29 – மின்னல் பூவே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 29
முகில்வண்ணனை பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டே வந்தாள் கமலினி.
அவளை உக்கிரமாக முறைத்த முகில் திரும்பி உத்ராவை முறைக்க ஆரம்பித்தான்.
“இங்கே என்ன நடக்குது உத்ரா? கண்டவளை எல்லாம் என் முன்னாடி நிறுத்தி என்ன நிரூபிக்க நினைக்கிற?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் குனிந்து கேட்டான்.
அவள் மீது ஏற்பட்டிருந்த சலனம் எல்லாம் எங்கோ ஓடி ஒளிய, திருமணத்தன்று தானும், தன் குடும்பமும் அவமானப்பட்டது மட்டுமே கண்முன் நிற்க, கோபாக்கினியாக நின்றிருந்தான்.
“நான் சொன்னாலும் நம்புவீங்களா தெரியலை முகில். இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கும் புரியலை. சித்தி எங்கிட்ட அவங்க மட்டும் வருவதாகத் தான் சொன்னாங்க…” என்றாள் உத்ரா.
“உத்ராவுக்கு எதுவும் தெரியாது தம்பி. நான் அவள்கிட்ட கொஞ்சம் பேசணும் கோவிலுக்கு மாப்பிள்ளையைக் கூட்டிட்டு வாமான்னு மட்டும் தான் சொன்னேன்…” அவன் அவளிடம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை என்றாலும் உத்ராவை கோபமாக முறைப்பது பார்த்து சொன்னார் விமலா.
இருவரையும் நம்பாத பார்வை பார்த்தான்.
அவனின் கோபத்தில் இருந்த நியாயம் புரிந்தது என்பதால் உத்ரா இப்போது அவன் தன்னை நம்பாததைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவளும் கமலினியை அங்கே எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஜோடியாக முகிலின் முன் வந்து நிற்க இவளுக்கு எவ்வளவு தெனாவட்டு இருக்க வேண்டும் என்பதாக அவளைப் பார்த்தாள்.
நம்ப வைத்து ஏமாற்றுவது என்பது எவ்வளவு பெரிய துரோகம் என்பதாலயே இப்போதைய முகிலின் கோபத்தைத் தாங்கிக் கொண்டாள்.
“மன்னிப்பு கேளுடி…” தன் அருகில் வந்து அமைதியாக நின்ற மகளை அதட்டினார் விமலா.
அவர்களைப் பார்க்க பிடிக்காமல் முகில் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“ஸாரி… கல்யாணம் அன்னைக்கு உங்களுக்குத் தலைகுனிவு வர வச்சுருக்கக் கூடாது. ஆனா எனக்கு வேற வழி தெரியலை…” என்று தயங்கிக் கொண்டே முகிலிடம் மன்னிப்புக் கேட்டாள் கமலினி.
ஆனால் அவனோ அவள் பக்கமே திரும்பவில்லை. அவளின் மன்னிப்பு அவன் பட்ட அவமானத்தைப் போக்கிவிடுமா என்ன? என்ற எரிச்சல் தான் அவனுக்கு வந்தது.
அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்க, உத்ரா தான் கமலினியின் புறம் திரும்பினாள். அவளின் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியையும் கேட்க ஆரம்பித்தாள்.
“நீ காதலிச்சா அதைச் சித்தி சித்தப்பாகிட்ட சொல்லி சம்மதம் வாங்கியிருக்கணும் கமலி. ஆனா நீ என்ன காரியம் பண்ணி வச்சுட்டு இப்போ ஸாரின்னு ஒரு வார்த்தை சொன்னால் முகில் பட்ட அவமானம் எல்லாம் இல்லைனு ஆகிடுமா?” என்று கோபமாகக் கேட்டாள் உத்ரா.
“அப்பாவை பத்தி தெரிஞ்ச நீயே இப்படிச் சொல்றியே உத்ரா?” என்று கேட்டாள் கமலினி.
“ஏன் சித்தப்பா என்ன பண்ணினார்?”
“அவருக்குத்தான் காதல் என்றாலே பிடிக்காதே உத்ரா. நான் காதலிக்கிறேன்னு சொன்னால் எப்படி எங்க கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்வார்?” என்று நியாயம் கேட்ட கமலினியைக் கடுமையாக முறைத்தாள்.
“காதல் பிடிக்காதுன்னு நிறையப் பெற்றவர்கள் சொல்வது தான். ஆனா அதையும் மீறி உனக்குக் காதல் வந்திருக்கும் போது அவருக்கு எடுத்துச் சொல்லி புரிய வச்சுருக்கணும். ஆனா நீ என்ன பண்ணின?” என்று கேட்டாள்.
“உனக்கு இன்னும் அப்பாவை பத்தி சரியா தெரியலை உத்ரா. நீ அமைதியான பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கணும். எனக்கு எப்பவும் தலைகுனிவு வருவது மாதிரியான வேலையைச் செய்திட கூடாதுன்னு அடிக்கடி என்கிட்ட சொல்லி சொல்லியே என்னை அடங்கிப் போக வச்சுட்டார்.
ஒரு நாள் என் ஃபிரண்ட் ஒருத்தி காதலை பத்தி வீட்டில் பேசியதற்கே என்னை ரொம்பத் திட்டிட்டார். அப்படிப்பட்டவர்கிட்ட போய் நான் ஒருத்தரை காதலிக்கிறேன்னு என்னால் தைரியமா சொல்ல முடியலை.
அப்படியும் கல்யாணம் முடிவானப்ப எனக்கு இப்போ கல்யாணத்தில் விருப்பம் இல்லைப்பா என்று சொல்லிப் பார்த்தேன். ஆனா மாப்பிள்ளை அப்படி, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இப்படின்னு ஏதேதோ பேசி கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுமான்னு பிடிவாதம் பிடித்தார்…” என்று கமலினி சொல்ல,
“உண்மையா சித்தி? இவளை கட்டாயப்படுத்திக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்ல வச்சீங்களா?” என்று விமலாவிடம் கேட்டாள் உத்ரா.
“இப்ப உள்ள பிள்ளைங்க இப்போ கல்யாணம் வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். இன்னும் நான் வேலையில் நிலைச்சு நின்னுக்கிறேன் இப்படி எல்லாம் சொல்வது சகஜம் தானே உத்ரா? இவளும் அப்படித்தான் காரணம் சொல்றாள்னு நாங்களும் நினைச்சோம்.
அவள் மனசில் ஒருத்தர் இருக்கார்ன்னு துளி கூட வெளியே காட்டிக்கலை. அப்படி இருக்கும் போது நாங்க பார்த்த வரன் நல்ல வரனாக இருக்கவும் பேசி சம்மதிக்க வைத்தோம். காதலிச்சி தொலைச்சவ அதையாவது சொல்லி தொலைச்சிருக்கணும். ஆனா இவ அமுக்குனியா இருந்து இப்படிப் பண்ணிருக்கா…” என்று மகளை முறைத்துக் கொண்டே சொன்னார்.
“ஏன்மா நான் என் காதலை சொல்லியிருந்தால் மட்டும் அப்படியே நீங்களும், அப்பாவும் ஏத்துக்கிட்டு இருந்து இருப்பீங்களா?” என்று கேட்டாள் கமலினி.
அந்தக் கேள்வியில் அமைதியாக இருந்தார் விமலா. அந்த நேரத்தில் கண்டிப்பாக அவளைக் கண்டித்திருப்பார்கள் தான். ஆனால் முகில் குடும்பத்திற்குத் தலைகுனிவு வரும் வரை விட்டுருக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்.
அவரின் அமைதியைப் பார்த்து, “பார் உத்ரா. அவங்ககிட்ட பதில் இல்லை. எதையாவது சொல்லி என் மனசை மாத்தி அவங்க பார்த்த மாப்பிள்ளைக்கு என்னைக் கட்டி வச்சுருப்பாங்க. அதுதான் நான் அவங்க போக்கிலேயே போய் என் காதலை நிறைவேத்திக்கிட்டேன்…” என்று எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் சொன்னவளைக் கண்டு உத்ராவிற்கு ஆத்திரம் வந்தது.
“சபாஷ்! நல்லா இருக்கு உன் ஐடியா. உன் காதலை நிறைவேத்திக்க, நானும் என் குடும்பமும் தான் உனக்குப் பலிகெடாவா? உனக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கூட நீயும் வேண்டாம் உங்க சம்பந்தமும் வேண்டாம்னு போயிருப்போம். ஆனா நீ கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம நான் உன்கிட்ட பேசினப்ப கூட ரொம்ப நல்லவள், அப்புராணி போலக் காட்டிக்கிட்ட. ச்சை, எவ்வளவு வேஷம்…” என்று அருவெறுப்பாக முகத்தைச் சுளித்தான் முகில்வண்ணன்.
அவன் ‘ச்சை’ என்றதில் இது உனக்குத் தேவையா என்பது போல் மகளைப் பார்த்தார் விமலா.
“நல்லா யோசிச்சு பாருங்க முகில், நான் உங்ககிட்ட ஒரு நாளும் விருப்பமா பேசியதே இல்லை. ஏதாவது சொல்லி போனை வச்சுடுவேன்…” என்ற கமலினியைப் பார்த்து அவனுக்கு இன்னும் தான் ஆத்திரம் வந்தது.
“ஓகோ! அப்படி நடந்துகிட்டா நானே உனக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு நினைச்சுக்கிட்டுக் கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு நினைச்சீயோ…” என்று எகத்தாளமாகக் கேட்டான்.
அதுதான் உண்மை என்பது போல் அமைதியாக நின்றிருந்தாள் கமலினி.
“நீ காதலிக்கிறயா இல்லையான்னு உன்னோட அப்பா, அம்மாவுக்கே தெரியலை. இதில் எங்கிருந்தோ வந்த நான் உன்னை நானா புரிஞ்சுகிட்டு விலகிப் போகணும்னு நினைச்ச நீ எல்லாம் சரியான முட்டாள்…” என்றான்.
“அதெல்லாம் இருக்கட்டும் எனக்குச் சில விஷயங்களுக்கு மட்டும் பதில் தெரியணும். அதை மட்டும் சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணு…” என்ற முகில்,
“என்னைக்கும் இல்லாம அன்னைக்கு ஏன் நீயா எனக்குப் போன் போட்டுப் பேசின? அன்னைக்குத் தான் என்னோட அக்கா உன்மேல சந்தேகப்பட்டாள். அந்தப் பொண்ணுகிட்ட ஒரு ஒட்டாத தன்மை இருக்குன்னு என்கிட்ட வந்து சொன்னாள். அதில் எனக்கும் கூடக் கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனா அன்னைக்கே நீயே போன் போட்டு பேசி என்னைக் குழப்பி விட்டுட்ட. எதுக்குப் பேசின?” என்று கேட்டான்.
“அது…” என்று தயக்கமாக இழுத்த கமலினி அவர்களின் அருகில் வராமல் சற்று தள்ளி நின்றிருந்த அவளின் கணவனைப் பார்த்தாள்.
அவளின் கணவன் நிவேதன் அவர்கள் பேசுவது கேட்கும் தொலைவில் மட்டும் நின்று கொண்டான். அவனுக்குக் கமலினி அவர்களிடம் மன்னிப்பு கேட்பது எல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் அவனின் மாமியார் விமலா சில கண்டிஷன் போட்டிருந்தார்.
அதனால் கமலினிக்காக ஒதுங்கி நின்று கொண்டான்.
அவனைப் பார்த்துவிட்டு முகிலின் புறம் திரும்பினாள் கமலினி.
“அன்னைக்குத் தான் நீங்க ட்ராபிக்ல இருந்து என்னையும் நிவேதனையும் காஃபி ஷாப்பில் வைத்து உத்ரா கூடப் பார்த்துட்டீங்க. நீங்க பார்க்கிறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உத்ரா எங்களை ஜோடியா பார்த்துட்டாள். அவள் கிட்ட அவர் என் ஃப்ரண்ட்ன்னு சொல்லி சமாளிச்சேன்…”
“ஒரு நிமிஷம்… அவள்கிட்ட உன் ஃப்ரண்டுன்னு சொன்னியா? என்கிட்ட உத்ராவோட ப்ரண்ட்ன்னு சொன்ன?” என்று கேட்டவன் கண்களை இடுக்கி அவளைப் பார்த்தான்.
“என் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு தான் நானே அன்னைக்குப் போன் போட்டேன். அவர் யாருன்னு நீங்க கேட்பீங்கன்னு நினைச்சேன். உத்ராவோட ஃப்ரண்ட்ன்னு சொல்லிட்டால் அதுக்கு மேல கேள்வி கேட்க மாட்டீங்கன்னு தான் அப்படிச் சொன்னேன்…” என்ற கமலினியை அற்பபுழுவை பார்ப்பது போல் பார்த்தான்.
அவன் உத்ராவின் நண்பன் என்று நினைத்துத் தானே அவளின் மீது சேற்றை வாறி இறைத்தான்.
அவள் தான் அவனுடன் கமலினியை பழக விட்டு தன் வாழ்க்கையில் உத்ரா நுழைய நாடகம் போட்டதாகக் கூட நினைத்தானே?
‘எவ்வளவு பெரிய முட்டாள் நான்?’ என்று நினைத்துக் கொண்டவன் சட்டென்று திரும்பி உத்ராவைப் பார்த்தான்.
உத்ராவும் அப்போது அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் கண்கள் அவனைப் பார்த்து இகழ்ச்சியாகச் சிரிப்பதாக அவனுக்குத் தோன்றியது.
“இந்த வேலையும் செய்து வச்சியாடி நீ?” என்று மகளிடம் கோபமாகக் கேட்ட விமலா,
“அடிக்கடி நைட் மாப்பிள்ளைகிட்ட பேசுறேன்னு மாடிக்குப் போவாள் உத்ரா. ஆனா அங்கே போய் அவர்கிட்ட இரண்டு வார்த்தை பேசிட்டு நீ அவளுக்குப் போன் போடுவதாகச் சொல்லி முகில் தம்பி போனை கட் பண்ணிட்டு, அவர் கூடப் பேசிட்டு இருந்து இருக்காள்…” என்று நிவேதன் பக்கம் சுட்டிக் காட்டி சொன்னார்.
“உன்னோட காதல் விஷயத்தில் என்னோட பேரை எதுக்கு இழுத்து விட்ட கமலி?” என்று உத்ரா அவளிடம் கோபமாகக் கேட்டாள்.
“எங்க காதல் வெளியே தெரிந்து பிரச்சனை வருவதில் எனக்கு விருப்பமில்லை. நீ நகையைக் காப்பாத்திக் கொடுத்த பிறகு முகில் பேமிலிக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இருக்குன்னு தெரியும். அதுதான் உன் பேரை சொன்னால் முகில் அப்புறம் கேள்வி கேட்காமல் போனை வச்சுடுவார்ன்னு நினைச்சேன்…” என்றவளை அறைய வேண்டும் என்று உத்ராவிற்கு ஆத்திரம் வந்தது.
முகிலுக்குத் தான் மேலும் மேலும் ஏமாந்த உணர்வு, ஏமாற்றப்பட்ட உணர்வு. அதனுடன் குற்றவுணர்வும் வந்தது.
ஒருத்தியை நல்லவள், அமைதியானவள் என்று நம்பி உத்ராவின் மீது காரணமே இல்லாமல் கோபம் கொண்டு அவளை வேலையில் கூட டார்ச்சர் செய்து எவ்வளவு செய்து விட்டான்.
இப்போது அவனுக்குத் தன்னை நினைத்தே கோபமாக வந்தது.
இப்போது உத்ரா முகிலின் புறமே திரும்பவில்லை. கமலினியைத் தான் கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
“கடைக்குப் போகணும்னு ஒவ்வொரு முறையும் என்னை இழுத்துட்டு போய் சரியா வாங்காம அடுத்த முறைக்கு ஏன் தள்ளி போட்ட? அதுக்கும் ஏதாவது காரணம் வச்சுருப்பியே?” என்று நக்கலாகக் கேட்டாள் உத்ரா.
“நானும் நிவேதனும் காலேஜ் மேட். லாஸ்ட் இயர்ல தான் எங்களுக்குள் லவ் வந்துச்சு. அப்பாவுக்குப் பயந்து நான் வெளியே காட்டிக்கலை. படிப்பு முடிஞ்சதும் எனக்கு இங்கேயே வேலை கிடைச்சது. ஆனா நிவேதனுக்குப் பெங்களூர்ல தான் வேலை கிடைச்சது.
அவர் வீக் என்ட் லீவில் தான் என்னைப் பார்க்க இங்கே வருவார். கல்யாணம் நிச்சயம் ஆனப் பிறகு அம்மா என்னை வீக் எண்ட்ல வெளியே விடலை. நிவேதனை சந்திக்க முடியாம போயிருச்சு. முகூர்த்த புடவை எடுக்க நீ வந்த பிறகு தான் எனக்கு அந்த ஐடியா வந்தது.
கல்யாணத்துக்குப் பொருள் வாங்கணும், அதுவும் உன் கூடன்னு சொன்னால் அம்மா வெளியே விடுவாங்கன்னு நினைச்சேன். சாமான் வாங்குற போல உன் கூடக் கொஞ்ச நேரம் சுத்திட்டு அப்புறம் நிவேதனைப் பார்த்துட்டு வீட்டுக்குப் போய்டுவேன்.
அன்னைக்கு மாலில் முகில் உன்னைப் பார்க்கத்தான் வர்றார்னு நீ சொல்லவும் எங்கே நிவேதனை பார்க்க முடியாம போய்டுமோன்னு கண்டுக்காம வேகமாக அங்கிருந்து போயிட்டேன்…” என்றாள்.
“இவள் காதலிச்சதே எங்களுக்குத் தெரியலையே. இதில் எப்ப நிவேதன்கிட்ட பேசி எப்படிப் பழகினாள்னு இந்த விஷயத்தை எல்லாம் விசாரிக்கப் போய்த்தான் இவள் செய்த இவ்வளவும் எனக்குத் தெரிய வந்தது உத்ரா. கேட்டதும் என் மகளா இப்படின்னு ஆகிப் போச்சு.
மாப்பிள்ளையை அவமானப்படுத்தியது மட்டும் இல்லாம உன்னையும் எல்லாத்திலேயும் இழுத்து விட்டுட்டாளேன்னு எனக்குப் பதறிப் போயிருச்சு.
முகில் தம்பி உன்னைக் கல்யாணம் பண்ணிருக்கார். அப்படி இருக்கும் போது இவள் அவர்கிட்ட உன் பேரை சொல்லி இன்னும் வேற என்ன செய்து வச்சுருக்காளோன்னு எனக்குப் பதட்டம் ஆகிடுச்சு. இதனால் உன் வாழ்க்கையில் பிரச்சனை வரக் கூடாதுன்னு தான் உங்க இரண்டு பேருகிட்டேயும் மன்னிப்பு கேட்க இவளை இழுத்துட்டு வந்தேன்…” என்றார் விமலா.
“ச்சை, நீ எல்லாம் ஒரு பொண்ணா? எவ்வளவு ஏமாத்து வேலை? எத்தனை பொய் புரட்டு? உன்னைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு. உன் போதைக்கு என்னை மட்டும் இல்லாம உத்ராவையும் ஊறுகாய் ஆக்கிருக்கியே உனக்குக் கொஞ்சம் கூட வெட்கமா இல்லை?
அதுவும் ஓடிப் போறவ முன்னாடியே ஓடிப் போயிருக்கணும். கல்யாணம் வரை கொண்டு வந்து நிறுத்தி, சொந்தப்பந்தங்கள் முன்னாடி எங்களை அவமானப்படுத்த உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?” என்று காறி உமிழாத குறையாக ஆத்திரத்துடன் கேட்டான் முகில்வண்ணன்.
“இதோ பாருங்க முகில், நான் செய்தது தப்புன்னு எனக்கும் தெரியும். ஆனா எங்க காதல் நிறைவேற எனக்கு வேற வழியும் தெரியலை. கல்யாணம் அன்னைக்குத் தான் எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய முடிந்தது.
அதோட அன்னைக்குனா எங்க அப்பாவால் ஒன்னும் செய்ய முடியாதுன்னு நினைச்சேன். உங்களுக்கு அவமானம் வந்தது என்னால் தான். எனக்கும் புரியுது.
ஆனா எனக்கு வேற சாய்ஸ் இல்லை. என் காதல் தான் எனக்குப் பெருசு. அதில் உங்களைப் பத்தி எல்லாம் நான் அப்ப யோசிக்கவே இல்லை. இப்போ கூட உத்ராவோட வாழ்க்கை பாழாகிற கூடாதுன்னு அவள்கிட்டயும், உங்ககிட்டயும் எல்லாம் சொல்லி அம்மா மன்னிப்புக் கேட்க சொன்னாங்க.
இன்னும் என் அப்பா எங்களை ஏத்துக்கலை. நாங்க இரண்டு நாள் முன்னாடி மன்னிப்புக் கேட்க வீட்டுக்கு வந்தப்ப விரட்டி அடிச்சுட்டார். அம்மா தான் ஒத்த பொண்ணாச்சேன்னு என்னைக் கோவிலில் வைத்து பார்த்து பேசினாங்க.
உங்க இரண்டு பேர்கிட்டயும் மன்னிப்புக் கேட்டால் அப்பாக்கிட்ட பேசி உங்களை எங்க கூடச் சேர்த்துக்குவோம்னு அம்மா கண்டிஷனா சொன்னாங்க. நிவேதன் பக்கம் பெரியவங்கன்னு யாரும் இல்லை. அதனால் எங்க அப்பா, அம்மா உறவு எங்களுக்கு வேணும். எங்க அம்மா சொன்னாங்கன்னு தான் மன்னிப்பு கேட்க வந்தேன்.
எல்லாம் சொல்லி மன்னிப்பும் கேட்டுட்டேன். உங்களுக்குத் தான் இப்போ கல்யாணம் ஆகிடுச்சு இல்லை. இனி உங்க வாழ்க்கையைப் பாருங்க…” என்று எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் சொன்னாள் கமலினி. அவளின் குரலில் ஒரு வித அலட்சியமும் தெரிந்தது.
‘எனக்காகத் தான் இப்போதும் போனால் போகுது என்று உங்ககிட்ட மன்னிப்பு கேட்குறேன்’ என்ற பாவனையில் சொன்னவளை அசூசையுடன் பார்த்தான் முகில்வண்ணன்.
இவளின் மன்னிப்பு இங்கே யாருக்கு வேண்டும் என்ற கோபமும் வந்தது.
“ச்சீ… சுயநலம்! பக்கா சுயநலம்! உன்னைப் போல ஆளுங்க கிட்ட நின்னு பேசுறதே அவமானம்…” என்ற முகில் உத்ராவின் புறம் திரும்பினான்.
உத்ரா என்ன பேசுவது என்று கூடப் புரியாமல் மலைத்துப் போனாள். கமலினியா இப்படி என்று தான் அவளுக்குத் தோன்றியது. எப்படி எல்லாம் திட்டம் போட்டு அனைவரையும் ஏமாற்றி இருக்கிறாள். அதையும் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இவளால் எப்படிச் சொல்ல முடிகிறது? அதிலும் அவளின் சுயநலம்? என்ன மாதிரியான குணம் இது? என்று நினைத்து அப்படியே நின்றுவிட்டாள்.
“உத்ரா, நீயும் அவங்களும் சொந்தமா இருக்கலாம். ஆனா இனி இப்படி ஆளுங்க முகத்தில் முழிக்கிறது கூடக் கேவலம். இனி அவங்க யார் கூடவும் போன் பேசுறது, நேரில் பார்க்கிறதுன்னு என்ன சம்பந்தமும் இருக்கக் கூடாது. வா போகலாம்…” என்று அவளின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியேறினான் முகில்வண்ணன்.
இருவரும் அமைதியாக வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.
இருவரின் உள்ளமுமே உலைகளமாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
முகில்வண்ணனுக்குக் கோபத்தைத் தாண்டி இப்போது குற்றவுணர்வு மட்டுமே அதிகமாக அவனை ஆட்சி செய்ய ஆரம்பித்தது.
கண்ணாடி வழியாக உத்ராவை பார்த்தான். உத்ராவின் முகம் வெளியே அமைதியாக இருக்க, அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை.
அவளைத் தான் நிறையப் பேசிவிட்டோம். நிறைய அர்த்தமே இல்லாமல் குற்றம் சாட்டிவிட்டோம் என்று உறைத்தது.
அவளை எப்படிச் சமாதானம் செய்யப் போகிறோம் என்று நினைத்தவனுக்கு மலைப்பாக இருந்தது. வீட்டிற்குச் சென்றதும் மன்னிப்பு கேட்க வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டான்.
அவன் நினைத்தது போலவே வீட்டிற்குள் வந்ததும் “சாரி உத்ரா. அவள் நாடகம் ஆடியது தெரியாம எல்லாத்துக்கும் நீ தான் காரணம்னு நினைச்சுத் தப்பா பேசி நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சுடு…” என்றான் முகில்வண்ணன்.
மன்னிப்பு கேட்டவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அழுத்தமாக அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் உத்ரா.
“நீ ஏன் உத்ரா அன்னைக்கு மணமேடையில் வச்சு நீ தான் கல்யாணத்தை நிறுத்த பிளான் போட்டேன்னு சொன்ன? அதுதானே என்னை இன்னும் கொஞ்சம் உன்னைத் தவறா நினைக்க வச்சது…” என்று கேட்டவனை அலட்சியப் புன்னகையுடன் பார்த்தாள்.
“அதுக்கு முன்னாடி என்னைப் பற்றிச் சரியா புரிந்து கொண்டு இருந்தீங்களோ?” என்று கேட்டவளுக்குப் பதில் சொல்லும் தகுதியற்று நின்று போனான்.
“நான் ஏன் அப்படிப் பேசினேன்னு இப்பவாவது சரியா யோசிங்க. உங்களுக்கே புரியும்…” என்றாள்.
முகில்வண்ணனிற்கு இப்போது அதிக நேரம் யோசிக்க வேண்டிய தேவையிருக்கவில்லை.
தவறே செய்யாதவளை நீ தான் தவறு செய்தாய் என்று தான் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியதால் ‘ஆமாம்! அப்படித்தான்!’ என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறாள்.
அது கூடப் புரியாத முட்டாளாக இருந்திருக்கிறோமே என்று தன்னையே திட்டிக் கொண்டான் முகில்வண்ணன்.