30 – மின்னல் பூவே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 30

காலையில் கண்விழித்ததும் காணக்கிடைத்த மனைவியின் தரிசனத்தில் கிறங்கிப் போனான் முகில்வண்ணன்.

தலைக்குக் குளித்துவிட்டு ஈரம் சொட்டிய தலைமுடியை உதறிப் பின்னால் போட்ட படி திரும்பியிருந்தாள் உத்ரா.

அவளின் முகத்திலும் ஈரத்துளிகள் ஆங்காங்கே சொட்டு சொட்டாக நின்று கொண்டிருந்தன.

அதிலும் அவளின் கீழ் உதட்டோரம் ஒன்றை ஈரத்துளி முத்து போல் பளபளத்துக் கொண்டிருக்க அதனைத் தன் உதட்டால் உறிந்து எடுக்கும் வேகம் எழுந்தது.

ஆனால் அதனைக் கற்பனையில் மட்டுமே அவனால் செய்ய முடிந்தது.

நிஜத்திலும் செய்ய ஆசை கொழுந்து விட்டு எரிந்தாலும் உத்ரா என்ன நினைக்கிறாள் என்று தெரியாமல் அவனால் அவளை நெருங்கவே முடியவில்லை.

அன்று அவன் கேட்ட மன்னிப்பிற்குக் கூட உத்ராவிடம் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை.

அவளைத் தவறாகப் பேசியதற்கு உண்மையாகவே வருந்தி அவளிடம் மன்னிப்பு கேட்டான்.

ஆனால் அவனையே சில நொடிகள் பார்த்த உத்ரா, “நான் பொய்க்கு தலைவலிக்குதுனு சொல்லலை. நிஜமாவே வலி மண்டையைப் பிளக்குது…” என்றவள் அடுத்த நொடி உள்ளே சென்று படுத்துவிட்டாள்.

அவனின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டாளா இல்லையா என்று புரியாமல் குழம்பிப் போய் நின்று விட்டான் முகில்வண்ணன்.

அதன் பிறகு வந்த நாட்களிலும் உத்ராவிடம் எந்த விதமான மாற்றமும் இல்லை.

திருமணம் ஆனதில் இருந்து எப்படி இருந்தாளோ அப்படியே தான் இப்போதும் இருந்தாள்.

தன் மீது இன்னும் கோபமாக இருக்கிறாளா? அல்லது தன்னை மன்னித்து விட்டாளா? என்று எதையும் அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை.

இருவரும் ஒன்றாகவே வேலைக்குப் போனார்கள் வந்தார்கள். சாதாரணச் சில பேச்சு வார்த்தைகளும் வழக்கம் போல் இருந்தன. ஆனால் இருவருக்கும் இடையே அதற்கு மேல் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை.

அதே நேரத்தில் முகில்வண்ணனிடம் நிறைய மாற்றங்கள் வந்திருந்தன. அவளின் மீது அவன் கோபமாக இருந்த போதே அவளின் அழகில் அவ்வப்போது வீழ்ந்து போனவன் அவன்.

அப்படியிருக்க இப்போது அவள் தன் திருமண விஷயத்தில் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரிந்ததும் அவனின் பார்வை உரிமையுடன் அவளின் மீது படிந்து மீண்டது.

‘இந்த அழகி என் மனைவி!’ என்று உரிமையுடன் நினைத்துக் கொண்டான்.

“இன்னைக்கு எங்க வீட்டுக்குப் போகணும்…” என்ற உத்ராவின் குரலில் அவளையே பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தவன் தலையை உதறிக் கொண்டான்.

“ம்ம், ஞாபகம் இருக்கு. வெயிட் பண்ணு. நான் போய்க் குளிச்சிட்டு வர்றேன்…” என்றவன் படுக்கையை விட்டு எழுந்து குளியலறைக்குள் சென்று மறைந்தான்.

அன்று சனிக்கிழமை. நாளை தான் வீரபத்ரன் ராணுவத்திற்குக் கிளம்பும் நாள். அதனால் இன்று அவரைப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தனர்.

“தோசையும், தேங்காய் சட்னியும் மட்டும் தான் வச்சேன். உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா?” அவன் குளித்து விட்டு வந்ததும் கேட்டாள் உத்ரா.

அந்தக் கேள்வியில் அவனின் பார்வை அவளின் முகத்தில் தழுவி மீண்டது.

‘இப்ப நீ தான் எனக்கு வேணும் என்று சொன்னால் என்ன சொல்வாள்?’ என்று அவனின் எண்ணம் போனது.

“உங்ககிட்ட தான் கேட்டேன் முகில். சாப்பிட வேற எதுவும் வேணுமா?” என்ற உத்ராவின் குரல் அவனை உலுக்கியது.

தன் தலையிலேயே மானசீகமாகத் தட்டிக் கேட்டான் முகில்வண்ணன்.

‘அவள் கிட்ட அவ்வளவு கோபமா பேசி அவள் மேல் குற்றம் சாட்டிட்டு, வேலையிலும் டார்ச்சர் கொடுத்துட்டு இப்ப எப்படி உன்னால் ஒண்ணுமே நடக்காத மாதிரி அவள் வேணும்னு உன்னால் நினைக்க முடியுது?’ என்று அவனின் மனசாட்சியே அவனிடம் கேள்வி கேட்டது.

‘அது தான் அவள்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேனே? இப்ப எல்லாம் வேலையிலும் எந்த டார்ச்சரும் கொடுப்பது இல்லையே? அவள் வேலையில் சந்தேகம் கேட்டாலும் நல்லபிள்ளையா தானே சொல்லி தர்றேன்…’ என்று தனக்குத் தானே நியாயம் கற்பித்துக் கொண்டான்.

அவன் மன்னிப்பு கேட்டு விட்டதால் எல்லாம் சரியாகிவிட்டது என்ற எண்ணம் அவனுக்கு. அது அவனை அவனே நியாயப்படுத்திக் கொள்ளத் தூண்டியது.

“உங்களுக்கு என்ன ஆச்சு முகில்? உடம்பு எதுவும் சரியில்லையா?” என்ன கேட்டாலும் பதில் சொல்லாமல் ஏதோ யோசனையில் மூழ்கியவனைப் பார்த்துக் கேட்டாள் உத்ரா.

“ஒன்னுமில்ல உத்ரா. எனக்கு இதே போதும்…” என்றவன் தோசையை உண்ண ஆரம்பித்தான்.

உணவை உண்ண ஆரம்பித்தாலும் அவனின் கண்கள் அடிக்கடி எதிரே உண்டு கொண்டிருந்தவளைத் தழுவி மீண்டன.

அவனின் பார்வை உணர்ந்து ‘என்ன?’ என்பது போல் தலையை உயர்த்திப் பார்த்தாள் உத்ரா.

அவளின் கண்களைச் சந்தித்தவன், “என் மேல கோபமா?” என்று கேட்டான்.

“கோபமா? எதுக்கு?” என்று சாதாரணமாகக் கேட்டவளைப் பார்த்து விழித்தான்.

எல்லாம் தெரிந்தும் தெரியாதவள் போல் கேட்டால் அவனும் என்ன சொல்வான்?

ஆனாலும் அவள் தன்னை மன்னித்து விட்டாளா என்று அவனுக்குத் தெரிய வேண்டியது இருந்தது.

“நான் அன்னைக்கு ஸாரி கேட்டேன். ஆனா நீ அதுக்கு இன்னும் எந்தப் பதிலும் சொல்லலையே உத்ரா…” என்றான்.

“நீங்க என்கிட்ட கேள்வி எதுவும் கேட்கலையே முகில்? நான் பதில் சொல்ல…” என்றவள் உண்டு முடித்துவிட்டு எழுந்து விட்டாள்.

‘இப்ப இவள் என்னை மன்னிச்சுட்டாளா? இல்லையா?’ என்ற குழப்பத்தில் வாயில் வைத்திருந்த தோசையைக் கூட மெல்ல மறந்து அமர்ந்திருந்தான்.

“அப்பா நம்மளை ரொம்ப எதிர்பார்த்துட்டு இருப்பார். நாம சீக்கிரம் கிளம்பணும்…” என்று அவன் ஒன்றுமே பேசாதது போல் பாவித்துச் சொன்னவளைத் தீர்க்கமாகப் பார்த்தான் முகில்வண்ணன்.

ஆனால் உத்ரா அவனைக் கண்டு கொள்ளவே இல்லை.

அறைக்குள் சென்று அவளின் கை பையை எடுப்பதும், தந்தைக்குப் பிடிக்கும் என்று வாங்கிய சில பொருட்களை எடுத்து வைப்பதுமாக இருந்தாள்.

அவளின் அந்த விட்டோத்தியான பாவனை முகிலின் முகத்தை மாற வைத்தது.

அவள் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதை உணர்ந்தவன் இன்னும் மீதம் இருந்த ஒரு தோசையைச் சாப்பிட பிடிக்காமல் எழுந்து கை கழுவி விட்டு வந்தான்.

“சாப்பிடலை?” என்று உத்ரா கவனித்துக் கேட்க,

“வேண்டாம். போதும்…” என்றான் அவளின் முகத்தைக் கூடப் பார்க்காமல்.

தன் கோபத்தை அவளுக்கு உணர்த்த முயன்றான்.

ஆனால் உத்ராவோ, “ஓ, சரி…” என்று முடித்துக் கொள்ள அவனுக்குச் சப்பென்று ஆனது.

‘நான் கோபமாக இருப்பது கூடவா அவளுக்குத் தெரியவில்லை? இல்லை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறாளா?’ என்று அவளையே குறுகுறுவென்று பார்த்தான்.

அவளோ அவனின் பார்வையைக் கவனிக்காமல் சாப்பிட்டதை எல்லாம் ஒதுங்க வைத்துவிட்டு வந்து “கிளம்பலாமா முகில்?” என்று கேட்டாள்.

‘அடேய் முகில், உன் கோபத்துக்கு இவ்வளவு தான் மதிப்பா?’ என்று நொந்து கொண்டவன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

இப்போதெல்லாம் இருவரும் இணைந்து இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது சகஜமாகியிருந்தது.

வளர்மதி மட்டும் இல்லாமல் இலக்கியாவும் அடிக்கடி அவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு ஏதாவது விசாரித்துக் கொண்டு இருப்பதால் முடிந்தவரை இருவரும் வெளியே ஒன்றாகத் தான் போய் வருவார்கள்.

முகில்வண்ணனும் ஆரம்பத்தில் அவர்கள் சொன்னதற்காக வேண்டாவெறுப்பாக உத்ராவுடன் வெளியே சென்றவன், இப்போது விருப்பத்துடனே அவளை வெளியே அழைத்துச் செல்வான்.

இருவரும் உத்ராவின் வீட்டிற்குச் செல்ல, அவர்களின் வருகைக்காகவே காத்திருந்த வீரபத்ரன் உற்சாகத்துடன் வரவேற்றார்.

“வாங்க… வாங்க மாப்பிள்ளை…” என்று முகிலை அழைத்து விட்டு மகளைத் தோளோடு லேசாக அணைத்து, “எப்படி இருக்கடா உத்ராமா?” என்று நெகிழ்வுடன் விசாரித்தார்.

“நான் நல்லா இருக்கேன் பா. ஆனா நீங்க என்னை விட நல்லா இருக்கீங்க போல? இந்த ஒரு வாரத்தில் ஒரு சுற்று வெயிட் போட்டுட்டீங்களே பா? என்னப்பா, நான் பக்கத்தில் இல்லாத குஷியா?” என்று தந்தையிடம் கேலியாகக் கேட்டாள்.

“நீ வேற ஏன்டா? உன் அம்மா நீ பக்கத்தில் இல்லைன்னு சரியாவே சமைச்சு தரலை. அந்தக் கவலையில் தான் அப்பா ஒரு சுற்றுப் பெருத்துட்டேன் டா…” என்றார் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு.

“ஆமா… ஆமா… நான் இவருக்குச் சரியாவே சமைச்சு தரலை உத்ரா. என்ன தினமும் ஒரு கிலோ கறியும், மீனுமா தான் சமைச்சுப் போட்டேன். அவ்வளவே தான்…” என்று அஜந்தா கணவனைப் பார்த்து நொடித்துக் கொண்டார்.

“ஏன்பா, அம்மா பத்தி குறை சொல்லும் போது அம்மா பக்கத்தில் இருக்காங்களா இல்லையான்னு பார்க்க மாட்டீங்களா? இப்போ பாருங்க அம்மா இன்னைக்கு உங்களுக்குப் பழைய கஞ்சி ஊத்தப் போறாங்க…” என்று உத்ரா சொல்ல,

“அது தான் இல்லையே இன்னைக்கு மாப்பிள்ளைக்கும், உனக்கும் அம்மா ஸ்பெஷலா சமைக்கப் போறாள். அதனால் நானும் ஒரு கட்டுக் கட்டிடலாம் என்ற தைரியத்தில் தானே உங்க அம்மாவை வம்புக்கு இழுத்தேன்…” என்று மீசை முறுக்கி விட்டு சிரித்தார் வீரபத்ரன்.

“ஆனாலும் நீங்க ரொம்ப விவரம் பா…” என்ற உத்ரா வாய் விட்டு சிரித்தாள்.

அவளின் சிரிப்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் முகில்வண்ணன்.

திருமணம் ஆன இத்தனை நாட்களில் அவனிடம் அவள் இப்படிச் சிரித்ததே இல்லை. இப்படி என்ன? சாதாரணமான சின்னச் சிரிப்பு கூட இருந்தது இல்லை.

சிரிப்பென்ன? சாதாரணப் பேச்சுக்கே பஞ்சமாகியல்லவா போனது.

இங்கே மடை திறந்த வெள்ளம் எனப் பேசுபவள், அவனிடம் இயல்பாகக் கூடப் பேசுவது இல்லையே?

எதுவும் தேவையான விஷயத்திற்கும், அவனிடம் எதுவும் சொல்வதற்கும், அவன் எதுவும் கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்கும் மட்டுமே அல்லவா பேசுகிறாள்.

‘ஏன் அப்படி?’ என்ற கேள்வி பெரிய கேள்விகுறியாக அவனின் முன் வந்து நின்றது.

அதிலும் அவள் தன்னைக் காதலித்தவள் வேறு. அப்படி இருக்கத் தன்னைத் திருமணம் செய்த மகிழ்ச்சியே அவளிடம் இல்லையே ஏன்? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று ஒன்று தோன்ற அவனின் சிந்தனை ஓட்டம் தடுமாறியது.

‘இப்போது நான் என்ன நினைத்தேன்? என்ன காதலித்தவள் என்றா? அப்படியென்றால்? இப்போது அவள் என்னைக் காதலிக்கவில்லையோ?

அதுதான் அவளிடம் மகிழ்ச்சி இல்லையோ? நான் காட்டிய கோபத்தில், புறக்கணிப்பில் தன்னை வெறுத்தே விட்டாளா?’ என்று நினைத்தவனுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

‘அப்போ எப்படி உடனே திருமணம் செய்து கொள்வதற்குச் சம்மதம் சொன்னாள்?’ என்ற கேள்வி பூதாகரமாக அவனின் முன் எழுந்து நின்றது.

“மாப்பிள்ளை, என்ன அப்படியே நிற்கிறீங்க? உட்காருங்க…” என்ற வீரபத்ரனின் குரல் கேட்டதும், தன் சிந்தனையில் இருந்து வெளியே வந்து சோஃபாவில் சென்று அமர்ந்தான்.

“என்னாச்சு மாப்பிள்ளை உடம்பு எதுவும் சரியில்லையா? உங்க முகம் எல்லாம் சோர்வா தெரியுதே?” என்று அவனின் முக வாட்டத்தைக் கண்டு விசாரித்தார் அஜந்தா.

“காலையில் இருந்து முகில் அப்படித்தான் இருக்கார் மா…” என்ற உத்ரா, “என்ன முகில் உடம்புக்கு எதுவும் செய்தா? வீட்டிலேயே கேட்டேன். நீங்க எதுவுமே சொல்லலையே?” என்று அவனிடம் கவலையுடன் கேட்டாள்.

அவனின் மனசோர்வு அவன் முகத்தில் அப்படியே பிரதிபலிக்க மூவரும் அவனைக் கவலையுடன் பார்த்தனர்.

“உடம்புக்கு எல்லாம் ஒன்னுமில்லை அத்தை. நான் நல்லாத்தான் இருக்கேன். நைட் ரொம்ப நேரம் வேலை பார்த்தேன். அதுதான் சோர்வா தெரியுது போல…” என்று அஜந்தாவிடம் மட்டும் பதில் சொன்னவன் உத்ராவின் பக்கம் திரும்பவே இல்லை.

“அப்போ நீங்க உள்ளே போய்க் கொஞ்ச நேரம் தூங்குங்க மாப்பிள்ளை. மதியம் சாப்பாடு ரெடி ஆனதும் எழுப்புறோம்…” என்றார் அஜந்தா.

“பரவாயில்ல அத்தை. மாமா கூடக் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கேன்…” என்றான்.

“நாம மதியம் பேசுவோம் மாப்பிள்ளை. நீங்க இப்போ போய் ரெஸ்ட் எடுங்க. முகம் எல்லாம் வாட்டமா தெரியுது…” என்ற வீரபத்ரன், “கூட்டிட்டு போமா உத்ரா…” என்றார் மகளிடம்.

“வாங்க முகில்…” என்று உத்ரா அழைக்கவும் இருக்கையிலிருந்து எழுந்தான்.

அவளின் அறைக்குள் சென்றதும் கட்டிலில் கண்களை மூடி அமர்ந்து கொண்டான்.

“நிஜமாவே தூக்கம் தானா? உடம்புக்குத் தான் முடியலையா முகில்?” என்று கேட்ட உத்ரா கண்மூடி அமர்ந்திருந்தவன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.

அவளின் கைப்பட்டதும் அவனின் உடம்பே ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.

அதை அவளின் கைகளும் உணர்ந்து கேள்வியாக அவனைப் பார்க்க, அப்போது அவனும் விழிகளைத் திறந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உடம்பு எதுவும் சுடலையே…” என்று சொல்லிக் கொண்டே அவள் தன் கையை விலக்க முயல, விலக விடாமல் அவளின் கையைப் பற்றிக் கொண்டான் முகில்வண்ணன்.

“என்ன முகில்?” கையைப் பற்றிக் கொண்டே தீவிரமாக அவன் பார்த்த பார்வை புரியாமல் கேட்டாள்.

“உடம்பு சுடலை. ஆனா…”

“ஆனா?”

“மனசு சுடுது…” என்றான் ஆழ்ந்த குரலில்.

“மனசு சுடுதா? எதுக்கு?” என்றவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளிடம் வேறு கேள்வி கேட்டான் முகில்வண்ணன்.

“நீ என்னை இன்னும் லவ் பண்ற தானே உத்ரா?” என்று கேட்டவனை இப்போது தீவிரமாகப் பார்ப்பது அவளின் முறை ஆகிற்று.

“இப்போ எதுக்கு இந்தக் கேள்வி?” என்று நிதானமாகக் கேட்டாள்.

“எனக்குப் பதில் தெரிஞ்சாகணும் உத்ரா…” என்றான்.

“லவ்வா?” என்று கண்களை மூடி ஒரு நொடி யோசித்தவள், “ம்ப்ச்…” என்று உதட்டை சுளித்துவிட்டு, அவனிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டாள்.

“தேவையில்லாத சிந்தனை எல்லாம் இப்ப எதுக்கு முகில்? தூங்குங்க…” என்று அங்கிருந்து செல்ல முயன்றாள்.

ஆனால் செல்ல விடாமல் மீண்டும் அவளின் கையைப் பற்றிக் கொண்டவன், “தேவை என்று தானே கேட்குறேன்?” என்றான்.

ஆனால் அதற்கு உத்ரா பதில் சொல்லாமல் அமைதியாகிப் போனாள்.

“சரி, இதுக்கு மட்டும் பதில் சொல்லு. அன்னைக்குக் கல்யாணத்துக்கு எப்படிச் சம்மதம் சொன்ன? பெரியவங்க எல்லாம் சொன்னதாலா?” என்று கேட்டான்.

“இப்ப எதுக்கு இதெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க முகில்? என்ன அவசியம் வந்தது? இன்னைக்கு அப்பாவோட நான் நேரம் செலவு செய்யணும் முகில். அவருக்காகத் தான் இங்கே வந்திருக்கோம். நீங்க தேவையில்லாததை எல்லாம் பேசி நேரத்தை வேஸ்ட் செய்துட்டு இருக்கீங்க…” என்றாள் உத்ரா.

இனி அவள் பதில் சொல்ல மாட்டாள் என்று புரிந்து விட, “போ…” என்றவன் படுக்கையில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான்.

ஆனாலும் அவளிடம் கேட்ட கேள்விக்கு அவனுக்குப் பதில் தெரிய வேண்டியது இருந்தது.

முக்கியமாக அவன் மேல் அவள் கொண்ட காதல் என்னானது என்று தெரிந்து கொள்ள நினைத்தான்.

அவளாகக் காதல் சொல்லி வந்த போது நிராகரித்து அனுப்பிவிட்டு, இப்போது தன் மீதான அவளின் காதலை தேடிக் கொண்டிருந்தான் முகில்வண்ணன்.

அன்றைய நாள் அதன் பிறகு அமைதியாகவே கழிந்தது. தன்னுடைய யோசனைகள் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு மாமனாருக்காக அமைதியாக வலம் வந்தான்.

உத்ரா அன்னை, தந்தையுடனே ஒட்டிக் கொண்டு திரிந்தாள்.

எப்போதையும் விட இந்த முறை கனமாக அந்தக் குடும்பத்திற்கு நேரம் நகர்ந்தது.

அன்னையும், மகளுமாகச் சமாளித்துக் கொள்வார்கள் என்று எப்போதும் தெம்புடனே கிளம்புவார் வீரபத்ரன். ஆனால் இனி மனைவி ஒரு இடத்திலும், மகள் ஒரு இடத்திலும் இருப்பார்கள் என்பதால் சற்றுச் சஞ்சலப்பட்டார்.

அதைப் புரிந்து கொண்டு அன்னையும், மகளுமாக அவரைப் பேசி தேற்றியிருந்தார்கள்.

அதிலும் மகளின் வாழ்க்கை பற்றியும் அவருக்குக் கவலை இருந்தது.

முகில் தங்கள் முன் சகஜமாகக் காட்டிக் கொண்டாலும், மகளிடம் எப்படி இருக்கிறானோ என்று கவலைப்பட்டார்.

அதனால் மகளைத் தனியாக அழைத்து விசாரித்தார்.

“அப்பா மாப்பிள்ளைக்கிட்ட எதுவும் பேசி பார்க்கட்டுமாடா உத்ரா? உன்கிட்ட இன்னும் விட்டோத்தியா தான் இருக்காரா?” என்று கேட்டார்.

“அப்பா, நீங்க பேச வேண்டிய அவசியமே இல்லப்பா. என்னைப் பத்தி நீங்க இனி கவலையும் பட வேண்டாம். முகில் இப்ப மாற ஆரம்பிச்சுட்டார் பா…” என்றாள்.

“நிஜமாவாடா?” என்று அவர் ஆவலுடன் கேட்க,

“முகில் கல்யாணம் ஆன போது இருந்ததுக்கும், இப்ப உள்ளதுக்கும் கொஞ்சம் கவனித்துப் பாருங்கபா. உங்களுக்கே புரியும்…” என்றாள்.

அதன் பிறகு முகிலை வீரபத்ரன் கவனித்துப் பார்க்க, முன் போல முகில் உத்ராவை ஒதுக்கவே இல்லை. அமர்ந்து பேசும் போது அவள் அருகில் அமர்ந்து கொண்டான். உண்ணும் போது எதுவும் தேவை என்றால் உத்ராவிடம் உரிமையுடன் கேட்டான்.

முன் போல அவளிடம் முகம் திருப்பவும் இல்லை என்பதைக் கண்டவர் நிம்மதி அடைந்தார். மகளின் வாழ்வு மலர்ந்து விடும் என்ற நிம்மதியுடன் இராணுவத்திற்குக் கிளம்பிச் சென்றார்.

அவர் கிளம்புவற்கு முன் முகிலின் பெற்றோரும் அங்கே வந்திருந்தனர்.

அவர் கிளம்பியதும் மகனை, மருமகளை மட்டும் இல்லாது, அஜந்தாவும் அன்று தனியாக இருக்க வேண்டாம் என்று தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

ஞாயிறு அன்று காலையில் வீரபத்ரன் கிளம்பி இருக்க, மதிய உணவிற்கு முகிலின் வீட்டிற்கு வந்து விட்டனர்.

அன்னை தனியாக இருக்க வேண்டும் என்ற கவலையில் அன்று அஜந்தாவையே ஒட்டிக் கொண்டு இருந்தாள் உத்ரா.

அதைக் கவனித்த வளர்மதி, “அம்மாவை பத்தி கவலைப்படாதே உத்ரா. நாங்க இங்கே பக்கத்தில் தானே இருக்கோம். நாங்க பார்த்துக்கிறோம்…” என்றார்.

“அந்தத் தைரியத்தால் தான் எனக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கு அத்தை. வேலை நாளில் கூட அம்மா சமாளித்து விடுவாங்க. லீவில் தான் இரண்டு நாள் தனியா இருக்கணும்…” என்றாள் கவலையாக.

“நாம சனி, ஞாயிறு உங்க வீட்டுக்கோ, இல்ல எங்க வீட்டுக்கோ வருவோம் உத்ரா. எந்த வீட்டில் இருந்தாலும் நம்ம பேரன்ட்ஸையும் நம்ம கூட அழைத்துக் கொள்வோம்…” என்று அவளின் கவலைக்குத் தீர்வு சொன்னான் முகில்வண்ணன்.

“நல்ல ஐடியா முகில்…” என்றாள் உற்சாகமாக.

அவர்கள் இருவரும் சகஜமாகப் பேசிக் கொள்வதைக் கண்ட வளர்மதி முகம் மலர்ந்தார்.

“நான் கூட இப்படித் திடீர்ன்னு கல்யாணம் ஆகியிருக்கே. இரண்டு பேரும் எப்படி வாழ்வாங்களோன்னு கவலைப்பட்டேன் அண்ணி. ஆனா இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு…” என்று சமையலறையில் அஜந்தாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் வளர்மதி.

“எனக்கும் தான் அண்ணி…” என்றார் அஜந்தா.

“அதுவும் அன்னைக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன உத்ராவை கெஞ்சி கூத்தாடி கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்ல வச்சோம். நீங்க கேட்டப்ப இப்ப கல்யாணம் வேண்டாம் என்று சொன்னவள், நானும், முகில் அப்பாவும் பேசி எடுத்து சொல்லி எங்க பையனை கட்டிக்கச் சம்மதம் சொல்லுமா.

எங்களுக்கு இப்போ உன்னைத் தான் பிடிச்சுருக்கு. வேற பொண்ணு எதுவும் திருப்தியா இல்லை. நீ தான் எங்க பையனுக்குப் பொருத்தமா இருப்பன்னு அவளிடம் பேசினோம். நாங்க கெஞ்சுவது போல் பேசுவது பிடிக்காமல், ‘பெரியவங்க இப்படிக் கெஞ்சாதீங்க. நான் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறேன்’னு சொல்லி சம்மதம் சொன்னாள்.

முகில் கல்யாணம் நின்ன கோபத்திலும், பொண்ணு மாறியதை அவன் எப்படி எடுத்துக்கப் போறானோ என்ற பயமும் ஒரு பக்கம் இருந்தது என்றால் உத்ராவை கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க வைத்து விட்டோமே என்ற உறுத்தல் ஒரு பக்கம் இருந்தது அண்ணி.

ஆனா இன்னைக்கு முகிலும், உத்ராவும் பக்கம் பக்கத்தில் உட்கார்ந்து பேசுறதை பார்த்தே எனக்குத் திருப்தியா இருக்கு. நாம சீக்கிரமே பேரன் பேத்தியை கொஞ்சிடலாம்ன்னு நம்பிக்கை வந்திருச்சு…” என்றார் வளர்மதி.

“உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் அண்ணி…” என்றார் அஜந்தா.

பெரியவர்கள் இங்கே மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்க, தண்ணி குடிக்க டைனிங்ஹால் வந்த முகில்வண்ணனோ அனைத்தையும் கேட்டு உறைந்து போனான்.

‘அப்போ எங்க அப்பா, அம்மா கெஞ்சி கேட்டதால் தான் உத்ரா திருமணத்திற்குச் சம்மதம் சொன்னாளா? அப்போ என் மீதான அவளின் காதல்?’ என்ற கேள்வியுடன் அவனின் சிந்தனையும் உறைந்து போனது.