3 – மின்னல் பூவே!
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 3
உத்ரா தன் அம்மா சொன்னதை நினைத்து இன்றைக்கு எந்த வம்பிற்கும் போகாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த படி உற்சாகமாகக் கல்லூரிக்குள் நுழைந்தாள்.
அவளின் வகுப்பை நெருங்கும் போது வழியில் தென்பட்ட சக வகுப்புத் தோழிகளைப் பார்த்து முறுவலிந்து கொண்டே சென்றாள்.
அப்போது அவளின் எதிரே நடந்து வந்த குரு அவளை உக்கிரமாக முறைத்துப் பார்த்துக் கொண்டே வந்தான்.
அவன் கை உயர்ந்து தன்னால் அவனின் கன்னத்தைத் தடவியது. தன்னையே அடித்து விட்டாளே என்று நினைத்த மாத்திரத்தில் அவனின் வன்மம் கூடியது.
உத்ரா அவனைக் கவனித்தாலும், கவனிக்காதது போல அவனைக் கடந்து செல்ல, ‘திமிர்! திமிர்! உடம்பு முழுக்கத் திமிர்! உன் திமிரை அடக்கலைனா என் பேரு குரு இல்லடி’ என்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டு அவளைக் கடந்து சென்றான்.
உத்ராவிற்கும் அவனை நினைத்து இன்னும் ஆத்திரம் அடங்காமல் இருந்தது தான். ஆனால் அதற்காக அவனிடம் எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டேவா இருக்க முடியும்?
ஆனால் இன்னொரு முறை அவன் தன் தோழியிடம் வம்பிழுத்தால் அவனுக்கு இன்னும் சரியான பாடம் புகுத்தி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
‘சேச்சே! அந்த முட்டாப்பயலை நினைத்து காலங்காத்தாலயே ஏன் டென்ஷன் ஆகணும்? ஜாலி மூடுக்கு வா உத்ரா’ எனத் தனக்குத்தானே மானசீகமாகத் தோளை தட்டி உற்சாகமாகச் சொல்லிக் கொண்டவள் இதழில் புன்னகையைத் தவழ விட்டுக் கொண்டு நடந்தாள்.
“என்ன உத்ரா ரொம்பச் சந்தோஷமா வர்ற, என்ன விஷயம்?” என்று எதிரே வந்த புவனா ஆவலாக விசாரித்தாள்.
“சந்தோஷமா இருக்க ஏதாவது விஷயம் இருந்தாகணும்னு உன்கிட்ட யாரு சொன்னா?” என்று கேலியாகக் கேட்டாள்.
“எந்தச் சந்தோஷமான விஷயமும் இல்லைனா எதுக்குடி இப்படி ‘ஈஈ’னு இளிச்சுட்டு வர்ற?” கடுப்பாகக் கேட்டாள்.
“அட! கேலியா பேசியதும் என் புவிக்குட்டிக்கு மூஞ்சு சுருங்கிக் கோபம் வந்துருச்சே… உன் செல்ல ஃபிரண்டு மேல உனக்குக் கோபமெல்லாம் வரக்கூடாது செல்லம்…” புவனாவின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிய படி பேசினாள்.
“கோப படக்கூடாதுனா என்ன விஷயம்னு சொல்லு…”
“சந்தோஷமா இருக்கச் சந்தோஷமான மனசு இருந்தா போதும். ஏதாவது ஒரு காரணம் இருந்தா தான் சந்தோஷமா இருக்கணும்னு எந்த அர்த்தமும் இல்லை. அதை நல்லா உன் மனசுல ஏத்திக்கோ புவி…” என்றவளைக் கொலைவெறியுடன் பார்த்தாள் புவனா.
“என்ன புவி முறைக்கிற?”
“வர வர நீ ரொம்ப வியாக்கியானம் பேசுற! எங்க இருந்து தான் இப்படிப் பேச கத்துக்கிட்டயோ?”
“அதெல்லாம் தானா வருது…” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாள் உத்ரா.
“உன் பெருமையை நீதான் மெச்சிக்கணும்…” சலிப்பாகப் புவனா சொல்ல,
“உனக்கு என்னை மாதிரி பேச தெரியலைனு பொறாமை…” கேலியாகச் சொல்லிச் சிரித்தாள்.
“ஆமா, நான் அந்த ஆமையை வச்சு பொரியல் பண்ணி தின்னப் போறேன் பாரு. அது தான் அந்த ஆமையைப் பிடிச்சு வச்சுருக்கேன். போவால…”
“என்ன புவி, உத்ராவை எங்க போகச் சொல்ற?” பேசிக்கொண்டே வகுப்பறையில் வந்து அமர்ந்த இருவரையும் பார்த்து கேட்டாள் அவர்களின் அருகில் அமர்ந்திருக்கும் தோழி தீபா.
“அது சும்மா பேசிட்டு இருந்தோம் தீபா” என்று புவி சொல்ல, பின்பு தோழிகளுக்குள் பேச்சு வளர்ந்து அரட்டை அடிக்கத் தொடங்கினர்.
அதன்பிறகு இடைவேளை நேரம் வரை வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.
இடைவேளை விட்டதும் சிலர் வெளியே எழுந்து செல்ல, சிலர் வகுப்பிற்குள்ளேயே அமர்ந்து தங்கள் அரட்டையைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது தன்னை யாரோ விடாமல் பார்ப்பதாகத் தோன்ற, தோழியுடன் பேசிக்கொண்டிருந்த உத்ரா வேகமாகப் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
குரு தான் ஜன்னல் வழியாக அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
குருவின் பார்வையைக் கண்டதும் ‘இவன் எதுக்கு இங்க வந்து நின்னு இப்படிப் பார்க்கிறான்?’ என்று தோன்றியது. ஆனாலும் ‘எதுக்கோ நின்னுட்டுப் போறான்’ என்று அலட்சியமாகத் தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.
அதில் குருவின் கோபம் இன்னும் அதிகரித்ததை அறியாமல் தோழிகளுடன் மீண்டும் அரட்டையில் ஈடுபட்டிருந்தாள்.
அப்போது அவளைத் தாண்டி அவளின் வகுப்பு மாணவர்கள் இருவர் ஏதோ பேசி சிரித்துக் கொண்டே சென்றனர்.
அதில் ஒருவன் பேசிய வார்த்தை துல்லியமாகப் பாதை ஓரத்தில் அமர்ந்திருந்த உத்ராவின் காதில் விழ, உக்கிரமாகக் கொதித்தெழுந்தவள் அதே வேகத்தில் தன்னைத் தாண்டி செல்ல முயன்றவனின் சட்டையைப் பிடித்து இழுத்து அவனின் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
நிமிட நேரத்தில் அந்த இடமே ஸ்தம்பித்துப் போனது.
அவள் எதற்குத் திடீரென அவனை அடித்தாள் என்று அவளுடன் இருந்த தோழிகளுக்குக் கூடப் புரியவில்லை.
அவர்களின் அரட்டையின் மும்முரத்தில் அவன் பேசியது அவர்களுக்குக் கேட்காமல் போனதால் “ஏய்! என்னடி உத்ரா?” அதிர்ந்து அழைத்தனர்.
அவர்களைக் கண்டுகொள்ளாமல் இன்னும் அவனின் சட்டையை விடாமல் அவனை ஆத்திரமாக முறைத்துக் கொண்டிருந்தாள் உத்ரா.
அடி வாங்கியவனுக்கும், அவனின் அருகில் இருந்த நண்பனுக்கும் அவள் எதற்காக அடித்திருப்பாள் என்று புரிந்தாலும் ஒரு ஆணை பெண் எப்படி அடிக்கலாம் என்ற திமிரில் “ஏய்! உத்ரா, எதுக்கு என்னை இப்போ அடிச்ச?” என்று கோபமாகக் கேட்ட அடிவாங்கியவன், தன் சட்டையைப் பிடித்திருந்த அவளின் கையைத் தட்டி விட்டான்.
“நான் ஏன் அடிச்சேன்னு உனக்குத் தெரியாதா?” அவனைக் கூர்மையாகப் பார்த்துத் திருப்பிக் கேட்டாள்.
அவளில் ஊடுருவும் பார்வையைக் காண முடியாமல் அவனின் தலை குனிய போனது.
ஆனால் அதற்குள் “டேய் தினேஷ், இந்த விஷயத்தை இப்படியே விடக்கூடாதுடா. அன்னைக்கு என்னை அடிச்சா. இன்னைக்கு உன்னை அடிச்சிருக்கா. இவளுக்குப் பெரிய ஜான்சி ராணினு நினைப்பு. இவ கொட்டத்தை அடக்க ஏதாவது செய்தே தீரணும்டா…” என்று நடந்ததைப் பார்த்து உள்ளே வந்து அடிவாங்கியவனுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்தான் குரு.
உத்ராவின் மீதிருந்த கோபத்தை இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள நினைத்தான்.
“ஹலோ சீனியர், இது எங்க கிளாஸ் எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க கிளம்புங்க…” அவனின் எண்ணம் புரிந்து அங்கிருந்து அனுப்ப முயன்றாள் உத்ரா.
“அதை நீ சொல்லாதே, தினேஷ் சொல்லட்டும் நான் போறேன்…” என்று அவளிடம் சொன்னவன், தினேஷின் புறம் திரும்பி, “நீ அடி வாங்கியதை பார்த்துட்டு, உனக்கு ஆதரவா பேசத்தான் உள்ளே வந்தேன் தினேஷ். இப்ப என்ன, நான் போகவா?” என்று கேட்டான்.
தனக்காகப் பேச சீனியர் மாணவனே முன் வரும் போது அவன் என்ன மறுக்கவா போகின்றான்?
“நீங்க இருங்க சீனியர்…” என்றான் தினேஷ்.
அப்போது இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் என்பதால், வெளியே சென்ற மாணவர்கள் அனைவரும் உள்ளே வர ஆரம்பித்தனர்.
சீனியர்கள் அந்த வகுப்பை தாண்டித்தான் அவர்களின் வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்பதால் இங்கே ஏதோ பிரச்சினை என்று தெரிந்ததும் சில சீனியர் மாணவர்களும் உள்ளே வந்தனர். அவர்களுடன் முகில்வண்ணனும் இருந்தான்.
“என்ன… என்ன விஷயம்?” என்று ஆளுக்கு ஆள் கேட்க, உத்ரா அப்படியே கோபத்துடன் நின்றிருந்தாளே தவிர யாருக்கும் பதில் சொல்ல அவள் தயாராகயில்லை.
உத்ரா அலட்சியமாக நின்றிருந்ததைப் பார்த்ததுமே, ‘அதானே பார்த்தேன். இவ இருக்குற கிளாஸ்ல பிரச்சனை வரலைனா தான் அதிசயம்’ என்பது போல் அவளைப் பார்த்தான் முகில்வண்ணன்.
“இவ தினேஷை காரணமே இல்லாம சும்மா பேசிட்டுப் போனப்ப அடிச்சுட்டாடா. என்னன்னு கேளுங்க…” என்று அனைவரையும் உசுப்பேத்தி கொண்டிருந்தான் குரு.
“என்ன உத்ரா ஏன் அடிச்ச?” அவளின் பெண் தோழிகளும், ஆண் தோழர்களும் மாறி, மாறி கேள்வி கேட்க, “என்ன பேசினான்னு எல்லாம் சொல்ல முடியாது. தப்பா பேசினான் அடிச்சேன்…” அசால்டாவாகவே பதில் சொன்னாள்.
“இந்த அலட்சியம் சரி கிடையாது உத்ரா. ஏன் அடிச்சன்னு காரணம் சொல்லு…” என்று சில சீனியர் மாணவர்களும் தினேஷுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்தனர்.
“காரணம் எல்லாம் சொல்ல முடியாது…” என்றாள் உத்ரா.
“என்ன உத்ரா, சும்மாவே இருக்க மாட்டீயா? ஏன் எப்ப பார்த்தாலும் யாரையாவது அடிச்சுட்டே இருக்க? அதென்ன எதுக்கு எடுத்தாலும் கை நீட்டுற பழக்கம்?” என்று அமைதியாக இருக்க முடியாமல் முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டான் முகில்வண்ணன்.
அவனைக் கூர்மையாகப் பார்த்த உத்ரா “நான் காரணம் இல்லாம யாரையும் அடிக்க மாட்டேன். அடிச்சா அந்த அளவுக்குத் தப்பும் பெருசுனு நீங்களும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…” என்றாள் அழுத்தமாக.
“தப்பு சின்னதோ பெருசோ அதைத் தட்டிக் கேட்குறேன்னு ஒருத்தரை அடிக்கற உரிமையை உனக்கு யார் கொடுத்தா? உனக்கு ஒரு விஷயம் தப்பா தெரிஞ்சா அதைப் பத்தி புரொபஷர்கிட்ட கம்ளைண்ட் கொடு. அதை அவங்க விசாரிப்பாங்க. அதை விட்டு எதுக்கெடுத்தாலும் இப்படி நீயே கை நீட்டினா என்ன அர்த்தம்?” என்று கேட்ட முகில்வண்ணனின் குரலில் அப்பட்டமான எரிச்சல் தெரிந்தது.
“டேய் முகில்! நல்லா கேளுடா… தினேஷ் அவன் ஃபிரண்டு கூடச் சும்மா சிரிச்சுப் பேசிட்டுப் போனதை நானே பார்த்தேன். அப்போ திடீர்னு அவன் சட்டையைப் பிடிச்சு நிறுத்தி அறைஞ்சுட்டா…” முகில் தன்னை அடித்ததில் ஏற்கனவே கோபமாக இருந்தாலும், இப்போது உத்ராவை அவன் கேள்வி கேட்ட விதத்தில் தன் கோபத்தைத் தள்ளி வைத்து விட்டு உடனே நட்புக்கரம் நீட்டினான் குரு.
ஆனால் அவனின் புறம் திரும்பாத முகில் உத்ராவை பார்த்து “தினேஷ்கிட்ட மன்னிப்பு கேளு உத்ரா…” என்றான்.
“நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்? என்னால் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. முதலில் இங்க என்ன நடந்துச்சுனே தெரியாம தீர்ப்பு சொல்ல வராதீங்க மிஸ்டர் முகில்வண்ணன், போங்க…” என்றாள் எரிச்சலுடன்.
அவளின் பேச்சை முகத்தில் அடித்தது போல உணர்ந்த முகில்வண்ணன் அவளை முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அவன் செல்லவும், உத்ராவை ஒன்றும் செய்ய முடியாத ஆத்திரத்தில் இருந்த குரு அவளைப் பிரின்ஸ்பால்லிடம் மாட்டிவிடும் முடிவில் இருந்தான்.
அதனால் முகில் எடுத்துக் கொடுத்துவிட்டு சென்ற விஷயத்தைப் பிடித்துக் கொண்டான்.
“ஆமா உத்ரா, நீ தினேஷ்கிட்ட மன்னிப்பு கேட்கணும்…” என்று வேண்டும் என்றே ஓங்கி குரல் கொடுத்தான்.
அவனுடன் தினேஷும், அவனின் நண்பர்களும் சேர்ந்து கொள்ள ஆண் இனத்திற்கு ஆதரவாகக் காரணத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் சில ஆண் மாணாக்கர்களும் குரல் கொடுத்தனர்.
விஷயம் பெரிதாக ஆவதை உணர்ந்த உத்ராவின் தோழிகளும் “ஒரு மன்னிப்பு தானே, கேட்டுருடி…” என்று அவளுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.
“வாயை மூடுங்கடி! அவன் என்ன பேசினான்னு தெரிஞ்சா அவன் முகத்தில் நீங்களே காரி துப்புவீங்க…” என்று ஆண்களின் காதில் விழாத வண்ணம் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
உத்ரா நியாயம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டாள் என்பதை அறிந்தவர்கள் என்பதால் தோழிகள் அமைதியாகி விட, மாணவர்களின் துள்ளல் அதிகமானது.
அவர்கள் கொடுத்த சத்தத்தின் விளைவு, விஷயம் பிரின்ஸ்பால் வரை சென்றது.
பிரின்ஸ்பால் அறைக்குச் செல்வதற்கு முன் வகுப்பிற்கு வெளியே நின்றிருந்த முகில்வண்ணனை முறைத்து விட்டே சென்றாள்.
அவன் தானே மன்னிப்பு என்ற வார்த்தையை இழுத்து விட்டவன் என்ற கோபம் கொழுந்து விட்டு எரிய, அதைக் கண்களின் வழியாகக் காட்டி விட்டே சென்றாள்.
‘போ… போய் வாங்கிக் கட்டிக்க… அப்போ தான் உனக்கெல்லாம் புத்தி வரும்…’ என்பது போலப் பதிலுக்குப் பார்த்து வைத்தான் முகில்வண்ணன்.
தினேஷ், உத்ரா, குரு, தினேஷின் நண்பன் அவர்களுடன் அவள் அடித்ததைப் பார்த்த இன்னும் சிலரை மட்டும் பிரின்ஸ்பால் அழைத்திருந்தார்.
அங்கே சென்று ஒரு மணி நேரம் கழித்து வந்தவர்கள் பேசிக் கொண்டதை கேட்டு உத்ராவின் மீது இன்னும் கோபம் அதிகரித்துத் தான் போனது முகில்வண்ணனிற்கு.
“இந்த உத்ரா ரொம்பத் தான் அழுத்தம்டா. பிரின்ஸ்பாலும் மாத்தி மாத்தி எப்படி எப்படியோ விசாரிச்சுப் பார்த்துட்டார். ஆனா எதுக்கு அடிச்சாள்னு சொல்லவே இல்ல. மன்னிப்பும் கேட்க மாட்டேன்னு ஒரே பிடியில் நின்னுட்டாள். இவ்வளவு அழுத்தமான பொண்ணைப் பார்த்ததே இல்லைடா. ஹப்பா! என்ன பொண்ணுடா இவள்னு நினைக்க வச்சுட்டாள்!” என்று சாட்சியாகச் சென்ற ஒருவன் பேசிக் கொண்டே சென்றது முகிலின் காதில் விழுந்தது.
‘அவள் எல்லாம் பொண்ணே இல்ல! சரியான திமிர்ப்பிடித்தவள்!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் முகில்வண்ணன்.
“தைரியமா இருக்க வேண்டியது தான். அதுக்காக ரொம்ப அடாவடியாகவும் இருக்கக் கூடாது உத்ரா. உனக்கு நானும், அப்பாவும் சுதந்திரம் கொடுத்து இருக்கோம் தான். ஆனா அதையே நீ வெளியேவும் எதிர்பார்ப்பது தப்பு உத்ரா.
இத்தனை நாளும் நீ எதுவும் பிரச்சனை பண்ணிட்டு வந்தாலும் யாரும் பனிஷ்மென்ட் கொடுக்குற அளவுக்குப் போனதில்லை. ஆனா இப்போ உன்னை மூணு நாள் சஸ்பெண்ட் பண்ண வைக்கிற அளவுக்கு நீ நடந்துக்கிட்டது எனக்குப் பிடிக்கலை உத்ரா…” என்று ஆதங்கமாகப் பேசிய அன்னை அஜந்தாவை அயராமல் பார்த்துக் கொண்டிருந்தாள் உத்ரா.
அவளின் பார்வையைக் கண்டு “என்ன அப்படிப் பார்க்கிற? நான் சொல்றது புரியுதா இல்லையா?” என்று கேட்டார் அஜந்தா.
“புரியதுமா… நல்லாவே புரியுது! தைரியமா அநியாயத்தைத் தட்டிக் கேட்கலாம். ஆனா அது பனிஷ்மென்ட் அளவுக்குப் போயிற கூடாதுன்னு நல்லாவே புரியுதுமா…” என்று தலையைச் சாய்த்து சொன்னவள் அன்னையைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.
“ம்ப்ச், எப்பயும் போல நான் சாதாரணமா சொல்லலை உத்ரா. உண்மையா உன்னைக் கண்டிக்கிறேன். அதனால் விளையாடாம பேசு!” என்று அதட்டினார்.
அவரின் அதட்டலை ஆச்சரியமாகப் பார்த்த உத்ரா, அமைதியாகத் தங்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கும் தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.
வீரபத்ரன் மனைவியின் கண்டிப்புச் சரிதான் என்பது போலச் சோஃபாவில் இறுக்கமாக அமர்ந்திருந்தார்.
“என்னப்பா அம்மா புதுசு புதுசா என்னமோ சொல்றாங்க. நீங்களும் பேசாம இருக்கீங்க?” தந்தையிடம் நியாயம் கேட்டாள்.
“அம்மா சொல்றது சரிதான் உத்ரா. நீ பனிஷ்மென்ட் வாங்கிட்டு வந்தது எனக்கும் பிடிக்கலை. தப்புப் பண்றவங்களுக்குத் தான் பனிஷ்மென்ட் கிடைக்கணும். உனக்குப் பனிஷ்மென்ட் கிடைச்சுருக்குனா அப்போ நீ தப்பு பண்ணிருக்கனு தானே அர்த்தம் ஆகுது?
மிலிட்டரி ட்ரெனிங்ல என் கீழே இருக்குறவங்க தப்புப் பண்ணினா பனிஷ்மென்ட் கொடுக்கிறவன் நான். ஸ்கூலில் ஸ்டூடென்ட் யாரும் தப்புப் பண்ணனினா பனிஷ்மென்ட் கொடுக்கிறவள் உன் அம்மா. எங்க பொண்ணு நீ பனிஷ்மென்ட் வாங்கிட்டு வந்துருக்க… இதை நாங்க எப்படி எடுத்துக்கணும்னு நீயே சொல்லு…” என்றார் வீரபத்ரன்.
“அவன் தப்பு பண்ணினான்பா அதான் அடிச்சேன்…”
“தப்புப் பண்ணினா தட்டிக் கேளுன்னு தான் உனக்குச் சொல்லிக் கொடுத்துருக்கேன். அடிச்சுக் கேளுன்னு சொல்லிக் கொடுக்கலை உத்ரா…”
“பொறுமையா பேசுற மாதிரியான தப்பு அவன் பண்ணலைபா. உங்ககிட்டயும், அம்மாகிட்டயும் கூட அது எந்த மாதிரியான தப்புனு எனக்குச் சொல்ல முடியலைபா. அப்படித் தப்பா பேசினான்…”
“என்ன மாதிரியான தப்பா இருந்தாலும் கையை நீட்டாதே உத்ரா. கையை நீட்டுறதும் பெரிய தப்பு தான். இனி அதைச் செய்யாதே!” என்று தந்தையும், மகளும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அஜந்தா இப்போது குறுக்கிட்டார்.
“ஆமா உத்ரா, கையை நீட்டாதே!” என்று வீரபத்ரனும் சொன்னார்.
இருவரும் சொன்ன பிறகு அதைத் தட்டிக் கழிக்கத் தோன்றாமல் “சரி” என்று கேட்டுக் கொண்டாள்.
“சரி, எப்படியும் நீ மூணு நாள் வீட்டில் இருக்கப் போற. அம்மாவும் இனி வீட்டில் இருக்கப் போறா. அப்போ நாம மூணு பேரும் ஒரு சின்ன ட்ரிப் போகலாமா?” என்று வீரபத்ரன் கேட்க, “ஹேய்! போகலாம்பா…” என்று உற்சாகமாகக் கூவினாள்.
“அவ சஸ்பெண்ட் ஆனதை கொண்டாடுற மாதிரி இருக்கு ட்ரிப் போறது…” என்று சலித்தாலும் தாங்கள் குடும்பமாகச் செலவளிக்கப் போகும் நாட்களை அஜந்தாவும் சந்தோஷமாக எதிர்பார்த்தார்.
சொன்ன படி அடுத்த மூன்று நாட்களும் உத்ராவின் குடும்பம் சந்தோஷமாகச் சுற்றுலா சென்று வந்தார்கள்.
அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் வார விடுமுறையாக இருக்க, ஐந்து நாள் சேர்ந்தாற்போலத் தந்தையுடன் நேரம் செலவழித்ததை எண்ணி மகிழ்ச்சியுடனேயே வலம் வந்தாள் உத்ரா.
அம்மகிழ்ச்சி திங்கள் அன்று கல்லூரிக்குச் செல்லும் போதும் அவளின் முகத்தில் ஒட்டிக் கொண்டது.
“என்ன உத்ரா சஸ்பெண்ட் ஆனதால் சோகமா வருவியோனு நினைச்சேன். நீ என்னென்னா இவ்வளவு சந்தோஷமா வர்ற?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் புவனா.
“பேமிலியோட ரொம்ப நாளுக்கு அப்புறம் ஊர் சுத்தினா சந்தோஷம் தானே படணும். அதுக்கு யாராவது வருத்தப்படுவாங்களா?” சிரித்துக் கொண்டே கேட்டாள் உத்ரா.
“என்னது ஊர் சுத்த போனீங்களா? உங்க வீட்டில் நீ சஸ்பெண்ட் ஆனதுக்குத் திட்டலையா?” ஆச்சரியப்பட்டாள் புவனா.
“திட்டத்தான் செய்தாங்க. திட்டிட்டு சரி மூணு நாள் வீட்டில் சும்மா தானே இருக்கணும். அதை நாம சேர்ந்து இருக்க யூஸ் பண்ணிப்போம்னு அப்பா திடீர் பிளான் போட்டு கூட்டிட்டுப் போய்ட்டார். நல்லா என்ஜாய் பண்ணினோம்…” மகிழ்ச்சியில் முகம் மலர சொன்னாள் உத்ரா.
அவள் அப்படிச் சந்தோஷமாகச் சொன்னதைக் கேட்டு, அவர்களைத் தாண்டிச் சென்ற முகில்வண்ணன் முகத்தைச் சுளித்துக் கொண்டு போனான்.
‘சஸ்பெண்ட் ஆனதையும் கொண்டாட்டமா மாத்துற குடும்பம் என்ன குடும்பமோ?’ என்று அவன் முனங்கியது மட்டும் உத்ராவின் காதில் விழுந்திருந்தால் ருத்ரதாண்டவத்தை நேரடியாகப் பார்க்கும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்திருக்கும்.
அது தெரிந்தவன் தானோ என்பதாலோ, அவனின் முனங்கல் அவன் உதட்டைத் தாண்டி வெளியே வரவில்லை.
முகிலின் முணுமுணுப்பு கேட்கவில்லை என்றாலும், அவனின் முகச்சுளிப்பை பார்த்து விட்டாள் உத்ரா. ஆனாலும் அதை அவள் பொருட்படுத்தவில்லை.