💘கண்மணி 29💘

சில நாட்கள் மருத்துவமனை வாசத்துக்குப் பின்னர் வீடு திரும்பினர் பவானியும் பாகீரதியும். பவானிக்குப் பெரிதாக காயமில்லை என்பதால் அவள் உடல் சீக்கிரத்தில் தேறிவிட்டது. பாகீரதிக்குத் தான் அவளது உள்காயங்களோடு வெளிக்காயங்களும் ஆறுவதற்காக கொடுக்கப்பட்ட மருந்துகளுடன் மல்லு கட்டியே நாட்கள் கழிந்தது.

வீட்டுக்கு வந்த பிறகு இருவருக்கும் கவனிப்பு பலமாக இருந்தது. இரு குடும்பங்களுக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் அகன்றுவிட்டதால் இப்போதெல்லாம் அடிக்கடி ஜெகத்ரட்சகனை சாந்திநிலையத்தில் காண முடிந்தது. தமக்கை மகன் முன்பு போல தன் மீது உயிராக மாறியதில் சுவாமிநாதனுக்கு மனம் நிறைந்துவிட்டது.

“நான் சாகுறதுக்குள்ள நீ எல்லாத்தையும் மறந்துட்டு வந்துட மாட்டியானு யோசிச்சு எத்தனையோ நாள் தூங்காம தவிச்சிருக்கேன் தெரியுமா ஜெகா… இனிமே அந்த ஈசன் என்னைக்கு அழைச்சாலும் சந்தோசமா போயிடுவேன்” என்று அந்த முதியவர் கண் கலங்கியதும் ஜெகத்ரட்சகனுக்கு இவ்வளவு அன்பான மனிதரைப் பிரிந்து இத்தனை வருடங்கள் வீணாக்கி விட்டோமே என்ற வருத்தம் எழுந்தாலும் இனி வரும் காலங்களில் அவரது அன்புக்குரிய ஜெகாவாகவே அவர் வாழ விரும்பினார்.

அதோடு மகள் இரத்த வெள்ளத்தில் கிடந்த கோலம் அவர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டதால் இப்போதெல்லாம் அவர் தொழிற்கொள்கைகளைக் கூட சுவாமிநாதனைப் போல மாற்றிக் கொண்டார்.

அவரது இந்த மாற்றம் அவரின் மனைவி மக்களோடு மருமகனையும் அதிசயிக்க வைத்தது. சிவசங்கர் ஏற்கெனவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் யோசியாது அவசரத்தில் சொன்ன குற்றசாட்டு தான் ஜெகத்ரட்சகனை சுவாமிநாதனிடமிருந்து பிரித்துவிட்டதோ என்ற குழப்பத்தில் தவித்தவன் உண்மையாகவே அன்று கோப்புகளைச் செழியனுக்குக் கை மாற்றியது அரிஞ்சயன்  தான் என தந்தை வாயிலாக அறிந்ததும் செய்த முதல் வேலையே அஞ்சனாவிலாசத்துக்கு நேரில் சென்று ஜெகத்ரட்சகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது தான்.

திருமணத்தில் கூட தன் காலில் விழ யோசித்த மருமகன் தனது தவறை உணர்ந்து தயங்காமல் மன்னிப்பு கேட்டதில் நெகிழ்ந்த ஜெகத்ரட்சகன் அவனது முகத்தை ஆதுரத்துடன் வருடிக் கொடுத்தபடியே

“தேசிகன் உன்னை நல்லா வளத்திருக்கான் சிவா… தப்பை யார் செஞ்சாலும் முகத்துக்கு நேரா சொல்லுறது, தான் செஞ்சது தப்புனு தெரிஞ்சா தயங்காம மன்னிப்பு கேக்குறதுனு நீ எங்க எல்லாரை விடவும் ரொம்ப மெச்சூர்டானவன் சிவா… நாங்கள்லாம் பேருக்குத் தான் பெரியவங்க” என்றவர் அன்றிலிருந்து மருமகனையும் இன்னொரு மகனாகவே பாவிக்க ஆரம்பித்திருந்தார்.

கணவரது மனமாற்றத்துக்குப் பின்னர் அஞ்சனாதேவியும் அடிக்கடி பவானிக்கும் பாகீரதிக்கும் பிரியமானதைச் செய்து எடுத்துக் கொண்டு சாந்திவனத்துக்கு வர ஆரம்பித்தார். சில நேரம் அவரோடு அருண் வருவான். அப்போதெல்லாம் அவனைச் சீண்டி விளையாடிய வானதியின் போக்கை நான்கு பெண்களும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.

அன்னபூரணி அஞ்சனாவிடம் “இன்னொரு ஜோடி கல்யாணத்துக்கு ரெடியாகிட்டாங்கனு நினைக்கேன்.. எப்பிடியோ நான் வச்ச வேண்டுதலை அந்த ஈசன் காது குடுத்துக் கேட்டுட்டார்… அப்பிடியே கொள்ளுப்பேரனோ கொள்ளுப்பேத்தியோ சீக்கிரமா வரணும்னு இன்னொரு வேண்டுதலும் வச்சிருக்கேன்… அது எப்போ நிறைவேறுமோ?” என்று அந்த வேண்டுதலும் நிறைவேறும் நாளுக்காக காத்திருந்தார்.

பவானி இந்தப் பேச்சைக் கேட்டு வெட்கிச் சிவக்க பாகீரதியும் வானதியும் “அடியே எங்களுக்குக் குழந்தை பிறந்தாலும் அது பாட்டிக்குக் கொள்ளுபேரன் பேத்தி தான்… நீ ஏன் இவ்ளோ வெக்கப்படுற?” என்று கேலி செய்வர்.

அதற்கு பவானி இருவரிடமும் “அது சரி… இன்னும் பிள்ளையார்சுழி கூட போடல… அதுக்குள்ள கனவா? நதியாச்சும் இந்த வருச எண்ட்ல மிசஸ் அருண் ஆகிடுவானு வச்சுப்போம்… உனக்கு இன்னும் நாள் இருக்கு பக்கி… அட்லீஸ்ட் ஈஸ்வருக்கு ட்வென்டி சிக்ஸ் ஆனா தான் கல்யாணம்ங்கிற பேச்சையே எடுப்பேனு சித்தப்பா சொன்னதை மறந்துட்டியா?” என்று அரிஞ்சயனின் பேச்சை நியாபகப்படுத்துவாள்.

ஆம்! முன்பு போல் அல்லாது அரிஞ்சயன் இப்போதெல்லாம் ஈஸ்வரை மரியாதையுடன் நடத்த ஆரம்பித்திருந்தார். மகள் கண் திறவாது தீவிர சிகிச்சை பிரிவில் கிடந்த நாட்களில் அவளுக்காக அவன் அங்கேயே காத்திருப்பதை எத்தனை நாட்கள் பார்த்து சிலிர்த்துப் போயிருக்கிறார்!

கூடவே மகளுக்காக அமெரிக்க வேலையை உதறிவிட்டு அந்நிறுவனத்தின் இந்தியக்கிளையின் சென்னை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்ததையும் அவர் மறக்கவில்லை.

எனவே மனைவி சொல்வது போல ஈஸ்வர் தான் தங்களுக்கு மருமகன் என அவரும் தீர்மானித்துவிட்டார். அதோடு இப்போதெல்லாம் அவர் செண்பகாதேவியை மரியாதையுடனும் அன்புடனும் நடத்த ஆரம்பித்தார். அவரின் இந்த மாற்றம் மகளுக்கு நேர்ந்த விபத்தால் ஏற்பட்டது என்பதை புரிந்துகொண்ட செண்பகாதேவியும் மெதுமெதுவாய் அவரை மன்னிக்க ஆரம்பித்தார்.

இந்த விபத்து உண்மையில் கொலைமுயற்சி எனவும் இதற்காக அமைச்சர் செழியன் மீது புகார் கொடுக்கலாம் எனவும் அதில் தானே முக்கியச்சாட்சியாக வரத் தயார் என்றும் மைத்துனர் ஞானதேசிகனிடம் தைரியமாகச் சொன்ன அரிஞ்சயனை அவர் தடுத்தார்.

“அது சரியா வராது மாப்பிள்ளை… ஏன்னா அவர் மினிஸ்டர்… அதோட அவர் மேல கம்ப்ளைண்ட் குடுத்தா அவர் உங்களையும் மாட்டிவிட சான்ஸ் அதிகம்… நீங்க தான் மெயின் பிரெயின்னு சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல… இப்போ தான் நீங்க மனசு மாறி செண்பா கூடவும் பாகி கூடவும் புது மனுசனா வாழ ஆரம்பிச்சிருக்கிங்க… மறுபடியும் உங்களைப் பிரியறதுக்கு அவங்களுக்கு இஷ்டமிருக்காது… எங்களாலயும் இனியும் ஒரு பிரிவை தாங்க முடியாது மாப்பிள்ளை… ஆல்ரெடி சிவா கிட்ட இதுக்கு வேற பிளான் இருக்கு… அவன் பாத்துப்பான்… நீங்க கவலைப்படாதிங்க” என்று அரிஞ்சயனை அமைதிப்படுத்தி விட்டார் ஞானதேசிகன்.

அப்போது அவர்களுடன் இருந்த சுவாமிநாதனும் ஜெகத்ரட்சகனும் கூட சிவசங்கர் அந்த அமைச்சரைக் கவனித்துக் கொள்வான் என அரிஞ்சயனை அவரது குற்றவுணர்ச்சியிலிருந்து விடுவித்துவிட்டனர்.

சொன்னது போலவே சிவசங்கர் ஆதாரம் திரட்டிக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அமைச்சருக்கு எதிராக அல்ல; அவரது மகன் நவீனுக்கு எதிராக. ஏனெனில் அவர் ஆளுங்கட்சி உறுப்பினர் எனும் போது அவருக்கெதிராய் என்ன ஆதாரம் வைத்தாலும் அது ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்பதையும் அவர் எளிதில் அந்த வழக்கை உடைத்துவிடுவார் என்பதையும் சிவசங்கர் அறிவான்.

எனவே தான் சிறையிலிருக்கும் அவரது மகன் நவீனுக்கு எதிராக எத்தனை ஆதாரங்கள் சிக்குமோ அத்தனையையும் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தான். பெண்களை ஏமாற்றியது, தனது ஆட்களை வைத்து அப்பாவிகளிடம் சொத்துக்களை மிரட்டி வாங்கியது, படியாத ஆட்களை ஆள் வைத்து காலி செய்தது என அவன் மீதான குற்றங்கள் ஏராளம்.

அவற்றுக்கான ஆதாரங்களைத் திரட்டியவன் அவரது மகனை நிரந்தரமாகச் சிறையில் தள்ளுவது தான் செழியனுக்குக் கொடுக்கப் போகும் மிகப்பெரிய தண்டனையாக கருதினான்.

அந்த ஆதாரம் திரட்டும் வேலையில் இறங்கியிருந்ததால் இப்போதெல்லாம் அவன் வீடு திரும்பும் போது பெரும்பாலும் நள்ளிரவாகி விடும். அவனது இந்தப் போக்கு அவனது சரிபாதியான பவானியை மிகவும் பாதித்தது.

மருத்துவமனையில் அவள் இருந்த போது தினமும் மாலை அவளைக் காண வருபவன் வாய் ஓயாது பேசி அவளைச் சிரிக்க வைப்பான். அல்லது ரசனையாக பார்த்து அவளை வெட்கத்தில் சிவக்க வைப்பான். அவனது பூடகமான வருங்காலம் குறித்த பேச்சு அவளுக்குள் ஒருவிதச் சிலிர்ப்பை இழையோடச் செய்யும்.

அப்படிப்பட்டவன் வீட்டுக்கு வந்ததில் இருந்து தன்னைத் தவிர்ப்பது போல தோன்றவும் எரிச்சலுற்றிருந்தாள் பவானி. அன்று அவனுக்காக  தூங்காமல் காத்திருக்க வேண்டுமென தீர்மானித்தவள் அவன் சீக்கிரமே வீடு திரும்பவும் அதிசயித்தாள்.

வந்தவன் நேரே தாத்தாவின் அலுவலக அறைக்குப் போய்விடவும் அவளுக்குச் சப்பென்று ஆனது. இரவுணவைக் கூட அங்கேயே வருவித்துக் கொண்டனர் ஆண்கள் அனைவரும். பெண்கள் மட்டும் உணவுமேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க பவானியின் கண்கள் அடிக்கடி மாடியிலுள்ள அலுவலக அறையைத் தொட்டு மீள்வதைக் கண்டு பாகீரதியும் வானதியும் நமட்டுச்சிரிப்பொன்றை உதிர்த்தனர்.

அவர்களை முறைத்த பவானி பல்லைக் கடிக்க லோகநாயகியும் செண்பகாதேவியும் அவர்களைப் பொய்யாக அதட்டினர்.

இரவுணவு முடிந்து அவர்கள் இருவரையும் தனது கண்பார்வையில் மாத்திரைகளை விழுங்க வைத்து அனுப்பினாள் வானதி.

பவானி அவர்களின் அறைக்குத் திரும்பியவள் தனது கணவனுக்காக காத்திருந்தாள். அவனும் செழியனின் மகனுக்கு எதிராகத் திரட்டிய ஆதாரங்கள் பற்றி அவர்களுடன் விவாதித்துவிட்டு வந்தவன் தனக்காக பால்கனியில் காத்திருந்த மனைவியை பின்னோடு சென்று இறுக அணைத்துக் கொண்டான்.

அவன் திடீரென வந்து அணைத்ததில் ஒரு நிமிடம் தூக்கி வாரிப்போட்டவள் அவனது தாடை அவளது தோள்வளைவில் பதிந்து அவனது இதழ்கள் அவளது செவிமடலை இதமாக வருடியதும் மெது மெதுவாய் இயல்புக்குத் திரும்பினாள்.

சிவசங்கர் மனைவியின் மெதுவாய் “ஐ அம் சோ ஹேப்பி டு டே.. ஏன் தெரியுமா? இன்னைக்கு நான் இவ்ளோ நாள் அலைஞ்ச வேலை சக்சஸ் ஆகிடுச்சு” என்று சொல்லி அவளது காதுமடலில் முத்தமிட பவானிக்குள் பியானோ இசைக்க ஆரம்பித்தது.

அவன் சொன்ன செய்தியால் உண்டான இசை அல்ல அது. அன்புக்கணவனின் அருகாமை உண்டாக்கிய இன்பத்தில் பிறந்த இசை தான் அது.

தன்னைச் சமாளித்துக்கொண்டு அவன் புறம் திரும்பியவள் “என் கிட்ட பேசுறப்போ உங்க தொழில்பேச்சை மூட்டை கட்டி வச்சிடணும் சரியா?” என்று கண்களை உருட்ட அவளின் நாசியைப் பிடித்துத் திருகினான் சிவா.

“சரிங்க மகாராணி… இத்தனை நாள் நானும் உன்னையும் உன்னோட இந்த மிரட்டலையும் ரொம்பவே மிஸ் பண்ணுனேன்… முக்கியமா மூச்சுக்கு முன்னூறு தடவை நீ சொல்லுற ஐ லவ் யூங்கிற வார்த்தை இல்லாம கொஞ்சநாளா என் வாழ்க்கை பிளாக் அண்ட் ஒயிட்டா மாறிடுச்சுனா பாத்துக்கோ”

“இப்போ சொல்லவா?” என்று தலையைச் சரித்து ஆவலாய் கேட்ட மனைவியைக் காதலுடன் நோக்கியவன் வேண்டாமென தலையசைத்து மறுத்தான்.

ஏன் என்று அவள் கேள்வியாய் நோக்கும் போதே “இது என்னோட டர்ன்… நான் தான் சொல்லுவேன்” என்றவன் அவளது விழிகளுடன் தனது விழிகளைச் சங்கமிக்க வைத்தான்.

வெறும் பார்வையால் கூட காதலைப் பரிமாறிக்கொள்ள முடியும் என்பதை பவானி அந்தத் தருணத்தில் உணர்ந்து கொண்டாள். அந்த விழிவீச்சில் மதிமயங்கி அவள் நின்ற கணத்தில் அவளது செவ்விதழை தன் வசப்படுத்திய அந்த வழக்கறிஞன் தனது காதல் நீதிமன்றத்தில் அவளுக்கு அளிக்கவிருந்த தண்டனையின் ஆரம்பக்கட்டத்தை அவளது இதழில் எழுத ஆரம்பித்தான்.

தண்டனை கொடுப்பவனோடு பெறுபவளும் மயங்கி நின்ற அந்தச் சில நிமிடங்கள் யுகங்களாய் நீண்டது. அந்த யுகங்களின் முடிவில் தாங்கள் நிற்கும் சூழ்நிலையை உணர்ந்து பிரிந்தவர்கள் தங்களைச் சமனப்படுத்திக் கொண்டனர்.

சிவசங்கர் “ஐ அம் ரியலி சாரி… உன்னோட பெர்மிசன் இல்லாம…” என்று தடுமாற அவனது தடுமாற்றத்திலேயே மனைவியின் சம்மதமின்றி அவளைத் தீண்ட தயங்கும் அவனது நற்குணம் புரிய காதலுடன் சேர்த்து பெருமிதமாகவும் உணர்ந்தாள் பவானி.

மையலாய் அவனை நோக்கி அவனது டீசர்ட்டைப் பிடித்து இழுத்தவள் “இதுக்காகவே உங்களை எக்ஸ்ட்ராவா லவ் பண்ணலாம் போல… ஐ லவ் யூ சிவா” என்று உரைத்துவிட்டு அவனது கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு காற்றுவெளியிடையில் தனது காதலைச் சொன்னாள்.

அதில் உருகிப் போனவன் அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டான். அவர்களின் அறைக்குள் வந்ததும் அவளை நோக்கி “உன்னோட பிடிவாதமான காதல் இன்னைக்கு ஜெயிச்சிடுச்சு பவா” என்று ஆழ்ந்த குரலில் உரைத்துவிட்டு அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.

பவானி தன்னவனை ஆழ நோக்கி கண்ணோடு கண் பேசிய அந்த நேரத்தில் வாய்ச்சொற்கள் பயனின்றி போயின. அன்றைய இரவில் மேவுகடலாய் அவளைத் தழுவியவனிடம் வெண்ணிலவாய் மாறி அவனுள் புதைந்து போனாள்.

அங்கே அழகாய் ஆரம்பித்தது அவர்களின் இல்லற வாழ்வின் முதல் அத்தியாயம்.

**********

மறுநாள் விடியலில் சின்ன சின்ன குறும்புகளோடு அன்றைய நாளை ஆரம்பித்தனர் சிவசங்கரும் பவானியும். அன்று அவர்கள் விழித்த போது மிகவும் தாமதமாகி இருந்தது.

பவானிக்கு அவளது அலுவலகத்தில் எடுத்த விடுப்பு முடியவில்லை. எனவே சாவகாசமாக குளித்து முடித்து உடை மாற்றியவளுக்குக் கணவனின் குறும்புச்செய்கைகளால் இன்னும் தாமதமாகவே அன்றைய நாளின் காலைப்பொழுது ஆரம்பித்தது.

இருவரும் சேர்ந்து கீழே சென்ற போது ஈஸ்வர் வழக்கம் போல பாகீரதியைக் காண வந்திருந்தான். கூடவே அவனது பெற்றோரும் வருங்கால மருமகளின் உடல்நலம் பற்றி விசாரிக்க வந்திருந்தனர்.

சிவசங்கரையும் பவானியையும் பார்த்து கண் சிமிட்டிய வானதி “லவ் பேர்ட்சுக்கு இப்போ தான் விடியுதா?” என்று கேலி செய்ய அவள் தலையில் செல்லமாக குட்டினான் சிவசங்கர்.

“இன்னைக்கு நீ ஆபிசுக்குப் போகலயாடி?” என்ற பவானியிடம்

“நான் இன்னைக்கு சிக் லீவ்…” என்று பதிலளித்த வானதியின் விழிகள் வாயிலை ஆவலுடன் நோக்கவும் பவானி தன் கணவனிடம் சமிக்ஞை காட்ட இருவரும் ரகசியமாய் கண்களால் பேசிக் கொண்டனர்.

பாகீரதி தனது தாயாருடன் ஹாலுக்கு வந்தவள் “வாங்க அங்கிள்… வாங்க ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு உட்காருவதற்குள் சிறிது தடுமாற ஈஸ்வர் உதவிக்கு வருமுன் அவனது அன்னை அவளைத் தாங்கினார்.

“பாத்தும்மா… இன்னும் உனக்கு உடம்பு முழுசா க்யூர் ஆகல… நீ ரூம்லயே இருந்திருக்கலாம்… நாங்க உன்னை அங்க வந்து பாத்துக்க மாட்டோமா?” என்று அக்கறையாய் அலுத்துக் கொண்டார்.

அதைக் கண்டு செண்பகாதேவி மகிழ ஞானதேசிகனும் அவருடன் நின்ற அரிஞ்சயனும் நெகிழ்ந்து போயினர்.

அப்போது வாயிலில் கார் வரும் சத்தம் கேட்க வானதி ஆவலாய் எட்டிப் பார்த்தாள். ஜெகத்ரட்சகனுடன் அஞ்சனாவும் அருணும் வரவே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் அவள்.

மூவரும் உள்ளே வந்தவர்கள் ஈஸ்வரின் பெற்றோருக்கு ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு சகஜமாய் உரையாட ஆரம்பித்தனர். உரையாடலில் நேரம் போனதே தெரியவில்லை.

கோயிலுக்குச் சென்றிருந்த சுவாமிநாதனும் அன்னபூரணியும் வீடு திரும்பியதும் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து காலையுணவை சாப்பிட ஆரம்பித்தனர்.

சாப்பிடும் போதே ஈஸ்வர் தன்னருகில் இருந்த பாகீரதியிடம் “உனக்கு ரைட் லெக்ல பெயின் எப்பிடி இருக்கு? அம்மா குடுத்த தைலத்த தடவுறியா?” என்று கேட்க ஆமென்று தலையசைத்தாள் பாகீரதி.

கூடவே “ஏன் என் மேல இவ்ளோ அக்கறை எடுத்துக்கிறிங்க? நான் இன்னும் உங்களை காதலிக்கிறேனா இல்லையானு கூட தெரியாதப்போ இவ்ளோ அன்பை கொட்டுறிங்களே” என்று ஆச்சரியமாய் கேட்டபடியே தோசையை விண்டு வாயில் திணித்துக் கொண்டு அவனது பதிலுக்காக காத்திருந்தாள்.

“பிகாஸ் ஐ லவ் யூ… அண்ட் அந்த லவ் எனக்கு குடுத்த நம்பிக்கைல தான் உன் மேல இவ்ளோ அக்கறை காட்டுறேன்… அதே நம்பிக்கையோட தான் நீ உன் மனசுல உள்ள காதலைச் சொல்லுற நாளுக்காக காத்திருக்கேன்” என்றான் ஈஸ்வர் எளிமையாக.

அவனது சர்க்கரை பூச்சுகள் அற்ற வெளிப்படையான பேச்சு அவளுக்கு எப்போதும் போல மனதுக்கு நிறைவைக் கொடுத்துவிட அவனுடன் வளவளக்க ஆரம்பித்தாள் பாகீரதி.

அதே போல அருணும் வானதியிடம் வம்பளந்து கொண்டிருந்தான். அவளது சமீபத்திய சீண்டல்களுக்கு அவனும் சீண்டலாகவே பதிலளிக்கப் பழகியிருந்தான்.

“உங்களுக்கு இட்லி தான் பிடிக்குமாமே… எங்கம்மா சொன்னாங்க… ஆனா எனக்குத் தோசை தான் பிடிக்கும்… சோ நீங்க தோசை சுடுறது எப்பிடினு யூடியூப்ல வீடியோ பாத்து கத்துக்கோங்க… நமக்கு பிற்காலத்துல யூஸ் ஆகும்”

“மேடம்ஜிக்கு இன்னும் என்னென்ன பிடிக்கும்னு சொன்னிங்கனா நான் ஒரு லிஸ்ட் போட்டு வச்சிப்பேன்…. ஃப்ரீ டைம் கிடைக்கிறப்போ யூடியூப் பாத்து நோட்ஸ் எடுத்துக்குவேன்” என்று பவ்வியமாய் பதிலளித்தான் அருண்.

அவனது கேலியைப் புரிந்து கொண்டவள் “வாவ்! என்ன ஒரு அன்பு என் மேல… இதுக்காக உங்களுக்கு ஒரு சின்ன டிஸ்கவுண்ட் தர்றேன்.. நீங்க டெய்லி எனக்குத் தோசை சுட்டுத் தர வேண்டாம்… வீக்லி வெறும் த்ரீ டேய்ஸ் மட்டும் சுட்டுக் குடுத்தா போதும்” என்று பெருந்தன்மையாக அவனது வருங்கால வேலைச்சுமையைக் குறைக்க அருண் அதைக் கேட்டு குறும்பாக நகைக்க இருவரின் பேச்சையும் கேட்டு வீட்டு பெரியவர்கள் பார்வை பரிமாற்றம் செய்து கொண்டனர் அவர்களுக்குள்ளே!

இந்த இரு ஜோடிகளையும் கண்ணால் காட்டிய சிவசங்கர் பவானியின் காதில்

“கொஞ்சம் அங்க பாரேன்… முசுடா இருந்த அருண் இப்போலாம் கலகலனு சிரிக்கிறான்… கவுண்டர் டயலாக்லாம் சூப்பரா அடிக்கிறான்.. அதே மாதிரி விரக்தியா வாழ்க்கைய ஓட்டுன பாகி இப்போலாம் ஒவ்வொரு நாளையும் ரசிச்சு வாழுறா… இதுக்குலாம் காரணம் என்ன தெரியுமா? அவங்களுக்குக் கிடைச்ச உண்மையான காதல் தான்…. எனக்குக் கிடைச்சது மாதிரியே” என்று தெளிவாய் கூற பவானியும் அதை ஆமோதித்தாள்.

அவனருகில் அமர்ந்திருந்தபடியே மகிழ்ச்சியாய் பேசிக் கொண்டே காலையுணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குடும்பத்தினரை மனம் நிறையப் பார்த்துக் கொண்டிருந்தாள் பவானி. பின்னர் தனது தாத்தாவையும் பாட்டியையும் நோக்கியவள் “இப்போ ஹாப்பியா மை டியர் ஓல்டிஸ்?” என கேட்டுவிட்டுக் குறும்பாக கண் சிமிட்டினாள்.

வாழ்நாளில் சேருவோமா மாட்டோமா என ஏங்கியிருந்த உறவுகள் எல்லாம் ஒன்று கூடியதிலும், உறவுகளுக்குள் இருந்த கசப்புணர்வு அகன்று அனைவரும் அன்பாய் சேர்ந்திருப்பதிலும் சந்தோசக்கடலில் மிதந்து கொண்டிருந்த சுவாமிநாதனும் அன்னபூரணியும் அனைத்துக்கும் காரணமான அந்த ஈசனுக்கு மனதாற நன்றி கூறிவிட்டு பேத்தியை நோக்கி ஆனந்தத்துடன் புன்னகைத்தனர்.

அந்தப் புன்னகையில் அவர்களின் பதில் கிடைத்துவிட அவள் அருகில் அமர்ந்திருந்த சிவசங்கர் அவனது கையால் ஊட்டிய உணவை வழக்கம் போல நல்லப்பெண்ணாகச் சாப்பிட ஆரம்பித்தாள் அவனது பவானி.

உண்மைக் காதலால் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க முடியும். விட்டேற்றியாய் வாழுபவர்களையும் ரசனையோடு வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ வைக்க முடியும். பவானியும் சிவசங்கரும் அவர்கள் வாழ்வில் இதுவரை நடந்த நிகழ்வுகளின் வாயிலாக காதலின் மகத்துவத்தையும், உறவுகளின் புரிதலையும் அனுபவப்பூர்வமாக அறிந்து கொண்டனர்.

தொடரும்💘💘💘