34 – மின்னல் பூவே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 34
உத்ராவின் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் நிலைகுலைந்து போனான் முகில்வண்ணன்.
முன்பு வார்த்தைகளால் அவளை வதைத்தவன் இப்போது அவளிடம் பேச வார்த்தைகளற்றுப் போனான்.
உத்ராவோ தொடர்ந்து பேசிக் கொண்டே போனாள். அவளின் மனதின் வலி அவளைப் பேச வைத்துக் கொண்டிருந்தது.
“துடிக்கத் துடிக்க வலியைக் கொடுத்துட்டு, மயிலிறகால் வருடினால் சரியாப் போய்டும்னு தான் நீங்க நினைச்சீங்களே தவிர, இறகால் வருடினாலும் ஆறாத காயத்தை என் மனதில் நீங்க ஏற்படுத்தியதை மட்டும் மறந்து போய்ட்டீங்களே முகில்?” என்று கையை விரித்து உதட்டைப் பிதுக்கி அவனிடம் கேட்டாள் உத்ரா.
அந்த நேரம் முகில் இதுவரை உத்ராவிடம் பார்த்திராத தோற்றத்தைக் கண்டான்.
அவன் ரசித்துப் பார்க்கும் அவளின் உதடுகள் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தன.
என்றும் அவளின் கண்களில் கண்ணீரை பார்த்திராதவன் இப்போது கண்ணீர் குளத்தால் மூழ்கியிருந்த அவளின் கண்களைக் கண்டான்.
அவளின் கண்ணீரை கண்டவனுக்கு மனது பிசைந்தது.
“உத்ரா…” என்று அழைத்துக் கொண்டே அவள் விரித்திருந்த கையைப் பற்றப் போனான்.
ஆனால் அவனிடம் தன் கையைக் கொடுக்காதவள் இரண்டு கையாளும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.
அவள் மீண்டும் நிமிர்ந்து அவனைப் பார்த்த போது அவளின் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட இருக்கவில்லை.
இவளா சில நொடிகளுக்கு முன் அப்படி இருந்தாள் என்று சொன்னால் யாரும் நம்பவே முடியாதவாறு இருந்தாள்.
அவளின் முகத்தைப் பார்த்து வியந்து தான் போனான் முகில்வண்ணன்.
அதுதான் உத்ரா! அதுதான் அவளின் தைரியம்! தன் உணர்வுகளை, தன் வலிகளை அவள் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டது தான் அவனின் பார்வையில் திமிர்த்தனமாகத் தெரிந்துவிட்டது.
தன் வலிகளை வெளிப்படையாகக் காட்டிவிடுபவர்கள் நல்லவர்கள். அதை மறைத்துக் கொண்டு தைரியமாக வலம் வருபவர்கள் திமிர்ப்பிடித்தவர்கள் என்று முகில்வண்ணன்னுக்கு யார் சொன்னதோ?
வலிகளைப் போட்டு உள்ளுக்குள் அழுத்தி அழுத்தி வைத்து களைத்துப் போன உத்ரா, இன்று திட்டியும் விட்டு அவளின் சம்மதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் முகில் அவளை நெருங்கியதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவளின் அழுத்தம் இன்று அவளை வெடிக்க வைத்திருந்தது.
“உங்களை முதலில் நம்ம காலேஜில் பார்க்கும் முன்னாடியே நம்ம ஏரியா பார்க்கில் பார்த்து இருக்கேன் முகில். அப்போ அடிக்கடி நீங்க உங்க அம்மா, அக்கா கூட அங்கே வருவீங்க. அப்போ ஒருநாள் அம்மாகிட்ட சின்னப் பையன் போலச் செல்லம் கொஞ்சிட்டு இருந்தீங்க.
உங்ககிட்ட அப்போ ஒரு இன்னோசென்ட் தெரிந்தது. உங்க கண்ணு தேவையில்லாம அலைபாய்ந்ததை நான் பார்த்ததே இல்லை. வருவீங்க, உங்க அம்மா, அக்காவோடவே தான் சுத்துவீங்க. அப்போ என்னைப் போல வயசு பொண்ணுங்க உங்க முன்னாடி போனால் கூடச் சும்மா ஓரப்பார்வை கூடப் பார்க்க மாட்டீங்க.
அவங்க கூட வருவதால் தான் அப்படி இருக்கீங்கன்னு நினைச்சுருக்கேன். ஆனா அவங்க இல்லாம தனியா நீங்க வந்தாலும் அப்படித்தான் இருப்பீங்க. உங்களோட அந்தக் கட்டுப்பாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அதோட உங்க வீட்டு பெரியவங்க சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பீங்க. அதுவும் எனக்குப் பிடிக்கும். உங்களைப் பார்க்கவே நான் பார்க் வந்த நாட்கள் எல்லாம் உண்டு. ஒரு நாள் நீங்களும் நான் படிக்கும் காலேஜ் தான் என்று தெரிந்து அடிக்கடி உங்களைப் பார்க்கும் சூழ்நிலை வந்த போது இன்னும் உங்க மேல் ஒரு ஆர்வம் அதிகரித்தது.
நாள் போகப் போக என் மனசு உங்க பக்கம் சாய ஆரம்பித்துவிட்டது. உங்ககிட்ட என் மனசை சொல்லும் நாளுக்காக எவ்வளவு ஆர்வமா காத்திருந்தேன் தெரியுமா?
“நான் உங்ககிட்ட காதல் சொன்னப்ப அதை நீங்க மறுத்ததைக் கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது முகில். ஏன்னா எனக்குப் பிடிச்சுருக்குன்னு நான் சொன்னது போல, பிடிக்கலைன்னு சொல்ல உங்களுக்கு முழு உரிமை இருக்கு.
ஆனால் நீங்க சொன்ன காரணம்? சண்டைக்காரி, உங்க குடும்பத்துக்குத் தகுதி இல்லாத பொண்ணுன்னு சொன்னீங்க. என்னை யார் சண்டைக்காரின்னு சொன்னாலும் நீங்கள் உட்பட, ஆமா நான் அப்படித்தான் தான்னு உங்க முகத்துக்கு நேராவே சொல்லிட்டுப் போய்ட்டே இருப்பேன்.
ஆனா ஒரு குடும்பத்துக்குத் தகுதி இல்லாத பொண்ணுன்னா என்ன அர்த்தம் முகில்? அதை நான் எப்படி எடுத்துக்கணும்?” என்று கேட்டவளுக்குப் பதிலே சொல்ல முடியாமல் திணறிப் போனான்.
“சரி, உங்களுக்குப் பிடிக்கலைனா தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு என் வலியை எல்லாம் எனக்குள்ளேயே மறைச்சுக்கிட்டு விலகித்தானே போனேன்? அப்படி இருக்கும் போது எது நான் உங்க கல்யாணத்தை நிறுத்த வந்தவள்னு உங்களை நினைக்க வைத்தது முகில்?
என்னைக்காவது நீங்க தான் வேணும்னு அடம்பிடித்து உங்ககிட்ட சண்டைப் போட்டேனா? இல்லை உங்க கல்யாணத்தை நிறுத்தி அந்தப் பொண்ணு இடத்தில் நான் வர்றேன் என்று சவால் தான் விட்டேனா?
எந்த அர்த்தத்தில் நான் உங்க கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறேன்னு நினைச்சீங்க முகில்?
நீங்க என்னை வேண்டாம்னு சொன்ன பிறகும் உங்களை நினைச்ச என்னோட மனசை கட்டுப்படுத்த முயற்சி செய்துட்டு வாழ்ந்துட்டு இருந்தேன்.
அந்த நேரத்தில் உங்களுக்குக் கல்யாணம், அதுவும் என் கசின் சிஸ்டர் கூட என்று கேள்விப்பட்ட போது என் மனசு துடித்த துடிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும் முகில்.
அப்படித் துடித்த போதும் என் வலியை யார்கிட்டயும் காட்டிக்காம, உங்க கல்யாணத்துக்குத் தேவையான பொருள் வாங்கவும் நான் வந்து நின்னேன் முகில். அப்போ அது எனக்குச் சுகமா இருந்து இருக்கும்னு நீங்க நினைச்சீங்களா?
நான் இங்கே ஏற்கனவே உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருக்க, கமலினி செய்த தவறுக்கு எல்லாம் ஆபீஸில் நீங்க என்னைத் தண்டிச்சுட்டு இருந்திருக்கீங்க. என்னைத் தண்டிக்க அப்போ உங்களுக்கு என்ன உரிமை இருந்தது முகில்?
தப்புச் செய்தவனிடம் கூட அவன் பக்கத்தையும் கேட்பாங்க முகில். தீர விசாரித்து விட்டுத்தான் தீர்ப்பே சொல்லுவாங்க. ஆனா நீங்க?” என்று நிறுத்தி அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.
முகில் அவளின் பார்வையைப் எதிர்கொள்ளக் கூட முடியாமல் தடுமாறிப் போனான்.
அவள் கேட்பதும் நியாயம் தானே? தவறே செய்யாதவளுக்கு அல்லவா தண்டனை கொடுத்து விட்டான். அப்போது ஏன் தனக்கு அப்படிப் புத்திப் போனது? தானாக ஒன்றை நினைத்துக் கற்பனை செய்து அவளை வாட்டி வதைத்து விட்டேனே என்று தன்னையே நிந்தித்துக் கொண்டான்.
“உங்க ஃபிரண்ட் ஒருத்தரை கூட்டிட்டு வந்து என் ஃபிரண்டுன்னு நீங்க என்கிட்ட அறிமுகப்படுத்தும் போது நான் எந்த மாதிரி பிகேவ் பண்ணனும் முகில். மூஞ்சை திருப்பிக்கிட்டு போய்டணுமா? இல்லை தானே? சாதாரணமாக இரண்டு வார்த்தை விசாரிக்கத்தானே செய்யணும்? அதைத் தானே அந்த நிவேதனை கமலினி அறிமுகப்படுத்தும் போதும் செய்தேன்.
அன்னைக்குக் கல்யாணத்துக்கு வந்தவனை வான்னு ஒரு வார்த்தை தான் கேட்டேன். ஆனா அதுக்கு நீங்க எத்தனை இட்டுக்கட்டி கற்பனை செய்து, அவள் திட்டம் போட்டு செய்தது எல்லாம் நான் செய்ததாக என் மேல் பழி போட்டு, நிற்க வைத்து சவுக்கால் அடித்தது போல் கேள்வி கேட்டீங்களே… எப்படி முகில் உங்களால் முடிந்தது?
நான் சொல்ல வந்ததைக் காது கொடுத்துக் கேட்க கூட நீங்க தயாராக இல்லையே ஏன் முகில்? அதுவும் மா… மாமா வேலை பார்த்தேன்னு எவ்வளவு சீப்பா பேசினீங்க? என்னை என்ன அவ்வளவு கேவலமானவள்னு நினைச்சீங்களா முகில்? நான் சண்டைக்காரி, திமிர்ப்பிடித்தவள் என்பதால் நான் தான் எல்லாம் செய்திருப்பேன்னு உங்களை நினைக்க வைத்ததா முகில்?
ஆனா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா முகில்? திமிர்ப்பிடித்தவளுக்குத் வைராக்கியம் நிறைய இருக்கும். அநியாயக் குற்றச்சாட்டுச் சொல்பவர்கள் முகத்தில் கூட விழிக்காமல் வாழ்ந்து காட்ட தோணும்…” என்றாள் உத்ரா.
முகில்வண்ணன் அப்படியே உறைந்து போனான்.
உத்ராவின் வாயிலிருந்து வந்தது வெறும் வார்த்தைகள் அல்ல. தான் அவள் மீது சாட்டிய குற்றசாட்டுகளின் எண்ணிக்கை… என்ற உண்மை உறைக்க உருக்குலைந்து போனான்.
தான் அவள் மீது காரணமற்று சாட்டிய குற்றசாட்டுகள் அவளின் இதயத்தில் உறைந்து போனதால் அதிலிருந்து அவள் வெளியே வரவே இல்லை என்று புரிந்தது.
அதை இன்று வார்த்தைகளால் கொட்டி விட்டாள் என்றும் உறைத்தது.
அதே நேரத்தில் அவள் கடைசியாகச் சொன்னதைக் கேட்டு ஆடிப்போனான்.
அப்போது என்னை வெறுத்து ஒதுக்கி என் முகத்தில் விழிக்கக் கூடாது என்று நினைத்தாளா?
நினைத்தாளா? இல்லை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாளா? என்று பதட்டத்துடன் நினைத்தான்.
சில நொடிகள் மௌனமாக இருந்த உத்ரா, ஜன்னல் வழியாகத் தெரிந்த இருட்டை வெறித்தாள். பின் மெல்ல முகில் புறம் திரும்பினாள்.
“ஆனா என்னோட ஒரு தோல்வியை ஒத்துக்கொண்டே ஆகணும் முகில். ஏன் தெரியுமா? நீங்க என்கிட்ட காட்டியது மட்டும் தான் வித்தியாசமான குணம் முகில். ஆனா உண்மையில் உங்க குணம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும் முகில். நீங்க ரொம்ப நல்லவர் முகில். ரொம்ப ரொம்ப நல்லவர். குடும்பம் மீது பற்றாக இருக்கும் ஆண்மகன்.
தாய், தந்தை சொல்லை தட்டாத நல்ல மகன். வளர்ந்தாலும் தாயிடம் செல்லம் கொஞ்சும் சின்னக் குழந்தை போல மனம். அக்காவா இருந்தாலும் ஒரு அண்ணன் போல உடன் பிறந்தவளை அரவணைக்கும் பண்பு. பிரியம்னு வந்துட்டால் உண்மையா இருக்குற குணம்.
இதுதான் இது மட்டும் தான் உங்க குணம் முகில். அதுதான் நீங்க என்னை வேண்டாம்னு குற்றம் சொன்ன போதும் என் மனசு உங்களையே நினைக்க வைச்சது. ஆனா இந்த எந்தக் குணத்தையும் என்கிட்ட மட்டும் ஏன் காட்டலை முகில்? அவ்வளவு கொடூரமானவளா நான்?” என்று கேட்டவள் மேலும் சில நொடிகள் மீண்டும் மௌனமானாள்.
‘இன்னும் என்ன சொல்ல போகிறாளோ?’ என்ற எண்ணத்துடன் உள்ளுக்குள் ஏற்பட்ட தவிப்பை வெளியே காட்டாமல் அமர்ந்திருந்த முகில்வண்ணனுக்கு, ‘தன்னைப் பற்றி எவ்வளவு உயர்வாக நினைத்திருக்கிறாள். ஆனால் நான்?’ என்று தான் தோன்றியது.
“இந்தத் திமிர்ப்பிடித்தவளுக்குத் வைராக்கியம் குறைந்து தான் போயிருச்சு முகில். மூளையும் மழுங்கித்தான் போயிருச்சு. அதுக்குக் காரணம்…” என்றவள் சொல்வோமா வேண்டாமா என்பது போலக் கண்களை அலைபாய விட்டாள்.
பின் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டாள்.
“காதல்! உங்க மேல நான் வச்ச காதல்! அது என்னைச் சொரணை கெட்டவளா கூட மாத்திருச்சு முகில். நீங்க வேண்டாம்னு சொன்னப்பவும் உங்களை மறக்க முடியலை.
உங்களுக்குக் கல்யாணம்னு தெரிந்த பிறகும் என் மனசு அமைதியா இருக்கலை. நீங்க என்னைத் தப்பா புரிந்து கொண்டு என் மீது குற்றச்சாட்டிய பிறகும் உங்களை வெறுக்கலை.
அதுதான் அதுதான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியலை. நான் இப்படி ஆகிப்போனேன்னு என் மேலே எனக்குக் கோபம், ஆத்திரம். என்னோட தைரியம் எல்லாம் உங்ககிட்ட மட்டும் எப்படி உடையலாம்னு என் மீதே எனக்கு வெறுப்பு!
இப்படி இருக்கிற என்னையே எனக்குப் பிடிக்கலை. என்னை ஒரு மனுஷியா கூட நினைக்காத உங்களை ஏன் என் மனசு சுத்திசுத்தி வருதுன்னு புரியாத குழப்பம். எல்லாம் சேர்ந்து அப்படியே… அப்படியே…” என்று சொல்லிக் கொண்டே வந்தவள் தன் மீது உள்ள கோபத்தை எதன் மீதாவது காட்ட வேண்டும் என்று தோன்றியது.
எதிரில் இருந்தவனைப் பார்த்தாள். அவனோ அவளின் துடிப்பை வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
தன் தவறுகளின் எண்ணிக்கை அவளை வலியின் உச்சியில் நிறுத்திவிட்டது புரிந்தது.
உத்ராவிடம் மட்டும் தான் ஏன் வில்லனாகி போனோம்? என்று தன்னையே கேள்விக் கேட்டுக் கொண்டான்.
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே தன் கன்னத்திலேயே மாறி மாறி அறைந்து கொண்டாள் உத்ரா.
அவளின் ஒவ்வொரு அடியும் அவள் கன்னத்தில் சுரீர் சுரீர் என்று அதிவேகமாக விழுந்தது.
“ஐயோ! உத்ரா… என்ன பண்ற?” என்று அவளின் இரண்டு கைகளையும் பிடித்துத் தடுத்தான் முகில்வண்ணன்.
“விடுங்க முகில். என்னை விடுங்க…” என்று அவளின் கையை அவனிடமிருந்து விடுவிக்க முயன்றாள்.
தான் விரும்புகிறவன் தன்னை விரும்பவில்லையே என்ற ஆதங்கம். தன்னை ஒரு பொருட்டாக நினைக்காதவனைத் தன்னால் ஒதுக்கி நிறுத்த முடியவில்லையே என்ற இயலாமை தான் உத்ராவிடம் அந்த நேரம் வெளிப்பட்டது.
நானும் சாதாரண உணர்வுகள் கொண்ட மனுஷி தான் என்று முகிலுக்கு எடுத்துரைப்பது போல் இருந்தது.
அவள் தன் கையை விடுவித்துக் கொள்ளப் போராட முகில் சிறிதும் அதற்கு விடவில்லை.
“என்னால் தானே, என் மீது தானே உனக்குக் காதல் வந்தது? அப்போ அடிக்கணும்னா என்னை அடி! உன்னையே ஏன் அடிச்சுக்கிற?” என்றான்.
“அடிக்க மாட்டேன்னு நினைச்சீங்களா?” என்று கேட்டாள்.
“அடின்னு தானே சொல்றேன். நான் செய்த தப்புக்கெல்லாம் தண்டனையா இருக்கட்டும். இனி ஒரு முறை உன் மனசை என்னையே அறியாம கூட நோகடிச்சுட கூடாத மாதிரி அடி…” என்றவன் அவளின் கையை இழுத்து தானே தன் கன்னத்தில் அறைந்து கொண்டான்.
ஆனால் தன் கையை அவள் இலகுவாக்கி கொள்ள அவனின் மீது அடி மெதுவாகத்தான் விழுந்தது.
“ம்ப்ச்… உன் கன்னத்தில் மட்டும் விரல் தடமே விழுவது போல் அடிச்சுட்டு என்னை மட்டும் ஏன் அடிக்க மாட்டேன்கிற?” என்றான்.
அவனின் முகத்தையே பார்த்தவள், “உங்ககிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சதே உங்க அமைதியான குணம் தான் முகில். ஆனால் என்கிட்ட மட்டும் ஏன் உங்க கோப முகத்தை மட்டும் காட்டினீங்க? அப்படி என்ன நான் உங்களுக்குத் தீங்கு செய்தேன்? சொல்லுங்க, சொல்லுங்க…” என்று கேட்டாள்.
அவள் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் சில நொடிகள் அமைதியாக இருந்தான் முகில். அவனுக்கே தெரியாததை என்னவென்று சொல்வான்?
உத்ராவின் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வடிந்து அவளின் கன்னத்தில் விழ அவள் அழுவதைப் பார்க்க முடியாதவன் அவளின் தலையை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவன் அணைக்க, அந்த அணைப்பை கூட ஏற்றுக்கொள்ள முடியாதவள் போல உத்ராவின் உடல் விறைத்துக் கொண்டிருந்தது.
அதை உணர்ந்து கொண்டவனுக்கு வேதனை அதிகரித்தது. அவளின் முகத்தை விலக்கியவன் அவளின் கையைப் பிடித்தவண்ணமே அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.
அடுத்து வந்த சில நொடிகள் அமைதி மட்டுமே நிலவியது.
தன் தொண்டையை லேசாகச் செருமிக் கொண்ட முகில், “நீ என்கிட்ட நிறையக் கேள்வி கேட்ட உத்ரா. ஆனா அதுக்கு எதுக்குமே என்கிட்ட பதில் இல்லை. ஒருவேளை எங்கே உன் பக்கம் என் மனம் சாய்ந்துடுமோன்னு என்னோட பயமா கூட இருக்கலாம்.
எந்தப் பிரச்சனையும் இல்லாத அமைதியான வாழ்க்கை எனக்கு வேணும் என்ற காரணத்தை மட்டும் பிடிச்சுக்கிட்டு நீ எங்கே என் வாழ்க்கையில் வந்தால் என் வாழ்க்கையே பிரச்சனையா மாறிடுமோனு நினைச்சுட்டேன் போல.
அதுதான் என் மனதில் புகுந்த சாத்தானாக என்னை ஆட்டி வைத்ததோ? ஏதோ ஒன்னு. ஆனா உன்னை நான் நிறையக் காயப்படுத்தி இருக்கேன்னு நீ சொன்ன பிறகுதான் எனக்கே புரியுது. உன்னைக் காயப்படுத்திய எனக்கு என்ன தண்டனை கொடுக்க நினைக்கிறயோ கொடு. ஏத்துக்கிறேன்…”
“ஆனா…” என்றவன் தன் பேச்சை நிறுத்த, என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள்.
“இதைக் கேட்க எனக்குத் தகுதி இருக்கான்னு தெரியலை. நான் உன்னை விரும்பாத சூழ்நிலையிலும் என் மேல் காதல் குறையவே மாட்டேங்கிதுன்னு வருத்தப்பட்ட. அப்படி நினைக்கிற அளவுக்கு உன்னைக் கொண்டு வந்து விட்டுட்டேன்னு எனக்கே என்னை நினைச்சு கேவலமா இருக்கு.
ஆனா இனி எந்தச் சூழ்நிலையிலும் வருத்தப்படும் நிலைக்கு உன்னை நான் விட மாட்டேன் உத்ரா. உன் காதல் எனக்கு வேணும் உத்ரா. முழுக்க முழுக்க வேணும். உன் காதலை இழக்க இனி நான் தயாராயில்லை.
இதுவரை உன்னை நான் புரிஞ்சிக்காம நடந்து இருக்கிறேன். இனி ஒவ்வொரு விஷயத்திலும் புரிஞ்சு நடந்துக்க முயற்சி பண்றேன். அதுக்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு. ப்ளீஸ்!” என்று இறைஞ்சுதலாகக் கேட்ட கணவனை அமைதியாகப் பார்த்தாள் உத்ரா.
“நான் திருந்திட்டேன். என்னை மன்னிச்சுடுன்னு கேட்க கூட எனக்குத் தகுதி இல்லைனு உன் மனவலியே சொல்லியிருச்சு உத்ரா.
உன் மன வேதனை புரியாம என் மனைவி தானே என்று நினைச்சு நான் உன்னை அணுகியது பெரும் தவறு தான்.
ஆனா ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கிறேன் உத்ரா. எனக்கு ஒரு பொண்ணு வேணும்னு நினைச்சு நான் உன் பக்கத்தில் வரலை. கல்யாணம் ஆன நாளிலிருந்து நீ என்கிட்ட சாதாரணமாத்தான் நடந்துகிட்ட. அதனால் உன்மேல் எனக்கு ஒரு உரிமை உணர்வு வந்திடுச்சு.
என்னை உனக்குமே பிடிக்குமே… அப்போ உன் பக்கத்தில் வந்தால் உனக்கும் பிடிக்கலாம்னு நானே தான் இப்பவும் தப்புக்கணக்கு போட்டு நடந்துகிட்டேன்.
என் மனைவி நீ என்ற உரிமை என்னை வேற யோசிக்க விடலைன்னு நினைக்கிறேன். ஆனா எது எப்படியோ உன் சம்மதம் கேட்காம நடந்துகிட்டதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகணும்.
நீ என்னை மன்னிக்கலை என்றாலும், என் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் இதுவரை செய்ததுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டே ஆகணும். என்னை மன்னிச்சுடு உத்ரா…” என்றவன் அவளின் கையை எடுத்து தன் கண்களில் ஒத்திக்கொண்டான்.
பின் அவளே கையை இழுத்துக் கொள்ளும் முன் அவளின் கையை விடுவித்தான்.
எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்தவன், “இதைக் குடிச்சுட்டுப் போய்ப் படு…” என்றான்.
அவளும் குடித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
தானும் தண்ணீரை குடித்துத் தன் வருத்தத்தை முழுங்கிக் கொண்டவன், அறைக்குள் சென்றான்.
அவளின் அருகில் இடைவெளி விட்டுப் படுத்தவன் அவள் முகம் பார்க்க, கண்களை இறுக மூடியிருந்த உத்ராவின் கன்னங்கள் சிவந்திருந்தன.
அவள் அடித்த விரல் தடம் அப்படியே தெரிய, துடித்துப் போனான்.
உடனே எழுந்து ஆயில்மெண்டை எடுத்து வந்தவன் “உத்ரா, உன் கன்னம் ரொம்பச் சிவந்திருக்கு. இந்த ஆயில்மெண்டை போட்டுட்டு படு…” என்றான்.
“அதுவே சரியாகிடும், வேண்டாம்…” என்றாள்.
“ம்ப்ச்… அப்படியே விட்டால் வீங்கித்தான் போகும்…” என்று சொன்ன பிறகும் அவள் அசையாமல் படுத்திருக்க, தயக்கத்துடன் தன் கையிலிருந்த மருந்தையும், அவளையும் பார்த்தான்.
என்ன சொல்வாளோ என்ற தயக்கம் இருந்தாலும், அவளின் அருகில் அமர்ந்தவன், “என்னைத் தப்பா எடுத்துக்காதே உத்ரா…” என்று சொல்லிக்கொண்டே அவளின் கன்னத்தில் மெதுவாக மருந்தை தடவி விட ஆரம்பித்தான்.
மறுபக்க கன்னத்தையும் திருப்பித் தடவி முடிக்கும் வரை அவள் கண்களைக் கூடத் திறக்காமல் படுத்திருந்ததைப் பார்த்து விட்டு பெருமூச்சு விட்டவன், மருந்தை வைத்து விட்டுப் படுத்தான்.
உத்ரா சற்று நேரத்திலேயே உறக்கத்தைத் தழுவி விட,
‘தான் இனி என்ன செய்யப் போகிறோம்? அவளின் மனக்காயத்தை எப்படி ஆற்றப் போகிறோம்?’ என்ற சிந்தனையில் இருந்த முகிலை விட்டு நித்திரை தழுவாமல் தள்ளி நின்றது.