11 – மின்னல் பூவே

அத்தியாயம் – 11

“கிளம்பலாமா அக்கா? ரெடி ஆகிட்டீயா? இன்னும் நேரம் ஆகுமா?” என்று தமக்கை இருந்த அறை வாசலில் நின்று கேட்டான் முகில்வண்ணன்.

அப்போது தான் தன் குழந்தையைக் குளிக்க வைத்து விட்டுக் குளியலறையில் இருந்து வெளியே வந்த இலக்கியா தம்பியை முறைத்துப் பார்த்தாள்.

“என்னக்கா?”

“உனக்குக் கமலியைச் சீக்கிரம் பார்க்கணும். அதுக்காக என்னை விரட்டுவியா?” என்று கேட்டாள்.

“அப்படின்னு நான் சொன்னேனா?”

“நீ சொன்னாத்தானா? உன் அவசரத்தைப் பார்த்தால் சின்னப் பிள்ளை கூடச் சொல்லும்…”

“அபாண்டமா சொல்லாதே கா. நான் எங்கே அவசரப்பட்டேன்? கிளம்பிட்டியான்னு கேட்டது ஒரு குத்தமா?” என்றான்.

“நீ இனிதான் குடும்பஸ்தன் ஆகப்போறவன். நான் ஏற்கனவே குடும்பஸ்திரி. புள்ள, புருஷனை எல்லாம் கிளப்பி விட்டுட்டுத் தான் நான் கிளம்ப முடியும்…” என்றாள்.

அக்காவும் தம்பியும் பேசிக் கொண்டிருக்க, அக்கா பெற்ற மகளான அபிரூபாவோ, ‘என்னைக் கவனிக்காமல் அங்கே என்ன பேச்சு’ என்பது போல் அம்மாவின் கன்னத்தில் தன் நகத்தால் பிராண்டி வைத்தாள்.

“ஷ்ஷ்… சும்மா இருடி! அங்கே ஒருத்தன் அவசரப்படுத்துறான்னா, இங்கே நீ…” என்ற இலக்கியா மகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

“என் மாமாவை ஏன் திட்டுறன்னு சொல்லித்தான் அபி குட்டி உன்னைக் கிள்ளுகிறாள். என்னடா அபி குட்டி?” என்று மருமகளுடன் கூட்டணி போட முகில் முயல, அவன் சொன்னது புரிந்தது போல் இன்னும் பல் முளைக்காத வாயை அகலமாக விரித்துச் சிரித்தாள் அந்த எட்டு மாத சிட்டு.

அதில் அகமகிழ்ந்து போனான் மாமன் காரன்.

“என் பொண்ணு உனக்கெல்லாம் சப்போர்ட் பண்ண மாட்டாள். எனக்குத் தான் பண்ணுவாள். அப்படித்தானே குட்டி?” என்று இலக்கியா மகளைக் கொஞ்ச, தானும் அன்னையைக் கொஞ்சும் முயற்சியில் அவளின் கன்னத்தை எச்சில்படுத்தினாள்.

“என் பொண்ணு யாருக்கும் சப்போர்ட் பண்ணலை. நான் தான் என் பொண்ணுக்குச் சப்போர்ட் பண்ண போறேன். குட்டி குளிச்சு எவ்வளவு நேரமாச்சு. இன்னும் ஏன் அவளுக்கு ட்ரெஸ் மாத்தாம வச்சுருக்க லக்கி?” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்தான் அவளின் கணவன் கார்த்திக்.

மகளைக் குளிக்க வைக்க மனைவிக்கு உதவி செய்து விட்டு அப்படியே தான் குளித்துவிட்டு வந்திருந்தான்.

“எல்லாம் இவனால் தாங்க…” என்று தம்பியை நோக்கி பழிப்புக் காட்டிவிட்டு மகளைக் கவனித்தாள் இலக்கியா.

“அவன் புதுமாப்பிள்ளை மிதப்பில் இருக்கான். அப்படித்தான் இருப்பான். நீ குட்டியை ரெடி பண்ணு…” என்ற கார்த்திக் முகிலை பார்த்துக் கண்சிமிட்டினான்.

“அத்தான், நீங்களும் கேலி பண்ணாதீங்க. நான் எப்பவும் போல் தான் இருக்கேன்…” என்ற முகில் அதற்கு மேல் அங்கே நிற்காமல் நழுவி சென்று விட்டான்.

இன்னும் இருந்தால் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தன்னைக் கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று நன்கு அறிந்தவன் ஆகிற்றே!

நேற்று காலை மதுரையிலிருந்து வந்து இறங்கியதிலிருந்தே இருவரும் அந்த வேலை தானே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து கேலியும், கிண்டலுமாகப் பேசியபடி காலை உணவை முடித்துக் கொண்டு ஆடையகத்திற்கு முகில் வீட்டார் வந்து சேர்ந்திருந்தனர்.

கமலினி வீட்டினர் இன்னும் வராமல் இருக்க, “நாம உள்ளே போய் உட்காருவோம். பொண்ணு வீட்டுக்காரர்கள் வந்ததும் புடவையைப் பார்க்க ஆரம்பிக்கலாம்…” என்றார் ரகுநாதன்.

அதன் படி காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல ஆரம்பித்தனர்.

அப்போது உத்ராவும், அஜந்தாவும் இருசக்கர வாகனத்தில் வந்து ஆடையகத்திற்கு முன்னால் இறங்கிக் கொண்டிருந்தனர்.

உத்ரா வண்டியை இடம் பார்த்து நிறுத்த செல்ல, அஜந்தா ஓரமாக நின்றிருந்தார்.

அப்போது தற்செயலாக அஜந்தாவைக் கவனித்தார் வளர்மதி.

“ஏங்க, அவங்க பொண்ணு வீட்டுக்காரங்க தானே?” முன்னால் சென்று கொண்டிருந்த கணவனிடம் கேட்டார்.

“யாரு வளர்?” என்று ரகுநாதன் பார்க்க, பொண்ணு வீட்டுக்காரர் என்ற வார்த்தையில் அவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த முகில், இலக்கியா, குழந்தையுடன் இருந்த கார்த்திக் மூவரும் நின்று திரும்பிப் பார்த்தனர்.

வளர்மதி, அஜந்தாவைக் காட்டி, “நிச்சயத்தனைக்கு அவங்களைப் பார்த்திருக்கேன். ஏதோ ஒன்னுவிட்ட அண்ணன் தம்பி முறைன்னு சம்பந்தியம்மா சொன்னாங்க…” என்றார்.

“ஆமா வளர். நானும் பார்த்திருக்கேன். இவங்களையும் புடவை எடுக்கப் பொண்ணு வீட்டில் அழைச்சிருப்பாங்களா இருக்கும்…” என்றார் ரகுநாதன்.

“நான் போய்ப் பேசி அழைச்சுட்டு வர்றேன்…” என்ற வளர்மதி அஜந்தாவை நோக்கி சென்றார்.

வளர்மதியைப் பார்த்ததுமே சிரித்து வரவேற்று பேசினார் அஜந்தா.

அப்போது அங்கே உத்ராவும் வர, “இவள் என் பொண்ணு உத்ரா…” என்று அவருக்கு அறிமுகப்படுத்தியவர்,

“இவங்க நம்ம கமலி மாமியார் உத்ரா…” என்று மகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

உத்ரா அவருக்கு வணக்கம் சொல்ல, அதே நேரம் அவள் யார் என்று அறிந்து கொண்ட முகிலின் முகம் விளக்கெண்ணைக் குடித்தது போல் ஆனது.

கமலினிக்கு உத்ரா சொந்தம் என்பதை ஏனோ அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இருவருக்கும் தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு வளர்மதி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“உங்க பொண்ணை நிச்சயத்தன்னைக்குப் பார்க்க முடியவில்லையே?” என்று விசாரித்தார் வளர்மதி.

“அன்னைக்கு அவள் வரலை. உடம்பு முடியாம வீட்டில் இருந்தாள்…” என்றார் அஜந்தா.

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த முகில், உத்ராவை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

அவளோ சாதாரணமாகக் கூட அவனின் புறம் திரும்பவில்லை.

தன்னைப் பார்த்து தன் போல் அவள் அதிர்ச்சி அடையவில்லை என்பதே அவளுக்கு முன்பே தான் தான் மாப்பிள்ளை என்று தெரியும் என்று அவனுக்குப் புரிந்தது.

ஒருவேளை தன்னை இன்னொரு பெண்ணுடன் பார்க்க முடியாமல் தான் அவள் நிச்சயத்தார்த்திற்கு வரவில்லையோ என்ற யோசனையுடன் அவளைப் பார்த்தான்.

ஆனால் இப்போது வந்திருக்கிறாளே? இப்போது கமலியும் தன்னுடன் இருப்பாளே? தெரிந்தும் துணிந்து வந்திருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் சிந்தனை ஓட்டம் அத்துடன் நின்று போனது.

அவள் எதுக்கு வந்தால் என்ன? எதற்கு இப்போது அவளைப் பற்றித் தேவையில்லாத ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்? என்று தன்னையே கடிந்து கொண்டவன் அவளைப் பற்றிய சிந்தனையில் இருந்து வெளியே வந்தான்.

அந்த நேரம் சரியாகக் கமலினியின் வீட்டாரும் வந்து விட, அதன் பிறகு வேறு எண்ணமும் அவனை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ள முயன்றான்.

ஆனால் அவனின் முயற்சிக்கு அடுத்தடுத்து பெரிய சோதனை காத்திருந்தது.

கமலினியின் வீட்டார் முதலில் முகில் மற்றும் அவன் வீட்டாரிடம் பேசிவிட்டு, அடுத்ததாக உத்ராவை சூழ்ந்து கொண்டனர்.

“விஷேசத்துக்கு வர முடியாத அளவுக்கு மேடம் பெரிய ஆள் ஆகிட்டீங்களா?” என்று கமலினியின் அன்னை விமலா அவளிடம் பொறிந்தார்.

“உடம்பு முடியாம அங்கே வந்து உட்கார்ந்து உங்களை எல்லாம் ஏன் டென்சன் பண்ணனும்னு நல்ல எண்ணம் தான் சித்தி. இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா? கமலி கல்யாணத்தில் ஒரு கலக்குக் கலக்கிடலாம் கவலையை விடுங்க…” என்று உற்சாகமாகப் பேசி அவரைத் தாஜா செய்து வைத்தாள்.

‘உடம்பு முடியவில்லை. அதான் வரவில்லை’ என்று அன்னை சொன்ன பொய்யை உத்ராவும் தொடர்ந்து சமாளித்தாள்.

அவளை அனைவரும் விசாரிப்பதும், அவள் வராததைப் பெரிய விஷயமாகப் பேசியதையும் கண்டு முகில் கடுப்பாக ஆரம்பித்தான்.

‘ஆமா, இவ பெரிய மகாராணி. இவள் வராம போனது தான் இப்போ குறைஞ்சு போயிருச்சு…’ என்று உள்ளுக்குள் கடுத்துக் கொண்டான்.

‘இவள் வராமல் போனதே எனக்கு நிம்மதி. வந்திருந்தால் என் நிச்சயத்தில் என்னோட சந்தோஷமே போயிருக்கும்’ என்று நினைத்துக் கொண்டான்.

அவளை வேண்டாம் என்று சொல்லிவிட்டான். அவளும் பிரச்சனை எதுவும் கொடுக்காமல் விலகி விட்டாள். அப்படி இருக்கும் போது ஏன் அவளின் வருகை தன்னைப் பாதிக்க வேண்டும் என்று அவன் சிறிதும் யோசிக்கவில்லை.

அவள் ஏதோ வில்லி போலவும், அவள் இருக்கும் இடம் தனக்கு வேண்டாத இடம் போலும் அவன் மனம் அவளை வேண்டாதவளாக்கி சிந்தித்துக் கொண்டே இருந்தது.

அவனின் சிந்தனையை அவனே அறியாமல் உத்ரா அதிகம் ஆக்கிரமித்திருக்கிறாள் என்று அவன் உணரவே இல்லை.

“எங்க உத்ராவும் மாப்பிள்ளை படிச்ச காலேஜில் தான் படிச்சாள் அண்ணி. ஹான், சொல்ல மறந்துட்டேனே… இப்போ அவள் வேலைக்குச் சேர்ந்து இருப்பதும் மாப்பிள்ளை வேலை பார்க்கிற கம்பெனியில் தான்…” என்று விமலா உத்ராவைப் பற்றி வளர்மதியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“அப்படியா? அறிமுகப்படுத்திக்கிட்ட போது கூட நீ ஒன்னும் சொல்லலையே உத்ரா?” என்று வளர்மதி அவளிடம் கேட்டு விட்டு, மகனையும் கேள்வியாகப் பார்த்தார்.

முகில் அவர்களின் பேச்சுக் காதில் விழாதது போல் அபிரூபாவைத் தூக்கிக் கொஞ்சுவது போல் திரும்பிக் கொண்டான்.

“அவ்வளவு பெரிய காலேஜ், ஆபிஸில் உத்ரா ஓர் இடத்திலும், மாப்பிள்ளை ஓர் இடத்திலும் இருந்திருப்பாங்க. அவங்களுக்கே தெரியாது போல…” உத்ராவை என்ன பதில் சொல்ல என்று முழிக்க விடாமல் தானே பதிலைச் சொன்னார் விமலா.

“ம்ம்… இருக்கும்…” என்று முடித்துக் கொண்டார் வளர்மதி.

‘முகிலை எனக்கு நன்றாகவே தெரியும். அவருடன் நான் பாட்டு கூடப் பாடியிருக்கிறேன். ஆபீஸிலும் அவர் தான் என் டீம் லீடர்’ என்று சொல்ல உத்ராவிற்கு எந்தத் தயக்கமும் இல்லை தான்.

ஆனால் தான் வந்ததிலிருந்து அவன் முகம் மாறியிருந்த விதத்தைக் கவனித்திருந்த உத்ராவிற்கு எதற்கு அவனின் வெறுப்பைத் தேவையில்லாமல் அதிகரிக்க வேண்டும் என்று நினைத்து விமலாவின் பதிலே உண்மை என்பது போல லேசாகச் சிரித்து வைத்தாள்.

தன் மீதான அவனின் வெறுப்பை அதிகரிக்க வைத்து விடக் கூடாது என்று ஒவ்வொரு முறையும் கவனத்துடன் நடந்து கொண்டும் காரணமே இல்லாமல் தன் மீதான வெறுப்பை அவன் அதிகரித்துக் கொண்டிருக்கிறான் என்று அவளும் அறியாமல் போனாள்.

“சரி வாங்க, உள்ளே போய்ப் புடவையைப் பார்க்க ஆரம்பிக்கலாம்…” என்று ரகுநாதன் சொல்ல, அனைவரும் உள்ளே செல்ல ஆரம்பிக்க, முகில் மெல்ல பின் தங்கினான்.

வந்ததிலிருந்து மென்மையாகச் சிரித்த வண்ணம் அமைதியாக இருந்த கமலினியை அவனின் கண்கள் மொய்க்க ஆரம்பித்தன.

அவளிடம் சில வார்த்தைகளாவது பேசிவிட வேண்டும் என்று நினைத்தவன் நடையை மெதுவாக்கினான்.

ஆனால் அவனின் எண்ணம் புரியாமல் உத்ராவுடன் மெல்லிய குரலில் பேசிக் கொண்டே உள்ளே சென்று விட்டாள் கமலினி.

‘ச்சை’ என்று அலுத்துக் கொண்டவன் தானும் உள்ளே சென்றான்.

பெண்கள் அனைவரும் புடவையைப் பார்க்க ஆரம்பிக்க, ஆண்கள் பெண்கள் புடவையை எடுத்துக் காட்டி ‘இது பார்க்கலாமா?’ என்று கேட்ட கேள்விக்குக் கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

முதியவயது பெண்கள் ஒரு பக்கமாக நின்று புடவையைப் பார்க்க, இளவயது பெண்களான இலக்கியா, உத்ரா, கமலினி மூவரும் தனியாகப் புடவையைப் பற்றி அவர்களுக்குள் அபிப்பிராயம் சொல்லிக் கொண்டனர்.

சற்று நேரத்திலேயே இலக்கியா, உத்ராவுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்திருந்தாள்.

தானே வழிய சென்று ஏதாவது கேட்டால் தான் பதில் சொன்ன கமலினியை விட, எந்தத் தயக்கமும் பாராது சகஜமாகப் பேசிய உத்ராவுடன் பேச இலக்கியாவிற்கு இலகுவாக இருந்தது.

அதிலும் புடவையைப் பற்றி உத்ரா சொன்ன சில விஷயங்கள் இலக்கியாவிற்கு ஆர்வத்தைத் தந்திருக்க, அவளுடன் ஆவலுடன் உரையாட ஆரம்பித்தாள்.

திருமணத்தன்று மேடை அலங்காரம் எந்த நிறத்தில் இருக்கும்? என்ற விவரம் கேட்டு, மணமக்களின் உடையும், மேடை அலங்காரமும் ஒரே நிறத்தில் அமைந்து விடாதவாறு உடையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னாள்.

“ஏன் அப்படி?” என்று இலக்கியா கேட்க,

“மேடை அலங்காரமும், மணமக்களின் அலங்காரமும் ஒரே நிறத்தில் இருந்தால் எடுப்பாகத் தெரியாது. அன்றைய நாயகன், நாயகிதான் எடுப்பாகத் தெரிய வேண்டும்…” என்றாள்.

அது மட்டுமில்லாமல் இன்னும் சில டிப்ஸ் சொல்ல, “பரவாயில்லையே நிறைய விஷயம் தெரிந்து வச்சுருக்கீங்க…” என்று பாராட்டினாள் இலக்கியா.

“நான் உங்களை விடச் சின்னவள் தானே. சும்மா ஒருமையிலேயே பேசுங்க…” என்ற உத்ரா, “இந்த டிப்ஸ் எல்லாம் என் அம்மாகிட்ட இருந்து கத்துக்கிட்டது தான். அவங்களுக்கு இதில் எல்லாம் ஒரு ஆர்வம். வீட்டில் நாங்க இரண்டு பேர் மட்டும் தான் என்பதால் அம்மாகிட்ட இருந்து நிறையத் தெரிஞ்சுக்குவேன். அப்படித்தான் எனக்கும் சில விஷயங்கள் தெரியும்…” என்று உத்ரா சாதாரணமாகச் சொன்னாள்.

“உத்ராவையும், அக்காவையும் வர மாட்டேன்னு சொன்னவங்களை வம்படியா நான் அழைத்த காரணமே இது தான்…” என்றார் விமலா.

“நீங்க வந்ததும் நல்லதா போச்சு. புடவை ஈசியா செலக்ட் பண்ண உபயோகமா இருக்கு…” என்று அஜந்தாவிடம் சொன்னார் வளர்மதி.

பெண்களுக்குள் பேச்சுச் சரளமாக ஓடியது.

அதைப் பார்த்து புகைந்து போனவன் என்னமோ முகில்வண்ணன் தான்.

அதுவும் உத்ராவுடன், அவனின் அக்காவும், அன்னையும் சகஜமாக உரையாட, ‘இவ ஒரு சரியான சண்டைக்காரினு உங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா நீங்களே அவகிட்ட இருந்து விலகி இருந்திருப்பீங்க. இப்படிப் பாராட்டிட்டு இருந்திருக்க மாட்டீங்க…’ என்று உள்ளுக்குள் கடுகடுத்துக் கொண்டான்.

அதிலும் உத்ரா வந்ததிலிருந்து கமலினி வேறு அவனின் புறம் அதிகம் திரும்பாமல் ஒட்டிப் பிறந்தவள் போல அவளின் பின்னேயே சுற்றிக் கொண்டிருக்க அவனின் எரிச்சலின் அளவை சொல்லத்தான் வேண்டுமோ?

அப்போது கார்த்திக்கின் கையில் இருந்த அபி தன் அன்னையிடம் செல்ல வேண்டும் சிணுங்க ஆரம்பிக்க, இலக்கியா மகளைத் தூக்கிக் கொண்டாள்.

அபி தொடர்ந்து இலக்கியாவின் கையில் இருக்காமல் புதுசேலையைப் பிடித்து இழுப்பதும், விரித்துக் காட்டிய சேலையில் அமர வேண்டும் என்று அடம்பிடிக்கவுமாக இருந்தாள்.

“என்னடி இப்படிப் பண்ற? நீ அப்பாகிட்டயே போ…” என்று கணவனிடம் கொடுக்கத் திரும்ப, அந்தக் குட்டியோ போகமாட்டேன் என்று அடம்பிடித்துச் சட்டென்று அருகில் இருந்த உத்ராவின் கையில் தாவினாள்.

எதிர்பாராமல் தன்னிடம் குழந்தை தாவவும் தன்னிச்சை செயலாகப் பிடித்துத் தூக்கிக் கொண்டாள் உத்ரா.

“ஹேய் குட்டி, என்னடா?” என்று அவள் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்தாள்.

‘நான் இங்கே தான் இருப்பேன்’ என்பது போல உத்ராவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் அச்சிட்டு.

“அட! புது ஆளுங்க யார்கிட்டையும் போகமாட்டேன்னு அடம்பிடிப்பாள். இப்போ உன்கிட்ட வந்ததும் இல்லாம தோளில் வேற சாய்ந்து கொண்டாளே…” என்று இலக்கியா ஆச்சரியமாகச் சொல்ல,

“அப்படியா குட்டி? நீங்க யார்கிட்டயும் போகமாட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே குட்டியைக் கொஞ்சி அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

குழந்தையும் தன் பொக்கை வாயைக் காட்டிச் சிரித்தது.

“அச்சோ! சிரிக்கும் போது இன்னும் க்யூட்டா இருக்கீங்க குட்டி. ஆமா குட்டி பேர் என்ன?” என்று குழந்தையிடமே கேட்க, அதுவோ வேகமாக அன்னையைத் திரும்பிப் பார்த்தது.

‘என் பெயரை சொல்லும்மா’ என்று சொல்வதாகக் குழந்தையின் செயல் இருக்க, உத்ரா அந்தச் செயலில் சொக்கித்தான் போனாள்.

“அறிவுக்குட்டி…” என்று முத்தமிட்டாள்.

“அவ பேரு அபிரூபா…” என்று இலக்கியா சொல்ல,

“அட! நீங்க ரூபியா? அதான் ஜொலிக்கிறீங்க…” என்று உத்ரா கொஞ்ச, அந்தக் குட்டி ‘இன்னும் கொஞ்சு’ என்பது போல் அவளின் கன்னத்துடன் தன் கன்னத்தைத் தேய்த்து இளைந்தாள்.

“ரூபி குட்டியைக் கொஞ்சணுமா? கொஞ்சிட்டால் போச்சு…” என்ற உத்ரா குழந்தையை லேசாக மேலே தூக்கி வயிற்றில் காற்று ஊதி அவளைச் சிரிக்க வைத்தாள்.

குழந்தையும் கிளுங்கி சிரித்தாள்.

அதன்பிறகு வேறு யாரிடமும் போகாமல் உத்ராவிடமே அவள் இருக்க, குழந்தையின் ஒற்றுதலை அவளின் அன்னையும் தந்தையும் அதிசயத்துப் பார்த்தனர்.

அதே நேரம் ஏற்கனவே பார்த்திருந்தும் கமலினியின் புறம் குழந்தை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அதை விடக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்று கமலினியும் நினைக்கவில்லை என்பதைக் கண்டு கொண்டிருந்தாள் இலக்கியா.

அது அவளின் மனதில் ஏதோ வித்தியாசமாக உணர வைத்தது.

உத்ரா தன்னிடம் கலகலப்பாகப் பேசிய அளவிற்குக் கூடக் கமலினி பேசவில்லை. பேச முயலவும் இல்லை. அவளிடம் ஒருவித ஒதுக்கம் தெரிந்தது.

ஏன்? நாத்தனார் என்ற மரியாதையா? என்ற யோசனையுடன் கமலினியைப் பார்த்தாள் இலக்கியா.

ஆனால் கமலினியோ அவளின் பார்வையைக் கவனிக்காமல் தன் அன்னையிடம் மெல்லிய குரலில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்ததும் இலக்கியாவிற்கு ஏதோ தோன்ற, சட்டென்று நிமிர்ந்து தம்பியைப் பார்த்தாள்.

முகில்வண்ணனோ கண்ணில் ஏமாற்றத்துடன் கமலினியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கமலினி தங்களிடம் மட்டுமல்ல, தன் தம்பியிடமும் ஒட்டவில்லையோ என்ற சந்தேகம் இலக்கியாவின் மனதில் விழ ஆரம்பித்தது.