15 – மின்னல் பூவே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 15
“ஹாய் உத்ரா! எப்படி இருக்க?” என்று கேட்ட இலக்கியாவை பார்த்து சிரித்தாள் உத்ரா.
“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என்று உத்ராவும் விசாரித்தாள்.
“நாங்க நல்லா இருக்கோம். எங்கே ஷாப்பிங்கா?”
“ஆமா, கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வந்தேன்…” என்று உத்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே இலக்கியாவின் கையில் இருந்த அபிரூபா அவளிடம் தாவினாள்.
“ஹாய் ரூபி குட்டி. எப்படி இருக்கீங்க? இந்த ஆன்ட்டியை ஞாபகம் இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டாள்.
“நீ என்கிட்ட மட்டும் பேசிட்டு இருக்கன்னு உன்கிட்ட தாவுறாள். எப்படி ஞாபகம் வைத்திருக்கிறாள் பார்?” என்று பெருமையாகச் சிரித்தாள் இலக்கியா.
“ஆமா, ரூபிகுட்டி இந்த ஆன்ட்டியை மறக்கவே இல்லை. சமத்துக்குட்டி…” என்று சின்னக் குட்டியின் மூக்கோடு மூக்கு உரசி கொஞ்சினாள்.
அபிரூபாவோ உத்ராவின் மூக்கை கடிக்க முயன்றாள்.
“இங்க கடிங்க செல்லம்…” என்று தன் கன்னத்தை வாகாகக் காட்டினாள் உத்ரா.
அபி அவளின் கன்னம் முழுவதும் முத்தமிட்டு எச்சில் படுத்த ஆரம்பிக்க, உத்ரா குழந்தையின் கொஞ்சலை சுகமாக உள்வாங்கிக் கொண்டாள்.
“அச்சோ! அவங்க கன்னத்தை ஒரு வழி ஆக்கிருவ போல இருக்கேடி குட்டி…” என்று இலக்கியா மகளை அதட்ட, அவளின் மகளோ அம்மாவை பார்த்துப் பொக்கை வாயைக் காட்டிச் சிரித்தாள்.
“இருக்கட்டும்ங்க…” என்றாள் உத்ரா.
“கமலிக்கு நான் அண்ணினா உனக்கும் அண்ணி தான் உத்ரா. அண்ணினே கூப்பிடேன்…” என்று இலக்கியா உறவை சொல்லி அழைக்கச் சொல்ல, உத்ராவின் முகம் மாறியது.
ஆனால் முயன்று தன் முக மாற்றத்தை மறைத்துக் கொண்டு “சரிங்க அண்ணி…” என்றாள்.
“நீ கேட்டது அங்கே இல்லை லக்கி…” என்று சொல்லிக் கொண்டே அங்கே வந்த கார்த்திக் உத்ராவைப் பார்த்ததும் சிநேகமாகச் சிரித்தான்.
அவளும் பதிலுக்குச் சிரித்தாள்.
அவர்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் எதேர்ச்சையாகச் சந்தித்துக் கொண்டனர்.
“நாளை நாங்க ஊருக்கு கிளம்புறோம். ட்ராவலில் யூஸ் பண்ண சில திங்க்ஸ் தேவைப்படுது. அதான் வாங்க வந்தோம்…” என்றாள் இலக்கியா.
“ஓ, நாளைக்குக் கிளம்புறீங்களா?” என்ற உத்ரா அபியை இதமாக அணைத்துக் கொண்டாள்.
“இந்த ஆன்ட்டி உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் பேபி…” என்று சொல்ல, குழந்தையும் ஏதோ புரிந்தது போல அவளைச் சுற்றி கையைப் போட்டுக் கொண்டாள்.
“ஆமா, இப்போ போய்ட்டுத் திரும்பத் தம்பி கல்யாணத்துக்குத் தான் வருவோம். அப்போ திரும்ப மீட் பண்ணலாம்…” என்றாள் இலக்கியா.
முகிலின் திருமணம் பற்றிப் பேசியதும் உத்ராவின் மனம் வலித்தது.
இன்னும் சில நாட்களில் அவன் இன்னொருவளின் கணவன். அதுவும் சகோதரியின் கணவன் என்ற எண்ணமே அவளை வாள் கொண்டு அறுக்க, தன் அகத்தின் வலியை முகத்தில் காட்டாதிருக்க வெகுபாடு பட்டுப்போனாள் உத்ரா.
அவளுக்கு உதவியாக அவளின் கையில் இருந்த அபிரூபா இருக்க, அவளுக்கு விளையாட்டு காட்டுவது போல் லேசாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“எங்க வீடும் இங்கே பக்கத்தில் தான் இருக்கு. வாயேன் வீட்டுக்குப் போய்ட்டு அப்புறம் உங்க வீட்டுக்குப் போவ…” என்று உத்ராவை அழைத்தாள் இலக்கியா.
“பரவாயில்லைங்க அண்ணி. நீங்க ஊருக்கு கிளம்புற பிஸியில் இருப்பீங்க. இன்னொரு நாள் வர்றேன்…” என்று நாசூக்காக மறுத்தாள் உத்ரா.
“எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு உத்ரா. அதுவும் உன் தைரியம் ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆமா அன்னைக்குத் திருடனை அடிச்சியே அது கராத்தே அடி தானே? உனக்குக் கராத்தே எல்லாம் தெரியுமா?” என்று விசாரித்தாள் இலக்கியா.
“தெரியும் அண்ணி பிளாக் பெல்ட் வாங்கியிருக்கேன்…” என்று உத்ரா வெளியே சொன்னவள், “உங்களுக்கு என்னையும் என் தைரியத்தையும் பிடிச்சிருக்கு. ஆனா எனக்குப் பிடிச்சவனுக்கு அது தான் பிடிக்காம போய்டுச்சு அண்ணி…” என்று விரக்தியுடன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
“சூப்பர் உத்ரா…” என்று பாராட்டிய இலக்கியா, “எப்படி உனக்குக் கராத்தே கத்துக்க ஆர்வம் வந்தது?” என்று விசாரித்தாள்.
“நான் வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையா இருந்தேனே அண்ணி. அதான் காரணம். ரொம்பத் தனியா சின்ன வயசுல ஃபீல் பண்ணி போர் அடிக்குதுன்னு அம்மாவை தொந்தரவு பண்ணுவேனாம். அதான் அம்மா என்னை ஒவ்வொரு கிளாஸ்லயும் சேர்த்து விட்டுட்டாங்க. கராத்தே, பாட்டு, டான்ஸ்னு என் நேரத்தை பிஸியா வச்சுக்கிட்டேன்…” என்றாள்.
“ஹே, உனக்கு டான்ஸ் கூட ஆடத் தெரியுமா? அப்போ ஒன்னு பண்ணுவோமா?” என்று ஆர்வமாகக் கேட்டாள் இலக்கியா.
“என்ன அண்ணி?”
“முகில் கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயம் ஏற்கனவே செய்துட்டதால் அன்னைக்கு நலங்கு பங்க்ஷன் மட்டும் தான் நடக்கும். நலங்கு அப்போ ஒரு டான்ஸ் ஆடுகிறாயா? இப்போ எல்லாம் கல்யாணத்தில் இது போல டான்ஸ் ஆடுவது சாதாரணம் தானே? சர்ப்ரைஸா செய்யலாம். நீ என்ன சொல்ற?” என்று இலக்கியா கண்களில் ஆர்வம் மின்ன எதிர்பார்ப்புடன் கேட்டாள்.
உத்ராவோ நிச்சயமாக இலக்கியாவிடமிருந்து இப்படி ஒரு ஆசை நிறைந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.
முகிலின் திருமணத்தை நினைத்தே அவளின் மனம் ஆட்டம் கண்டு போயிருக்கும் நிலையில் அவனின் திருமணத்திற்குத் தான் ஆடுவதா?
நிச்சயமாக முடியாது!
இவர்களுக்கு எப்படி மறுப்புத் தெரிவிப்பது என்று சில நொடிகள் யோசித்தாள்.
அவளின் யோசனையைப் பார்த்த கார்த்திக் மனைவியின் கையைப் பிடித்து அழுத்தி ‘பேசாமல் இரு!’ என்று ஜாடை காட்டினான்.
“உங்களுக்கே தெரியும். நான் சமீபத்தில் தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன். ஆபீஸ், வேலை எல்லாமே புதுசு. இங்கிருந்து எனக்கு ரொம்பத் தூரமும் வேற. இந்த நிலையில் டான்ஸ் பிராக்டீஸ் செய்ய எனக்கு நேரம் கிடைக்காது.
அதுவும் இல்லாம என் டீம் லீடர் வேற ரொம்ப ஸ்ரிக்ட்டா இருக்கார். சோ, நான் வேலையைக் கவனமாகக் கற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கு. அது தான் யோசிக்கிறேன்…” என்று உத்ரா தயக்கத்துடன் சொல்ல,
கணவனின் கை அழுத்தமும், எப்படி மறுப்பது என்று உத்ரா தயக்கத்துடன் பேசிய விதமும் இலக்கியாவை மேலும் எதுவும் கேட்காமல் செய்து விட,
“ஸாரி உத்ரா. நான் தான் உன் சூழ்நிலை பற்றி யோசிக்காமல் பட்டுன்னு கேட்டுட்டேன்…” என்றாள்.
“பரவாயில்லை அண்ணி…” என்றாள் உத்ரா.
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றுக் கொண்டனர்.
“உத்ராவோட டீம் லீடர் ரொம்ப ஸ்ரிக்ட்டாம். அது எவன்னு தெரியலை. புதுசா வேலைக்குச் சேர்ந்தால் பதமா தானே சொல்லித் தரணும். என்னடா முகிலா? நீ எப்படி? நீயும் இப்ப லீடர் தானே?”
உத்ராவை பார்த்துப் பேசியது பற்றி வீட்டில் சொல்லிக் கொண்டிருந்த இலக்கியா, அப்படியே தன் தம்பியிடமும் திரும்பிக் கேள்வி கேட்டாள்.
‘அவளுக்குக் கொழுப்பைப் பார். நான் ஸ்ரிக்ட்டாமாம்? அதையும் என்னோட அக்காகிட்டயே சொல்லியிருக்காள். டான்ஸ் ஆட முடியாதுனா அதை மட்டும் சொல்லிட்டுப் போக வேண்டியது தானே? முதலில் இந்த அக்காவை சொல்லணும். அவளை எதுக்கு டான்ஸ் ஆட எல்லாம் கேட்கணும்?’ என்று அக்காவையும், உத்ராவையும் மனதிற்குள்ளேயே வறுத்தெடுத்தான் முகில்வண்ணன்.
அக்காவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவன் அவளை முறைக்க,
“நீ எல்லாம் அப்படிப் பண்ண மாட்ட டா. நீ தான் என் தம்பி, தங்க கம்பியாச்சே!” அவனின் முறைப்பில் ஐஸ் வைத்து தம்பியைக் கூலாக்க முயன்றாள்.
‘இது உனக்குத் தேவையா?’ என்பது போல் கார்த்திக் மனைவியைக் கேலியாகப் பார்க்க,
“நீங்க வாங்க. நாம போய் ஊருக்குப் போக எடுத்து வைப்போம்…” என்று கணவனையும் அங்கிருந்து அழைத்துச் சென்றாள் இலக்கியா.
தன் முறைப்பிற்கு நழுவி செல்லும் அக்காவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டான் முகில்வண்ணன்.
‘ஷப்பா! நல்லவேளை அக்கா யார் லீடர் அது இதுன்னு தூண்டித் துருவலை…’ என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
அடுத்த நாள் இலக்கியாவின் குடும்பம் ஊருக்குக் கிளம்பியிருந்தது.
அடுத்து வந்த ஒரு விடுமுறை நாளில் சில உடைகள் வாங்க மால் சென்றான் முகில்வண்ணன்.
ஆண்கள் பிரிவிற்குச் சென்றவன் உள்ளாடைகள், வீட்டில் அணியும் இலகுவான உடைகள் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு டீசர்ட்டை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது அவனின் பார்வை தற்செயலாகக் கடைக்கு வெளியே சென்றது.
அப்போது அந்தக் கடையைத் தாண்டி கமலினி சென்று கொண்டிருப்பது போல் தெரிய, டீசர்டை அதே இடத்தில் வைத்து விட்டு வெளியே விரைந்து சென்றான்.
அவன் வெளியே சென்று பார்த்த போது அங்கே கமலினி இல்லை.
‘அது கமலினி தானா? இல்லை வேற யாருமா?’ என்று நினைத்தவன் தன் கண்களைச் சுழல விட்டான்.
அப்போது அவன் நின்றிருந்த இடத்திற்கு நேரெதிராக இருந்த மின்தூக்கியின் அருகில் அதில் ஏற காத்திருந்தாள் கமலினி. கூடவே உத்ராவும் இருந்தாள்.
‘ஓ, ஏதோ கல்யாணத்துக்குத் தேவையான திங்க்ஸ் வாங்கணும்னு கமலி சொன்னாளே, அதுக்காக வந்துருப்பாங்க போல’ என்று நினைத்துக் கொண்டவன், கமலினியுடன் பேசும் ஆர்வத்துடன் அவளை நோக்கி நடந்தான்.
அப்போது அவன் வருவதை உத்ரா பார்த்து விட, கமலினி தன் கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவனைக் கவனிக்கவில்லை.
கமலினியைக் கண்டு தான் அவன் வருகிறான் என்று உத்ராவிற்கு நன்றாகத் தெரிந்தது.
“கமலி…” என்று அழைத்து முகில் வருவதைப் பற்றிச் சொல்ல அவளின் கையை உத்ரா பிடிக்க, அப்போது மின்தூக்கியின் கதவும் திறந்தது .
“என்ன உத்ரா? கதவு திறந்துருச்சுப் பார். வா, உள்ளே போவோம்…” என்று உத்ரா சொல்ல வருவதைக் கவனிக்காமல் அவளையும் அழைத்துக் கொண்டு மின்தூக்கியினுள் ஏறினாள் கமலினி.
தூரத்தில் இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த முகிலுக்கு உத்ரா தன்னைப் பார்த்ததும், கமலினியை வேகமாக அங்கிருந்து அழைத்துச் செல்வது போன்றதொரு காட்சியாகத் தெரிய அவனின் முகம் கோபத்தில் சிவந்தது.
ஏற்கனவே அவன் இரவு கமலினியுடன் பேசும் நேரத்தில் தான் உத்ராவும் அவளுடன் பேசுகிறாள் என்று தெரிந்ததிலிருந்து கடுப்பில் இருந்தான் முகில்வண்ணன்.
“ஏன் நான் போன் போடும் நேரமே அவளும் போடுறாள்? அவளை வேற டைம்ல பேச சொல்லு…” என்று நேற்று தான் கமலினியிடம் சிடுசிடுத்திருந்தான்.
“இல்லங்க. அந்த நேரம் தான் அவளும் ப்ரீயா இருப்பாள். அதான்…” என்று கமலினி சமாதானமாகச் சொல்ல,
“இன்னுமா நீ வாங்க வேண்டிய திங்க்ஸ் எல்லாம் வாங்காம இருக்க?” என்று கேட்டான்.
“எனக்கு நிறைய வாங்க வேண்டியது இருக்குங்க. அதுவும் இல்லாம எனக்கும் ஷாப்பிங் போக டைம் இல்லை. நானும் இப்போது தானே படிப்பை முடிச்சுட்டு வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன். உத்ராவும் பிஸி. அதான் வீக் எண்ட் மட்டும் ஃப்ரீ டைம் ஒதுக்கி கடைக்குப் போறோம்…” என்றிருந்தாள் கமலினி.
கமலினியும் மென்பொருள் கணினி பிரிவில் தான் படிப்பை முடித்து விட்டு இப்போது தான் வேலையில் சேர்ந்திருந்தாள்.
“என்ன கமலி இப்படிப் பண்ணிட்ட? நீ முகிலை பார்த்தியா இல்லையா?” மின்தூக்கியுனுள் ஏறியதும் கேட்டாள் உத்ரா.
“முகிலா?” என்று கேட்ட கமலினியின் உச்சரிப்பில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த உத்ரா அவளைக் கேள்வியுடன் பார்த்தாள்.
“முகில் இங்கே வந்திருக்கிறாரா என்ன?” என்ற கமலினியின் கேள்வியில் லேசான பதட்டம் தெரிவது போலிருந்தது.
“உன்னைப் பார்த்துட்டு உன் பக்கம் வந்துட்டு இருந்தார். அவரைப் பார்த்துட்டு தான் நான் உன் கையைப் பிடிச்சுக் கூப்பிட்டேன். அதுக்குள்ளே நீ லிப்ட்குள்ள என்னையும் சேர்த்து இழுத்துட்டு வந்துட்ட…” என்று அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டே சொன்னாள் உத்ரா.
“ஓ, நான் கவனிக்கலை உத்ரா. இப்ப என்ன, பரவாயில்லை. அப்புறம் அவர்கிட்ட போனில் பேசிக்கிறேன். இப்போ வீட்டுக்கு கிளம்பணும் உத்ரா. அம்மா இன்னும் வரலைன்னு தேடுவாங்க…” என்ற கமலினி மின்தூக்கியின் கதவு திறக்கவும் வெளியே சென்றாள்.
அவளைத் தேடி பின்னால் வந்தவனிடம் பேசாமலேயேவா செல்லப் போகிறாள் என்பது போல் கமலினியைப் பார்த்துக் கொண்டே அவளின் பின்னே சென்றாள் உத்ரா.
அவளிடம் அதைக் கேட்க நினைத்து உத்ரா வாயைத் திறக்க, அந்த நேரம் பார்த்துச் சரியாகக் கமலினிக்கு ஒரு போன் அழைப்பு வர, அவள் அதை எடுத்துப் பேச ஆரம்பித்தாள்.
“இதோ கிளம்பிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்க இருப்பேன்…” என்று போனில் சொன்ன கமலினி, “அம்மா தான் உத்ரா. நான் கிளம்புறேன். பை…” என்று சொன்னவள் விரைந்து அங்கிருந்து சென்று விட்டாள்.
‘இவள் எதுக்கு இப்படி ஓடுறாள்? நிறையப் பொருள் வாங்கணும்னு சொல்லித்தானே என்னையும் இங்கே வரச் சொன்னாள். இப்ப பாதித் தானே வாங்கியிருக்கு. அதுக்குள்ள என்ன அவசரம்?’ என்பது போல் சென்று கொண்டிருந்த கமலினியையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
அப்போது ஏதோ தோன்ற, பார்வையை மேல் நோக்கி செலுத்தினாள்.
மேலே நின்றிருந்த முகில்வண்ணன் கீழே பார்த்து அவளைத் தான் முறைத்துக் கொண்டிருந்தான்.
உத்ரா தான் கமலினியிடம் தன்னைப் பார்த்ததைச் சொல்லாமல் மறைத்து அவளை அங்கிருந்து விரைவில் அனுப்பி விட்டதாக அவன் நினைத்துக் கொண்டான்.
அது மட்டுமில்லாமல் அவளின் செயல்கள் எல்லாம் இப்போது அவனுக்குச் சந்தேகத்தை விதைத்திருந்தன.
இரவில் கமலினியிடம் தான் பேசும் நேரமாகப் பார்த்து அவளும் பேசுகிறாள். நேரில் பார்த்தால் கமலினியைத் தன்னுடனே வைத்துக் கொண்டு தன்னிடம் பேச விடாமல் தவிர்க்க வைக்கிறாள்.
இப்போதும் அவள் அதைத்தான் செய்வதாக நினைத்தவனுக்கு அவளின் மீதான சந்தேகம் வலுத்துக் கொண்டே போனது.
உத்ரா தன்னைக் காதலிப்பதால் கமலினியைத் தன்னிடம் பேச விடாமல் சூழ்ச்சி செய்கிறாளோ என்று நினைத்தான் முகில்வண்ணன்.
அவன் எண்ணத்திற்கு வலு சேர்ப்பது போல் தான் அடுத்து ஒவ்வொன்றும் நடந்து கொண்டே இருந்தது.
கமலினி அவனிடம் பேசும் நேரம் குறைந்தது. அப்படியே பேசினாலும் உத்ராவை பற்றி அவனிடம் அதிகம் பேசினாள். அவள் போன் பேசியதாக, அவளுடன் வெளியே சென்றதாக, அவள் அப்படி, இப்படி என்று ஏதாவது கதை சொன்னாள்.
“நம்மளைப் பத்தி பேசத்தான் போன் போட்டேன். உத்ரா புராணத்தைக் கேட்க இல்லை. இனி அவளைப் பத்தி என்கிட்ட பேசாதே!” என்று கோபமும் பட்டுவிட்டான்.
ஆனாலும் கமலினியின் பேச்சில் எப்படியாவது உத்ராவின் பெயர் வந்துவிடும்.
கமலினி அவளைப் பற்றிப் பேசப் பேச உத்ரா தான் ஏதோ சொல்லி அவளின் மனதை கலைத்து விட்டுக் கொண்டிருக்கிறாளோ என்று நினைத்தான்.
உத்ரா தன்னைக் காதலிப்பவள் என்ற ஒரு காரணமே அவனை அவ்வாறு நினைக்கத் தூண்ட போதுமானதாக இருந்தது.
‘என் கல்யாணத்தில் மட்டும் அவள் ஏதாவது கலகம் பண்ண நினைக்கட்டும். அப்புறம் இருக்கு அவளுக்கு’ என்று உள்ளுக்குள் கருவி கொண்டான் முகில்வண்ணன்.