16 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 16

“ரெண்டு பேரும் சோடியா நில்லுங்க…” என்றார் அப்பத்தா.

தேன்மலரை பேரன் அழைத்து வரும் முன், ஆரத்தியை தயார் செய்திருந்தார் அப்பத்தா.

“அப்பத்தா, இப்ப இது எதுக்கு?” என்று கேட்டவனின் குரலில் மறுப்பு இருக்க, தேன்மலரை விட்டு விலகி நின்றான்.

தேன்மலர் வேடிக்கை பார்த்த வண்ணம் அமைதியாக மட்டுமே இருந்தாள்.

“பேசாம நில்லுய்யா…” என்று அப்பத்தா அவன் மறுக்க முடியாத வண்ணம் அழுத்தமாகச் சொல்ல, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

தேன்மலரை விட்டு சில அடிகள் தள்ளியே நின்றிருந்த பேரனை பார்த்து வருத்தம் எழுந்தாலும் ஆரத்தி எடுக்கவாவது விட்டானே என்று நிம்மதி அடைந்தார்.

“உள்ளார வா தாயி. இனிமே இது உம்ம வூடு…” என்று தேன்மலரை வரவேற்றார்.

வீட்டிற்குள் நுழைந்தவள், நடுவீட்டிற்குள் அப்படியே நின்றாள். உரிமையான வீட்டிற்குள் வருவது போல் இல்லாமல் ஏதோ அந்நிய வீட்டிற்குள் நுழைந்த உணர்வே அவளுக்கு ஏற்பட்டது.

தாலி கட்டியவன் ஏனோ தானோ என்று தள்ளி நிற்க, அவளால் உரிமையாக எதையும் நினைக்க முடியவில்லை.

“எய்யா, உம் பொஞ்சாதியை மச்சுக்கு கூட்டிட்டு போ. அவ துணி எல்லாம் வைக்கட்டும்…” என்றார் அப்பத்தா.

“வா…” என்று அவளை அழைத்தவன், தன்னுடைய அறைக்கு அழைத்துச் செல்லாமல், அதன் அருகில் இருந்த இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றான்.

அதனைக் கண்ட அப்பத்தா, ‘சரிதேன், இவன் மனசு என்னைக்கு மாறப்போவுதோ?’ என்று நினைத்துக் கொண்டார்.

அவள் மயக்கமாக இருந்த போதும் அவளை அந்த அறையில் தான் படுக்க வைத்தான்.

அவளுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தாண்டி அவனால் ஒன்றும் யோசிக்க முடியவில்லை.

அப்பத்தா அவளை அவனின் பொஞ்சாதி என்று சொல்லும் போதெல்லாம் உள்ளுக்குள் துடித்துப் போனான் என்பதே உண்மை.

‘எம் பொஞ்சாதி எம் குமுதா மட்டுந்தேன்…’ என்று கத்தி சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் அப்படிச் சொல்ல முடியாதவாறு தேன்மலரின் கழுத்தில் தாலியை கட்டி அந்த வழியை அடைத்தவனே தான் அல்லவா? என்று தோன்றியதும் வலியுடன் தன்னை அடக்கிக் கொண்டான்.

ராமரிடம் ‘எம் பொஞ்சாதி மேலையா கை வச்ச?’ என்று அவன் கேட்ட போதே அவனின் உள் மனம் அவளைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டதை அவனே இன்னும் உணராமல் இருந்தான்.

தன் உள் மனம் புரியாமல் அவன் தவிப்புடன் இருக்க, தேன்மலரோ தனக்கு இப்போது கிடைப்பது அடைக்கலம் மட்டுமே என்று நன்கு அறிந்திருந்ததால் அவள் அதற்கு மேல் எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை.

அவளின் மனதில் தற்போது இருந்தது வெறுமை மட்டுமே.

“குளிக்க, வூட்டுக்கு பின்னாடி போவணும். பின்னால கிணறு இருக்கு. அதுல தண்ணி இறைச்சிக்கலாம்…” என்றான்.

‘சரி’ என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

“எய்யா, அவள சோறு உங்க கூட்டிட்டு வாரும்…” என்று அப்பத்தா அடுப்படியிலிருந்து குரல் கொடுத்தார்.

“அப்பத்தா கூப்டுறாக, வந்துடு…” என்றவன் முன்னால் சென்று விட்டான்.

அவன் சென்றதும், அந்த அறையைப் பார்த்தாள். பழைய வீடு தான். அந்த வீட்டில் ஒவ்வொரு அறையுமே பெரியதாகத் தான் இருந்தது. பெரிய கூடம். இரண்டு படுக்கையறை. ஒரு பெரிய அடுப்படி என்று இருந்தது.

அந்த அறையில் ஒரு ஆள் படுக்கும் அளவில் இரும்பு கட்டில் இருந்தது.

மரத்தினால் ஆன ஒரு அலமாரி இருந்தது. பரண் மேல், பித்தளை, வெங்கல பானை, அதிகம் புலங்காத பாத்திரங்கள் என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அறையைப் பார்த்ததுமே இது வைரவேலின் அறை இல்லை என்று அவளுக்குப் புரிந்து போனது.

என் மனதில் இன்னும் நீ இல்லை என்று சொன்னவனிடம் இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்? என்று எண்ணமிட்டுக் கொண்டாள்.

ஒரு துணி பையில் கொண்டு வந்த தன் உடைகளை அந்த அலமாரியின் அருகில் வைத்து விட்டு அறைக்கு வெளியே சென்றாள்.

கூடத்தில் சாப்பிட அமர்ந்திருந்தான் வைரவேல். அவளைப் பார்த்ததும், “நீயும் கையைக் கழுவிப் போட்டு இங்கன வந்தது உட்காரு தாயி…” என்று அழைத்தார் அப்பத்தா.

கையை எங்கே கழுவுவது என்பது போல் அவள் பார்க்க, “பின்னால அண்டால தண்ணீ இருக்கு…” என்றான் வைரவேல்.

பின்னால் நடந்து சென்று, கையைக் கழுவிவிட்டு வந்தாள்.

வைரவேலுவை விட்டு சற்று தள்ளியே அமர்ந்து கொண்டாள். அப்பத்தா இருவருக்கும் பரிமாற அமைதியாக உண்டு முடித்தனர்.

உண்டு முடித்ததும், தயக்கத்துடன் அப்பத்தாவை பார்த்தாள்.

“என்ன தாயி, எதுவும் வேணுமா?” அப்பத்தா கேட்க,

“சோறு மீதம் இருக்குமா ஆத்தா? ராசு சாப்பிடாம காத்திருக்கும்…” என்றாள்.

“ஒ ராசுவுக்கும் சேத்துத்தேன் சோறு பொங்கினேன் தாயி. இந்தத் தட்டுல எடுத்துட்டு போய் வை. அந்தத் தட்ட ஒ ராசுவுக்கே ஒதுக்கி வச்சுடு…” என்று அவளிடம் ஒரு தட்டை எடுத்துக் கொடுத்தார்.

தட்டை வாங்கி அதில் சோறை போட்டுக் கொண்டு வீட்டின் முன்பக்கம் சென்றாள்.

ராசு வாசலிலேயே நின்றிருந்தது.

“எய்யா ராசு. இங்கன வாரும்…” என்று திண்ணைக்குக் கீழே அமர்ந்து உணவை வைக்க, ராசு வேகமாக வந்து உண்டது.

“நாம இங்கன தேன் இருக்கப் போறோம்யா. நீ இங்கன இரு. காலைல நாம வயலுக்குப் போவலாம்…” என்று அவள் சொல்ல, அவ்வப்போது நிமிர்ந்து அவளைப் பார்த்து சொன்னதைக் கேட்டுக் கொண்டே உண்டு முடித்தது ராசு.

ராசு உண்டு முடித்ததும், வீட்டிற்குள் வர, அப்பத்தாவும் சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களைக் கழுவ பின்னால் சென்றார்.

அங்கே சென்றவள், “நா கழுவுறேன் ஆத்தா…” என்றாள்.

“இல்ல தாயி. ராவுல நீ தண்ணீல கை வைக்காத. ஆஸ்பத்திரியில இருந்து போட்டு வந்த ஒடம்பு, சேராம போவப் போவுது…” என்றார்.

“நா இப்ப நல்லாத்தேன் இருக்கேன் ஆத்தா. கொடும், நானே கழுவி வைக்கிறேன்…” என்றாள்.

“எங்கன நல்லா இருக்க? ஒடம்புல எலும்பும் தோலுந்தேன் கிடக்கு. மொத ஒடம்பத் தேத்தணும்…” என்றார்.

அப்பத்தாவும், தேன்மலரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வெளியே சென்று கயிற்றுக் கட்டிலை போட்டு படுத்துக் கொண்டான் வைரவேல்.

கடந்த ஒரு மாதமாகத் தன் அறையில் படுத்துக்கிடந்தவன், இன்று தேன்மலர் வீட்டிற்குள் படுப்பாள் என்பதால், உள்ளே படுக்காமல் வெளியே வந்து விட்டான்.

அப்பத்தா எந்தப் பாகுபாடும் காட்டாமல் அவளை ஏற்றுக் கொண்டார்.

அவளிடம் சகஜமாகப் பேசிக் கொண்டே வேலையை முடித்தார். அவளை அப்போதைக்கு வேலை பார்க்க விடவில்லை.

அவரின் அந்தக் கரிசனையில் தேன்மலரும் இயல்பாகப் பேச ஆரம்பித்தாள்.

வேலை முடிந்ததும் இருவரும் படுக்க வந்தனர்.

“நா திண்ணைல படுத்து பழகிப் போயிட்டேன் தாயி. நீ மச்சுக்குள்ளார படு. எதுவும் வேணும்னா கூப்பிடு…” என்றார்.

“சரி ஆத்தா…” என்றாள்.

அவளிடம் பேசிக் கொண்டே பேரனை விழிகளால் தேடினார். அவனின் அறை லேசாகத் திறந்திருந்தது.

ஆனால் உள்ளே ஆள் நடமாட்டம் இல்லை என்றதும் வெளியே வந்து பார்த்தார்.

வெளியே கட்டிலில் படுத்திருந்த பேரனை பார்த்தவர், ஒன்றும் கேட்காமல் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டார்.

கதவருகில் வந்து நின்றவளிடம், “நீ கதவத் தாப்பா போட்டுக்கோ தாயி…” என்றார்.

அவர் சத்தம் கேட்டதும் கட்டிலில் படுத்திருந்தவன் தலையைத் தூக்கிப் பார்த்தான்.

“ஏன் அப்பத்தா நீரும் அந்தப் புள்ளக்கு துணையா உள்ளார படுக்க வேண்டியது தானே?” என்று கேட்ட பேரனைப் பார்த்து நொடித்துக் கொண்டார் அப்பத்தா.

‘க்கும், அவன் பொஞ்சாதி கூட அவன் படுக்கமாட்டானாம். நா போய்ப் படுக்கணுமாம். எல்லாம் காரணமாத்தேன் பேராண்டி. நா இப்ப அவ துணைக்குப் படுத்தா, நீர் இன்னும் தோதா அவளை விட்டு விலகித்தேன் போவீரு. விலகி விலகி போனா அப்ப எப்ப நீங்க ரெண்டு பேரும் ஒட்டுறது?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவர் அவனுக்குப் பதில் சொல்லாமல் திண்ணையில் படுத்துக் கொண்டார்.

“என்ன அப்பத்தா, சொல்லிட்டே இருக்கேன். திண்ணைல படுக்குறீரு?” என்று கேட்டான்.

“நீரு ஏன் ராசா, இம்புட்டு நாளு இல்லாம இப்ப வெளியே வந்து படுத்திருக்கீரு? உம் பொஞ்சாதிக்கு துணையா நீர் உள்ளார வழக்கம் போலப் படுத்துருக்க வேண்டியது தானே?” என்று ராகமாக இழுத்துக் கேட்க,

‘கிழவிக்குக் குசும்பப் பாரேன்…’ என்று நினைத்தவன், அவரை முறைத்துப் பார்த்தான்.

‘போடா, போடா படவா. நா உமக்கே அப்பத்தாடா’ என்பது போல் பதிலுக்குப் பார்த்து வைத்தார்.

அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தேன்மலரின் இதழ்கள் மெல்ல புன்னகைத்துக் கொண்டன.

அதற்கு மேல் அப்பத்தாவிடம் வாய்க் கொடுக்காமல் பேசாமல் கண்களை மூடிக் கொண்டான் வைரவேல்.

“சரி தாயி, நீ உள்ளார போ…” என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டு தானும் கண்களை மூடி துயில் கொள்ள ஆரம்பித்தார் அப்பத்தா.

உள்ளே சென்று கட்டிலில் படுத்த தேன்மலரும், தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வில் பல நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உறக்கத்தைத் தழுவினாள்.

அன்றிரவு எந்தப் பயமும் இல்லாமல் அயர்ந்து உறங்கினாள்.

காலையில் விழிக்கும் போதும், நீண்ட நாட்களுக்குப் பிறகு புத்துணர்வாக உணர்ந்தாள் தேன்மலர்.

நேற்று மாலை இந்த வீட்டிற்கு வரும் போது அன்னியமாகத் தெரிவதாக உணர்ந்தவளுக்கு இப்போது ஏனோ அந்த உணர்வு எழவில்லை.

கண்விழித்தும் மார்பில் தவிழ்ந்த தாலி ‘இது நீ வாழ வேண்டிய வீடு’ என்று அவளுக்கு எடுத்துரைப்பது போல் இருந்தது.

தாலியை கையில் ஏந்தி சில நொடிகள் பார்த்தாள்.

பின் சேலைக்குள் திணித்து விட்டு எழுந்து வெளியே வந்து கதவை திறந்தாள்.

அப்பத்தாவும் அப்போது தான் எழுந்து வாசலை பெருக்கி கொண்டிருந்தார்.

கதவை திறந்ததும் எங்கிருந்தோ ஒடி வந்தது ராசு.

அவளிடம் சிறிது நேரம் செல்லம் கொஞ்சியது. அவளையும், ராசுவையும் பார்த்துவிட்டு தன் வேலையை அப்பத்தா தொடர, அவரின் அருகில் சென்றாள்.

“எங்கிட்ட கொடுங்க ஆத்தா. நா வாச தெளிச்சுக் கோலம் போடுறேன்…” என்றாள்.

அப்பத்தா எந்த மறுப்பும் சொல்லாமல் துடைப்பதை அவளிடம் நீட்டினார்.

துடைப்பத்தை வாங்கிப் பெருக்க ஆரம்பித்தவளின் பார்வை வைரவேல் படுத்திருந்த இடத்தை நோக்கி பாய்ந்தது.

வைரவேல் அங்கே இல்லை. அவன் படுத்திருந்த கட்டில் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்தது.

“லோடுக்கு கூப்புட்டாகனு உம் புருசன் போயிருக்கான்…” என்று அவளின் பார்வையைக் கவனித்து அப்பத்தாவாகப் பதில் சொன்னார்.

அவர் வைரவேலுவை ‘உம் புருசன்’ என்று சொன்னது அவளுக்குப் புது விதமான உணர்வை தந்தது.

அப்போது மட்டுமல்ல. அடுத்து வந்த அப்பத்தாவின் பேச்சில் அதிகம் இடம் பிடித்தது அந்த வார்த்தையாகத் தான் இருந்தது.

ஒவ்வொரு முறை அவர் அப்படிச் சொல்லும் போதும் தேன்மலரின் மனம் அந்தப் புதுவிதமான உணர்வில் தத்தளித்துப் போனது.

இத்தனை நாளும் அவன் கட்டிய தாலியை கழுத்தில் சுமந்தும் வராத உணர்வு இப்போது தோன்றியது.

அப்பத்தாவும், அவளுமாகக் காலை உணவை தயார் செய்து உண்டனர்.

வைரவேல் மதியம் தான் வருவதாக அப்பத்தாவிடம் சொல்லிச் சென்றிருந்தான்.

காலை உணவை முடித்ததும், தன் வயலுக்குச் சென்று வருவதாக அப்பத்தாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அவளின் பின் தானும் ஓடியது ராசு.

“ராசு இன்னைக்கு எமக்கு மனசுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்குயா. என்னன்னு தெரியலை. ஆனா மனசு லேசா இருக்கு…” என்று ராசுவிடம் பேசிக் கொண்டே நடந்தாள்.

அதுவும் அவளின் சந்தோஷத்தை புரிந்து கொண்ட பாவனையில் வாலை ஆட்டி குரைத்தது.

முதலில் தன் வீட்டிற்குச் சென்றாள்.

ராமர் அன்று எப்படியோ கள்ளசாவி பயன்படுத்தி அவளின் வீட்டின் பின் கதவை திறந்து தான் வீட்டிற்குள் வந்திருந்தான். அதனால் இப்போது இருபக்க கதவிற்கும் வேறு பூட்டை மாற்றிப் போட்டுக் கொடுத்திருந்தான் வைரவேல்.

அதுவும் அவள் மருத்துவமனையில் இருந்த போது அவளுடன் இருந்து கொண்டே இங்கே நம்பகமான ஆளை ஏற்பாடு செய்து மாற்றியிருந்தான்.

கதவை திறக்கும் போதே அவனின் அந்த அக்கறையான செய்கையும் அவளின் மனதில் வந்து போனது.

வீட்டிற்குள் சென்றதும், அவன் ராமரை அடிக்கப் பயன்படுத்திய உலக்கை முதலில் கண்ணில் பட, மீண்டும் அவனின் ஞாபகம் தான் வந்தது.

உள்ளறைக்குச் சென்ற போது, தன்னை அந்த நிலைமையில் பார்த்து அவன் பதறித் துடித்தது மனக்கண்ணில் வந்தது.

அதோடு ராமரை அடிக்கும் போது, ‘எம் பொஞ்சாதி மேலயா கை வச்ச?’ என்று சொன்னது இப்போதும் காதிற்குள் ரீங்காரமிட்டது.

தன்னை விட்டு விலகி சென்றவன் வாயிலிருந்து அவ்வார்த்தை வந்தது என்றால் என்ன அர்த்தம் என்று யோசித்துப் பார்த்தாள்.

அவனின் ஆழ் மனதில் தான் அவனின் மனைவியாகப் பதிந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மை புரிய அவளுக்குத் தித்தித்தது.

இத்தனை நாட்கள் அன்னையும், அவளுமாக நிறைந்து கிடைந்த நினைவுகளைத் தாண்டி, இப்போது அவனின் நினைவுகளை எழுப்பும் வீடாகத் தன் வீடு மாறிப் போனதை நினைத்து உள்ளம் உவகைக் கொண்டது.

அந்த நினைவுகளை அசை போட்ட வண்ணம் வீட்டை கூட்டி சுத்தம் செய்தாள். முன் வாசலையும், பின் வாசலையும் சுத்தம் செய்துவிட்டு, வீட்டிற்குள் வந்து அன்னையின் புகைப்படத்தின் முன் விளக்கை ஏற்றினாள்.

அமைதியாக அன்னையின் முகத்தைப் பார்த்தாள்.

‘ஏ வாழ்க்கை விடிஞ்சிரும் போல இருக்குமா. ஏ வாழ்க்கைல ஒரு கல்யாணம் நடந்து போடாதான்னு நீரு எம்புட்டு நாளா ஏங்கினீருன்னு எமக்குத் தெரியும் மா. இப்ப நானா தேடிப் போகாமயே எமக்குக் கல்யாணம் நடந்துருச்சுமா. ஆனா அதைப் பார்க்கத்தேன் உமக்குக் கொடுத்து வைக்கலை.

இந்தத் தாலிக்கு என்ன அர்த்தம்னு எமக்கு நேத்து வரைக்கும் புரியலை மா. ஆனா இன்னைக்குப் புரிஞ்சது மா. இப்ப எமக்குப் புருசன் இருக்காரு மா. அதும் எமக்கு என்னவும் ஆனா துடிக்கிற புருசன்…” என்று பெருமிதமாக அன்னையிடம் சொன்னாள் தேன்மலர்.

வைரவேலுவை புருசன் என்று சொன்ன போது அவளின் வாயோடு மனமும் தித்தித்தது.

அதே தித்திப்புடன் அன்றைய பூ பறிக்கும் வேலையை உற்சாகமாக ஆரம்பித்தாள் தேன்மலர்.

அவள் வேலையை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அங்கே மூன்று பெண்கள் வேலைக்கு வந்தனர்.

அவள் வேலைக்கு ஆள் சொல்லவே இல்லை. அப்புறம் எப்படி இவர்கள் வேலைக்கு வந்தனர் என்பதாக அவர்களைப் பார்த்தாள்.

“வேலு தம்பி தேன் கருக்கல்லே சோலிக்கு வர சொல்லிப் போட்டு போச்சு…” என்றனர்.

இன்பமாக அதிர்ந்தாள் தேன்மலர்.

அவள் கேட்காமலேயே அவள் வயலில் வேலைக்குச் சொல்லியிருக்கிறானே? என்று சந்தோஷப்பட்டுப் போனாள்.

அது மட்டுமில்லாமல் அன்று மதியம் லோடு வேலையை முடித்துவிட்டு நேராக அவளின் வயலுக்கு வந்தான்.

“உம்மை யாரு சோலி பார்க்க வர சொன்னா புள்ள? நேத்து தேன் ஆஸ்பத்திரியில் கிடந்து வந்துருக்க. இந்த நிலையில நீ சோலி பார்க்க வேண்டாம்னு தானே சோலிக்கு ஆள் சொல்லியிருந்தேன். அவுக தேன் சோலி பார்க்குறாகல? நீ வூட்டுக்கு கிளம்பு…” என்று அவளைக் கடிந்து கொண்டான்.

அவனின் கடிதலும் கூட அவளுக்கு இனித்தது.

“இல்லைய்யா, நா நல்லாதேன் இருக்கேன். நா இந்தச் சோலியை முடிச்சுப் போட்டே வர்றேன்…” என்றாள்.

“அதுதேன் வேணாம்னு சொல்றேன்ல? இந்த வெயிலுல சோலி பார்த்து திரும்ப மயங்கி விழவா?” என்று கேட்டான்.

“மயக்கம் எல்லாம் வரலையா. காலையில் நல்லா சோறு தின்னுட்டுதேன் வந்தேன். இன்னும் ஒரு பாத்தி தேன் இருக்கு. அதை முடிச்சு டவுனுக்கு அனுப்பிட்டு வர்றேன்…” என்றாள்.

“டவுனுக்குப் பஸ்ல எல்லாம் வேணாம். ஏ தோட்டத்து பூ கூட உம்மோடதையும் குட்டி யானைல போட்டு அனுப்பிடலாம். சொச்சம் பாத்தியை சோலிக்கு வந்திருக்கிறவக பார்த்துக்குவாக நீ வூட்டுக்கு கிளம்பு…” என்றான் பிடிவாதமாக.

அதற்கு மேல் அவனிடம் வாதாடிக் கொண்டிருக்காமல் கிளம்பினாள் தேன்மலர்.

அவனின் அக்கறையில் மனமெல்லாம் சிறகடித்துப் பறப்பது போல் இருந்தது.

அவளின் நடையிலும் கூட ஒரு துள்ளல் இருந்தது.

ஒரே நாளில் தன் மனம் இவ்வளவு மாற்றம் கொள்ளும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

தேன்மலர் தன் கணவன் வீட்டிற்குச் செல்ல, வீட்டை நெருங்கியதும் அங்கே வாசலில் நின்றிருந்தவர்களைப் பார்த்து அவளின் நடை தயங்கி தடுமாறியது. அவளின் முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி சட்டென்று மறைந்தது.

“என்ன ஆத்தா, அந்தச் சிறுக்கி மவள உம்ம வூட்டுலயே கொண்டாந்து வச்சுட்டீக போல?” என்று மனைவியுடன் வந்திருந்த கோவிந்தன் வாசலில் நின்று கோபமாகக் கத்திக் கொண்டிருந்தார்.