13 – மின்னல் பூவே

அத்தியாயம் – 13

“என்ன வேகம்? என்ன ஓட்டம்? அதிலும் விட்டாள் பார் ஒரு அடி! மரண அடி தான்!” என்று உத்ராவின் சாகசத்தைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள் இலக்கியா.

“நானும் தூரத்திலிருந்து பார்த்தேனே! உத்ரா ஒரு ஆக்ஷன் குயின் தான்!” என்று மெச்சுதலாகச் சொன்னான் கார்த்திக்.

“நான் பக்கத்திலேயே இருந்தும், அம்மா கீழே விழுந்ததும் திகைச்சு நின்னுட்டேன். ஆனா உத்ரா பொண்ணு மின்னல் போலப் பாய்ந்து திருடனை தொரத்திட்டு ஓடினாள் பார். அப்புறம் தான் எனக்கு உஷாரே வந்து அம்மாவைத் தூக்கிவிட்டேன். நல்ல தைரியமான பெண்!” என்று பாராட்டினார் ரகுநாதன்.

“நான் திருடன்னு கத்தி முடிச்ச அடுத்தச் செகண்ட் திருடனைப் பிடிச்சு பையை மீட்டுட்டாளே. கெட்டிக்காரி தான்!” என்று வியந்து சொன்னார் வளர்மதி.

வரவேற்பறையில் கட்டியிருந்த தூளியில் அபிரூபா தூங்கிக் கொண்டிருக்க, இரவு உணவை உணவகத்திலிருந்து தருவித்து உண்டு முடித்துவிட்டுச் சோஃபாவில் அமர்ந்து அன்றைய நிகழ்வைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கீழே விழுந்ததில் நல்லவேளையாக வளர்மதிக்கு அடி எதுவும் படவில்லை.

உத்ரா துரிதமாகச் செயல்பட்டுத் திருடனைப் பிடித்ததற்கு அங்கேயே அவளுக்கு முகில் வீட்டார் பல நன்றிகள் தெரிவித்து விட்டனர்.

அவளிடமே அவளின் தைரியத்தைப் புகழ்ந்து பேசி பாராட்டியிருந்தனர்.

முகில் முதலில் உணர்ச்சி வேகத்தில் அவளின் நலத்தைக் கேட்டாலும், நன்றி தெரிவித்து விட்டு அதன் பிறகு ஒதுங்கிக் கொண்டான்.

அப்படி நலம் விசாரித்தது கூடத் தங்களுக்காக அவள் ரிஸ்க் எடுத்ததால் தான் என்று தனக்குத் தானே காரணம் சொல்லிக் கொண்டான்.

திருடனைப் பிடித்ததும் போலீஸில் ஒப்படைத்துவிட்டு அந்த வேலை முடிந்ததும் அவரவர் வீட்டிற்குக் கிளம்பி வந்துவிட்டனர்.

தாலி செய்ய அடுத்த முகூர்த்த நாளில் வைத்துக் கொள்வோம் என்று பேசி முடிவு செய்திருந்தனர்.

சம்பவம் நடந்து வெகுநேரம் ஆகிவிட்ட பின்பும், இன்னும் அதைப் பற்றிப் பேசி உத்ராவின் தைரியத்தைக் குடும்பமே மெச்சிக் கொண்டிருந்தனர்.

ஒருவனைத் தவிர!

முகில்வண்ணன் ஆரம்பக் கட்ட பிரமிப்பு விலகி அமைதியாகி இருந்தான்.

ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவளைப் பற்றித் தொடர்ந்து பேச, ‘ஹையோ! எப்படா அவள் புராணம் பாடுவதை நிறுத்துவார்கள்’ என்று நொந்து கொண்டான்.

அவளின் தைரியத்திற்கு என்ன குறை? அவள் தான் கூடப் படிக்கும் மாணவர்களைக் கூடத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அடி வெளுப்பாளே!

‘உங்களுக்கு எல்லாம் அவள் எவ்வளவு பெரிய ரௌடினு தெரியலை. அதான் அவள் சாகசம் உங்களுக்குப் பெருசா தெரியுது’ என்று மனதோடு சொல்லிக் கொண்டான்.

வெளியே சொன்னால் எங்கே அவள் மீது இருக்கும் நல்ல அபிப்பிராயத்தில் மொத்த குடும்பமும் தன் மீது பாய்ந்து விடுவார்களோ என்று அவனுக்குப் பயமாக இருந்தது.

‘எப்படியோ வீட்டில் எல்லோர்கிட்டவும் அந்த உத்ரா நல்ல பேர் வாங்கி வச்சுட்டாள். இனி நானே எதுவும் சொன்னாலும் என்னைத் தான் குறை சொல்வார்கள் போல’ என்று நினைத்துக் கொண்டவன், வாயை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனின் பயத்தைக் கூட்டுவது போல் தான் இலக்கியாவும் அந்த நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

“உத்ராவோட தைரியம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. பொண்ணுன்னா இப்படித்தான் தைரியமா இருக்கணும். துணிக்கடையில் கூட என்னிடம் தயக்கம் இல்லாமல் நல்லா பேசினாள். அதிலும் நம்ம அபிகுட்டி அவளிடம் ஈசியா ஒட்டிக்கிட்டது தான் எனக்கு இன்னும் ஆச்சரியமா இருக்கு…” என்றாள் இலக்கியா.

“உத்ரா நல்ல கலகலப்பான பொண்ணுமா. அதான் அபிகுட்டி ஈசியா ஒட்டிக் கொண்டாள்…” என்றார் வளர்மதி.

“ஏன் முகில் நீ படிச்ச காலேஜில் தான் அந்தப் பொண்ணும் படிச்சாலாமே? காலேஜில் நீ பார்த்து இருக்கியா…” என்று தம்பியிடம் கேட்டாள் இலக்கியா.

அவளைப் பற்றி எப்போது பேசி முடிப்பார்களோ என நினைத்த வண்ணம் கடனே என்று அமர்ந்திருந்த முகில் அக்காவின் கேள்வியில் கண்களை உருட்டி முழித்தான்.

இப்ப தெரியும்னு சொல்றதா? தெரியாதுன்னு சொல்றதா? என்று ஒரு நொடி குழம்பிப் போனான்.

“என்னடா கேள்வி கேட்டால் இந்த முழி முழிக்கிற?” இலக்கியா தம்பியைச் சந்தேகமாகப் பார்த்துக் கேட்டாள்.

“தெரியும், தெரியும்… பார்த்திருக்கிறேன். ஆனா ரொம்ப எல்லாம் ஒன்னும் தெரியாது…” என்று முடித்துக் கொண்டான்.

“உன்னோட ஆபீஸில் தான் வேலை பார்க்கிறாளாமே. ஆபீஸில் அவளுக்கு எதுவும் உதவி தேவைப்பட்டால் செய்டா…” என்றார் வளர்மதி.

‘சரிமா’ என்று தலையை ஆட்டி வைத்தான்.

‘நல்லவேளை அக்கா மாதிரி அவள் எந்த டீம்னு அம்மா கேட்கலை. என் டீம் தான்னு தெரிந்தால் அவள் வேலையும் சேர்த்து நீயே பாருடான்னு சொன்னாலும் சொல்லுவாங்க…’ என்று நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டவன் அதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்காமல் எழுந்துவிட்டான்.

“நாளைக்கு நான் வேலைக்குப் போகணும். இப்போ போய்ப் படுத்தால் தான் சீக்கிரம் எழுந்துக்க முடியும். எல்லாருக்கும் குட்நைட்…” என்றவன் தன் அறைக்குச் சென்றான்.

“உன் தம்பி அவன் உட்பியிடம் போன் பேசுறதுக்கு எப்படி நழுவி ஓடுறான் பார்…” என்று மனைவியின் காதில் கேலியுடன் முணுமுணுத்தான் கார்த்திக்.

இலக்கியாவால் காலையில் போல் கணவனுடன் சேர்ந்து தம்பியைக் கேலி செய்ய முடியவில்லை.

இன்று முழுவதும் கமலினி காட்டிய ஒதுக்கம் அவளைக் குழப்பிக் கொண்டு தான் இருந்தது.

தான் நினைப்பது கற்பனையாகக் கூட இருக்கலாம். எதற்குத் தேவையில்லாமல் தன் குடும்பத்தினரை குழப்ப வேண்டும் என்று தன் குழப்பத்தைத் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள்.

உள்ளே சென்று கதவை அடைத்துத் தாழ் போட்ட முகில் நேரம் பார்த்தான். இன்னும் சற்று நேரத்திற்குப் பிறகு அழைப்போம் என்று நினைத்துக் கொண்டான்.

குளியலறை சென்று உடையை மாற்றிக் கொண்டு வந்தவன் படுக்கையில் கால் நீட்டி அமர்ந்து கைபேசியைக் கையில் எடுத்தான்.

‘இன்னைக்காவது கமலி என்னிடம் நன்றாகப் பேசுவாளா?’ என்று நினைத்துக் கொண்டே அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

ஆனால் அழைப்புச் செல்லாமல், ‘தாங்கள் அழைக்கும் நபர் வேறொரு தொடர்பில் இணைந்துள்ளார்’ என்ற செய்தி தான் அவனை வந்தடைந்தது.

‘யாரிடம் பேசிக் கொண்டு இருக்காள்?’ என்ற யோசனையுடன் கைபேசியைப் பார்த்தான்.

பின் மீண்டும் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அழைக்க, அப்போதும் அதே செய்தி தான் வந்தது.

‘நான் தான் நைட் பேசுவேன்னு சொல்லியிருந்தேனே. அப்புறமும் ஏன் இந்த நேரம் வேற யாரிடமோ பேசிக் கொண்டு இருக்கிறாள்’ என்று கடுப்புடன் நினைத்தவன் கைபேசியைப் படுக்கையில் போட்டான்.

மேலும் பத்து நிமிடங்கள் ஆனதும், ‘இந்த ஒருமுறை தான் ட்ரை பண்ணுவேன். எடுக்கலைனா அவளுக்கு இருக்கு’ என்று முனங்கிக் கொண்டே அழைப்பு விடுத்தான்.

மாற்றமே இல்லாமல் அதே செய்தி அவனை வந்தடைய ‘ச்சை’ என்ற எரிச்சலுடன் கைபேசியை டேபிளில் போட்டு விட்டுப் படுத்துவிட்டான்.

‘அப்படி யார் என்னை விட முக்கியமான ஆள்? நான் போன் செய்வேன்னு சொன்னதைக் கூட மறந்துவிட்டுப் பேசுற அளவுக்கு முக்கியமான ஆளா என்ன?’ என்று புலம்பிக் கொண்டே படுக்கையில் புரண்டான்.

‘என்னிடம் ஒரு அஞ்சு நிமிஷம் பேச முடியாம தயங்கித் தடுமாறுகிறவள் இப்போது யாரிடமோ அரைமணிநேரமாகத் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறாள். இதற்கு என்ன அர்த்தம்?’ என்று குழம்பிப் போனான்.

ஒருவேளை பேசி முடித்துவிட்டுத் தனக்கு அழைப்பாளோ என்று எதிர்பார்த்தான்.

ஆனால் மேலும் ஒரு மணி நேரம் கடந்த பிறகும் கமலினி அழைக்கவே இல்லை.

அதற்கு மேல் எதிர்பார்த்து முழித்துக் கொண்டிருப்பது தன் முட்டாள்தனம் என்று நினைத்தவன் முயன்று தூக்கத்தைத் தருவித்துக் கொண்டான்.

ஆனால் மனம் முழுவதும் ஏமாற்றமும், கோபமும் நிறைந்திருந்தது.

மறுநாள் காலையில் வேலைக்குச் செல்ல கிளம்பி வெளியே வந்த தம்பியின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தாள் இலக்கியா.

அவனிடம் உற்சாகமின்மை இருக்க, ‘நைட் என்ன நடந்ததுன்னு தெரியலையே’ என்று கவலைக் கொண்டாள்.

அக்கா தன்னைக் கவனிப்பதைக் கண்டதுமே சட்டென்று தன் முகப்பாவத்தை மாற்றி, “என்னக்கா, என் முகத்தில் எதுவும் படம் ஓடுதா என்ன?” கேலியாகக் கேட்டான்.

அப்போது வரவேற்பறையில் யாரும் இல்லாததால் தம்பியின் அருகில் வந்தவள், “எதுவும் பிரச்சனை இல்லையே முகில்? எதுவா இருந்தாலும் சொல்லிருடா. எனக்கு என்னவோ நேற்றிலிருந்து மனசே சரியில்லை. என் மனசஞ்சலத்துக்கு ஏத்த மாதிரி தாலி வாங்க இருந்த தங்ககாசு வேற திருட்டுப் போக இருந்தது…” என்றாள்.

“அக்கா, நீ தேவையில்லாம கவலைப்படுற. அதான் திருட்டு போகலையே? அப்புறம் எதுக்கு ஏதேதோ நினைச்சு மனசை போட்டுக் குழப்பிக்கிற?” என்றான் முகில்.

“இல்லடா. எனக்குச் சொல்லத் தெரியலை. அதே நேரம் என் மனசஞ்சலத்தைத் தேவையில்லாததுன்னு ஒதுக்கவும் முடியலை…” என்றாள் தவிப்பாக.

“நீ இப்படித் தவிக்கிற அளவுக்கு ஒன்னும் நடக்கலைக்கா. அப்பா, அம்மா நல்லா விசாரிச்சு எனக்குப் பிடிச்ச மாதிரி அமைதியான பொண்ணைத் தான் தேர்ந்தெடுத்திருக்காங்க.

என்ன நான் எதிர்பார்த்ததை விடக் கமலி ரொம்ப அமைதியான பொண்ணா இருக்கிறாள். அது தான் உனக்கு வித்தியாசமா தெரியுது. அதனால் சும்மா அதைப் பற்றிக் கவலைப்படாம நிம்மதியா இரு…” என்றான்.

“ஆனா திருடு போக இருந்தது ஏனோ அபசகுணமா தெரியுதேடா…”

“எப்ப இருந்துக்கா நீ இந்தச் சென்டிமென்ட் எல்லாம் பார்க்க ஆரம்பிச்ச?”

“நடக்குறது எல்லாம் பார்த்தால் சகுனத்தில் நம்பிக்கை இல்லாத எனக்கே நம்பிக்கை வந்திரும் போல…”

“அவசரப்பட்டு அப்படி எதுவும் மூடநம்பிக்கையில் மாட்டிக்காதேகா. அப்புறம் எதைப் பார்த்தாலும் சந்தேகப்படத் தோணும்…” என்றான் கிண்டலாக.

“என்னைக் கிண்டல் பண்றது எல்லாம் இருக்கட்டும். அதென்னடா அமைதியான பொண்ணு தான் எதிர்பார்த்தேன்னு சொல்ற? அப்படி என்ன அமைதியான பொண்ணு வேணும்னு நினைப்பு?

கலகலப்பான பொண்ணா இருந்தால் தானே வாழ்க்கையும் கலகலப்பா இருக்கும். இப்ப பார் கமலியோட அமைதியால் நான் மண்டை காய்ஞ்சு போயிருக்கேன்…” என்றாள்.

“அவளோட அமைதி உன்னை ஏன் டிஸ்டர்ப் பண்ணுது? அதைப் பற்றி நான் தானே கவலைப்படணும்? எனக்கே அதைப் பற்றிக் கவலையில்லையே…” என்றான்.

“பொய் சொல்லாதேடா முகில். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட மூஞ்சை தொங்க போட்டுட்டு வந்த. என்னைப் பார்த்ததும் முகத்தை மாத்திக்கிட்ட. எனக்கு என்னமோ நைட் அவள் உன்னிடம் சரியா பேசியிருக்க மாட்டாள்னு தோணுது. அதான் உன் முகம் அப்படி இருந்திருக்கு…” என்றாள்.

‘க்கும், சரியா பேசலைனா கூட அவள் குணம் அப்படித்தான்னு என்னைத் தேற்றிக் கொண்டிருப்பேன். ஆனா பேசாமல் அவாய்ட் செய்தவளை நினைச்சு தான் முகம் வாடியதுன்னு நான் எப்படிச் சொல்வேன்?’ என்று தனக்குள் புலம்பியவனோ வெளியே முயன்று தன் முகப்பாவத்தை மாற்றிக் கொள்ளாமல் காத்துக் கொண்டான்.

“நீயா ஏதாவது கற்பனை பண்ணாதேகா…” என்று வெளியே அலட்சியமாகச் சொல்லிவிட்டு, சாப்பிட அமர்ந்தான்.

“எனக்கு வேலைக்கு நேரமாகுது. அம்மா சாப்பாடு ரெடி பண்ணிட்டாங்களான்னு போய்ப் பாருக்கா, போ…” என்று அவளை மேலும் எதுவும் கேட்க விடாமல் அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

சற்று நேரத்தில் அலுவலகம் சென்று சேர்ந்தான்.

தன் இருக்கையில் சென்று அமரப் போகும் போது காதில் விழுந்த பேச்சில் அதே இடத்தில் சட்டென்று நின்றான்.

“நைட் தான் பேசினோமே கமலி. அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னைக்கு ஈவ்னிங் கண்டிப்பா மீட் பண்ணலாம். ஆபீஸ் விட்டுக் கிளம்பும் போது திரும்பப் போன் போடுறேன். பை…” என்று பேசிக் கொண்டிருந்தாள் உத்ரா.

‘ஓஹோ! அப்போ நைட் கமலியை என்கிட்ட பேச விடாமல் அவளிடம் பேசிக் கொண்டிருந்தது நீ தானா? இது தெரியாமல் அவள் தான் யார்கிட்டயோ மொக்கைப் போடுறாள்னு நினைச்சு அவள் மேல் கோபப்பட்டுக் கொண்டு இருந்தேனே…’ என்று நினைத்து கமலினி மீதிருந்த கோபத்தை எல்லாம் ஒட்டு மொத்தமாக உத்ராவின் பக்கம் திருப்பினான்.

அவனுக்கு இருந்த கோபத்தில் அவள் நகையைக் காப்பாற்றிக் கொண்டு நன்றி எல்லாம் பின்னால் சென்றிருந்தது.

‘என்னிடம் கொஞ்ச நேரம் பேச நேரமில்லை. ஆனா உத்ரா கூட ஊர் சுத்த மட்டும் நேரம் இருக்காமா?’ என்று கமலினியின் மீதும் கோபம் கொண்டான்.

திருமணமாகப் போகின்ற உற்சாகமே அவனை விட்டுப் போனது போல் இருந்தது.

தன் இருக்கைக்கு வந்து தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

அக்காவிடம் குழப்பிக் கொள்ளாதே என்று சொல்லிவிட்டு வந்தவன் இப்போது தானே குழம்பி நின்றான்.

அப்போது மாதவன் வேலை விஷயமாக ஏதோ கேட்க வர, தன் மனநிலையை மாற்றி வேலையில் தன் கவனத்தைச் செலுத்தினான்.

அவன் சென்றதும் உத்ரா அவனிடம் ஒரு சந்தேகம் கேட்க வர, “வெயிட் பண்ணுங்க உத்ரா. இதோ வர்றேன்…” என்று இருக்கையை விட்டு எழுந்து சென்றுவிட்டான்.

அங்கே ஒரு ஓரமாக வைத்திருந்த காஃபி மிஷினில் இருந்து காஃபியைப் பிடித்து அங்கேயே நின்று நிதானமாகப் பருக ஆரம்பித்தான்.

‘இப்பத்தானே ஆபீஸ் வந்தாங்க. அதுக்குள்ள காஃபியா?’ என்பதாக அவனைப் பார்த்தாள் உத்ரா.

காஃபியைக் குடித்து விட்டு வந்துவிடுவான் என்று அவள் காத்திருக்க, அவனோ அப்படியே மின்தூக்கியில் ஏறி செல்ல ஆரம்பித்தான்.

வேலை விஷயமாக அவனிடம் முக்கியமாகக் கேட்டே ஆகவேண்டியது இருந்தது. அதனால் அங்கேயே காத்திருக்க ஆரம்பித்தாள்.

ஆனால் நேரம் தான் ஆகிக்கொண்டிருந்ததே தவிரச் சென்றவன் வரும் வழியைக் காணவில்லை.

“என்ன உத்ரா எதுக்கு இங்கே உட்கார்ந்து இருக்க?” என்று கேட்ட படி அங்கே வந்தாள் புவனா.

“முகில்கிட்ட ஒரு டவுட் கிளியர் பண்ணனும் புவி. அதுக்குப் பிறகு தான் ப்ரோகிராமில் அடுத்த ஸ்டெப் என்ன செய்யணும்னு பார்க்க முடியும். ஆனா முகில் வெளியே போனவர் இன்னும் வரலை…” என்றாள்.

“வருண்கிட்ட கேட்க வேண்டியது தானே உத்ரா?”

“வருண் இன்னும் வரலை புவி. சரி, நீ போ! நான் முகில் வந்ததும் கேட்டுட்டு வர்றேன்…” என்றாள்.

புவனா தன் வேலையைப் பார்க்க சென்றுவிட, உத்ரா அங்கே இருந்தாள்.

மேலும் நேரம் கடந்து கொண்டிருக்க, அதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து தன் இருக்கைக்குச் சென்றாள்.

ஒருமணி நேரம் கடந்த பிறகு தன் இருக்கைக்கு வந்து சேர்ந்தான் முகில்வண்ணன்.

அதுவரை தன் வேலையைத் தொடர முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் உத்ரா.

அவன் வந்ததும் எழுந்து அவனின் முன் வந்து நின்றவள், “ஒரு கோட்(code)ல எரர் வருது முகில். அதை என்னன்னு கொஞ்சம் என் சிஸ்டம் வந்து பார்க்க முடியுமா?” என்று அழைத்தாள்.

தன் சிஸ்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் தலையைக் கூட நிமிர்ந்தாமல், “உங்க டவுட் எல்லாம் கிளியர் பண்ற பொறுப்பை வருண்கிட்ட தானே கொடுத்துருக்கேன்? அவர்கிட்ட போய்க் கேளுங்க…” என்றான்.

“அவர் இன்னும் வரலை முகில்…” என்றாள்.

“வந்ததும் கேளுங்க. இல்லைனா என்ன எரர்ன்னு நீங்களே கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க. எல்லா நேரமும் மத்தவங்களே வந்து உதவி பண்ண முடியாது…” என்று கறாராக அவளின் முகம் பார்த்துச் சொன்னவன், மீண்டும் தன் தலையைக் கணினிக்குள் கொடுத்துக் கொண்டான்.

‘ஏன் இந்தக் கடுமை?’ என்று புரியாமல் முழித்தாள் உத்ரா.

புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு அதிகச் சந்தேகம் வருவது இயல்பு தான்.

சில நேரம் ப்ரோகிராம் அனைத்துமே ஒன்றும் புரியாமல் முழிக்க வைக்கும். அப்படி இருக்கும் போது உயரதிகாரிகள் வழி நடத்தி வேலையை முடிக்க வைப்பதும் நடப்பில் உள்ளது தான்.

டீம் லீடராக முகில் உதவி செய்ய வேண்டியது சாதாரண ஒன்று தானே.

அப்படியிருக்க, காரணமே இல்லாமல் திடீரெனக் கடுமையாக இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்ன அவள் தவறுதலாகக் கேட்டுவிட்டாள்? என்று புரியாமல் முகிலையே பார்த்துக் கொண்டு நின்றாள் உத்ரா.

“வேலையை முடிக்கிற உத்தேசம் இல்லையா? உங்க சீட்டுக்குப் போங்க…” என்றான் முகில்.

அவனின் பேச்சிலிருந்த கடுமை, முகத்தைச் சுருக்கிப் பேசிய விதம் இது வேலை விஷயமாக வந்த கடுமை இல்லை. வேறு ஏதோ கோபத்தைத் தன்னிடம் காட்டுகிறான் என்று புரிந்து கொண்டாள் உத்ரா.

‘அப்போ வேண்டுமென்றே என்னைக் காத்திருக்க வைக்கத் தான் வெளியே சென்றானா? என் மேல் அப்படி என்ன வன்மம்?’ என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்து விட்டு தன் இருக்கைக்குச் சென்றாள்.