4 – ஞாபகம் முழுவதும் நீயே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்– 4
தானே கேட்டும் தன் மாமனார் இந்த வீட்டிற்குத் தன்னை இப்பொழுது வர வேண்டாம் என்று சொன்னதும் அதிர்ந்து பார்த்தப் பவ்யாவைப் பார்த்து “என்னம்மா… எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி? இங்க இருந்து நீ போனதை விரும்பாத நானே இப்படிச் சொல்றேன்னா?” என்று அவரே அவளின் அதிர்ச்சியின் காரணம் புரிந்து கேட்டார்.
பவ்யா ‘ஆமாம்’ என்பது போலத் தலையாட்ட “நீ இப்ப எனக்கு அடிபட்ட ஷாக்ல இப்படிப் பேசுறமா. ஆனா உன் மனதைத் தொட்டுச் சொல்லு. நீ ரொம்பச் சந்தோஷத்தோடயா இங்க வரப் போறதா சொன்ன?” என்று கேட்க…
பவ்யா பதில் சொல்ல முடியாமல் தலைக் குனிந்தாள்.
“நீ ஏன்மா தலைக் குனியுற? எனக்குத் தெரியும் உன் எண்ணம் என்னன்னு. அதன் படியே நடக்கட்டும்மா. நீ இந்த வீட்டுக்கு நிரந்தரமா வரும் போது உன் முழு மன சந்தோஷத்தோட தான் வரணும்” என்றார்.
அவர் தனக்காக யோசித்து இப்படிச் சொல்கிறார் என்பதைப் புரிந்தவள் “ஸாரி மாமா… உங்களுக்கு நல்ல மருமகளா கூட என்னால இருக்க முடியலை” என்று வருந்தி சொன்னாள்.
“அதெல்லாம் இல்லம்மா… நீ நல்ல மருமகள் தான். ஆனா நான் தான் வீட்டுக்கு அடங்காத ஒரு மகனைப் பெத்து வச்சு உன்னையும் இப்ப வருந்த வச்சுக்கிட்டு இருக்கேன். எல்லாம் பிள்ளையை வளர்க்க தெரியாம வளர்த்து வச்சதால வந்த வினை…! வினய்ன்னு பேரு வச்சா… அது சரியான வினையா இருக்கு” என்று மகனின் மீது இருந்த கோபத்துடன் பொரிந்தார்.
ரங்கநாதனின் மடியில் அமர்ந்திருந்த கவின், வினய் என்று தன் தந்தையின் பெயர் கேட்டதும் “ப்பா… ப்பா…!” என்று சந்தோசமாகச் சொல்லிச் சிரித்தான்.
அவனின் அந்தச் சந்தோஷ சிரிப்பைப் பார்த்துக் கண் கலங்கிய பவ்யா முகம் வாட…
“என் பேரன் நிலைமையை பார்… அவன் அப்பனை நேரில் கூடப் பார்க்காமல் வளர்ந்துக்கிட்டு இருக்கான். அப்பனோட பேரு கேட்டதுக்கே எப்படிச் சந்தோஷப்படுறான். அவன் கூடவே இருந்தா இந்தப் பிள்ளை எப்படிச் சந்தோஷப்படும்? அது எப்ப நடக்கப் போகுதோ போ” என்று வருந்தினார்.
“நடக்கும் மாமா… கவலைப்படாதீங்க!” என்று அவர் வருத்தம் பொறுக்காமல் பவ்யா ஆறுதல் படுத்தினாள்.
“நடந்தா சந்தோசம் தான்மா” என்று பெருமூச்சு விட்டார் ரங்கநாதன்.
“சரி மாமா… நீங்க ரெஸ்ட் எடுங்க! நான் இங்க இரண்டு நாள் இருந்து உங்களைப் பார்த்துக்குறேன். இப்ப எதைப் பத்தியும் யோசிக்காம அமைதியா தூங்குங்க!” என்ற பவ்யா “வா கவின்…! தாத்தா தூங்கட்டும். நாம வெளியே போய் விளையாடலாம்” என்று அவனைத் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.
வரவேற்பறைக்கு வந்தவளை அகிலம் வரவேற்றார். “இந்தாங்கமா இதைச் சாப்பிடுங்க…” என்று சிற்றுண்டியைத் தர அதை வாங்கிக் கவினுக்கு ஊட்டி விட்டு அவனைச் சிறிது நேரம் அங்கே விளையாட விட்டாள்.
பின்பு இரவு உணவை முடித்து ரங்கநாதனுக்கு உணவும், மாத்திரையும் கொடுத்து அவரைத் தூங்க வைத்துவிட்டு ஹாலுக்கு வந்தவளுக்கு இப்போது தான் எந்த அறையில் படுப்பது என்ற கேள்வியுடன் மாடி பக்கத்தைப் பார்த்தாள்.
மாடியில் இருக்கும் அறைகளில் ஒரு அறை தான் வினய்யின் அறை. ஏனோ அங்கே செல்ல மனம் வரவே இல்லை.
தம்பதிகளாகச் சில நாட்கள் நகமும் சதையும் போலப் பிணைந்திருந்ததற்கு அந்த அறையின் ஒவ்வொரு மூலையும் சாட்சியாக இருந்ததை நினைத்துப் பார்த்தவளுக்குத் தன்னையறியாமல் கண்கலங்க ஆரம்பித்தது. அதனுடன் தனிமையையும் தந்து தன்னைத் தவிக்க வைத்த அந்த அறைக்குச் செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
அகிலம் அவர் வீட்டிற்குச் சென்று விட்டதால் மகனுடன் அந்த ஹாலிலேயே நின்று தடுமாறிக் கொண்டிருந்தவளைக் கவினின் பேச்சு அவளின் கவனத்தைக் கலைத்தது.
இவன் யாரிடம் பேசுகிறான் என்பது போலக் கவினைப் பார்க்க அவன் அங்கே தொலைக்காட்சி பெட்டியின் மீதிருந்த வினய்யின் புகைப்படத்தைப் பார்த்து “ப்பா வா…!” என்று அழைத்துக் கொண்டிருந்தான்.
பிள்ளையின் பேச்சில் கலங்கி மட்டும் இருந்த கண்ணில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கவின் அந்தப் புகைப்படத்தை எடுக்கக் கால்களை எக்கிக் கொண்டிருக்கத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு வேகமாக மகனின் அருகில் சென்று அவனைத் தூக்கினாள்.
அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்ட கவின் “ம்மா… ப்பா பாரு!” என்று வினய்யின் புகைப்படத்தைப் பார்த்துக் குதூகலித்தான்.
கவினுக்கு இங்கேயும் அவனின் தந்தையின் புகைப்படத்தைப் பார்த்த சந்தோசம். அதைக் குதூகலத்துடன் வெளியிட்டான்.
“ஆமாடா… அப்பாதான்! அப்பா இங்கேயும் இருக்கார்” என்று கரகரத்தக் குரலில், வெளியே மட்டும் போலிப் புன்னகையைப் பூசி சொன்ன பவ்யா, மெதுவாக வேறு பேச்சுக்குத் தாவி அவனைத் தூக்கிக் கொண்டு ரங்கநாதன் அறைக்கு அருகில் இருந்த அறைக்குச் சென்று படுக்க வைத்துத் தானும் படுக்கையில் விழுந்தாள்.
****
அந்த நண்பகல் வேளையில் வினய்யும் ரிதேஷுயும் கேன்டினில் அமர்ந்து ஏதோ ஜாலியாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க “ஹாய் வினய்!” என்று அழைத்துக் கொண்டு அவனின் அருகில் வந்து அமர்த்தாள் அந்த அமெரிக்க யுவதி எலீனா.
எலீனாவும் அந்த அலுவலகத்தில் தான் வேலைப் பார்ப்பதால் அடிக்கடி வினய்யிடமும், ரிதேஷிடமும் பேசுவது உண்டு.
இன்றும் நண்பர்கள் அருகில் அமர்ந்து “ஹாய் ஹய்ஸ்! வேலையெல்லாம் எப்படிப் போகுது?” என்று (ஆங்கிலத்தில்) விசாரித்தபடி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.
வினய்யும், ரிதேஷும் அவளுக்குப் பதில் சொல்ல… அப்படியே அவர்களின் பேச்சுத் தொடர்ந்தது.
எலீனா நண்பர்கள் இருவரிடமும் பொதுவாகப் பேசுவதாகத் தெரிந்தாலும், அவள் அதிகம் பேசியதும், தன் கண்களை அதிகம் உலாவ விட்டதும் வினய்யிடம் மட்டுமே என்று ரிதேஷிற்குச் சிறிது நேரத்திலேயே நன்றாகப் புரிந்தது.
அது புரிந்ததும் மெல்லத் தன் பேச்சைக் குறைத்துக் கொண்டான்.
அவன் பேச்சு நின்றதைக் கூடக் கவனத்தில் கொள்ளாமல் வினய்யும், எலீனாவும் மட்டுமே பேசிக் கொண்டிருக்க, அவர்கள் பேசுவதை ரிதேஷ் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
எலீனாவிடம் பேசிக் கொண்டே ரிதேஷிடம் பார்வையைத் திருப்பிய வினய், அவனின் சுவாரஸ்யமான பார்வையைப் பார்த்து, ‘என்ன?’ என்பது போலக் கண்களால் கேட்க…
அவன் எலீனாவைக் கவனித்துப் பார்க்கச் சொல்லிச் சாடை காட்டினான்.
அதில் வினய் அவளைக் கவனிக்க, அப்போது தான் அவள் பார்வைத் தன்னை விழுங்குவது போல் இருப்பது தெரிய, சட்டெனத் தன் பேச்சைக் குறைத்தவன், ஒரு கட்டத்தில் பேச்சை நிறுத்தி விட்டு, வேலை இருப்பதாகச் சொல்லி விட்டு எழுந்தான்.
அவனுடன் ரிதேஷும் எழுந்து சென்றவன், அவள் கண்களை விட்டு மறைந்ததும், “செம சீன் வினய்! கண்லே ஆள் சாப்து எப்டின்னு எலீனாகிட தான் கத்துக்கிணும் போல?” என்று கிண்டல் அடித்தான்.
அவன் தமிழை இது போலப் பேசினாலே கடுப்பாகும் வினய் இப்போது எதையும் உணராமல் நண்பனின் பேச்சை அரைகுறையாகக் காதில் வாங்கியபடி பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக வந்தான்.
அவன் அமைதியைப் பார்த்துச் சட்டென மொழியை மாற்றிக் கொண்டு “என்ன வினய் அமைதியா வர்ற? உனக்குத் தான் வெளிநாட்டில் இருக்குறது பிடிக்குமே? பேசாம எலீனாவைக் கல்யாணம் பண்ணிக்கோ! கிரீன் கார்ட் வாங்கிறலாம். அப்புறம் என்ன…? இங்கேயே செட்டில் ஆகிறலாம்” என்று ரிதேஷ் சந்தோசமாகச் சொல்ல…
அவனின் சந்தோஷத்திற்கு எந்த வித பிரதிபலிப்பும் காட்டாமல், இறுகிய முகத்துடன் நண்பனைப் பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் “வாட் வினய்?” ரிதேஷ் கேட்க…
‘ஒன்னும் இல்லை’ என்பதாகத் தலையசைத்த வினய் மௌனம் காத்தான்.
அவனின் மௌனத்தைப் பார்த்து ‘என்னாச்சு…? ஏன் இப்படிச் சட்டுனு சைலண்ட் ஆகிட்டான்?’ என்று புரியாமல் ரிதேஷ் முழித்தான்.
வினய்யின் மனதை அந்தச் சூழ்நிலை அழுத்த, நண்பன் முன் தொடர்ந்து நிற்க முடியாமல் எப்போதும் அவன் தப்பிக்கப் பயன்படுத்தும் வார்த்தையான “ஒரு வொர்க் அவசரமா முடிக்க வேண்டி இருக்கு ரிதேஷ். நான் போய் அதைப் பார்க்குறேன். நாம அப்புறமா நிதானமா பேசலாம்” என்ற வினய், ரிதேஷ் கூட வருவதற்குக் கூடக் காத்திருக்காமல், அவனுக்கு முன் விரைந்து சென்று தன் இடத்தில் அமர்ந்தான்.
அவன் செல்வதையே பார்த்தபடி இருந்த ரிதேஷின் கண்கள் ஒளிர்ந்தன. அதனுடன் ‘நீ இன்னும் எவ்வளவு நாள் ஓடுறேன்னு பார்க்கலாம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் உதட்டில் குறும்பு புன்னகை ஒன்றும் வந்து போனது.
****
மறுநாள் மாமனாரைப் பரிசோதிக்க மருத்துவரை வர வைத்து, அவரின் உடல்நிலையைப் பற்றி முழுதாக அறிந்து பயப்படும்படி ஒன்றும் இல்லை என்ற பிறகு தான் நிம்மதியானாள் பவ்யா.
அன்று மாலைக் கவினுடன் பேசிக் கொண்டிருந்த மாமனாருக்குப் பழச்சாறு கொண்டு வந்து கொடுத்த பவ்யாவிடம் அவளின் மாமா குடும்பத்தைப் பற்றி விசாரித்தார் ரங்கநாதன்.
“அந்தப் பொண்ணு மைத்ரி எப்படி இருக்குமா?” என்று கேட்டவரிடம், “நல்லா இருக்கா மாமா! இரண்டு நாள் முன்னாடி தான் பேசினேன். அத்தையும், மாமாவும் அங்கே போனதும் இன்னும் ஹேப்பியா இருக்கா. இனி ஆறு மாசத்துக்கு அவளைக் கைலயே பிடிக்க முடியாது” என்று மாமா மகளை நினைத்துச் சிறு சிரிப்புடன் சொன்னாள்.
தானும் சிரித்தவர் “நல்லா இருக்கட்டும் மா!” என்று வாழ்த்தியவர், “நானும் அமுதவன் கிட்ட பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ள கம்பெனி பிஸிலயும், கீழ விழுந்ததிலும் தள்ளிப் போகிருச்சு. இன்னைக்கு நைட் பேசுவோம்” என்றார்.
பவ்யாவின் மாமா குடும்பத்தினர் தற்போது கனடாவில் இருந்தனர். தாய், தந்தையை இழந்த பவ்யாவிற்குப் பிறந்த வீட்டுச் சொந்தம் என்றால் அது அவளின் மாமா குடும்பம் தான்.
அவர்கள் தான் பவ்யாவைப் பாதுகாத்து வளர்த்துத் திருமணம் செய்து கொடுத்தார்கள். அவர்களின் ஒரே மகள் மைத்ரிக்குப் போன வருடம் தான் கனடாவில் வேலைப் பார்க்கும் ராஜேஷிற்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். அவள் இப்போது எட்டு மாத கர்ப்பிணி. அவள் உடல் நிலையால் பிரசவத்திற்கு இந்தியா வர முடியாத சூழ்நிலையால் அவளின் அம்மாவும், அப்பாவும் அவளுக்குத் துணையாக இருக்கப் பத்து நாட்களுக்கு முன் தான் அங்கே சென்றிருந்தார்கள்.
அவர்களைப் பற்றி மாமனாரும், மருமகளும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வெளியே சத்தம் கேட்க, என்னவென்று பார்க்கப் பவ்யா செல்ல… அங்கே கவின் மாடியில் ஏற முயன்று கொண்டிருந்தான். அதை அகிலம் பார்த்துத் தான் அவனிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“என்ன அகிலாமா? குட்டி என்ன பண்ணினான்?”
“ஒன்னும் இல்லமா…! குட்டிக்கு விளையாட்டு காட்டிட்டு இருந்தேன். அவனுக்குப் படியைப் பார்த்ததும் அங்கே போக ஆசை வந்திருச்சு” என்று சொல்ல… “சரிமா… நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க!” என்ற பவ்யா கவினைத் தூக்கிக்கொண்டாள்.
ரங்கநாதன் வீட்டில் எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. வேலையாட்கள் தேவைக்கு மட்டுமே இருப்பார்கள். அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலை முடிந்துவிட்டால் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். சமையல் வேலைக்கும் அப்படித் தான் என்பதால் இப்போது அகிலமும், அவருக்கு உதவி செய்யும் பெண்ணும் மட்டுமே இருந்தார்கள். அவர்களும் இரவு உணவைச் செய்து வைத்து விட்டு சிறிது நேரத்தில் கிளம்பி விடுவார்கள். அந்தப் பெரிய வீட்டில் ஆட்கள் அதிகம் இல்லாதலால், வீடு அமைதியாக இருந்தது.
இப்போது கவினும், பவ்யாவும் ஹாலில் இருந்ததால், கவினின் குரல் உயர்ந்து ஒலித்தது.
“ம்மா வா…. போவம்…!” என்று மாடியை நோக்கி கை காட்ட… பவ்யா “அங்கெல்லாம் வேண்டாம்டா செல்லம்!” என்று மறுத்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு அங்கே செல்ல சிறிதும் விருப்பம் இல்லை. இந்த வீட்டில் தான் கண்ணீர் சிந்திய நாட்கள் தான் அதிகம். அதுவும் வினய்யின் அறை வலிக்க வைத்த நினைவுகளைத் தான் அதிகம் தரும். அப்படியிருக்கையில் மேலே சென்று தன் காயங்களைத் தானே கீறி விட்டுக்கொள்ள அவளுக்கு மனம் இல்லாமல் மகனைச் சமாதானப்படுத்த பார்த்தாள்.
ஆனால் இன்று கவின் ஏனோ அவள் பேச்சைக் கேட்பதாகவே இல்லை. “வா… வா…!” என்று அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்க… அதில் அவளுக்குக் கோபம் வர “சொன்னா கேளு கவின்!” என்று ஓங்கி குரல் கொடுத்தாள்.
அவளின் சத்தத்தில் கவின் அரண்டு அழுது விட, “என்னம்மா ஆச்சு?” என்று பதறி போய்க் கேட்டார் அவர் அறையிலிருந்த ரங்கநாதன்.
மகனின் முகம் அரண்டதிலும், மாமனாரின் பதற்றத்திலும், “ச்சே…! இப்படியா கத்துவேன்?” என்று தன்னையே கடிந்து கொண்ட பவ்யா மகனைச் சமாதானப் படுத்தியவள், “ஒன்னும் இல்லை மாமா. குட்டி மாடிக்குப் போகணும்னு சொல்றான். போய்ட்டு வந்துடுறேன்” என்று மாமனாருக்கும் சமாதானம் சொல்லிவிட்டு மாடி படிகளில் ஏற ஆரம்பித்தாள்.
தான் கேட்டது நடந்து விட்ட சந்தோஷத்தில் அவள் சற்று முன் அரட்டியதைக் கூட மறந்து பவ்யாவிற்குக் கண்ணீருடன் முத்தம் ஒன்றை தந்தான் கவின்.