11 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 11

தன் தாலியை பற்றியிருந்த ராமரின் கையை விலக்க போராடினாள் தேன்மலர்.

ஆனால் வக்கிரம் பிடித்தவனின் கையை அவளால் சிறிதும் விலக்க முடியவில்லை.

“உம்ம ஆம்பள வீரத்த இந்தப் பொட்டச்சிக்கிட்ட காட்டுறியே வெக்கமா இல்லை?” என்று ஆத்திரத்துடன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.

“பொட்டச்சி உமக்கு இம்புட்டு திமிராடி…” என்று அவளின் கூந்தலை இன்னும் அழுத்தி பிடித்து ஆட்டினான்.

“சும்மா பேசிட்டு இருக்காம தாலியை அத்து எறி ராமரு…” என்று கோவிந்தன் கத்த,

“இதோ மாமா…” என்றவன் வெக்கென்று தாலியை இழுக்கப் போக, அடுத்த நிமிடம் தாலி மேல் இருந்த அவன் கை அழுத்தமாகப் பற்றப்பட்டது.

தன் தாலி இனி அவ்வளவுதான் என்று வலியிலும், வேதனையிலும் தன் கண்களை அழுந்த மூடிக் கொண்டிருந்த தேன்மலர், இன்னும் தன் கழுத்தில் தாலியின் ஸ்பரிஷத்தை உணர்ந்து விழிகளை மலர்த்திப் பார்க்க, அங்கே அவளின் அருகில் ரவுத்திரம் பொங்க நின்று கொண்டிருந்தான் வைரவேல்.

அவனை அங்கே கண்டு அவளின் விழிகள் விரிய, “நா கட்டுன தாலியை அறுக்க, உமக்கு எவன்டா அதிகாரம் கொடுத்தது?” என்று அனல் தெறிக்கக் கேட்ட வைரவேல், ராமரின் கையைத் தாலியின் மேலிருந்து விலக்கி, கையை முறுக்கி திருப்ப, அவ்வலியில் அவள் கூந்தலை பற்றியிருந்த கையும் தன்னால் விலகியது.

“ஆஆ…” என்று கை வலியில் ராமர் கத்த,

“மாப்ள, என்ன இது? அவனை விடுங்க…” என்று கோபத்துடன் பாய்ந்து கொண்டு வந்தார் கோவிந்தன்.

அவரை ஆத்திரத்துடன் பார்த்தவன், “ஏன் விடுணும்? நா கட்டுன தாலியை எவனோ ஒருத்தன் வந்து அவுப்பான், நான் கைய கட்டி வேடிக்கை பார்க்கிட்டு கிடக்கணுமா?” என்று கேட்டான்.

“இது சரியில்ல மாப்ள. அப்ப இந்த வேசி மவ கழுத்துல நீர் தாலி கட்டியது சரின்னு சொல்றீரோ?” என்று கோவிந்தன் கேட்க,

“சரியோ, தப்போ கட்டுன தாலியை அறுக்கச் சொல்ற அளவுக்கு நா ஈனப்பிறவி இல்லை….” என்றான் வைரவேல்.

“ஓஹோ! அப்ப செத்த நேரத்துக்கு முன்னாடி ஏ மவ படத்து முன்னாடி தப்புச் செய்து போட்டேன்னு நீர் அழுதது எல்லாம் பொய். அப்ப எம் மவ எப்ப சாவா, இந்தச் சிறுக்கி மவ கழுத்துல எப்ப தாலி கட்டலாம்னு காத்திருந்தீரோ?” என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

தன் பிடியிலிருந்த ராமரை கோபத்துடன் தள்ளி விட்ட வைரவேல், மாமனாரின் அருகே வந்தான்.

“ஏ பொஞ்சாதி படத்து முன்னாடி நா மன்னிப்பு கேட்டு அழுதது நிசந்தேன். அதை நா இல்லைன்னு மறுக்கலை. ராவு நடந்தது நா சுயநினைவில் இல்லாத போது நடந்தது தேன். இந்தப் புள்ள பத்தி, நேத்து வர என்ன? இப்ப இந்த நிமிசம் கூட நா வேற விதமா நினைச்சுப் பார்த்தது இல்லை…” என்று வைரவேல் சொல்ல, அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த தேன்மலர் கசந்த முறுவலை சிந்தினாள்.

“வேற விதமா நினைக்காதவரு என்னாத்துக்கு இப்ப அவளுக்கு ஆதரவா தவ்விக்கிட்டு வர்றீரு?” என்று குறுக்கிட்டு கேட்டார் கோவிந்தன்.

“நா வராம வேற எவன் வருவான்? தாலி கட்டியது நான் தானே? நாந்தேன் வரணும்…”

“அப்போ தெரிஞ்சே தேன் தாலி கட்டிருக்கீரு? குடிச்ச மாதிரி நாடகம் போட்டீரோ?”

“நேத்து நா சுய நினைவுலேயே இல்லைனு இந்த வூருக்கே தெரியும். குடி போதையில் நா செய்தது தப்புத்தேன். ஆனா அதுக்காக அந்தப் புள்ளயும் நானும் தேன் பேசி முடிவெடுக்கணுமே தவிர, நீர் இல்ல. அதோட இந்த நேரத்துக்கு எங்கிட்ட கேட்காம ஏன் தாலி கட்டினன்னு அந்தப் புள்ள தேன் ஏ சட்டையைப் பிடிச்சுக் கேள்வி கேட்கணும். ஆனா நீர் எந்தத் தப்புமே செய்யாம தன்னந்தனியா இருக்குற பொட்டை புள்ள கழுத்துல கிடக்குற தாலியை அறுக்க, இம்புட்டு பேர கூட்டிட்டு வந்துருக்கீரு…” என்றான் வைரவேல்.

அவனின் பார்வை அங்கிருந்த ஒவ்வொருவரின் மீதும் வெறுப்புடன் படிந்து மீண்டது.

‘உங்க ஆண்பிள்ளை வீரத்தை இந்தப் பெண் பிள்ளையிடம் காட்ட வந்துவிட்டீர்களே, நீங்கள் எல்லாம் ஆண்பிள்ளை தானா?’ என்று கேட்ட அவன் பார்வையில் கோவிந்தனுக்குக் கோபம் சுர்ரென்று ஏறியது.

“நல்லாருக்கு மாப்ள உம்ம நியாயம்? இந்த வேசி கழுதை கேட்குற கேள்விக்கு நீர் பதில் சொல்வீரோ?” என்று எகத்தாளமாகக் கேட்டார்.

“போதும் மாமா. உம்ம மேல எமக்கு ரொம்ப மரியாதை இருக்கு. அதை நீரே கெடுத்துக்காதேரும். அந்தப் புள்ள வேசி தனம் பண்ணியதை நீர் பார்த்தீரா? அவ ஆத்தாளும், இவளும் எம்புட்டு ஒழுக்கமா வாழ்ந்தாகன்னு இந்த வூருக்கே தெரியும்.

அப்படியிருந்தும் நேத்து அம்புட்டு பேரும் என்னையவும், இந்தப் புள்ளயவும் சேர்த்து வச்சு பேசி அசிங்கப்படுத்திருக்காக. அப்படி அந்தப்புள்ள என்ன தப்பு பண்ணிப் போடுச்சுன்னு முந்தைய தலைமுறை செய்த தப்பை இன்னும் அவ மேல திணிக்கப் பார்க்கிறீரு?” என்று கோபத்துடன் கேட்டான்.

தன் மேல் நம்பிக்கை வைத்து பேசியவனை நன்றியுடன் பார்த்தாள் தேன்மலர். அவனிடமிருந்து இப்படி ஒரு ஆதரவு வரும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

சொல்ல போனால் அவர்களுடன் சேர்ந்து அவனும் தாலியைக் கேட்பான் என்று தான் நினைத்திருந்தாள். அவளுக்குத்தான் அவன் தன் மனைவியின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்று தெரியுமே!

‘குடி போதையில் தெரியாமல் கட்டிவிட்டேன். தாலியை அவுத்து கொடு’ என்று அவன் கேட்பான் என அவள் நினைத்ததற்கு மாறாகத் தான் அனைத்தும் அங்கே நடந்து கொண்டிருந்தது.

“என்ன மாப்ள, அவளுக்கு இம்புட்டு பரிஞ்சிக்கிட்டு வர்றீரு? அப்ப அவளுக்கும், உமக்கும் தொடுப்பு இருக்குன்னு வூரு சனம் சொல்றது அம்புட்டும் நிசந்தேன் போலருக்கு. எம் மவ போய்ச் சேர்ந்ததும், அடுத்தவளை பிடிச்சுட்டீரு. ஒருவேளை நீர் தேன் வேணும்னே எம் மவளை கிணத்துல பிடிச்சு தள்ளி விட்டீரோ?” என்று கோவிந்தன் இரக்கமே இல்லாமல் கேட்க,

அவரின் வார்த்தையில் சூட்டுக்கோலால் இழுத்தது போலச் சுரீரென்று எரிய துடித்துப் போனான் வைரவேல்.

அவ்வளவு நேரம் அவளுக்காக வாதாடிக் கொண்டிருந்தவன், சட்டென்று உடைந்து போனான்.

வார்த்தைகள் கொடுத்த வலி நெஞ்சில் ஆழமாக இறங்கி சுருக் சுருக்கெனக் கொடுத்த வலியில் அவனின் கண்களில் ஈரம் கோர்த்துக் கொண்டு வந்தது.

தொண்டைக்குழியில் இறங்க மறுத்த எச்சிலை வேதனையுடன் கூடி விழுங்கினான்.

கண்களை இறுக மூடி தன் வலியை அடக்கி கொள்ள முயன்றான். மூடிய இமைகளுக்குள் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டவன், தன் துக்கத்தையும் தொண்டை குழியில் விழுங்கிக் கொண்டான்.

அவனின் அவஸ்தையை அனுதாபத்துடன் பார்த்தாள் தேன்மலர்.

இமைகளை மெல்ல பிரித்தவன் “வேணாம் மாமா… எம் பொஞ்சாதி மேல நா உசுரையே வச்சுருக்கேன். இன்னொரு தடவை இப்படிப் பேசாதீர்…” என்றான் வேதனையுடன்.

“அப்புறம் என்ன இதுக்கு இவளுக்குப் பரிஞ்சிக்கிட்டு வர்றீரு மாப்ள? விலகிடும்! எம் மவ இருந்த இடத்துல இந்த வேசி மவ இருப்பதை ஒருக்காலும் என்னால அனுமதிக்க முடியாது…” என்று ஆத்திரத்துடன் சொன்னவர், அவனைத் தாண்டி சென்று தேன்மலரின் கூந்தலை பற்ற போனார்.

சட்டென்று அவரின் கையைப் பற்றித் தடுத்தான் வைரவேல்.

அவன் முகத்தில் மீண்டும் ரவுத்திரம் தாண்டவமாடியது.

மாமனாரும், மருமகனும் முட்டி மோதிக்கொள்வது போல் சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

ஒரு கையை நீட்டி தேன்மலரை மறைத்துக் கொண்டு, இன்னொரு கையால் மாமனாரின் கையை அழுந்த பற்றியிருந்தான் வைரவேல்.

“விலகும் மாப்ள!” ஆங்காரத்துடன் பற்களைக் கடித்தார் கோவிந்தன்.

“போதும் மாமா. இதுக்கு மேல நீர் ஏதாவது அந்தப் புள்ளய வம்பு இழுத்தா நா பார்த்துக்கிட்டு சும்மா கிடக்க மாட்டேன். அந்தப் புள்ளைக்கும், எமக்கும் தொடுப்பு இருக்குன்னு சொல்றீரா சொல்லிக்கிடும். எம் பொஞ்சாதியை நாந்தேன் கொன்னேன்னு பழி போடுறீரா போடும். நா பொம்பள சுகத்துக்கு அலையுறேன்னு சொல்றீரா? சொல்லிக்கிடும்.

ஆனா நீர் சொல்றது எதுவுமே நிசமில்லைன்னு எம் மனசாட்சிக்குத் தெரியும். நா தப்பு செய்திருந்தா அதைத் தட்டிக் கேட்க, நீரோ, இந்த வூரு சனமோ தேவையில்லை. எம் மனசாட்சி ஒன்னு போதும். அதுவே என்னைய குத்தி கிழிச்சு கொன்னு போடும்.

ஆனா நா உசுரோடத்தேன் உம்ம முன்னாடி இன்னும் நின்னுட்டு இருக்கேன். அதுவே நீர் சொன்ன என்ன தப்பும் நா செய்யலைனு உமக்கு இந்நேரம் புரிஞ்சிருந்திருக்கணும். ஆனா உமக்குப் புரியலை. புரியவும் செய்யாதுன்னு புரிஞ்சி போச்சு…” என்றவன் அவரின் கையைச் சட்டென்று விட, அவனின் பலத்தில் ஒரு அடி தள்ளிப் போய்த் தள்ளாடி நின்றார் கோவிந்தன்.

மருமகனை கோபத்துடன் முறைத்தவர், “யோவ், அங்காளி, பங்காளிகன்னு உம்மை எல்லாம் எதுக்குயா கூட்டிட்டு வந்தேன். எம் மாப்ள அந்தப் பொட்டச்சிக்கு பரிஞ்சி என்னையவே தள்ளி விட்டுக்கிட்டு இருக்கார். அம்புட்டு பேரும் வேடிக்கை பார்க்கிறீகளே. என்னன்னு நியாயத்தைக் கேளுங்கயா…” என்று உறவினர்களைப் பார்த்து கத்தினார்.

“ஏப்பா வேலு, என்னையா மட்டு மருவாதை இல்லாம மாமனாரையே தள்ளி விட்டுக்கிட்டு இருக்கீரு?” என்று ஒருவர் பரிந்து கொண்டு வந்தார்.

“அவர் செய்றது மட்டும் நியாயமா பெரியப்பா? நா இங்கன பேசிட்டு இருக்கும் போது, பொட்டைப் புள்ள மேல போய்க் கை வைக்கப் போறாரு…” என்றான் வைரவேல்.

“அவரு மன ஆதங்கம் அப்படி வேலு. இப்பத்தேன் மவள இழந்திருக்கார். இந்த நேரத்துல நீர் உடனே இந்தப் புள்ள கழுத்துல தாலி கட்டிருக்கீரு. சரி கட்டினது தேன் கட்டினீரு நம்ம சாதி, சனத்துல கட்டினாலும் பரவாலன்னு விட்டுப் போடலாம். ஆனா நீர் வூருக்குள்ளார கெட்ட பேருவுள்ள இந்தப் புள்ளய போய்க் கட்டியிருக்கீரு. அதைப் பார்த்துட்டு எப்படிச் சும்மா போவ முடியும்?” என்று அந்தப் பெரியவர் கேட்க,

“அதே தேன் மச்சான் நானும் கேக்குறேன். நம்ம சாதி சனத்துல இவரு கல்யாணம் கட்டியிருந்தா நானே அச்சதை போட்டு வாழ்த்தி விருந்தே வச்சுருப்பேன். அதை வுட்டுபோடு இந்த வேசி மவளை கட்டிக்குவாராம். நானும் பேசாம போகணுமாம். என்னைய என்ன சொங்க பயன்னு நினைச்சாரோ?” என்று மருமகனை முறைத்துக் கொண்டு பொருமினார் கோவிந்தன்.

அவர் பேசவே இல்லாதது போல் அவர் பக்கம் திரும்பாத வைரவேல், “எம் பொஞ்சாதி என்னைய விட்டுப் போனது உங்க எல்லாரோட விட எனக்குத்தேன் பெரிய இழப்பு பெரியப்பா. அவ என்னைய விட்டுப் போட்டு போன ரணம் இன்னும் ஏ நெஞ்சுல பச்சை புண்ணா புரையோடி போயி கிடக்கு.

அதுக்குள்ளார நா இன்னொருத்தியை தேடிப் போவேன்னு அம்புட்டு பேரும் நினைச்சுப் போட்டாக. எமக்குச் சாதி, சனமெல்லாம் பார்க்க தெரியாது பெரியப்பா. எமக்கு அம்புட்டு பேரும் ஒரே மனுச ஜென்மந்தேன். நா சக மனுசனுக்குச் செய்யும் சாதாரண ஒத்தாசையாத்தேன் இந்தப் புள்ளக்கு ஒத்தாசை செய்தேன். ஆனா அதுக்குக் கண்ணு, காத்து, மூக்கு வச்சு எம் மாமனாரு மட்டுமில்லாம இந்த வூரே பேசிப் போடுச்சு.

அப்பவும் நா விலகித்தேன் போனேன். ஆனா நேத்து அந்தப் புள்ள வூரு முன்னாடி கதறி அழுதப்ப போதைல இருந்த நா புத்தி பேதலிச்சுப் போய்த் தாலியைக் கட்டிப் போட்டேன். அது தெரியாம செய்த தப்புத்தேன்.

அந்தத் தப்பை பேசி சரி பண்ணிக்க வேண்டியது நானும், அந்தப் புள்ளயும் தானே தவிர நீங்க இல்லை. விலகிடும்! அம்புட்டு பேரும் விலகி போகிடும். நா செய்த தப்பை நாங்க சரி பண்ணிக்கிறோம்…” என்று முடிவாகச் சொன்னான் வைரவேல்.

“அதெப்படி விட முடியும்? பேசி சரி பண்ணுவார்னா அவ கூட வாழ ஆரம்பிப்பாராமா? அதுக்கு நா விட மாட்டேன். அவருக்கு இன்னொரு பொண்ணு தேன் வேணும்னா, இப்ப இந்த நிமிசம் எந்தம்பி மவளை அவருக்குக் கட்டி வைக்கிறேன். அவ கழுத்துல கிடக்கிற தாலியை அவுத்துப் போட்டு வர சொல்லும்…” என்று கோவிந்தன் எகிறினார்.

“பொண்ணா? யாருக்கு வேணும் பொண்ணு? எந்தப் பொண்ணையும் ஏத்துகிடுற நிலைமையில் நா இல்லை…” வைரவேல் முகத்தைச் சுளிக்க,

“இப்படிச் சொல்றவரு பின்ன என்னாத்துக்கு அவ கழுத்துல இருக்குற தாலியை அறுக்க யோசிக்கிறீரு?” என்று கோவிந்தன் வாதாட,

“அறுத்து அறுத்து கட்ட தாலி என்ன தாம்பூல கயிறா? நா அந்தப் புள்ள கூட வாழ்றது, வாழாதது எல்லாம் அப்புறம். மொதல இந்த விசயத்தைப் பத்தி நாங்க பேசணும். அப்புறமேட்டுக்குத்தேன் எந்த முடிவும் எடுக்க முடியும்…” என்றான்.

“அப்படியெல்லாம் விட்டுப் போட்டு போவ முடியாது. இப்பவே எமக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும். அவ கழுத்துல இருக்குற தாலியை அறுப்பீரா மாட்டீரா?” என்று கோவிந்தன் வீம்பாகப் பிடிவாதம் பிடித்தார்.

‘ம்ப்ச்…’ என்று சலித்துக் கொண்ட வைரவேல், தேன்மலரின் புறம் திரும்பினான்.

“இதைப் பத்தி உங்கிட்ட நா தனியா பேசணும்னு நினைச்சேன் புள்ள. ஆனா எம் மாமனார் பிடிவாதமா இருக்கார். நீ சொல்லு, ஒ கழுத்துல கிடக்குற தாலியை என்ன செய்யப் போற? கழட்டிக் கொடுக்கணும்னா எந்தத் தயக்கமும் இல்லாம கழட்டிக் கொடுக்கலாம். ஏன் கழட்டி கொடுத்தன்னு நா கேட்க மாட்டேன்…” என்றான்.

அவனை அதிர்ந்து பார்த்தாள் தேன்மலர். அவளின் அதிர்வை அமைதியாகத் தாங்கி நின்றான் வைரவேல்.

“இந்தத் தாலிக்கு என்ன அர்த்தம் இருக்குன்னு எமக்கு இன்னும் தெரியலைய்யா. ஆனா ஏ கழுத்துல தாலி ஒரு முறை தேன் ஏறும். அது உம்ம கையாள ஏறிடுச்சு. நீரு ஏ கூட வாழ்வீரோ வாழாம போவீரோ, அதைப் பத்தி எல்லாம் நா இப்ப நினைச்சுக் கூடப் பார்க்கலை. ஆனா ஏ தாலி எமக்கு வேணும். அம்புட்டுதேன்…” என்று உறுதியாகச் சொன்னாள் தேன்மலர்.

“சரிதேன், வேசிக்கு ஒரு தாலி கிடைச்சா சும்மா விடுவாளா? இவகிட்ட எல்லாம் வெட்டி நியாயம் பேசிட்டு இருக்கீரு? சிறுக்கி மவளே, தாலி வேணுமோ தாலி? உம்மை…” என்று ஆத்திரத்துடன் கத்திய கோவிந்தன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தாவி அவள் மார்பில் புரண்ட தாலியை பிடித்து இழுக்கப் போனார்.

தேன்மலர் மிரண்டு பின்னால் நகர, சட்டென்று மாமனாரின் குறுக்கே புகுந்து, அவரின் நெஞ்சில் கை வைத்து தள்ளி, “யோவ் மாமா, நானும் பொறுமையா பேசிட்டு இருக்கேன். ரொம்பத்தேன் துள்ளீர். உமக்கு அந்தத் தாலி தானேயா வேணும்? எடுத்துக்கிடும்! ஒரு பொண்ணு கழுத்துல இருந்து எப்ப தாலி இறங்கும்… அதைக் கட்டினவன் உசுரோட இல்லாத போது தானே? அதைக் கட்டிய என்னைய கொன்னு போடும். கொன்னு போட்டு அந்தத் தாலியை அறுத்து எறியும்…” என்று கோபத்துடன் சொல்லிய படி தன் நெஞ்சை நிமிர்ந்து கொண்டு மாமனாரின் முன் நின்றான் வைரவேல்.

அவன் கொல்ல சொல்லவும், சட்டென்று திகைத்து நின்றார் கோவிந்தன்.

“என்ன பார்க்கிறீரு? முடிஞ்சா எம்மைக் கொல்லும். கொன்னுப் போட்டு தாலியை அறும்…” மீசை ரோமங்கள் துடிக்க, கை நரம்புகள் புடைக்க, அய்யனாராக நிமிர்ந்து நின்றான்.

“வேணாம் மாப்ள. இது எல்லாம் நல்லா இல்ல. விலகி போயிடும்!” என்று கோவிந்தனும் சரிக்குச் சரியாக நின்றார்.

தன் கழுத்தை லேசாகத் திருப்பித் தேன்மலரை பார்த்த வைரவேல், “நீ உள்ளார போ!” என்றான் கடுமையாக.

அவனின் கடுமையில் மிரண்டு பின் வாங்கி, வேகமாக உள்ளே சென்றாள் தேன்மலர்.

அவளை உள்ளே விட்டு கதவை சாற்றித் தாளிட்டவன், கதவை மறைத்து வாசல் படியில் அப்படியே அமர்ந்தான்.

“மாமா, மச்சான், பெரியப்பா, சித்தப்பா, அங்காளி, பங்காளி எவனா இருந்தாலும் வாங்க. முடிஞ்சா என்னைய கொன்னுப் போட்டு அப்புறம் என்ன வேணா செய்ங்க…” என்று அங்கிருந்த ஒவ்வொருவரையும் பார்த்து சவாலாக அழைத்தான் வைரவேல்.

‘வந்து தான் பாரேன்! வந்தால் என்ன ஆகும் என்று காட்டுகிறேன்!’ என்ற சவால் அவன் கண்களில் சுடர்விட்டு எரிந்தது.

“இது வேலைக்கு ஆவாது கோவிந்தா. உம் மருமவன் ஒரு முடியோடதேன் இருக்காரு. அருவாவை எல்லாம் விட்டு விளாசி பல காலம் ஆகிப்போச்சு. இம்புட்டு வயசுக்கு மேல ஜெயிலுல உட்கார்ந்து களி தின்ன முடியாது. என்ன இருந்தாலும் நீயே உம் மருமவன் கிட்ட பேசி தீர்த்துக்கோ…” என்ற சில உறவினர்கள் விலகி சென்றனர்.

அவர்களை வெறுப்புடன் பார்த்த கோவிந்தனுடன், ராமரும், இன்னும் இரண்டு பேரும் நின்றிருந்தனர்.

“நீர் ம்ம்ன்னு சொல்லு மாமா, அவனை ஒரு கை பார்த்துப் போடலாம்…” என்று ராமர் எகுற, அவனைக் கை நீட்டி தடுத்தார் கோவிந்தன்.

“இப்ப நீர் என்னதேன் சொல்றீர் மாப்ள?” என்று இழுத்துப் பிடித்த பொறுமையுடன் கேட்டார் கோவிந்தன்.

“ஏ விசயத்தை நா பார்த்துக்கிடுறேன்…” என்று உறுதியாகச் சொன்னான் வைரவேல்.

“நம்ம உறவு விட்டுப் போகும் மாப்ள…” என்று கடுமையாகச் சொன்னார் கோவிந்தன்.

“எம் பொஞ்சாதி போனதோட எல்லாமே போயிருச்சு மாமா. இதுக்கு மேல எமக்கு என்ன இருக்கு?” என்று வைரவேல் கேட்க,

அவனை இடுங்கிய கண்களுடன் பார்த்த கோவிந்தன், “வாங்கயா போவோம்…” என்று தன்னுடன் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

அவர்கள் பேசியதை எல்லாம் அந்தப் பக்கம் கதவின் மீது சாய்ந்து அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தேன்மலர் விழிகளை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.

‘இனி தன் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ?’ என்ற கேள்வி அவளின் முன் பெரியதாக எழுந்து நின்று பயமுறுத்தியது.

கதவிற்கு இந்தப் பக்கம் வாசல் படியில் அமர்ந்து, ‘தன் தவறை எப்படிச் சரி செய்யப் போகிறோம்?’ என்ற விடையறியா கேள்வியுடன் வான்வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வைரவேல்.