பனியில் உறைந்த சூரியனே – 27

அத்தியாயம் – 27

தங்கையின் உயிர் பிரிந்ததும் ஷர்வா நம்பமுடியாத திகைப்பில் அந்த இடமே அதிரும் வகையில் கத்தினான். சபரீஷ், தங்கை தங்களை விட்டு சென்றதை தாங்கமுடியாமல் குப்புற விழுந்து தரையிலேயே தலையை நங், நங் என முட்டிக்கொண்டு அழுதான்.

“ஏன்? ஏன் பாப்பா? எங்களை விட்டுப் போன?” என்று கேட்டுக்கொண்டே அவள் தலையைத் தன் மார்பில் புதைத்துக் கொண்டு அழுதான் ஷர்வா.

அவன் ஒருபுறம் அழுது கொண்டிருக்கும் போதே சபரீஷ் தலையை முட்டி முட்டி ரத்தமே வரும் அளவிற்கு அழுது கொண்டிருந்தான். பின்பு தலையை நிமிர்த்திய சபரி “என்னை மன்னிச்சுடுண்ணா! என்னை மன்னிச்சுடுண்ணா! நான் தான் பாப்பாவை கொன்னுட்டேன்…” என்று தன் அண்ணனிடம் புலம்ப ஆரம்பித்தான்.

சட்டெனத் தலையை நிமிர்த்தித் தம்பியை உயிரில்லா பார்வை பார்த்த ஷர்வா “எப்படிடா நீங்க இரண்டு பேரும் இங்கே வந்தீங்க? பாப்பாவை இப்படிச் செய்த நாய்கள் எங்கே?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

“பாப்பா கையை அறுத்துக்கவும் அவனுங்க பயந்து ஓடி போயிட்டாங்கண்ணா. பாப்பாவை அவனுங்க தான் கடத்தி பைக்ல வச்சு ஒதுக்குபுறமான இந்த வீட்டிற்குக் கொண்டு வந்தது.

பாப்பாவை கடத்திட்டதா சொல்லி எனக்குப் போன் வந்தது. நான் வந்ததும் என்னை அடிச்சு போட்டு என் கையையும் காலையும் கட்டி போட்டுட்டாங்க. பாப்பாவை எப்படியாவது காப்பாற்றணும்னு போராடினேன். ஆனா என்னால முடியல. என்னை மன்னிச்சிருண்ணா…” எனக் கதறினான்.

ஷர்வா பதில் பேசும் முன் ஆம்புலன்ஸ் வந்திருக்க, அவர்கள் வரும்முன் தங்கையின் நிலைமையை மறைக்கத் தன் சட்டையைக் கழட்டியவன் அவளுக்கு அதைப் போட்டு விட்டான். பின்பு அவளின் துப்பட்டாவை எடுத்து இடுப்பில் இறுகக் கட்டிவிட்டான்.

தன் குட்டி பாப்பாவாகப் பாவித்த தன் தங்கையை இப்பொழுதும் ஒரு குட்டி குழந்தையாகப் பாவித்து அவளின் மானத்தை மறைத்தான்.

அங்கே வந்து பார்த்த ஆண் செவிலியர் நிலைமையை ஊகித்து வேதிகாவின் நாடியை பார்த்து, அவளின் மறைவை உறுதி செய்துவிட்டு, “போலீஸ் கேஸ் சார். போலீசுக்கு இன்பார்ம் பண்ணனும்…” என்றான்.

“அண்ணா, நான் கண்டிப்பா கம்ளைன்ட் கொடுத்துறேன். இப்போ எங்க பாப்பாவை வீட்டுக்குக் கொண்டு போக உதவி பண்ணுங்க பிளீஸ். போலீஸ்க்கு இப்பயே போனா ஹாஸ்பிட்டல் கொண்டு போய் அறுத்து கூறு போட்டுருவாங்க. ப்ளீஸ்ணா, எங்க பாப்பாவை என்னால அப்படிப் பார்க்க முடியாது. இந்த உதவி மட்டும் பண்ணுங்கண்ணா…” என்று வெகுவாகப் பேசி அவரைச் சம்மதிக்க வைத்து வீட்டிற்குப் போனார்கள்.

மகளைக் காணாமல் தவித்த படி சந்திராவும், சுகுமாரனும் வாசலிலேயே பதட்டத்துடன் நின்றிருந்தார்கள். சுகுமாரன் மீண்டும், மீண்டும் ஷர்வாவிற்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால் அழைப்பு எதுவுமே எடுக்கப்படாமல் போகவும் அவரின் பதற்றம் உச்சத்தில் ஏறியது. அவரும் பல இடங்களில் சென்று தேடி விட்டு அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

பிள்ளைகள் மூவருமே இன்னும் வீட்டிற்கு வராமல் இருக்க, என்னானதோ, ஏதானதோ என்று மிகுந்த கவலையுடன் நின்றிருந்தார்.

சந்திராவும் கவலையுடனும், கண்ணீருடனும் நின்றிருந்தவரின் வாய் “இந்தப் பிள்ளைகளை இன்னும் காணோமே…” என்று புலம்பிக் கொண்டே இருந்தது. “என்னங்க, இந்தப் பசங்களை இன்னும் காணோம். என்னாச்சுன்னு தெரியலையே…” என்று தன் கணவரிடமும் புலம்பிக் கொண்டே இருந்தார்.

“கவலைப்படாதம்மா! பிள்ளைங்க பத்திரமா வந்துருவாங்க. நீ புலம்பாம அமைதியாய் இரு…!” என்று மனைவியையும் சமாதானப்படுத்திக் கொண்டே போன் போடும் வேலையை விடாமல் செய்துகொண்டே இருந்தார்.

அப்பொழுது திடீரென வீட்டு கேட்டின் முன் வண்டியின் ஒலி கேட்க, வேகமாக வாசலைப் பார்த்தார். அங்கே நின்றிருந்த ஆம்புலன்சை பார்த்ததும், அவரின் பதட்டம் அதிகமாக வேகமாகக் கேட்டை நோக்கி ஓடினார். சந்திராவும் அவரின் பின்னால் ஓட, அப்பொழுது வண்டியின் பின்னால் இருந்து இறங்கிய ஷர்வா பாதித் திறந்திருந்த கேட்டை முழுவதுமாகத் திறந்தான்.

ஆம்புலன்சில் இருந்து இறங்கிய மகனைக் கண்டு பெற்றவர்களின் நாடித்துடிப்பு தடுமாறியது. “ஷர்வா என்னாச்சுடா?” என்று பதட்டமாகச் சுகுமாரன் கேட்க, தந்தையின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாமல் கண்ணீர் நிறைந்த கண்களை இறுக மூடித் திறந்தான்.

“ஷர்வா என்னடா ஆம்புலன்சில் வந்திருக்க. வேதி எங்கே?” என்று அவனைப் பிடித்து உலுக்கினார் சந்திரா.

கேள்வி கேட்ட அன்னைக்கும், தந்தைக்கும் பதில் சொல்லும் வகையறியாது சிலையாக நின்றிருந்தான் ஷர்வா. அதற்குள் ஆம்புலன்ஸ் உள்ளே வந்து வீட்டின் முன் நின்றது. வண்டியின் பின்னாலிருந்து சபரீஷும் உயிரே இல்லாத கூடு போல இறங்கி நின்றான்.

ஷர்வா ஆம்புலன்சில் வந்ததைக் கண்டே மிகவும் பயந்து போயிருந்த பெற்றவர்கள், இப்பொழுது சபரீஷும் வண்டியிலிருந்து இறங்க அவர்களின் உயிர் துடித்தே போனது.

ஷர்வா பதில் சொல்லாமல் போக, சபரீஷை நோக்கி ஓடினார்கள். அவர்களின் பின் ஷர்வாவும் ஓடிவந்தான். “என்னடா ஆச்சு? ரெண்டு பேரும் ஆம்புலன்சில் இருந்து வர்றீங்க. நம்ம வேதி எங்கே?” என்று உயிர் துடிக்கக் கேட்டார் சந்திரா.

அன்னைக்குப் பதில் சொல்ல வெட்கிக் கொண்டே “நம்ம வேதி பாப்பா…பாப்பா…” என்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். அவனின் அழுகையில் இருவருக்கும் பயம் அதிகமாக “பாப்பாவைத்தான் கேட்கிறேன். எங்கடா அவ?” என்று மகனை கேட்டார் சந்திரா.

இரு மகன்களின் மௌனத்திலும் சுகுமாரன் பயந்துபோய் ஆம்புலன்ஸின் கதவை பட்டெனத் திறந்தார். திறந்தவர் உள்ளே கண்ட காட்சியில் அதிர்ச்சியுடன் இரண்டடி பின்னால் நகர்ந்தார்.

கதவு விரிய திறந்திருந்ததில் சந்திராவின் கண்ணிலும் உள்ளே படுத்திருந்த மகள் தெரிய, அவரும் நெஞ்சில் கை வைத்து அப்படியே பின்னால் சரிய போனார். அவரைத் தாங்கிப் பிடித்த ஷர்வா அன்னையை அணைத்துக் கொண்டு அழுதான்.

மகனின் கைகளில் இருந்த படியே ஷர்வாவின் அழுகையையும், உள்ளே இருந்த மகளையும் மாறி, மாறி பார்த்த சந்திரா அப்படியே மயங்கி சரிந்தார்.

“அம்மா, அம்மா…” என்று ஷர்வா, சந்திராவை உலுக்க, அவர் சுய நினைவே இல்லாமல் ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார். மனைவி மயக்கம் போட்டு விழுந்ததைக் கூட உணராமல் மகளைப் பார்த்தபடியே உறைந்து நின்றிருந்தார் சுகுமாரன்.

அப்பொழுது ஆம்புலன்சில் இருந்து இறங்கிய உதவியாளர் “என்ன தம்பி பாடியை உள்ளே கொண்டு போய்றலாமா?” என்று கேட்டார்.

அவரின் கேள்வியில் உயிர் வந்தது போலத் திடுக்கிட்டு நிமிர்ந்த சுகுமாரன் கேள்வியுடன் மகனைப் பார்த்தார். அன்னையைக் கையில் தாங்கிக்கொண்டே தந்தையைக் கண்ணீருடன் பார்த்த ஷர்வா “வேதி பாப்பா நம்மளை எல்லாம் விட்டுட்டு போயிட்டாப்பா…” என்று கதறலாகச் சொன்னான்.

மகனின் வாயில் இருந்து விழுந்த வார்த்தையில் சுகுமாரனுக்கு உலகமே தட்டாமலை சுற்றியது போல் இருந்தது.

நெஞ்சில் கைவைத்து “ஹா…” என்று அதிர்ந்தவர் சுய நிலைக்கு வர வெகு நேரம் ஆனது.

பல மணி நேரம் கடந்த நிலையில் உயிர் துறந்த உடலுடன் இருந்த ஷர்வேதிகாவின் காலடியில் அவளின் முகத்தையே வெறித்த படி சபரீஷும், அவளின் தலை அருகில் அழுவதும், மயக்கம் போடுவதுமாக இருந்த சந்திராவும், உயிர் இருந்தும் இல்லாதவரை போல மகளின் தலைமாட்டில் சுகுமாரனும் அமர்ந்திருந்தார்.

தங்கையின் இழப்பை தாங்க முடியா இதயத்துடனும், கண்ணீர் வர துடித்த கண்களை அடக்கிக் கொண்டும், குடும்ப நபர்கள் அனைவரும் நிலை குலைந்து இருந்ததால் மூத்த மகனாகத் தான் தான் காரியங்கள் அனைத்தையும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்த ஷர்வா அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தான்.

உறவினர்களும், தொழில் வட்டத்தில் தெரிந்தவர்களும், அண்டை வீட்டார்களும் என அந்தக் காலை பொழுதிலேயே வீடு நிறைய ஆட்கள் சூழ்ந்திருந்தார்கள்.

அவளின் இறப்பின் காரணம் மெல்ல, மெல்ல உறவினரிடையே பரவ ஆரம்பித்தது.

‘கெட்டு போறதுக்கு முன்னேயே இந்தப் பொண்ணு கையை அறுத்துக்கிட்டு இறந்துட்டதா சொல்றாங்க. ஆனா அந்தப் பொண்ணு முகத்தில் இருக்கிற காயத்தை எல்லாம் பார்த்தா அப்படித் தெரியலை. மூணு பேருன்னு சொல்லிக்கிறாங்க. மூணு பேர்கிட்ட இருந்து தப்பிக்கிறது நம்புற மாதிரி இல்லை. நைட்டே சுகுமாரன் பிரண்ட் ஒருத்தர் போலீஸில் இருக்காரே? அவரை வச்சுக் கேஸ் ஆகாம பார்த்துக்கிட்டதா சொல்றாங்க’ என்று அங்கே இருந்தவர்கள் அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

அதோடு இன்னும் ஒருவர் ‘இந்தப் பொண்ணு இப்படியா கெட்டுப் போய்ச் சாகணும்?’ அனுதாபப்படுவதாகப் புலம்பினார். அந்த வார்த்தைகள் எல்லாம் சபரீஷ் காதில் விழுந்தது. அவர்களை உயிரே இல்லாமல் திரும்பி பார்த்தான்.

அவனுக்குத் தான் தெரியுமே. தங்கை தன் மானம் போய்விடக் கூடாது என்றே தன் உயிரை தானே எடுத்துக் கொண்டாள் என்று. ஆனால் அவள் அவ்வளவு போராடி உயிர்விட்டும் அவள் மீது குத்தப்பட்ட கெட்டுப்போனவள் என்ற பெயர் அவனை உயிரோடு கொன்று கொண்டிருந்தது.

“என் பாப்பா கெட்டுப் போகலை. கெட்டுப்போகலை…” என்று தன்னால் வாய் விட்டு புலம்ப ஆரம்பித்தவன் மெல்ல எழுந்து நின்று தங்கையின் முகத்தைப் பார்த்தான். ‘என்னை மன்னிச்சுரு பாப்பா. என்னால் தான் உனக்கு இந்தப் பேர் வந்துச்சு. என்னை மன்னிச்சுரு. மன்னிச்சுரு’ என்று மானசீகமாக அவளிடம் மன்னிப்பு கேட்டான்.

பின்பு அவளின் கால்களைப் பிடித்து மன்னிப்பு கேட்க போனான். ஆனால் தங்கை தன்னைத் தொடக்கூடாது என்று சொன்னதை மனதில் வைத்துத் தொடாமல் கைகளை விலக்கிக் கொண்டவன் ‘மன்னிச்சுரு பாப்பா’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

அவன் அக்காரியத்தைச் செய்வான் என அங்கிருந்த யாரும் சிறிதும் எண்ணாததால் அவன் எழுந்து அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டதை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

நேரம் கடந்த நிலையில் இறுதி சடங்கு செய்ய நெருங்கிய உறவினர்களைத் தேடும் போது தான் சபரீஷையும் தேட, “சபரி தம்பி அப்போ அந்த ரூமுக்குள்ள போறதை பார்த்தேன். இன்னும் வரலையா?” என்று அங்கிருந்த யாரோ சொல்ல, அப்பொழுதுத்தான் ஷர்வா தான் தம்பியை வெகுநேரம் கவனிக்காததை நினைத்து தன்னையே நொந்து கொண்டு, அந்த அறையை நோக்கி ஓடினான்.

அவனின் ஓட்டம் கண்டு சுற்றி இருந்தவர்கள் புரியாமல் பார்க்க, பெற்றவர்களும் ஒன்றும் புரியாத குழந்தையென நின்றிருந்தார்கள். கீழே உள்ள அறை தான் என்பதால் ஷர்வாவையே அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, அவன் தட்ட, தட்ட திறக்கப் படாத கதவை கண்டு ஏதோ விபரீதம் என்று உணர்ந்து அவர்களும் அருகில் ஓடினர்.

“சபரி, சபரி உள்ளே என்ன பண்ற? கதவை திற! திறடா…!” என்ற ஷர்வாவிற்குப் பதிலே கிடைக்காமல் போக, “என்னாச்சு தம்பி?” என்று கேட்டவர்களிடம் “கதவை உடைக்கணும்…” என்று பதற்றமாகச் சொன்னான்.

சுகுமாரனும், சந்திராவும் மலங்க, மலங்க நின்றிருந்தவர்கள், திறக்காத கதவை கண்டு “சபரி, சபரி…!” என்று அவர்களும் அழைத்துப் பார்த்தார்கள். எதற்குமே பதில் இல்லாமல் போக, கதவு உடைக்கப்பட்டது.

கதவை உடைக்கப்பட்டதும் உள்ளே கண்ட காட்சியில் அனைவரும் அதிர்ச்சியாகப் பார்க்க, சிலர் உள்ளே ஓடினர். அவர்களுக்கு முன் ஓடிய ஷர்வா “ஐயோ…! சபரி…!” என்று அலறியவன், தூக்கில் தொங்கி கொண்டிருந்த தம்பியின் கால்களைக் கட்டிக்கொண்டான்.

“ஏன்டா இப்படிப் பண்ணின?” என்று அரற்றியவனை விலக்கி சிலர் சேர்ந்து சபரியை தூக்கில் இருந்து கீழே இறக்கினர்.

அவனை இறக்கிக்கொண்டிருக்கும் போதே “ஐயோ…! பிடிங்க…!” என்ற சத்தம் கேட்க, ஷர்வா பின்னால் திரும்பி பார்த்தான். அங்கே நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சரிந்திருந்தார் சுகுமாரன்.

அவரை அப்படிக் கண்டு அவரிடம் ஓட, ஒருவர் முகத்தில் தண்ணி கொண்டு வந்து தெளித்தார். அதிலும் அவர் அசையாமல் இருக்க, யாரோ ஒருவர் நாடி பிடித்துப் பார்த்து விட்டு “மூச்சு இல்லை…” என்றார்கள்.

மகள் எதிர்பாராமல் இறந்ததிலேயே அரை உயிராக இருந்தவர், கண்முன்னே இளைய மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து சுகுமாரனின் இதயம் அதன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.

காதில் விழுந்த செய்தியில் ஷர்வாவிற்கு மூச்சு அடைத்தது. “அப்பா…” என அவரைப் பார்த்துக் கதறினான். தங்கைக்காக அழுவதா? தம்பிக்காக அழுவதா? இல்லை தந்தைக்காக அழுவதா? என்று அவன் தடுமாறிக் கொண்டு இருக்கையில் மகளை மட்டும் இல்லாது மகனையும், கணவனையும் உயிரற்ற உடலாகப் பார்த்ததில் உச்ச கட்ட அதிர்ச்சியில் மயங்கி சரிந்தார் சந்திரா.

அவரையும் அவன் அதிர்ச்சியுடன் பார்க்க “மயக்கம் தான்…” என்றார்கள்.

இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஒரே வீட்டில் அடுத்தடுத்து மூவர் இறக்க, போலீஸ், செய்திதாள் என்று விஷயம் பரவியது. ஷர்வா அழ கூட நேரம் இல்லாமல் தடுமாறி திண்டாடி போனான்.

தங்கையின் விஷயம் வெளியே தெரிய வேண்டாம் என்று இரவே தந்தையின் போலீஸ் நண்பர் மூலம் சமாளித்து வைத்தவனுக்கு, அடுத்த நிகழ்வுகளில் அது முடியாமல் போக, திரும்ப வேதிகாவின் கேஸில் இருந்து ஆரம்பிக்கப் பட்டது.

அந்தக் காவல் அதிகாரியாலும் அதைக் கட்டுபடுத்த முடியாமல் போக, செய்தி தாள் வரை விஷயம் போனது.


முடிந்திருந்தது! எல்லாம் முடிந்திருந்தது! ஒரே நாளில் மூன்று உயிரை பறிகொடுத்து உயிரே இல்லாத ஜடம் போலத் தன் அறையில் படுத்துக் கிடந்தான் ஷர்வஜித்.

“வாஜிண்ணா. இனி உன்னை அப்படிக் கூப்பிட நான் இருக்க மாட்டேன். அன்னைக்குக் கேலி செய்த மூணு மிருகமும் தான் என்னை இன்னக்கி இந்த நிலைக்கு ஆளாகிருச்சு. அம்மா பொண்ணுங்க எப்படி இருக்கும்னு சொல்லி நான் அதன் படி நடத்துகிட்டும் இப்போ இந்த நிலைமைக்கு ஆளாகிட்டேன்.

அம்மா வளர்த்த பொண்ணா என் மானம் போயிற கூடாதுன்னு, போராடவே முடியாம கஷ்டப்பட்டுப் போராடி என் உயிரை நானே எடுத்துக்கிட்டேன். அதுவும் இந்தச் சபரி அண்ணா ரோம்ப மோசம்ணா. எனக்கு இன்னைக்கு நேர இருந்ததை அவன் வேற பொண்ணுங்களுக்குத் தயங்காம மிரட்டி செய்துருக்கான். அவனை என் அண்ணன்னு நினைக்கவே கேவலமா இருக்கு. அம்மாவையும், அப்பாவையும் பத்திரமா பார்த்துக்கோண்ணா…” என்று கடைசி நேரத்தில் மூச்சே விட முடியாமல் திக்கி திணறி பேச முடியாமல் பேசி முடித்து மயங்கி இருந்தாள் ஷர்வேதிகா.

தங்கை போனில் பேசி வைத்திருந்ததைத் திரும்ப, திரும்பப் போட்டுக் கேட்டதில் ஷர்வாவின் இதயம் வாளை கொண்டு அறுத்தது போல வலித்தது.

ஷர்வா அன்னையிடம் தங்கை சொன்னதை எல்லாம் முழு விளக்கமாகச் சொல்லாமல் மேலோட்டமாக மட்டுமே விஷயத்தைச் சொல்லியிருந்தான். அதுவும் சபரியின் விஷயம் அவருக்கு மிகுந்த அதிர்ச்சி தருவதாக இருந்தது.

‘தன் மகனா இப்படி?’ என்று அவரின் மனம் அரற்றிக் கொண்டே இருந்தது. பெண் பிள்ளைக்கு அறிவுரை சொன்ன தான் ஆண் மகனை சரியாக வளர்க்க வில்லையே என்று தன்னையே நிந்தித்துக் கொண்டார்.

அறையில் படுத்திருந்த ஷர்வாவிற்கு ஏதோ விழும் சத்தம் கேட்க, வேகமாக எழுந்து அன்னையின் அறையை நோக்கி ஓடினான்.

அங்கே கையில் கத்தியை வைத்துக்கொண்டு தன் கை நரம்பை வெட்டிக்கொள்ளத் தயாராக இருந்த அன்னையைக் கண்டு “அம்மாமா…” என அலறிக்கொண்டே அருகில் சென்று, அவரின் கையில் இருந்த கத்தியை பறித்தான்.

“விடு ஷர்வா…! விடு…! நான் சாகணும்! சாகணும்…!” என்று தன் போக்கில் புலம்பியவர், அவன் கையில் இருந்த கத்தியை பறிக்க முயன்றார். அதில் கத்தியை தூர எறிந்த ஷர்வா அன்னையின் தோளைப் பிடித்து “அம்ம்ம்மா….” என்று உலுக்கினான்.

அதில் சுய நினைவுக்கு வந்தவர் போல மகனை மலங்க, மலங்கப் பார்த்த சந்திரா, “ஏன் ஷர்வா, நான் ரொம்பக் கல்நெஞ்சக்காரி தானே?” என்று கேட்டார்.

அன்னையின் கேள்வி புரியாமல் அவரைப் பார்க்க, மகனின் பதிலை எதிர்பார்க்காமல் “நீ சொல்லலைனாலும் எனக்கே தெரியும். நான் கல்நெஞ்சக்காரி தான்! அதனால்தான் இன்னும் என் உயிர் என்னை விட்டுப் போகாமல் இருக்கு. இரண்டு பிள்ளைகளையும், கணவனையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்தும் இன்னும் குத்துக்கல் போல உயிரோடு இருக்கேன்.

என் பொண்ணு அம்மா திட்டுவேன்னு பயந்தே கையை அறுத்துக்கிட்டுப் போய்ச் சேர்ந்துட்டா. அது மட்டும் இல்லாம ஒரு மகனை நல்லா வளர்க்காமல் போனதால் இப்போ நம்ம குடும்பமே குலைந்து போற அளவுக்கு நடந்துருக்கேன். நான் நல்ல அம்மாவே இல்லை. உங்க அப்பா அளவுக்கு நான் இளகின மனசுள்ளவளும் இல்லை. என் உயிர் தானாகப் போகாது. நானேதான் என் உயிரை போக்கிக்கணும். கத்தியை கொடு! சாகணும்…!” என்றார்.

அன்னையின் பேச்சில் ஷர்வாவிற்கு விழி கலங்கி போனது. ஆனாலும் அவரின் இந்தப் பேச்சை இப்படியே தொடர விடக் கூடாது என்று எண்ணியவன், தூர எறிந்த கத்தியை சென்று எடுத்து வந்து, அவரின் கையில் கொடுத்து, அந்தக் கையைச் செயல் பட விடாமல் தான் இறுக பிடித்துக் கொண்டு, கத்திக்கு நேரே தன் இன்னொரு கையை நீட்டி “முதலில் இந்தக் கையை வெட்டுங்கமா…” என்றான்.

அவர் அதிர்ச்சியுடன் மகனின் முகத்தைப் பார்க்க, “ம்ம்… வெட்டுங்கமா…” என்று அவரைப் பிடித்திருந்த கையை விட்டான்.

“ஷர்வா என்ன செய்ற? நீ ஏன் சாகணும்?” என்று சந்திரா அதிர்ந்து கேட்க, “என் மனசும் கல் மனசு தானே அம்மா? அதனால் தானே இதோ இந்தக் கையால் மூனு பேருக்கும் கொல்லி வச்ச பின்னாலும் இன்னும் உங்க முன்னாடி உயிரோடு நிற்கிறேன்…” என்று தன் வலது கையைத் தூக்கி காட்டி விட்டு, “இப்போ அடுத்து உங்களுக்கும் கொல்லி வைக்கச் சொல்றீங்க. அதைச் செய்ற அளவுக்கு என் மனசில் சக்தி இல்லை. அதனால் முதலில் என்னைக் கொன்னுருங்க. அதுக்குப் பிறகு உங்க கையை வெட்டிக்கோங்க…” என்றான்.

அவனின் வார்த்தையில் சந்திராவின் கத்தி பிடித்திருந்த கை நடுங்க ஆரம்பித்தது. கத்தியை கீழே போட்டவர் “இரண்டு பிள்ளையை இழந்து நான் தவிக்கிறது பத்தாதா? உன்னை வேற என் கையால் கொல்லணுமா?” என்று கேட்டு அழ ஆரம்பித்தார்.

“அம்மா நம்ம உயிர் போகணும்னு இருக்குறப்ப போகட்டுமே? வேதியும், சபரியும் செய்த தப்பை நாமும் ஏன் செய்யணும்னு நினைக்கிறீங்க? அவங்க முடிவு அப்படி இருக்கணும்னு தான் எழுதி இருக்கோ என்னவோ? அதை ஏன் நீங்க செய்த தப்பா எடுத்துக்கிறீங்க? அப்படிப் பார்த்தா நானும் தான் நல்ல அண்ணன் இல்ல. நம்ம பாப்பாவையும் என்னால பாதுகாக்க முடியலை. தம்பி தப்பான வழிக்குப் போனதையும் கண்டு பிடிக்கத் தெரியல.

அதனால் எனக்கும் கூடத் தான் அவங்க இழப்பை தாங்க முடியாத வலியில் வாழவே பிடிக்கலை. சாகணும் போலத் தான் இருக்கு. ஆனா நாம செத்துட்டா எல்லாம் சரி ஆகிருமா? ஒரு வேளை உங்களுக்குச் சாகணும்னு தோணினா சொல்லுங்க. இரண்டு பேரும் ஒன்னாவே சாவோம்…” என்றான்.

“இல்ல ஷர்வா, நீ சாகக் கூடாது. இரண்டு பிள்ளைகளும் தான் அல்பாய்ஸில் போய்ருச்சு. நீயாவது நிறைந்த வாழ்க்கை வாழணும். அதுக்கு நீ உயிரோடு இருக்கணும்…” என்றார் சந்திரா.

“அப்போ நீங்களும் இருக்கணும்…” என்ற ஷர்வா, அவரின் எதிரே மண்டியிட்டு அமர்ந்து அவரின் கையை எடுத்து தன் தலையில் வைத்து “தற்கொலை செய்துக்க மாட்டீங்கன்னு சத்தியம் பண்ணுங்கம்மா…” என்றான்.

மகனுக்காகச் சத்தியம் செய்து கொடுத்தார் சந்திரா.

நாட்கள் அதன் விருப்பத்தோடு ஓட தந்தையின் காவல்துறை நண்பர் மூலம் சபரியின் மூன்று நண்பர்களையும் பிடிக்கச் செய்தான். அவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.

தன் இறுதி படிப்பை முடித்தவன், தந்தையின் கட்டுமான தொழிலை கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அவனால் அந்த வேலையில் முன்பு இருந்த ஆர்வத்துடன் ஒன்ற முடியவில்லை. தந்தை இல்லாத அலுவலகமும், ஒரே வளையத்திற்குள் சுற்றுவது போலத் தெரிந்த வேலை முறையும் அவனைச் சோர்வடைய வைத்தது.

அரை மனதுடன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு நாள் தங்கள் பொறுப்பில் கட்டி கொண்டிருந்த அந்தக் கட்டிட வேலையை மேற்பார்வையிட்டு திரும்பி கொண்டிருந்தான். அது இருட்ட ஆரம்பித்துச் சிறிது நேரம் கடந்திருந்த நேரம் என்பதால், அந்தச் சாலையில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அப்பொழுது சாலையோரம் செடிகளாக நிறைந்திருந்த பக்கம் இருந்து அரக்க, பறக்க ஓடி வந்த ஒரு பெண் ஷர்வாவின் வண்டியின் குறுக்கே வந்து கால் தடுக்கி விழுந்தாள்.

அவளைக் கண்டு கடைசி நொடியில் வண்டியை நிறுத்திய ஷர்வா அதிர்ச்சியுடன் அப்பெண்ணைப் பார்த்தான். விழுந்தவள் எழும் முன் அவள் பின்னேயே நான்கு பேர் துரத்தி வருவதைக் கண்டு வண்டியை விட்டு வேகமாக இறங்கினான்.

“டேய்…! பிடிடா அவளை…!” என்று ஒருவன் சொல்ல, நான்கு பேரும் அப்பெண்ணே நெருங்கினார்கள். அந்தப் பெண் ஷர்வாவின் புறம் ஓடி வந்து “அண்ணே…! அண்ணே…! காப்பாத்துங்க அண்ணே…!” என்று அவனின் முதுகின் பின்புறம் ஒளிந்தாள்.

“அட…! ஹீரோவா நீ? ஒழுங்கா இந்த விஷயத்தில் தலையிடாமல் ஓடிப் போயிரு! இல்லைன்னா எங்ககிட்ட அடி வாங்குவ…” என்றான் ஒருவன் மிரட்டலாக.

ஷர்வா அந்த நால்வரையும் பார்த்தான். நால்வருக்குமே அதிகபட்சம் சபரீஷின் வயதுதான் இருக்கும். ஆனால் அவர்களின் தோற்றம் வாட்டசாட்டமாக, முரட்டுத்தனமாக இருந்தது. அவர்களைப் பார்த்தாலே கட்டிட வேலை செய்யும் கூலி ஆட்கள் தோற்றம் தெரிந்தது.

அந்த வயதில் ஷர்வா பெற்றவர்களின் பேச்சுக்கு தலையாட்டி, அடிதடி, வேறு பழக்கவழக்கங்கள் என்று எதுவுமில்லாமல் வெறும் சாதாரண இளைஞனாக மட்டுமே இருந்து வந்தவன்.

அதனால் அந்த நால்வரையும் தன்னால் சமாளிக்க முடியுமா என்பது போல் பார்த்தான். அதற்குள் அந்தப் பெண் “அண்ணே…! காப்பாத்துங்க அண்ணே…!” என்று மீண்டும் கெஞ்சினாள்.

அவளின் அழைப்பு ஷர்வாவிற்கு அவனின் தங்கையை ஞாபகத்திற்குக் கொண்டு வந்தது. தங்கையைக் காப்பாற்றாமல் போன தன் நிலையை நினைத்துப் பார்த்தான். அது கொஞ்சம் அவனுக்கு வேகத்தைக் கொடுக்க, அந்தப் பெண்ணைப் பிடிக்க வந்த நால்வரின் மீதும் பாய்ந்தான்.

அவர்களும் இவனிடம் பலமாக மோதினார்கள். ஷர்வாவிடம் இருந்து ஒருவன் மட்டும் விலகியவன் தப்பித்து ஓட தயார் நிலையில் இருந்த அப்பெண்ணை வேகமாகச் சென்று பிடித்தான். இந்த மூவரையும் மீறி அவனைத் தடுக்க ஷர்வாவால் முடியாமல் போனது.

அந்த மூவரையும் ஷர்வாவால் சமாளிக்க முடியாமல் போனது. வயது குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கட்டிட வேலையில் உழைத்த உரம் அவர்களை வலுவானவர்களாகக் காட்ட, ஷர்வா அதிகம் தாக்க பட்டான்.

தன் வலு குறைவதை உணர்ந்து “நீ எப்படியாவது தப்பிச்சு ஓடி போய்ருமா…!” என்று அந்தப் பெண்ணைப் பார்த்துக் கத்தினான்.

அவளும் அதற்குத் தான் முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அவன் அவளை வலுவாகப் பிடித்திருந்த முறையில் அவளின் முயற்சி எதுவுமே பலன் அளிக்க வில்லை. “டேய் விடுடா…! விடுடா…!” என்று அவளால் துடிக்க மட்டுமே முடிந்தது. இங்கே ஷர்வாவும் மூவரிடமும் பலமான அடி வாங்கி இருந்தான்.

திருப்பி அடிக்க முயன்றும் முடியாமல் அவனின் கைகள் தளர்ந்து விழ, அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒருவன் சாலையின் ஓரம் கிடந்த ஒரு கல்லை எடுத்து ஷர்வாவின் தலையில் ஓங்கி அடித்தான். அதில் ஷர்வா “அம்மா…” என்று சத்தமாக முனங்கிய படி தலையில் கையை வைத்தான்.

தன்னைக் காக்க வந்தவனுக்கு விழுந்த அடியை பார்த்து ஒருவனிடம் போராடி கொண்டிருந்த நிலையிலும் “ஐயோ அண்ணே…!” என்று ஷர்வாவைப் பார்த்துக் கத்தினாள்.

அவள் கத்திக் கொண்டிருக்கும் போதே அந்தக் கல்லாலேயே அவனின் உடல் முழுவதும் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்ட ஷர்வா சிறிது நேரத்தில் மயங்கி சரிந்தான்.