மனம் கொய்த மாயவனே – 11

அத்தியாயம் – 11

“அய்யோ! என்னாச்சுத் தம்பி?” என்ற அன்னையின் பதட்டமான குரல் கேட்டு வேகமாகக் குடிசையை விட்டு வெளியே வந்தாள் அல்லிராணி.

“ஒன்னுமில்லைங்க, சின்ன ஆக்சிடண்ட்…” என்று சொல்லிக் கொண்டே நெற்றியில் இருந்து வழிந்த ரத்தத்தைக் கையால் மறைத்துக் கொண்டும், ஒரு காலை இழுத்துக் கொண்டும் தன் குடிசைக்குள் செல்ல போனான் வெற்றி.

“என்ன தம்பி, தலையிலிருந்து இப்படி ரத்தம் சொட்டுது, சின்ன ஆக்சிடண்ட்டுன்னு சொல்லிட்டு உள்ளே போறீங்க? இங்க உட்காருங்க தம்பி, என்னன்னு பார்ப்போம்…” என்று தன் குடிசைக்கு வெளியே இருந்த சிறிய திண்டைக் காட்டி அதில் அமரச் சொன்னார் சரோஜா.

வெற்றி தன் கையால் காயத்தை மறைத்தும் அதையும் மீறி ரத்தம் கசிந்து அவனின் கழுத்து வரை வடிந்திருந்தது.

அவனை அப்படி ரத்தம் வழிய பார்த்துத் துடித்துப் போனாள் அல்லிராணி.

“இல்ல பரவாயில்லை, நான் பார்த்துக்கிறேன்…” என்று சரோஜாவிடம் சொன்னவன் நிற்காமல் காலை இழுத்து இழுத்து நடந்து கொண்டே தன் குடிசையை நோக்கிப் போனான்.

“யோவ், இந்தா நில்லு! ரத்தம் ஆறா ஓடுது. நீ என்னென்னா நிக்காம ஓடுற. காலில் வேற அடிப்பட்டிருக்குப் போலயே? முட்டில இருந்து ரத்தமா வருது…” என்றவள், வேகமாக வெற்றியின் அருகில் ஓடி அவனை மேலும் நடக்க விடாமல் அவனின் கையைப் பிடித்துக் கொண்டாள் அல்லி.

“என்னம்மா மசமசன்னு நின்னுட்டு இருக்க? உள்ளே போய் ஏதாவது துணி எடுத்துட்டு வா!” என்று மகளின் செயலை வாயைத் திறந்த படி பார்த்துக் கொண்டிருந்த அன்னையை வேலை ஏவினாள்.

“நீ என்ன வெற்றி இன்னும் நிக்கிற? இங்க வா, இப்படி வந்து உட்கார்!” என்று அவனை வலுக்கட்டாயமாகக் கையைப் பிடித்துத் திண்டை நோக்கி இழுத்தாள்.

“ஏய், விடுடி!” என்று தன் கையை உதறினான் வெற்றி.

“அதெல்லாம் விட முடியாது. நீ வந்து முதலில் உட்காரு. அய்யோ! எம்புட்டு ரத்தம்!” என்று பதறியவள் அவனின் கையை விடாமல் இழுத்துக் கொண்டு வந்து திண்டில் அமரச் சொன்னாள்.

“ம்ப்ச்… ” என்று அவன் அமராமல் சலிப்பைக் காட்ட,

“ப்ளீஸ் வெற்றி, உட்காரேன்…” என்றாள் இறைஞ்சுதலாக.

முகத்தில் எரிச்சலைக் காட்டினாலும் இப்போது மறுக்காமல் அமர்ந்தான்.

“ஏய், என்னடி இதெல்லாம்?” என்று அதிர்ந்து கேட்டார் சரோஜா.

மகள் அவனின் கையை உரிமையுடன் பிடித்துக் கொள்வதும், அவளின் கெஞ்சலுக்கு அவன் தணிந்து போவதும் அவரை அதிர வைத்திருந்தது.

“ம்மா, நீ இன்னுமா துணி எடுத்துட்டு வரலை? போமா, போய் எடுத்துட்டு வா! உன் மருமவன் அடிப்பட்டு வந்திருக்கார். நீ என்னென்னா எனக்கென்னனு நிக்கிற?” என்று அன்னையை விரட்டினாள் அல்லி.

அவள் மருமகன் என்று சொன்னதைக் கேட்டு இப்போது நெஞ்சிலேயே கையை வைத்து திகைத்து நின்றார் சரோஜா.

“என்னடி சொல்ற, மருமவனா?”

“ஆமா, மருமவன் தான்! அந்த விளக்கம் எல்லாம் உனக்கு நான் அப்புறம் சொல்றேன். இப்போ போ!” என்றாள்.

சரோஜா அதிர்வு மாறாத முகத்துடன் உள்ளே சென்று துணியை எடுத்து வந்து கொடுத்தார்.

அவள் அன்னையிடம் தன்னை மருமகன் என்று சொன்ன கடுப்பில் அவளை முறைத்துக் கொண்டிருந்த வெற்றியைக் கண்டுகொள்ளாமல் அவனின் கையை நெற்றியில் இருந்து எடுத்தாள்.

அவனின் கையை எடுத்ததும் ஆழமாக வெட்டுப்பட்டிருந்த காயத்தில் இருந்து குபுகுபுவென்று ரத்தம் வெளியேறியது.

“அய்யோ! என்ன வெற்றி இவ்வளவு ரத்தம்?” என்று பதறிய அல்லி, தன் கையில் இருந்த துணியால் அவனின் காயத்தில் இறுக கட்டினாள்.

“வெற்றி, இது தையல் போட்டா தான் சரியாகும்னு நினைக்கிறேன். வா, ஆஸ்பத்திரிக்குப் போகலாம்…” என்று அழைத்தாள்.

“எனக்குப் போகத் தெரியும். நீ உன் வேலையைப் பாரு…” என்று எழுந்தவன், மீண்டும் தன் குடிசைக்கு நடக்க ஆரம்பித்தான்.

“அட, வீம்பு பிடிச்சவனே! நில்லுடா!” கோபமாகக் கத்திய அல்லி, மீண்டும் அவனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“என்னது, டா-வா?” என்று கோபத்துடன் கேட்டான் வெற்றி.

“ஆமா டா! ரத்தம் வழியுது. இந்த நேரத்தில் உனக்கு என்னடா வீம்பு? ஒழுங்கா என் கூட ஆஸ்பத்திரிக்கு வா!” என்று இன்னும் கோபப்பட்டாள்.

“இன்னொரு முறை டா-னு சொல்லு, வாயிலேயே ஒரு போடு போடுறேன்…” என்று கடுப்பாகச் சொன்னான் வெற்றி.

“நல்லா போட்டுக்கோ!” என்று சப்தமாகச் சொன்னவள், “உன் உதட்டால் கூடப் போட்டுக்கோ, பரவாயில்லை…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தாள்.

‘அடிப்பாவி! என்ன பேச்சுப் பேசுறா?’ என்று நினைத்த படி அவளைப் பார்த்தான்.

“என்ன சரோஜா, உன் பொண்ணுக்கு எதுத்த வீட்டுலேயே மாப்ளை பார்த்துட்ட போல இருக்கே? எங்ககிட்ட எல்லாம் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லலையே…” அதற்குள் பக்கத்துக் குடிசைகளில் இருந்தவர்கள் சிலர் அங்கே கூடிவிட்டனர்.

வெற்றியின் கையைப் பிடித்துக் கொண்டு அவனிடம் ரகசியமான குரலில் பேசிக் கொண்டிருந்த அல்லியைப் பார்த்த படி சரோஜாவிடம் கேலியாக விசாரித்தனர்.

‘ஆமா, அவ என்கிட்டயே சொல்லலை. இதுல நான் உங்ககிட்ட எல்லாம் சொல்லாதது ஒன்னு தான் குறைச்சல்…’ என்று தனக்குள் மட்டும் முணுமுணுத்துக் கொண்டார் சரோஜா.

“அடியேய் அல்லி, ஏன்டி இப்படி ரோட்டில் நின்னு மானத்தை வாங்கிட்டு இருக்க? வாடி வீட்டுக்குள்ள…” என்று அதட்டி அழைத்தார்.

“யாருமா விளையாடுறா? உன் மருமவன் தான் ஆட்டம் காட்டிட்டு இருக்கார். ஒழுங்கா அவரை என் கூட ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லு…” என்றாள் அல்லி.

‘சத்தமே இல்லாமல் என் வீட்டுக்குள்ள போயிருப்பேன். இந்த அம்மா என்னைப் பார்த்துக் கூப்பிட்டு, இப்ப மகள் என் கையைப் பிடிச்சு வச்சு ஒரு கூட்டத்தையே கூட்டி வச்சுருக்கா.

இப்போ ரோட்டில் நின்னு அம்மாவும், மகளும் என்னைக் காட்சிப் பொருளா ஆக்கி வேடிக்கை காட்டிட்டு இருக்காங்க. இதுல கையை வேற விட்டுத் தொலைய மாட்டேங்கிறா. இவளை…’ என்று மனதிற்குள் பல்லைக் கடித்தான் வெற்றி.

“ஏய், கையை விட்டுத் தொலைடி. மனுஷனுக்கு வலி உயிர் போகுது. இவ வேற ஷோ காட்டிட்டு இருக்கா…” என்று தன் கையை விடுவித்துக் கொள்ளச் சட்டென்று உதறினான்.

அவன் உதறியதை விட வேகமாக மீண்டும் அவனின் கையைப் பற்றிக் கொண்ட அல்லி “வலிக்குதுல? வா, ஆஸ்பத்திரிக்குப் போகலாம்…” என்று இழுத்தாள்.

“ஆட்டோ அண்ணே, இங்கே வா!” என்று அப்போது தான் சவாரி முடிந்து தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அந்தத் தெருவில் இருக்கும் ஆட்டோக்காரரை அழைத்தாள்.

அவர் வரவும் முறைத்த வெற்றியை வம்படியாக இழுத்து ஆட்டோவில் ஏற்றினாள்.

“அம்மா, நானும் கூடப் போயிட்டு வர்றேன். நீ உன் மருமவனுக்குச் சோறாக்கி வை!” என்று அன்னைக்கும் கட்டளையிட்டு விட்டு ஆட்டோவில் ஏறினாள் அல்லிராணி.

“இவளுக்கு அல்லிராணினு பேர் வச்சதுக்குப் பதில் அடங்காப்பிடாரி ராணின்னு பேர் வச்சுருக்கலாம்…” என்று திட்டிக் கொண்டே தலையில் அடித்த படி வீட்டிற்குள் சென்றார் சரோஜா.

அருகில் இருந்த மருத்துவமனையை நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தது.

“எப்படி வெற்றி அடிப்பட்டுச்சு? உன் கூட்டாளிங்க எல்லாம் எங்க? இன்னைக்கு உன் கூட வியாபாரத்துக்கு வரலையா?” என்று கேள்விகளாகக் கேட்டுக் கொண்டு வந்தாள் அல்லிராணி.

அவளின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் முகம் இறுக அமர்ந்திருந்தான் வெற்றி.

“சொல்லு வெற்றி…” என்று அவனின் கையைப் பிடித்து உலுக்கினாள்.

“இதோ பார், இப்போ பேசாம வர்றியா? இல்லனா ஆட்டோவில் இருந்து நான் இறங்கட்டுமா? இப்போ என் காயம் இருக்கும் நிலைக்கு ஹாஸ்பிடல் போயே ஆகணும். அதான் ஆட்டோவில் ஏறினேன். இன்னொரு முறை கேள்வி கேட்டா ஒன்னு நான் இறங்குவேன். இல்லைனா…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“என்னை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டுருவ. அதானே?” அவன் அடுத்து என்ன சொல்லுவான் என்று அறிந்தது போல் அவனின் பேச்சை முடித்து வைத்தாள் அல்லிராணி.

“தெரியுதுல? வாயை மூடிட்டு வா!” என்று சொல்லிக் கையாலும் வாயைப் பொத்திக் காட்டினான்.

“ஒரு அக்கறைல கேட்டா ரொம்பத் தான்…” என்று முணுமுணுத்துக் கொண்டே பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

“என்னமா தங்கச்சி, கல்யாண சாப்பாடு எப்போ?” என்று முன் பக்கமிருந்து ஆட்டோ ஓட்டுனர் நமட்டுச் சிரிப்புடன் கேட்டார்.

“ஹான்… நீ காரைவீடு கட்டின பிறகு…” என்று எரிச்சலுடன் சொன்னாள் அல்லி.

“அப்போ இந்த ஜென்மத்துக்குக் கல்யாணம் இல்லைன்னு சொல்லு…” என்று நக்கலாகச் சொல்லி விட்டு வாயை மூடிக் கொண்டார் ஓட்டுனர்.

“உன்னை… பேசாம சீக்கிரம் போ அண்ணே…” என்று கடுப்படித்தாள்.

அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை என்பது போல் கண்களை மூடிக் கொண்டு வந்தான் வெற்றி.

வலியைப் பிரதிபலிக்கும் விதமாக அவனின் புருவங்கள் சுருங்கி விரிந்து கொண்டிருந்தன.

அதனைக் கண்டவள், ஒரு கையால் அவனின் புருவத்தை மென்மையாக நீவி விட்டாள்.

இன்னொரு கையால் அவனின் கையைப் பிடித்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு உள்ளங்கையை அழுத்திக் கொடுத்தாள்.

ஏனோ இந்த முறை வெற்றி தன் கையை விடுவித்துக் கொள்ள முயலவில்லை.

மூடிய கண்களையும் திறக்கவில்லை.

இருபத்தி நான்கு மணிநேர மருத்துவமனை ஒன்றின் வாசலில் ஆட்டோ நின்றது.

கீழே இறங்கும் நேரத்தில் தான் ஆட்டோவிற்குப் பணம் கொடுக்க வேண்டும் என்பதே ஞாபகத்தில் வர, தன் தலையில் தட்டிக் கொண்டவள் “அண்ணே நாளைக்கு வீட்டாண்ட காசு வாங்கிக்கோ…” என்றாள்.

“இவருக்கு வீட்டுக்குப் போனதும் காசு கொடுத்துக்குவ. ஆஸ்பத்திரிக்கு என்ன பண்ணுவ?” என்று அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வெற்றி கேட்டான்.

“அய்யோ! ஆமா இல்லை? உன் விஷயத்தில் மட்டும் என் புத்தி வேலையே செய்ய மாட்டேங்குது. இப்போ என்ன பண்றது வெற்றி?” என்று கைகளைப் பிசைந்தாள்.

“ஆட்டோ அண்ணே, உன்கிட்ட காசு இருக்கா?” என்று அவள் யோசனை வந்தது போல வேகமாக அவரிடம் கேட்டாள்.

“உன்னை என் வண்டியில் ஏத்திட்டு வந்ததுக்கு இன்னைக்கு வசூலைப் பூராவும் புடுங்கிருவ போலயே தங்கச்சி? ஆளை விடுங்க சாமிகளா…” என்று சொன்னவர் அடுத்த நிமிடம் அங்கிருந்து பறந்திருந்தார்.

‘இப்போ என்ன செய்ய?’ என்பது போல அவள் மீண்டும் கையைப் பிசைய ஆரம்பிக்க, இப்போது அவளைச் சுவாரசியமாகப் பார்த்தான் வெற்றி.

கூடவே அவனின் உதட்டோரம் சின்ன முறுவலும் பூத்திருந்தது.

“ஆஸ்பத்திரியில் கட்டுப் போட்டுட்டு அப்படியே பின் பக்கமா தப்பிச்சுப் போயிருவோமா? காலையில் வந்து நைசா காசு கொடுத்துடலாம்…” என்று ஐடியா கிடைத்து விட்டது போல வேகமாக வெற்றியிடம் கேட்டாள்.

“லூசு, பேசாம வாடி!” அவள் சொன்ன ஐடியாவில் சட்டென்று தோன்றி விட்ட சிரிப்பை அடக்கிக் கொண்டு, கடுப்பாகச் சொல்வது போல் சொல்லி விட்டுக் காலை இழுத்துக்கொண்டு உள்ளே நடந்தான்.

ஓடி வந்து அவனின் கையைப் பிடித்துக் கொண்டவள், “காசு?” என்று விடாமல் கேட்டாள்.

“என்கிட்ட இருக்கு…” என்று முடித்துக் கொண்டான்.

“காசை கைல வச்சுக்கிட்டே தான் என்னைக் கேலி செய்தியாக்கும்?” என்று கேட்டுக் கொண்டே அவனுடன் நடந்தாள்.

“நடக்க ரொம்பக் கஷ்டப்படுறியே வெற்றி. நான் வேணும்னா தள்ளிட்டுப் போற சேர் எடுத்துட்டு வரட்டுமா? அதில் உட்கார்ந்து வர்றீயா?” என்று கேட்டாள்.

“இல்ல, வேண்டாம்…” என்று அவன் மறுக்க, அதைக் கண்டுகொள்ளாதவள், “நர்சம்மா, ஒரு வண்டி சேர் குடுங்களேன்…” என்று அங்கிருந்த செவிலியிடம் சக்கர நாற்காலியைக் கேட்டு வாங்கி அவனை அதில் அமரச் சொன்னாள்.

“ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்றடி…” என்று சலித்துக் கொண்டே அவன் அதில் அமர, மருத்துவரை எங்கே பார்க்க வேண்டும் என்று விசாரித்து அங்கே அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்று மருத்துவரை பார்த்துச் சிகிச்சை மேற்கொள்ள, தலை காயத்தில் மட்டும் ஐந்து தையல் போட்டுவிட்டார் மருத்துவர்.

கால் முட்டியில் சதை பிய்ந்து உள்ளே இருக்கும் எலும்பு தெரியும் அளவிற்குப் பெரிய காயமாக இருந்தது.

“என்ன வெற்றி, இவ்வளவு பெரிய காயமா இருக்கு. ஆனா நீ காலில் இருந்த காயத்தைக் காட்டவே இல்லையே?” என்று அதிகமாகப் பிய்ந்திருந்த சதையில் இருந்து வெளியேறிய ரத்தத்தைப் பார்த்துப் பதறிப் போய்க் கேட்டாள்.

“ஏன், அதையும் ஊருக்கு முன்னாடி உட்கார்ந்து ஷோ காட்டவா? பேசாம இருடி! சும்மா கேள்விக் கேட்டுக்கிட்டு…” என்று மருத்துவர் இருந்ததால் மெல்லிய குரலில் எரிச்சல் பட்டான்.

முகத்தை அவன் அவ்வபோது சுருக்கிக் கொண்டதை வைத்து அவனுக்கு இருக்கும் வலியின் அளவைப் புரிந்து கொண்டாள் அல்லிராணி.

“ரொம்ப வலிக்குதா வெற்றி?” என்று ஆதரவான மென்மையான குரலில் கேட்டாள்.

அந்த நேரம் அவன் கண்களை மூடி வலியைப் பொறுத்துக் கொண்டிருந்தான்.

“ரொம்ப வலிக்குது போல டாக்டர். வலிக்காம இருக்க ஏதாவது செய்யுங்களேன்…” என்று தவிப்புடன் மருத்துவரிடம் சொன்னாள்.

மருத்துவர் அவனின் காலின் காயத்திற்குக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தவர், நிமிர்ந்து அவளைப் பார்க்காமல் தனக்கு உதவி கொண்டிருந்த செவிலியைப் பார்த்தார்.

மருத்துவரின் பார்வையின் அர்த்தம் புரிந்து, “டாக்டர் பார்த்துட்டுத் தானே மா இருக்கார். கொஞ்ச நேரம் அமைதியா இரு! அமைதியா இருக்க முடியலைனா வெளியே போய் வெய்ட் பண்ணு…” என்று அதட்டினார் அந்தச் செவிலி.

‘பாவம் ரொம்ப வலிக்குதேன்னு சொன்னா, அதுக்குப் போய்த் திட்டுறாங்க…’ என்று தனக்குள் முனங்கிக் கொண்டவள் அதன் பிறகு வாயைத் திறக்காமல் அமைதியாக அவனின் நெற்றியை நீவி விட ஆரம்பித்தாள்.

அவள் தனக்காக மருத்துவரிடம் பேசுவதையும், திட்டு வாங்குவதையும் கேட்டுக் கண்களைத் திறந்து அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான் வெற்றி.

அவனின் வலியைத் தானும் உணர்ந்தது போல் கண்களில் லேசாக நீர் தேங்கியிருக்க, கலக்கமான முகத்துடன் அவனைப் பார்த்த படி நின்றிருந்தாள் அல்லிராணி.

வெற்றி அங்கிருந்த படுக்கையில் படுத்திருந்தான். காலின் பக்கம் நின்றிருந்த மருத்துவர் அவனுக்குச் சிகிச்சை செய்து கொண்டிருக்க, அல்லி அவனின் தலை பக்கம் நின்றிருந்தாள்.

தலையில் தையல் போட்டுப் பெரிய கட்டாகப் போட்டிருக்க, அவனின் பார்வையைக் கவனிக்காமல் காயம் இல்லாத கட்டுப் பகுதியில் கை வைத்து மெல்ல வருடிக் கொண்டே இருந்தாள்.

அவளையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றி. இப்போது அவளின் கையைத் தட்டி விட நினைக்கக் கூட இல்லை அவன்.

அவளையே பார்த்தவனின் பார்வையில் என்ன இருந்தது என்று வரையறுக்க முடியாத அளவில் ஒரு பார்வை பார்த்தான்.

அப்போது மட்டுமில்லாமல் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் அவனின் பார்வை அவளைத் தொடர்ந்தது.

சரோஜாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே அவனுக்கு உணவை எடுத்து வந்து கொடுத்து உண்ண வைத்தாள். பின் மாத்திரை எடுத்துக் கொடுத்து அதைப் போட வைத்தாள்.

அவளைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே அவளின் உதவியை ஏற்றுக் கொண்டான் வெற்றி.

அவனின் பார்வையைக் கவனித்த அல்லி ‘என்னை விட ஓவரா சைட் அடிக்கிறானே…’ என்று தனக்குள் முனங்கிக் கொண்டாள்.

“என்ன வெற்றி, என்னை எதுக்கு அப்படிப் பார்க்கிற?” என்று பொறுக்க முடியாமல் அவனிடம் கேட்டே விட்டாள்.

“ஒன்னுமில்லை, நீ உன் வீட்டுக்குப் போ!” என்று சொல்லி விட்டுப் படுத்திருந்தவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

அவன் ஏதோ சொல்ல வந்து பேச்சை மாற்றியது போல் இருக்க, இப்போது அவனையே விடாமல் பார்ப்பது அவளின் முறையாகிற்று.

“சும்மா என்னை முறைச்சுப் பார்க்காம கதவை மூடிட்டுக் கிளம்புடி!” என்று கண்களைத் திறவாமல் அதட்டினான்.

“அவன் மட்டும் என்னைப் பார்ப்பானாம். நான் பார்த்தா மட்டும் தப்பாம். எந்த ஊர் நியாயம்டா இது? போடா டேய்!” என்று கடுப்பாகச் சொல்லி விட்டுக் கதவைத் தானே மூடிவிட்டுச் சென்றாள் அல்லிராணி.

அவள் சொல்லிச் சென்றதைக் கேட்டு இதழ் பிரியாமல் லேசாகச் சிரித்துக் கொண்டான் வெற்றி.