மனதோடு உறவாட வந்தவளே – 16

அத்தியாயம் – 16

ஒரு நாள் தனுஸ்ரீ சூப்பர் மார்க்கெட்டில் வேலையாக இருந்த பொழுது கடை ஊழியர் வந்து அவளைப் பார்க்க ஒருவர் வந்திருப்பதாகச் சொல்லவும் ‘யாராக இருக்கும்?’ என யோசித்துக் கொண்டே வந்தவரை உள்ளே அழைத்து வர சொன்னாள்.

சிறிது நேரத்தில் தன் அறைக்கு வந்தவனை நிச்சயமாக அவள் எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்ததும் “வாங்க அண்ணா. என்ன தின்ங்ஸ் எதுவும் வாங்க வந்தீங்களா?” என வரவேற்றுக் கொண்டே கேட்டாள்.

‘கடைக்கு வந்தவன் அப்படியே தான் இங்கே இருப்பதால் பார்க்க வந்திருப்பான்’ என நினைத்துக் கேட்டாள்.

ஆனால் அவன் “இல்லமா உன்னைப் பார்க்க தான் வந்தேன்” என்றான்.

‘என்ன என்னைப் பார்க்கவா? எதுக்கு?’ என யோசித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் “வந்து உட்காருங்கண்ணா” என்றாள்.

அமர்ந்தவனிடம் “சொல்லுங்கண்ணா, என்கிட்ட என்ன பேசணும்?” எனக் கேட்டாள்.

எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்பது போலச் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் பின்பு மெல்ல “ஜீவா பத்தி கொஞ்சம் பேசணும்மா” என்றான்.

“ஜீவா பத்தியா? அவரைப் பத்தி என்ன அண்ணா?”

“அது ஜீவா சில நாளா ரொம்ப ரெஸ்ட்லஸ்ட்டா இருக்குறது போல இருக்குமா. அவன் கிட்ட நிறைய மாற்றம். நான் கூடத் தீவிரமா வேலை பார்க்கிறதுனால அப்படி இருக்கான்னு நினைச்சேன். ஆனா அப்படி இல்லையோனு இப்ப தோணுது” என்றான்.

‘இவன் ஜீவா பற்றித் தனியாக என்னைச் சந்தித்துப் பேசும் அளவிற்கு என்ன விஷயமாக இருக்கும்?’ என நினைத்தபடியே அவன் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தவள், அவன் தொடர்ந்து பேசினதை கேட்டு குழம்பினாள்.

‘என்ன ஆபீஸ்லையும் அப்படித்தான் இருக்காரா? அப்போ என்னிடம் மட்டும் அப்படி நடந்து கொள்ளவில்லையா?’ என நினைத்தவள், “என்னாச்சுனா அப்படி என்ன நடந்துக்கிட்டார்?” எனக் கேட்டாள்.

“ரொம்ப டென்சனாவே இருக்கான்மா. வேலைனால அப்படி இருக்கான்னு தான் நானும் முதல நினைச்சேன். ஆனா முன்ன எல்லாம் எவ்வளவு கஷ்டமான வேலைனாலும் ஈஸியா டென்சன்னே இல்லாம முடிச்சுக் கொடுத்துடுவான்”

“ஆனா இப்ப எல்லாம் சின்னச் சின்ன விஷயத்திற்கும் அவன் கிட்ட அவ்வளவு சிடுசிடுப்பு. அவ்வளவு சீக்கிரம் யார்க்கிட்டேயும் கோபப்பட மாட்டான். ஆனா இப்ப எல்லாம் சட்டுனு கோபம் வந்துருது”

“அது மட்டும் இல்லாம அப்படி டென்ஷன் ஆகும் போது எல்லாம் ஒரு மாதிரி மூச்சுவிடுறான். ஏன் இப்படி வருதுன்னு கேட்டா. இது ஒன்னும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன்னு சொல்றான்” என அவன் சொன்னதும்,

“என்னண்ணா சொல்றீங்க? ஆபீஸ்லேயும் மூச்சு வாங்குச்சா?” எனத் தனு அதிர்ந்து கேட்டாள்.

“ஆமாம்மா, நானே ஒரு இரண்டு தடவை பார்த்துட்டேன்” கொஞ்ச நேரம் சிரமப்படுறவன் அப்புறம் சரியாகிடுறான். வீட்டுலயும் அது மாதிரி வந்துச்சாமா?” எனத் திருப்பிக் கேட்டான்.

“ஆமாண்ணா ஒரு முறை வந்துச்சு” என்றாள்.

“ஓ!” என்றவன் தொடர்ந்து “ஆனாலும் கோபப்படுறதுனால அப்படி இருக்கான்னு விட முடியாம, எனக்கு என்னமோ வித்தியாசமா தெரியுது. அதான் வீட்டுலயும் அப்படி இருக்கானா? இல்ல வெறும் ஆபீஸ் டென்ஷன் தானான்னு தெரிச்சுட்டு போக வந்தேன்” என்றான்.

அவன் பேசுவதை எல்லாம் திகைத்துப் போய்க் கேட்டுக் கொண்டிருந்த தனு அவன் சொன்ன சீரற்ற மூச்சு விடுவது போன வாரத்தில் ஒரு நாள் தான் நடந்ததால் அன்றே ரொம்பப் பயந்து போய் இருந்தாள். அதிலும் மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்த போதும் ‘வர நேரமில்லை’ எனச் சொன்ன போதே அவனை ‘எப்படி ஹாஸ்பிட்டல் கூட்டிக்கொண்டு போவது?’ என யோசித்துக் கொண்டிருந்தவள் இப்போது இவனும் இப்படி வந்து சொல்லவும், ‘என்ன ஆபீஸ்லயும் அப்படி மூச்சு விட்டானா? ஏன் எதுக்கு அவனுக்கு அப்படி ஆகுது?’ என நினைத்து உள்ளுக்குள் இன்னும் பயந்து போனாள்.

“ஆமாண்ணா, வீட்டுலயும் சில நாளா டென்ஷனா தான் இருக்கார். அதுவும் இப்ப போன வாரத்தில் ஒரு நாள் நைட் வரும் போதே டென்ஷனா இருந்தவர் மூச்சு விடத் திணறினார். நான் கூட அதுக்காக ஹாஸ்பிட்டல் போகக் கூப்பிட்டும் வர நேரமில்லைனு மறுத்துட்டார்” எனச் சொன்னாள்.

‘ஓ!’ எனக் கேட்டவன், எதையோ நினைத்துக் கொண்டு “போன வாரத்தில்னா நிச்சயம் அன்னைக்கு ரொம்ப டென்ஷனா தான் இருந்திருப்பான். அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி கொஞ்சமா என்ன?” என்றான் அவன்.

“என்னணா அப்படி என்ன அதிர்ச்சி. வீட்டுக்கு வரும் போதே ஒரு மாதிரி தான் வந்தார். அவர்கிட்ட விசாரிச்சேன் ஆனா சொல்லலை. அப்படி என்ன நடந்தது?” என்ன கேட்டாள்.

“பாருமா உன்கிட்ட கூட அவன் நண்பன் செய்த காரியத்தைச் சொல்லாம எப்படிப் பெருந்தன்மையா இருந்திருக்கான். ஆனா அவனுக்குப் போய் அப்படிச் செய்துருக்கானே அந்த மடையன்” எனத் திட்டினான்.

அவனைப் புரியாமல் பார்த்தவள் “என்ன அண்ணா சொல்லுறீங்க? யார் என்ன செய்தா?” எனக் கேட்டாள்.

“ஜீவாவே உன் கிட்ட சொல்லாம விட்ட விஷயத்தை நான் சொல்லறது நல்லது இல்ல தான். ஆனா இப்போ ஜீவாவை சரி பண்றது தான் முக்கியம். அதனால் சொல்றேன்மா” என்றவன் ஆபீஸில் நடந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.


திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் ஜீவரஞ்சனிடம் ஒரு பெரிய ப்ராஜெக்ட் ஒப்படைக்கப்பட்டது.

அது அவன் டீம் லீடர் ஆன பிறகு வரும் முதல் பெரிய ப்ராஜெக்ட் என்பதால் தன் கைக்கு அந்த ப்ராஜெக்ட் வந்த சந்தோசத்தில் நன்றாக முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் வேலையை ஆரம்பித்தான்.

அவனின் டீமில் அவனுக்குக் கீழ் நான்கு பேர் அந்தக் குழுவில் சேர்ந்தனர்.

அதில் இதுவரை வேறு ஒரு டீமில் இருந்த நிதினும், ரஞ்சிவும் அடக்கம்.

ஜீவா தன் நண்பர்களுடன் வேலை செய்யப் போவதில் அதிகம் சந்தோஷப் பட்டான்.

மொத்தம் ஐவர் கொண்ட குழுவாகத் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள். டீமில் உள்ள மற்ற நால்வருமே நன்றாக வேலை செய்யக் கூடியவர்கள். அதுவும் இல்லாமல் அந்த நால்வர் பற்றியும் நன்றாக அறிந்தவன்.

இருவர் அவன் நண்பர்கள் என்றால் இருவர் அவனுடன் இன்னொரு பிராக்ஜெக்டில் சேர்ந்து வேலை செய்தவர்கள். வேலையில் அவர்கள் நால்வருமே சிறந்தவர்கள்.

அவன் குழுவில் உள்ள அனைவரும் இப்பொழுது அவனின் முன் அமர்ந்திருந்தார்கள்.

“உங்க எல்லாருக்குமே தெரியும். நம்ம செய்ற இந்த ப்ராஜெக்ட் எவ்வளவு முக்கியமானதுனு. இதை நம்ம நல்லப்படியா செய்து கொடுத்தா நம்ம டீம்க்கு எவ்வளவு நல்ல பெயர் கிடைக்கும்னு” எனச் சொல்லிவிட்டு எல்லாரையும் ஒருமுறை பார்வையால் அளந்தான்.

ஜீவா பேசினத்தை ஆமோதிக்கும் விதமாக அனைவரும் தலையசைத்தார்கள்.

“ஆமாம் ஜீவா இந்த ப்ராஜெக்ட் கிடைச்சது நமக்குப் பெருமைதான். ஒரு பெரிய கம்பெனியோட ப்ராஜெக்ட் இதை நல்லா முடிச்சுக் கொடுத்தா நம்ம எல்லாருக்குமே இந்த ஐடி பீல்டில் நமக்கு ஒரு மதிப்பை உருவாக்கி தரும்” என்றான் கூட வேலை பார்க்கும் அஸ்வின்.

“யெஸ் அஸ்வின். நம்ம குழு சிறப்பா வேலையை முடித்துக் கொடுத்ததுன்னு நாம பேர் வாங்கணும். அதற்கு உங்க எல்லார் முழு ஒத்துழைப்பும் வேணும்” என்றான்.

“கண்டிப்பா ஜீவா நாம சூப்பரா செய்திருவோம்” என்றான் நிதின்.

ஐவரும் ஒன்றாகச் சேர்ந்து எப்படி வேலை ஆரம்பிப்பது? எப்படி அதனைச் சிறப்பாகச் செய்வது? எனத் திட்டமிட்ட படி மேலும் பேசிக்கொண்டிருந்தனர்.

அதில் ஒருவன் மட்டும் வெளியே திட்டமிடுதலில் அவனின் பங்கு ஐடியாவை சொன்னாலும் அவனுக்குள் புகைந்துக் கொண்டிருந்ததை வெளியே காட்டிக் கொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் எல்லாரும் குழுவாகப் பேசி முடிவெடுத்துத் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள்.

வேலை ஆரம்பித்து மூன்று மாதங்கள் எந்த வித தடங்கலும் இல்லாமல் சீராகச் சென்றுக்கொண்டிருந்தது. ஆனால் வேலை பழு கூடிக் கொண்டே போனது.

அதிலும் ஜீவரஞ்சன் தனக்குப் பதவி உயர்வுக்குப் பிறகு கிடைத்த பெரிய ப்ராஜெக்ட் என்பதால் நல்லப்படியாக முடிக்க வேண்டும் என்ற உந்துதலில் இன்னும் அதிகச் சிரத்தை எடுத்து அதிலேயே மூழ்க ஆரம்பித்தான்.

வேலை வேலை என ஓடிக் கொண்டிருந்தவன், சிறிது சிறிதாகத் தூக்கத்தைத் தொலைத்தான்.

ஒரு வித அழுத்தம் அவனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

வீட்டில் இருக்கும் நேரம் குறைந்து ஆபீஸே கதி என நாட்கள் ஓடின.

டீமில் இருப்பவர்கள் வீட்டிற்குச் சென்ற பிறகும் இருந்து வேலை பார்த்தான். வீட்டில் மட்டும் இல்லாது ஆபீஸில் சின்னத் தவறுகள் யாராவது செய்யும் போதும் சிடுசிடுக்க ஆரம்பித்தான்.

வேலையைச் சிறப்பாக முடிக்கவேண்டும் எண்ணம் மட்டுமே அவனின் சிந்தையை ஆட்கொண்டது.

அவனும் அவனுடன் சேர்ந்து அவனின் குழுவினரும் செய்த சிறப்பான வேலையில் ப்ராஜெக்ட் ரிலீஸ் செய்யும் அளவில் தயாரானது.

இன்னும் ரிலீஸ் செய்ய ஒரு வாரம் இருந்த நிலையில் அவர்கள் இதுவரை செய்து வைத்திருந்த பிராக்ஜெடில் ஒரு பெரிய எரர் (error) வந்தது.

நன்றாகச் சென்று கொண்டிருந்த வேலையில் வெற்றி கனியை பறிக்கப் போகும் நேரத்தில் நிகழ்ந்த அந்தப் பிழையால் ஜீவரஞ்சனுக்கு இடி விழுந்தது போல ஆனது.

‘இது எப்படி நடந்து கொண்டிருக்க முடியும்? எல்லாரும் சேர்ந்து நன்றாகத் தானே செய்தோம். ஏன் இப்படி ஆனது?’ எனத் தெரியாமல் தலை வேதனையாகப் போனது.

இதைக் கேள்விப்பட்ட ஹைச்.ஆர் ஜீவாவை பேச அழைத்தார்.

அவன் உள்ளே நுழைந்ததும் “என்ன ஜீவா என்ன நடக்குது உங்க ப்ராஜெக்ட்ல? இன்னும் ஒரு வாரத்தில் ரிலிஸ் பண்ணனும். ஆனா இந்த நேரத்தில் இப்படி ஒரு பெரிய எரர் எப்படி வந்தது?” என விசாரித்தார்.

ஜீவா “இது எப்படி ஆனதுனே தெரியல. எப்படின்னு கண்டுப்பிடிச்சிட்டு இருக்கேன். எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஆகிச்சு. சரி பண்ணிடுவோம்” எனச் சொல்ல அதற்கு “நீங்க எப்படி ஆனதுனே தெரியலைன்னு எப்படிப் பதில் சொல்லலாம்? உங்களுக்குத் தெரிஞ்சிருந்திருக்கணும். உங்க குழுவில் இருக்கிறவங்க என்ன செய்றாங்க? சரியாதான் செய்தாங்களான்னு நீங்க தான் பார்க்கணும். இந்த ப்ராஜெக்ட்க்கு நீங்க தான் லீட். எதுவும் பிரச்சனைனா உங்களைத் தான் கேள்வி கேட்பாங்க. அதுக்கு என்ன பதில் சொல்லுவீங்க?” என ஆரம்பித்த அவரின் பேச்சு ஒருமணி நேரம் சென்றது.

ஜீவா தன் இருப்பிடத்திற்கு மீண்டும் வந்து அமர்ந்த பொழுது நொந்து போய் இருந்தான்.

இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயம் அதைச் சரி செய்யக் கண்டிப்பாக முடியாது எனத் தோன்றியது. இன்னும் நாட்கள் தேவை படும் என விலக்கி மேலிடத்திடம் நிறையப் பேசி இனி அனுமதி வேறு வாங்க வேண்டும்.

அதைச் செய்வதற்கே போதும், போதும் என்றாகி விடும். பிழையையும் சரி செய்ய வேண்டும். யார் செய்த தவறில் எரர் வந்தது எனவும் கண்டு பிடிக்க வேண்டும்.

இந்த நெருக்கடி எல்லாம் சேர்ந்து ஜீவாவை சோர்ந்து போக வைத்தது.

அவன் சோர்ந்து அமர்ந்திருந்ததைப் பார்த்து அருகில் வந்த நால்வரும் “ஸாரி ஜீவா! நாங்க சரியா தான் செய்தோம். ஆனா எப்படி, இப்படி ஆச்சுன்னு தெரியல’ எனச் சொல்லி ஆளாளுக்குச் சமாதானப் படுத்தினார்கள்.

ஆனாலும் அவனால் சமாதானம் ஆக முடியவில்லை. “சரி சரி போங்க போய் என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்கப் பாருங்க” எனப் போகச் சொல்லிவிட்டு தன் வேலையை ஆரம்பித்தான்.

சாப்பாட்டு வேளையில் கேன்டீனில் வைத்துச் சந்தித்துக் கொண்ட ஜீவாவின் நண்பர்கள் அவனைக் கட்டாயப் படுத்திச் சாப்பிட அழைத்து வந்திருந்தனர்.

ஆனால் அவன் ஒரு வாய் கூடச் சாப்பிடாமல் அமர்ந்திருக்கவும் “என்னடா ஜீவா வேலை தானே? சரி பண்ணிடலாம். நீ டென்ஷன் ஆகாம சாப்பிடு” என்றான் ரஞ்சிவ்.

“ஆமாடா ஜீவா. நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம். எல்லாரும் சேர்ந்து தப்பை கண்டு பிடிச்சு சரி செய்து ரிலிஸ் பண்ணிறலாம் கவலை படாதே” என நிதினும் சமாதானப்படுத்தினான்.

யார் என்ன சமாதானம் செய்தும் ஜீவாவின் மனது ஏனோ ஒரு நிலையில் இல்லை.

“சரிதான் விடுங்கடா என்னைச் சமாதானப்படுத்தினாலும் தானா சரியாகப் போகுதா என்ன? சும்மா நேரத்தை வேஸ்ட் பண்ணாம போய் வேலையை முடிச்சு கொடுக்குற வழியைப் பாருங்க” எனக் கோபமாகச் சொல்லிவிட்டு எழுந்துச்சென்று விட்டான்

“என்னடா இவன் இப்படிக் கோபப்படுறான்” என நிதின், ரஞ்சிவை பார்த்துக் கேட்டான்.

“விடு நிதின். அவனுக்கு எவ்வளவு டென்சனோ? சரியாகிருவான்” என அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றார்கள்.

ஜீவா மேலிடத்தில் பேசியதில் மேலும் இரண்டு நாட்களுக்குள் முடித்து விட வேண்டும் என அனுமதி கொடுத்தார்கள். அவர்களிடம் அப்படி அனுமதி வாங்குவது சாதாரணக் காரியம் அல்ல.

நிறைய அவர்களைச் சமாளிக்க வேண்டிருந்தது. அவர்கள் கேட்ட விளக்கங்களுக்குப் பதில் அளித்துத் தன் பக்க நியாயத்தை விளக்கி அதற்குப் பதில் வாங்கும் முன் ஓய்ந்தே போனான்.

அப்படி அனுமதி வாங்காமல் இருக்கும் ஒரு வாரத்தில் முடிக்க முடியும் என்று நினைத்து ரிஸ்க் எடுக்க அவன் தயாராக இல்லை. ஏன்னென்றால் இந்த வேலையில் அப்படி உறுதியாகச் சில நேரம் முடிக்க முடியாமல் போய் விடும். ஒரு வேளை அப்படி நடந்துவிட்டால், கடைசி நேரத்தில் போய் விளக்கம் அளிக்க முடியாது. நிச்சயமாகத் தனக்கு அது ஒரு கரும்புள்ளியாகப் போகும் என நினைத்தே அவன் மேலும் நாட்கள் அனுமதி கேட்டு வாங்கினான்.

அனுமதி வாங்கிய கையோடு அடுத்து வந்த ஒருவாரமும் கடுமையான வேலை இருந்தது.

ஜீவாவிற்குத் தூக்கம் சிறிது கூட இல்லாமல் போனது.

முன்பை விட அழுத்தம் கூடி போன நிலைக்குத் தள்ளப்பட்டுப் போனான்.

தன் பொறுப்பில் முதல் முறையாக ஒப்படைக்கப்பட்ட ப்ராஜெக்ட் அதில் கெட்ட பெயர் வந்தால் இன்னும் வரும் நாள் எல்லாம் அந்தப் பாதிப்புத் தன்னைத் தொடரும் என்பதால் ஊன், உறக்கம் மறந்து தன் உழைப்பை கொட்டினான்.

அந்த உழைப்பின் பலனாக எங்கே பிழை நடந்தது எனக் கண்டறிந்தான். அதனை கண்டறிய அவன் கடுமையாக வேலை செய்ய வேண்டிருந்தது.

அதை விரைவாகவே சரி செய்யத் தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களையும் கடுமையாக வேலை வாங்கினான்.

ஜீவா சமோஜிதமாகச் செயல்பட்டு சீக்கிரமே பிழையைக் கண்டுபிடித்ததின் விளைவாகவும், அவனின் குழுவினரை சரியாக வேலை செய்ய வைத்ததின் காரணமாகவும், அவன் கேட்டு வாங்கிய கூடுதல் இரண்டு நாள் தேவைப்படாமல் முன்னர் ஏற்கெனவே குறித்திருந்த தேதியில் வெற்றிகரமாக ரிலீஸ் செய்து விட்டனர்.

ஆனால் இந்த வேலை ஆரம்பித்ததிலிருந்து ஜீவரஞ்சனிடம் இருந்த சில இயல்பான குணங்கள் மாறிப்போய் இருந்தது. அதனை அவனே உணர முடியாத அளவிற்குப் பாதிப்புக்குள்ளானான்.

சொன்ன தேதியில் ரிலிஸ் செய்ததற்கும் குழுவை சிறந்த முறையில் வழி நடத்தியதற்கும் ஜீவாவிற்குப் பாராட்டுக்கள் கிடைத்தன.

ஆனால் அந்தச் சந்தோஷத்தை ருசிக்கக் கூட வழி இல்லாமல் அடுத்த இடி ஒன்று அவனைத் தாக்கியது.

அவர்கள் குழுவில் ‘யாரால் அந்த எரர் வந்தது எனக் கண்டரிய வேண்டும்’ என உத்தரவு வந்தது.

ப்ராஜெக்ட் ரிலிஸ் செய்த மறுநாளில் இருந்து அந்த வேலை அவனை ஆட்கொண்டது.

தீவிரமாக அந்த வேலையைச் செய்து யார் செய்தது என இரண்டு நாளில் கண்டறிந்தான். ஆனால் அதைச் செய்தது யார் எனத் தெரிந்து அதிர்ந்தாலும் ‘தெரியாமல் நடந்திருக்கும். என்னவென்று தனியாக விசாரித்துப் பார்ப்போம்’ என நினைத்தான்.

அன்று வீட்டிற்குச் செல்லும் முன் தன் நண்பனை சந்தித்த ஜீவா “என்னடா இது? இவன் இப்படிச் செய்து வச்சிருக்கான். நாளைக்கு நான் ரிப்போர்ட் வேற கொடுக்கணும்” என வருத்தமாகத் தன் நண்பனிடம் தான் கண்டறிந்ததைச் சொன்னான்.

“நல்ல வேளை நாம சரியான நேரத்தில் வேலையை முடிச்சு கொடுத்தோம். அதுவும் அப்படி வேலை முடிக்க அவனும் காரணமா இருந்தான். இல்லனா என்ன ஆகிருக்கும்? அவனை வேலையை விட்டே தூக்க வேண்டி வந்துருக்குமே. எரர் வந்த இடம் எல்லாம் அவன் சர்வ சாதாரணமாகச் செய்ற வேலையாச்சே அதில் எப்படித் தவறு விட்டான்?” என ஜீவா வருத்தமாகச் சொல்லிக்கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த நண்பனின் முகத்தில் கோபம் வந்தது. ‘அவனை’ எனப் பல்லை கடித்தவன் “விடு ஜீவா அவன் கிட்ட என்னனு விசாரிப்போம்” என ஜீவாவை அனுப்பி வைத்தவன், கோபத்துடன் இன்னொரு நண்பனை தேடி சென்றான்.

சிறிது நேரத்தில் தன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்குச் செல்ல கிளம்பி வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்த ஜீவாவின் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் ஆணி அடித்தது போல அப்படியே நின்றான்.