25 – மின்னல் பூவே

அத்தியாயம் – 25

“உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லைடா. இப்படியா முட்டாள்தனமான வேலை பார்த்து வைப்ப? அடுத்தவங்க பிரைவைசிக்குள்ள நுழைய கூடாது என்ற அறிவு கூட வேண்டாம்?” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான் முகில்வண்ணன்.

‘அடுத்தவங்களா? முட்டாள்! அவள் உன் மனைவிடா…’ என்று குமட்டில் குத்தியது அவனின் மனசாட்சி.

“மனைவியா இருந்தாலும் அவள் போனை அவளோட அனுமதி இல்லாம நான் நோண்டி இருக்கக் கூடாது. இப்ப பார் குத்துதே, குடையிதேன்னு நான் தான் அவதிப்பட்டுட்டு இருக்கேன்…” என்று தன்னையே நிந்தித்துக் கொண்டான்.

எத்தனை முறை கண்களை மூடி மூடி திறந்தாலும் உத்ராவின் முகமும், அவளின் தேன் சொட்டும் அந்த இதழ்களும் அவனின் நினைவை விட்டு அகல மாட்டேன் என்று அடம்பிடித்தன.

‘தேன் சொட்டும் இதழ்களா? அவளின் இதழில் தேனா சொட்டியது?’ என்று மீண்டும் அதே சிந்தனைக்கு வந்தான்.

“ஆமா, தேன் தடவியது போல் தான் பளபளத்தது…” என்ற முடிவிற்கும் வந்தான்.

‘போட்டோவிலேயே அப்படிப் பளபளத்தால் நேரில் எப்படி இருக்கும்?’ என்று நினைத்துப் பார்த்தான்.

என்ன தான் ஞாபக அடுக்கில் தேடித் தேடிப் பார்த்தும் அவளை நேரில் அவ்வாறு கண்ட ஞாபகம் வரவே இல்லை.

அவளை வெறுப்பாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அப்படிப் பார்த்த ஞாபகம் எப்படி வருமாம்?

‘இப்ப என்ன கெட்டுப்போச்சு? இப்போ இங்கே என் பக்கத்திலேயே தானே இருக்காள். எப்ப வேணும்னாலும் பார்த்துக்கலாம்…’ என்று அசட்டையாக நினைத்தவனுக்கு, உடனே அவளை நேரில் காண வேண்டும் என்று தோன்ற, சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான்.

‘அடேய்! அவள் உதட்டை பார்த்ததுக்கே இப்படித் தலை குப்புற விழுந்துட்டயே…’ என்று அவனின் மனமே பரிகாசம் செய்து சிரிக்க, அதைத் தாங்க முடியாதவன் மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

‘அவளை உனக்குப் பிடிக்காது முகில். அவளை நீ வெறுப்பவன். அவள் ஒரு திமிர்க்காரி. அவள் உன் கல்யாணத்தையே சதி பண்ணி நிறுத்தியவள்…’ என்று நினைத்துக் கொண்டே வந்தவன்,

‘இன்னுமா நீ அவள் தான் உன் கல்யாணத்தை நிறுத்தியவள்னு நம்புற? அந்தக் கமலினி போன் பேசிய விஷயத்தில் ஏமாற்றியது போல் கல்யாணம் அன்னைக்கும் உத்ராவின் உதவி இல்லாமல் அவள் மட்டுமே ஏமாற்றி இருக்க மாட்டாள்னு என்ன நிச்சயம்?’ என்று சிந்தித்தான்.

‘இருக்கலாம். ஆனாலும் எதுவும் உறுதியாகத் தெரியாமல் உத்ராவை சீக்கிரம் நம்பி விடக்கூடாது’ என்றும் நினைத்தான்.

அவனுக்குள்ளேயே புலம்பி, தவித்து, சிந்தித்துக் குழம்பிப் போனவன் தவிப்புடன் படுக்கையில் உருண்டான்.

அப்போது மீண்டும் அழைப்பு வர, உத்ராவின் கைபேசியைப் பார்த்தான்.

அது சமர்த்தாகத் தூங்கிக் கொண்டிருக்க, அழைப்பு தன் அலைபேசியிலிருந்து தான் வருகிறது என்று உணர்ந்தவன் கட்டில் அருகில் இருந்த டீப்பாய் மேலிருந்த தன் கைபேசியை எடுத்தான்.

அவனின் அன்னை தான் அழைத்துக் கொண்டிருந்தார்.

“என்னம்மா? சொல்லுங்க” அழைப்பை ஏற்று அவன் பேச,

“தூங்கி எழுந்துட்டியா முகில்?” என்று கேட்டார்.

‘தூங்கி எழவா? இன்னும் தூங்கவே இல்லையே?’ என்று அவன் யோசிக்க,

“என்ன இன்னும் தூக்க கலக்கமா? மணி நாலு ஆச்சு முகில். எழுந்து கிளம்பு…” என்றார்.

‘என்ன அதுக்குள்ள நாலு ஆச்சா?’ என்று நினைத்தவன் கைபேசியிலேயே நேரத்தை பார்த்தான்.

நான்கு மணி ஆகியிருந்தது.

“முகில், என்ன திரும்பத் தூங்கிட்டியா?” அவன் பதில் பேசாமல் இருக்கவும் வளர்மதி சற்றுச் சப்தமாகக் குரல் கொடுக்க,

“முழிச்சுத்தான் மா இருக்கேன்…”

“அப்புறம் ஏன் பேச மாட்டேங்கிற?

“நான் யோசிச்சுட்டு இருக்கேன்மா?”

“யோசிக்கிறயா? வெளியே போவோமா? வேண்டாமான்னா? விளையாடாம ஒழுங்கா எழுந்து கிளம்பு முகில்…” என்று அதட்டல் போட்டார்.

“ம்ப்ச்… அதில்லை மா. எங்க அம்மா ரொம்ப நாளைக்குப் பிறகு அலாரமா மாறியிருக்காங்களே என்று யோசிச்சுட்டு இருக்கேன். நான் படிக்கும் போது தான் அலாரம் வேலை பார்ப்பீங்க. இப்ப திரும்ப ஆரம்பிச்சுட்டீங்க. டான்னு நாலு மணிக்குப் போன் போட்டீங்களே…” என்றான் கேலியாக.

“என்ன செய்வது? மகன் தத்தியா இருந்தால் அம்மா தானே சுறுசுறுப்பா இருக்க வேண்டியதாக இருக்கு…” என்று அலுத்துக் கொண்டார் வளர்மதி.

“தத்தியா? நானா? அம்ம்ம்மா…” என்று சிறு பையன் போல் சிணுங்கினான்.

“பின்ன இல்லையா? நீ தத்தி இல்லனா புதுப் பொண்டாட்டி கூட வெளியே போக இந்த நேரம் நீ கிளம்பி ரெடியா இருந்திருக்கணும். தத்தியா இருக்கப் போய் இன்னும் படுக்கையில் புரண்டுக்கிட்டு இருக்க…” என்று அவர் கேலியைத் தொடர, பட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான்.

“உங்க பையனை இப்படி நீங்களே கேலி பண்றது சரியே இல்லம்மா. இப்போ நீங்க தான் என்னைக் கிளம்ப விடாம போன் பேசிட்டு இருக்கீங்க…” என்றான்.

“சரி சரி… நான் போனை வைக்கிறேன். போயிட்டு வாங்க…” என்றவர் அழைப்பை துண்டித்தார்.

“இவள் இன்னும் வெளியே என்ன பண்றா? அவள் அம்மாகிட்ட இவ்வளவு நேரமா பேசுறாள்? அப்படி என்ன விடாமல் பேச்சு? போனை கொடுத்துட்டு போன பிறகு உள்ளே வரவே இல்லையா? இல்ல வந்து நான் பார்க்கலையா? ஒருவேளை நான் இருக்கும் இடத்தில் இருக்கப் பிடிக்காமல் இப்படி வெளியேவே இருக்கிறாளோ?” என்று நினைத்தான்.

சற்று யோசித்தவனுக்கு அது தான் உண்மை என்று பிடிபட்டது. தேவையில்லாம் அவனோடு அவள் பேசுவதே இல்லை. தேவைக்கு மட்டுமே பேசினாள்.

முக்கியமாக அவன் கோபத்தில் வார்த்தைகளை விடும் போது தான் அவளும் பதிலுக்குத் திருப்பிக் கொடுத்தாள்.

மற்ற நேரங்களில் அவள் பேசுவது இல்லை என்பது புரிய, அவனுக்கு எப்படியோ இருந்தது.

தான் ஏதோ தவறு செய்து விட்டால் போன்று ஒரு உறுத்தல்.

ஆனால் அதையும் தலையைக் உலுக்கி விரட்டியவன், “உத்ரா…” என்று அழைத்தான்.

அவள் உடனே உள்ளே வந்து, “என்ன முகில்?” என்றாள்.

“வெளியே போறோம். கிளம்பு…” என்றான்.

அவன் ஏதோ சொல்ல வேண்டும் என்ற கடமைக்குச் சொல்வது போல் இருக்க, “பெரியவங்க சொன்னாங்கன்னு போகணும்னு அவசியம் இல்லை…” என்றாள்.

“பெரியவங்க சொன்னாங்கன்னு உன்னைக் கல்யாணமே பண்ணிருக்கேன். வெளியே போறது பெரிய விஷயமா என்ன?” என்று அவன் அலட்சியமாகப் பேசுவது போலிருந்தாலும் அவனின் கண்களோ அவளின் உதடுகளைப் பார்க்க பிரயத்தனம் பண்ணி கொண்டிருந்தன.

அவனின் முகம் பார்க்காமல் உத்ரா ஒரு பக்கமாகத் திரும்பிய படி இருக்க, அவளின் உதடுகள் அவனின் கண்களுக்குச் சிக்காமல் கண்ணாமூச்சி ஆடியது.

‘இவ எதுக்கு இப்ப என் முகம் பார்க்காம எங்கேயோ பார்த்துட்டு இருக்கா? உதட்டை காட்டினால் என்னவாம்?’ என்று கடுப்பாகி போனான்.

அவன் பெற்றவர்களுக்காகக் கல்யாணம் பண்ணிக் கொண்டேன் என்றதும் அவனைச் சட்டென்று திரும்பி பார்த்த உத்ரா புரியா பாவனையில் அவனைப் பார்த்துவிட்டு குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

அவள் பார்வையின் அர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை. ‘என்ன பார்வை இது?’ என்று நினைத்தான்.

‘இப்ப அதுவா முக்கியம்? என் பக்கம் திரும்பிப் பார்த்தாளே… இன்னும் கொஞ்ச நேரம் எக்ஸ்ரா திரும்பி இருக்கக் கூடாது? டக்குனு முகத்தைத் திருப்பிக்கிட்டாளே. ச்சே… அவள் உதட்டை பார்க்காம மிஸ் பண்ணிட்டேனே’ என்று அதற்காகக் கவலைப்பட்டான் அவன்.

‘அடேய்! என்னடா நீ? அவள் கிட்ட பேசும் போதெல்லம் வெடுக்கு வெடுக்குன்னு பேசிட்டு உதட்டை பார்க்கலைன்னு கவலைப்பட்டுட்டு இருக்க? கோபமா இருக்குறவன் கெத்தா இருக்க வேண்டாமா?’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு தன் சிந்தனையை மாற்ற முயன்றான்.

‘கெத்தா? இனி நீ கெத்து எல்லாம் இல்லடா… சரியான வெத்து!’ மனம் கேலி செய்ய,

‘வெத்தா இருந்தாலும் அதையும் கெத்தா காட்டுவேன்டா நான்…’ என்று தனக்குத் தானே பஞ்ச் அடித்துக் கொண்டான்.

அதற்குள் குளியலறையில் இருந்து வெளியே வந்திருந்தாள் உத்ரா. அவள் முகத்தில் இருந்த ஈரத்தை வைத்து முகம் கழுவி வந்திருக்கிறாள் என்பது புரிய அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

உத்ராவோ அவனைக் கண்டு கொள்ளாமல் அலமாரியைத் திறந்து மாற்றுடையை எடுத்துவிட்டு “கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்ணுங்க. நான் ட்ரெஸ் மாத்தணும்…” என்றாள்.

எங்கே வெளியே போகிறோம். எப்போது திரும்பி வருவோம் என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் கிளம்பிக் கொண்டிருப்பவளை யோசனையுடன் பார்த்தான்.

“வெளியே வெயிட் பண்ணுங்க முகில்…” அவன் இன்னும் நகராமல் நிற்க, மீண்டும் சொன்னாள்.

அதில் உணர்வு வந்தவன் வெளியே சோஃபாவில் வந்து அமர்ந்தான்.

அப்போது வீரபத்ரனும் அங்கே வர அவரிடம் தாங்கள் வெளியே செல்ல போவதை தெரிவித்தான்.

அவன் சொன்னதைக் கேட்டு வீரபத்ரனும், அஜந்தாவும் மகிழ்ந்து போனார்கள்.

அவர்களுக்கும் மகளையும், மருமகனையும் வெளியே செல்ல சொல்ல ஆசை தான். ஆனால் முகிலின் பிடித்தமின்மை தெரியும் என்பதால் எப்படிச் சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.

“போயிட்டு வாங்க மாப்பிள்ளை. அப்படியே நைட் டின்னர் கூட வெளியே முடிச்சுட்டு வாங்க…” என்று சந்தோஷமாகச் சொன்னார் வீரபத்ரன்.

அவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்தவனுக்குத் தாங்கள் வெளியே சென்று விட்டு வருவது சரி என்றே தோன்றியது.

அன்னை சொன்னதற்காக வேண்டா வெறுப்பாகச் சம்மதம் சொல்லியிருந்தவன் இப்போது விருப்பத்துடனே கிளம்ப முடிவெடுத்தான்.

“ஆமா மாமா, டின்னர் முடிச்சுட்டுத் தான் வருவோம்…” என்றான்.

சற்று நேரத்தில் உத்ரா கிளம்பி வெளியே வர, தானும் சென்று உடை மாற்றி விட்டுப் பெரியவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

முகில் அவனின் காரை இங்கே எடுத்து வந்திருந்ததால் அதிலேயே கிளம்பினர்.

முகில் காரை எடுக்க, உத்ரா முன்னால் அமர்ந்து கொண்டாள்.

இப்போதும் அவள் எந்தக் கேள்வியும் கேட்காமல் வந்தாள்.

அதனால் “எங்கே போகலாம்? உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?” என்று அவனே கேட்டாள்.

“இல்ல… எனக்கு எந்த ஐடியாவும் இல்லை…” என்றவள் ‘நீ எங்கே போனாலும் சரி’ என்பது போல் தன் கைபேசியைப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

அவளின் கைபேசியைப் பார்த்ததும் அவளின் உதடுகள் மீண்டும் அவன் ஞாபகத்தில் வர, அருகில் அமர்ந்திருந்தவளை லேசாகத் திரும்பிப் பார்த்தான்.

அவள் குனிந்து கைபேசியைப் பார்த்துக் கொண்டிருக்க, அந்தோ பரிதாபம்! இப்போதும் அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

‘ச்சே… இனி பார்க்கவே ட்ரை பண்ண கூடாது…’ என்று வெறுத்துப் போய் நினைத்துக் கொண்டான்.

அவனுக்குக் கடற்கரை தவிர வேறு எதுவும் தோன்றாததால் அதை நோக்கியே வண்டியை விட்டான்.

காருக்குள் அமைதி மட்டுமே நிலவியது.

கடற்கரை வந்ததும் காரை நிறுத்திவிட்டு அமைதியாக இறங்கி நடக்க ஆரம்பித்தனர்.

கடலை நோக்கி நடந்த போதும் சரி, தண்ணீரை பார்த்த வண்ணம் கரையில் அமர்ந்திருந்த போதும் சரி இருவருக்கும் இடையே அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.

புதுமணத் தம்பதிகள் போல் இல்லாமல் இருவரும் யாரோ போல் அமர்ந்திருந்தனர்.

இருவருக்கும் இடையே பெரிய இடைவெளியும் இருந்தது.

முகில் சுற்றியுள்ள ஆட்களைப் பார்ப்பதும், அலைகளைப் பார்ப்பதுமாக இருக்க, உத்ரா கரையைத் தொட்டு விட்டு மீண்டும் தன் இணையுடன் சேர்ந்து கொண்ட அலைகளைக் கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உத்ராவின் உணர்வுகளற்ற பாவனையைக் கண்ட முகில் அடிக்கடி அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவளின் அந்த நிலை அவனுக்கு வித்தியாசமான உணர்வை தந்தது.

அது என்ன உணர்வு என்று அவனால் வரையறுக்க முடியவில்லை.

அவளிடம் ஏதாவது பேசி அவளைத் திசை திருப்ப வேண்டும் என்ற ஒரு உந்துதல் வர,

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் உத்ரா…” என்று சொல்லி அவளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றான்.

“சொல்லுங்க முகில்…” என்று அவனின் புறம் லேசாகத் திரும்பிக் கேட்டாள்.

“வர்ற சண்டே நம்ம ஆபீஸ் ப்ரண்ட்ஸுக்கு எல்லாம் ட்ரீட் வைக்கிறதா சொல்லியிருக்கேன். இது நான் ஏற்கனவே முடிவு பண்ணிருந்த விருந்து. அதுக்குப் போகணும். அன்னைக்கு நீ வேற எந்த ப்ரோகிராமும் வச்சுக்காம ரெடியா இரு…” என்றான்.

“சரி, போகலாம்…” என்று முடித்துக் கொண்ட உத்ரா, மீண்டும் அலைகளின் விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தாள்.

‘அவ்வளவு தானா? இது என்னடா பதில்?’ என்று தான் நினைத்தான்.

இதற்கு அவள் என்ன பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

அலுவலக நண்பர்களுக்கான விருந்து அவனின் திருமணத்திற்கு விடுப்பு எடுப்பதற்கு முதல் நாள் முடிவு செய்த ஒன்று.

அலுவலக நண்பர்கள் தனியாக விருந்து கேட்க, திருமணம் முடிந்த பிறகு வரும் முதல் ஞாயிறை தேர்ந்தெடுத்திருந்தான்.

அந்த விருந்திற்கு அவனுடன் அந்த அலுவலகத்தில் இரண்டு வருடங்களாக இணைந்து வேலை பார்த்த நண்பர்கள் மட்டுமில்லாமல் புதிதாக வேலைக்குச் சேர்ந்த புவனா வரை அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான்.

ஆனால் அவனின் டீமிலேயே இருந்த உத்ராவை அவள் மேல் இருந்த கோபத்தில் அவன் அழைக்கவே இல்லை. இப்போது அவளே அவனின் மனைவி ஆகியிருக்க, இப்போது அவளுக்கு மட்டும் தனியாக ஸ்பெஷலாக விருந்து பற்றிய தகவலை தெரிவித்துக் கொண்டிருக்கிறான்.

அவளுக்கும் அவன் விருந்து ஏற்பாடு செய்திருப்பதும் தெரியும். அதற்குத் தனக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை என்றும் தெரியும்.

அது தெரிந்தும், இப்போது அவன் அழைக்கும் போது, ‘இப்போது நீ என்னை மட்டும் தனியாக அழைக்கும் நிலை வந்து விட்டது பார்…’ என்று அலட்சியத்தையோ, ‘அப்போது அழைக்காமல் இப்போது மட்டும் ஏன் அழைக்கிறாய்?’ என்ற கோபத்தையோ அவள் பிரதிபலிக்கவே இல்லை.

‘அப்படியா? சரி…’ என்ற பாவனையைக் காட்டியவளைக் கண்டு முகில் குழம்பிப் போனான் என்று தான் சொல்ல வேண்டும்.

முகில் அவளையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது சற்றுத் தூரத்தில் சலசலவென்று சப்தம் கேட்டது.

என்னவென்று இருவருமே திரும்பிப் பார்த்தனர்.

“நல்லவேளை பிடிச்சுட்டாங்க. இவனுங்களை எல்லாம் சும்மாவே விடக்கூடாது…” என்று அவர்களைத் தாண்டி சென்ற இருவரில் ஒருவர் சொல்ல,

“என்னாச்சு? எதுக்கு அங்கே கூட்டமா இருக்கு?” என்று அவர்கள் எதிரே வந்த ஒருவர் விசாரித்தார்.

“திருடன் சார். குழந்தையோட வந்த குடும்பம் உட்கார்ந்து அந்தக் குழந்தை கூட விளையாடிட்டு இருந்திருக்கு. அந்த லேடியோட ஹேன்ட்பேக்கை மணலில் வைத்து விட்டு குழந்தைகிட்ட கவனமா இருந்திருக்காங்க. அந்த நேரம் பார்த்து அந்த ஹேன்ட்பேக்கை நைசா ஒருத்தன் அடிச்சுட்டான். நல்லவேளையா வேற ஒருத்தர் அதைப் பார்த்துச் சத்தம் போட்டு சுத்தி வளைச்சு பிடிச்சுட்டாங்க…” என்று விவரம் தெரிவித்துவிட்டு அவர் சென்று விட்டார்.

அவர்கள் பேசியதை கேட்ட முகிலும், உத்ராவும் கூட்டம் இருந்த பக்கம் பார்த்தனர்.

அப்போது கூட்டத்தை விலக்கி கொண்டு கடற்கரையில் இருந்த ஒரு காவலர் திருடனை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்.

காவலரின் கை சிறையில் இருந்த திருடனை பார்த்த உத்ரா, முகில் இருவருக்குமே அதிர்ச்சி தான்.

கடைவீதியில் வளர்மதியிடமிருந்து கை பையைப் பறித்துக் கொண்டு ஓட முயன்ற போது உத்ரா விரட்டி சென்று பிடித்த திருடன் தான் அவன்.

அவர்களைத் தாண்டி அந்தத் திருடனை காவலர் அழைத்துச் சென்று விட, அடுத்த நொடி சட்டென்று கணவனின் புறம் திரும்பினாள் உத்ரா.

அவளின் பார்வை தீர்க்கமாக அவனைத் துளைத்தது.

“என்ன அப்படிப் பார்க்கிற?” என்று கேட்டாலும் அவனுக்கே அவளின் பார்வையின் அர்த்தம் புரியத்தான் செய்தது.

“விசாரிக்கப் போகலையா முகில்?” என்று கேட்டவளில் குரலில் இருந்தது அமைதி மட்டுமே.

“என்ன விசாரிக்கணும்?”

“அது தான் மணமேடையில் வைத்துச் சொன்னீங்களே… திருடனை ஏற்பாடு பண்ணி நானே திருட வச்சு உங்க பேமிலிகிட்ட நல்ல பெயர் வாங்கியதாக… இதோ அதே திருடன் பக்கத்திலேயே இருக்கான். போய் விசாரிக்கலாமே?” என்று கேட்டாள்.

அவளின் கேள்வியில் முகிலின் முகம் மாறியது.

அவனுக்கே தெரியும். திருடன் விஷயத்தில் உத்ரா எதுவும் செய்யவில்லை என்று.

அன்று இருந்த கோபத்தில் நகையை ரிஸ்க் எடுத்துக் காப்பாற்றிக் கொடுத்தவள் என்பதையும் மறந்து அவளைக் காயப்படுத்த வேண்டும் என்று வார்த்தைகளை விட்டிருந்தான்.

அது தவறு என்று இப்போது உறுத்தியது.

உத்ராவின் அமைதியான குரலும், அவளின் சலனமற்ற முகமும் உறுத்தலை தந்து கொண்டிருந்தது.

“தேவையில்லை. அதில் எந்தத் தவறும் நீ செய்யலைன்னு எனக்கே தெரியும்…” என்றான்.

“ஓகோ…” என்ற உத்ரா மீண்டும் அலைகளின் புறம் திரும்பிக் கொண்டாள்.

அதன் பிறகான இருவருக்கும் இடையே நீடித்த மௌனம் பெரும் அவஸ்தையாக இருக்க, “கிளம்பலாமா?” என்று கேட்டான்.

“ம்ம்…” என்ற உத்ரா எழுந்தாள்.

காருக்கு வந்து கிளம்பி ஒரு உணவகத்திற்கு வண்டியை விட்டான்.

அங்கேயும் அவரவருக்கு வேண்டியதை சொல்லி வாங்கி உண்டனர்.

எதிர் எதிரே அமர்ந்திருந்தும் மனதில் இருந்த உறுத்தலில் அவளின் முகத்தைப் பார்க்கவில்லை அவன்.

அமைதியாக உண்டு விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

இரவு படுக்கையில் விழுந்த பிறகும் ஒரு கனமான சூழல் நிலவியது போலிருந்தது.

படுக்கையில் விழுந்ததும் அத்தனை ரணக்களத்திலேயும் ‘பீச்ல நேருக்கு நேராக அவள் முகத்தைப் பார்த்தும் அவள் உதட்டை கவனித்துப் பார்க்காமல் விட்டுட்டேனே…’ என்று நினைத்தான் முகில்வண்ணன்.