24 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 24
சந்தோஷத்துடன் மனைவியின் இதழ்களை ஸ்பரிசித்துக் கொண்டிருந்த தர்மா அவளின் உறைந்த நிலையைக் கண்டு மெல்ல விலகி, “என்னடா?” என்றான் கேள்வியுடன்.
“என்ன சொன்னீங்க? முதல் முறை….” என்று மேலும் கேட்கமுடியாமல் நிறுத்தினாள்.
“ஆமா சொன்னேன். அதுதானே உண்மை?” என்ற தர்மாவிற்கு அப்போது தான் ஏன் அவள் அப்படிக் கேட்கின்றாள் என்பது புரிந்தது.
“உண்மையா?” என்று உள்ளுக்குள் உற்சாகமாக நினைத்தவள், “அப்போ அவங்க… அந்த மனைவி…” என்று மனைவி என்பதைக் கூடச் சட்டென்று கேட்க முடியாமல் மென்று விழுங்கினாள்.
“அப்படிச் சொல்லாதே சத்யா…” என்று அவளின் உதட்டின் மீது விரலை வைத்து நிறுத்தினான்,
“ஏன்?” என்று அவனின் விரலை விலக்கி கேட்டாள்.
“ஏன்னா அவங்க இப்போ இன்னொருத்தரோட மனைவி…” என்று அழுத்தமாகச் சொன்னான்.
“என்ன சொல்றீங்க?” அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததில் விலகி ஓடிய அவளின் உடையைத் தானே சீர் செய்து விட்டவன், “ஆமாடா… இன்னொருத்தர் மனைவிதான்…” என்றான் இன்னும் அழுத்தமாக.
‘அப்போ இவரோட முதல் மனைவி இறக்கவில்லையா?’ என்பது போல் அதிர்ந்து அமர்ந்திருந்தாள்.
அவளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைக் கணித்தவன், “நான் முதலில் கல்யாணம் செய்து கொண்ட பொண்ணு இறக்கலை சத்யா. இப்போ இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டுச் சந்தோஷமா தான் இருக்காங்க…” ‘பொண்ணு, ங்க’ என்று பேசி யாரோ ஒரு பெண் போலவே பாவித்து அவன் சொன்னதைச் சத்யாவின் மனது குறித்துக் கொண்டது.
“ஏன்?” என்று நெற்றியை சுருக்கி குழப்பத்துடன் கேட்டாள்.
“இதைத் தான் அன்னைக்கே பேசிருவோம்னு சொன்னேன் சத்யா. நீ தான் வேணாம்னு தள்ளி போட்ட. இப்பயாவது கேட்டீயே. இன்னைக்கே இந்த விஷயத்தைப் பேசிருவோம். இனி அந்தப் பொண்ணோட பேச்சுக் கூட நமக்குள் வர வேணாம்…” என்றவன் எழுந்து அங்கிருந்த பாலை எடுத்து “இதைக் குடி சக்திமா. டயர்டா தெரியுற…” என்று டம்ளரை நீட்டி தானே பாலை புகட்டி விட்டான்.
உடையைச் சரி செய்து விட்டதிலும், அவளின் அலுப்பை உணர்ந்து பாலை பருக வைத்ததிலும் இருந்த அவனின் அக்கறையைக் கண்டு சத்யாவின் மனம் நெகிழ்ந்து போனது.
‘என் கணவன் எனக்காகப் பார்த்து பார்த்துச் செய்கின்றான்’ என்று அவளின் மனது ஆனந்தப்பட்டுக் கொண்டது.
ஆனாலும் அதைக் குறிப்பிட்டு காட்டி கொள்ள முடியாமல் அந்தப் பெண் ஏன் தர்மாவை விட்டு சென்றாள் என்று நினைவு அவளைக் கட்டி இழுக்க, அதில் கவனத்தை வைத்தாள்.
கணவன் சொன்னது போல் இவ்விஷயம் இன்றோடு முடியட்டும். இனி ‘என் தர்மாவிற்கு நான். எனக்கு என் தர்மா’ என்பது மட்டுமே எங்கள் வாழ்க்கையில் இருக்கட்டும் வேறு எந்தப் பெண்ணும் நினைவால் கூடத் தங்களுக்குள் வர வேண்டாம் என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன், அவளையும் தன்னருகில் அமர வைத்துக் கொண்டான்.
“இந்தப் பேச்சு இன்னைக்கு மட்டும் தான்டா அப்புறம் ‘எனக்கு நீ, உனக்கு நான்’ அவ்வளவு தான்! இனி நினைப்பில் கூட வேற யாரும் நமக்கிடையே வரக் கூடாது…” என்று சத்யா மனதில் நினைத்ததையே, தர்மாவும் சொல்ல,
இருவரின் எண்ணமும் ஒன்று போல் இருந்ததில் ‘எண்ணத்தில் கூடத் தாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோமே’ என்று மகிழ்ச்சியாக உணர்ந்தாள் சத்யா.
“அனுக்குக் கல்யாணம் முடிஞ்சதும் எனக்கும் வீட்டில் பெண் பார்த்தாங்க சத்யா. அப்போ நான் அப்பாவோட டிபார்மெண்டல் ஸ்டோரை தான் பார்த்துட்டு இருந்தேன். அப்போ தரகர் மூலமா வந்த சம்பந்தம் தான் அந்தப் பொண்ணு…”
“பேர் என்ன?” என்று இடையில் கேட்டாள் சத்யா.
“பேரு அபிரதி. ரதி போல அழகும் கூட. அதனாலோ என்னவோ அந்த அழகே அவளுக்கு அதிக அலட்டலை கொடுத்துருச்சு. ஆனா அந்த அலட்டல் குணம் கல்யாணம் வரை வெளியே காட்டிக்கவே இல்லை. ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணா தான் நாங்க பார்க்கும் போதெல்லாம் தெரிஞ்சாள். கல்யாணம் முடிஞ்சதும் தான் அலட்டலை வெளியே காட்டிக்கிட்டாள். வந்த முதல் நாளே என் மேல அதிக உரிமை எடுத்துக்கிட்டாள்.
அனுவை கூட என்கிட்ட சகஜமா பேசவிடலை. அனு என்னை ஒருமையில் பேசிட்டாள்னு, சுத்தி சொந்தக்காரங்க இருக்காங்கனு கூடக் கவலைப்படாம இனி என் புருஷனை அப்படிக் கூப்பிடாதே. நான் மட்டும் தான் அப்படிக் கூப்பிடுவேன்னு எல்லார் முன்னாடியும் திட்டி முதல் நாளே அனுவை அழ வைச்சாள். அப்புறம் எங்களையும்…” என்று ஒட்டாத குரலில் சொல்லிக் கொண்டே போனான் தர்மா.
அவன் சொல்லவும் தான் சற்று நேரத்திற்கு முன் அண்ணன், தங்கை இருவருக்குள் நான் வர மாட்டேன் என்று தான் சொன்ன போது அனு ஏன் உணர்ச்சி வசப்பட்டாள் என்று சத்யாவிற்குப் புரிந்தது.
‘எத்தனை புதுச் சொந்தங்கள் வந்தாலும், உடன் பிறந்த பிறப்பின் உரிமை விட்டு போகுமா என்ன? அது ஏன் அந்தப் பெண்ணிற்குப் புரியவில்லை’ என்று முகச் சுளிப்புடன் நினைத்துக் கொண்டாள்.
அதற்கும் காரணம் சொல்வது போலத் தர்மா பேசினான்.
“அவங்க வீட்டில் ஒத்தை பொண்ணா வளர்ந்ததாலோ என்னவோ அண்ணன், தங்கை பாசம் அவளுக்குப் புரியலை. அந்த நேரத்தில் என்னாலும் அவளைக் கண்டிக்க முடியலை. அவளுக்கு வேணும்னா எந்த இடத்தில் எப்படி நடந்துக்கணும்னு தெரியாம இருக்கலாம். ஆனா அதையே நானும் செய்ய நான் அபிரதி இல்லையே? அதனால் தனியா பேசிக்கலாம்னு இருந்துட்டேன்.
ஆனா நைட் தனிமையில் அவள் அலட்டின அலட்டலுக்கு எனக்குப் பேசும் விருப்பமே இல்லாம போயிருச்சு. நிறைய எதிர்பார்ப்புகள், கற்பனைகள் அவளிடம் நிறைஞ்சு இருந்தது.
முதல் நாளே நமக்குள் எதுவும் வேண்டாம் முதலில் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுப்போம்னு சொன்னாள். சரி தான்னு நானும் சொல்லிட்டேன். ஆனா அப்படிச் சொன்னதையே மறந்து, அது எப்படி நான் சொன்னதும் நீங்க விடலாம்னு அழ ஆரம்பிச்சுட்டாள். என்ன ஏதுனு விசாரிச்சா, நான் கதைல எல்லாம் படிச்சிருக்கேன். ஹீரோயின் மறுத்தாலும், ஹீரோ வம்படியா ரொமான்ஸ் பண்ணுவாங்க. அப்படியெல்லாம் நீங்க ஏன் பண்ணலனு அழுகை. இது போலச் சின்னச் சின்ன விஷயத்துக்கும் ஏதாவது ஒரு கற்பனை கதை சொல்லுவாள்.
நிஜத்துக்கும், நிழலுக்கும் வித்தியாசம் தெரியாத பொண்ணா தான் தெரிஞ்சாள். ஆரம்பத்திலேயே இத்தனை அழுகை, ஆர்ப்பாட்டத்தோட வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டாம்னு நானே தள்ளி நின்றேன்.
அடுத்து மறுவீடு, சொந்தக்காரங்க விருந்துனு ஒரு நாலு நாள் ஓடுச்சு. அந்த நாட்களிலும் விலகி இருக்க, இருக்கத் தான் பிரியம் கூடும்னு படிச்சிருக்கேன்னு சொல்லி அவளே தான் தள்ளி போட்டாள்…” என்று யாரோ மூன்றாவது மனிதனுக்கு நடந்த நிகழ்வு போலச் சொன்னான் தர்மா.
இன்னும் விளக்கமாகச் சொன்னால் எங்கே சத்யா வருந்துவாளோ என்று நினைத்தவன் மேலோட்டமாக மட்டும் சொல்லிக் கொண்டே போனான்.
அவனின் ஒட்டாத தன்மையை உணர்ந்த சத்யாவும், முயன்று சாதாரணமாகவே கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அதன் பிறகு ஐந்தாவது நாள் இரண்டு பேரும் கோவிலுக்குப் போய்ட்டு திரும்பி கொண்டிருந்தோம். நான் பைக் ஓட்டும் போது பின்னால் உட்கார்ந்து பேசிக்கிட்டே வந்தாள். அப்போ ஏதோ சொல்லிக்கிட்டே என் தோளை தட்ட அதில் என் கவனம் கொஞ்சம் பிசக்கிருச்சு. அப்போ குறுக்குத் தெருவில் இருந்து ஒரு கார் வந்ததில் பைக்ல மோதிருச்சு.
அவளுக்கு அவ்வளவா அடி எதுவும் படலை. ஆனா கார் மோதி தூக்கி போட்டதில் நான் அந்தக் காருக்கு முன்னாடியே விழுந்து சக்கரம் காலில் ஏறிடுச்சு. தலையில் ஹெல்மெட் போட்டிருந்தால் தலை தப்பியது…” என்று அவன் சொல்லி நிறுத்த…
“அப்போ தான் காலில் இப்படி ஆச்சா…” என்று பதறி கேட்டாள் சத்யா.
“ஹ்ம்ம்… ஆமா… ட்ரீட்மெண்ட் முடிஞ்சு இனி ஸ்டிக் இல்லாம நடக்க முடியாதுனு டாக்டர் சொல்லவும், அவளின் சுயரூபம் தெரிஞ்சது. இந்த நொண்டி வேண்டாம்னு சொல்லி டிவோர்ஸ் கேட்டாள்…”
“என்ன சொல்றீங்க? இதுக்குப் போய் டிவோர்ஸா…?” சத்யாவிடம் இப்படியும் நடக்குமா என்பது போல் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.
“ஹ்ம்ம்… அவளைப் பார்க்க வந்த மாப்பிள்ளைங்களை விட நான் பார்க்க நல்லா இருக்கேன்னு தான் என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டாளாம். இப்போ நொண்டியா அவ கூட நடந்தா பார்க்கவே அசிங்கமா இருக்குமாம். அதுவும் அப்போ நடமாட்டம் இல்லாம படுக்கை தான் எனக்குனு இருந்தால் இப்படி இருக்குறவனுக்கு என்னால் சேவை செய்ய முடியாதுனு அவங்க அம்மா வீட்டில் போய் இருந்துகிட்டாள். அதுக்குப் பிறகு டிவோர்ஸ் நோட்டீஸ் தான் வீட்டுக்கு வந்தது…”
“இது என்ன அநியாயமா இருக்கு? மனைவினா எந்த நிலையிலும் கணவனுக்கு உறுதுணையா இருப்பவள் இல்லையா! கால் இப்படி ஆனதுக்கே விட்டுட்டு போறதுனா என்ன மாதிரியான பெண் அவள்?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“எப்படிப்பட்ட பொண்ணாவோ இருந்துட்டு போகட்டும் டா. அதைப் பற்றி இனி நமக்குத் தேவையில்லை. அவங்க குணம் அது. ஆனா அந்தச் சம்பவத்தில் அவளுக்கு எதுவும் ஆகிருந்தா அப்படி ஒரு முடிவை கண்டிப்பா நான் எடுத்திருக்க மாட்டேன். இப்போ யாரோ போல ஒரு மூணாவது மனுஷனா அந்த விஷயத்தைப் பேசுறேன். ஆனா அந்தச் சமயம்? நானும், என் குடும்பமும் அனுபவிச்ச வலியும், வேதனையும், கேட்ட வலி நிறைந்த வார்த்தைகளும் அதிகம்.
“பெரியவங்க எல்லாம் சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினாங்க. அவங்க சைட் அவ சேர்த்து வைக்கப் பேசினா செத்து போயிருவேன்னு மிரட்டியிருப்பாள் போல. அவங்க பொண்ணு உயிர் முக்கியம்னு வெட்டி விட்டுருவோம்னு முடிவுக்கு வந்துட்டாங்க. நான் பொண்ணுகிட்ட பேச ட்ரை பண்ணினேன். ஆனா என்கிட்ட பேச விருப்பம் இல்லைனு பதில் வந்தது. வெட்டிக்கிட்டுப் போகத் துடிச்சவங்களை அதுக்கு மேல இழுத்து பிடிச்சு வச்சு வாழ்க்கை பிச்சை கேட்க எனக்கும் விருப்பம் இல்லை.
நானும் டைவோர்ஸுக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன். ம்யூச்சுவல் பிரிவுக்கு எழுதி கொடுத்ததால் ஒன் இயர்ல டிவோர்ஸ் ஆகிருச்சு. அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணுக்கு வேற கல்யாணம் முடிஞ்சுட்டதா கேள்விப்பட்டேன்…” என்று சொல்லி முடித்தான்.
கேட்டு முடித்த சத்யாவிற்குச் சிறிது நேரம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவன் பேசிய முறை அவனே அந்த விஷயத்தில் இருந்து விலகி வந்துவிட்டதைக் காட்ட, ஆறுதல் சொல்லவும் தேவையிருக்கவில்லை.
இருவருக்கும் இடையே நிலவிய மௌனத்தைக் கலைப்பது போல் படுக்கையில் தன் கையால் துழாவி, சிறு சப்தத்தை எழுப்பினாள் சத்யா.
சத்யாவிடம் சொல்லி முடித்துவிட்ட ஆசுவாசத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்த தர்மா அந்தச் சிறு சத்தத்தில் கண்களைத் திறக்க, அதே நேரம் அவனின் நீட்டியிருந்த காலை பற்றியிருந்தாள் சத்யா.
“என்ன சக்திமா?” என்று கையை நீட்டி அவளின் கையை மென்மையாக பற்றிக் கொண்டான்.
“உங்க கால் எப்படி இருக்குனு நான் தெரிஞ்சிக்கணும்…” என்று சொல்லிக் கொண்டே இன்னொரு கையால் அவனின் காலை தடவ ஆரம்பித்தாள்.
அவன் கட்டியிருந்த வேட்டி காலை மறைத்திருக்க, ஒரு இடத்தில் மட்டும் இருந்த சிறிய இடைவெளியை உணர்ந்து அதன் வழியே காலின் ஸ்பரிசத்தைத் தொட்டாள்.
அவள் தொட்ட இடத்தில் சிறிது பள்ளமாக இருந்தது. “என்ன இப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே கையை நகர்த்தித் தடவி பார்த்தாள்.
“அதான் சொன்னேனடா பாதிச் சேதமடைந்த நிலைதான். சக்கரம் வேகமா ஏறியதில் பயங்கர எலும்பு முறிவு. ஆப்ரேஷன் பண்ணி ஓரளவு செட் பண்ணி விட்டாங்க…” என்று சொன்னதைக் கேட்டு சத்யாவின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
அங்காங்கே நெளிவும், சுழிவுமாகக் காலின் தோல் இருக்க, கால் எலும்பும் இரண்டு இடத்தில் வித்தியாசமாக இருந்தது.
முட்டியில் இருந்து உள்ளங்கால் வரை தடவி அவனின் காலின் நிலையை அறிந்து கொண்டவளுக்குக் கண்ணீர் உடைப்பெடுத்துக் கொண்டு வெளியே வந்தது.
அவள் தனக்காக அழுததில் உண்டான நெகிழ்வை அப்படியே தனக்குள் அடக்கி கொண்டு, “சக்திமா… நானும் தடவி பார்க்கட்டுமா?” என்று குறும்பு கொப்பளித்த குரலில் கேட்டான்.
காலின் நினைவில் இருந்தவளுக்கு, அவனின் குறும்பு பிடிபடாமல் போக “எதை?” எனச் சாதாரணமாகக் கேட்டாள்.
“உன்னை…” என்று சிரிப்புடன் சொல்ல,
அவன் சொல்ல வருது அப்போதுதான் உறைக்க “அச்சோ! என்ன இப்படியெல்லம் பேசுறீங்க?” என்று அழுகை போய் வெட்கத்துடன் கேட்டாள்.
“பேச வேண்டாம். செயலில் செய்து காட்டுனு சொல்றியோ…?” என்று கேட்டவன் தன் காலடியில் அமர்ந்திருந்தவளின் கரம் பற்றிச் சுண்டி இழுத்து தன் கைக்குள் கொண்டு வந்தவன் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான்.
அவளின் முதுகில் கைகளைச் சுதந்திரமாக விட்டவன், “இது நானே புரிந்து கொண்ட அனுமானத்தில் சொல்றேன்டா சக்திமா. என்னைக் காதிலிச்சதுக்காக நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொல்லியிருந்தாலும், எப்பவாவது உனக்கு இரண்டாந்தாரமா போறோமேனு உனக்கு ஒரு நெருடல் இருந்திருக்கலாம்.
அந்த நெருடல் இனியும் வரக்கூடாதுனே சொல்றேன்டா. நல்லா கேட்டுக்கோ. தாலி கட்டிய சடங்கில் வேணும்னா நீ இரண்டாவதாக இருக்கலாம். ஆனா என் மனதில் முதலில் நுழைந்த பொண்ணும் நீதான். நான் முதலில் அறிந்து கொண்ட பெண்ணும் நீதான். உடலாலும், மனசாலும் நான் உனக்குத் தான் முதலிடம் கொடுத்திருக்கேன்…” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்து தன் அதரங்களால் உடலில் தீண்டி, வார்த்தையால் மனதை தீண்டி தன் காதலை கவிமுத்துக்கள் போல் கணவன் சொல்லியதை கேட்டவளோ உறைந்து போனாள்.