32 – மின்னல் பூவே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 32
மறுநாள் காலை கண்விழிக்கும் போதே உற்சாகமாகத் தான் விழித்தான் முகில்வண்ணன்.
நேற்று குழம்பியிருந்த மனம் இன்று சற்றுத் தெளிந்திருந்தது.
உத்ராவின் காதலை கொன்று விட்டோமோ என்று நேற்று எல்லாம் குழம்பித் தவித்தவன் தான். ஆனால் இரவு அவள் விளையாட்டாகப் பேசிய பிறகு சிறிது நம்பிக்கை பிறந்திருந்தது.
அதிகாலையில் எழும் போதே இன்னும் சில விஷயங்கள் தோன்ற உத்ராவிற்கு இன்னும் தன் மீது காதல் உண்டு என்ற தெளிவிற்கு வந்திருந்தான்.
திருமணத்தன்று அவளைத் தவறாகப் பேசியதற்கு வருத்தம் இருந்தாலும், அவள் அன்று தன்னைப் பெரியவர்கள் யாரிடமும் காட்டிக் கொடுக்காமல் தான் பேசியதை மறைத்து இருக்கிறாள் என்பதே தன் மேல் இருந்த காதலால் தானே என்று நினைத்தான்.
திருமணத்திற்குப் பிறகும் கூட அதை அவள் யாரிடமும் சொல்லவில்லை.
அதோடு தன்னிடமும் கோபமோ, எரிச்சலோ படவே இல்லை. ஏதாவது தான் எட்டிக்குப் போட்டி வாயை விட்ட போது தான் பதிலுக்குப் பதில் பேசியிருந்தாள்.
மத்தபடி சாதாரணமாகத்தான் நடந்து கொண்டாள் என்று நினைத்துப் பார்த்தான்.
இன்று வரையும் கூட அனாவசிய அலட்டலாகவோ, அவனை மரியாதையின்றியோ கூட அவள் நடத்தியதே இல்லை.
அதில் அவள் தன்னை வெறுத்து விடவில்லை என்று திருப்தி பட்டுக்கொண்டான்.
அவள் நடந்து கொண்டதை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு உத்ராவின் குணமும் கொஞ்சம் பிடிப்பட்டது.
அவளைப் பற்றி நினைத்துக் கொண்டே கண்விழித்தவனுக்கு அவளை உடனே பார்க்க வேண்டும் போல் கண்கள் ஏங்கின.
உடனே அருகில் திரும்பி பார்க்க, அவள் படுத்திருந்த இடம் காலியாக இருந்தது.
‘அதுக்குள்ள எழுந்து வேலை பார்க்கப் போய்ட்டாளா? அநியாயத்துக்குச் சின்சியர் பொண்டாட்டியா இருக்காள் பா என் பொண்டாட்டி…’ என்று சலிப்பாக மனதிற்குள் கொஞ்சிக் கொண்டான்.
எழுந்து சென்று பார்த்த போது உத்ரா சமையலறையில் குழம்பு வைக்கக் காய் நறுக்கிக் கொண்டிருந்தாள்.
அவன் வந்து நின்றதை அவள் கவனிக்கவில்லை.
அப்படியே பின்னால் இருந்து கட்டி அணைத்துக் கொஞ்சினால் என்ன என்று அவனின் சிந்தனை போனது.
‘அவள் என்ன மூடில் இருக்காளோ உதை வாங்கிடாதேடா மகனே’ மனசாட்சி அறிவுறுத்தியது.
அப்படி எல்லாம் உதைக்க மாட்டாள் என்று அவளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டான்.
‘மகனே இன்னும் நீ கேட்ட மன்னிப்புக்கு அவள் பதிலே சொல்லலை. மன்னிச்சுட்டாளா இல்லையான்னு உறுதியா தெரியாமல் அவள்கிட்ட போய் மாட்டிக்காதே’ என்று மனம் எச்சரிக்கவே ஆரம்பித்துவிட்டது.
கட்டிப்பிடித்தால் என்ன செய்வாள் என்று தெரிந்து விடப் போகிறது. இதற்கு எதுக்கு இவ்வளவு யோசிக்கணும்? என்று நினைத்தவன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.
அந்த நேரம் பார்த்துச் சரியாக அவனின் புறம் திரும்பியிருந்தாள் உத்ரா.
“எழுந்துட்டீங்களா? இதோ காஃபி வைக்கிறேன்…” என்று கடமையே கண்ணாகப் பதில் சொன்னாள்.
சட்டென்று நின்று போனவன் அதற்கு மேலும் அவளின் அருகில் செல்ல தைரியம் வராமல் கதவு நிலையில் சாய்ந்து நின்று கொண்டான்.
உத்ரா காஃபியைப் போட்டுக் கொடுக்க, அதை வாங்கியவன் அங்கிருந்து நகராமல் அங்கே நின்றபடியே குடித்து முடித்தான்.
காஃபி கப்பை கழுவும் இடத்தில் வைத்தவன் சமையல் மேடை அருகில் சாய்ந்து நின்று அவளையே பார்த்தான்.
“என்ன வேணும் முகில்?” வேலை பார்த்துக் கொண்டே அவன் அருகில் நிற்பதை உணர்ந்து தலையை நிமிர்த்தாமலேயே கேட்டாள்.
“ஹான்… நான் எதுவும் ஹெல்ப் செய்யவா?” என்று வாய்க்கு வந்ததை அவன் கேட்டு வைக்க, ஆச்சரியமாகத் தலையை நிமிர்த்திக் கணவனைப் பார்த்தாள் உத்ரா.
“என்னதிது அதிசயம்?” என்று இமையைச் சுருக்கி கேட்டாள்.
அவள் அருகில் இருக்க வேண்டும் என்று உந்துதலில் கேட்டுவிட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“தனியா கஷ்டப்படுறீயே… நானும் ஹெல்ப் செய்தால் சீக்கிரம் வேலை முடியுமே என்று நினைத்தேன்…” என்று சொல்லி வைத்தான்.
“சரி செய்ங்க…” என்று உடனே சம்மதம் சொன்னாள்.
“எனக்கு எதுவும் தெரியாது. நீ சொல்லிக் கொடு, செய்றேன்…” என்றவன் அவள் தோள் உரசும் நெருக்கத்தில் நின்று கொண்டான்.
“உங்களுக்குச் சொல்லி கொடுத்து நான் செய்ய வைக்கிற நேரத்தில் நானே செய்து முடிச்சுடுவேன் முகில். நீங்க போங்க. நானே பார்த்துக்கிறேன்…” என்றவள் தோள் உரசாமல் மெல்ல தள்ளி நின்று கொண்டாள்.
அதை உணர்ந்தாலும் விடாதவன் மீண்டும் அவள் அருகில் நெருங்கி நின்று “ஒரு முறை சொல்லிக் கொடு உத்ரா. அதிலேயே கப்புன்னு பிடிச்சுக்குவேன். நானும் எப்பத்தான் வேலை பழகுவது? இனி நம்ம குடும்பத்தைப் பார்க்க நானும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தானே? முதலில் இதைக் கொடு. நான் கட் செய்து தர்றேன்…” என்றவன் அவள் வெட்டிக் கொண்டிருந்த முட்டைக்கோஸ்ஸை தான் வாங்கிக் கொண்டான்.
“அதைக் கொஞ்சம் சின்னதா நறுக்கணும். இதோ இப்படி…” என்று தான் நறுக்கி வைத்திருந்ததைக் காட்டினாள்.
“ஓகே, ஓகே…” என்றவன் முட்டைக்கோஸை வெட்ட ஆரம்பித்தான்.
ஆனால் அவன் பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட, “இவ்வளவு பெரிசா இருந்தால் நீங்க சாப்பிட மாட்டீங்க முகில்…” என்றாள்.
“என் கைக்கு இப்படித்தானே வருது…” என்று சொல்லிக் கொண்டே சிறிய துண்டுகளாக வெட்ட முயற்சி செய்தான்.
“ஆமா, உனக்கு எப்படி நான் எப்படி இருந்தால் சாப்பிடுவேன், எனக்கு என்ன பிடிக்கும், எல்லாம் தெரியும்?” என்று கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் வேலையைத் தொடர, “என்னை லவ் பண்ணி என் பின்னால் சுத்திய போது தானே தெரிஞ்சிக்கிட்ட?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டான்.
அதற்கும் அவளிடமிருந்து எந்தப் பிரதிபலிப்பும் வரவில்லை.
உத்ரா இட்லி தட்டில் மாவை ஊற்றி வைப்பதில் மும்முரமாக இருக்க, முகில் உதட்டைப் பிதுக்கிக் கொண்டான்.
‘என் மேல இன்னும் ரொம்பக் கோபத்தில் இருக்காள் போலயே? இவளை எப்படிச் சரி செய்வது?’ என்று யோசித்துக் கொண்டே முட்டைக்கோஸை நறுக்கி முடித்தான்.
“அடுத்து என்ன செய்யட்டும்?” என்று கேட்டான்.
“தேங்காய் சட்னி அரைங்க…” என்று அசால்டாகச் சொல்லிவிட்டு உத்ரா வேறு வேலையைப் பார்க்க, முகில் ‘பே’ என்று முழித்துக் கொண்டு நின்றான்.
‘தேங்காய் சட்னிக்கு என்னென்ன போடணும்? தேங்காய் மட்டும் போட்டால் போதுமா?’ என்று கையில் தேங்காயை வைத்துக் கொண்டே நின்றுவிட்டான்.
அவன் அசையாமல் நிற்பதை பார்த்த உத்ரா, “என்ன அப்படியே நிற்கிறீங்க?” என்று கேட்டாள்.
அவன் சந்தேகத்தை வாய் விட்டே கேட்க, உத்ராவின் உதட்டோரம் சட்டென்று சிரிப்பில் துடித்தது.
“அத்தை வெரி பேட்…” என்றாள்.
“இப்ப எதுக்கு எங்க அம்மாவை குறைச் சொல்ற?” என்று சிலிர்த்துக் கொண்டு கேட்டான்.
“பின்ன? சாப்பிட மட்டும் தான் சொல்லிக் கொடுத்துருக்காங்க. அந்தச் சாப்பாட்டை எப்படிச் செய்றதுன்னு சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?
அதுவும் பொண்டாட்டியைக் காக்கா பிடிக்கப் பையன் பிற்காலத்தில் போராட வேண்டியது இருக்குமே, சமையல் சொல்லிக் கொடுத்தால், பையன் ஈசியா பிழைச்சுப்பானே என்று அத்தை யோசிக்காம போய்ட்டாங்களே…” என்றாள் அங்கலாய்ப்பாக.
“மாமியார்னு கூடப் பார்க்காம, அதுவும் எங்க அம்மாவைப் பற்றி என்கிட்டயேவா குறைச் சொல்ற? இரு உன் மாமியார்கிட்ட போட்டுக் கொடுக்கிறேன்…” என்று மிரட்டினான்.
“போன் போடுங்க. நான் நேராவே அத்தைக்கிட்ட என்ன பிள்ளையை இப்படி வளர்த்து வச்சுருக்கீங்கன்னு கேட்கிறேன்…” என்று உத்ரா பதிலுக்குச் சவால் விட,
“நீ செய்தாலும் செய்வ…” என்று அவன் தான் பின் வாங்க வேண்டியதாக இருந்தது.
உத்ராவின் சிரிப்பு பெரிதாகவே மலர்ந்தது.
அதில் முகிலும் உல்லாசமாகச் சிரித்தான்.
அவன் கையிலிருந்து தேங்காயை வாங்கித் துருவி, சட்னிக்குத் தேவையான பொருட்களை எல்லாம் போட்டு மிக்சி ஷாரை அவன் கையில் கொடுத்தாள்.
இருவரும் சேர்ந்து வேலை பார்த்த நிமிடங்கள் முகிலுக்கு உற்சாகமாக இருந்தது.
அவளின் அருகாமை இன்னும் அவள் பக்கம் அவனை ஈர்த்தது.
அந்த உற்சாகத்துடனே அன்று முழுவதும் வலம் வந்தான் முகில்வண்ணன்.
கணவனாக அவனின் உணர்வுகள் அவளின் அருகாமை இன்னும் வேண்டும் என்று கேட்டன.
அவள் தன் மேல் இன்னும் வருத்தத்துடன் இருக்கிறாள் என்று தெரிந்தாலும் அந்த உணர்வுகள் அடங்க மறுத்து அவளை நெருங்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்க்க வைத்தது.
“என்ன உத்ரா, முகில் ஒரு மார்க்கமாகவே சுத்திக்கிட்டு இருக்கார்? வேலையைப் பார்க்கிறதை விட நிமிஷத்துக்கு ஒரு முறை உன்னைப் பார்க்கிற வேலையைச் சூப்பரா செய்றார்…” என்று புவனா கேலி செய்யும் அளவிற்கு அலுவலகத்திலும் முகிலின் பார்வை உத்ராவை வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
“நான் சரியா வேலை செய்றேனா, இல்லையா என்று பார்ப்பாரா இருக்கும்…” என்றாள் உத்ரா.
“ஏய் உத்ரா, நல்லா கவனிச்சு பார். அவர் கண்ணில் டன்டன்னாக ஜொள்ளு தெரியுது. வாய் ஓரம் வடியலை. அது மட்டும் தான் மிஸ்ஸிங். நீ கடைக்கண் பார்வையால் அவரை ஒரு லுக்கு விட்ட என்று வைத்துக் கொள்… நாங்க எல்லாம் ஜொள்ளு ஆறில் தான் போட் ஓட்டணும் போல…” என்று புவனாவின் கேலி தொடர, உத்ராவோ அலட்டிக் கொள்ளவே இல்லை.
எப்போதும் போலவே இருந்தாள்.
அவனின் பார்வையின் மாற்றம் மட்டுமா? அவனின் ஒவ்வொரு அசைவின் மாற்றத்தையும் அறிந்தே இருந்தாள்.
ஆனாலும் தன்னைப் பார்க்கிறான் என்று உற்சாகப்படவோ, துள்ளிக் குதித்துச் சந்தோஷப்படவோ அவளால் முடியவே இல்லை.
அவளின் மனநிலை என்ன நிலையில் இருக்கிறது என்று அவளாலேயே வரையறுத்துக் கூற முடியாத நிலையில் இருந்தாள்.
மனதிற்கு ஓர் ஒவ்வாத உணர்வு அவளை உள்ளுக்குள் அலைக்களித்துக் கொண்டிருந்தது.
அதிலிருந்து மீள முடியாமல் அவள் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்று உணராமல் இன்று இரவு அவளை மெதுவாக நெருங்கி பார்த்தால் என்ன என்று முகில்வண்ணன் அன்று முழுவதும் சிந்தனையில் இருந்தான்.
அந்தச் சிந்தனை அவனை நிலையாக வேலையைக் கூடச் செய்ய விடவில்லை.
புவனா சொன்னது போல் முகிலின் பார்வை உத்ராவை விட்டு அகல மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தது.
அவனே வலுக்கட்டாயமாக, வேலையில் கவனம் செலுத்த முயன்றாலும் அவனால் முடியவே இல்லை என்பதே உண்மை.
இவள் என் மனைவி! இவள் எனக்கு வேண்டும்! என்ற உணர்வு மட்டுமே அவனுள் ஓங்கியிருந்தது.
மாலை ஆனதும் பரபரப்பாக உணர்ந்தவன், கிளம்பத் தயாராகி உத்ராவின் இருக்கை அருகில் வந்தான்.
“உத்ரா, எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. நீ உன் வண்டியை எப்போ வாங்க போகணும்?” என்று கேட்டான்.
அன்று உத்ரா தன் வண்டியை சர்வீஸ் விட்டிருந்தாள். மாலை வண்டி ரெடியானதும் கடையிலிருந்து அழைப்பு வந்ததும் வண்டியை வாங்க செல்ல வேண்டும் என்பதால் அதைப் பற்றி விசாரித்தான்.
“இன்னும் சர்வீஸ் கடையிலிருந்து போன் வரலை முகில். வந்ததும் கிளம்பணும். நீங்க கிளம்புங்க. நான் வண்டியை வாங்கிட்டு அப்படியே வீட்டுக்குப் போய்டுறேன்…” என்றாள்.
“சரி உத்ரா, நான் கிளம்புறேன். நீ கவனமா வீட்டுக்குப் போ…” என்றவன் கிளம்பிவிட்டான்.
முதலில் ஒரு ஆடையகத்திற்குச் சென்றவன், உத்ராவிற்காக ஒரு டிசைனர் புடவை வாங்கினான்.
பின் கொஞ்சம் மல்லிகை பூவும், ரோஜா பூவும் வாங்கிக் கொண்டு உற்சாகமாக வீட்டிற்குச் செல்லும் பாதையில் வண்டியை விட்டான்.
உத்ரா வீட்டிற்குச் செல்லும் முன் சென்றுவிட்டால் அறையைக் கூட அலங்கரித்து விடலாம் என்ற பரபரப்பு அவனிடம் தெரிந்தது.
மனமும், உடலும் அன்றைய இரவை நினைத்துக் கற்பனையில் மிதந்தது.
தன்னிடம் சாதாரணமாகப் பேசி நடந்து கொள்ளும் உத்ரா இரவில் தான் நெருங்கினாலும் ஒன்றும் சொல்ல மாட்டாள் என்ற அவனின் எண்ணம் அவனை உற்சாகமாகவே வைத்திருந்தது.
அவர்களின் அப்பார்மெண்ட் செல்ல ஒரு ஏரியாவில் குறுகிய தெருவிற்குள் வண்டியை விட்டால் விரைவில் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் அந்தப் பாதையில் வண்டியைத் திருப்பினான்.
ஆனால் அந்தத் தெருவில் நுழைந்தவுடன் அவன் கண்ட காட்சியில் அவனின் உற்சாகம் சர்ரென்று கீழே இறங்கிய அதே வேகத்தில் கோபம் சுர்ரென்று உச்சியில் ஏறியது.
உத்ரா அங்கே ஒருவனின் சட்டையைப் பிடித்து நிறுத்தி அவனைப் பளார் என்று அறைந்து கொண்டிருந்தாள்.
உத்ராவிடம் முகிலுக்குப் பிடிக்காதது அவளின் இந்த விஷயம் தான். சட்டென்று சண்டைக்குச் செல்வாள், யாரையாவது அடித்து விடுவாள் என்ற அவளின் செய்கை எல்லாம் பிடிக்காமல் தான் அவளின் காதலை மறுத்து இருந்தான்.
திருமணத்திற்குப் பிறகு அவள் அப்படி யாரிடமும் சண்டைக்குச் செல்லாமல் அமைதியாக இருந்ததால் அவளின் அந்தக் குணத்தைப் பற்றி அவனுக்கு ஞாபகம் வரவில்லை.
அதையும் விட அவளின் அழகு அவனை ஈர்க்க ஆரம்பித்திருக்க, அது மட்டுமே அவனின் மனதில் நின்றது.
அதோடு தன் திருமண விஷயத்தில் அவள் எதுவும் செய்யவில்லை என்றதும் இன்னும் அவளை நெருங்க நினைத்தவனுக்கு அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த சண்டைக்காரி குணம் அவனின் நினைவிலேயே வரவில்லை.
இப்போது மீண்டும் அவள் நடுரோட்டில் நின்று ஒருவனை அடித்துக் கொண்டிருக்க, அவளிடம் அவனுக்குப் பிடிக்காத குணம் ஞாபகம் வர, உச்சத்தில் ஏறிய கோபத்துடன் அவளின் அருகில் வண்டியை நிறுத்தினான்.
“உன்னை எல்லாம் அப்படியே நடுரோட்டில் நிற்க வச்சு அடிச்சே கொல்லணும் டா…” என்ற உத்ரா அந்த ஆடவனை மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டிருந்தாள்.
அந்த ஆடவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம் போல் இருந்தான். உத்ராவிடம் இருந்து தன்னை விடுவிக்க முயன்று கொண்டிருந்தான்.
“உத்ரா…” என்று கோபமாக அழைத்தபடி அவளின் அருகில் வந்த முகில் அவள் கையை அந்த ஆடவனின் சட்டையிலிருந்து விடுவிக்க முயன்று கொண்டே “நடுரோட்டுல நின்னுகிட்டு என்ன காரியம் பண்ற? விடு அவனை…” என்றான்.
“விட முடியாது முகில். இவனைப் போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கணும். நீங்க தள்ளுங்க முகில். இவனை…” என்று பல்லைக் கடித்த உத்ரா அவனைச் செல்ல விடாமல் இறுக பிடித்துக் கொண்டாள்.
“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா உத்ரா? அவன் யாரு எவன்னே தெரியலை. விடு அவனை. நீ வா வீட்டுக்குப் போவோம்…” என்று வெக்கென்று அவளின் கையை அவனிடமிருந்து விடுவிக்க, அந்த நேரத்திற்கே காத்திருந்தவன் போல அந்த ஆடவன் அங்கிருந்து ஓடியே போனான்.
“டேய்…” என்று உத்ரா அவனை விரட்டிக் கொண்டு ஓட முயல, “உத்ரா நில்லு…” என்று அவளைச் செல்ல விடாமல் பிடித்துக் கொண்ட முகில்,
“ச்சை, என்ன பொண்ணு நீ? இப்படி நடந்துக்க உனக்குக் கேவலமா இல்லை? கொஞ்ச நாளா நீ திருந்திட்ட என்று நினைச்சேன். ஆனா நீ இன்னும் அதே சண்டைக்காரியாத் தான் இருக்க. ச்சே ச்சே…” என்றான் எரிச்சலாக.
அவனைக் கோபமாகப் பார்த்த உத்ரா, “கொஞ்சமாவது உங்களுக்கு அறிவு இருக்கா? அவனை இப்படி ஓட விட்டுட்டீங்களே. அவன் என்ன காரியம் பண்ணிட்டு இருந்தான் தெரியுமா?” என்று கேட்டாள்.
“அவன் என்னமோ பண்ணிட்டுப் போறான். அது எதுக்கு உனக்கு? நீ பேசாம வீட்டுக்குப் போயிருக்க வேண்டியது தானே?” என்று அவளை விடக் கோபமாகக் கேட்டான்.
அவனின் கேள்வியில் உத்ராவிற்குக் கண்மண் தெரியாத கோபம் வந்தது. அவனைத் திட்ட அவள் வாயை திறக்க, அப்போது ஒரு சிறு பெண்ணின் அழுக்குரல் கேட்க, வேகமாக அந்தக் குழந்தையின் புறம் திரும்பினாள்.
“ஒன்னுமில்லடா குட்டி. உனக்கு ஒன்னுமில்ல. அழக்கூடாது…” என்று அந்த மூன்று வயதிலான குழந்தையைத் தூக்கி சமாதானம் செய்தாள்.
அந்தக் குழந்தையும் அங்கே தான் நின்று கொண்டிருந்தது என்பதை அப்போது தான் கவனித்தான் முகில்வண்ணன்.
அது வீடுகள் இல்லாத தெரு என்பதால் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இருக்கவில்லை.
‘யார் குழந்தை அது?’ என்று அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “லேகா… லேகா…” என்று அழைத்துக் கொண்டே ஒரு பெண்மணி அங்கே ஓடி வந்தாள்.
அந்தப் பெண்ணின் குரல் கேட்டதும், அந்தக் குழந்தை உத்ராவிடமிருந்து திரும்பி, “ம்மா… ம்மா…” என்றது.
“அவங்க தான் உன் அம்மாவா?” என்று உத்ரா கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெண் இவர்களின் அருகில் ஓடி வந்தாள்.
“லேகா… எங்கடா போன?” என்று குழந்தையைத் தூக்கி கண்ணீருடன் முத்தமிட்டாள்.
“அங்கிள் கூடக் கடைக்குப் போனா அங்கிள் கூடவே வராம ஏன்டா எங்கேயோ போன?” என்று கேட்டவள் குழந்தையை அரவணைத்துக் கொண்டாள்.
உத்ராவின் புறம் திரும்பி, “நீங்க தான் இவளைக் கண்டு பிடிச்சீங்களா?” என்று கேட்டாள்.
“நீங்க குழந்தையை யார் கூட அனுப்பினீங்க?” என்று யோசனையுடன் அவரிடம் விசாரித்தாள்.
“எங்க பக்கத்து வீட்டு பையன் கூடக் கடைக்குப் போனாள். வழக்கமா போறது தான். இன்னைக்குக் கடையில் அந்தப் பையன் சாமான் வாங்கிட்டு இருக்கும் போது இவள் மட்டும் எங்கேயோ போயிட்டாளாம். அவன் தேடிப் பார்த்துட்டு காணோம் என்று இப்பதான் அவன் வீட்டுக்கு அரக்க பறக்க ஓடி வந்தான்…” என்றாள்.
“அவன் உங்ககிட்ட நின்னு பேசினானா?”
“இல்லைங்க… என்னமோ பேயைப் பார்த்தது போல ஓடி வந்தவனைப் பார்த்து நிறுத்தி நான் தான் என் பொண்ணு எங்கே என்று கேட்டேன். காணோம்னு சொல்லிட்டு நிற்காம அவன் வீட்டுக்குள்ள ஓடிட்டான். ஏன் என்னாச்சு?” என்று அந்தப் பெண்மணி கேட்க,
“நீங்க உடனே அவனைப் போலீஸில் பிடிச்சுக் கொடுங்க…” என்றாள் உத்ரா.
“ஏன்? அவன் என்ன பண்ணினான்?” என்று அந்தப் பெண்மணி பதறி கேட்க,
“இனி யாரையும் நம்பி உங்க குழந்தையை அவங்க கூட அனுப்பாதீங்க மேடம். அவன் குழந்தையைத் தொலைக்கலை. குழந்தைகிட்ட தப்பா நடக்க முயற்சி செய்தான். நான் மட்டும் பார்க்கலைனா…” என்ற உத்ரா அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்த,
“என்ன சொல்றீங்க?” என்று பதறிய அந்தப் பெண் வேகமாகக் குழந்தையை ஆராய்ந்தாள்.
குழந்தையின் உடை ஆங்காங்கே அலுங்கி இருந்தது.
உடம்பிலும் ஆங்காங்கே லேசாகச் சிவந்து இருக்க, “ஐயோ! என் குழந்தைக்கு என்னாச்சு?” என்று அவள் பதறி அழ, குழந்தையும் அழ ஆரம்பித்தாள்.
“அந்த இடிந்த சுவர் பக்கமா குழந்தை அழும் சப்தம் கேட்கவும் போய்ப் பார்த்தேன். அப்போ தான் அவன் தப்பா நடக்க முயற்சி செய்தான். நான் பார்க்கவும் குழந்தையை விட்டுட்டு ஓட முயற்சி செய்தான். உடனே பிடிச்சு இரண்டு போடு போட்டேன். ஆனா தப்பிச்சு போய்ட்டான்…” என்ற உத்ரா திரும்பி முகிலை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள்.
அதுவரை நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த முகில் உண்மை தெரிந்ததும் அவனின் முகம் மாறிப் போனது. குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றவனைத் தான் உத்ரா அடித்தாள் என்பதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
அவளின் குற்றம் சாட்டும் பார்வையைத் தாங்க முடியாமல் மன்னிப்பு கேட்கும் பாவனையில் மனைவியைப் பார்த்தான்.
ஆனால் முகத்தைத் திருப்பிக் கொண்ட உத்ரா, “அந்தப் பையனை போலீஸ்ல பிடிச்சுக் கொடுங்க மேடம். தெரிஞ்சவனா இருந்துட்டே இப்படிப் பண்ணிருக்கான். அவனைச் சும்மா விடக்கூடாது…” என்றாள்.
“இல்ல… இல்லங்க வேண்டாம். என் குழந்தைக்குத் தான் ஒன்னும் ஆகலையே. லேகா அப்பாவுக்குத் தெரிந்தால் என்னைத்தான் திட்டுவார். என்னைக் கொன்னே கூடப் போடுவார்.
நல்ல நேரத்தில் வந்து காப்பாத்தினீங்க. ரொம்ப நன்றிங்க. இனி குழந்தையை யார்கிட்டயும் கொடுக்க மாட்டேன். நன்றிங்க. ரொம்ப நன்றிங்க…” என்ற அந்தப் பெண்மணி வேகமாகக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றே விட்டாள்.
“என்ன நீங்க…” என்று உத்ரா சொல்வதைக் கேட்க அவள் அங்கே இருக்கவில்லை.
“இப்படியே மூடி மறைக்கிறதால் தான் அந்த மாதிரி நாய்களுக்குச் சாதகமாகிடுது…” என்று எரிச்சலுடன் முணுமுணுத்த உத்ரா கணவனும் அங்கே தான் நிற்கிறான் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றாள்.
சென்றவளையே பார்த்த வண்ணம் “இப்படியாடா என்ன நடந்தது என்று விசாரிக்காம, அவசரப்பட்டு வார்த்தையை விட்டு, தப்பானவனை வேற தப்பிக்க வைப்ப?” என்று தன்னையே திட்டிக் கொண்டு நடுரோட்டில் மானசீகமாக இல்லை வெளிப்படையாகவே தலையில் கை வைத்து நின்றான் முகில்வண்ணன்.