22 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 22

தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த போதும், தேன்மலருக்கு ராமரின் வன்ம பார்வை நினைவில் வந்து போனது.

அன்று தன்னிடம் அவன் தவறாக நடக்க முயன்று, வைரவேல் தன்னைக் காப்பாற்றிய பிறகு மீண்டும் இன்று தான் ராமரை காண்கிறாள்.

கை கால் உடைந்து மருத்துவமனையில் கிடந்தவனை, அவன் மனைவி பார்க்க மாட்டேன் என்று சொல்லி விட, அவனின் பெற்றோர் பெரிய பிரச்சனையே செய்திருந்தனர்.

மீண்டும் வந்து கணவனைப் பார்க்க வேண்டுமென்றால் இனி அவன் எந்தப் பெண்ணிடமும் வாலாட்ட கூடாது. என்னுடன் வேறு ஊருக்கு பிழைப்பிற்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள்.

அவனின் பெற்றோரும் மருமகள் வந்தால் போதும் என்று சம்மதம் சொல்லியிருந்தனர்.

கணவனும் சம்மதம் சொன்ன பிறகே வருவேன் என்று அவள் மேலும் அடம்பிடிக்க, அவனின் பெற்றோர் மகனிடம் பேசி சரி சொல்ல வைத்தனர்.

அதன் பிறகே மருத்துவமனைக்கு ராமரை பார்க்க வந்தாள் அவனின் மனைவி.

ஒடிந்த கை சில மாதங்களில் சரியாகிவிட, உலக்கையால் அடிவாங்கிய கால் மட்டும் சரியாக நீண்ட மாதங்கள் ஆகின. எழுந்து நடமாட ஆரம்பித்த பிறகும் கால் இழுத்து இழுத்து தான் நடக்க முடிந்தது.

தன் காலை ஒவ்வொரு முறை இழுத்து நடக்கும் போதும் வைரவேல் மீதும், தேன்மலரின் மீதும் வன்மத்தை வளர்த்துக் கொண்டான் ராமர்.

குணமாகி வந்த பின் மனைவியுடன் வேறு ஊருக்கு சென்று விட்டவன், மீண்டும் இன்று தான் இந்த ஊருக்கு வந்திருக்கிறான்.

அதுவும் இவ்வூரில் ஒரு நிலம் அவன் பெயரில் இருக்க, அதை விற்று விட்டு போக வந்திருந்தான்.

அவன் தான் வீட்டிற்குள் வந்து விட்டு போனானோ என்று பயந்த தேன்மலர் உடனே ஓடி சென்று கணவனை எழுப்பினாள்.

“யோவ், வெரசா எழுந்திருய்யா…” பதட்டமாக அவள் எழுப்ப, கண்களைத் திறந்து பார்த்தவன்,

“என்ன விடிஞ்சிருச்சா?” என்று கேட்டான்.

“இல்லயா, வூட்டுக்குள்ளார யாரோ வந்துட்டுப் போனாங்க. யாருன்னு தெரியலை…” என்றாள்.

“என்ன புள்ள சொல்ற?” என்று படுக்கையிலிருந்து பட்டென்று எழுந்து அமர்ந்தான்.

“ஆமாயா, நா படுத்துருந்த மச்சு வாசலுல இருந்து யாரோ வேகமாகப் போனாக. வெளிய வந்து பார்த்தா வூட்டுக் கதவு தொறந்து கிடக்கு…” என்றாள்.

“நா இங்கன படுத்துருக்கும் போது நம்ம வூட்டுக்குள்ளார யாரு புள்ள வர முடியும்? கனா எதுவும் கண்டியா?” என்று கேட்டான்.

“கனா கண்டா கதவு எப்படியா தன்னால தொறக்கும்?”

“நீ ராவு நல்லா பூட்டிட்டு படுத்தியா?” என்று கேட்டான்.

“நா பூட்டிப் போட்டு தேன் படுத்தேன். ஆனா இப்ப…”

“என்ன?”

“அந்த ராமரு பய, என்னையவே முறைச்சுப் பார்த்துட்டு ரோட்டுல அந்த நேரம் போனான்யா…” என்றாள்.

“ராமரா?”

“ஆமா, அவந்தேன்…”

“அவந்தேன் இப்ப இந்த வூருலயே இல்லையே?”

“இல்லயா, இப்ப செத்த நேரத்துக்கு முன்ன போனான். நா பார்த்தேன். அவந்தேன் வூட்டுக்குள்ளார வந்துருப்பானோ?” என்று பயத்துடன் கேட்டாள்.

“நா இங்கன இருக்கும் போது எப்படி வந்துருக்க முடியும்? பழசு உமக்கு நியாபகம் வந்துருக்கும். அது தேன் அவன் போலத் தெரிஞ்சிருக்கு. அவன் இந்த வூருலயே இல்ல. நீ போய்த் தூங்கு. நீதேன் ராவு சரியா கதவ அடைச்சுருக்க மாட்ட. இப்ப நல்லா பூட்டிட்டு படு…” என்றான் வைரவேல்.

“இல்ல நா பார்த்தேனே?” என்று தேன்மலர் மீண்டும் சொல்ல,

“அதோ பாரு அவன் வூட்டுக் கதவு வெளியே பூட்டு தொங்குது…” என்று அங்கே இருந்தபடியே ராமர் வீட்டுக் கதவை காட்டியவன், “கனவாத்தேன் இருக்கும். நீ பயப்படாம உள்ளார போ. நா இப்படி வாசலை மறைச்சு கட்டுல போட்டுக்கிறேன். என்னைய தாண்டி எவனும் வர முடியாது…” என்றவன், உடனே எழுந்து கட்டிலை வாசலை மறைத்துப் போட்டான்.

அவளோ ராமர் வீட்டுக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கதவு பூட்டி இருக்க, அப்போது கனவாகத் தான் இருக்குமோ? என்று நினைத்த வண்ணம் வீட்டிற்குள் சென்று கதவை நன்றாகப் பூட்டிக் கொண்டாள்.

ஆனால் காலை வயலுக்கு வரும் வழியில் அந்த ராமரை பார்த்தாள் தேன்மலர்.

அதில் மீண்டும் அரண்டு போனாள். அப்போது தான் கண்டது கனவு இல்லை. அவன் தான் வீட்டிற்குள் வந்து சென்றிருக்கிறான் என்று உறுதியாகி விட, அவளுக்கு இப்போதும் உடல் லேசாகச் சிலிர்த்துக் கொண்டது.

காலையில் தான் ராமரை பார்த்ததைக் கணவனிடம் சொல்லலாம் என்றால், அவன் டவுன் வரை சென்றிருந்தான்.

வந்ததும் சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தாள்.

மதியம் வீட்டில் சென்று சாப்பிட்டு விட்டு மீண்டும் வந்து பூக்களைப் பறிப்பது அவளின் வழக்கம்.

அன்றும் மதியம் வரை பூக்களைப் பறித்து விட்டு, மதியம் உணவு உண்ண வீட்டிற்குக் கிளம்பினாள்.

ராசு வயலுக்குள் எங்கோ சுற்றிக் கொண்டிருந்தது. அதனால் தான் மட்டும் தனியாக வீட்டிற்குச் செல்ல வரப்பில் சென்று கொண்டிருந்தாள்.

வேலை ஆட்கள் சற்று முன் தான் பூக்களைப் பறித்துப் போட்டு விட்டு, சாப்பிட வீட்டிற்குச் சென்றிருந்தனர். அதனால் இரண்டு தோட்டத்திலேயும் ஆட்கள் வேறு யாரும் இருக்கவில்லை.

அப்போது திடீரென அவளின் பின்னால் இருந்து முதுகில் கை வைத்து யாரோ தள்ள, ‘அம்மா…’ என்று அலறிய படி தலைகுப்புற வயலுக்குள் விழுந்தாள் தேன்மலர்.

“வேசி மவளே… உம்மை…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவள் சுதாரிக்கும் முன் குப்புற கிடந்தவளின் மேல் பாய்ந்தான் ராமர்.

“டேய் நாயே… எம்மை விடுடா…” என்று தேன்மலர் திமிர,

அவளை எழுந்திருக்க விடாமல் கையைத் தன் கைகளாலும், காலை கால்களாலும் கிடுக்குப்பிடி போட்டு வளைத்துக் கொண்டவன், “ராசா மாதிரி சுத்தி வந்த வூருக்குள்ளாரயே எம்மை நொண்டிப் பயலா சுத்தி வர வச்சுட்டான்ல உம் புருசன். உம்மைச் சும்மா விட மாட்டேன்டி.

நீ பெரிய பத்தினியோ? வேசி தானேடி நீயெல்லாம். உம்ம கற்ப காப்பாத்துறானோ அவன்?” என்றவன் அவளை அழுத்தி பிடித்து அவள் மேல் குனிய,

தேன்மலர் தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடினாள்.

“விடுடா… விடுடா எம்மை. பேடிப்பயலே. பொம்பளகிட்ட வீரத்த காட்டுற பொட்டப்பயலே…” என்றாள்.

“யாருடி பொட்டப்பய? நானா?” என்று ஆத்திரத்துடன் கத்தியவன், “உம் புருசன் தாண்டி பொட்டப்பய. அதுதேன் உம்மை வூட்டுக்குள்ளார போட்டுட்டு, அவன் வெளியே கிடக்குறான். ஒருவேளை அவன் உம்மை வேசியாத்தேன் நினைக்கிறான் போல. வேசி மேல கை வைக்கக் கூடாதுன்னு தேன் உம்மைத் தொடாம இருக்கானோ?” என்று நக்கலாகக் கேட்டவன் அவளின் முகத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றான்.

“எச்சக்கள நாயே…” என்று கத்திய தேன்மலர் அவனிடம் ஆவேசமாக ஏதோ சொல்லி விட்டு உடனே, “ராசு… எய்யா ராசு…” என்று ஓங்கி குரல் கொடுத்தாள்.

“ஒ நாயி இங்கன எங்கனயும் காணோம். அது தெரிஞ்சி தானே உம்மேல பாய்ஞ்சிருக்கேன். இன்னைக்கு உம்மை நாறு நாறா கிழிக்காம விடப் போறது இல்லைடி…” என்றவன் ஒரு கையால் அவளைத் தன் பக்கம் திருப்பினான்.

அந்த நேரத்தைப் பயன்படுத்தி வேகமாகத் திரும்பியவள், திரும்பிய வேகத்தில் காலை ஓங்கி அவனை எத்த, அவளை விட்டு தள்ளிப் போய் விழுந்தான்.

மீண்டும் ஆத்திரத்துடன் அவள் மேல் அவன் பாயப்போக, அதற்குள் அவனின் மீது பாய்ந்திருந்தது ராசு.

“ஏய், ச்சீ நாயே…” என்று அவன் ராசுவை தள்ள முயல, ராசுவோ ஏற்கனவே அவன் தன்னைப் பலமுறை ஏமாற்றிய கோபத்தை எல்லாம் ஒட்டு மொத்தமாக அவனிடம் காட்ட ஆரம்பித்து அவனைக் கடிக்க ஆரம்பித்தது.

“அவனை விடாதீர் ராசு. கடிச்சு கொதறும், அந்தப் பொம்பள பொறுக்கி நாய…” எழுந்து நின்று தேன்மலர் கத்த, இன்னும் வேகத்துடன் அவன் மேல் பாய்ந்தது ராசு.

“அய்யோ! அம்மா! ஏய்!” என்று காடே அதிரும் வண்ணம் கத்த ஆரம்பித்தான் ராமர்.

“ஏ புள்ள, என்னாச்சு? என்ன சத்தம் அது?” அப்போது தான் வயலுக்கு வந்து கொண்டிருந்த வைரவேல் ஓடி வந்தபடியே கேட்டான்.

“ஒரு தெரு நாய் இன்னைக்குத்தேன் அகப்பட்டுச்சுயா. அதுதேன் நம்ம ராசு அந்த நாயை நல்லா கவனிச்சுட்டு இருக்கு…” என்று ராமரை ராசு கடித்துக் குதறுவதைத் திருப்தியுடன் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

“தெரு நாயா?” என்று கேட்ட படியே அங்கே வந்தவனும் ராமரையும், ராசுவையும் பார்த்து அதிர்ந்து, அவளைப் பார்த்தான்.

அவள் தலை எல்லாம் கலைந்து, உடையில் எல்லாம் மண் ஒட்டியிருப்பதைப் பார்த்துப் பதறிப் போனான்.

“என்னாச்சு புள்ள, இப்படி இருக்க?”

“அந்த நாய் இன்னைக்கும் எம் மேல பாய்ஞ்சதுயா. அதான் நம்ம ராசு அவன் மேல பாய்ஞ்சிருச்சு…”

“என்ன இன்னைக்குமா?” என்று ஆத்திரத்துடன் கேட்டவன், “ராசு நீ விலகு. நா அவனைப் பார்த்துக்கிறேன்…” என்றான்.

அவன் சொன்னது புரிந்தது போல் உடனே ராமரை விட்டு விலகியது ராசு.

அது விலகிய வேகத்தில் துள்ளிக் கொண்டு எழுந்த ராமர், கண் இமைக்கும் நேரத்தில் தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து அங்கே நின்றிருந்த தேன்மலரை குத்தப்போனான்.

“ஏ மலரு…” என்று கத்தியபடி அவனின் செயலை உணர்ந்து மனைவியைப் பிடித்து இழுத்து அணைத்தபடி காலை ஓங்கி ராமரை எத்தினான் வைரவேல்.

நொடியில் இவை நடந்து விட, ராமர் கீழே விழுந்து மீண்டும் கத்தியுடன் எழுந்தான். அதற்குள் சுதாரித்து மனைவியை விலக்கி நிறுத்திவிட்டு ராமரின் மேல் பாய்ந்து கத்தி இருந்த அவனின் கையைப் பிடித்து மடக்கி கத்தியைக் கீழே விழ வைத்தவன், அவனை மீண்டும் கீழே தள்ளி, ராமரின் உயிர் நாடியிலேயே ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.

ராமர் அலறிய அலறலே இனி அவன் அவனின் மனைவியைக் கூட ஆசையுடன் நாட முடியாது என்பதை எடுத்துரைப்பது போல் இருந்தது.

“எம் பொஞ்சாதி மேலே திரும்பத் திரும்பக் கை வைக்கத் துணிஞ்ச உம்மை எல்லாம் உசுரோட விட்டு வைக்கக் கூடாதுடா. யார் மேல கை வைக்கிற? எம் பொஞ்சாதி மேலயா?” என்று கேட்டுக் கொண்டே மீண்டும் ஒரு மிதி மிதித்தான்.

கத்தியின்றி ரத்தமின்றி அங்கே ஓர் அறுவை சிகிச்சை நடந்தேறியது.

ராமர் அலறிக் கத்தினான்.

“அவனை இழுத்து நம்ம வயலுக்கு வெளிய போடுய்யா. அவன் மூச்சுக் காத்து கூட இங்கன படக்கூடாது…” என்றாள் தேன்மலர்.

மனைவியின் ஆணையை நிறைவேற்றுபவன் போல், ராமரை தரதரவென்று இழுத்துப் போய் வயலுக்கு வெளியே எறிந்தான் வைரவேல்.

ராமர் வலியில் துடித்துச் சுருண்டு போய்க் கிடக்க, அவனை வெற்றிப் பார்வை பார்த்தபடி வீடு நோக்கி நடந்தாள் தேன்மலர். ராசுவும் அவள் பின்னால் ஓடியது.

“இனி நீ எம் பொஞ்சாதியைப் பத்தி கனவுல நினைச்சா கூட உம்மை உசுரோட விட மாட்டேன்…” என்று ராமரை எச்சரித்து விட்டு மனைவியின் பின் சென்றான் வைரவேல்.

விறுவிறுவென்று வீட்டை நோக்கி நடந்த மனைவியின் அருகில் ஓடியவன், அவள் கையைப் பிடித்து நிறுத்தி, “என்னைய மன்னிச்சுப் போடு புள்ள. ராவே அந்தப் பயல பார்த்தன்னு சொன்ன. அப்பவே நா என்ன ஏதுன்னு பார்த்துருக்கணும். விட்டுப்போட்டேன். என்னைய மன்னிச்சுடு…” என்றான்.

அவளோ பதில் சொல்லாமல் கணவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்.

அவளின் பார்வையின் அர்த்தம் புரியாமல், “என்ன புள்ள?” எனக் கேட்டான்.

“நா உம்ம பொஞ்சாதியா?” அழுத்தமாகக் கேட்டாள்.

“அதுல என்ன சந்தேகம்?” அதை விட அழுத்தமாக அவன் பதில் வந்து விழுந்தது.

“ஓ!” என்றவள் அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு விறுவிறுவென்று நேராக வீட்டின் பின் பக்கம் சென்றாள்.

கிணற்றில் இருந்து சரசரவென்று நீரை இறைத்தவள், “ஆத்தா, ஏ உடுப்ப கொஞ்சம் எடுத்தார முடியுமா? அசிங்கத்தை மிதிச்சுப் போட்டேன். குளிக்கணும்…” என்று வீட்டிற்குள் குரல் கொடுத்தாள்.

“சரி தாயி…” என்று உள்ளிருந்து அப்பத்தாவின் குரல் வந்ததும் வாளியை தூக்கிக் கொண்டு குளியலறை நோக்கி சென்றாள்.

அவளை இடைமறித்த வைரவேல், “எதுக்குப் புள்ள அப்படி ஒரு கேள்வி கேட்ட?” என்று கேட்டான்.

“என்ன கேள்வி?” கேள்வியாக உயர்ந்தது அவளின் புருவம்.

“எம் பொஞ்சாதியான்னு…”

“இல்ல, நா இந்த வூட்டுக்கு அடைக்கலம் நாடி வந்த வெறும் யாரோ ஒரு ‘புள்ள’யோன்னு நினைச்சேன்…” என்று அந்தப் புள்ளயில் ஓர் அழுத்தம் கொடுத்து விட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் அவனைத் தாண்டி குளியலறைக்குள் சென்றாள் தேன்மலர்.

அவள் சொல்லி சென்றதை கேட்டு விக்கித்து நின்றான் வைரவேல்.

உள்ளே சென்ற தேன்மலர், ராமர் தீண்டிய இடத்தை அழிப்பது போல் தேய்த்துக் குளிக்க ஆரம்பித்தாள்.

அன்று இரவு கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள் தேன்மலர்.

அப்பத்தா சாப்பிட்டு விட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்தார்.

தேன்மலர் வாசல் படியில் சென்று அமர்ந்து காத்திருந்தாள்.

இன்று அவன் வழக்கமாக வீடு வரும் நேரத்தை தாண்டி சென்று கொண்டிருக்க, தேன்மலர் யோசனையுடன் வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராசு அவளுக்குக் கீழ் இருந்த இன்னொரு வாசல் படியில் படுத்துக் கிடந்தது.

“என்ன தாயி, இவனை இன்னும் காணோம். உங்கிட்ட எதுவும் சொல்லிப் போட்டு போனானா?” என்று அப்பத்தா கேட்க,

“இல்ல ஆத்தா…” என்றாள்.

“இந்தப் பயலுக்குப் புத்தி எங்குட்டுத்தேன் புல் மேய போகுமோ? ஆ.. ஊ..னா வூட்டுக்கு வர மாட்டேங்கிறான்…” என்று புலம்பிக் கொண்டார்.

இன்று மதியம் தான் கேட்ட கேள்வியில் கோவித்துக் கொண்டு இன்றும் மோட்டார் அறைக்குச் சென்று விட்டானோ என்ற யோசனை அவளிடம்.

அதை அப்பத்தாவிடம் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“எய்யா ராசு, அவரு மோட்டார் அறைல இருக்காரான்னு போய்ப் பார்த்துப் போட்டு வாரும்…” என்று மெல்லிய குரலில் ராசுவிடம் சொன்னாள்.

அதுவும் உடனே எழுந்து ஓடியது.

ராசு கொண்டு வர போகும் செய்திக்காக அவள் காத்திருக்க, சென்ற ராசுவோ, போன வேகத்தில் திரும்பி வந்தது.

“என்ன ராசு அதுக்குள்ளார வந்துட்டீரு?” என்று அவள் கேட்டதும், அவள் சேலையைப் பிடித்து இழுத்தது.

“என்ன ராசு என்னைய எதுக்குக் கூப்பிட்டீரு?” புரியாமல் கேட்டாள்.

அதுவோ நீ வந்தே ஆக வேண்டும் என்பது போல் தொடர்ந்து இழுக்க, “சரி, இரும். வாறேன்…” என்றவள், “ஆத்தா, இதோ செத்த நேரத்துல வந்துடுறேன்…” என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்து விட்டு ராசுவின் இழுப்பிற்கு நடக்க ஆரம்பித்தாள்.

அவர்களின் இரண்டு வயலுக்கும் நடுவே இருந்த வரப்பிற்கு அவளை இழுத்துச் சென்றது ராசு.

“இங்கன எதுக்குயா இழுத்துட்டு வர்றீரு?” என்று கேட்டுக் கொண்டே ராசுவுடன் சென்றவள், வரப்பில் கிடந்த உருவத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.

அங்கே வரப்பில் அலங்கோலமாக விழுந்து கிடந்தான் வைரவேல்.

“யோவ்…” என்று கணவனின் அருகில் ஓடியவள் அவனின் நிலையைக் கண்டு அதிர்ந்து போனாள் தேன்மலர்.