மனம் கொய்த மாயவனே – 1

அத்தியாயம் – 1

தன் குடிசையிலிருந்து இரண்டு கைகளையும் தூக்கிச் சோம்பல் முறித்த வண்ணம் வெளியே வந்த அந்த ஆடவன், எதிரே தன்னையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்த குமரியைக் கண்டதும் தன் கைகளை வேகமாகக் கீழே இறக்கினான்.

கையில்லாத பனியனும், லுங்கியும் அணிந்து, கலைந்த தலையுடன் கண்களில் இன்னும் தூக்கம் மீதமிருக்க, தன் கட்டுமஸ்தான உடம்பைக் காட்டிக் கொண்டிருந்தவனை விடாமல் மொய்த்தன எதிரே இருந்த கன்னிகையின் கண்கள்.

அவள் பார்த்த பார்வையில் அவனுக்குத் தான் லஜ்ஜை வந்து தொலைத்தது.

அவளோ உடையவனைப் பார்ப்பது போல் உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பார்வையைப் பார் பார்வையை… பொண்ணா லட்சணமா இல்லாம ஒரு ஆம்பளையை என்ன பார்வை பார்க்கிறா பார்…” என்று எதிரே இருந்தவளுக்கும் கேட்கும் படி முணுமுணுத்தவன், குடிசையில் சொருகியிருந்த வேப்பங்குச்சியை எடுத்துப் பற்களைத் தேய்க்க ஆரம்பித்தான்.

அவனின் முனங்கலைக் கேட்டாலும் பொருட்படுத்தாமல் பாவாடையையும், தாவணியையும் இழுத்துச் சொருகி, அவளின் குடிசையின் வெளியே அமர்ந்து பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டே தேக்கு மரத் தேகம் போலிருந்தவனைத் தன் கண்களுக்குள் தேக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

அவனோ பல் தேய்த்து விட்டு முகம் கழுவும் வேலையைத் தொடர, “எப்படிய்யா நீ இப்படிப் பளபளன்னு இருக்க?” என்று கொஞ்சலான குரலில் கேட்டு அவனின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றாள்.

அவளின் கேள்வியில் முகம் கழுவிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து, “ஹான்… தினமும் விம் பார் போட்டுத் தேய்ச்சுக் குளிக்கிறேன். அதான் பளபளன்னு ஆகிட்டேன்…” என்று உதட்டைச் சுழித்து நக்கலுடன் சொன்னான்.

“விம் பார் போட்டுக் குளிக்கிற அளவுக்கு அம்புட்டு வசதியான ஆளாய்யா நீ? இம்புட்டு நாளா இது தெரியாம போச்சே…” என்று தேங்காய் நாரை சாம்பலில் தொட்டுப் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள், பாத்திரத்தைக் கீழே போட்டு விட்டுச் சாம்பல் கையுடன் நாடியில் கைவைத்து வியப்பைக் காட்டினாள்.

“இவ்வளவு நாளா தெரியலைனா என்ன? இனி தெரிஞ்சுக்கோ…” என்று அலட்சியமாகச் சொன்னவன், அங்கிருந்த கொடியில் தொங்கிய துண்டை எடுத்துக் கொண்டு தென்னை ஓலையால் வேய்ந்திருந்த தடுப்பிற்குள் நுழையப் போனான்.

“யோவ், நில்லுய்யா…” அவனைச் செல்ல விடாமல் தடுத்து ஏதோ பேச்சுக் கொடுக்கப் போனாள்.

“அடியேய்! அங்க என்னடி வாயாடிட்டு இருக்க? சீக்கிரம் வாடி. காலங்காத்தால ரவுசு பண்ணிட்டு இருக்கா. வேலையை முடிச்சுட்டுச் சீக்கிரம் வந்து தொலை. நேரம் போய்ப் போனா அந்த மேஸ்திரி காய்ச்சி எடுத்துருவான்…” என்று உள்ளிருந்து கத்திய அவளின் தாயாரின் குரலில் அப்படியே தன் வாயைக் கப்பென்று மூடி வேகமாகப் பாத்திரத்தைத் தேய்க்க ஆரம்பித்தாள்.

அவளின் வேகத்தைப் பார்த்து வந்த சிரிப்பைக் கடைவாய் ஓரம் ஒதுக்கியவன், குளிக்க மறைவிற்குள் சென்று மறைந்தான்.

அவன் குளித்து விட்டு வெளியே வந்த போது தலையில் சும்மாடு கட்டி, அதன் மேல் சாந்து சட்டியைச் சுமந்து கொண்டு சித்தாள் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் அவனின் எதிர் வீட்டுக்காரி.

“அடியேய் அல்லி, விருட்டுன்னு நடந்து வாடி. நீ நடக்குற நடைக்கு உச்சிப் பொழுதே வந்துட போவுது…” என்று விரட்டிய தாயின் பின் ஓட்டமும், நடையுமாகச் சென்றாலும் வெளியில் வந்தவனை அவளின் கண்கள் விரட்டியதை அவனும் கண்டான்.

‘பாதையைப் பார்த்து நடந்து போடி…’ என்பது போல் கண்களை உருட்டினான்.

‘நான் உன்னைத் தான் பார்ப்பேன் போயா…’ என்று பதிலுக்குத் தலையைச் சிலுப்பியவள், லுங்கியும், வெற்று மார்பில் துண்டையும் போர்த்தியிருந்தவனைத் தலை முதல் கால் வரை ஒரு முறை வருடி விட்டே தன் பார்வையைத் திருப்பினாள்.

“ஆத்தாடி ஆத்தா! சைட் அடிக்கிறதில் ஆம்பளை தோத்துப் போவான் போ. என்னமா பார்த்துட்டுப் போறா. இவளுக்கு எல்லாம் அல்லிராணின்னு பேரு வச்சதுக்குப் பதிலா ஆள்முழுங்கி ராணின்னு வச்சுருக்கணும். பார்வையாலேயே ஆளை முழுங்கிருவா போல இருக்கே…” என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டே தன் குடிசைக்குள் நுழைந்தான்.

சிறிய குடிசை தான் அது‌. அவன் படுத்த கோரைப் பாயும், தலையணையும் ஒரு ஓரத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.

அவனின் துணிகள் அடங்கிய இரும்பு பெட்டி ஒன்று இன்னொரு மூலையில் இருந்தது. சுவரில் ஒரு காலண்டரும், அதன் அருகே இருந்த சின்னத் திட்டில் கண்ணாடி, சீப்பு, பவுடர், எண்ணெய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

சுவரில் விநாயகர் படம் தொங்கிக் கொண்டிருந்தது. படத்திற்குக் கீழே ஒரு பெரிய துணி மூட்டை இருந்தது.

அடுத்துச் சின்னத் திட்டு மறைப்பு வைத்துத் தரையில் விறகடுப்பு இருக்க, அதன் அருகில் ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ்வும், நாலு சமையல் பாத்திரங்களும், ஒரு தட்டும், ஒரு டம்ளரும் ஒரு மண்பானையில் தண்ணீரும் இருந்தது.

சமைக்கச் சில மளிகை சாமான்கள், அரிசி, பருப்பு என ஒரு ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவ்வளவு தான் அந்த வீட்டில் இருந்த பொருட்கள். அவைகளை மட்டுமே வைத்துப் புழங்கி தன் வாழ்க்கையை அந்த வீட்டில் கடத்திக் கொண்டிருப்பவன்.

வீட்டுக் கூடத்தில் ஒரு கயிறு கட்டியிருக்க அதில் தன் தோளில் கிடந்த துண்டை உதறி விரித்து விட்டவன், இரும்பு பெட்டியில் இருந்த சட்டையை எடுத்து மாட்டி, பேண்ட்டையும் அணிந்து விட்டு லுங்கியை அந்தக் கொடியின் மீது போட்டான்.

கண்ணாடி முன் நின்று எண்ணெய் தேய்த்து தலையை வாரி, முகத்தில் பவுடரை அடித்து விட்டு அவன் நிமிர்ந்த போது “ஏலேய் வெற்றி… கிளம்பிட்டியா?” என்று ஒரு கட்டைக் குரல் வெளியே இருந்து வந்தது.

“இந்தா வந்துட்டேன்டா முருகா…” என்று பதிலுக்குக் குரல் கொடுத்து விட்டு, விநாயகர் படத்தின் முன் நின்று ஒரு நிமிடம் கண்களை மூடித் திறந்தவன், கீழே இருந்த துணி மூட்டையை எடுத்துக் கொண்டு, கூரையில் சொருகியிருந்த பூட்டுச் சாவியை எடுத்துக் கதவைப் பூட்டினான்.

“என்னடா வெற்றி, பவுடர் சும்மா கும்முன்னு மணக்குது. நீ இருக்குற அழகுக்கு உனக்குப் பவுடர் எல்லாம் தனியா போடணுமாடா? என்னைப் போல ஆளுங்க போட்டாலும் பரவாயில்லை…” என்ற முருகன் கையை நீட்டி, தன் கருத்த தோலைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.

“உனக்கு ஒரு நாளைக்கு ஒரு பவுடர் டப்பா போட்டாலும் பத்தாதே முருகா…” என்று அவனைக் கேலி செய்தான் அவனுடன் வந்திருந்த இன்னொரு நண்பனான காளி.

“டேய் காளி, வாயை மூடிக்கிட்டு வா. காலங்காத்தாலேயே என்னைக் கடுப்பேத்துனா நான் காளி அவதாரம் எடுத்துடுவேன்…” என்று கடுப்பாகக் கத்தினான் முருகன்.

“உண்மையைத் தானே முருகா சொன்னேன்…” என்று சிரித்துக் கொண்டே காளி மேலும் ஏதோ கிண்டலடிக்க வாயைத் திறக்க,

“போதும்டா காளி. அவனைக் கடுப்பேத்தாம வா. அவன் தான் அவனோட கலரைச் சொன்னா கோபப்படுவான்னு தெரியும்ல?” என்று காளியை அடக்கினான் வெற்றி.

“அப்புறம் வெற்றி, எதுத்த வீட்டு அல்லி அம்பு விட்டுச்சு போல… ம்ம்… ம்ம்…” என்று கண்ணைச் சிமிட்டிக் கள்ளமாய்ச் சிரித்துக்கொண்டே கேட்டான் முருகன்.

“அம்புன்னு சொல்லாதே முருகா. அம்புகள்னு சொல்லு. கணை விடாமல் இல்ல பாயுது…” என்று தானும் சேர்ந்து கேலியில் இறங்கினான் காளி.

இருவரையும் ஒரு சேர முறைத்த வெற்றி “உங்க இரண்டு பேரையும் சமாதானம் பண்ணி விட்டா, இரண்டு பேரும் சேர்ந்து என் மேலேயே பாய்றீங்களாடா?” என்று கடுப்பாகக் கேட்டவன், “உனக்குப் போய்ச் சப்போர்ட் பண்ணினேன் பார். என் புத்தியை…” என்று முருகனைப் பார்த்துப் பல்லைக் கடித்தான்.

“உன் செருப்பால அடிச்சுக்காதேடா வெற்றி. அது ஏற்கனவே இப்பவோ அப்பவோன்னு தான் இருக்கு…” அலட்டிக் கொள்ளாமல் நண்பனை மேலும் வாரினான் முருகன்.

மூவரும் பேசிக் கொண்டே வரிசையாகக் குடிசையாக இருந்த அந்தத் தெருவைக் கடந்து வந்து, அங்கே தெரு முனையில் இருந்த ஒரு சிறிய இட்லி கடையின் பெஞ்சில் சென்று அமர்ந்தார்கள்.

“யக்கா, வழக்கம் போலக் கொடுத்துரு…” என்று முருகன் இட்லி கடை வைத்திருப்பவரிடம் உணவுக்குச் சொல்ல, மூன்று தட்டில் ஆறு, ஆறு இட்லிகளையும், சட்னி, சாம்பாரும் வைத்து அவர்களிடம் நீட்டினார் அப்பெண்மணி.

தங்களின் துணி மூட்டையைக் கீழே வைத்து விட்டு, உணவை வாங்கி உண்ண ஆரம்பித்தனர்.

“ஏன் தம்பிகளா, பட்டணத்துல வேலை பார்க்கணும்னு பொழைப்பைத் தேடி வந்தவுக ஏதாவது ரூம் எடுத்து தங்காம, இப்படி ஏன் இங்க வந்து குடிசையில் தங்கிருக்கீக?” என்று கேட்டார் அப்பெண்மணி.

“எங்க எக்கா நாங்க சம்பாதிக்கிற காசை ரூம் வாடகை எல்லாம் கொடுத்துக் கட்டுப்படி ஆகுமா? எங்க சாப்பாடு செலவு, அன்றாடச் செலவு பார்க்கணும். வீட்டுக்கும் பணம் அனுப்பணும். அதுக்கே இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு வந்திடுது. இந்த லட்சணத்தில் ரூம் எடுத்தா அவனுக்குச் சொளையா தூக்கிக் கொடுக்கணும்.

இங்கனா கொஞ்சம் தான் காசு செலவாகுது. நீயும் கூடப் பதினைஞ்சு ரூபாக்குத் தாராளமா இட்லி கொடுக்குற. இது போதும்கா எங்களுக்கு…” என்று பேச்சோடு பேச்சாக அவருக்கு ஒரு பெரிய ஐஸை தூக்கி வைக்க, அதில் மகிழ்ந்தவர் அவனுக்கு இன்னும் கொஞ்சம் சாம்பாரை ஊற்றி விட்டுச் சென்றார்.

முதலில் கொஞ்சமாக இருந்த சாம்பாரில் தொட்டுக்கோ துடைச்சுக்கோ என்பது போல இட்லியைப் பதமாகத் தேய்த்து உண்டு கொண்டிருந்தவன், இப்போதோ தாராளமாகத் தொட்டு இட்லியைப் பிட்டு வாயில் போட்டு விட்டு நண்பர்களைப் பார்த்துக் குறும்பாகக் கண் சிமிட்டினான் வெற்றி.

‘நீ நடத்துடே…’ என்பது போல் பதிலுக்குச் சிரித்து வைத்தார்கள் முருகனும், காளியும்.

காலை உணவை வழக்கம் போல அங்கே முடித்தவர்கள் தங்கள் மூட்டையைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து விரைந்தார்கள்.

“வேகமா நடங்கடா, டவுன் பஸ்ஸு போய்ட போகுது…” என்று நண்பர்களை விரட்டிய வெற்றி தன் கால்களை எட்டிப் போட்டான்.

அவன் நடந்த வேகத்திற்கு அவனின் நண்பர்கள் அவன் பின்னால் ஓட வேண்டியிருந்தது.

விரைந்து அவர்கள் வந்து சேர, பேருந்தும் சரியாக வந்து நின்றது. அதில் ஏறியவர்கள் அந்தப் பெரிய பஜாரில் தான் சென்று இறங்கினார்கள்.

அந்த நேரத்திலேயே சில கடைகள் திறக்க ஆரம்பித்திருக்க, இவர்களும் சாலையோரத்தில் தங்கள் மூட்டையை வைத்து அவிழ்த்து, அதில் இருந்த சிறிய தார் பாயை விரித்து, மூட்டையில் இருந்த துணிகளை ரகம் வாரியாக அடுக்க ஆரம்பித்தார்கள்.

மூவரும் ஒரே இடத்தில் அமராமல் சிறிது தூரம் தள்ளி தள்ளியே அமர்ந்தனர்.

ஆண்களின் சட்டை, பெர்முடாஸ், பெண்களின் டாப்ஸ், லெக்கின்ஸ், துப்பட்டா, நைட்டி என்று வரிசையாகப் பிரித்து வைத்துவிட்டுச் சாம்பிளுக்கான துணியைக் கையில் வைத்துக் கொண்டு, “நூறுவா… நூறுவா… எதெடுத்தாலும் நூறுவா…” என்று கூவ ஆரம்பித்தான் வெற்றி.

அவனுடன் சேர்ந்து அந்தப்பக்கம் அவனின் நண்பர்களும் கூவ ஆரம்பிக்க, அவர்களின் அன்றைய வியாபாரம் ஆரம்பித்தது.

காலையை விட மாலையில் தான் அவர்களின் வேலை சூடு பிடிக்கும் என்றாலும் காலையில் விற்கும் சொற்ப விற்பனையையும் விட அவர்கள் தயாராகயில்லை.

மலிவு விலை துணி தான் என்றாலும் ஓரளவு நன்றாகவே விற்பனை ஆகும் என்பதால், அத்தொழிலை விடாமல் பற்றிக் கொண்டனர்.

மதியம் வரை வெற்றிக்கு நான்கு துணிகள் மட்டுமே விற்றிருக்க, “வெயில் ஏறிடுச்சு முருகா. சாப்பாட்டை முடிச்சுட்டுச் சாயந்தரம் வருவோமா?” என்று நண்பர்களிடம் சென்று கேட்டான்.

“போவோம்டா வெற்றி. எனக்கு இரண்டு நைட்டி மட்டும் தான் வித்துச்சு. சாயந்திரம் விட்டதைப் பிடிச்சுடணும்டா…” என்று பேசிக் கொண்டே தங்கள் மூட்டையைக் கட்ட ஆரம்பித்தனர்.

மதிய உணவை ஒரு தள்ளுவண்டி கடையில் முடித்து விட்டு அங்கே இருந்த ஒரு பூங்காவின் வெளியே இருந்த மர நிழலில் சென்று அமர்ந்தனர்.

மாலை மீண்டும் தங்கள் வியாபாரத்தை ஆரம்பித்து இரவு பதினோரு மணியளவில் வீடு வந்து சேர்ந்தனர்.

இரவு பன்னிரண்டு மணியளவில் அந்தத் தெருவே அமைதியைத் தத்தெடுத்திருந்தது.

அந்தக் குடிசைப்பகுதியில் இருக்கும் பலர் கூலி வேலை செய்பவர்கள் தான் என்பதால், அந்நள்ளிரவில் அனைவரும் தங்கள் குடிசைக்குள் முடங்கி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

அப்போது தன் குடிசையின் கதவைத் திறந்து, இயற்கை உபாதைக்காக வெளியே வந்த அல்லி, வெற்றியின் வீட்டைப் பார்த்துவிட்டே மறைவிற்குள் சென்றாள்.

அவள் திரும்பி வந்த போது, வெற்றியின் வீட்டுக் கதவும் திறப்பதை உணர்ந்தவள், வேகமாகப் பார்வையை அந்தப் பக்கம் திருப்பியவளின் கண்கள் பெரியதாக விரிந்து அதிர்ச்சியைப் பிரதிபலித்தது.

வெற்றியின் கண்களும் ஒரு நொடி அதிர்ச்சியைப் பிரதிபலித்தாலும், “சீக்கிரம் இங்கிருந்து போயிரு…” என்று தன் அருகில் இருந்த பெண்ணை அனுப்பி வைப்பதில் கவனமாக இருந்தான்.

அப்பெண்ணையும், வெற்றியையும் கண்களைக் கூடச் சிமிட்டாமல் திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அல்லியால் தான் கண்டதைக் கிச்சித்தும் நம்ப முடியவில்லை.

தான் முழுங்குவது போல் பார்த்தாலும் தன்னைக் கல்லையும், மண்ணையும் போலப் பார்த்து விட்டு எனக்கென என்பது போல் போகின்றவன், இன்று யாரோ இன்னொரு பெண்ணுடன், அதுவும் இந்த நேரத்தில்?

அதற்கு மேல் அவளால் கற்பனையில் கூட நினைக்க முடியவில்லை.

அப்பெண்ணும் அல்லியைப் பார்த்து விட்டுப் பின் வெற்றியைப் பார்த்தாள்.

“அதெல்லாம் கண்டுக்காத. நீ கிளம்பு…” என்று அப்பெண்ணை அவன் அனுப்ப, அல்லியைப் பார்த்து விட்டு, தலையை மூடியிருந்த முந்தானையை இன்னும் நன்றாக இழுத்து விட்டுத் தன் முகம் முழுவதையும் மறைத்துக் கொண்டு அங்கிருந்து விரைந்தாள் அவள்.

“என்ன வெற்றி இது?” என்று மெல்லிய குரலில் அதிர்ச்சி குறையாமல் கேட்டவளைச் சலனமே இல்லாமல் பார்த்தவன் வீட்டிற்குள் செல்ல போனான்.

“யோவ்…” பதில் சொல்லாமல் போகின்றவனை நிறுத்த, அல்லி சற்றுச் சப்தமாகவே குரல் கொடுத்து விட,

“ஷ்ஷ்!” என்று தன் உதட்டில் விரல் வைத்து அதட்டி “உன் வேலையைப் பார்த்துட்டுப் போடி…” எனக் கடுப்பாக உரைத்து விட்டுக் குடிசைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

முகத்தில் அடிப்பது போல் அவன் கதவைச் சாற்றியதில் அதிர்ந்து கதவையும், தெருமுனையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த பெண்ணையும் மாறி மாறிப் பார்த்த படி உறைந்து நின்றாள் அல்லிராணி.