18 – மின்னல் பூவே

அத்தியாயம் – 18

“உன் கூடத்தானே படுத்திருந்தாள். அவள் எப்ப போனாள். யார் கூடப் போனாள்னு கூட உனக்குத் தெரியலையா?” என்று மனைவியிடம் கத்திக் கொண்டிருந்தார் கிரிதரன்.

“உங்க பொண்ணு எப்ப போனாள், யார் கூடப் போனாள் என்றெல்லாம் அப்புறம் விசாரிங்க. முதலில் எங்களுக்குப் பதில் சொல்லுங்க…” என்று கோபமாகக் கத்தினார் முகில்வண்ணனின் தந்தை ரகுநாதன்.

மகள் அனுப்பி இருந்த வாட்ஸ்அப் செய்தியைப் படித்து விமலா அழ ஆரம்பித்த போதே அங்கே வந்த கிரிதரன் விஷயம் அறிந்து இடிந்து போனவர் மனைவியிடம் கத்திக் கொண்டிருந்தார்.

இங்கே கேட்ட சப்தத்தில் மண்டபத்தில் படுத்திருந்த அனைவரும் அடித்துப் பிடித்து எழுந்து ஓடிவர, மணப்பெண் காதலனுடன் சென்று விட்ட செய்தி வேகமாகப் பரவ ஆரம்பித்தது.

மாப்பிள்ளை வீட்டார் பதட்டமும், கோபமுமாக அங்கே வர, அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்த கிரிதரன் மனைவியைச் சப்தம் போட, ரகுநாதன் கிரிதரனை சப்தம் போட்டார்.

அந்த இடமே கலவரமாக ஆரம்பித்தது.

“நாங்க என்ன பதில் சொல்றதுங்க? எங்களுக்கே நடந்தது எதிர்பாராத அதிர்ச்சி. எங்க பொண்ணு இப்படிப் பண்ணுவாள்னு நாங்க கனவில் கூட நினைக்கலையே…” என்று வருத்தமாகச் சொன்னார் கிரிதரன்.

“இதை எங்களை நம்பச் சொல்றீங்களா? உங்க பொண்ணு காதலிச்சது உங்களுக்குத் தெரியாமயா இருந்திருக்கும்? பொண்ணு காதலிச்சதை மறைச்சு, மணமேடை வரை வந்துட்டு, இப்போ பொண்ணு ஓடிப் போயிருச்சுன்னு சொன்னால் உங்களை விட எங்களுக்குத் தானே அவமானம்…” என்றார் ரகுநாதன்..

“அய்யோ! தெரியாதே, எங்களுக்குத் தெரியாதே! அவள்கிட்ட நாங்க கல்யாணத்துக்குச் சம்மதம் கேட்டுத்தானே எல்லா ஏற்பாடும் பண்ணினோம். கல்யாண வேலை எதுலயும் அவள் வேண்டாவெறுப்பா கலந்துக்கலையே. நேத்து வரை நாங்க செய்யச் சொன்னதை எல்லாம் செய்தாளே. அவள் இப்படிச் செய்வாள்னு எங்களுக்குத் தெரியாம போயிருச்சே…” என்று கதறலுடன் சொன்னார் விமலா.

“உங்க பொண்ணு அமைதியா இருந்தே எங்க கழுத்தை அறுத்துட்டுப் போய்ட்டாள். இப்போ கல்யாண மேடை வரை வந்த எங்க பையன் கல்யாணம் நின்னு போயிருச்சுன்னு நாங்க வெளியே பெருமையாவா சொல்லிக்க முடியும்? போனவ ஈஸியா போயிட்டாள். என் பையன் இல்ல நாளைக்கு வெளியே தலை காட்ட முடியாது…” என்று கோபப்பட்டார் ரகுநாதன்.

அவரின் பார்வை அங்கே ஓரமாக நின்றிருந்த மகனின் மீது வேதனையுடன் பதிந்தது.

முகில்வண்ணன் அவ்வளவு கூட்டத்திற்கு இடையே குறுகிப் போய் நின்றிருந்தான்.

அவனின் முகம் மட்டுமில்லாமல் மனமும் இறுகிப் போயிருந்தது.

விடிந்தால் கல்யாணம் என்ற கனவில் மிதந்தவனைத் தலைக் குப்புற கீழே தள்ளுவது போல் கண் முழித்ததும் அவனின் காதில் விழுந்த செய்தி அவனை உருக்குலைத்துப் போட்டிருந்தது.

அவன் வாழ்க்கையில் விழுந்த முதல் அடி! முற்றிலும் எதிர்பாரா அடி! அதைத் தாங்க முடியாமல் தகித்துப் போய் நின்றிருந்தான்.

தன் மீது பரிதாபமாகப் படிந்து மீளும் உறவுகளின் பார்வையைச் சகிக்க முடியாமல் அங்கிருந்து சென்று விட அவனின் உடலும் உள்ளமும் துடித்துக் கொண்டிருந்தது.

“சரிப்பா, போனவளை பத்தி பேசி இனி என்ன பிரயோசனம்? இனி அடுத்து என்ன செய்யலாம்னு யோசிங்க…” என்று மாப்பிள்ளை வீட்டு பெரியவர் ஒருவர் குரல் கொடுத்தார்.

“இனி யோசிக்க என்ன தாத்தா இருக்கு?” என்று அவரிடம் சொன்ன முகில்வண்ணன், “நாம கிளம்பலாம் ப்பா…” என்று இறுக்கத்துடன் தந்தையிடம் சொன்னான்.

“ஏய் இருப்பா. கல்யாணம் நின்னு போறது என்ன லேசு காரியம்னு நினைச்சியா? பார்க்கிறவன் எல்லாம் நாக்கில் நரம்பில்லாம பேசுவான். அத்தனை பேச்சையும் வாங்க போறீயா?” என்று அந்தத் தாத்தா அவனைச் சப்தம் போட்டார்.

அவர் சொன்னதைக் கேட்டதும் ஏற்கனவே மகன் கல்யாணம் நின்று விட்டதே என்று அழுது கொண்டிருந்த வளர்மதி இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தார்.

இலக்கியாவும் அவருடன் அழ ஆரம்பிக்க, மண்டபமே அல்லோலப்பட்டுப் போயிருந்தது.

அதிலும் இலக்கியாவின் வேதனை பன்மடங்காகியிருந்தது.

முகூர்த்த புடவை எடுக்கப் போயிருந்த போதே கமலினியின் ஒட்டாத தன்மையைக் கவனித்திருந்தாளே. அப்போதே தான் தன் பெற்றவர்களிடம் சொல்லியிருந்தால் அதை என்ன ஏது என்று விசாரித்திருப்பார்கள்.

இப்போது தன் தம்பியின் கல்யாணம் மணமேடை வரை வந்து நின்றும் போயிருக்காதே என்று அதை நினைக்க நினைக்க அவளின் வேதனை அதிகரிக்கக் கதறியே அழ ஆரம்பித்தாள்.

“பொண்ணுங்களா, இப்போ எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்கீங்க? அழுதா போனவ வந்தா மணமேடையில் உட்கார போறா? அடுத்து என்ன செய்து நம்ம வீட்டு பையன் வாழ்க்கையைச் சரி பண்றதுன்னு யோசிங்க.

நம்ம சொந்தப்பந்தத்தில் இங்கே இருக்கும் எந்தப் பொண்ணு முகிலுக்கு சரியா இருப்பாள்னு பார்த்துப் பேசி முடிச்சு மணமேடையில் உட்கார வைங்க. அதை விட்டு அழுதால் ஆச்சா?” என்று இன்னொரு பெரியவர் சொல்ல, வளர்மதி, இலக்கியாவின் அழுகை சட்டென்று நின்றது.

உடனே தன் தம்பியை எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்தாள் இலக்கியா.

ஆனால் முகில்வண்ணனோ அந்தத் தாத்தா சொன்ன யோசனையைக் கேட்டு முகத்தைச் சுளித்தவன், தன் அக்காவைப் பார்த்து மறுப்பாகத் தலையை அசைத்தான்.

“எனக்கும் நீங்க சொல்றது தான் சரின்னு தோணுது பெரியப்பா. அவங்க பொண்ணு செய்த தப்புக்காக நம்ம பையன் வாழ்க்கை ஏன் பட்டுப் போகணும்? அவன் கல்யாணம் நின்னு போயிருச்சு என்ற அவமானம் அவனின் காலம் முழுவதும் அவனைத் தொடர வேண்டாம். அதனால் இன்னைக்கே கல்யாணத்தை முடிச்சுடுவோம்…” என்றார் ரகுநாதன்.

“அப்பா, அவசரப்பட்டு முடிவு எடுக்காதீங்க. எனக்குக் கல்யாணம் வேண்டாம்…” என்றான் முகில்வண்ணன்.

“அய்யோ! என் பையன் கல்யாணத்தையே வெறுத்துருவான் போல இருக்கே…” என்று அழ ஆரம்பித்தார் வளர்மதி.

“எல்லாம் உங்களாலும், உங்க பொண்ணாலும் தான். பொண்ணு காதலிக்கிறாளா இல்லையான்னு கூடத் தெரியாம எதுக்கு அவளுக்குக் கல்யாணம் பேசினீங்க? நிச்சயம் முடிஞ்ச அப்ப கூட உங்க பொண்ணு அமுகுனி மாதிரி இருந்தாளே.

எப்படி எல்லாம் எங்களை ஏமாத்தி இருக்கா. இப்போ என் பையன் கல்யாணத்தையே வெறுக்குற அளவுக்குக் கொண்டு வந்து விட்டுட்டாளே பாதகத்தி…” என்று விமலாவைப் பார்த்துக் கத்தினார் வளர்மதி.

அவரின் பேச்சைக் கேட்டு விமலா மகள் இப்படித் தங்களை ஏமாற்றியதுடன் மாப்பிள்ளை வீட்டாரையும் ஏமாற்றி விட்டாளே என்று நினைத்து அழ ஆரம்பித்தார்.

அவருக்கு ஆறுதலாக அஜந்தா நிற்க, அவரைக் கட்டிக் கொண்டு அழுதார் விமலா.

“உங்க கோபம் நியாயமானது தாங்க. ஆனா அவள் உங்களை மட்டும் ஏமாத்தலை. எங்களையும் சேர்த்து தான் ஏமாத்திட்டுப் போயிட்டாள். கல்யாணம் வரை உங்களைக் கொண்டு வந்துவிட்டு உங்களுக்கு அவமானத்தைத் தேடி தந்ததுக்கு உங்ககிட்ட மன்னிப்புக் கேட்கறது தவிர எங்கிட்ட வேற வார்த்தை இல்லைங்க. மன்னிச்சுடுங்க…” என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் கூனி குறுகி கை கூப்பி மன்னிப்புக் கேட்டார் கிரிதரன்.

“கிரிதரா கையைக் கீழே இருக்கு…” என்று தம்பியிடம் சொன்ன வீரபத்ரன், மாப்பிள்ளை வீட்டார் புறம் திரும்பினார்.

“எங்க வீட்டு பொண்ணு செய்தது தப்பு தாங்க. அதுக்கு என் தம்பி மன்னிப்பும் கேட்டுட்டான். உங்களுக்கு ஒரு அவமானம்னா அவள் போனது எங்களுக்கும் அவமானம் தான். நடக்கக் கூடாதது நடந்திருச்சு. இனி போனவளை பத்தி பேசி ஒன்னும் ஆகப்போறது இல்லை.

நீங்க முடிவு பண்ணின மாதிரி இனி உங்க பையனுக்கு என்ன பண்றதுன்னு பேசி முடிவு எடுங்க. நாங்க கிளம்புறோம். நாங்க இருந்தால் உங்களுக்குச் சங்கடம் தான்…” என்றார்.

அதைச் சொல்லும் போது அவரின் பார்வை அங்கே நடந்ததை எல்லாம் வேடிக்கை பார்த்த வண்ணம் ஓரமாக நின்றிருந்த மகளைத் தொட்டு மீண்டது.

உத்ராவும் அப்போது தந்தையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவருக்கு ‘என் பொண்ணை வேண்டுமானால் உங்கள் பையனுக்குத் தருகிறேன்’ என்று சொல்ல ஆசை தான்.

ஆனால் முகில் ஏற்கனவே தன் பொண்ணை மறுத்திருக்கும் நிலையில் அவரால் அந்த வார்த்தையைச் சொல்ல முடியவில்லை.

அவராகக் கேட்டு அவன் மட்டுமில்லாமல் அவனின் குடும்பமும் தன் பொண்ணை மறுத்துவிட்டால் அதை விடப் பெரிய அவமானம் தங்களுக்கு இருக்க முடியாது என்று நினைத்தவர் கேட்காமல் தவிர்த்து விட்டுத் தாங்கள் கிளம்புவதாக அறிவித்தார்.

தந்தையின் எண்ணம் புரிந்தது போல உத்ராவும் அதை ஏற்றுக்கொண்டு கிளம்பத் தயாரானாள்.

“அதான் சரிப்பா. அவங்க கிளம்பட்டும் ரகு. நீ நம்ம சொந்தத்தில் ஒரு பொண்ணைப் பார்த்து முகிலுக்கு முடிச்சு விடு…” என்றார் பெரியவர்.

யாரை பெண்ணாகத் தேர்ந்தெடுப்பது என்று அங்கே ஒரு அலசல் ஓடியது.

இலக்கியாவின் பார்வை அங்கிருந்த ஒவ்வொரு இளம் பெண்களின் மீதும் பட்டு மீண்டது.

ஆனால் அவளுக்கு யாருமே திருப்தி தரும் வகையில் இருக்கவில்லை.

அங்கே நடப்பதை எல்லாம் கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டு எரிச்சலுடன் நின்றிருந்தான் முகில்வண்ணன்.

அவனுக்குக் கல்யாணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். இங்கிருந்து போய் விட்டால் போதும் என்று தோன்றியது.

“அத்தான் நீங்களாவது சொல்லுங்க. எனக்கு ஏற்கனவே இப்படிக் காட்சி பொருளா நிற்பது ரொம்பக் கேவலமா இருக்கு. இதில் அவசர அவசரமா இன்னொரு பொண்ணைப் பார்த்து இவங்க முடிவு பண்றது எல்லாம் சரியே இல்லை.

அவளுக்கு மட்டும் காதல் இருக்காதுன்னு இவங்க கண்டாங்களா என்ன? அவளும் கல்யாணத்துக்குப் பிறகு ஓடிப் போக மாட்டாள்னு என்ன நிச்சயம்? நாம இங்க இருந்து கிளம்பலாம் அத்தான். இங்கே இப்படி நிற்கும் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு அனல் மேல் நிற்கிற மாதிரி இருக்கு…” என்று தன் அருகில் இருந்த கார்த்திக்கிடம் சொன்னான் முகில்வண்ணன்.

அவனின் நிலையைக் கார்த்திக்கால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் நினைப்பது போலச் சென்று விடுவதே நல்லது என்றும் தோன்றியது.

அவசர அவசரமாக இன்னொரு பொண்ணை முடிவு செய்வதில் அவனுக்கும் உடன்பாடில்லை. அதனால் அவனுக்கு ஆதரவாகப் பேசிவிடும் முடிவுடன் பெரியவர்களின் புறம் திரும்பினான்.

வளர்மதி இன்னும் அழுது கொண்டிருக்க, ரகுநாதன் மகன் வாழ்க்கையை நினைத்து வேதனையுடன் அவ்வப்போது நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்.

அவர்களை அப்படிக் கண்டதும் பெரியவர்களின் தவிப்பும் அவனுக்குப் புரிந்தது.

இப்போது முகிலுக்குத் திருமணம் நடக்காமல் போனால் நிச்சயமாக அவர்கள் தாங்கமாட்டார்கள் என்று உணர்ந்து கொள்ள முடிந்தது.

“நீ சொல்வதும் சரிதான் முகில். ஆனா நீ உன் அப்பா, அம்மாவையும் கொஞ்சம் பார். முக்கியமா மாமாவை பார். அடிக்கடி நெஞ்சை தடவி விட்டுட்டு இருக்கார். அவருக்கு ஏற்கனவே பிரஷர் இருக்கு. இந்த நேரத்தில் நீயும் கல்யாணம் முடியாமல் கிளம்பினால் அவங்க உடைந்தே போவாங்க. அதனால் கொஞ்ச நேரம் அமைதியா இரு முகில். பெரியவங்க உனக்கு நல்லது தான் பண்ணுவாங்க…” என்றான்.

‘என்னத்தை நல்லது பண்ணி…’ என்று எரிச்சலுடன் முணுமுணுத்தாலும் பெற்றவர்களுக்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக நிற்க முயன்றான்.

முகிலிடம் பேசிவிட்டு மனைவியின் புறம் திரும்பினான் கார்த்திக்.

அப்போது இலக்கியாவும் கணவனின் புறம் திரும்பி ஏதோ ஜாடை காட்டினாள்.

அவள் குறிப்பிட்டுக் காட்டிய புறம் திரும்பி பார்த்த கார்த்திக் மனைவியைப் பார்த்து திருப்தியுடன் தலையசைத்தான்.

கணவனின் சம்மதம் கிடைத்ததும் அன்னையின் காதில் ஏதோ ரகசியமாக முணுமுணுத்தாள்.

மகள் சொன்னதைக் கேட்டதும் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு “நான் அப்பாகிட்ட பேசுறேன்…” என்று மகளிடம் சொல்லிவிட்டுக் கணவனின் அருகில் சென்றார்.

வளர்மதி, ரகுநாதனிடம் விஷயத்தைச் சொல்ல அவர் சில நொடிகள் யோசித்தார்.

பின் தன் உறவினர்களிடம் திரும்பியவர் தாங்கள் பேசி முடிவு எடுத்து விட்டுக் கல்யாணத்தைப் பற்றிச் சொல்வதாகவும், அதுவரை காத்திருக்கச் சொல்லி அவர்களை எல்லாம் அனுப்பி விட்டு தன் மகனை அழைத்துக் கொண்டு தாங்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்றார்.

வளர்மதி, இலக்கியா, கார்த்திக் மூவரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.

அறைக்குள் சென்று கதவை அடைத்து விட்டு, “முகில், நான் உனக்கு உத்ராவை பொண்ணு கேட்கலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?” என்று கேட்ட தந்தையை நம்ப முடியாமல் பார்த்தான் முகில்வண்ணன்.

“அப்பா… என்ன சொல்றீங்க? அவளா? இல்லப்பா, இது சரிவராது…” என்று உடனே வேகமாக மறுத்தான் முகில்வண்ணன்.

“என்னடா சரிவராது? உத்ரா ரொம்ப நல்ல பொண்ணு. அவளை எங்க எல்லோருக்குமே பிடிச்சிருக்கு. அவள் தான் உனக்குப் பொருத்தமா இருப்பாள்னு தோணுது…” என்றாள் இலக்கியா.

“இந்த ஐடியா உன்னோடதாக்கும்? நீ அம்மா காதில் ரகசியம் பேசும் போதே நினைச்சேன் ஏதோ ஏடாகூடமா யோசிக்கிறன்னு. இதோ பார் அக்கா. அவள் குணம் வேற. என் குணம் வேற. அவளோட அடாவடித்தனம் எல்லாம் எனக்குச் செட்டே ஆகாது. இப்படி ஏதாவது அர்த்தமில்லாம யோசிக்கிறதை விட்டுட்டு வீட்டுக்கு கிளம்புங்க. போகலாம்…” என்றான் கடுப்பாக.

“என்னடா பெரிய குணம்? ஏன் நீ நினைச்ச மாதிரியே அமைதியான பொண்ணைப் பார்த்து இப்ப என்ன ஆச்சுன்னு பார்த்தியா? அமைதியா இருந்தே நம்மளை அவமானப்படுத்திட்டு ஓடிப் போயிட்டாள். உத்ரா தைரியமானவள் தானே தவிர அடாவடி எல்லாம் கிடையாது. எனக்கு என்னமோ நீங்க இரண்டு பேரும் பொருத்தமான ஜோடியா வாழ்வீங்கன்னு தோணுது. சரின்னு சொல்லுடா. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்…” என்றாள் இலக்கியா.

“ஆமா முகில். அம்மாவுக்கும் உத்ரா தான் உனக்குச் சரியா இருப்பாள்னு தோணுது. சரின்னு சொல்லுடா…” என்றார் வளர்மதி.

“முகில், நாங்க அவசரப்பட்டுப் போனா போகுதுன்னு உத்ராவை பொண்ணா தேர்ந்தெடுக்கலை. உத்ரா பொண்ணு உன் வாழ்க்கையில் வந்தால் நல்லா இருக்கும்னு என் உள்ளுணர்வு சொல்லுதுபா.

அதுமட்டுமில்லாம அந்தக் கமலினி பொண்ணு தான் ஏதோ வயசு கோளாறில் இப்படி நம்ம மானத்தை வாங்கிட்டு போயிட்டாளே தவிர, அவ பெத்தவங்களும் சரி, அவங்க சொந்தமான அந்த வீரபத்ரன் பேமிலியும் சரி நல்ல மாதிரியா தெரியுது. அதனால் தான் அந்த வீட்டு பொண்ணான உத்ராவை தேர்ந்தெடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் வரலை…” என்று மகனின் சம்மதம் கிடைக்க வேண்டுமே என்று வெகுவாகப் பேசியவர் தளர்ந்து அந்த அறையில் இருந்த படுக்கையில் அமர்ந்தார்.

“என்னப்பா, என்ன பண்ணுது?” என்று முகில் தந்தையின் அருகில் ஓடினான்.

“அய்யோ! என்னங்க பண்ணுது?” என்று வளர்மதி பதற ஆரம்பிக்க,

“என்னாச்சுப்பா?” என்று இலக்கியா அழுகையுடன் கேட்டாள்.

“இந்தத் தண்ணியைக் குடிங்க மாமா…” என்று தண்ணீரை எடுத்து வந்து அவரைக் குடிக்க வைத்தான் கார்த்திக்.

“ஒன்னுமில்லை… படபடப்பா வருது. காலையில் இருந்து நடந்ததை நினைச்சு அப்படித்தான் இருக்கு. நீ என்னப்பா சொல்ற?” என்று மகனிடம் சோர்வுடன் கேட்டார் ரகுநாதன்.

படபடப்புடன், உடல் எல்லாம் வேர்த்து வடிய, தீனமான குரலில் கவலையுடன் கேட்ட தந்தையிடம் முகிலால் எந்த மறுப்பும் சொல்ல முடியவில்லை.

“நீங்க பார்த்து என்ன பண்ணினாலும் சரிப்பா…” என்று முடித்துக் கொண்டான்.

“ரொம்பச் சந்தோஷம்பா…” என்று மகிழ்ச்சியுடன் சொன்னவர் “நான் போய் அவங்க கிளம்புறதுக்கு முன்னாடி பேசுறேன்…” என்று எழுந்து சென்றார்.

அவரின் குரலில் உற்சாகம் இருந்தாலும், நடையில் தளர்வை பார்த்த முகில் அவரின் கையைப் பிடித்துக் கொண்டு அவனே உத்ரா குடும்பத்தார் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

அந்த அறையில் இருந்து அவர்கள் அறைக்குச் செல்லும் போது முகிலுக்கு ஒன்று தோன்ற அங்கே மண்டபத்தில் குழுமியிருந்த உறவினர்களுக்கு இடையே யாரையோ கண்களால் தேடிக் கொண்டே சென்றான்.

அவன் தேடிய நபர் கிடைக்காமல் போக, அவனின் நெற்றி யோசனையுடன் சுருங்கியது.

கூடவே உத்ராவின் மீதிருந்த அவனின் சந்தேகம் வலுத்தது.

‘அப்போ நான் இப்படி அவமானப்பட்டு நிற்பதற்குக் காரணம் அவள் தானா? இது தெரியாமல் அவளுடனான திருமணத்திற்கு அவசரப்பட்டுச் சரி என்று சொல்லி விட்டேனே. இப்போது என்ன சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்துவது?’ என்ற யோசனையுடன் தந்தையுடன் சென்றான் முகில்வண்ணன்.