பனியில் உறைந்த சூரியனே – 26

அத்தியாயம் – 26

ஒரு வாரம் கடந்த நிலையில் அன்று மாலை ஆறு மணி ஆன பிறகும் வீட்டிற்கு வராத மகளை நினைத்து தவித்த படி வாசலிலேயே நின்றிருந்தார் சந்திரா.

வீட்டிற்கு ஆண்மக்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. சுகுமாரனுக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு தான் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருந்தார்.

சபரீஷ் கல்லூரி விட்டு வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் அவசரமாக வெளியே கிளம்பி சென்றவனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றால் அவன் அழைப்பை எடுக்கவே இல்லை.

எப்பொழுதும் இந்நேரம் வீட்டில் இருக்கும் மகள் இப்பொழுது இல்லை என்னும் போது அவரின் பதட்டம் அதிகரித்தது. இதற்கும் மகளின் எண்ணிற்கும் அழைத்துப் பார்த்து ஏமாற்றத்தை சந்தித்திருந்தார்.

அந்த வருட காலத்தில் ஐநூறு ரூபாயில் இருந்து பட்டன் போன் இருந்ததால், பள்ளி செல்பவளுக்குக் கைபேசி எதற்கு? என்று கண்டித்த சந்திராவின் பேச்சையும் மீறி அவளின் பாதுகாப்பு கருதி தந்தையிடம் சொல்லி வாங்கிக் கொடுத்திருந்தான் சபரீஸ்வரன்.

ஆம்! அவன் வேலை தான் அது. தங்கைக்கு அந்த வயதிலேயே கைபேசி வாங்கிக் கொடுக்க ஷர்வாவிற்கும் விருப்பமில்லை. ஆனால் சபரீஷ் பிடிவாதம் பிடித்து வாங்கித் தர வைத்திருந்தான்.

நண்பர்களின் மீது ஒரு வித உறுத்தல் அவனிடம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் குணத்தை முழுதாக இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே அறிந்தவன் என்பதால் தங்கையைக் காக்கும் முயற்சியில் முன்னெச்சரிக்கையாக இருந்தான்.

“சோப்பு டப்பா போல ஆளுக்கு ஒரு போன் அடம்பிடிச்சு வாங்கி வச்சுக்கிட்டு ஒரு ஆத்திர அவசரத்திற்குக் கூடப் பேசலனா அதை எதுக்கு வாங்கணும்?” எனப் பிள்ளைகளைத் திட்டிக்கொண்டே பதட்டத்துடன் வாசலில் நின்றிருந்த சந்திரா வீட்டின் கேட் திறக்கப்படும் சத்தம் கேட்டு ஆர்வமாகத் திரும்பி பார்த்தார்.

அங்கே சுகுமாரன் தான் வந்து கொண்டிருந்தார். “பாப்பா இன்னும் வரலையாமா?” என்று விசாரித்தவரின் குரல் பதட்டத்துடன் வெளிப்பட்டது.

“இன்னும் வரலையே. போனும் எடுக்கலை. ஆமா உங்க கூட ஷர்வா வரலையா?” எனக் கேட்டார்.

“அவன் கம்பெனியில் இருந்து நேரா பாப்பா ஸ்கூல் பக்கமா தேட போய்ட்டான். ஒருவேளை பாப்பா அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டா போன் போட சொன்னான். சரி சபரி எங்கே? அவனும் தேட போய்ட்டானா?”

“இல்லையே, அவன் வந்ததும் திரும்ப எங்கயோ அவசரமா கிளம்பி போனான். அப்புறம் அவனைப் பற்றியும் தெரியலை. அவன் போனும் எடுக்கலை. அவன் கேட்டான்னு உடனே வாங்கிக் கொடுத்தீங்க. பாருங்க தேவைக்குப் போட்டா எடுக்கக் கூட மாட்டீங்கிறான்…”

“சரி விடுமா! நீ டென்ஷன் ஆகாதே! நானும் போய்ப் பக்கத்தில் எங்கயாவது பார்த்துட்டு வர்றேன். நீ அவ சிநேகிதி பிள்ளைக வீட்டுக்கு போன் போட்டுப் பாப்பா பற்றி எதுவும் தெரியுதான்னு பதட்டப்படாம விசாரிச்சு வை…!” என்றவர் மகளைத் தேடி தானும் கிளம்பினார்.

பெற்றவர்கள் பிள்ளையைக் காணவில்லை என்று தவித்துப் போயிருக்க, வேதிகாவோ சுயநினைவே இல்லாமல் அந்த இருள் சூழ்ந்த அறையில் தரையில் கிடந்தாள்.

அதே வீட்டிற்குள் இன்னொரு அறை மூலையில் மயக்க நிலையில் இருந்தான் சபரீஸ்வரன். அவர்களின் இந்த நிலைக்குக் காரணமான அவனின் நண்பர்களான மூவரும் வெறியுடன் சபரீஷை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கல்லூரி படிப்பு படிக்க என்று காரணம் சொல்லி வெளியூரில் இருந்து படிக்க வந்து தனியாக வீடு எடுத்துச் சுரேஷ் தங்க, கூடவே அவன் குணத்திற்குத் தகுந்தாற் போல இரு நண்பர்கள் கிடைக்க, மூவரும் ஒரே அறையில் தங்கி கொண்டனர். பெற்றோர் அருகில் இல்லாத சுதந்திரம் அவர்களின் புத்தியை தறிகெட்டு ஓட வைக்க, பிஞ்சிலேயே பழுத்தவர்களாக உருமாறி போனார்கள்.

“டேய் சுரேஷ்…! இவன் தலையில் மெதுவா அடிக்காம ஏன்டா பலமா அடிச்ச? இப்போ பாரு நம்ம வேலை லேட் ஆகுது. இவன் எப்போ கண்ணு விழிகிறது? நாம எப்போ நம்ம வேலையை முடிக்கிறது?” என்று ஒருவன் கேட்க,

“இவனை நம்ம லிஸ்ட்ல சேர்த்துக்க வேண்டாம். இவன் வீட்டு பறவை. நம்மளை பதம் பார்ப்பான்னு சொன்னேன். என் பேச்சை கேட்காம இவனையும் நம்ம ஆட்டத்தில் சேர்த்து, இப்போ நம்ம மேலேயே கை வைக்கிற நிலைக்கு வந்துட்டான். இப்போ எடுத்த காரியத்தைச் சீக்கிரம் முடிக்க விடாம இப்படிப் பலமா அடித்து வேற வைத்திருக்க…” என்று சுரேஷின் மீது கடுப்படைந்தான் இன்னொருவன்.

“டேய்…! சும்மா என்னையவே குறை சொல்லாதீங்கடா. கிரவுண்டுல நம்ம கூட விளையாட வந்தவனை நம்ம விஷயத்தில் சேர்த்துக்க எனக்கென்ன தலையெழுத்தா? நான் இதுக்கு முன்னாடியே இவன, அவன் தங்கச்சி கூட ஒரு நாள் பார்த்திருக்கேன். ஆளு செம்மையா இருந்தா. அதனால்தான் இவன்கிட்ட கொஞ்சம் தூண்டில் போட்டுப் பார்த்தேன்.

“பயபுள்ள ஏற்கனவே பொண்ணுங்க மேல இன்ட்ரஸ்டா இருந்திருப்பான் போல. நான் கொஞ்சம் தூண்டி தான் விட்டேன். இவன் பக்குன்னு பத்திக்கிட்டான். அதுதான் நானும் இவனை நம்ம கூடச் சேர்த்துக்கிட்டேன். இவன் மூலமாகவே இவன் தங்கச்சியை மடக்கி போடலாம்னு நினைச்சேன்.

ஆனா இவன் ரொம்ப விவரம். அடுத்த வீட்டுப் பொண்ணுங்கனா சொகுசா நினைச்சவன், அவன் தங்கச்சியின் வரும்போது ரொம்ப நல்லவன் போல முழிச்சுக்கிட்டான். இவன் இப்படி வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாறுவான்னு நினைச்சிருந்தா, இவன் தங்கச்சி விஷயத்தை நான் தனியாவே டீல் பண்ற மாதிரி செய்திருப்பேன். இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல. இவன் நம்ம மேல கை வச்சான்ல? இவன் கண் முன்னாடியே அவன் தங்கச்சியை ருசிபார்த்துக் காட்டுவோம்.

“நம்ம மேல ஏன் கை வச்சோம்னு நெனச்சி இவன் கதறணும். இவன் கதறலை பார்த்துக்கிட்டே நம்ம வேலையை நாம முடிப்போம். இவனுக்கும் வலிக்க வச்சது போல ஆச்சு. நம்மளுக்கும் இவன் தங்கச்சி கிடைச்சிடுவா. நமக்கு இரட்டிப்புச் சுகம்.

“நான் இவன் மண்டைல லேசா தான் அடிச்சேன். இவன் இப்படி மட்டையாவான்னு தெரியல. ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து மூஞ்சில ஊத்து. அவன் தங்கச்சிக்கும் மயக்கம் தெளிய நேரம் வந்துருச்சு. நம்ம வேலையை ஆரம்பிக்க நேரம் சரியா இருக்கும்…” என்றான்.

ஒருவன் தண்ணீரை எடுத்து வந்து அவனின் முகத்தில் தெளிப்பதற்கு முன் மற்ற இருவரும் சேர்ந்து சபரியின் கையையும், காலையும் கயிற்றினால் இறுகக் கட்டினார்கள். அவர்கள் கட்டி முடித்ததும் தண்ணீரைத் தெளித்து விட்டு மயக்கத்தைப் போக்க காலை வைத்து அவன் முதுகிலேயே பலமாக எத்தினான்.

தண்ணீரும், அவனின் அடியும் சபரீஷின் மயக்கத்தைத் தெளிய வைக்க, “டேய் சுரேஷ்…! இவன் கண்ணு முழிக்கிறான். இவனைத் தூக்கிட்டுப் போய் அந்த ரூமில் போடுவோம்…” என்றான்.

மூவரும் சேர்ந்து அவனை இழுத்துக்கொண்டு வேதிகா இருந்த அறைக்குக் கொண்டு சென்றார்கள்.

அறைக்குள் சென்று போட்டதும் சபரீஷிற்கு நன்றாக முழிப்பு வந்தது. கண்களை நன்றாகத் திறந்து பார்த்தவன் தன்னைச் சுற்றி நின்றிருந்த நண்பர்களைப் பார்த்து மலங்க விழித்தான். அதன்பிறகு தான் அவனின் தங்கை தங்களிடம் இருப்பதாக அவர்கள் போன் செய்ததும், தான் பதறிப்போய் வந்ததும், சுரேஷ் தன்னைக் கட்டையால் தாக்கியதும் ஞாபகத்தில் வந்தது.

தங்கையைப் பற்றி ஞாபகம் வரவும் சட்டென எழுந்து அமர முயன்றான். கட்டிய கையும், காலும் ஒத்துழைக்காமல் இருக்க, மெல்ல சுவற்றில் சாய்ந்தது போல் எழுந்து அமர்ந்தான்.

“டேய்…! என்னடா செய்றீங்க? எங்கடா என் தங்கச்சி? எதுக்குடா என்னை இப்படிக் கட்டிப் போட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.

“அதுவாடா சபரி? உனக்கு ஒரு லைவ் ஷோ காட்டணும்னு நாங்க மூணு பேரும் ஆசைப்பட்டோம். அதுதான் உன் தங்கச்சியையும், உன்னையும் கூட்டிட்டு வந்து இருக்கோம்…” என்று ஒருவன் நக்கலாகச் சொல்ல, மூவரையும் பயத்துடன் பார்த்தான்.

“என்னடா உளறீங்க? எங்கடா என் தங்கச்சி? ஒழுங்கா அவள விட்டுருங்கடா…” என்று கத்தினான்.

“உன் தங்கச்சி தானே? இதோ இங்க இருக்கா…” என்று மூவரும் அவனை மறைத்திருந்தவர்கள் விலகி நிற்க, இன்னொரு சுவர் ஓரமாகத் தங்கை மயக்க நிலையில் இருப்பதைப் பார்த்து, “ஐயோ…! வேதிப் பாப்பா…! எந்திரிச்சுக்கோடா…!” என்று பதறிப்போய்த் தங்கையை அழைத்தான்.

“ஹேய்…! வேதிப் பாப்பாவாம்டா…! பார்க்க பாப்பா போலவா இருக்கா?” என்று கேட்டுக்கொண்டே வேதிகாவின் உடலில் கண்களை மேய விட்டான் ஒருவன்.

அவனின் பார்வை போன திசையைப் பார்த்துத் துடித்துப் போன சபரீஷ், “டேய்…! என் பாப்பாவை விட்டுருங்கடா. உங்களுக்கு என் மேல கோவம்னா அதை என்கிட்ட மட்டும் காட்டுங்க. அவ பாவம் சின்னப் பொண்ணு…” என்று கதறினான்.

“ஆம்பளையான உன்னை வச்சு நாங்க என்ன செய்ய முடியும் சபரி? எங்களுக்கு இப்ப தேவை உன் பாப்பா தான். அதுவும் உன் பாப்பாவை இந்த மாதிரி ஸ்கூல் யூனிபார்மில் பார்க்கும்போது எங்களுக்குக் கிக்கு ஏறுது…” என்றவனை அடித்துத் துவைக்கும் ஆவேசம் எழுந்தது சபரியிடம்.

தன் கையையும், காலையும் முறுக்கி கட்டில் இருந்து வெளிவர முயன்றான். ஆனால் அவர்கள் கயிற்றை இறுக்கியிருந்த விதத்தில் அவனால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது.

அதில் துவண்டு போனவன் “ப்ளீஸ், ப்ளீஸ் டா…! விட்டுருங்கடா! உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன். நான் உங்களை அடிச்சது தப்புதான். அதுக்கு உங்க காலில் விழுந்து வேணும்னாலும் மன்னிப்புக் கேட்கிறேன். ஆனா என் தங்கச்சியை ஒன்னும் செய்யாதீங்க! ப்ளீஸ்டா, விட்டுருங்கடா…!” என்று கெஞ்ச ஆரம்பித்தான். அவனின் கெஞ்சல் மூவருக்கும் ரசிக்கவைத்தது.

“இதுதான் எங்களுக்கு வேணும் சபரி. இப்படியே கெஞ்சிக் கொண்டே இரு! அந்தச் சத்தத்திலேயே நாங்கள் சுகத்தில் மூழ்கி முத்து எடுக்கிறோம்…” என்ற சுரேஷ், வேதிகாவின் அருகில் போய் அவளின் கன்னத்தில் மென்மையாகத் தட்டி “வேதி பாப்பா! எழுந்திரு பாப்பா. எங்க கூடக் கொஞ்சம் ஒத்துழைப் பாப்பா…” என்று சொல்லிக்கொண்டே அவளின் அருகில் சென்றான்.

“டேய்…! விடுடா, விடுடா…!” என்று சபரி கத்த, “இன்னும் கொஞ்சம் சத்தமா கத்து…!” என்று சொல்லிக்கொண்டே வேதிகாவிடம் தவறாக நடக்க முயல, தன்மேல் உணர்ந்த வித்தியாசமான கை பரவலில் வேதிகாவிற்கு முழிப்பு வந்தது. அவள் தன் எதிர்ப்பை காட்ட ஆரம்பித்துக் கொண்டே கண்களை நன்றாக விழித்துப் பார்த்தாள்.

தன் அண்ணனின் சத்தம் எங்கிருந்தோ கேட்பது போல் இருக்க, தன்னிடம் எவனோ தவறாக நடந்து கொள்கிறான் என்ற விழிப்பு வர, சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவனிடமிருந்து விலகப் போராடினாள்.

சபரீஷ் நகர்ந்துகொண்டே தங்கையைக் காப்பாற்ற முயல, “சபரி இன்னும் பக்கத்தில் வந்து பார்க்க ஆசைப்படுறான்டா…” என்று நக்கலாகச் சொல்லிக்கொண்டே அவனைக் கண்டுகொள்ளாமல் மூவரும் சேர்ந்து வேதிகாவை சூழ்ந்துகொண்டனர்.

“ஐயோ…! வேதி பாப்பா! இவனுங்க கிட்ட இருந்து தப்பிச்சு போயிரு…” என்று சபரி தங்கையிடம் சொல்ல, மூவரின் பிடியில் இருந்தும் தப்பிக்கப் போராடிக் கொண்டே, தன் அண்ணனை பார்த்த வேதிகா “அண்ணா…! அண்ணா…! என்னைக் காப்பாத்து….” என்று கதறினாள்.

“உன் அண்ணன் காப்பாத்துவான்னு கனவு காணாதே பாப்பா! உங்க அண்ணனை நீ யாருன்னு நினைச்ச? இந்த மாதிரியான விஷயத்தில் அவனும் கெட்டிக்காரன் தான். எங்க கூடச் சேர்ந்து நல்லா என்ஜாய் பண்ணிருக்கான். இப்ப தங்கச்சி நீ பக்கத்தில் இருக்கவும் நல்ல பிள்ளை வேஷம் போடுறான். சான்ஸ் கிடைச்சா அவன் உன்னையும் கூட விட்டு வைக்க மாட்டான்…” என்று ஒருவன் சொல்ல, நம்பமுடியாத திகைப்பில் விழிவிரித்துச் சொன்னவனையும், தன் அண்ணனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கிற? நாங்க பொய் சொல்றோம்னு நினைக்கிறயா? முற்றிலும் உண்மை. வேணும்னா உன் அண்ணன்கிட்டயே கேளு…!” என்று சொல்ல, “அண்ணா…” என்று கதறலாக அழைத்துக் கொண்டே சபரியை கேள்வியாகப் பார்த்தாள்.

அந்நொடியில் தங்கையின் முன் கூனிக் குறுகிப் போனான் சபரீஷ். “அண்ணன் தப்பானவன் தான்டா. ஆனா இவங்க சொல்ற மாதிரி உன்கிட்ட தப்பா நடந்துகிற அளவுக்குத் தப்பானவன் இல்லடா பாப்பா. இவனுங்க பேச்சை கேட்டுட்டு நிற்காம ஓடிரு பாப்பா…” என்றான்.

“தப்பிக்கிறதா? எங்ககிட்ட இருந்தா? முடியும்னு நினைக்கிறயா சபரி? இத்தனை நாளும் பொண்ணுங்களை மிரட்டி தான் பணிய வச்சோம். ஆனா இப்போ வேட்டையாட போறோம். அதுவும் உன் கண் முன்னே உன் தங்கையை வேட்டையாட போற வெறி எங்களுக்கு அதிகம் இருக்கு…” என்றான் சுரேஷ்.

“டேய்…! சும்மா இவன் கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ணாதே! வா நம்ம வேலையை ஆரம்பிப்போம்…” என்ற அவனின் நண்பன் வேதிகாவின் கையை இறுக பிடித்துக் கொண்டான்.

“என்னை விடுங்கடா…” என்று சொல்லி கொண்டே அவர்களிடம் இருந்து போராடினாள். சபரீஷும் அவர்களிடம் இருந்து தங்கையைக் காக்க “விட்டுருங்கடா…” என்று கத்திக் கொண்டே அவர்கள் அருகில் வந்து ஒருவனின் பின்னால் இருந்து அவனின் காலை கடித்து வைத்தான்.

வேதிகாவும் மூவராக இருந்தாலும் தன்னால் முயன்ற அளவு தன் எதிர்ப்பை காட்டிக் கொண்டிருந்தாள். சபரி கடித்ததில் ஒருவன் காலை உதறிக் கொண்டு சபரியை அடிக்கத் திரும்ப ஒருவனைக் கையில் கடித்து வைத்து விட்டு அவனின் கையை உதற வைத்தாள் வேதிகா.

இருவரும் விலகச் சுரேஷ் இப்பொழுது முழு மூச்சுடன் அவளை அடைய அவளின் மீது பாய்ந்தான். தன் பலத்தை எல்லாம் திரட்டி அவனின் வயிற்றின் மீது ஒரு எத்து விட்டாள்.

அதில் அவன் குனியவும், தான் தப்பிச் செல்ல வழி இருக்கிறதா என்று அறையைத் துழாவினாள். அந்த அறையில் சின்ன ஜன்னலும், வாசல் கதவு மட்டுமே இருக்க, கதவை நோக்கி ஓடினாள். ஆனால் அதைக் கண்டு கதவை மறைத்துக்கொண்டே அவளைப் பிடிக்க வேகமாக ஒருவன் வர, தப்பிக்கும் மார்க்கம் அறியாது கண்ணைச் சுழற்றியவள் பார்வையில் அவளின் புத்தகப் பை பட வேகமாக அதை நோக்கி சென்று பையில் இருந்து ஷாமன்ரி பாக்ஸை எடுத்து அதில் இருந்த காம்பக்ஸை கையில் எடுத்துக் கொண்டாள்.

“யாராவது பக்கத்தில் வந்தால் குத்திருவேன்…” என்று சொல்லி கொண்டே காம்பக்ஸை காட்டி மிரட்ட, அவளின் கையில் காம்பக்ஸை பார்த்து ஒரு நொடி முழித்த இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவர்களுக்குள் கண்களால் ஏதோ சொல்லி கொண்டு இருவரும் ஒன்றாக அவளின் மீது பாய்ந்து வர, காம்பக்ஸை ஒருவன் மீது குத்த போனாள்.

அவளின் கையைச் சுரேஷ் லாவகமாகத் தட்டி விட வர அவனின் கையைச் சட்டென லேசாகக் கீறி விட்டாள். “ஆ…!” எனக் கத்தியவன் “பிடித்து அமுக்குடா அவளை…” என்று நண்பனிடம் சொன்னான்.

அவனும் பாய்ந்து வர அவனின் வயிற்றின் ஓரம் ஒரு கீறல் போட்டாள். இருவரும் வலியில் அடிபட்ட இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, தன் அண்ணனை பார்த்தாள் வேதிகா. அவன் இன்னொரு நண்பனை தங்கையின் பக்கம் போக விடாமல் அவனிடம் அடியும் வாங்கிக் கொண்டு தன்னால் ஆன தடையைச் செய்து கொண்டிருந்தான்.

உன் குண மாற்றத்தால் தானே அண்ணா எனக்கு இந்த நிலை என்று அவனைப் பார்த்து அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, சுரேஷும் அவனின் நண்பனும் அவள் அசந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அவளின் பின்பக்கம் இருந்து ஒருவன் பிடிக்க, ஒருவன் அவள் கையில் இருந்த காம்பக்ஸை பிடுங்கி எறிந்தான். அவள் தங்களைத் தாக்கியதில் வெறி ஏறி போனவர்கள், அவளின் உடலை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர பார்த்தார்கள்.

இரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் ஆன போராட்டம் தொடர, மூன்றாமவனும், சபரியின் வயிற்றில் பலமான எத்து விட்டுவிட்டு இவர்களிடம் வந்தான். ஒரு சின்னப் பெண்ணைச் சூறையாட மூன்று காம மிருகங்களும் அவளின் உடலில் பலத்தைக் காட்ட, அவர்களிடம் மாட்டி தன் சக்தியை எல்லாம் இழந்து கொண்டிருந்தாள் வேதிகா.

தன் வயிற்றில் விழுந்த உயிர் போகும் வலியையும் பொருட்படுத்தாமல் தங்கையைக் காக்க நகர்ந்து கொண்டே வந்தான் சபரி. “டேய்…! விட்டுருங்கடா, விட்டுருங்கடா…” என்று அவன் வாய் விடாமல் கெஞ்சி கொண்டே இருந்தது.

சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு தன்னிடம் இருந்த மிச்ச மீதி பலத்தைத் திரட்டி வெகுண்டு ஒருவனை நகத்தை வைத்து கீறி ஒருவனைக் கடித்து வைத்து, ஒருவனைக் காலால் அவனின் உயிர் நாடியில் அடித்து அவர்களின் பிடியில் இருந்து கன நேரம் வெளியே வந்த வேதிகா வேகமாகத் தன் அருகிலேயே இருந்த ஷாமன்ரி பாக்சில் இருந்த பென்சீல் சீவ அவள் எப்பொழுதும் வைத்திருக்கும் பிளேடை எடுத்து தன் கையின் நாடியை பலம் கொண்ட மட்டும் கிழித்துக் கொண்டு வழி தாங்காமல் “அம்மா…” என்று கத்தினாள் அச்சிறு பெண்.

அவள் உபயோகித்த பலத்தில் கை நரம்பு துண்டிக்கப்பட்டு ரத்தம் குபுகுபுவென வெளியேறியது. அவளின் செயலை எதிர்பாராமல் மூன்று மிருகங்களும் திகைத்து விழிக்க, தங்கையின் செய்கையில் “வேதிப் பாப்பா…” என்று அதிர்ந்து அலறினான் சபரீஷ்.

அவனின் கத்தலில் மெதுவாக அண்ணனின் புறம் திரும்பிய வேதிகா இகழ்ச்சி சிரிப்பொன்றை உதடு வழியாக மெல்லியதாக வெளியிட்டாள்.

“டேய் சுரேஷ்…! என்னடா இது இப்படிப் பண்ணிக்கிட்டா?” என்று ஒருவன் கேட்க, “பெரிய பத்தினி பரம்பரையாய் இருப்பா…” என்று நக்கலாகச் சொன்ன சுரேஷ் “இனி நாம இந்த இடத்தில் இருக்கிறது நல்லது இல்லடா. வாங்க போயிரலாம்…” என்றான்.

“என்னடா இவ்வளவு அழகான பொண்ணை இப்படியே விட்டுட்டு போகணுமா? நம்ம வேலையை முடிச்சிட்டு போவோம்…” இன்னொருவன் சொல்ல, “ச்சே…! அவ கையை ஆழமா வெட்டிக்கிட்டா போலடா! உயிர் ரொம்ப நேரம் தாங்காது. உயிர் போகும் நிலையில் இருக்கும் இவகிட்ட நாம என்ஜாய்ப் பண்றது பிணத்துக் கூட என்ஜாய் பண்ற மாதிரி தான் இருக்கும். எனக்கு இவ வேண்டாம். நீங்களும் பேசாம வாங்கடா. நம்மளுக்கு வேற பொண்ணா கிடைக்காது? நம்ம மிரட்டலுக்குப் பணியிற பொண்ணா பார்த்து மடக்கி நாம என்ஜாய்ப் பண்ணிக்கலாம்…” என்று ஒருவன் சொல்ல, “எனக்கு இவளை விட மனசு இல்லடா…” என்றான் இன்னொருவன்.

“டேய் முட்டாள்…! உனக்குப் பொண்ணு தானே வேணும்? சீக்கிரம் நல்ல பிகரா பிடிப்போம். நாம முதலில் இந்த இடத்தைக் காலி பண்ணுவோம். இல்லைனா கொலை கேசுன்னு உள்ளே போக வேண்டியிருக்கும்…” என்றான். “நீ சொல்றதும் சரிதான்டா. வாங்க போகலாம்…” என்று அவர்கள் கிளம்ப, அவர்களைப் பார்த்து சபரீஷிற்குக் கொலை வெறி வந்தது.

ஆனாலும் தற்போது தங்கையின் நிலையை நினைத்து அவளின் அருகில் செல்ல போனான். உடலில் பாதி உடை மட்டும் இருக்க, அண்ணனின் முன் தன் நிலையை நினைத்து கூசியவள் “பக்கத்தில் வராதே…!” என்றாள்.

“வேதிப் பாப்பா ஏன்டா இப்படிப் பண்ணிக்கிட்ட? அண்ணா கையை அவிழ்த்து விடு! நாம ஹாஸ்பிட்டல் போயிரலாம்…” என்றான்.

“உன் கையால் நான் உயிர் பிழைக்கிறதுக்குப் பதில் நான் செத்தே போயிரலாம். நான் அவிழ்த்து விட்டதும் அந்த நாய்ங்க செய்ய நினைச்சதை நீ செய்யவா?” என அவள் உயிர் வலியுடன் கேட்க, “பாப்பா…” என்று கத்தி துடித்தே போனான்.

“அண்ணாவை அப்படி நினைக்காதே பாப்பா. நான் அவ்வளவு மிருகம் இல்லை…”

“உன்னால் என்னைப் போல் துடித்த பெண்களுக்கு நீ மிருகம் தானே?”

“அய்யோ பாப்பா…! அது ஏதோ முட்டாள் தனமா பண்ணிட்டேன். மன்னிச்சுரு. கட்டை அவிழ்த்து விடு பாப்பா. சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போயிரலாம்…” என்று கெஞ்சினான்.

அவனுக்குப் பதில் சொல்லாமல் ஆங்காங்கே கிழிந்து தொங்கிய உடையை ஒரு கையால் இழுத்து விட்டுக்கொண்டே பள்ளி உடைக்கு இருக்கும் துப்பட்டாவை அவள் கண்கள் துழாவியது.

அது இன்னொரு மூலையில் கிடைக்க, அதை எடுக்கக் கூட எழ முடியாத தன் நிலையை நினைத்து அவளின் கண்ணீர் கரை புரண்டோடியது.

தங்கை உயிருக்கு போராடி கொண்டிருக்க, கூடவே அவளின் உடை பற்றிய தவிப்பை கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தன் நிலை சபரீஷை கொல்லாமல் கொல்ல, தங்கையின் கண் சென்ற திசையைப் பார்த்துத் தன்னால் முடிந்த மட்டும் வேகமாக உடம்பை அசைத்து மூலையில் கிடந்த துப்பட்டாவை வாயில் கவ்வி எடுத்து வைத்து தங்கையின் மீது போட்டான்.

அவள் அதை வைத்து மெல்ல இழுத்து மூடி கொண்டே தன் தலைக்கு நேராக இருந்த தன் பையை இழுக்க முயன்றாள். “பாப்பா கையை அவிழ்த்து விடேன் பாப்பா. ரத்தம் ரொம்பப் போகுது. கையைத் துணி வச்சுனாலும் கட்டி விடுறேன்…” கெஞ்சி பார்த்தான். ஆனால் ஷர்வேதிகாவின் மனது இறுகி போயிருந்தது.

தன் அண்ணன் எப்பொழுது மற்ற பெண்களை மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டான் என்று கேள்வி பட்டாளோ அப்பொழுதே அவனைப் புழுவை போலக் கீழாகத் தான் நினைத்தாள்.

கை வலி உயிர் போனது. அந்த மிருகங்கள் மேலே பாய்ந்ததில் உடலை அசைக்கக் கூடச் சிரம பட்டாள். ரத்தம் வெளியேற கண்ணைக் கட்டி கொண்டு மயக்கம் வந்தது. அதற்குள் தான் செய்ய வேண்டியதை நினைத்து பையை இழுக்க முயல, தங்கை தன் கெஞ்சலுக்குச் செவி சாய்க்க மாட்டாள் என்று உறுதியாகி விட, தானே முயன்று கண்ணீருடன் அவள் பையை வாயால் இழுத்து போட்டான். அதோடு தன் கை கட்டை அவிழ்க்க முடியுமா எனப் பார்த்தான். தங்கையின் கை அருகிலேயே பிளேடு கிடக்க அதை எடுக்க முயன்றான். பின்னால் கை கட்டிய நிலையில் திரும்பி அமர்ந்து அவன் அதை எடுக்க முயல, வேதிகா தன் பையில் இருந்த அணைந்து கிடந்த கைபேசியை எடுத்து ஆன் செய்த நிமிடத்தில் அவளின் போன் அலறியது.

உடனே ஆன் செய்து “அண்ணா…” என்று தீன குரலில் அழைத்தாள். போன் சத்தத்தில் தன் கட்டை அவிழ்க்க முயன்று கொண்டிருந்த சபரீஷ் நிமிர்ந்து பார்க்க, அந்தப் பக்கம் தங்கையின் தீன குரலில் பதறி துடித்து, “பாப்பா, எங்கடா இருக்க? எங்க போன? என்னாச்சு?” என்று பதறி துடித்தான் ஷர்வா.

“அண்ணா…” என்ற வார்த்தை மட்டும் அவளிடம் மீண்டும் வந்தது. தங்கையின் வித்தியாசமான குரல் ஷர்வாவை துடிக்க வைக்க “எங்கே இருக்கனு சொல்லுடா. அண்ணா வர்றேன்…” என்றான்.

அதற்குள் சபரீஷ் “அண்ணா, அண்ணா சீக்கிரம் வாண்ணா. பாப்பா உயிருக்கு போராடிட்டு இருக்கா. சீக்கிரம் வாண்ணா…” என இங்கிருந்து கத்தினான்.

ரோடெல்லாம் பைத்தியம் போல் தங்கையைத் தேடி அலைந்து கொண்டிருந்த ஷர்வாவிற்குத் தங்கையின் தீன குரலே குலை நடங்க வைத்தது என்றால், இப்பொழுது சபரீஷின் குரல் மட்டும் இல்லாது, அவன் சொன்ன செய்தியும் காதில் விழுந்த நொடி காட்டில் விட்ட குழந்தையெனத் தடுமாறிப் போனான்.

“சபரீஷ் நீயும் பாப்பா கூடவா இருக்க? என்னடா உளர்ற? எங்கே இருக்கீங்க?” என்று ரோடு என்றும் பாராமல் கத்தி கேட்டான்.

சபரீஷ் காதில் ஷர்வா கேட்டது மெல்லியதாக விழுந்தது. அதை வைத்துத் தாங்கள் இருக்கும் இடத்தைக் கூறினான். “சீக்கிரம் வாண்ணா. ஆம்புலன்ஸுக்கும் சொல்லு. அப்படியே பாப்பாவை என் பேச்சை கேட்க சொல்லுண்ணா…” என்று தான் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்ல, ஷர்வாவிற்கு இன்னும் பதறி தான் போனது.

‘ஆம்புலன்ஸ், உயிருக்கு போராடுகிறாள்’ எல்லாம் அவனைத் தடுமாற வைக்க “பாப்பா, பாப்பா என்னாச்சுட்டா?” என்று கத்தினான். கூடவே “அண்ணன் இப்போவே வர்றேன்டா…” என்றபடி தன் இரு சக்கர வாகனத்தைச் சபரீஷ் சொன்ன இடத்தை நோக்கி பறக்க விட்டான்.

அவன் போனை வைத்து விடுவானோ என்று நினைத்து மயக்கத்தில் சொருகிய கண்ணை விரிக்க முயன்ற படி “அண்ணா, அம்மாகிட்ட இதைச் சொல்லுண்ணா. அம்மா வளர்த்த பொண்ணா மானம் போகுறதுக்கு முன்ன அவங்க பொண்ணு தப்பிச்சுட்டேன்னு சொல்லுண்ணா. அப்புறம் இந்தச் சபரீஷ் அண்ணா நான் செத்த பிறகு என் பிணத்தைக் கூடத் தொட கூடாதுண்ணா…” என்று திக்கி திணறி சொன்னவள் “இந்தப் போன்ல நான் உன்கிட்ட பேச நினைச்சது எல்லாம் ரெக்கார்ட் பண்ணி வைக்கப் போறேன்ண்ணா. மறக்காம கேளு. உன்னைக் கடைசியா ஒரு முறை பார்க்கணும் போல இருக்கு. ஆனா…” என்றவள் அதற்கு மேலும் சொல்லாமல் போனை வைத்து விட்டாள்.

சபரீஷ் தங்கையின் வார்த்தையில் உயிர் இருந்தும் இல்லாதவன் போலத் திகைத்துப் போனான். அந்தப் பக்கமோ தங்கையின் வார்த்தையில் ஷர்வாவின் கையில் வண்டி தடுமாறியது.

இங்கே சபரீஷை சிறிதும் கண்டு கொள்ளாமல் போனின் ரெக்கார்டை ஆன் செய்து அரை மயக்கத்திலேயே பேச ஆரம்பித்தாள். அவள் பேசி முடிக்கும் போது அந்த ஒதுக்குப் புறமான புதர்களுக்கு மத்தியில் இருந்த வீட்டை ஷர்வா கண்டு பிடித்து வந்து சேர்ந்த போது ஷர்வேதிகா உணர்வே இல்லாமல் கிடந்தாள். அவளின் அருகிலேயே “பாப்பா… பாப்பா…” என்று புலம்பிய படி அரை உயிர் மட்டுமே இருப்பவன் போலக் கிடந்தான் சபரீஸ்வரன்.

“வேதிப் பாப்பா…” என்று கதறிக் கொண்டே வந்த ஷர்வா இருவரும் இருந்த நிலை கண்டு துடித்துப் போனான்.

தங்கையின் பேச்சிலேயே அவள் நிலையை ஓரளவு யூகித்திருந்தவன் அவள் இருந்த கோலத்தை நேரில் பார்த்து அவள் அருகிலேயே மடங்கி விழுந்தான்.

அவளின் உடலை துப்பட்டா அரைக் குறையாக மறைத்திருக்க, அவள் கையில் இருந்து வழிந்த ரத்தம் குளம் போலத் தேங்கி இருக்க, உயிரே இல்லாமல் இருந்தவள் அருகில் சென்று, “பாப்பா…” என்று கத்திக் கொண்டே அவளின் தலையைத் தன் கையில் தாங்கினான்.

அண்ணனின் சத்தத்தில் சட்டென நிமிர்ந்த சபரி “அண்ணா, பாப்பா பாருண்ணா. எழுந்துக்கச் சொல்லு…” என்று கதறினான்.

அவன் பேச்சு கூடக் காதில் விழாமல் தங்கையின் தலையைத் தாங்கிய படி “பாப்பா எழுந்திருடா. அண்ணாவை பார்க்கணும்னு சொன்னியே வந்திருக்கேன் பாரு…” என்று எழுப்ப அவளின் தலையைக் குலுக்கினான்.

தொடர்ந்து சில நிமிடங்கள் அவன் குலுக்கியதில் தூக்கி போட்டது போல வேதிகாவின் உடல் துடித்தது. அவளிடம் இன்னும் உணர்வு இருப்பதைக் கண்டு “பாப்பா…” என்று ஆர்வமாகத் தங்கையின் முகத்தைப் பார்த்தான்.

வேதிகாவின் விழிகள் விரிந்திருந்தன. அண்ணன் முகத்தை நொடிகள் பார்த்தவள் விழிகள் அப்படியே உறைந்து போனது.

அதை உணர்ந்த ஷர்வா “பாப்பா…” என்று அழைத்துக் கொண்டே மீண்டும் எழுப்ப முயல, இப்பொழுது அவளின் தலை சரிந்து விழுந்தது.

ஷர்வஜித்தின் கைகளிலேயே உயிரை விட்டிருந்தாள் ஷர்வேதிகா.