26 – இதயத்திரை விலகிடாதோ?

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 26

தன் தோளை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த மனைவியை விட்டு மெல்ல விலகினான் சூர்யா.

‘ஏன்?’ என்பது போல் அவள் கேள்வியுடன் பார்க்க, அவளின் முகம் பார்க்காமல் சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.

“என்னாச்சு சூர்யா?” அவளும் கணவன் அருகில் அமர்ந்து கேட்டாள்.

‘ஒன்னுமில்லை…’ என்பதாகத் தலையை அசைத்தான்.

“இல்லை என்னவோ இருக்கு. உங்க முகத்தில் ஏதோ தவிப்பு. இன்னும் உங்க ஃபிரண்ட்ஸ் செய்ததையே நினைச்சுட்டு இருக்கீங்களா?” என்று கேட்டாள்.

“ம்ப்ச், அவங்களைப் பத்தி நினைச்சு நான் என் வாழ்க்கையை வீணாக்க விரும்பலை…” என்றான்.

“அப்புறம் ஏன் எப்படியோ இருக்கீங்க?”

“ஒன்னுமில்லை, விடுடி பொண்டாட்டி…” என்றான்.

“என்னன்னு சொல்லுங்க விடுறேன்…” என்றாள்.

“நான் கேட்டால் கோபப்படுவ…”

“அப்படிக் கோபப்படும் அளவுக்கு என்ன கேட்க போறீங்க?” யோசனையுடன் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

“எனக்கு மனசுக்கு ரொம்ப அழுத்தமா இருக்கு. ட்ரிங் பண்ணட்டுமா?” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.

“கோபப்படாதேடி பொண்டாட்டி. உனக்குப் பிடிக்காதுன்னு தெரியும். ஆனா எனக்கு இப்ப வேணும். இல்லனா எனக்குப் பைத்தியமே பிடிக்கிற மாதிரி இருக்கு. என்னால் கட்டுப்படுத்த முடியலை…” என்றான்.

“நீங்க ஏன் எமோஷனல் ஆகுறீங்க? ரிலாக்ஸா இருங்க. குடிக்கத் தோணாது…” என்றாள்.

“ம்ப்ச்…” என்று அவன் சலித்துக் கொள்ள,

“வந்து சாப்பிட்டுப் போய்த் தூங்குங்க. தூங்கி எழுந்தால் அழுத்தம் குறையும்…” என்றவள், அவன் கை பற்றி எழுப்பினாள்.

தன் கையை வெக்கென்று அவளிடமிருந்து பறித்துக் கொண்டான்.

திகைப்பாய் கணவனைப் பார்த்தாள்.

அவனோ அவள் முகம் பார்க்கவில்லை.

அவள் தீண்ட, தீண்ட அவன் தேகம் தகித்தது.

சொல்ல முடியா உணர்வில் அவனின் உணர்வுகள் ஆட்டம் கண்டது.

“சூர்யா?” கேள்வியுடன் அழைத்தாள்.

“நான் குடிக்கப் போறேன் பொண்டாட்டி…” என்றவன் பட்டென்று எழுந்து அறைக்குள் சென்று அலமாரியில் இருந்த மதுவை எடுத்து குடிக்க அமர்ந்தவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

திகைத்து நின்று போனவள், தானும் அறைக்குள் நுழைந்து மதுவை வாயில் சரிக்கப் போனவன் கையிலிருந்து வெடுக்கென்று பறித்தாள்.

“கொடு யுவா…” என்றான் அதட்டலாக.

“முடியாது! இத்தனை நாளும் நீங்க என்ன செய்தாலும் நான் பொறுத்துட்டு தானே போனேன்? இனியும் என்னால் அப்படி இருக்க முடியாது. நீங்க குடிப்பது உங்களுக்கு மட்டுமா கெட்டதுன்னு நினைச்சீங்க? எனக்கும் தான் கெட்டது.

உங்களை நம்பித்தான் கல்யாணம் பண்ணி வந்தேன். எனக்கு நீங்க மட்டும் தான் எல்லாம்னு நினைச்சுத்தான் வாழ வந்தேன். ஆனால் நீங்க என் கூடக் கடைசி வரை வாழ வர மாட்டேன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்று கோபமாகக் கேட்டாள்.

“என்ன பேசுற நீ?” அவனும் கோபமாக இரைய,

“வேற எப்படிப் பேச? குடிச்சு குடிச்சு உங்க ஆயுளை நீங்களே குறைத்துக் கொள்வதை நான் கையைக் கட்டி வேடிக்கை பார்க்கணுமா? நான் சொல்வது உங்களுக்கு நாடகத்தனமா இருக்கலாம். ஆனால் நான் சொல்வது உண்மை. நீங்க இந்த உலகத்தில் இல்லாமல் போனால் நானும் அடுத்த நிமிஷம் இருக்க மாட்டேன்…” என்று உறுதியாகச் சொன்னவளை, அதிர்ந்து பார்த்தான்.

“யுவா, பைத்தியம் மாதிரி உளறாதே!” என்று அதட்டினான்.

“நான் ஒன்னும் உளறலை. ஒவ்வொரு முறை நீங்க குடிச்சுட்டு வரும் போது உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு உள்ளுக்குள் துடிதுடித்துப் போயிருக்கேன். அன்னைக்கு எல்லாம் என்னால் நிம்மதியா தூங்க கூட முடியாது. இன்னும் அந்தத் தவிப்பை அனுபவிக்க நான் தயாராயில்லை. குடிக்க விடவில்லைன்னு கோபம் வருதா? கோபப்படுங்க! என்னை அடிக்கணும்னு தோனுதா? அடிச்சுக்கோங்க! ஆனா குடிக்க மட்டும் விட மாட்டேன்…” என்றவள் அங்கிருந்த வாஷ்பேஸனில் மதுவை ஊற்றி பாட்டிலை காலி செய்தாள்.

அவள் செய்வதைத் தடுக்காமல் வெறித்துப் பார்த்தவன், அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

காலி பாட்டிலை குப்பை தொட்டியில் தூக்கிப் போட்டவள், “எழுந்து வாங்க, சாப்பிடலாம்…” என்று அமைதியாக அழைத்தாள்.

அவன் சிறிதும் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

“சூர்யா, வாங்க…” என்றழைத்தாள் மீண்டும்.

“எனக்கு வேண்டாம். நீ சாப்பிட்டுப் போய்ப் படு…” என்று படுக்கையில் படுத்துக் கொண்டான்.

“இப்ப நீங்க வரப் போறீங்களா இல்லை?” கோபமாக அழைத்தாள்.

“போடி, வர முடியாது!” என்று அவனும் கோபமாகச் சொல்ல,

“ஏன் சூர்யா இப்படிப் பண்றீங்க? என்னை விட உங்களுக்கு அந்தச் சாராயம் தான் முக்கியமா?” இயலாமையுடன் கேட்டாள்.

பட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவன், “எனக்கு எல்லாத்தையும் விட நீ தான் முக்கியம்! அதை எப்ப நீ புரிந்து கொள்ளப் போற? ஏன்டி…? ஏன்டி…? என்னை இந்தப் பாடு படுத்துற? என்னால் முடியலைடி. எனக்கு எல்லாத்துக்கும் நீ வேணும்னு என்னோட ஒவ்வொரு அணுவும் துடிக்குது. உடனே அந்தரங்கத்துக்கு மட்டும்னு நினைச்சுடாதே!

எல்லாத்துக்கும்! என்னை மடி தாங்கணும். என் தலையைக் கோதி கொடுக்கணும். எனக்குச் சாப்பாடு ஊட்டி விடணும். என் பக்கத்தில் நெருக்கமா உட்கார்ந்து கதை பேசணும். உன் கைகளும், என் கைகளும் எந்த நேரமும் கோர்த்துக் கொண்டே இருக்கணும். இப்படி இன்னும் இன்னும் எனக்கு நிறையத் தோனுது.

ஆனா அப்படி நெருங்கினால் எங்கே நீ அதுக்கும் ஒரு தப்பான பேரு வச்சுருவியோன்னு பயமா இருக்கு. இந்த அவஸ்தையைத் தாங்க முடியாமல் தான் குடிக்க நினைச்சேன். இப்ப நான் என்ன செய்ய? எனக்குப் புரியவே இல்லை. எனக்கு அப்படியே தலையைப் பிச்சுக்கணும் போல இருக்கு. எனக்குப் பைத்தியம் பிடிச்சிடுமோன்னு பயமா இருக்கு…” என்று இயலாமையுடன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டியவன், இரண்டு கையாளும் தலையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்.

சிலையாக நின்று போனாள் யுவஸ்ரீ.

கணவன் தன்னைத் தேடுகிறான் என்பது மனதில் தித்திப்பாக இறங்கிய அதே நேரம், அவனுக்குத் தன்னுடைய வார்த்தை வலிக்கவும் வைத்து தூரவும் நிறுத்தி இருக்கிறது என்பது அவளுக்கு வேதனையைத் தந்தது.

அன்று இருந்த கோபத்தில் தான் சொன்ன வார்த்தையில் கணவன் இவ்வளவு பாதிக்கப்படுவான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

சில நொடிகள் அப்படியே நின்று போனவள், பின் விருட்டென்று வெளியே சென்று விட்டாள்.

அவள் அறையை விட்டு வெளியேறவும் இன்னும் அவனின் வேதனை கூடிப் போனது.

இனி இந்த அறைப்பக்கமும் எட்டி கூடப் பார்க்க மாட்டாள் என்று நினைத்தவன், தன் நெற்றியில் தானே பளீரென அறைந்து கொண்டான்.

சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தவளையும் நானே விலக்கி வைத்து விட்டேன். இனி என்னிடம் பேசுவாளா? அவள் பேசவில்லை என்றால் என்னால் தாங்க முடியுமா? நினைக்க, நினைக்கத் துடித்துப் போனது அவனின் மனம்!

சூர்யா தனக்குள்ளேயே ஏதேதோ மருகி கொண்டிருந்த போது அவனின் முன் ஒரு கை நீள, கேள்வியுடன் நிமிர்ந்து பார்த்தான்.

“வாங்குங்க…” என்று உணவை அவனுக்கு ஊட்டி விட நீட்டிக் கொண்டிருந்தாள் அவனின் மனைவி.

வியப்பாக விழிகளை விரித்தான்.

“ஆ… காட்டுங்க சூர்யா…” என்றவள், அன்று அவன் செய்தது போல் அவனின் உதடுகளின் வைத்து அழுத்த, தன்னிச்சையாக அவனின் உதடுகள் பிரிந்து உணவை விழுங்கிக் கொண்ட அதே நேரத்தில் அவன் கண்களில் ஒற்றைத் துளி கண்ணீர் துளிர்த்து தேங்கி நின்றது. அவன் உடல் புதுவித உணர்வில் சிலிர்த்து அடங்கியது.

“என்னோட சூர்யா எப்ப இருந்து இப்படிச் சின்னப் பிள்ளை போல மாறினார். ஹ்ம்ம்?” என்று உதட்டில் பூரிப்பும், கணவனுக்குப் போட்டியாகத் தன் கண்களில் துளிர்த்த ஒற்றைத் துளி கண்ணீருடனும் கேட்டவள், இன்னொரு கையால் அவன் கண்ணைத் துடைத்து விட்டாள்.

அதே நேரம் சூர்யாவின் கையும் நீண்டு மனைவியின் கண்களைத் துடைத்து விட்டது.

“என்னை நீ தான்டி இப்படி மாத்தி வச்சுட்ட. நான் எப்படி இருந்தேன் தெரியுமா? அப்படியே கெத்தாக!” என்று சொல்ல…

“ஆமா… ஆமா… நீங்க செய்ததுக்குப் பேர் எல்லாம் கெத்துன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க. இந்த ஆளு வில்லனா? கெட்டவனா? ஆன்டி ஹீரோவான்னு வேணும்னா ஆராய்ச்சி பண்ணிருப்பாங்க…” என்றாள் நொடித்துக் கொண்டே.

“உன் புருஷன் ஹீரோடி பொண்டாட்டி!” என்று பெருமையாகச் சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

“க்கும்… பார்த்தது எல்லாம் வில்லன் வேலை. இவரு ஹீரோவாம். வெளியே சத்தமா சொல்லிடாதீங்க. கட்டி வைச்சு உதைக்கப் போறாங்க…” என்றவள் இன்னொரு வாய் உணவை கணவனுக்கு ஊட்டி விட்டாள்.

ஆனந்தமாக வாங்கி உண்டவன், “என்னை ஏன்டி யாரோ கட்டிக்கணும்? நீ கட்டிக்கிட்டால் போதும்…” என்றான் குறும்பாக.

“இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு லொள்ளு ஆகாது…” என்றவள் கையோ ஊட்டும் வேலையைத் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

அவன் உண்டு முடிக்கும் வரை ஊட்டி விட்டாள். அவன் உண்டு முடித்ததும், தான் சாப்பிட டைனிங் ஹாலுக்குச் செல்ல, அவளின் பின்னால் சென்றவன், தட்டை தான் வாங்கிக்கொண்டு அவளுக்கு ஊட்டி விட்டான்.

கண்கள் ஒளிர வாங்கிக் கொண்டாள் யுவஸ்ரீ.

“ரொமான்ஸ்!” என்று கண்களைச் சிமிட்டி சிரித்தான் சூர்யா.

வெட்கப் பூக்களைப் பூக்க விட்டாள் அவனின் மணவாட்டி.

“சரிதான் சூர்யா. நான் சொன்ன ரொமான்ஸ் உடல் சார்ந்தது இல்லை. உள்ளம் சார்ந்தது. நான் சொன்ன ரொமான்ஸுக்கு உடலும் உடலும் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை.

உள்ளத்தை ஊடுருவணும். நான் உங்களுக்கு ஊட்டி விடும் போது உடல் எல்லாம் சிலிர்த்து போய் ஒரு உணர்வை உணர்ந்திருப்பீங்க பாருங்க. அதுதான் ரொமான்ஸ்!

இன்னும் ரொமான்ஸை உணர பக்கத்தில் உரசிகிட்ட இருக்க வேண்டிய அவசியம் கூடத் தேவையில்லை. தள்ளி தள்ளி இருந்தாலும் பார்வையாலேயே தீண்டி சிலிர்க்க வைப்பதும் ரொமான்ஸ் தான்.

அன்னைக்கு நான் வேலை பார்த்துட்டு இருக்கும் போது எனக்கு வேர்க்குதுன்னு அக்கறையோட துடைத்து விட்டீங்க பாருங்க… அது கூட ரொமான்ஸ் தான்.

இது போலச் சின்னச் சின்னச் செய்கையிலும் ரொமான்ஸ் பண்ணலாம்…” என்றாள்.

‘புரிந்தது!’ என்பது போல் தலையை அசைத்தான் சூர்யா.

பேசிக் கொண்டே உண்டு முடித்து ஒதுங்க வைத்து விட்டு தூங்க செல்லும் முன், சூர்யாவின் உள்ளம் எதிர்பார்ப்புடன் தகித்துக் கிடந்தாலும் தன் முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளாமல், மனைவியைப் பார்த்தான்.

அவளோ அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு, ஜக்கில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்தவள், கணவனைத் தாண்டி சென்று தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.

குப்பென்று மலர்ந்து போனது சூர்யாவின் முகம்!

மகிழ்ச்சியுடன் மனைவியின் பின்னே சென்றான்.

தண்ணீரை ஓரமாக வைத்து விட்டு, படுக்கையில் ஏறி கட்டிலில் கால் நிட்டி சாய்ந்து அமர்ந்தாள் யுவஸ்ரீ.

“என்ன உட்கார்ந்துட்ட? படுக்கலையா யுவா?” என்று கேட்டான்.

“நீங்க வந்து படுங்க…” தன் மடியைத் தொட்டுக் காட்டி அழைத்தாள்.

‘நிஜமாவா?’ நம்ப முடியாமல் பார்த்தான்.

‘நிஜம் தான்!’ என்பது போல் கண்களை மூடித் திறந்தாள் யுவஸ்ரீ.

உள்ளம் பூரிக்க, மனைவியின் மடியில் தலை வைத்துப் படுத்தான் சூர்யா.

அவன் படுத்ததும், அவனின் தலையில் கைவைத்து தலையைக் கோதி கொடுக்க ஆரம்பித்தாள்.

சுகமாகக் கண்களை மூடிக் கொண்டான்.

“இதுவும் ரொமான்ஸ் தானே பொண்டாட்டி?” ரசனையுடன் ஒலித்தன அவனின் வார்த்தைகள்.

“ஆமாம்!” என்றவள் குனிந்து கணவனின் நெற்றியில் இதழ் பதித்தாள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த மனைவியின் இதழ் ஸ்பரிசத்தில் மூடி இருந்த அவனின் இமைகள் பிரிந்து கண்கள் வண்டாக மனைவியின் முகத்தை மொய்த்தன.

“நிஜமாவே நான் செய்ததை எல்லாம் மன்னிச்சிட்டியா பொண்டாட்டி?” என்று கேட்டான்.

“எப்ப எனக்காக நீங்க நேரம் ஒதுக்க ஆரம்பித்தீங்களோ அப்பவே உங்க மேல இருந்த கோபம் எல்லாம் எனக்குப் போயிருச்சு சூர்யா…” என்றாள்.

“அப்புறம் ஏன் என்னை இந்த ரூமில் தனியா தவிக்க விட்ட? அப்படியா உன் மேல நான் பாய்ந்து விடுவேன்னு நினைச்ச?” வருத்தத்துடன் கேட்டான்.

“அப்படி எல்லாம் நினைக்கலை சூர்யா. எனக்குக் கொஞ்சம் டைம் தேவைப்பட்டது…” என்றாள்.

“ஏன்?”

“ஏன்னு கேட்டால் உங்க அருகிலேயே இருந்துட்டு உங்களைத் தவிக்க விட எனக்கு விருப்பமில்லை. அதுவும் நீங்க மாற ஆரம்பித்திருந்த நேரத்தில் என்னாலும் உங்களை விட்டு தள்ளி இருக்க முடியாது. அட்லீஸ்ட் உங்க தோளில் சாய்ந்து தூங்க ஆசை வரும். நானே பக்கத்தில் நெருங்கி வந்து விட்டு நானே உங்களைத் தள்ளி இருங்கன்னு சொல்ல முடியாது. அதான் வரலை…” என்றாள்.

“நிஜமா நான் உன்கிட்ட அந்த நேரத்தில் ரொம்ப ரஷ்ஷா பிகேவ் செய்தேனாடி? அதனால் என்னை வில்லன் வேலை பார்த்தேன்னு சொன்னியா?” குன்றலுடன் கேட்டான்.

உடனே பதில் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாக இருந்தாள் யுவஸ்ரீ.

“பதில் சொல்லுடி, ப்ளீஸ்!” தவிப்பாகக் கேட்டான்.

அவனின் முடியைக் கோதி விட்டு அவன் காதருகில் குனிந்தவள், “குடிச்சிட்டு வந்தால் ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்குவீங்க. வலிக்கும்! அப்போத்தான் கஷ்டமா இருக்கும்…” என்றாள் மெல்லிய குரலில்.

துடித்துப் போனான் சூர்யா.

ஆம், அவனே ஒரு நாள் கண்டானே. அவளின் பாவாடையை இழுத்து இடையில் காயம் வந்ததை.

“ஸாரிடி பொண்டாட்டி. இனி குடிக்கவும் மாட்டேன். உன்னை அப்படி நடத்தவும் மாட்டேன்…” உடனே மன்னிப்புக் கேட்டான்.

யுவஸ்ரீக்குச் சந்தோஷமாக இருந்தது.

அவனுக்குப் பரிசாக மீண்டும் அவன் நெற்றியில் தன் இதழை ஒற்றினாள்.

“ஆனால் குடிக்காமல் என்னால் இருக்க முடியுமான்னு தெரியலை. வேலை பார்க்கும் போது ரொம்ப டென்ஷன் ஆனால் குடிக்கத் தோனுமே?” என்று இயலாமையுடன் கேட்டான்.

“அப்படி இருக்கும் போது சொல்லுங்க. நான் உங்க டென்ஷனை குறைக்கிறேன்…” என்றாள்.

“எப்படி?” புரியாமல் கேட்டான்.

“இப்படித்தான்!” என்று அவன் தன் மடியில் படுத்திருக்கும் நிலையைக் காட்டினாள்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குடிக்க நினைச்சீங்க. இப்பவும் அப்படி நினைப்பு இருக்கா?” எனக் கேட்டாள்.

“சுத்தமா இல்லை…” என்றான்.

“ம்ம்ம்… அதே தான்…” என்றவள் தோளை தாண்டி வளர்ந்திருந்த அவனின் முடிக் கற்றைகளைக் கைகளில் அள்ளி குடும்பி போடுவது போல் வைத்து இழுத்து கூட்டினாள்.

“ஏய், விடுடி…” என்றான்.

“அதெல்லாம் முடியாது. நான் உங்களுக்குக் குடும்பி போட்டு விடப் போறேன்…” என்றவள் தன் சடையில் இருந்த ரப்பரை எடுத்து கணவனின் முடியில் மாட்டி குடும்பி போட்டே விட்டிருந்தாள்.

“அடியேய்!” அவன் போலியாக அலற,

“சூப்பரா இருக்கு சூர்யா…” என்று கிளுங்கி சிரித்தாள்.

சிரிக்கும் அவளின் உதடுகளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் போல் இருந்தது.

ஆனால் இப்போதும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் சூர்யா.

“ரொம்ப நாள் ஆசை உங்களுக்கு இப்படிக் குடும்பி போட்டு விடணும்னு…” என்று அவனின் தலையில் தென்னை மரம் போல் இருந்த குடும்பியை தொட்டு தொட்டு விளையாடினாள் யுவஸ்ரீ.

அவளின் விருப்பத்திற்கு விட்டுவிட்டு வாளாதிருந்தான் சூர்யா.

“கோபமா சூர்யா?” என்று அவன் அமைதியைப் பார்த்துக் கேட்டாள்.

“இல்லைடி. மனசுக்கு நிம்மதியா, சந்தோஷமா இருக்கு. மனசு எல்லாம் நிறைந்து போனது போல் ஓர் இதம்! அதுவும் உன்னை இப்படிச் சிரித்து நான் பார்த்ததே இல்லை. உன்னோட சிரிப்பையும் நான் முடக்கி போட்டுருக்கேன்னு இப்ப நினைச்சா வருத்தமா இருக்கு…” என்றான்.

“சும்மா எல்லாத்துக்கும் வருத்தப்படாதீங்க சூர்யா. நடந்ததை எல்லாம் விட்டுவிடுவோம். இனியாவது ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து வாழ்வோம்…” என்றாள்.

“சரி, நீ நேரா படு! உனக்குக் கால் வலிக்கப் போகுது…” என்று அவளின் மடியில் இருந்த தலையைத் தலையணையில் வைத்துக் கொண்டான்.

அவளும் அவன் அருகில் படுத்துக் கொண்டாள்.

ஆனால் இருவருக்கும் இடையே சிறு இடைவெளி இருந்தது.

அந்த இடைவெளியை நிரப்ப முயலவே இல்லை சூர்யா.

ஏன் என்று அவளுக்கும் புரிந்தது. தன் வார்த்தை அவனை இன்னும் குத்திக் கொண்டிருப்பது புரிந்தது.

அந்த இடைவெளியை தானே நிரப்பி நெருங்கி படுத்து அவன் தோளில் தலையைச் சாய்த்து, அவனின் இடையைச் சுற்றிக் கையைப் போட்டுக் கொண்டாள் யுவஸ்ரீ.

“யுவா?” ஆச்சரியமாக விளித்தான்.

“நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது சூர்யா. ஸாரி… கணவன், மனைவிக்குள் தாம்பத்தியமும் இயல்பானது. அப்படி இருக்க, உங்களை நான் குறை சொல்லியிருக்கக் கூடாது…” என்றாள் வருத்தமும், சமாதானமுமாக.

“நீ சொன்னது சரி தான் பொண்டாட்டி. தாம்பத்தியமும் வேணும் தான். ஆனா அது மட்டுமே கணவன், மனைவி வாழ்க்கையை முழுமைப்படுத்தி விடாதுன்னு எனக்குப் புரிந்துவிட்டது. கணவன், மனைவிக்குள் புரிதல், அன்பு, பாசம் விட்டுக் கொடுத்து போவது, நீ எதிர்பார்த்த ரொமான்ஸ், அதையும் விட மனம் நிறையக் காதலும் வேணும். சின்னச் சின்னச் செய்கையிலும் உணர்த்தும் காதல் தான் வாழ்க்கையை உயிர்ப்போடு வச்சிருக்கும்…” என்றான்.

அவனின் அந்தப் புரிதல் அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

அதை வெளிப்படுத்தும் விதமாக அவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூடப் பயந்திருக்கேன் சூர்யா. நம்ம வாழ்க்கை இப்படியே வெறுமையா போய்டுமோ? என் புருஷன் மனதில் எனக்குன்னு ஒரு இடம் கிடைக்காதா? அவரின் இதயத்திரை விலகிடாதோ? அவர் இதயத்தில் எனக்குன்னு ஒரு இடம் இருப்பதைக் காட்டவே மாட்டாரோன்னு தவிச்சுத் துடிச்சிருக்கேன்.

ஆனா இப்ப இந்த நிமிஷம் என் புருஷன் இதயத்திரை விலகி அதில் எனக்கான ஒரு இடம் இருக்குனு புரிந்த போது எனக்கு ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கு. தேங்க்ஸ் சூர்யா, ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்…” என்று உணர்ச்சிவசப்பட்டவள், கணவனின் அதரங்களில் அழுத்தமாக இதழ் பதித்தாள்.

திக்கு முக்காடி போனான் சூர்யா.

மனைவியின் இதழ் முத்தம் அவனைக் கிறுகிறுக்க வைத்தது.

அவளின் இஷ்டத்திற்குத் தன்னை விட்டுவிட்டானே தவிர, தான் எதுவுமே செய்யாமல் இருந்தான்.

அவனின் அந்த அமைதியை சில நொடிகளில் உணர்ந்தவள், விலகி கேள்வியுடன் பார்த்தாள்.

அவள் கண்களைச் சந்திக்காமல் தவிர்த்தான்.

“சூர்யா?”

“ம்ம்ம்…”

“இன்னும் நான் சொன்ன வார்த்தை உறுத்தலா இருக்கா?” என்றவளுக்குப் பதில் சொல்லாமல் அவன் காத்த அமைதியே அவளுக்கான பதிலை சொன்னது.

“ஸாரி சூர்யா… ஸாரி சூர்யா… ஸாரி சூர்யா…” என்று மீண்டும் மீண்டும் சொன்னவள் ஒவ்வொரு ஸாரிக்கும் அவனின் முகத்தில் முத்தங்களைப் பதித்தாள்.

“ஏன்டி இத்தனை ஸாரி கேட்டு இன்னும் என்னைத் தவிக்க வைக்கிற? விடு! அந்த வார்த்தை சொல்ல வைத்துத் தப்பு செய்தது நான் தான். நீ எந்தத் தப்பும் பண்ணலை…” என்றவன், அவளைச் சுற்றி கையைப் போட்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அவனின் அதரங்களும், அவளின் மன்னிப்பை நிறுத்த வைக்க மனைவியின் இதழ்களைக் கவர்ந்து கொண்டன.

அவர்களுக்குள் இருந்த மனப் பூசல்கள் எல்லாம் கலைந்து சென்றிருக்க, காதலுடன் கலந்து போயினர்.