பனியில் உறைந்த சூரியனே – 24

அத்தியாயம் 24

மூன்று ஆண்மக்களும் மானசீகமாகத் தலையில் கைவைக்க, அன்னையின் முறைப்பில் சுதாரித்த ஷர்வேதிகாவோ வெளிப்படையாகவே தலையில் கை வைத்தாள்.

உனக்கு எத்தனை முறை சொல்றது வேதிகா? இப்படிச் சத்தமா சிரிக்கக் கூடாதுனு. பொண்ணுனா அடக்கம் வேணும்னு தலைபாடா அடைச்சுக்கிறேன். ஆனா நீ தான் கேட்ட பாடு இல்ல. சரி, சரி எல்லாம் சாப்பிட வாங்க…” என்று சொல்லிக் கொண்டே கீழே சென்றார் சந்திரா.

அவரின் பின்னேயே நால்வரும் தொடர்ந்தனர். “என்னடி ஷர்வே, அம்மாகிட்ட இன்னைக்குக் கொஞ்சம் தான் திட்டு வாங்கி இருக்கோம்னு ஜாலியா இருக்கப் போல?” எனக் கேலியுடன் கேட்டான் சபரீஷ்.

அதில் உனக்கு ரொம்ப வருத்தம் போல?” எனப் புருவம் உயர்த்திக் கேட்டாள் வேதிகா.

ச்சேசே…! எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை வேதி. எனக்கும் சந்தோஷம் தான்…” என்றான்.

உனக்குச் சந்தோஷமா? நம்பமுடியலையே…!” சந்தேகமாக அவனைப் பார்த்து வைத்தாள்.

நம்பு வேதி பாப்பா! நீ ரொம்பவே பாவம் தான். அம்மாகிட்ட டெய்லி ஒரு டைம்மாவது பொண்ணுனா அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்னு அட்வைஸ் கேட்குற. ஆனா பாரு உன்கூடச் சேர்ந்து அந்த அட்வைஸை நாங்களும் கேட்க வேண்டிய கொடுமை இருக்கே, அந்தக் கொடுமை! ரத்த கண்ணீர் வருது போ…!” என்றவனை மேலும், கீழும் பார்த்தாள்.

அதானே பார்த்தேன். என்னடா நம்ம அண்ணன் ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்மளை வேதி பாப்பானு பாசமா கூப்பிடுறானேனு. பரிதாபம் எனக்காக இல்லை. உனக்காக ம்ம்?” என்றவள் அவனின் அருகில் இன்னும் நெருங்கி வந்து இப்படி எல்லாம் பேசிட்டு இருந்தேன்னு வை! என் காது பஞ்சர் ஆனாலும் பரவாயில்லைனு இன்னும் அட்வைஸ் மழை பொழிய வைப்பேன். எப்படி வசதி?” என்று கேட்டாள்.

வேதி பாப்பா, வேண்டாம் பாப்பா…” என்று சத்தமில்லாமல் அலறினான் சபரீஷ்.

அது…! அந்தப் பயம் இருக்கணும். ஆனாலும் நம்ம அம்மா ரொம்ப நல்லவங்கண்ணா. என்னை மட்டும் தனியா கூப்பிட்டு அட்வைஸ் பண்ணாம நீ இப்படி அலற அளவுக்கு உன் முன்னாடி அட்வைஸ் பண்றாங்க பார்த்தியா அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…” என்றாள் நமட்டு சிரிப்புடன்.

உன்னை…” என்று அவன் பல்லை கடிக்க… “அங்க என்னடி குசு குசுன்னு பேசுற?” என்று அதட்டலுடன் கேட்டார் சந்திரா.

ம்க்கும்…! என்னை அதட்டலைனா அம்மாவுக்குப் பொழுதே போகாதே…!” என்று முனங்கியவள் ஒன்னுமில்லைமா…” என்றாள் வார்த்தைக்கே வலிக்கும் என்பது போன்றான மெல்லிய குரலில்.

சத்தமாகச் சொன்னால் கூட அதற்கும் அறிவுரை மழை பொழிபவர் ஆகிற்றே. அதற்காக மட்டுமே அந்தக் குரல்.

சந்திரா கிராமத்தில் பிறந்து, வளர்ந்து நகரத்தில் வாழ்க்கைப்பட்ட பெண்மணி. கிராமத்தில் அவர் வளர்ந்த வளர்ப்பு முறைக்கு ஏற்ப, பெண்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற பல கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டதால் அதைத் தன் மகளின் வளர்ப்பு முறையில் காட்ட முயன்றார். அதனால் எப்பொழுதும், அவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கண்டிப்புடனே இருந்தார். அதை மீறும் பொழுது அறிவுரை வழங்கி தள்ளி விடுவார்.

ரொம்பவும் இறுக்கி பிடிக்காதேமா…” என்று சுகுமாரன் சொன்னாலும் இந்த ஒரு விஷயத்தில் என்னை என் போக்கில் விட்டுவிடுங்க…” என்று விடுவார்.

மகளின் நல்லது என்ற எண்ணத்திலேயே மனைவி இப்படிச் செய்கின்றாள் என்று புரிந்து கொண்டு அவரும் விட்டுவிடுவார். அதே நேரம் அநேக நேரங்களில் மகளுக்கு ஆதரவாகப் பேசி வாங்கியும் கட்டி கொள்வார்.

அனைவரும் சாப்பிட அமர்ந்ததும் அம்மா இந்தச் சபரீஷ் அண்ணா என்ன செய்தான் தெரியுமா? இன்னைக்கு அவன் புக் எடுத்து படிக்கவே இல்லை. நல்ல தூக்கம் தான். இதில் நானும், ஷர்வா அண்ணாவும் தூங்க விடாம பேசுறோம்னு எங்களைத் திட்டுறான்…” என்று போட்டு கொடுக்க ஆரம்பிக்க,

இல்லைமா பொய் சொல்றா…” என்று சபரீஷ் வேகமாக மறுக்க, “உண்மைமா ஷர்வா அண்ணாகிட்ட வேணும்னா கேளுங்க. நீயே சொல்லுண்ணா…!” என அமைதியாக உண்டு கொண்டிருந்தவனையும் ஆதரவுக்கு அழைத்தாள்.

சபரீஷ் படிக்காததற்கு நான் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும். நீ இப்போ உன் ரெண்டு அண்ணாவையும் எப்படிப் பேசின?” என்று கேட்டார்.

அப்பொழுதுதான் தன் அண்ணாவை போட்டு கொடுக்கும் ஆர்வத்தில் இருவரையும் ஒருமையில் பேசியது புரிந்தது. தனியாக இருக்கும் போது அண்ணன்ங்களை நண்பர்களாக நினைத்து சரிக்கு சரி பேசுபவள் அன்னையின் முன் பன்மையில் தான் அழைப்பாள். சந்திராவிற்கு அதுவும் பிடிக்காது. அவரின் திட்டுக்கு பயந்தே சுதாரிப்புடன் இருப்பவள் இன்று சுதாரிக்க மறந்திருந்தாள்.

இவள் யோசனையில் இருக்கும் போதே சந்திராவின் அர்ச்சனை ஆரம்பம் ஆகியிருந்தது.

அண்ணன்ங்களை மரியாதை கொடுத்து பழகு! பிரண்டா பழகுறேன்னு ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்காதே…!” என்று சொல்ல, சபரீஷ் இது உனக்குத் தேவையா? என்னைக் குறை சொல்றேன்னு இப்போ நீயே மாட்டிக்கிட்டஎன்பது போலக் கிண்டலாகச் சிரித்தான்.

ம்மா விடுங்கமா. வேதி பாப்பா எங்களை உரிமையா கூப்பிடாம வேற யாரை கூப்பிடுவா?” என்று தாயின் பேச்சை நிறுத்த பார்த்தான் ஷர்வா.

அது இல்லை ஷர்வா. வீட்டில் பேசுற பழக்கம் தான் வெளியிடத்திலும் வரும். இப்போ நீயே காலேஜ் முடிக்கப் போற. இன்னும் சில வருஷத்தில் உனக்குக் கல்யாணம் பண்ணுவோம். அப்போ உன் மனைவி இப்படிப் பேசுறதை எல்லாம் சரியா எடுத்துப்பாளா தெரியாது. அந்தச் சமயம் அவ இவளை சுருக்குன்னு ஒரு சொல் சொல்லிட்டா என்ன பண்ணுவா? அதை எல்லாம் யோசிக்கணும்ல…” என்று சந்திரா சொல்ல,

என் மனைவி வந்தாலும் அவளும் எங்க பாசத்தைப் புரிஞ்சுகிறவளா தான் இருப்பாமா. அப்படியே இல்லைனாலும் நான் புரிய வச்சுட்டு போய்டுறேன். இப்போ மட்டும் இல்லை. நான் கிழவனா ஆன பிறகும் என் வேதி பாப்பா என்னை டா போட்டுக் கூப்பிட்டாலும் சந்தோஷமா ஏத்துப்பேன். அதனால் அவளைச் சும்மா ஏதாவது சொல்லிட்டே இருக்காம விடுங்க…” என்றான் அவ்வீட்டில் அடுத்துக் குடும்பப் பொறுப்புகளைச் சுமக்க தயாராகிக் கொண்டிருக்கும் ஆண்மகனாக.

சரி விடு! உன் தங்கச்சியை நான் ஒன்னும் சொல்லலை…” என்று சந்திரா முடிக்க, தன் எதிரே இருந்த அண்ணனை பாசமாகப் பார்த்து வைத்தாள் வேதிகா.

தானும் தன் தங்கையை மென்மையாகப் பார்த்து சிரித்த ஷர்வா, அமைதியாக உணவுண்ண ஆரம்பித்தான்.

இவர்கள் பாசப் பார்வை பார்த்து வைக்கச் சபரீஷ் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தான். என்னைப் போட்டு கொடுத்துட்டு அண்ணனும், தங்கச்சியும் பாசபறவை வளர்த்துக்கிட்டு இருக்காங்க. இப்போ எனக்கு அர்ச்சனை கிடைக்குமே அதைக் கொஞ்சமாவது இரண்டு பேரும் யோசிச்சாங்களா?’ என இருவரையும் மனதில் அவன் திட்டிக் கொண்டிருக்க, சந்திரா தன் அர்ச்சனையை ஆரம்பித்தார்.

என்ன சபரி நீ வர, வர ஊர் சுத்துறது தான் அதிகமாகிருக்கு. சரியா படிக்கிறதே இல்லையே ஏன்?” எனக் கேட்டார்.

படிக்காமல் எல்லாம் இல்லைமா. நைட் நேரம் ஒதுக்கி படிச்சுருவேன்…” எனச் சொல்ல, “சரி சபரி நல்லா படி…” என்று முடித்துக் கொண்டார் சந்திரா.

ஆண்பிள்ளையான அவனிடத்தில் அவரின் கண்டிப்பு அவ்வளவு தான். ஆண்பிள்ளைகள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள் என்பது அவரின் எண்ணம். இதே இடத்தில் அந்த ஊர் சுற்றலையும், படிக்காததையும் மகள் செய்திருந்தால் அவரின் அணுகு முறையே வேறாக இருக்கும்.

இந்த ஒரு வரி அறிவுரைக்கே சபரீஷ் அலுத்துக் கொள்வான். அதுவே அவனுக்கு எரிச்சல் ஊட்டுவதாக இருக்கும்.

அண்ணன், தம்பி, தங்கைக்குள் சண்டைகளும் நடக்கும் சமாதானமும் நடக்கும். அதிலும் வேதிகா இரண்டு அண்ணாக்களுக்குமே செல்லம் தான். அவர்களின் செல்ல அழைப்பு வேதி பாப்பா. ஆனால் சண்டையிட்டுக் கொள்ளும் போது அந்த நேரத்திற்குத் தகுந்தாற்போல் போலப் பெயர்கள் மாறிகொள்ளும்.

ஷர்வஜித் சிவில் இன்ஜினியரிங் கடைசி வருடம் முடிக்கும் தருவாயில் இருக்க, சபரீஷும் அதே பாட பிரிவில் இரண்டாம் வருடத்தில் இருந்தான். ஷர்வேதிகா பதினொன்றாம் வகுப்பில் இருந்தாள்.

தந்தை சுகுமாரன் கட்டுமான தொழிலில் இருந்ததால் அவருடன் கைகோர்க்க அதைச் சார்ந்த படிப்பையே தேர்ந்தெடுத்த ஷர்வாவிற்கு அதில் காலடி எடுத்து வைத்ததும் கட்டுமான துறையில் இருக்கும் நுட்பங்களும், பலவகையான பழைய கட்டிடங்களைப் பார்த்து அதில் இருக்கும் நேர்த்தியிலும் வியந்து அப்படிப்பில் அதீத பிடித்தம் உண்டானது.

படிக்கும் போதே தந்தைக்கும் ஆலோசனை சொல்லும் அளவிற்கு முன்னேறியும் இருந்தான். படிப்பை முடித்தவுடன், தன் சொந்த முயற்சியில் பலவிதமான பெயர் சொல்லும் அளவில் கட்டிடங்களை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவனுக்கு நிறையவே இருந்தது.

அண்ணன் வழியில் தானும் அதே படிப்பை தேர்ந்தெடுத்த சபரீஷ் இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருந்தான். எப்படிப் படிக்க வேண்டும், எப்படி முன்னேற வேண்டும் என்று அவன் சிந்தனை போனதை விட வாழ்க்கையை எப்படி இலகுவாக, சந்தோஷமாக எப்படி நடத்திக் கொள்வது என்பதில் மட்டுமே அவனின் சிந்தனை போகும்.

ஷர்வேதிகா கடைக்குட்டியாக அனைவருக்குமே செல்லமானவள். சந்திராவின் சில கட்டுப்பாடுகளைத் தவிர வீட்டினரின் மனதில் அவளுக்கென்று எப்பொழுதுமே ஒரு தனி இடம் இருக்கும். குறும்புகாரி, அண்ணன்களை வம்பிலுத்து, சண்டைபோட்டு, என்று வளவளப்பவள். அவள் இருக்கும் இடத்தில் கலகலப்பிற்குப் பஞ்சமே இருந்தது இல்லை.

இரவு உணவை முடித்துக் கொண்டு மேலே உள்ள அறைக்குச் சென்ற மூவரும் அவரவர் வேலையில் ஈடுபட்டனர். வேதிகா தன் பிராக்ஜெட் வேலையில் ஈடுபட, அவளுக்குச் சிறுசிறு உதவிகள் செய்து கொண்டே தன் படிப்பிலும் கவனம் வைத்திருந்தான் ஷர்வா.

இவர்கள் இருவரும் படிப்பில் கவனமாக இருக்க, சபரீஷ் தானும் படிப்பதாகப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தவன், சிறிது நேரத்திலேயே அமர்ந்துகொண்டே உறங்க ஆரம்பித்தான்.

கைகளை நெட்டி முறிக்க நிமிர்ந்த வேதிகா, அவன் அமர்ந்துகொண்டே உறங்குவதைக் கண்டு ஷர்வாவை அழைத்துக் காட்டினாள். தம்பியை அப்படிப் பார்த்ததும் சரியான சோம்பேறிபையஎன்று திட்டியவன், “டேய் சபரி…!” என்று எழுப்பினான்.

அவனின் சப்தத்தில் இதோ படிக்கிறேன் மா…” என்று சொல்லிக்கொண்டே கண்ணை விழித்து வேகமாகப் புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பினான். அவனின் செயலை கண்டு இருவருக்கும் சிரிப்பு வர, சத்தம் போட்டு சிரித்து விட்டனர்.

அதில் நன்றாக உறக்கம் கலைந்தவன் இவர்கள் இருவரின் வேலைதான் என்று நினைத்து, “நிம்மதியா தூங்க கூட விடமாட்டீர்களா?” எனச் சொல்லிக்கொண்டே இருவரையும் கண்டு கொள்ளாமல் படுக்கையில் விழுந்தான்.

இவனைத் திருத்தவே முடியாது பாப்பா. நீ படி! நாம நம்ம வேலையைப் பார்ப்போம்…” என்ற ஷர்வா தன் படிப்பின் பக்கம் திரும்பினான்.

***

ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஒருநாள் வீட்டிற்கு அரக்கப்பரக்க வந்து சேர்ந்தாள் வேதிகா. அது மாலை வேளை என்பதால் சந்திரா மட்டும் வீட்டில் இருக்க, அவளின் அந்தப் பதட்ட நிலையைப் பார்த்து என்னாச்சுடி வேதிகா? ஏன் இப்படி ஓடி வர்ற?” என்று கேட்டார்.

அவருக்குப் பதில் சொல்லாமல் சாப்பாட்டு மேஜையின் மீது இருந்த தண்ணீரை எடுத்து வேகவேகமாகப் பருகியவள், கொஞ்சம் நிதானமாக மூச்சு விட்டுக்கொண்டு மேஜையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

என்ன வேதிகா, என்னாச்சுன்னு சொல்லு?” என்று சந்திரா திரும்பக் கேட்க, “ஒன்னுமில்லம்மா…” என்றவள் பதட்டம் சிறிதும் குறையாமல் இருந்தது.

அதைக் கண்டவர் உன் உடம்பெல்லாம் இவ்ளோ பதட்டத்தில் வேர்த்து வடியுது. ஒன்னும் இல்லைன்னு சொல்ற. என்னாச்சுன்னு சொல்றியா, இல்லையா?” என்று அதட்டினார்.

சொன்னா திட்ட மாட்டீங்களேம்மா?” என்று அவள் கேட்க, மகளை யோசனையுடன் பார்த்தவர் என்னனு முதலில் சொல்லு…” என்றார்.

நான் ஸ்கூல் விட்டு வர்ற வழியில் ஒரு மூனுபேரு வழி மறைச்சு என்கிட்ட வம்பிழுத்தாங்கமா. அதில் ஒருவனை நான் அடிச்சுட்டு ஓடி வந்துட்டேன்…” என்றாள்.

என்னடி சொல்ற? எங்க? நீ ஏன் அந்தப் பக்கம் போன? வம்பிழுத்தா கண்டுக்காம ஓடி வர வேண்டியது தானே? ஏன் கையெல்லாம் நீட்டின?” எனப் பதட்டத்துடன் கேட்டார்.

ம்மா, நான் என்ன சொல்றேன் நீங்க எப்படிக் கேள்வி கேட்குறீங்க? நான் அந்தப் பக்கம் போனதுனால தான் அவங்க வம்பிழுத்தது போல இருக்கு உங்க பேச்சு. அவன் என் மீது கை வைக்க வருவான். நான் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? அதான் அடிச்சேன்…” என்று கோபப்பட்டாள் வேதிகா.

உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது? பிரச்சனை நம்மளை தேடி வந்தா நாம தான் ஒதுங்கி போகணும்னு சொல்றேன். தைரியம் இருக்குங்கிறதுக்காக ஆம்பிளை பசங்களை எதிர்த்து நிற்பியா?” எனக் கேட்டார்.

எத்தனை நாளுக்குத் தான்மா பொண்ணுங்க ஓடி ஒளிஞ்சிகிட்டே இருக்கணும்? ஆண்கள் விரட்ட, விரட்ட பொண்ணுங்க ஓடிட்டே இருக்கணும்னா ஆயுசு முழுக்க ஓடிகிட்டே இருக்க வேண்டியது தான்மா. நம்மளும் பயப்படாம எதிர்த்து நின்னாதான் என்ன?” என்று கேட்டவளை முறைத்தார் சந்திரா.

வியாக்கியானம் பேச இந்த விஷயம் ஒத்து வராது வேதி. ஆண்கள் நம்மளை தாக்கி பலவீனமாக்கி அவங்க காரியத்தைச் சாதிச்சுக்குவாங்க. நாம தான் அடி வாங்கிட்டு நிற்போம். அது மாதிரி நிலைமை வந்திர கூடாதுன்னு தான் நீ அப்படி, இப்படி இருக்கணும்னு தினமும் பாடம் எடுக்குறேன். நாம விலகி போனாலும் வழிய வந்து கொட்டுறது தான் ஆண்கள் குணம். அதுக்கு இடம் கொடுக்கக் கூடாதுனா நம்ம தான் தள்ளி நிக்கணும். பொண்ணு விஷயத்தில் எப்பவும் அவ தான் ஈசியா கெட்ட பேரு வாங்குவா. அப்படி நீ வாங்கிற கூடாதுன்னு சொல்றேன். அதை முதலில் புரிஞ்சுக்கோ…” என்றார் காட்டமாக.

யார் என்ன செய்தாலும் இந்த அம்மா என்னைதான் குறை சொல்லுவாங்க. என்னைக்குத் தான் புரிஞ்சிக்கப் போறாங்களோ?’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் வேதிகா.

அதற்கு மேலும் அவரிடம் வழக்காடாமல் எழுந்து செல்ல போனவளை வேதி நில்லு…!” என்று அவளை நிறுத்தினார் சந்திரா.

என்னம்மாஎன்று சோர்வாக மீண்டும் அவள் அமர, “யாரோ உன்கிட்ட கலாட்டா பண்ணினாங்க சொன்னீயே, அந்தப் பசங்களை நீ இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா? அங்கே என்ன பிரச்சனை ஆச்சு? எல்லாம் விவரமா சொல்லு…!” என்றார்.

எதுக்குமா? எல்லாம் கேட்டுட்டு நீங்க என்னையே குறை சொல்லவா…!” என்று வேதிச் சலிக்க, “உதை வாங்கப் போற வேதிகா. உன் அம்மாவை என்ன நீ அவ்வளவு கெட்டவளாவே நினைச்சுட்டியா? என் பொண்ணு நீ, எந்தக் கெட்ட பெயரும் வாங்கிற கூடாதுனு உன்னைக் கொஞ்சம் கண்டிப்பா வளர்த்தா, உன் மேல எனக்கு அக்கறை இல்லைன்னு ஆகிவிடுமா? என்ன நடந்துச்சுன்னு சொல்லு…!” என்று அதட்டலாகவே ஆரம்பித்து இதமாகவே முடித்துக் கேட்டார்.

தாயின் பரிவான வார்த்தையில் கண்கலங்க ஆரம்பித்த வேதிகா எங்க நீங்க ரொம்பத் திட்டுவீங்களோனு பயந்துட்டேன்மா…” என்று சொல்லிவிட்டு அந்த மூணு பசங்களை நான் புதுசா தான் பார்த்தேன்மா.

அவங்களை நான் இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லை. திடீர்னு வழி மறைச்சாங்க. அப்புறம் என்னைப் பார்த்து அவங்களுக்குள் ஏதோ கமெண்ட் பண்ணிக்கிட்டாங்க. அப்படியே ஒருத்தன் என் மேல் கை வைக்க வந்தான். நான் அடிச்சுட்டு ஓடி வந்துட்டேன்…” என்றாள்.

அவள் அருகில் அமர்ந்து அவளின் தோளில் கை போட்ட சந்திரா மகளின் அந்த நிலையைப் புரிந்து இதமாகத் தடவி விட்டார். பின்பு ஒன்னுமில்லடா, பயப்படாதே! பசங்க சும்மா சீண்டி இருக்கலாம். இதை அப்படியே மறந்துரு! இனி நீ போகையிலும் வருகையிலும் பார்த்துக் கவனமா போயிட்டு வா…!” என்று தைரியப் படுத்தினவர் கூடவே,

ஆனாலும் நம்ம தான் கவனமா இருக்கணும் வேதி. சொல்றேன்னு கோவிச்சுக்காதே! பொண்ணுங்க அப்படி இருந்து தான் ஆகணும். வேற வழி இல்லை…” என்று கடைசியாகச் சொல்ல, அவர் நல்லதுக்குத் தான் சொல்கிறார் என்று புரிந்தாலும், ஏனோ அன்னை பெண்கள் அடங்கிப் போக வேண்டும் என்று சொல்வதாக அவளின் மனதிற்குப் பட இறுகி போனாள். அவர் சற்று நேரத்துக்கு முன் சொன்ன சமாதானம் கூடப் பின்னுக்குச் சென்றுவிட்டது.

சந்திரா நன்மை செய்வதாக நினைத்து மகளுக்குத் தன்னையறியாமலேயே உள்ளுக்குள் பயத்தையும் விதைத்திருந்தார்.

அவர் இத்தனை நாளும் அவளுக்குச் சொன்ன அறிவுரை படி பொண்ணு எப்பயும் அடங்கிப் போகணும்னு தான் அம்மா சொல்லுவாங்க. நாம சில விஷயங்களைச் சொன்னாலும் நமக்குத் தான் முதலில் அறிவுரை சொல்லுவாங்க. என்னை மட்டும் தான் குறை சொல்லுவாங்கஎன்ற எண்ணம் இத்தனை வருடங்களில் ஷர்வேதிகாவின் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டது.

வீட்டிலேயே அவள் பல முறை கண்டது. அவள் எதுவும் சொன்னால் அவள் சொன்ன விஷயத்தை விட அவள் பேச்சில் என்ன குறை இருக்கின்றது? அதைதான் முதலில் திருத்த வேண்டும் என்பது போல, அவளை முதலில் திருத்தி விட்டு தான் அவள் சொன்ன விஷயத்தின் சாராம்சத்திற்கு வருவார்.

அதைப் பல முறை உணர்ந்து கொண்ட வேதிகா இன்றைய விஷயத்திலும் தன்னிடம் தான் குறை கண்டு பிடிக்க முயல்வார் என்று அவளின் மனது ஆணி தரமாக நம்பி விட்டது. அவள் நினைத்துக் கொண்டது போல முதலில் நாம தான் ஒதுங்கி போகணும் என்ற அறிவுரைக்குப் பிறகே அவர் தன்னிடம் பொறுமையாக என்ன நடந்தது என்று கேட்டார் என்பதில் அவள் மனது சுனங்கி போனது.

சந்திரா எப்பொழுதும் அப்படித் தான் செய்வார் என்பதால் அது அவருக்குப் பெரிய விஷயமாகவே படவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட வேதிகாவோ உள்ளுக்குள் உடைந்திருந்தாள். அதனாலோ என்னவோ நடந்ததின் முழுவிவரமும் அன்னையிடம் சொல்லவில்லை.

அதனைத் தனக்குள்ளேயே போட்டு மறைத்தவள் அன்று முழுவதுமே சோர்வாக இருந்தாள்.

அன்று கல்லூரி முடிந்தவுடன் நேராகத் தந்தையின் அலுவலகத்திற்குச் சென்று, சில உதவிகள் செய்துவிட்டு, அவருடனேயே திரும்பிய ஷர்வஜித்திற்கு வெகு நேரத்திற்குப் பின்பு தான் தங்கையின் அமைதி உறைத்தது.

உணவின் போது என்னவென்று அவன் ஜாடையாகக் கேட்க, அவள் ஒன்றும் இல்லைஎன்று தலை அசைத்தாள். சபரீஷ் உணவு ஒன்றே முக்கியம் என்பது போல அதில் மட்டும் கவனத்தில் இருந்தான்.

சுகுமாரன் வெகு நேரத்திற்குப் பின்பு தான் மகளின் அமைதியைக் கண்டுகொண்டார்.

என்னடா வேதி இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்க? வழக்கமான உன் கலகலப்பு காணமே? முகமெல்லாம் சோர்வா இருக்கு…” என்று கேட்டார்.

சாப்பாட்டை அளந்து கொண்டிருந்தவள் தந்தையின் கேள்வியில் நிமிர்ந்து ஒன்னும் இல்லப்பா. நான் எப்போவும் போலத்தான் இருக்கேன்…” என்று வார்த்தையில் சொன்னாலும் அவளின் சோர்வை குரல் காட்டிக்கொடுத்தது.

இல்லையே, வேதி பாப்பாவை பற்றி எனக்குத் தெரியாதா? எப்பவும் இருக்கிற வேதி பாப்பா இன்னைக்கு இல்லை. ரொம்பச் சோர்வா இருக்கா. உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று கேட்டார்.

உடம்பு எல்லாம் நல்லாத்தான் இருக்கு…” என்றபடி அவர்களுக்குச் சுட்ட தோசையைக் கொண்டு வந்து கொண்டே சொன்னார் சந்திரா. மனைவியைப் பார்த்த சுகுமாரன் உடம்பு நல்லா இருக்குனா, வேற என்ன நல்லா இல்ல? என்னம்மா சொல்ற நீ?” என்று மனைவியிடம் கேட்டார்.

ஷர்வா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அன்னையின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான். பேச்சு தன்னைப்பற்றி என்றதும் வேதிகாவிற்குத் தன்னால் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

தலையைக் குனிந்து அதை மறைத்துக் கொண்டாள். சபரீஷும் இப்பொழுது அன்னையின் பேச்சை கவனிக்க, “அவளை இன்னைக்கு ரோட்டில் வரும் போது யாரோ கலாட்டா செய்தார்களாம். அதுதான் இப்படி இருக்கா…” என்றார்.

என்னம்மா சொல்றீங்க? யாரு அது?” என்று ஷர்வா கோபத்துடன் கேட்க, “ஐயோ…! கண்ணம்மா என்னச்சுடா?” என்று பதறினார் சுகுமாரன்.

இதுக்கு ஏன் எல்லாரும் இவ்வளவு பதட்டப்படுறீங்க? அது எல்லாம் பாப்பா ஈசியா சமாளிச்சுருப்பா…” என்று சபரீஷ் அமைதியாகச் சொன்னான்.

டேய்…! நீ வாயை மூடுடா…!” என்று தம்பியை அதட்டிய ஷர்வா யாரு பாப்பா உன்னைக் கலாட்டா பண்ணினா? சொல்லு…” என்று கோபத்துடன் கேட்டான்.

சொல்லுடாமா, அப்பாவும் என்னன்னு பார்க்கிறேன்…” என்றார் சுகுமாரன்.

இருவரும் கேட்க, கேட்க வேதிகாவிற்கு அழுகை தான் வந்ததே தவிர, பேச்சே வர வில்லை.

சும்மா ரோட்டில் போகும் போது யாராவது கேலி பண்ணிருப்பான். இதுக்குப் போய் ஓவர் சீன்னுஎன்று சபரீஷ் முனங்க, அவனின் குரலில் தந்தையும், அண்ணனும் முறைக்க, தன் சிறிய அண்ணனை விளங்கா பார்வை பார்த்து வைத்தாள் ஷர்வேதிகா.

அதற்குள் மீண்டும் யாருன்னு சொல்லுடா…” என்று சுகுமாரன் கேட்க, “ஐயோ…! இந்தப் பேச்சை விடுங்க. எல்லாம் நான் விசாரிச்சுட்டேன். அந்தப் பசங்க யாருனே அவளுக்குத் தெரியலைன்னு சொன்னா. இவளை கவனமா இருக்கச் சொல்லியிருக்கேன். இந்தப் பிரச்சனையை நாம இத்தோடு விட்டுரலாம். யாருன்னு தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க? சண்டையா போட போறீங்க?” என்று மகனையும், கணவனையும் அடக்கினார் சந்திரா.

என்னம்மா பேசுறீங்க? நம்ம பாப்பாவையே சீண்டி இருக்கான். அவனைச் சும்மா விடச் சொல்றீங்களா? அப்படியெல்லாம் விட முடியாது. நீ யாருன்னு சொல்லுடா பாப்பா…” என்று ஆத்திரத்துடன் கேட்டான் ஷர்வா.

சுகுமாரனும் அதை ஆமோதிக்க, “ஷர்வா இது பொண்ணு விஷயம். அப்படியெல்லாம் எடுத்தோம், கவிழ்த்தோம்னு நாம ஒன்னும் செய்ய முடியாது. ஏற்கனவே இவ அந்தப் பையனை அடிச்சுட்டு தான் வந்திருக்கா. அதுவே வேற எதுவும் வினையை இழுத்து விட்டுற கூடாதேன்னு பதறி போய் இருக்கேன். இப்போ நீயும் இதில் தலையிட்டா பிரச்சனை விபரீதத்தில் முடியலாம். நம்ம பொண்ணு பாதுகாப்புதான் நமக்கு முக்கியம். அதனால் இதை இதோட விடு…” என்ற சந்திரா, மான, அவமானத்திற்கும் மேற்கொண்டு தன் பெண்ணிற்குக் கெடுதல் எதுவும் நடந்து விடக் கூடாது என்ற எண்ணத்திலும், மகனையும், கணவனையும் பேசி சமாதானம் செய்து வைத்தார்.

பெண்ணின் பாதுகாப்பு என்றதும் இருவரும் சிறிது அமைதி ஆகினர். “இனி ஒரு தரம் உன்கிட்ட கலாட்டா செய்தா சொல்லு பாப்பா. அதுக்குப் பிறகும் அண்ணா பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்…” என்றான் ஷர்வா.

வேதிகாவும் சரி என்றிருந்தாள். விஷயம் அத்தோடு முடிந்தது என அனைவரும் நினைக்க, அதன் பிறகு தான் பூகம்பமே ஆரம்பித்தது.

இரவு அனைவரும் உறங்க சென்ற பிறகும் தனியாக மாடிப்படியில் அமர்ந்திருந்த தங்கையைப் பார்த்த ஷர்வா தானும் அவளின் அருகில் சென்று அமர்ந்து அவளின் தலையை இதமாகக் கோதி கொடுத்தான்.

பயப்பட ஒன்னுமில்லைடா! அதையே நினைச்சு மனசை குழப்பிக்காதே! திரும்ப அப்படி நடந்தா அண்ணா பார்த்துக்கிறேன்…” என்று சமாதானம் சொல்ல, கலங்கிய கண்களுடன் அண்ணனை நிமிர்ந்து பார்த்தவள், “திரும்பவும் நடக்கும் போலண்ணா…” என்றாள் பயந்த குரலில்.

என்ன பாப்பா?” என்று அதிர்ந்த ஷர்வா நீயே எதுவும் நினைச்சுக்காதேடா. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது…” என்று தேற்ற முயன்றான்.

இல்லண்ணா, நடக்கும்னு தான் பயமா இருக்கு…”

நீ ஏன்மா அப்படி நினைக்கிற?” என்று ஷர்வா கேட்க,

என்னைக் கலாட்டா பண்ணியது யாருன்னு தெரியுமாண்ணா?” என்று கேட்டாள்.

யாரு?” என்று விறைத்த உடலுடன் கேட்டான்.

“சபரீஷ் அண்ணாவோட பிரண்ட்ஸ்…” என்றாள்.