட் உன் பையனை பற்றிச் சாதாரணமா கூடப் பேசலை?” என்று கேட்டான்.

அதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் சிறிது தயங்கிய வினய் “நான் இன்னும் அவனைப் பார்த்ததே இல்ல” என்று முணுமுணுப்பாய்ச் சொன்னான்.

“என்…என்ன…?” என்று திகைத்த ரிதேஷ் இவ்வளவு நேரம் ஏறிய போதை இறங்கியது போலத் தன் தலையில் வேகமாகத் தட்டிக் கொண்டான். தான் இன்று அதிக அதிர்வை நண்பனுக்குத் தந்து விட்டோம் என்று எண்ணி “ம்ம்…” என்று மட்டும் முணங்கிய வினய், “என் வொய்ப்க்கும் எனக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் அதான்” என்று மட்டும் சொல்லி நிறுத்தினான்.

“ஓ…!” என ரிதேஷ் “அப்படி என்ன பிரச்சனைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? பிள்ளையைக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளவு பெரிய பிரச்சனையா?” என்று கேட்டான்.

அவன் கேள்வியில் வினய்யின் முகம் யோசனையில் சுருங்கியது. ஏனெனில் இந்தக் கேள்வி அவனே அவனைச் சிறிது நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்த கேள்வி. அதற்குத் தன் மனதிற்கே பதில் சொல்ல முடியாமல் தான் எதையும் யோசிக்க விரும்பாமல் இருந்தான்.

இப்போது ரிதேஷின் கேள்வியில் யோசனை சுழல “ஒரு சின்னப் பிரச்சனை தான்” என்று நண்பனுக்குப் பதில் சொல்வது போல மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.

தான் சொன்ன வார்த்தை அவனுக்கே உரைக்க “சின்னப் பிரச்சனை தானோ?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.

வினய் தான் இதுநாள் வரை பெரிய பிரச்சனையாக நினைத்துக் கொண்டிருந்த காரணத்தை ரிதேஷிடம் சொல்ல ஆரம்பித்தான்.

***

ரங்கநாதன் சிறிய அளவில் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஆரம்பித்துப் படிப்படியாக உயர்ந்தவர்.

ரங்கநாதன், அம்பிகா தம்பதிகளுக்கு ஒரே மகனாக இருந்த வினய் செல்லமாக வளர்க்கப் பட்டான்.

அந்தச் செல்லம் தன் முடிவு மட்டுமே தனக்கு உயர்ந்தது என்ற எண்ணத்தை கொடுத்ததோடு அது வலுவாக அவனிடம் ஆட்சி செய்ய ஆரம்பித்தது.

மகனின் எண்ணத்தைப் பற்றி அறியாத ரங்கநாதன் அவன் பள்ளிப் படிப்பை முடித்ததும் வெளிநாட்டிற்கு அனுப்பிப் படிக்க வைக்க ஆசைப் பட்டார்.

அவரின் ஆசையை அறிந்ததும் முதல் ஆளாய் எதிர்த்தார் அம்பிகா.

இருப்பது ஒரு மகன் அவனையும் தொலைத்தூரத்திற்கு அனுப்பி வைத்து பிரிய முடியாது என்று.

ஆனால் இப்போது வெளிநாட்டில் சென்று படிப்பது தான் பெருமை என்று சொல்லி அம்பிகாவை சமாளித்து வினய்யை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்புவதில் உறுதியாக இருந்தார் ரங்கநாதன். அந்த அவரின் உறுதி தான் பின்னால் வரப் போகும் பிரச்சனைக்கு ஆரம்பப்புள்ளி என்று அப்போது அவர் அறியாமல் போனார்.

ரங்கநாதனுக்கு மகன் வெளிநாட்டில் படிப்பது பெருமை என்றால், வினய்க்கு வெளிநாட்டிற்குச் செல்வதில் அதீத ஆசை இருந்தது.

அந்த ஆசைக்கு அம்பிகா மறுப்பு தெரிவிக்கவும், தன் அம்மாவை கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வைத்தான். அவனின் விருப்பம் அறிந்து அவனிடம் சில உறுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு அவன் வெளிநாடு சென்று படிக்கச் சம்மதித்தார் அம்பிகா.

அதன் பிறகு ஏற்பாடுகள் துரித வேகத்தில் நடக்க அமெரிக்காவில் உள்ள ஒரு உயர் தர கல்லூரியில் வினய் சேர்ந்தான்.

அதுவரை எல்லாமே சீராகத் தான் நடந்தன. நாட்கள் செல்ல செல்ல தான் வினய்யிடம் மாற்றம் வர ஆரம்பித்தது. அது அவனின் குணத்தையும் நன்றாக மாற்றியிருந்தது.

அது வெளிநாட்டு மோகம். ஆம்! வினய்க்கு வெளிநாட்டு சூழல் அந்த அளவு பிடித்திருந்தது. நம் நாட்டைப் போல இல்லாத அங்கிருந்த சுத்தமும், தனித்துச் செயல்படும் சுதந்திரமும், அவன் கண்ணோட்டத்தில் கண்ட அந்நாட்டின் பகட்டான வாழ்வும், அவனுக்கு ஒரு வித போதையைத் தர வெளிநாட்டு வாழ்க்கை மட்டுமே உயர்ந்தது என்ற எண்ணத்தை வலுவாகத் தன் மனதிற்குள் ஏற்றி வைத்துக் கொண்டான். அதன் பலன் தாய், தந்தையைக் கூட விடுமுறையில் பார்க்க வராமல், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அங்கேயே தங்கிக் கொண்டான்.

மகனின் மாற்றத்தில் வருந்திய ரங்கநாதன் தான் தவறு செய்து விட்டதாக எண்ண ஆரம்பித்தார்.

அம்பிகாவும் அடிக்கடி அவனுக்குப் போன் செய்து வர வைக்கப் போராடினார். அவர்களின் பேச்சில் சலித்துப் போனவன் ஒரு விடுமுறையில் சென்னை வந்திறங்கினான்.

முழுதாக மூன்று வருடம் கழித்து மகனை கண்டதில் அம்பிகா பூரித்துப் போனார். ஆனால் அதிகமும் சந்தோஷப்பட முடியாமல் அவனின் பழக்க வழக்கங்கள் நிறைய மாறியிருந்தன.

அவனின் அதீத உடை தேர்வும், எப்போதும் சென்னையைக் குறை சொல்வதும், “இங்கே எல்லாம் மனுஷன் இருப்பானா? இது எல்லாம் ஒரு ஊரா? ஆனா அங்கே எப்படி இருக்கும் தெரியுமா? அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் ஏணி வச்சாலும் எட்டாது” என்று ஏதாவது ஒரு குறை என்று, அவனின் வாயில் இருந்து தன் ஊரை பற்றிய குறைகள் மட்டுமே வர ஆரம்பித்தன.

அவன் அப்படிப் பேசும் போதெல்லாம் அம்பிகாவிடம் இருந்து ரங்கநாதனுக்கு ஒரு முறைப்பு போகும்.

“நான் என்னம்மா செய்றது? இவன் இப்படி மாறிப்போவான்னு நான் என்ன கனவா கண்டேன்?” என்று மனைவியைச் சமாதானம் செய்வார்.

ஊரைப் பற்றிக் குறைவாகப் பேசினாலும் ஒருமாதம் தாய், தந்தையுடன் சந்தோஷமாகவே இருந்து விட்டுச் சென்றான்.

ஆனால் அதன் பிறகு அவன் வந்தது தன் அன்னையை இறுதியாகப் பார்க்கத்தான்.