23- மின்னல் பூவே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 23

“எந்த மாதிரி வீடு பார்க்கணும்னு சொன்னால் நான் பார்க்க ஆரம்பிக்கிறேன் மாப்பிள்ளை…” என்று முகிலிடம் கேட்டுக் கொண்டிருந்தார் வீரபத்ரன்.

“இல்லங்க… மாமா…” முதல் முறையாக முறை சொல்லி அழைக்கத் தடுமாறிய படி அழைத்தவன்,

“நானே பார்த்துக்கிறேன். ஆன்லைன்ல பார்த்தாலே தெரிஞ்சிடும்…” என்றான்.

தனியாகச் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை அவனின் குடும்பத்தினர் பேசி சம்மதிக்க வைத்திருந்தனர். முக்கியமாக வளர்மதி தான் மகனை சரிகட்டியிருந்தார்.

இதற்கும் உத்ராவும் தனியாக வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்திருந்தாள்.

“நான் இந்த வீட்டுக்கு இப்பத்தானே வந்திருக்கேன் அத்தை. உங்க கூட எல்லாம் நான் எப்ப பழகுவது? நாங்க இங்கேயே இருக்கோம்…” என்றாள் உத்ரா.

கல்யாணம் முடிந்தவுடனேயே தாங்கள் தனியாகச் செல்வது அவளுக்குச் சரியாகப் படவில்லை.

முக்கியமாக முகிலுடன் தனியாக வசிப்பது எல்லாம் இப்போது சரியாக வருமென்றும் அவளுக்குத் தோன்றவில்லை.

அவனின் கோபத்தைப் பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் தாங்கள் தனியாகச் சென்றால் இன்னும் அவனின் விலகலும், கோபமும் அதிகரிக்குமே தவிரத் தங்களுக்குள் ஒட்டுதல் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று நினைத்தாள்.

இங்கேயாவது பெரியவர்கள் இருக்கும் போது வார்த்தைகளை அளந்து பேசுவான். இதுவே தனியாக என்றால் அவனின் வார்த்தைகள் வரம்பு மீறி சென்று தங்கள் வாழ்க்கை மேலும் சிக்கல் ஆகிவிடுமோ என்று அவளுக்குப் பயமாக இருந்தது.

கல்யாணத்தன்று அவன் பேசிய பேச்சுக்களே அவளின் மனதில் வடுவாகியிருந்தது.

இதில் மேலும் மேலும் அவன் பேசினால் அவனைத் தான் முற்றிலும் வெறுத்து விடுவோமோ என்ற பயம் அவளை ஆட்கொள்ள, தனியாகச் செல்வதில் அவளுக்கு விருப்பமிருக்கவில்லை.

“நீயும் புரியாம பேசாதே உத்ரா. நாங்க எங்கே போகப் போறோம்? அடிக்கடி நாங்க அங்கே வரப்போறோம். நீங்க இங்கே வரப் போறீங்க. எங்ககிட்ட எப்ப வேணும்னாலும் பழகலாம்.

ஆனால் உனக்கும், முகிலுக்கும் தான் இப்போ ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்கத் தனிமை தேவை. உங்க இரண்டு பேருக்கும் திடீர்ன்னு கல்யாணம் முடிஞ்சிருக்கு. நீங்க சரியா பேசியிருக்கக் கூட மாட்டீங்க. இந்த நிலையில் நீங்க தனியா இருப்பது தான் சரியா வரும்.

அது மட்டுமில்ல இனி உனக்கு அவ்வளவு தூர அலைச்சல் எல்லாம் சரிவராது. இதுக்கு முன்னாடி போய்ட்டு வந்தன்னா நீ அப்போ கல்யாணம் ஆகாத பொண்ணு. இப்போ கல்யாணம் ஆடுச்சு. உனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. அதுக்கும் நீங்க ஆபிஸ் பக்கத்தில் இருப்பது தான் சரியா இருக்கும்…” என்றார் வளர்மதி.

கமலினியுடன் மணமேடை வரை வந்துவிட்டுக் கல்யாணம் நின்று புதிதாக உத்ரா மகனின் வாழ்க்கையில் வந்ததால் மன உளைச்சலிலும், உத்ராவுடன் பழகத் தயங்கியும் எங்கே மகன் அவளுடன் வாழாமல் அவளைத் தள்ளி நிறுத்துவானோ என்ற பயம் அவருக்கு இருந்தது.

தனிமையில் இருக்கும் போது உத்ரா மகனின் பொறுப்பு ஆகிவிட, அவன் தன் வாழ்க்கையைப் பற்றி யோசிப்பான். அவளுடன் வாழ துவங்குவான் என்று நினைத்தார்.

அவரும் நேற்றிலிருந்து மகனை கவனித்துக் கொண்டு தானே இருந்தார். உத்ரா இருக்கும் இடத்தில் அவன் இருக்காமல் போவதும், அவளை யாரோ போல முறைத்துக் கொண்டிருப்பதையும் கவனித்திருந்தார்.

அவர்களுக்குள் நடக்கும் பூசல் பற்றி அவருக்குத் தெரியாததால், புதிதாக அவன் வாழ்க்கையில் நுழைந்தவளை ஏற்க முடியாமல் அப்படி இருக்கிறான் என்று அவர் நினைத்துக் கொண்டார்.

அதனால் தனிமை தான் அவர்களுக்குச் சிறந்த தீர்வு என்று நினைத்தவர், அடுத்து மகனையும், மருமகளையும் அதட்டித் தனிக்குடித்தனத்திற்குச் சம்மதிக்க வைத்திருந்தார்.

‘ஊருல புதுப் பொண்ணு வந்ததும் தனிக்குடித்தனம் போகணும்னு பொண்ணு தான் சொல்லுவா. இங்கே எங்க அம்மாவே போங்கன்னு விரட்டுறாங்க. ஐயோ! ஆண்டவா! இந்த அம்மாவுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பேன்…’ என்று முகிலால் மனதிற்குள் புலம்பத்தான் முடிந்தது.

பேசி முடிவு எடுத்ததும் அஜந்தாவும், வீரபத்ரனும் பொண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.

அஜந்தாவும், உத்ராவும் சமையலறையில் இருக்க, வீரபத்ரன் முகிலிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“நானும் ஆன்லைன் மூலமாகவே பார்க்கிறேன் மாப்பிள்ளை. நீங்க ஒரு பக்கம் பாருங்க. நான் ஒரு பக்கம் பார்க்கிறேன். இரண்டு பேரும் பார்த்தால் சீக்கிரம் வேலை முடியுமே. நானும் சீக்கிரம் ட்யூட்டிக்கு கிளம்பிடுவேன். அதுக்குள்ள வீட்டுக்கு சாமான் வாங்குற வேலையை முடிச்சுட்டால் அஜந்தா தனியா கஷ்டப்பட வேண்டியது இருக்காது…” என்றார்.

அவனுக்கு அப்போது தான் அவர் ஒரு ராணுவ வீரர். இப்போது விடுமுறையில் வந்திருக்கிறார் என்பது ஞாபகத்தில் வந்தது.

அவரின் கம்பீரமான தோன்றமும், முறுக்கு மீசையும் ஒரு மரியாதை கலந்த பயத்தைத் தந்தது.

அவரிடம் சகஜமாகப் பேச முடியாமல் ஒரு தயக்கம் வந்தது.

‘மகனே, அவர் மகளை நீ என்ன பேச்சு பேசுற? அது எல்லாம் இவருக்குத் தெரிந்தால் அவரின் ஒரு அடிக்கு நீ தாங்குவியா?’ என்று அவனின் மனசாட்சியே கெக்கொலி கொட்டி சிரித்தது.

அவனும் அவனின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் வாட்டச்சாட்டமாகத் தான் இருந்தான்.

ஆனாலும் அவரின் ராணுவ பயிற்சிக்கு முன் தான் எம்மாத்திரம் என்று தான் அவனுக்கே தோன்றியது.

“சொல்லுங்க மாப்பிள்ளை, எத்தனை பெட்ரூம் இருக்கிற மாதிரி வீடு பார்க்கட்டும்? அப்பார்மென்ட் பார்ப்போமா, தனி வீடா பார்ப்போமா?” என்று கேட்டார்.

“அப்பார்மென்ட் தான் வசதி மாமா. இரண்டு பெட்ரூம் இருக்குற மாதிரி பார்க்கணும். நீங்க எல்லாம் வந்தா தங்க ஒரு ரூம் வேணும்…” என்று வெளியே சொன்னவன் ‘அப்போ தான் அவளை இன்னொரு ரூம்ல தள்ளிவிட்டுட்டு நான் தனியா நிம்மதியாக இருக்க முடியும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

“சரி மாப்பிள்ளை. அப்படியே பார்க்கலாம். நீங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கணும்னா எடுங்க. நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றேன்…” என்றவர், “உத்ரா…” என்று மகளை அழைத்தார்.

“என்னப்பா?”

“மாப்பிள்ளையை உன் ரூமுக்கு கூட்டிட்டுப் போய்ப் பேசிட்டு இருமா. அம்மா சில சாமான் எல்லாம் வாங்க சொன்னாள். நான் போய் அதை வாங்கிட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு அவர் எழுந்து செல்ல,

“வாங்க…” என்று முகிலை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அவள் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் அந்த அறையைச் சுற்றி பார்வையை ஓடினான்.

அறையில் அந்தந்த பொருட்கள் நீட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவள் அறையைச் சுத்தமாக வைத்திருப்பதைப் பார்த்து உதட்டை லேசாகப் பிதுக்கினான்.

“ஆமா, இன்னைக்கு நீ ஆபீஸ் போகணும்ல? போகலை?” என்று நக்கலாகக் கேட்டான்.

“என் லீடர் நேத்து ஒரு நாள் லீவ்வையே திட்டிக்கிட்டே தான் கொடுத்தார். இன்னைக்கு அவரும் லீவ் என்பதால் மேனேஜர்கிட்ட லீவ் சொல்லிட்டேன்…” என்றாள் உத்ரா.

அவளில் பதிலில் அவன் முறைத்துப் பார்க்க, அதைக் கொஞ்சமும் அவள் சட்டை செய்யவில்லை.

அவர்கள் அலுவலகத்திலிருந்து திருமணத்திற்கு வந்திருந்த அலுவலக நண்பர்களுக்கு முகில் திருமண விஷயத்தில் நடந்த குளறுபடியும், உத்ரா மணப்பெண் ஆன கதையும் தெரியும் என்பதால் அவளுக்கு விடுமுறை கிடைக்க ஒரு சிரமமும் இருக்கவில்லை.

அது தெரிந்திருந்தும் நக்கல் அடித்தவனை அவள் கண்டு கொள்ளவில்லை.

“ஆமா எனக்கு ஒரு சந்தேகம்? அதெப்படி உன்னோட அப்பா, அம்மா உடனே கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னாங்க? உன்னை மாதிரி திமிர்ப்பிடித்தவளுக்கு வேற மாப்பிள்ளை எதுவும் அமையலைன்னு, இது தான் சந்தர்ப்பம்னு என் அப்பா பொண்ணு கேட்டதும் என் தலையில் கட்டி வச்சுட்டாங்களோ?” என்று இப்போதும் நக்கலாகக் கேட்க, உத்ரா உக்கிரமாக முறைத்துப் பார்த்தாள்.

அவளின் மனம் அறிந்த ஒரே காரணத்திற்காகத் திடீர் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னவர்கள் அவர்கள். அப்படிப்பட்டவர்களை எப்படி நக்கலாகப் பேசுகிறான் இவன்? என்று கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

“உங்களுக்கு என் மேல கோபம்னா அதை என்கிட்ட மட்டும் தான் காட்டணும். என்னோட பேரன்ட்ஸை எல்லாம் வம்புக்கு இழுக்கக் கூடாது. உங்களையும் மதிச்சு உங்களுக்குப் பொண்ணு கொடுத்ததுக்கு அவங்களுக்கு மரியாதை கொடுக்க முடிஞ்சா கொடுங்க. இல்லை முடியாதுன்னா பேசாம…” என்றவள் தன் கையை வாய் மீது வைத்து பொத்திக் காட்டினாள்.

“ஏய், என்ன ரொம்பப் பண்ற?” என்று அவன் கோபத்துடன் எகுற…

“நாம என்ன செய்றோமோ அது தான் திருப்பிக் கிடைக்கும் முகில்…” என்று அழுத்தமாகச் சொன்னவள் அறையை விட்டு வெளியே சென்றாள்.

அவள் அங்கிருந்து சென்றதுமே அவனுக்குத் தன் தவறு புரிந்தது. தான் பேசியது அதிகப்படி தான் என்று நினைத்துக் கொண்டான்.

ஆனாலும் ‘அவர்களால் எப்படிச் சட்டென்று சம்மதம் சொல்ல முடிந்தது?’ என்ற கேள்வி மட்டும் அவனை விட்டு அகலவில்லை.

அதைத் தெரிந்து கொள்ள அவனுக்கு ஒரு ஆர்வம் இருந்ததும் உண்மை.

அறையில் தனியாக இருந்தவன் பொழுது போகாமல் அறையைச் சுற்றி வந்தான்.

அப்போது சுவரில் ஒரு புகைப்படம் தெரிய அதன் முன் நின்றான்.

உத்ராவின் பதின்மபருவ புகைப்படம் அது. கராத்தே உடையில் இடுப்பில் கருப்புப் பெல்ட் அணிந்திருந்தாள். எதிரே அதே போல் உடை அணிந்திருந்த ஒரு நாற்பது வயது தக்க ஆடவரிடம் பரிசு வாங்கிக் கொண்டிருந்தாள்.

‘இவள் பிளாக் பெல்ட் எல்லாம் வாங்கியிருக்காளா? இவள் கிட்ட கொஞ்ச ஜாக்கிரதையா தான் இருக்கணுமோ?’ என்று நினைத்தவன் கை தன்னால் அவனின் கன்னத்தை மூடிக் கொண்டது.

அவனுக்குத் தான் அவள் எப்படி அறைவாள் என்று நன்றாகத் தெரியுமே!

‘அடிச்சா மின்னல் அடி தான். மின்னல் வேகத்தில் தான் அவள் கையும் நீளும். சரியான மின்னல் அவள்!’ என்று முனங்கி கொண்டான்.

உத்ரா மீண்டும் அறைக்குள் வந்த போது கன்னத்தில் கை வைத்தபடி அவன் நின்றிருந்ததைக் கண்டு அவனை வினோதமாகப் பார்த்தாள்.

அவளின் அரவம் உணர்ந்து திரும்பியவன், கன்னத்தில் இருந்து கையை எடுக்க மறந்திருக்க, “எதுக்கு இப்படி நிற்கிறீங்க? அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க வாங்க…” என்றாள்.

அவளின் பார்வையைக் கண்டு வேகமாகத் தன் கையைக் கன்னத்தில் இருந்து எடுத்தவன், “என்ன அதுக்குள்ளயா? இப்போ தானே காலை சாப்பாடு சாப்பிட்டோம்…” என்று கேட்டான்.

மீண்டும் அவனை வினோதமாகப் பார்த்தவள் “மணி ஒன்னு ஆச்சு…” என்றாள்.

‘என்ன அவ்வளவு நேரமா?’ என்று நினைத்தவன் வேகமாகக் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

மணி மதியம் ஒரு மணி ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தன.

‘எவ்வளவு நேரம் அந்தப் போட்டோவையே பார்த்துட்டு அப்படி நின்னோம்?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

“என்னாச்சு? எதுக்குச் சாப்பிட வர இவ்வளவு யோசிக்கிறீங்க?” என்ற உத்ராவின் கேள்வியில் சிந்தனையை ஒதுக்கிவிட்டு சாப்பிட சென்றான்.

மாப்பிள்ளை விருந்தை தடபுடலாகத் தயார் செய்திருந்தார் அஜந்தா.

“கையைக் கழுவிட்டு சாப்பிட வாங்க மாப்பிள்ளை…” வரவேற்ற அஜந்தா அவனுக்குப் பரிமாற ஆரம்பிக்க, சாப்பிட அமர்ந்தவன் அவர்கள் இலை முழுவதும் பரப்பிய உணவு பதார்த்தங்களைப் பார்த்து மலைத்தான்.

“எதுக்கு இவ்வளவு? கொஞ்சமா செய்துருக்கலாமே?” என்று கேட்டான்.

“எங்க வீட்டில் முதல் முதலாகச் சாப்பிடுறீங்க. சாதாரணமா செய்ய முடியுமா மாப்பிள்ளை?” என்றார் அஜந்தா.

‘எப்படி இவர்களால் உடனே தன்னை ஏற்றுக்கொள்ள முடிந்தது?’ என்று இப்போதும் அவனுக்கு அந்தக் கேள்வி தோன்றியது.

அவர்களிடம் அவனால் சகஜமாகப் பேச முடியவில்லை என்பதால் அமைதியாகவே சாப்பிட்டு விட்டு எழுந்தான்.

“இப்போ ஒரு வீடு பார்த்தேன் மாப்பிள்ளை. நீங்க கேட்ட மாதிரி டபுள் பெட்ரூம் ப்ளாட். உங்க ஆபிஸ்ல இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு. அந்த அப்பார்மெண்ட்ல எல்லா வசதியும் இருக்கு. மெயின்டனென்ஸ்க்குத் தனிச் சார்ஜ். சில படங்கள் விளம்பரத்தில் போட்டிருந்தது.

பார்க்க லுக்கா இருக்கு. ஆனாலும் நேரில் பார்த்தால் தான் எப்படி இருக்கும்னு தெரியும். அந்த ப்ளாட் ஓனருக்குப் போன் போட்டு விசாரிச்சேன். ப்ளாட்டைப் பார்க்கணும்னா நேரில் வரச் சொன்னார்.

உங்களுக்கு எப்போ வசதியா இருக்கும்னு சொன்னீங்கனா அப்போ போய்ப் பார்க்கலாம். நீங்களும் எதுவும் வீடு பார்த்து வச்சுருந்தீங்கனா அதையும் கையோட பார்த்துட்டு வந்திடலாம்…” என்றார் வீரபத்ரன்.

‘என்ன அதுக்குள்ள வீடு பார்த்துட்டாரா?’ என்பது போல் தான் அவரைப் பார்த்தான்.

“நான் எந்த முடிவும் பண்ணலை மாப்பிள்ளை. நாம தங்குற வீடு மனசுக்குத் திருப்தியா எப்பவும் உடனே அமைந்து விடாது. இப்போ இருந்தே பார்த்தால் தான் ஏதாவது நல்லதா அமையும்…” அவனின் பார்வை அறிந்தது போல் சொன்னார் வீரபத்ரன்.

அவருக்கும் வேறு வழி இருக்கவில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் தான் இங்கே இருப்பார். எதிர்பாராத மகளின் திடீர் திருமணம் என்றாலும் அவளுக்குச் செய்ய வேண்டியதை சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

அவனுக்கும் அவரின் நிலை புரிந்தது. அடுத்த வாரத்திலிருந்து இருவரும் வேலைக்குச் செல்வதாக இருந்ததால் அவனின் பெற்றோரும் விரைவாகவே தான் வீடு பார்க்க சொல்லியிருந்தனர்.

“நாளைக்குப் போகலாம் மாமா. நான் இன்னும் பார்க்க ஆரம்பிக்கலை. இன்னைக்குப் பார்த்துக் கொஞ்சம் நானும் விசாரிச்சு வைக்கிறேன். நாளைக்கு மொத்தமா பார்க்கலாம்…” என்றான்.

“சரிங்க மாப்பிள்ளை…” என்றார்.

மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அறைக்குள் சென்றான்.

அவனின் அன்றைய பொழுது சற்று நேரம் தூங்குவதிலும், கைபேசியில் வீடு பற்றி விவரம் பார்த்து வீட்டு உரிமையாளர்களுக்குப் போன் செய்து விசாரிப்பதிலேயும் சென்றது.

உத்ரா முடிந்த வரை அன்னை, தந்தையிடமே பேசிக் கொண்டிருந்து விட்டு நேரத்தைக் கடத்தினாள்.

முகிலுடன் தேவையில்லாத வாக்குவாதத்தை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை அவள்.

நேரம் சென்று இரவும் வர இரவு உணவை முடித்து விட்டு நால்வரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.

வீரபத்ரன் முகிலுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க, உத்ரா சோஃபாவிற்குக் கீழே தரையில் அன்னையை அமரச் சொல்லி அவரின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“அப்பாவும் கிளம்பின பிறகு நீங்க இனி தனியா தானே மா இருக்கணும். எப்படி இருப்பீங்க?” என்று வருத்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“எனக்கு என்ன பயம் உத்ரா? பகலில் வேலைக்குப் போனால் ஈவ்னிங் வரப் போறேன். அடுத்த நாளைக்குத் தேவையானதை ப்ரிபேர் பண்ணுவேன். அதுலயே நேரம் ஓடிடும். நைட் தூங்கி எழுந்தால் மறுநாள் ஓட்டம் ஆரம்பம் ஆகிடும்…” என்றார்.

“ஆனாலும் நீங்க தனியா தான் அந்த ஓட்டத்தையும் ஓடணும் இல்லமா? இத்தனை வருஷம் உங்களுக்கு நான், எனக்கு நீங்கன்னு இருப்போம். அப்பா வந்ததும் இன்னும் கொண்டாட்டமா இருக்கும். அதை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.

“அதுவும் முக்கியமா நம்முடைய இந்த நேரம் எப்பவும் ஸ்பெஷல் தானே மா? இந்த நேரத்தை மிஸ் செய்வது தான் ரொம்பக் கஷ்டமா இருக்கு…” என்றாள்.

மாமனாருடன் பேசிக் கொண்டிருந்தாலும் முகிலின் பார்வை அவ்வப்போது உத்ராவின் மீதும் படிந்து மீண்டு கொண்டிருந்தது.

இலகுவாக அன்னையின் மடியில் படுத்துக் கதை பேசிக் கொண்டிருந்த உத்ரா அவனுக்குப் புதிதாகத் தெரிந்தாள்.

அவளின் காரசாரமான பேச்சுகளையே கேட்டுப் பழக்கப்பட்டவன் அவன். இப்போது மெதுவான குரலில் அன்னையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தவளை அவனையும் மீறி அவனின் கண்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

அவள் பேசியது அவனின் காதிலும் விழுந்தது. முக்கியமாகக் கடைசியாகச் சொன்ன ‘இந்த நேரம் ஸ்பெஷல்’ என்ற வார்த்தை அவனை இன்னும் கூர்மையுடன் கவனிக்க வைத்தது.

“எனக்கும் இந்த நேரம் மிஸ் ஆவது கஷ்டம் தான் உத்ரா. அதுக்காக என்ன பண்ண முடியும்? பழகிக்க வேண்டியது தான்…” என்றார் அஜந்தா.

‘அப்படி என்ன இந்த நேரம் ஸ்பெஷல்?’ என்ற கேள்வியைக் கண்களில் பிரதிபலித்தான் முகில்வண்ணன்.

அவனின் பார்வையைக் கண்ட வீரபத்ரன், “இந்த நேரம் தான் நான் போன் போடுவேன் மாப்பிள்ளை. என்கிட்டே பேசிட்டு அம்மாவும், மகளும் கதை பேசிட்டு தான் தூங்க போவாங்க…” என்று விவரம் தெரிவித்தார்.

“ஓ, சரி மாமா…” என்று வெளியே சொன்னாலும், ‘தினமுமா?’ என்ற கேள்வி அவனின் மனதில் தோன்றியது.

அவர்களின் பேச்சு தொடர தன் கவனத்தை அங்கே வைத்தான்.

“ஆமா அப்பா, நீங்க பேசுற அன்னைக்கு மட்டும் இன்னும் எக்ஸ்ராவே கொஞ்ச நேரம் அம்மாவும், நானும் பேசிட்டு இருப்போம் பா. நீங்க பேச முடியாதப்ப உங்களைப் பத்தியும், அன்னைக்கு என்னென்ன நடந்ததுன்னும் பேசிட்டு இருப்போம். அதிலேயும் தினமும் இந்த நேரம் அம்மா மடியில் படுத்துட்டு இப்படிக் கதை பேசுறதே தனிச் சுகம் தான்…” என்ற உத்ரா அன்னையின் மடியில் சுகமாக முகம் புதைத்தாள்.

மகளின் தலையை வாஞ்சையுடன் கோதிய அஜந்தா, “அதுவும் கடந்த ஒரு மாசமா நம்ம பொண்ணு என் மடியில் தான் அவளோட சோகத்தை எல்லாம் மறைச்சுக்கிட்டாள்ங்க…” என்று கணவனிடம் சொல்லிவிடும் வேகத்தில் சொல்லிவிட்டவர், அப்போது தான் முகிலும் அங்கேதான் இருக்கிறான் என்ற எண்ணம் வர, பதட்டத்துடன் வாயை மூடிக் கொண்டார்.

அவர் சொன்னதை முகில் கவனித்தாலும் கவனியாதது போல இருந்து கொண்டான்.

அவன் கவனிக்கவில்லை என்றதும் நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டார் அஜந்தா.

“சரிமா, நேரமாச்சுப் போய்த் தூங்கு. நாம நாளைக்குப் பேசுவோம்…” என்றார்.

‘அப்போ எனக்குக் கல்யாணம் முடிவானதால் இவள் சோகமா இருந்தாளா?’ என்ற கேள்வி தோன்ற உத்ராவை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

உத்ரா அன்னைக்கும், தந்தைக்கும் இரவு வணக்கம் சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல, முகிலும் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

அறைக்குள் சென்ற உத்ரா மேஜை மீது வைத்திருந்த தன் கைபேசியை எடுத்து அதுவரை அணைத்து வைத்திருந்ததை ஆன் செய்து வைத்துக் கொண்டிருக்க, அதைக் கவனித்தவன்,

“அதை எதுக்கு ஆப் செய்து வச்ச?” என்று கேட்டுக் கொண்டே படுக்கையில் அமர்ந்தான் முகில்.

“எப்பவும் செய்வது தான். நாங்க வெளியே பேசியதை கவனித்து இருப்பீங்களே? தினமும் நைட் அது எங்களுக்கான நேரம். அந்த நேரத்தில் தேவையில்லாத போன் எதுவும் வந்து தொந்தரவு பண்ணிட கூடாதுன்னு ஆப் பண்ணிடுவேன். அம்மா போனில் தான் அப்பாகிட்ட பேசுவோம்…” என்று அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டே எதுவும் முக்கியமான செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு மீண்டும் மேஜையில் வைத்துவிட்டுப் படுக்க வந்தாள்.

அறை நடுவில் கட்டில் போடப்பட்டிருக்க முகில் ஒருபக்கம் அமர்ந்திருக்க, இன்னொரு பக்கம் சென்று படுத்துக் கொண்டாள்.

படுத்திருந்தவளையே யோசனையுடன் பார்த்தான் முகில்வண்ணன்.

‘தினமும் அந்த நேரத்தில் போனை ஆப் செய்து வைத்து விடுவாளா? என்ன சொல்கிறாள் இவள்? நான் கமலினியிடம் பேசும் போதெல்லாம் அந்த நேரத்தில் தானே பேசினேன். அப்போ நைட் நான் அந்த நேரம் கமலினியிடம் பேசும் போதெல்லாம் இவளிடமிருந்து அழைப்பு வருவதாகச் சொல்லி அவள் தன் அழைப்பை துண்டித்தாளே? அப்போ அது என்ன?’ என்று தோன்ற குழப்பத்துடன் அருகில் இருந்தவளைப் பார்த்தான்.

உத்ரா அந்தப் புறமாகத் திரும்பிப் படுத்திருக்க, தானும் மெல்ல படுக்கையில் சாய்ந்தவன், “தினமும் நைட் நீங்க பேமிலியா பேசும் நேரத்தில் போனை ஆப் பண்ணிடுவியா?” என்று கேட்டான்.

அவனின் புறம் லேசாகத் திரும்பியவள், “ஆமா, எதுக்குக் கேட்குறீங்க?” என்று கேட்டாள்.

“ஒன்னுமில்ல. சும்மா தான்…” என்றவன் அவளுக்கு முதுகை காட்டிக் கொண்டு படுத்துவிட்டான்.

‘எதுக்குக் கேட்டுருப்பான்?’ என்பது போல் அவனைப் பார்த்த உத்ரா பின் அவளும் திரும்பிக் கொண்டாள்.

‘அப்போ அந்த நேரத்தில் இவள் அவளுக்குப் போன் செய்யவே இல்லையா? அவள் தான் இவள் பேரை சொல்லி ஏதோ விளையாட்டுக் காட்டியிருக்கிறாளா?’ என்ற கேள்வி தோன்ற சிந்தனையில் ஆழ்ந்தான் முகில்வண்ணன்.