21 – ஞாபகம் முழுவதும் நீயே

அத்தியாயம்– 21

அடுத்த வாரம் தான் கனடாவில் இருந்து வருவதாக இருந்த தன் மாமா அமுதவனை இன்றே கண்டதில் ஆச்சரியமாக வரவேற்ற பவ்யாவிற்குக் கனகதாராவை பார்த்ததும் தான் அவர்கள் யாரிடமும் சில நாட்களாகப் பேசாமல் தவிர்த்தது ஞாபகத்திற்கு வந்தது.

அதனால் தன் அத்தையைப் பார்த்ததும் உறைந்து போனவள் தெளியும் முன் தாரா அறைந்து விட, அதிர்ந்து கன்னத்தில் கை வைத்தாள் பவ்யா.

இதை எதிர்பார்க்காத அமுதவனும் “ஹேய் தாரா…! என்ன காரியம் பண்ற…?” என்று கடிந்து கொண்டே மனைவியைத் தன் பக்கம் இழுத்தார்.

“விடுங்க என்னை…! இவளை இன்னும் இரண்டு அடி போடுறேன். என்ன தைரியம் இருந்தா இருபது நாளா நாம போட்ட ஒரு போனை கூட அட்டன்ட் பண்ணாம இருப்பா? இன்னும் இரண்டு போட்டா தான் என் கோபம் தீரும்” என்று மீண்டும் பவ்யாவை அறைய போக, சட்டென மனைவியின் கையைப் பிடித்துத் தடுத்த அமுதவன் “முதலில் உள்ளே போ…!” என்று வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

தாரா அடித்ததில் கன்னத்தில் கைவைத்து அயர்ந்தபடி இன்னும் பவ்யா நின்று கொண்டிருக்க, உள்ளே வந்த தாரா “சொல்லுடி போன் போட்டா எடுக்க மாட்டியா? போனை எடுக்காம இருந்து நம்மளை சீக்கிரம் கிளம்புற மாதிரி செய்துட்டு நிதானமா கேள்வி கேட்டுகிட்டு இருக்கா” என்று கோபம் குறையாமல் பேசினார் கனகதாரா.

“சொல்லும்மா… ஏன் போனை எடுக்கலை…?” என்று அமுதவனும் கேட்டார்.

“நீங்க ஏன் அத்தை நவிதா மூலமா என்கிட்ட அப்படிப் பேச சொன்னீங்க?” என்று அமைதியாகக் கேட்டாள் பவ்யா.

“உன் வாழ்க்கையில் ஒரு நல்ல முடிவு வரணும்னு தான்” என்று தாரா சொல்ல…

“ப்ச்ச்…! திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க அத்தை. நீங்க என் புருஷனை டிவோர்ஸ் பண்ண சொல்லி பேச சொன்னது கண்டிப்பா நல்ல விஷயம் இல்லை. என் புருஷனை டிவோர்ஸ் பண்றது என் உயிரையே விடச் சொல்றதுக்குச் சமம்” என்று அழுத்தமாகச் சொன்னாள்.

பவ்யாவின் இந்த வார்த்தைகள் அறையில் இருந்த வினய்யின் காதில் விழ அவன் மனதில் சாமரம் வீசியது போல இருந்தது.

அவனுக்கு அதற்கு முன் மனைவி அவள் அத்தையிடம் அறை வாங்கியது தெரியாது. அவர்கள் வரும் போது அவன் குளியலறையில் இருந்ததினால் தண்ணீர் சத்தத்தில் அவனுக்குக் கேட்கவில்லை.

அவன் வெளியே வந்த போது கேட்ட பேச்சுச் சத்தத்தில் ‘யார் வந்திருக்கிறார்கள்?’ என்று எண்ணமிட்ட படி அறைவாயிலுக்கு வரும் முன் பவ்யாவின் பேச்சுக் காதில் விழுந்தது.

‘என்ன டிவோர்ஸ்?’ என்று முதலில் திகைத்தவன் அதைத் தொடர்ந்து ‘டிவோர்ஸ் பண்ணுவது தன் உயிரை விடுவதற்குச் சமமானது’ என்று பவ்யா சொல்லவும் அவனுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

அன்று தன்னிடம் வர முடிவெடுத்தற்குக் காரணம் கவின் மட்டுமே என்று சொல்லவும், அப்போ அவளுக்குத் தன்னிடம் வர முழு விருப்பம் இல்லையா? என்னை மனதளவில் வெறுத்து விட்டாளா? பிள்ளைக்காக மட்டுமே தன்னைத் தேடி வர இருந்தாளா? என்று மனதில் என்னென்னவோ நினைத்து மிகவும் வேதனை பட்டிருக்கின்றான்.

அன்று வேதனையைத் தந்தவளே அந்த வேதனையை இன்று துடைத்தெறிந்து விட்டாள். அவன் வெளியே வரும் முன் மீண்டும் வெளியே அவனைச் சார்ந்த பேச்சு தொடரவும், மகனுடன் உள்ளேயே இருந்து விட்டான்.

“சும்மா பேச்சுல இப்படிப் பேசுறதுனால ஒரு பிரயோஜனமும் இல்லை பவ்யா. அப்படி உயிரா நினைக்கிறவ உன் பழைய பயத்தை எல்லாம் தூக்கி போட்டுட்டு உன் புருஷன் கூடப் போய் வாழ்ந்திருக்கணும்.

அதை விட்டுட்டுப் பிள்ளையை வச்சுக்கிட்டு உன் வாழ்நாள் எல்லாம் தனியா காலத்தை ஓட்ட போறீயா? அதுக்கா உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சோம்? ஒன்னு நீ உன் புருஷன் கூடப் போய் வாழணும். இல்லனா டிவோர்ஸ் பண்ணிட்டு வேற இங்கயே இருக்குற ஆளை கல்யாணம் பண்ணிக்கோ” என்றார்.

அவரின் பேச்சில் கோபமடைந்த பவ்யா ஏதோ சொல்ல போக அதற்குள் தன் பக்கம் மனைவியைத் திருப்பிய அமுதவன் “என்ன பேசுற தாரா…? பவ்யா மனசு மாறி அவ புருஷன் கூடப் போய்ச் சேரணும். அதுக்கு ஒரு டிராமா போட போறேன்னு சொல்லிட்டு, இப்ப என்ன வேற கல்யாணம் அது இதுன்னு பேசுற?” என்று மனைவியின் நாடகத்தைப் போட்டு உடைத்தார்.

அவர் பேச்சில் அதிர்ந்த பவ்யா “என்ன நான் என் புருஷன் கூடச் சேர தான் டிராமா போட்டீங்களா? ஆனா நவிதா என்கிட்ட என்னென்னமோ பேசினாளே அது எல்லாம் என்ன?” என்று கேட்டாள்.

“ப்ச்ச்…! இப்படியா போட்டு உடைப்பிங்க. இனி இவ என்னைக்குத் தன்னை மாத்திகிட்டு அவ புருஷன் கூடப் போய் இருப்பாளோ? வேற கல்யாணம்னு பேசினா அவ கொஞ்சம் மாற முயற்சி பண்ணுவானு நினைச்சேன். உங்களை யாரு இப்போ உண்மையைச் சொல்ல சொன்னது” என்று கணவனைக் கடிந்தவர் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்.

தாரா பேசும் போதே அவரின் கண்கள் கலங்கி போனது. தலையில் கைவைத்து குனிந்து அமர்ந்திருந்தவர் “போச்சு..! எல்லாம் போச்சு…! நான் டிராமா போட்டும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இனி இவ என்னைக்கு மனசு மாற? என்னைக்கு நான் வளர்த்த பிள்ளையோட சந்தோஷமான வாழ்க்கையைப் பார்க்க?” என்று அழுகையுடன் புலம்ப ஆரம்பித்தார்.

அவர் அழுகையினால் பவ்யாவிற்கு அவர் செய்ததின் எண்ணம் புரிய அவரைச் சமாதானம் செய்யப் போனாள்.

ஆனால் அதற்கு முன் “மாப்பிள்ளை நீங்க எப்போ வந்தீங்க?” என்ற அமுதவனின் ஆச்சரியமான கேள்வியைக் கவனித்துச் சட்டெனத் தாரா தலையை நிமிர்த்திப் பார்க்க, அவரின் கண்கலங்களின் ஊடாகத் தெரிந்த உருவத்தில் வேகமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தார்.

வினய்யை அங்கே பார்த்த அமுதவனுக்கு ஆச்சரியம் என்றால், கனகதாராவிற்கு மயக்கமே வரும் போல இருந்தது.

“வாங்க சித்தப்பா..! நான் வந்து நாலு நாள் ஆச்சு..” என்றவன் “என்னாச்சுப் பவி…? எதுக்குச் சித்தி அழுகிறாங்க?” என்று தான் ஒன்றுமே அவர்கள் பேசிக் கொண்டதை கேட்காதது போலக் கேட்டான்.

அவன் கேள்வியில் கணவனின் முகத்தைப் பார்த்த பவ்யாவிற்கு இதோ இருக்கிற அறையில் இருந்தவனுக்கு இவர்கள் பேசியது கேட்காமலா இருந்திருக்கும்? என்ற சந்தேகம் தோன்றியது.

ஆனால் அதற்கு முன் அவளின் கன்னத்தைப் பார்த்து விட்ட வினய் “என்ன பவி…. கன்னம் இப்படிச் சிவந்திருக்கு?” என்று பதறி கேட்க,

இப்போது ‘ஐய்யோ…! மாப்பிள்ளை வந்தது தெரியாம அடிச்சுட்டோமே’ என்று கைகளைப் பிசைந்தார் தாரா.

பவ்யா பதில் சொல்லாமல் போகவும் திரும்பி வந்திருந்த இருவரையும் பார்த்தான். தாரா நின்றிருந்த நிலையிலேயே அவர் தான் அடித்திருக்க வேண்டும் என்று யூகித்தவன், “என்ன சித்தி இது? பவியை ஏன் அடிச்சீங்க?” கோபமாகக் கேட்டான்.

“அது வந்து… அது வந்து மாப்பிள்ளை…” என்று சொல்ல முடியாமல் தடுமாறினார். என்ன இருந்தாலும் வீட்டு மாப்பிள்ளை ஆகிற்றே? தயக்கம் தன்னால் வந்து ஒட்டிக்கொண்டது.

அமுதவனும் ஏதோ சமாதானமாக வினய்யிடம் பேச வர “ப்ச்ச்…! என் அத்தை என்னை அடிப்பாங்க. இல்லைனா கொஞ்சுவாங்க. நீங்க இதில் தலையிடாதீங்க” என்று முந்திக்கொண்டு பதில் சொன்னாள் பவ்யா.

அதில் வினய்க்கு முகம் விழுந்து விட… அங்கிருந்து செல்ல போனான்.

அதைக் கண்டு “என்ன பேசுற பவ்யா? மாப்பிள்ளை கிட்ட இப்படியா பேசுவ?” என்று அவளைக் கடிந்து கொண்ட தாரா “ஸாரி மாப்பிள்ளை… பவ்யாவை அடிச்சது தப்பு தான். ஆனா அவ என் மேல இருந்த கோபத்தில் இருபது நாளா எங்க போனையே எடுக்கலை. அவ பேசாம என்னால அங்க இருக்க முடியல. அதான் என் பொண்ணு வீட்டில் இருந்து அடுத்த வாரம் வர்றதா இருந்ததை மாத்தி இந்த வாரத்தில் வந்துட்டோம்” என்று விளக்கம் சொன்னார்.

அவரின் பேச்சை மதித்து அங்கே நின்றவன் அவரின் மூலமாகவே விஷயத்தை வர வைக்க இன்னும் பேச்சுக் கொடுத்தான் “எதுக்குச் சித்தி உங்க மேல பவிக்குக் கோபம்?” என்று கேட்டான்.

அந்தக் கேள்வியில் தாரா மீண்டும் தயங்க, பவ்யா “அதை எல்லாம் நீங்க ஏன் கேட்குறீங்க வினய்?” வினய்க்கு தெரிய வேண்டாம் என்று நினைத்துப் பவ்யா தடுக்கப் பார்த்தாள்.

இப்போது அவள் பக்கம் திரும்பி முறைத்துப் பார்த்த வினய் “என் பொண்டாட்டி பத்தின விஷயத்தை நான் தெரிஞ்சுக்கக் கேட்குறேன். நீ ஏன் அதைத் தடுக்கப் பார்க்கிற?” என்று கோபத்துடன் கேட்டவன் “நீங்க சொல்லுங்க சித்தி” என்றான்.

“ஆமா… புதுசா பொண்டாட்டி மேல அக்கறை பொங்கி வழியது…” என்று பவ்யா முணங்கியது அருகிலேயே நின்று கொண்டிருந்த வினய்யின் காதில் விழ அவன் மனதில் மீண்டும் ஒரு குத்தூசி வலி விழுந்தது.

ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தாராவை பார்க்க, அவர் நவிதா மூலம் தான் பேச சொல்லியதை எல்லாவற்றையும் சொன்னார்.

அதைக் கேட்டு வினய் கோபமாக ஏதோ சொல்லப் போக, அவனைப் பேசவிடாமல் இத்தனை நாளும் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைப் பவ்யா கேட்டாள். “ஏன் அத்தை என்னை வாழாவெட்டினு எல்லாம் சொல்ல சொன்னீங்க?” என்று வலி தாங்கிய முகத்துடன் கேட்டவளின் கண்கள் கண்ணீரை காட்டின.

அவளின் வலி அவருக்கும் வலித்ததோ பவ்யாவின் அருகில் வந்து அவளின் கையைப் பிடித்துக் கொண்டவர் “ஸாரி பவ்யாமா… அதைச் சொல்லச் சொல்ல நான் எவ்வளவு தவிச்சு போனேன் தெரியுமா? ஆனா உண்மையில் நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு இந்த ஊர்ல அந்தப் பேர்தான்டா பவ்யா” என்று வருத்தமாகச் சொன்னவர் பவ்யாவின் கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டே,

“அது உனக்கும் தெரியணும்னு தான் அந்த வார்த்தையைச் சொல்ல சொன்னேன். எனக்கு வேற வழி தெரியலைடா. உன் பதினைந்து வயசில் உங்க அப்பா, அம்மாவை பறிகொடுத்துட்டு என் கைக்கு நீ வந்து சேர்ந்த போதே உன்னை என் இன்னொரு பொண்ணா தான் நான் ஏத்துக்கிட்டேன். ஆனா உன் வெளிநாட்டு பத்தின பயத்தால உன் வாழ்க்கை தொலைஞ்சு போய்த் தனியா நின்னப்ப நான் எவ்வளவு உடைஞ்சு போய்ட்டேன் தெரியுமா?

அந்தச் சமயம் நான் சொன்ன புத்திமதி எதுவும் கூட உன் காதில் ஏறலை. அவ்வளவு பிடிவாதம் பிடிச்சு தனியா வாழ ஆரம்பிச்சுட்ட. உனக்கு உன் பிடிவாதம் தான் பெருசா தெரிஞ்சது. அதை எப்படித் தளர்த்த வைக்கனு எனக்குத் தெரியலை. அதுக்குப் பிறகு மைத்ரி கல்யாணம். அவ கனடாவில் செட்டில் ஆகுறதுன்னு நாள் போயிருச்சு.

ஆனா இப்போ அவ குழந்தை பிறப்புக்கு போய் என் பொண்ணு அங்கே குடும்பமா சந்தோஷமா வாழ்வதை பார்த்துச் சந்தோஷப் பட்ட நான், உன் வாழ்க்கையையும் நினைச்சுப் பார்த்தேன். எந்த அம்மாவுக்குத் தான் தன் ஒரு பொண்ணு மட்டும் நிறைவா வாழ்ந்து இன்னொரு பொண்ணு கஷ்டப்படுவது பிடிக்கும்?

என் இன்னொரு பொண்ணானா நீயும் அது போலக் குடும்பமா சந்தோஷமா வாழ ஆசைப்பட்டேன். என்னால மாப்பிள்ளைகிட்ட போய் இங்க வந்து என் பொண்ணு கூட வாழுங்கனு சொல்ல முடியலை. ஆனா என் பொண்ணை என்னால புருசன் கூடப் போய் வாழ வைக்க முடியும்னு தோணுச்சு. நான் முன்ன பல முறை பேசி நீ மாறலைங்கும் போது வேற வழியில் உன் புருஷன்கிட்ட போக வைக்கணும்னு நினைச்சேன்.

மைத்ரி காலேஜ்ல கூடப் படிச்ச பிரண்ட் நிகிலாவோட தங்கை தான் தான் நவிதா. மைத்ரியோட குளோஸ் பிரண்ட் நிகிலா பத்தி தான் உனக்குத் தெரியுமே. ஆனா தங்கச்சியைத் தெரியாதுன்னு தான் நிகிலா மூலமா பேசி நவிதாவை நீ வேலை பார்க்கிற இடத்தில் சேர வச்சு அவ மூலமா நான் பேச வைச்சேன்.

அவ பேசினது எல்லாமே நான் சொல்லி தான் வார்த்தை மாறாம பேசினா. நீ வாழ்ற தனிமை வாழ்க்கைக்கு அர்த்தம் தெரியணும் உனக்கு. நீ பணக்கார வீட்டு மருமகள்னு உன்னை முகத்துக்கு நேர எதுவும் சொல்ல யோசிப்பாங்க. இந்த அப்பார்மெண்ட்ல உள்ள ஆட்களும் உன் மாமனாரை மனசில் வச்சு உனக்கு மரியாதை தான் கொடுப்பாங்க.

இந்த நிலையில் உனக்கு உண்மையை உரைக்க வைக்கத் தான் அப்படிச் செய்தேன். வாழாவெட்டிங்கிற வார்த்தை உன்னைக் கொஞ்சமாவது யோசிக்க வைக்கும். உன் மனசு இளகும் போது எப்படியாவது உன்னை யூஎஸ் அனுப்பி வச்சிருவோம்னு நினைச்சேன்.

உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா உனக்கு வலி மருந்து கொடுத்து தான் ஆகணும். உன் புருஷன் கூட ஒருவேளை உனக்கு வாழவே பிடிக்கலைனா மறுமணம் பத்தினாலும் நீ யோசிக்கணும்னு தான் டிவோர்ஸ் பத்தின பேச்சையும் கையில் எடுத்தேன்.

அத்தையா உன்கிட்ட கெட்ட பேர் வாங்கினாலும் பரவாயில்லைனு தான் எல்லாம் செய்தேன். ஆனா அது எல்லாத்துக்கும் சேர்த்து என்கிட்ட பேசாம இருந்து எனக்குத் தண்டனை கொடுத்துட்ட” என்று தான் நடந்து கொண்டதற்கான காரணத்தை எல்லாம் சொன்னவர் கடைசி வரியை சொன்ன போது அழுதுவிட்டார்.

தாரா பேசியதை எல்லாம் கேட்டுத் திக்பிரமை பிடித்தது போல நின்று விட்ட பவ்யா, அவர் அழுகவும் தாங்க முடியாமல் தானும் அவரை அணைத்து அழ ஆரம்பித்தாள்.

தான் கெட்ட பேர் வாங்கினாலும் பரவாயில்லை பவ்யா நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்த தாராவின் பாசம் பவ்யாவை மட்டும் இல்லாது வினய்யின் மனதையும் உருக வைத்தது.

அவர்களின் அழுகையைக் கண்டு அவ்வளவு நேரம் கவினை தூக்கி வைத்திருந்த அமுதவன் “தாரா ரிலாக்ஸ்டா…! உன் பேரனை பாரு பயப்படுறான்…” என்று கவினின் பயந்து அழ தயாராக இருந்த முகத்தைக் காட்ட, தாராவும், பவ்யாவும் கொஞ்சம் அழுகையைக் குறைத்தார்கள்.

“ஸாரி அத்தை..! என் தப்பு தான். நீங்க போன்ல சொல்ல வந்ததை நான் கேட்டுருக்கணும். ஆனா நீங்க எப்படி டிவோர்ஸ் பத்தி பேசலாம்னு உங்க மேல வந்த கோபம் என்னைப் பேச விடாம தடுத்துருச்சு. நீங்க எப்படி அப்படிச் செய்யலாம்னு நினைச்சவ எதை நினைச்சு அப்படிச் செய்தீங்கனு நான் யோசிருக்கலாம். அதை விட்டு நான் வேற மைத்ரி கூட உங்களை நிம்மதியா இருக்க விடாம சீக்கிரம் வர வச்சுட்டேன்” என்று வருந்தி சொன்ன பவ்யா தாராவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

“சரி விடு பவ்யா. இப்பதான் மாப்பிள்ளை வந்துட்டாரே… அதுவே இப்ப நிம்மதியா இருக்கு” என்றவர், வினய்யை பார்த்து “ஸாரி மாப்பிள்ளை…! உங்க வொய்பை அடிச்சதுக்கு. என் பொண்ணுகிற உரிமையில் அடிச்சுட்டேன். இப்ப நீங்க வந்திருக்கிறது சந்தோஷம் மாப்பிள்ளை. அவளை நான் அடிச்சுட்டேன்னு கோபப்பட்டீங்க பாருங்க. அதுலேயே உங்க அன்பு புரியுது.

அதே அன்போட என் பொண்ணு கூட உங்க வாழ்க்கை தொடரணும் மாப்பிளை. நீங்க திரும்பி ஒருவேளை யூஎஸ் போறதா இருந்தா உங்க மனைவி, பிள்ளையையும் கூட்டிட்டு போயிருங்க மாப்பிள்ளை. என் பொண்ணு என்ன தப்புப் பண்ணிருந்தாலும் அதை மன்னிச்சுருங்க மாப்பிள்ளை.

அவ வேணும்னு எதுவும் செய்யலை. அவ பாரின் வாழ்க்கையால் பட்ட அடி அவளை அப்படி நடக்க வச்சுருச்சு. பாரின் வாழ்க்கையால அவ பெத்தவங்களையே இழந்து ஒரே நாள்ல அனாதையா நின்னவ. பதினைந்து வயசுலயே தனிமையிலே துடிச்சு போனவ. அவளோட அந்த வலி தான் உங்ககிட்ட வீம்பு பிடிக்க வச்சுருச்சு. இனியாவது என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும் மாப்பிள்ளை” என்றவர் கையெடுத்து கும்பிட ஆரம்பிக்க, வினய் பதறிப் போனான்.

பவ்யாவும் “அத்தை கையைக் கீழே போடுங்க” என்று சொல்ல, “ஐயோ..! சித்தி கையை இறக்குங்க. நான் இனி இங்கே தான் இருக்கப் போறேன். இனி என் வாழ்க்கை என் மனைவி, மகன் கூடத் தான். சோ… கவலைப்படாதீங்க…” என்று வெளியே அவருக்குச் சமாதானம் சொன்னாலும்,

உள்ளே மனதிற்குள் பவ்யாவின் பெற்றோர் பற்றி அறிந்துக் கொண்டதில் அவனின் மனது அரிக்க ஆரம்பித்தது.

‘என்ன பதினைந்து வயசுலேயே பாரின் வாழ்க்கையால் பெத்தவங்களை இழந்திட்டாளா? அதை அன்னைக்கு அப்பா சொல்லும் போது சும்மா என்னை இங்கேயே தங்க வைக்கப் பொய் சொல்றாருனுல நினைச்சேன். அப்போ அது உண்மை தானா? ச்சே! அவ கூட ஒரு மாசம் வாழ்ந்தும் அவகிட்ட அவளோட பெத்தவங்களைப் பத்தி அதிகம் விசாரிக்கக் கூட இல்லையே’ என்று தன்னையே திட்டிக் கொண்டவனை,

‘ஆமா அப்ப நீ தான் ரொமான்ஸு மன்னன் போல வெளி உலகத்தைப் பத்தி கூட யோசிக்காம, புதுமண மோகத்தில் சுத்திட்டு இருந்தியே. உனக்கு அதைத் தவிர வேற பேசுவா நேரம் இருந்துச்சு?’ என்று அவனின் மனசாட்சியே அவனை இடிந்துரைத்தது.

மேலும் அவனைச் சிந்திக்க விடாமல் அவன் அருகில் வந்த அமுதவன், “ரொம்ப ரொம்பச் சந்தோஷம் மாப்பிள்ளை. நீங்க இங்கேயே இருக்கப் போறதில்… இனி எங்க பவ்யா வாழ்க்கை சிறப்பா இருக்கும்னு நினைக்கும் போது மனசு நிறைவா இருக்கு” என்று சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

அதன் பிறகு அமுதவனும், தாராவும் மாறி, மாறி தங்கள் சந்தோஷத்தை சொல்லி, பேரனுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு இரவு உணவையும் முடித்து விட்டு மகிழ்வாக அவர்களின் வீட்டிற்குக் கிளம்பி சென்றார்கள்.

அவர்கள் சென்றதும் வினய் பவ்யாவின் பெற்றோரை பற்றி அவளிடம் விசாரிக்க நினைத்தான். ஆனால் கவின் உறங்கட்டும் அதன் பிறகு கேட்போம் என்று நினைத்து தொலைகாட்சியின் முன் அமர்ந்து விட்டான்.

சிறிது நேரம் சென்று கவினை தூங்க வைத்து விட்டுச் சமையலறையில் தண்ணீர் எடுக்க வந்தவள் வினய் இன்னும் ஹாலிலேயே அமர்ந்திருப்பதைப் பார்த்து யோசனையாகப் பார்த்துக் கொண்டே நடந்தாள்.

அவள் வெளியே வந்ததைக் கவனித்து “பவி நான் கொஞ்சம் உன்கிட்ட பேசணுமே..” என்று பேச்சை ஆரம்பித்தான்.

‘என்ன?’ என்பதாக மட்டும் பவ்யா பார்த்துக் கொண்டிருக்க, அவளின் அந்த அமைதி அவனைக் கோபமடைய வைத்தது. ஆனாலும் கோபத்தை அடக்கிக் கொண்டு “ஏன் பவி இப்படிப் பேசாம இருந்தே என்னைக் கொல்ற? வாயை திறந்து தான் பேசேன்…” என்றான் வருத்தமாக.

அவன் வருத்தத்தைப் பார்த்து “என்ன பேசணும். சொல்லுங்க…” என்று அமைதியாகக் கேட்டாள்.

மனைவி பேசிவிட்டதில் மலர்ந்த வினய் பின்பு தயக்கத்துடன் “உங்க அப்பா, அம்மா பத்தி தாரா சித்தி ஏதோ சொன்னாங்களே? என்ன அது? பாரீன் வாழ்க்கையாலனு சொன்னாங்க. அப்படி என்ன நடந்துச்சுன்னு சொல்றீயா?” என்று கேட்டான்.

பவ்யா எப்படியும் தன்னிடம் சொல்லிவிடுவாள் என்று நினைத்து அவள் பேச அவன் காத்திருந்தான். ஆனால் அவளோ நிதானமாகக் கணவனைக் கூர்ந்து பார்த்து “உங்ககிட்ட நான் ஏன் சொல்லணும்?” என்று கேட்டாள்.

அவளின் பதிலில் வினய்க்கு சொத்தென்று ஆனது. ஆனாலும் விடாமல் “ஏன் பவி என்கிட்ட சொன்னா என்ன? முன்னாடியே தெரிஞ்சிருக்கணும் நான். இப்பவாவது சொல்லேன்…” என்று மீண்டும் கேட்டான்.

“சொல்ல முடியாது. நான் ஏன் சொல்லணும்? அன்னைக்கு நான் அப்படிக் கெஞ்சினேனே? வெளிநாடுக்கு போகவேண்டாம்னு நான் சொல்றதுக்கான காரணத்தையாவது கேளுங்கனு. அன்னைக்கு ஒரு வார்த்தை என் பேச்சை நின்னு கேட்டீங்களா?

அப்போ நான் உங்களுக்கு நாடகக்காரியா தெரிஞ்சேன். இப்போ நிதானமா வந்து நீங்க கேட்பீங்க… நான் சொல்லணுமா?” என்று கடுப்பாகக் கேட்டாள்.

அதில் வினய் தன் அன்றைய நடத்தைக்காக வருந்தினான். தன்னுடைய வெளிநாட்டு மோகத்தில் தான் நடந்து கொண்ட முறை தன் மனைவியைத் தவிக்க வைத்து விட்டது என்று நினைத்த வினய்க்கு அவனின் வருத்தம் கூடி கொண்டே சென்றது.

“தப்பு தான் பவி. அன்னைக்கே நான் என்னனு கேட்டுருக்கணும். ஆனா என் பிடிவாதம் என்னைக் கேட்க விடலை. நான் இப்ப கேட்குறப்ப உனக்குச் சொல்ல விருப்பம் இல்லை. சரி விடு…! உனக்குச் சொல்ல விருப்பம் இருக்குறப்ப சொல்லு” என்று அவன்தான் இறங்கி போக வேண்டி இருந்தது.

அதில் பவ்யா ‘நல்லது’ என்பது போல அந்த இடத்தை விட்டு அகல போனவள் பின்பு ஏதோ நினைத்தது போல நின்று “அது சரி…! எல்லார்கிட்டேயும் இங்க தான் இருக்கப் போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்களே. உங்களோட பாரீன் மோகம் அதுக்குள்ளவா உங்களை விட்டு போயிருச்சு? இப்ப மட்டும் இந்த ஊர் குப்பையா தெரியலையா? இல்ல ரோடு மோசமா இல்லையா?

நீங்க அன்னைக்குச் சொன்ன அதே குறைகள் இன்னும் இந்த ஊரை விட்டு போகலைனு தான் நினைக்கிறேன். அப்படியிருக்கும் போது நீங்க இங்கே இருக்கப் போறேன்னு சொல்றதை என்னால இன்னும் நம்ப முடியலை.

இந்த நிலையில் நான் என் பேரன்ட்ஸ் பத்தி உண்மையைச் சொன்னாலும், உங்களுக்கு அதுவும் நாடகக் கதையா தெரிஞ்சா என்ன பண்றது? போதும்… நீங்க என்னை வலிக்க வச்சதும் போதும்… திகட்ட திகட்ட வேதனையைத் தந்ததும் போதும்…” என்றவள் கோபமாகச் சமையலறை நோக்கி சென்றாள்.

பவ்யா தான் இப்படியெல்லாம் பேச கூடாது என்று நினைத்தும், முன்பு பட்ட வேதனைகள் யாரிடமும் காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து துடித்து, இப்போது காயம் பட்டவனிடமே அவளின் மனது வலியை போக்க சொல்லி அப்படி அவளைப் பேச தூண்டியது.

ஆனால் அப்படி அவள் பேச பேச இங்கே வினய்யும் அதே அளவு வலியை அனுபவிக்கிறான் என்பதைத் தான் அவள் உணராமல் போனாள்.

அவனின் அந்த வலி சில நாட்களாக அவன் மறந்திருந்த குடியை தேடி போகச் சொல்லி தூண்ட சட்டென வெளியே கிளம்பி விட்டான்.

தண்ணீரை எடுத்து வந்த பவ்யாவின் கண்ணில் அவன் இந்நேரம் வெளியே செல்வது பட, புரியாத அதிர்வுடன் கதவையே பார்த்துக் கொண்டு நின்றாள்.