17 – ஞாபகம் முழுவதும் நீயே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்– 17
வினய்யின் கலங்கிய முகத்தைப் பார்த்துத் துடித்துப் போன பவ்யா “வினு…” என்று அதிர்ச்சியாக அழைத்தாள்.
அவளின் அந்த அழைப்பை கூட உணராது “உண்மையைத் தானே சொன்னேன் பவி. நான் வந்த நிமிஷத்தில் இருந்து…” என்று மேலும் ஏதோ சொல்ல போன வினய்யின் தோளில் கை வைத்து தடுத்த பவ்யா, மகனை கண் சாடையில் காட்டினாள்.
கவின் இப்போது தந்தையின் தோளில் இருந்து நிமிர்ந்து அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனின் கண்கள் அன்னையையும், தந்தையையும் தான் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தது.
அந்தப் பார்வையில் சொக்கி போன தகப்பன் “என்ன ஒரு பார்வை பார்க்கிறடா செல்லம் நீ…” என்று அவனின் மூக்கோடு தன் மூக்கை உரசி கொஞ்சினான்.
வினய் அந்தப் பக்கம் திரும்பி இருக்க, பவ்யா அப்போது தான் தன் கை அவனின் தோளில் இருப்பதை உணர்ந்து சட்டெனக் கையை எடுத்து விட்டாள்.
தன் கை அவனின் தோளில் இருந்ததைக் கவனித்து விட்டானா என வினய்யை பார்க்க, அவன் மகனிடம் மூழ்கி இருப்பதைக் கண்டு, நிம்மதி அடைந்தவள், தானும் கண்டு கொள்ளாதது போல இருந்து கொண்டாள்.
பின்பு அவனின் புறம் லேசாகச் சாய்ந்த பவ்யா “குட்டி முன்னாடி கவனமா பேசுங்க. அவன் பக்கத்தில் இருக்கும் போது கண்டிப்பா நீங்க இத்தனை நாள் பிரிவை பத்தி பேசக்கூடாது” என்று அழுத்தமாகச் சொன்னவள் படுக்கையில் இருந்து எழுந்தாள்.
மகனை கொஞ்சிக் கொண்டே பவ்யாவின் பேச்சை கேட்ட வினய் “சரி…” என்று மெல்ல சொன்னான்.
“கவின் வா குட்டி! அழுக்கு பையன் கூட எல்லாம் அப்பா விளையாட மாட்டாங்க. குளிச்சுட்டு வந்து பிரஸ்ஸா விளையாடலாம். அப்பாவும் குளிச்சுட்டு வரட்டும் வா” என்று அழைத்தாள்.
‘அப்படியா?’ என்பது போலத் தந்தையின் முகத்தைப் பார்த்தான்.
தான் சொன்னதை நம்பாமல் அவன் தந்தையை அப்படிப் பார்க்கவும் பவ்யா ‘அட மகனே!’ என்று வாய் திறக்காத குறையாகக் கவினை பார்த்தாள்.
அதைக் கவனித்த வினய்க்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் “ஆமாடா குட்டி குளிச்சிட்டு பிரஸ்ஸா வாங்க. நாம விளையாடலாம்” என்று சொல்ல… வேகமாக அம்மாவிடம் தாவிய கவின் “ம்மா வா…! வா..! குளி…” என்று அவளை இழுக்காத குறையாகக் குதித்தான்.
“போகலாம்… போகலாம்… இரு…!” என்றவள் வினய்யை பார்த்தாள்.
அவனும் படுக்கையை விட்டு எழுந்து வந்தவன் என்ன என்பது போலப் பார்த்தான். வினய்யின் கலக்கம் பார்த்து அப்போது பேசிவிட்டாலும், மீண்டும் இப்போது சர்வ சாதாரணமாகப் பேச அவளுக்குத் தயக்கமாக இருந்தது.
அதனால் எதுவும் பேசாமல் அவளின் அறைக்குச் சென்றவள் அங்கே இருந்த அலமாரியை திறந்து சோப்பும் துண்டும் எடுத்து வந்தவள், இத்தனை நாளும் பூட்டியிருந்த அவன் முன்பு பயன்படுத்தும் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றாள்.
பூட்டியிருந்தாலும் அவள் அடிக்கடி சுத்தம் செய்வதால் அந்த அறை சுத்தமாகத் தான் இருந்தது. அது வினய்க்கு மிகவும் பிடித்த அறை. அவன் இந்த வீட்டிற்கு வந்தால் அந்த அறையில் தான் தங்க விரும்புவான்.
அதனாலேயே இப்போது அவன் தங்க ஏதுவாக அந்த அறையில் தேவையான குளியலறை பொருட்களை எடுத்து வைத்தாள்.
பின்பு அவனிடம் வந்து “உங்க ரூம் சுத்தமா தான் வச்சிருக்கேன். நீங்களும் குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க” என்று முணுமுணுப்பாகச் சொன்னவள் கவினை தூக்கிக் கொண்டு அவனைக் குளிக்க வைக்க அவளின் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
சொல்லி விட்டு அப்படி அவள் நிற்காமல் போனது வினய்க்கு சுருக்கென்று இருந்தது. ஆனாலும் வந்த உடனே இதற்கு மேல் வேறென்ன அவளிடம் எதிர்பார்க்க முடியும். அவள் தன்னை ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்குள் விட்டதே பெரிய விஷயம் என்று நினைத்துச் சமாதானம் ஆனவன் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்குச் சென்றான்.
எல்லாரும் குளித்து முடித்து வந்ததும் வினய்க்கு பரிமாறினாள். பின்பு கவினை சாப்பிட வைத்து, தானும் உணவை முடித்தவள் மதிய உணவை பாக்சில் எடுத்து வைத்தாள்.
அவள் செய்வதை எல்லாம் பார்வையாளராக மட்டும் வினய் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது மீண்டும் வினய்யின் மடியில் குடியேறியிருந்தான் கவின். மகனின் கேசத்தை மெல்ல வருடிய படி மனைவியையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான்.
அவள் வேலைக்குக் கிளம்புகிறாள் என்று புரிந்தது. தந்தை ஒரு நாள் போனில் கோபமாகச் சொன்னது இப்போது காதில் ஒலித்தது.
‘பவ்யா குட்டி பையனை கங்காரு குட்டி போலத் தன்னுடன் கட்டிக்கொண்டு தினமும் வேலைக்குப் போய் வந்து கஷ்டப்படுகிறாள். நீ உன் மனைவியையும், பிள்ளையையும் இங்க கஷ்டப்பட விட்டுட்டு அங்க நீ சொகுசா இருக்கியா?’ என்று கேட்டதை இன்று நினைத்துப் பார்த்தான்.
இப்போதும் அப்படித் தான் போகின்றாளா? என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.
எல்லா வேலைகளையும் முடித்து வந்த பவ்யா தன் பையுடன் அருகில் வந்தவள் “குட்டி வாடா ஸ்கூல் போகலாம்” என்று அழைத்தாள்.
எப்போதும் அப்படிக் கூப்பிட்டால் தாவி கொண்டு அவளிடம் வருபவன் இன்று “ப்பா..?” என்று திருப்பி அப்பா வருவாரா என்று கேட்டான்.
“ப்பா இல்லடா. அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும். நீ உன் பிரண்ட்ஸ் எல்லாம் பார்க்கணும்ல” என்று அழைத்தாள். அதில் நாங்கள் வெளியே போய்கிறோம். நீ அதற்குள் ரெஸ்ட் எடு என்ற கணவனுக்கான செய்தியும் ஒளிந்திருந்தது.
வினய்யின் கழுத்தை கட்டிக்கொண்டு “ஹ்கும் வேணா…” என்றான் வேகமாக.
பிரண்ட்ஸே வேணாம்னா வேற என்ன சொல்றது என்பது போல முழித்தாள் பவ்யா. இது எல்லாம் அவர்களுக்குள் நடக்காத ஒன்றானதால் அவளுக்கு அவனை வேறு எப்படி அழைக்க என்று தெரியவில்லை.
எப்போதும் அவள் எங்கேயும் கிளம்பினால் அவனும் முதல் ஆளாகக் கிளம்பி நிற்பான். இப்போது இந்த மறுப்பை எப்படிச் சமாளிக்க என்று அவள் திணறினாள்.
வினய் தாய், மகன் உரையாடல் எதிலும் கலந்துக்கொள்ளவில்லை. வேடிக்கை பார்க்கும் பாவனையில் அமைதியாக இருந்து விட்டான்.
பின்பு ஞாபகம் வந்தவளாக “ஸ்கூல் போயிட்டு வரும் போது நிறையச் சாக்லேட் வாங்கிட்டு வருவோம். அப்படியே என் செல்லத்துக்குப் பிடிச்ச டாய்ஸ்” என்று ஆசை காட்டினாள்.
இப்போது கவினுக்குச் சாக்லேட் மேல் ஆர்வம் வந்தது. “நிய்யச் சாக்கி” என்று அவன் கையை முடிந்த மட்டும் பெரியதாக விரித்துக் காட்டினான்.
அவனின் ஆசையைப் பார்த்து “ஆமாம்” என்று பவ்யா வேகமாகத் தலையசைக்க… இப்போது குட்டிக்கு அப்பாவை விடச் சாக்கி முன்னிலைக்கு வந்துவிட வினய்யின் மடியை விட்டு எழுந்து “ப்பா டாட்டா…” என்று டாட்டா காட்டினான்.
மகனின் அந்தர் பல்டியில் வினய்யின் அதரங்கள் பெரிதாக விரிந்தன. மகனுக்கு டாட்டா சொன்னவன் இப்போது மனைவி என்ன சொல்ல போகிறாள் என்பது போலப் பார்த்தான்.
கணவனின் விரிந்த சிரிப்பை பார்த்து சில நொடிகள் அப்படியே பார்த்தது பார்த்தபடி இருந்த பவ்யா, அவனின் பார்வை அவள் புறம் திரும்பவும் சுதாரித்து, “லஞ்ச் ஹாட் பேக்ல வச்சுருக்கேன். ஜெட்லாக் இருக்கும்… ரெஸ்ட் எடுங்க. வீட்டுச் சாவி நான் எடுத்துட்டு போறேன். இன்னோரு சாவி அங்க இருக்கு” என்றவள் சாவி தொங்கிக் கொண்டிருந்த இடத்தைக் காட்டிவிட்டு அவனுக்குச் சொல்லவேண்டிய தகவலை சொல்லிவிட்டு அவனின் பதிலுக்காகக் காத்திருக்க, சரி என்பதாகத் தலையை மட்டும் அசைத்தான்.
அவன் சரி சொன்னதும் என் தகவல் முடிந்து விட்டது என்பது போலக் கவினை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
அவள் வெளியே சென்றதும் வினய்க்கு தந்தை சொன்ன கங்காரு குட்டி ஞாபகம் வர சுவரில் தொங்கிக் கொண்டிருந்த வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே வந்து அவள் சென்ற திசையைப் பார்த்தான்.
அவள் லிப்ட்டில் கீழே சென்றிருந்தாள். உடனே அந்தத் தளத்தின் பொதுவான பால்கனிக்கு சென்று பார்த்தான்.
அங்கிருந்து பார்த்தால் அப்பார்ட்மெண்டின் வாசல் கேட் தெரியும் என்பதால் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் பவ்யா கவினை முன்னால் அமர வைத்து மகனையும் தன்னையும் சேர்த்துத் துணியால் கட்டிக் கொண்டு வெளியே செல்வதைப் பார்த்தான்.
மனைவி கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தவன் பின்பு மீண்டும் உள்ளே வந்து தன் படுக்கையில் விழுந்து கண்களை இறுக மூடினான்.
கண்ணை மூடியிருந்தவன் கண்ணின் மணி உருண்டு கொண்டிருந்தது. முகம் வேதனையைத் தாங்கி இருந்தது. வெகுநேரம் அப்படியே இருந்தவன், ஜெட்லாக்கினால் தூக்கத்தின் பிடிக்குச் சென்றான்.
தன் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த பவ்யாவின் மனது பரவசமாக இருந்தது. வினய்யின் எதிர்பாராத வரவு அவளைத் திக்கு முக்காட வைத்திருந்தது.
அதை விட அவனிடம் தெரிந்த நிதானம், தான் சொன்னதற்கு எல்லாம் அமைதியாகச் சரி சொன்னது எல்லாம் வியப்பில் ஆழ்த்திருந்தது.
கணவன் என்ன நினைத்து வந்திருக்கிறான் என்று அவளுக்குத் தெரியாது. இனி தங்கள் வாழ்க்கை எந்தத் திசையில் செல்லும் என்றும் தெரியாது.
கவினை அரவணைத்துப் பாசம் காட்டியது ரத்த பாசமாக இருக்கலாம். தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்று முன்னோர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
தான் அனுப்பிய மின்னஞ்சலை பார்த்தும் இன்னும் அவன் ஒரு முறை கூட மகனை பற்றிப் போன் செய்தாவது விசாரிக்க வில்லையே என்ற கோபம் அவளுக்கு இருந்தது.
இன்னும் கூட அந்த வருத்தம் அவன் மீது இருக்கத் தான் செய்கிறது. காலையில் அவன் கண்கலங்கும் போது அதைக் கேட்டு விடவும் அவளின் நாவு துடித்தது. ஆனால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள்.
அவர்களுக்குள் அத்தனை பிரச்சனையும் அப்படியே தான் இருக்கின்றன. அது எல்லாம் தீருமா? இல்லை நீளுமா? என்று இனி வரும் நாட்கள் தான் முடிவு செய்யும் என்று நினைத்தவளுக்குப் பெருமூச்சு கிளம்பியது.
★★
மாலையில் வேலை முடிந்து வீட்டை திறந்து நுழைந்த போது வினய் என்ன செய்கிறான் என்று பார்க்கத்தான் அவளின் கண்கள் அலைபாய்ந்தன. அவளை விட வீட்டினுள் கால் வைத்ததும் “ப்பா…” என்று தேடி துள்ளிக் கொண்டு ஓடினான் கவின்.
அவனின் ஒரு கையில் பெரிய சாக்லேட் பார் ஒன்று இருந்தது. இன்னொரு கையில் ஒரு குட்டி கார் குடிபெயர்ந்திருந்தது.
இரண்டையும் காட்ட தந்தையைத் தேடினான். வரவேற்பறை வெறுமையாக இருக்கக் கவினின் முகம் உடனே சோர்ந்து போனது.
தாயின் முகமும் முதலில் வெறுமையைப் பார்த்து ஏமாற்றத்தை பிரதிபலித்தாலும், அவன் அறையில் இருப்பான் என்று உடனே தெளிந்து விட்டாள்.
ஆனால் கவினுக்கு அப்படி யோசிக்கத் தெரியாததால் தந்தை ஹாலில் இல்லை என்றதும், அவன் போய்விட்டான் என்று நினைத்து “ப்ப்ப்பா…” என்று கத்தியவனின் வாய் அழுகைக்குத் தயாரானது.
அவன் அழும் முன் “அப்பா ரூம்ல தூங்கிட்டு இருப்பார். போய்ப் பாருடா குட்டி” அவனை இடுப்பில் இருந்து கீழே இறக்கி விட்டாள்.
உடனே காலையில் தந்தை எந்த அறையில் இருந்து குளித்து விட்டு வந்தார் என்பதை ஞாபகம் வைத்து வினய்யின் அறைக்கு ஓடினான்.
“மெள்ள போடா குட்டி…” என்று சொன்ன பவ்யாவிற்கு அவனின் வேகம் கண்டு புன்னகை வந்தது.
அவளும் வினய்யின் அறைக்கு நேராக நின்று பார்த்தாள் லேசாகத் திறந்திருந்த கதவின் வழியாக அவன் படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.
‘என்ன இன்னும் இப்படித் தூங்குகிறான்?’ என்று நினைத்தபடி மதியம் சாப்டானா இல்லையா என்று பார்த்தாள். சாப்பாடு அப்படியே இருந்தது. ‘என்ன இவன் எழவே இல்லையா?’ என்று அதிர்ந்து போனாள்.
அவளுக்கு என்ன தெரியும் பல நாள் கெட்ட தூக்கத்தை இன்று தான் தொடர்கிறான் என்று.
உள்ளே சென்ற கவின் மெல்ல கட்டிலில் ஏறி தந்தையின் அருகில் போய் அமர்ந்து கொண்டான். வினய் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அருகில் இருந்து தந்தை எழுவதற்காகக் காத்திருந்தவன், அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் வினய்யின் மீது ஏறி அமர்ந்து மேலேயே மெல்ல படுத்துக் கொண்டான்.
பவ்யாவின் மீது அப்படி ஏறி படுப்பான் என்பதால் தந்தையிடமும் அதைத் தயங்காமல் செய்தான்.
அவன் மேலே ஏறினதுமே வித்தியாசத்தை உணர்ந்த வினய்க்கு முழிப்பு வந்து விட்டது. தன் மேல் குட்டி பாரத்தை உணர்ந்து கண்ணை விழித்துப் பார்க்க,
கவின் தன் மீது படுத்திருப்பதைக் கண்டு அவனின் கைகள் தன்னால் எழுந்து மகனை அணைத்துக் கொண்டது. அதனுடன் அவனின் உடல் சிலிர்த்துப் போனது.
அற்புதமான தருணம் அது. காணொளியில் கவினின் முகத்தைக் கண்ட நாள் முதலாக ஒரு தந்தையாக அவனுக்குப் பல ஆசைகள் எழுந்திருக்கின்றன.
இன்று அது எல்லாம் உண்மையாக நடக்கும் பொழுது அவனே அவன் கட்டுப்பாட்டில் இல்லாதது போல உணர்ச்சி வசப்பட்டான்.
தந்தையும் மகனும் அவர்கள் உலகில் இருக்க, வெளியே “வாங்க மாமா…” என்ற பவ்யா வீட்டிற்கு வந்த மாமனாரை வரவேற்றுக் கொண்டிருந்தாள்.
“வர்றேன் மா. என் பேரனை எங்க காணோம்?” என்று கேட்டபடி சோஃபாவில் சென்று அமர்ந்தார். அவருக்கு இன்னும் மகன் வந்தது தெரியவில்லை. அதனால் வழக்கம் போல வந்ததும் தன்னைத் தொற்றிக் கொள்ளும் பேரனை தேடினார்.
“குட்டி உள்ளே தான் இருக்கான் மாமா” என்று பதில் சொன்னதும் உள்ளே விளையாடுகிறான் போல என்று நினைத்து, “சரிமா அவன் கொஞ்ச நேரம் உள்ளேயே விளையாடட்டும். அதுக்குள்ள நான் பேச வந்ததைப் பேசிடுறேன்” என்றவர் தன் கையில் இருந்த பேப்பரை அவளிடம் நீட்டினார்.
அதை கையில் வாங்கிப் பார்த்தவள் அமைதியாக இருந்தாள். “விசா ஃபார்ம்மா. அதைப் பில் பண்ணி கொடு. நாளைக்கு அப்ளே பண்ணிறலாம். இன்னைல இருந்து உன் வேலை முடிஞ்சுருச்சுல?” என்று கேட்டார்.
“ஆமா மாமா முடிஞ்சது. இன்னைக்குத் தான் கடைசி நாள். சொல்லிட்டு வந்துட்டேன்” என்றவள் அவருக்கு வினய் வந்திருக்கும் விஷயத்தைச் சொல்ல வாயை திறந்தாள்.
ஆனால் அதற்கு முன் அவள் முன் அமர்ந்திருந்த ரங்கநாதன் அதிர்ந்து எழுந்து நின்றிருப்பதைப் பார்த்து, தன் பின்னால் திரும்பி பார்த்தாள்.
அங்கே அறையில் இருந்து தந்தையின் குரலை கேட்டு எழுந்து வந்த வினய்யும் அவன் கையில் கவினும் இருக்க, மகனை திடீரெனப் பார்த்து திகைத்து தான் போனார்.
தந்தையும், மகனும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க, அவர்களைக் கவனித்த பவ்யா “காலையில் தான் வந்தார் மாமா. ஸாரி மாமா. இன்னைக்கு வேலை கடைசி நாள். காலையில் ஏற்கனவே லேட் ஆகிருச்சு. அதோட ஸ்கூல்ல நிறைய வேலை இருந்ததுல மறந்துட்டேன். ஸாரி மாமா” என்று அவரின் மகன் வந்த விஷயத்தைச் சொல்லாமல் விட்டதை நினைத்து வருந்தினாள்.
ஆனால் அவள் என்ன சொல்கிறாள் என்பதைக் கூடக் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை. மகன் இங்கே வராமலேயே போய் விடுவானோ என்று ஒவ்வொரு நாளும் வருந்திக் கொண்டிருந்தவர் எதிரில் அவன் நின்றதில் சுற்றமும் மறந்து போனது அவருக்கு.
மகனை திடீரெனப் பார்த்த அதிர்வில் அவரின் உணர்வுகள் உச்சத்திற்கு ஏற அதைத் தாங்கும் சக்தி இல்லாமல் தளர்ந்து சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தார்.
அவரின் தளர்வை பார்த்து “என்னாச்சு மாமா?” என்று பதறி கேட்டபடி அவரிடம் ஓடினாள் பவ்யா.
“அப்பா…” என்று அவளுக்கு முன் பதறி அவரிடம் ஓடி வந்தான் வினய்.
தன் அருகில் பதட்டத்துடன் வந்தமர்ந்த மகனை பார்த்த ரங்கநாதன் “எம்மா பவ்யா! நான் கனவு எதுவும் காண்கலையே?” என்று மகன் மீது இருந்த பார்வையைச் சிறிதும் நகர்த்தாமல் மருமகளிடம் கேட்டார்.
தான் காலையில் நினைத்தது போல் தான் மாமாவும் உணர்ச்சி வசத்தில் சிக்கி கனவா என்று கேட்கிறார் என்று அவளுக்குப் புரிந்தது.
“நிஜம் தான்ப்பா கனவு இல்லை…” என்று தானே பதில் சொன்னான் வினய்.
தன்னிடமா மகன் இவ்வளவு அமைதியாகப் பேசுகிறான் என்று வியந்து போன ரங்கநாதன்.
“என் மேல இருந்த கோபம் எல்லாம் போயிருச்சா வினய்?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.
ஆனால் “கோபம் போயிருச்சுன்னு யார் சொன்னா?” என்று கேட்டுத் தகப்பனை மட்டும் இல்லாது மனைவியையும் சேர்த்துத் திகைக்க வைத்தான் வினய்.