10 – ஞாபகம் முழுவதும் நீயே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம்- 10

வினய் சொன்னதை எல்லாம் கேட்ட ரிதேஷ் நண்பனை ஏதோ வினோத ஜந்துவை பார்ப்பது போலப் பார்த்து வைத்தான்.

அதனைக் கவனித்த வினய் “என்ன ரிதேஷ்? ஏன் அப்படிப் பார்க்குற?” என்று கேட்டான்.

“இல்ல இந்தக் காரணத்துக்காகவா உன் குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்க? அதுவும் உன் பிள்ளையைக் கூடப் பார்க்காம எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது?” என்று வியப்பாகக் கேட்டான்.

அவன் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அமைதியாகச் சிறிது நேரம் இருந்த வினய் “ம்ச்” என்று உச்சுக் கொட்டி தோளை குலுக்கி விட்டு அடுத்த வாய் மதுவை உறிஞ்சினான்.

வினய்க்கு இதைப் பற்றிப் பேச விருப்பம் இல்லை போல என்று நினைத்த ரிதேஷ் கேள்வியை மாற்றினான்.

“நீ நினைச்சிருந்தா உங்க அப்பா கூடப் பிசினஸ் பார்த்து முன்னேறிக்கிட்டே நீ நினைச்ச நாட்டைச் சுத்தி பார்த்திருக்கலாமே வினய்? இந்த நாட்டில் மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு இப்படிக் குடும்பத்தை விட்டுட்டு இங்க சம்பளத்துக்கு வேலை பார்த்துட்டு இருக்குற?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம்…! இருந்துருக்கலாம் தான். ஆனா எனக்கு இந்த நாட்டில் தான் செட்டில் ஆகும்னு அப்படி ஒரு வெறி அந்தச் சமயம். அதுவும் தொடர்ந்து ஒரு ஐஞ்சு ஆறு வருஷம்கிட்ட இங்கயே இருந்துட்டு நம்ம நாட்டுக்குப் போகவும், இங்க உள்ள சூழ்நிலையையும், அங்கே உள்ள சூழ்நிலையையும் ஒப்பிட்டு பார்த்து எனக்கு இந்த நாடு சொர்க்கப்புரியா தெரிஞ்சது.

அதோட எங்கம்மாவோட இறப்புனால அப்ப ஒரு தாக்கம் என் மனசில் பதிஞ்சு போயிருச்சு. அதான் இங்கயே செட்டில் ஆகிறணும்னு எனக்குள்ள அழுத்தமா பதிச்சு வச்சுக்கிட்டேன்” என்று மட்டும் பதில் சொல்லிவிட்டு அங்கே தள்ளி ஆடிக் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

“வெறி அந்தச் சமயத்தில் இருந்துச்சுனா? இப்ப இல்லையா?” என்று ரிதேஷ் மேலும் பேச்சை வளர்த்தான்.

அவனின் பக்கம் பார்வையைத் திருப்பிய வினய் “தெரியல…” என்று மட்டும் சொல்லிவிட்டு இன்னொரு மடங்கு விழுங்கினான்.

அவனை ஆச்சரியமாகப் பார்த்தவன் “என்ன வினய் சொல்ற… தெரியலையா…?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம்…!” என்று மட்டும் தலையசைத்தவன் மேலே பேச பிடிக்காதவன் போல “நான் கிளம்புறேன் ரிதேஷ். பை…!” என்றுவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தான்.

அவனுடன் தானும் எழுந்த ரிதேஷ் “நானும் கிளம்பிட்டேன் வினய். ஷீலு நடுவில் ஒரு முறை எழுந்துப்பா. அதுக்கு முன்னாடி நான் வீடு போய்ச் சேரணும். பை…!” என்று விட்டுக் கிளம்பினான்.

போதையில் தடுமாறிய படி வீட்டிற்குள் நுழைந்தவன் உடையை மாற்றி விட்டுப் படுக்கையில் விழுந்தான். உடலும், கண்களும் தூக்கத்தை நாட விரும்பினாலும் இன்று பழைய விஷயங்களைப் பற்றிப் பேசியதாலோ என்னவோ மனம் அலைப்புற ஆரம்பிக்கத் தூங்க முடியாமல் தவித்தான்.

“இந்தக் காரணத்துக்காகவா உன் பிள்ளையைப் பார்க்காம இருக்க?” என்று ரிதேஷ் கேட்ட கேள்வி இன்னும் அவன் காதிற்குள் கேட்டுக் கொண்டிருப்பது போலவே இருந்தது.

அதே கேள்வியைத் தனக்குத் தானேயும் கேட்டுக் கொண்டான். பதில் அவனுக்கே தெரியாமல் போக, அதற்கு மேல் படுத்திருக்க முடியாமல் எழுந்து அமர்ந்தான்.

போதையில் சுழன்ற தலையைக் கைகளில் தாங்கி சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் எழுந்து சென்று மடிக்கணினியை எடுத்து வந்து படுக்கையில் வைத்து அன்று பார்த்த மந்திர புன்னகை படப் பாடலை பார்க்க ஆரம்பித்தான். அது முடிந்ததும் அடுத்தடுத்துக் குழந்தைகள் வரும் பாடலாக வரிசையாக ஒளிபரப்ப விட்டவன் மடிக்கணினி முன் படுத்துக் கொண்டே பாடல்களைப் பார்த்தவன் விழிகள் மெல்ல மெல்ல தூக்கத்தில் பிடியில் சிக்கின.

பாடல்களில் வந்த பிஞ்சு முகங்கள் அவனின் அலைப்புறுதலை குறைத்ததால் நன்றாக அயர்ந்து உறங்கினான்.

மறுநாள் வினய்யின் முகத்தையே கூர்மையாகப் பார்த்த படி எதிரே அமர்ந்திருந்தான் ரிதேஷ். அவன் பார்வையை எந்தச் சலனமும் இல்லாமல் எதிர்க்கொண்டிருந்த வினய், “என்னமா ஷீலு! உன் ஹஸ்பெண்ட் என்னையே அப்ப இருந்து சைட் அடிச்சுட்டு இருக்கான். என்னனு நீ கேட்க மாட்டியா?” என்று தங்களுக்குக் குடிக்கக் குளிர்பானம் எடுத்து வந்து கொண்டிருந்த ஷீலுவை பார்த்துக் கிண்டலாகக் கேட்டான்.

“ஏன் ரிஷி? வினய் அண்ணாவை சைட் அடிக்கத் தான் அவங்க வொய்ப் இருக்காங்கலே… நீங்க ஏன் இப்ப அந்த வேலையைப் பார்க்குறீங்க?” என்று தன் கணவனிடம் கேட்ட ஷீலு, வினய்யை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் பேச்சில் ‘அதுக்குள்ள சொல்லிட்டியா?’ என்று ரிதேஷை முறைத்த வினய், ஷீலுவை சமாதானப் பார்வை பார்த்து வைத்தான்.

வினய் அயல்நாட்டில் இருப்பதை அதிகம் விரும்பினாலும் யாருடனும் அதிகம் நட்பு பாராட்ட அவன் நினைப்பதில்லை. சிலரிடம் சகஜமாகப் பேசினாலும் அடுத்தவர் வீடு செல்லும் அளவு பழகுவதைத் தவிர்ப்பான். ஆனால் ரிதேஷ் அதற்கு விதிவிலக்காக இருந்தான்.

அவர்களின் வீட்டிற்கு எப்பொழுதாவது இது போல் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு செல்வான். முதல் நாள் தன்னைப் பற்றிச் சொல்லிய வினய்யை மறுநாள் அவனிடம் சிலவற்றைப் பேசி புரியவைக்கலாம் என்று தன் வீட்டில் தான் அவனுக்கு உணவு. இங்கே கட்டாயம் வர வேண்டும் என்று அழைத்திருந்தான் ரிதேஷ்.

ஷீலு அண்ணன் என்று அழைத்து அவள் உரிமையாகப் பேசுவதால் வினய்க்கும் அவளின் மீது அன்பு உண்டு.

இத்தனை நாளும் அவனுக்குத் திருமணம் ஆனதை மறைத்ததற்காகத் தான் அவளின் இந்த முறைப்பு.

“ஏன் ண்ணா எங்ககிட்ட சொன்னா நாங்க என்ன பண்ணிருவோம்னு இத்தனை நாள் எங்ககிட்ட இந்த விஷயத்தை மறைச்சிங்க?” என்று கேட்டாள்.

அவளைச் சங்கடமாகப் பார்த்தவன் “மறைக்கணும்னு நினைக்கல ஷீலு” என்றவன் அடுத்து என்ன சொல்லி அவளுக்குப் புரியவைக்க என்று நினைத்துத் தயங்கி நிறுத்தினான்.

அதனை உணர்ந்த ஷீலு “சரி விடுங்கண்ணா. அண்ணி எப்படி இருப்பாங்க?” என்று கேட்டுப் பேச்சை மாற்றினாள். ஆனால் அதுவும் அவனுக்குச் சங்கடத்தைத் தான் தந்தது.

“ஹ்ம்ம்…! ரொம்ப அழகா இருப்பா!” என்று முணுமுணுப்பாகச் சொன்னான். அதைச் சொல்லும் போது அவன் முகத்தில் ஒரு ரசிப்புத் தன்மை ஓடியதை கவனித்த ஷீலு கணவனுக்கு அதைக் காட்டி அர்த்தப் பார்வை ஒன்றை பார்த்து வைத்தாள்.

‘நானும் கவனித்தேன்’ என்பதாகத் தலையசைத்த ரிதேஷ் “சாப்பிட்டு விட்டு அப்புறம் பேசுவோம் ஷீலு. நாங்க போய் எடுத்து வைக்கிறோம் வினய். நீ பின்னாடி வா…” என்றுவிட்டுச் சென்றான்.

அவன் சொன்னது காதில் விழுந்தாலும் கருத்தில் ஏறாமல் ஏதோ யோசனையில் இருந்த வினய் ‘சரி’ எனத் தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

சிறிது நேரத்தில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மூவரும் ஹாலில் அமர்ந்திருந்தார்கள்.

வேறு பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் போதே “ஏன் வினய் உன் வொய்ப் கிட்ட ஏன் இங்க வர மாட்டேன்னு சொல்றாங்கன்னு காரணம் கேட்டுருக்கலாமே?” என்று ரிதேஷ் மெல்ல பேச்சை ஆரம்பிக்க…

அவன் கேள்வியில் சிறிது நேரம் அமைதியாக இருந்த வினய் “அப்படி எதுவும் காரணம் இருக்குறதா எனக்குத் தோணலை ரிதேஷ். என்னைச் சரி கட்டணும்னு தான் எங்க அப்பாவும், பவ்யாவும் பேசி வச்சு ஒன்னு போலச் சொல்லிட்டு இருக்குறாங்க. ஏன் சொல்றேனா பவ்யா கல்யாணத்துக்கு முன்னாடி எங்க அப்பா கம்பெனில தான் வேலை பார்த்தா. அப்பா தான் எல்லா ஏற்பாடும் செய்து இந்தக் கல்யாணத்தையே செய்து வச்சார்.

அதுலேயே தெரியலையா…? எல்லாம் பக்காவா பிளான் போட்டு என்னை ஏமாத்தி இருக்காங்க அப்படி இருக்கும் போது நான் எப்படி அவங்க பேச்சை கேட்க முடியும்” என்று கோபத்துடன் கேட்ட வினய் “இனி இதைப் பற்றி நாம பேச வேண்டாம் ரிதேஷ்” என்று கடுப்பாகச் சொன்னவனின் குரலில் தான் மேலும் இதைப் பற்றிப் பேசப் போவதில்லை என்ற உறுதி தெரிந்தது.

அவன் அப்படிச் சொல்லியும் மேலும் எதுவோ கேட்க போன ரிதேஷை வேண்டாம் என்று சாடை காட்டி மறுத்த ஷீலு “சரிண்ணா! அது பற்றிப் பேச வேண்டாம். ஆனா உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கலாமா?” என்றாள்.

“கேளுமா…!”

“உங்க வாழ்க்கை முழுவதும் இதுபோலக் கோபத்தை இழுத்து பிடிச்சுகிட்டே இன்னும் எத்தனை நாள் இருப்பிங்க? ஏன் கேட்குறேனா? கணவன் மனைவிக்குள்ள சண்டை சச்சரவு வர்றது சகஜம் தான். ஆனா இப்ப உங்க இரண்டு பேரின் பிடிவாதத்துக்கு நடுவில் உங்க குழந்தை இருக்கே? அதை நீங்க கொஞ்சம் கூட யோசிக்கலையா? இன்னும் கொஞ்ச நாள்ல அந்தக் குழந்தை அப்பா எங்கேனு கேட்குமே?

அந்தக் கேள்விக்குப் பதில் உங்க மனைவிதான் குழந்தைக்குச் சொல்லியாகணும். அதுனால உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனா ஒருவேளை நீங்க மனசு மாறி உங்க குடும்பத்துக் கூடச் சேர போறீங்கன்னு வச்சுப்போம். அப்படி நீங்க போகும் போது உங்க பையன் வளர்ந்துட்டானு வச்சுக்கோங்க. அப்போ உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பான். அதுக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்க?” என்று கேட்டவளை புரியாமல் பார்த்து “என்ன கேள்வி?” என்று வினய் கேட்டான்.

“ஆப்ட்ரால் இந்த வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டா என் முகத்தைக் கூடப் பார்க்க வராமல் இருந்தீங்க. என்னை விட உங்களுக்கு வெளிநாடு தான் முக்கியம்னா? அப்போ எனக்கு நீங்க எதுக்கு… அப்படின்னு உங்க பிள்ளை உங்களைப் பார்த்துக் கேட்டா? அந்த நேரத்தில் நீங்க என்ன முடிவெடுப்பிங்க?” இதுக்கு மட்டும் நீங்க பதில் சொல்லுங்க. அப்புறம் நானும் ரிஷியும் கண்டிப்பா இனி உங்க பர்சனல் பற்றிப் பேச மாட்டோம்” என்றாள்.

ஷீலு கேட்ட கேள்வியில் முகத்தில் அடிவாங்கியது போல நொடி பொழுது உறைந்து போனான். சிறிது நேரம் பேச்சு வராமல் அயர்ந்திருந்தவன் மெல்ல கலைந்து, “ஏன் ஷீலு இப்ப எத்தனை பேர் குடும்பத்தை விட்டுட்டு வெளிநாட்டில் போய் வருஷ கணக்கா இருக்காங்க? அவங்க குழந்தைகளும் வருஷம் கடந்து அம்மா அரவணைப்பில் தானே வாழ்றாங்க? அது போல என் பையனும் வளருகிறான். இதில் எதுவும் தப்பு இருக்கிறதா எனக்குத் தெரியலை” என்றான்.

‘இதென்ன பேச்சு?’ என்பது போலப் பார்த்தாள் ஷீலு. எவ்வளவு படித்து என்ன பண்ண? சில நேரம் புத்தி ஒன்றையே தான் பிடித்துத் தொங்கும் போல? இப்படி ஒரு மனநிலையில் இருப்பவன் திருமணத்திற்கு முன்பே எல்லாத்தையும் விசாரித்திருக்கணும்.

அதை விட்டு நீ என் பேச்சை கேட்கவில்லை என்றால் நீ எனக்கு வேண்டாம் என்று வருவானா? அதுவும் அவன் ரத்தத்தில் உதித்த குழந்தையை எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும்? என்று நினைத்த ஷீலு கர்ப்பம் தாங்கிய தன் வயிற்றைத் தடவினாள்.

என் ரிஷி மட்டும் என்னையும், என் குழந்தையையும் இப்படிப் பார்க்க வராமல் இருந்திருந்தால் அவனை உண்டு இல்லைனு ஆக்கிருப்பேன். ஆனா அந்தப் பவ்யா ஏன் இப்படிப் போனா போகட்டும்கிறது போல விட்டுட்டு இருக்காங்க? தனக்குத் தெரிந்த ஒருவர் இப்படித் தன் வாழ்வையே பாழாக்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டு தாங்கள் சும்மா இருப்பதா?’ என்று எண்ணிக் கொண்டவள் எப்படி இவனுக்குப் புரிய வைக்க என்று யோசித்தாள்.

“அப்படிக் குடும்பத்தை விட்டுட்டு வேலைக்குப் போறவங்களும், நீங்களும் ஒன்னுன்னு நினைச்சா உங்களை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது” என்று சொன்னவளை வினய் அதிர்ந்து பார்க்க… ரிதேஷ் அவள் பேச்சை தடுக்க முயன்றான்.

“இருங்க ரிஷி நான் பேசி முடிச்சுறேன்” என்று கணவனிடம் சொன்னவள், வினய்யின் பக்கம் திரும்பி “என்ன நான் இப்படிப் பேசுறேன்னு நீங்க நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லைணா. நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன். இப்ப இல்லைனாலும் எப்பவாவது நான் சொன்னதை யோசிச்சு பாருங்க” என்றவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“ஒரு குழந்தைக்கு அதைச் சுத்தி எத்தனை உறவுகள் இருந்தாலும், அப்பா, அம்மா இருவரும் அந்தக் குழந்தையை அரவணைச்சு வளர்க்குற சுகத்துக்கு ஈடு இணை வேற எதுவும் இல்லை. அப்படிப் பார்த்தா இன்னும் அதோட அப்பா வாசம் கூடக் கிடைக்காம போன உங்க குழந்தை ரொம்பப் பாவம் தான். பார்க்க போக முடியாம போற சூழ்நிலைக்கும், வேணும்னே பார்க்குறதை அவாய்ட் பண்ற சூழ்நிலைக்கும், மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான்” என்று சொல்லி நிறுத்தி வினய்யின் முகத்தை ஆராய்ந்தாள்.

அவன் லேசாகத் தலையைக் குனிந்து தரையையே வெறித்துக் கொண்டிருந்தான். முகம் இறுகி கண்களில் தெரிந்த வெறுமையை மறைக்கத் தலை நிமிராமல் இருந்தான்.

அவனை அப்படிப் பார்க்க இரக்கம் சுரந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாத ஷீலு மேலும் பேச்சை தொடர்ந்தாள்.

“ஆனா ஒன்னு, உங்க குழந்தையாவது இப்ப சின்னக் குழந்தை. இப்போ அவ்வளவா விவரம் தெரியாது. பட்…! உங்க மனைவியின் நிலையை நினைச்சா தான் பரிதாபமா இருக்கு” என்று சொல்லி நிறுத்த… சட்டெனத் தன் தலையை உயர்த்தி, ‘என்ன சொல்ல வருகிறாய்?’ என்பது போல அவளைப் பார்த்தான்.

“உங்களுக்கு என்னைப் பற்றி முன்னாடியே தெரியும் தானே? நான் பிறப்பால் நார்த் இந்தியனா இருந்தாலும், என் படிப்பு எல்லாம் சவுத் இந்தியால தான். அதுவும் தமிழ் நாடு எனக்கு எப்பவும் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அதனால் தான் நான் தமிழ் கத்துக்கிட்டேன். உங்ககிட்டயும் என்னால தமிழ்ல பேச முடியுது. பொதுவா தமிழ் நாட்டில்னு பிரிச்சு சொல்லாம நம்ம இந்தியன் கல்சர்னு ஒன்னு இருக்கு.

அது தான் ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம். அதோட சேர்ந்து கணவன் மனைவி சேர்ந்து வாழ்ற வாழ்க்கைக்கு இருக்குற மதிப்பு. அந்தக் கலாச்சாரத்தையும், மதிப்பையும் யாராவது மீறும் போது அவங்க மேல படுற பார்வையே தனி. அந்தப் பார்வையில் அதிகம் பாதிக்கப்படுறது பெண்கள் தான். இப்ப கணவன் மனைவி பிரிஞ்சிருந்தா, அந்தப் பிரிவுக்குக் கணவனே மூல காரணமா இருந்தாலும் ஈஸியா கெட்ட பெயர் வாங்குறது என்னமோ மனைவிதான்.

அதுவும் உங்க மனைவி இப்ப தனியா வேற இருக்காங்க. கணவன் கூட இல்லைனா அந்தப் பொண்ணை ஏதோ பொதுச் சொத்துன்னு நினைச்சு பார்க்குற வக்கிர குணம் கொண்ட ஆண்கள் நம்ம சமுதாயத்தில் பலர் இருக்காங்க” என்று சொல்ல சட்டென ஷீலுவை திகைப்பாகப் பார்த்தான் வினய். அவன் அதிர்வை பார்த்து “என்ன ண்ணா எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?” என்று ஷீலு கேட்க…

“இப்ப நீ என்ன சொன்ன? அப்படியும் நடக்குமா என்ன? அதெல்லாம் எங்கப்பா அவளைப் பாதுகாப்பா தான் இருக்க வச்சுருப்பார். நீ வேற ஏதாவது தப்பா நினைச்சுட்டு பேசாதே!” என்றவன் குரலில் சிறிது நடுக்கம் தெரிந்தது.

அவனை வினோதமாகப் பார்த்தவள் “இப்ப நீங்க தான் புரியாத குழந்தை போலப் பேசுறீங்க. உங்க அப்பா பாதுகாப்பு எத்தனை நாளைக்கு? அவரும் கம்பெனிக்குப் போய்ருவார். உங்க மனைவியும் தனியா வேலைக்குப் போறாங்க அப்படி இருக்கும் போது அவங்க தனியா போகும் போது எத்தனை விதமான பிரச்னையை எதிர்கொள்ளுவாங்கனு உங்களுக்குப் புரியலையா?

நீங்க இங்க உள்ள கலாச்சாரத்தோட சேர்ந்து நம்ம ஊரையும் கனெக்ட் பண்ணாதீங்க. நம்ம ஊர் பக்கம் கணவன், அம்மா, அப்பானு அவங்க பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் போதே வீட்டை விட்டு வெளியே நடந்தா பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பு இருப்பது இல்லை. இதில் தனியா வாழும் பொண்ணுங்க நிலைமை எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசித்துப் பாருங்க.

அதுவும் அப்படி வாழ்ற பொண்ணுங்களைச் சக பொண்ணுங்களே மதிக்காம ஈசியா வாழாவெட்டி பட்டம் கொடுத்து இளக்காரமா பார்ப்பாங்க. எத்தனை தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், சில ஆணுக்கோ, இல்லை சில பொண்ணுக்கோ இருக்கிற வக்கிர குணம் மாறுவது இல்லை. இந்த ஊரில் இருக்கிற பகட்டை பார்த்து, நம்ம ஊரும் அப்படி மட்டுமே இருக்கும்னு கனவு காணாதீங்க… ” என்று சூடாகச் சொன்னாள்.

அவள் டென்சன் ஆவதை பார்த்து “நீ டென்சன் ஆகாதே ஷீலு!” என்று அவளை அமைதிப்படுத்த முயன்றான் ரிதேஷ்.

“எனக்கு ஒன்னும் இல்லை ரிஷி” என்று கணவனிடம் சொன்னவள் வினய்யை பார்த்து “உங்க மேல எனக்கு நிறைய மதிப்பு இருந்தது. ஆனா உங்களுக்குள்ள இப்படித் தன் சுகம் மட்டுமே பெருசுன்னு நினைக்கிற சுயநலவாதி குணம் இருக்கும்னு நினைக்கலை. நான் மதிக்கும் ஒருத்தர் இப்படியான்னு ரொம்ப வருத்தமா இருக்கு” என்று வேதனையுடன் சொல்ல… வினய் சூடு கண்டவன் போலப் பட்டென இருக்கையை விட்டு எழுந்தான்.

அவன் அப்படி எழவும் தானும் அவனுடன் திகைத்து எழுந்த ரிதேஷ் “ஹேய்… வினய் உட்காரு. அவ ஏதோ படபடப்பில் பேசிட்டா. அவ அப்படிப் பேசினதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுகிறேன்” என்று அவனைச் சமாதானப்படுத்த முயல,

“இல்லை ரிதேஷ்… ஷீலு பேசியதில் எனக்குக் கோபம் எல்லாம் இல்லை. அவ சொன்னது போல நான் சுயநலவாதி தான் போல? நான் இப்ப எதுவும் பேசுற நிலையில் இல்லை. நான் கொஞ்சம் தனியா யோசிக்கணும். நான் கிளம்புறேன்” என்றவன் ஷீலுவின் புறம் திரும்பி “தேங்க்ஸ் ஷீலு…!” என்று மட்டும் சொன்னவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

அவன் சென்றதும் “நீ ரொம்பத் தான் ஹார்சா பேசிட்ட ஷீலு” என்றான் ரிதேஷ்.

தன் அருகில் அமர்ந்திருந்த கணவனின் தோளில் சாய்ந்தவள் “எனக்கு வேற வழி தெரியலை ரிஷி. பவ்யாவும், கவினும் பாவம்ல இன்னும் எத்தனை நாள் தனியா இருப்பாங்க? வினய் அண்ணா மட்டும் இங்கே தனியா இருந்து என்னத்தைச் சாதிக்கப் போறார்? இத்தனை நாள் வாழ்ந்த தனிமை வாழ்க்கை அவருக்கு அப்படி என்ன சந்தோஷத்தைக் கொடுத்துவிட்டது?

ஆபிஸ், ஆபிஸ் விட்டா வீடு, பார், இல்லைனா தனியா ஊர் சுத்துறது. நாம எப்பவாவது கெஞ்சி கேட்டா இங்க கொஞ்ச நேரம் வருவது. இது தானே இப்ப அவர் வாழ்ந்துட்டு இருக்கிற வாழ்க்கை? இதில் என்ன சுகம் இருக்கு? நீங்க இத்தனை நாளும் கவனிச்சதை வச்சுச் சொன்னீங்களே வினய் வெறுமையா உணருறான் போலனு, அதை நான் இன்னும் நல்லா உணர கொஞ்சம் தூண்டி விட்டுருக்கேன். கண்டிப்பா இன்னைக்கு என் பேச்சு அவர் மனதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம். அவங்க குடும்பமா வாழ நான் கெட்ட பேர் வாங்கினா பரவாயில்லை” என்றாள்.

“ஹ்ம்ம்…! புரியுதுடா…! இன்னும் கொஞ்ச நாள்ல வினய் மாறத்தான் போறான் கவலைப்பாடதே. இனி கவின் குட்டி முகத்தில் கூடுதல் சந்தோஷத்தைப் பார்க்கலாம்” என்றான்.

இங்கே கணவன், மனைவியும் தொடர்ந்து சில விஷயங்கள் பேசிக் கொண்டிருக்க… காரில் சென்று கொண்டிருந்த வினய் இறுக்கம் தாங்கிய முகத்துடன் காரின் ஸ்டேரிங்கை அழுத்தி பிடித்துத் தன் இறுக்கத்தை மேலும் காட்டிய படி ஏதோ யோசனையுடன் இருந்தான்.

அதே யோசனையுடன் தன் வீட்டிற்குச் சென்றவன் தன் மடிக்கணினியை வேகமாக எடுத்து தன் மின்னஞ்சலை திறந்து எதையோ பரபரப்பாகத் தேடினான்.

அவன் தேடியது கிடைத்தும், அவனின் கண்கள் அந்தப் பெயரின் மேலேயே நிலை குத்தி நின்றன.

அவன் தேடியது அவனின் மனைவி பவ்யாவின் மின்னஞ்சலைத் தான்.

அது இந்த மாதம் வந்திருந்த சமீபத்திய மின்னஞ்சல். மாதா மாதம் வந்தும் இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட அவன் அதைக் கருத்தில் எடுத்துக் கொண்டு மின்னஞ்சலைத் திறந்து பார்த்தது இல்லை. ஆனால் இன்றைய ஷீலுவின் பேச்சு அவனை உள்ளுக்குள் பதற வைத்திருந்தது. ‘ஒருவேளை பவ்யாவிற்கு எதுவும் பிரச்சனை ஏற்பட்டு அதைத் தன்னிடம் சொல்லத்தான் மெயில் அனுப்புகிறாளோ?’ என்று அவனுக்குக் காரில் வரும் போது தோன்ற அதை அறிந்துக் கொள்ளத்தான் இப்போது அவளின் மின்னஞ்சலை தேடினான்.

தேடி அவளின் மின்னஞ்சலை எடுத்து விட்டாலும், அதைத் திறந்து பார்க்க தைரியம் இல்லாமல் கைகள் லேசாக நடுங்க அப்படியே அமர்ந்திருந்தான். பின்பு சிறிது நேரத்தில் மெல்ல தன்னை நிதானித்துக் கொண்டு மின்னஞ்சலைத் திறந்தான்.

திறந்தவன் கண்கள் அவள் என்ன எழுதி இருக்கிறாள் என்று தேட அங்கே அவன் தேடியது கிடைக்காமல் ஒரு இணைப்புக் கோப்பு இருந்தது.

அதில் என்ன இருக்கிறது என்று இமை சுருக்கி யோசித்த படியே அந்தக் கோப்பையும் திறந்தான்.

அது ஒரு காணொளி கோப்பின் தொகுப்பு. “என்னதிது வீடியோ பைல்? அதில் அப்படி என்ன அனுப்பி இருக்கா?” என்று யோசித்துக்கொண்டே ஒரு காணொளியை திறந்து பார்த்தவன் கண்கள் அங்கே தெரிந்த காட்சியில் அப்படியே நிலை குத்தி நின்றன.