நெஞ்சோடு வலம் வா தேவதையே …

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் -8

சாலை இருட்டாக இருந்தாலும் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார், பைக்கின் ஹெட் லைட் வெளிச்சத்தில் வேடிக்கை பார்த்தபடி மெதுவாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தவளுக்கு ஏனோ மனதுக்கு இதமாக இருந்தது. மெலிதாக ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே நடந்துக்கொண்டிருக்க வீடிருக்கும் தெரு வந்ததும் மனது சுணங்கியது.

‘ப்ச் வீட்டில் எனக்காக யார் இருக்கா…’என்ற எண்ணம் எழுந்ததுமே அதுவரை இருந்த இதம் தொலைந்து மனதில் பாறாங்கல் குடியேறியது போலிருக்க, அவளின் நடை மேலும் மெதுவாகியது. எவ்வளவு தான் மெதுவாக நடந்தாலும் வீடு நெருங்கிவிட உள்ளே சென்று கதவை திறந்துக்கொண்டு உள்ளே செல்ல வீடே காலியாக இருந்தது.

‘சார் காதலியுடன் சுற்றி கொண்டிருக்கிறார் போல…’என்று விரக்தியாக எண்ணிக்கொண்டே தன்னறைக்கு சென்று உடையை மாற்றி ரெப்பிரேஷ் செய்துக்கொண்டு வெளியே வர பசி வயிற்றை கிள்ளியது. 

ஆனால் தனக்கென்று சமைத்து சாப்பிட மனமின்றி தண்ணீரை குடித்துவிட்டு கட்டிலில் படுக்க உறக்கம் வர மறுத்தது. சில நிமிடங்கள் படுக்கையில் புரண்டு விட்டு எழுந்து வெளியே வர அத்வைத் இன்னும் வந்திருக்கவில்லை என்று புரிந்தது. மாடி செல்லும் படிகளில் ஏறி கதவை திறந்துக்கொண்டு மாடிக்கு செல்ல, இளம் காற்று தேகத்தை சுகமாக தழுவியது. 

 அதை அனுபவித்தபடி கையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு வானத்து நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டிருக்க மனது வேலையை பற்றி யோசித்துக்கொண்டிருந்தது.  

வேலை கிடைத்தால் சில மாதங்கள் இங்கே செய்துவிட்டு பின் வேறெங்கேயாவது மாற்றல் வாங்கிக்கொண்டு போய்விட வேண்டும். என்னால் அத்வைத்க்கு தேவையில்லாத சங்கடம். நீதா நல்லவளோ கெட்டவளோ அவள் கணவனின் காதலி. அவளை தான் கணவன் விரும்புகிறான் என்றால் நான் ஏன் அவர்களுக்கு நடுவில் தடைக்கல்லாக இருக்க வேண்டும். ஒருத்தியை காதலித்துவிட்டு தாலி கட்டியதற்க்காக என்னிடம் கணவன் என்ற உரிமையை நிலைநாட்டாமல் அவன் மனதில் இருப்பதை உண்மையாக சொல்லிவிட்டார். 

நான் புரிந்துக்கொள்வேன் என்ற எண்ணத்தினால் தானே என்னிடம் அவரின் காதலை பற்றி சொல்லியிருக்கார், இல்லையென்றால் காலம் முழுவதும் வீட்டில் என்னிடமும், வெளியில் நீதாவிடமும் இரட்டை வேஷம் போட்டிருக்கலாமே. அத்வைத் நேர்மையாக இருக்க போய் எனக்கு இந்த விஷயம் தெரிந்தது. அதை பற்றி யோசிக்காமல் நான் ஏன் அவனிடம் கோபம் கொள்ளவேண்டும். அவளை மனதில் வைத்துக்கொண்டு என்னோடு வாழ்வதை விட, என்னை விட்டு பிரிவதே மேல் என்று தோன்றியதுமே அவளையும் அறியாமல் மனது லேசான மாதிரி ஓர் உணர்வு எழ இதழ்களில் அனிச்சையாக புன்னகை ஜனித்தது. 

அவளின் சிந்தனைகளிடையே யாரோ அவளின் தோளை தொட பயத்தில் துள்ளிக்குதித்து திரும்பினாள். தொட்டவன் கணவன் என்று புரிந்ததும் பயத்தில் படபடத்த நெஞ்சை கையால் அழுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தவளை கோபத்தோடு நோக்கினான். அடுத்த க்ஷணம் அவளின் கையை பிடித்துக்கொண்டு படிகளில் இறங்க ஸ்ரீக்கு கணவனின் நடவடிக்கையின் அர்த்தம் புரியலை .

“ஹேய் கையை விடுங்க…”என்று அவன் இரும்பாக பிடித்திருந்த தன் கையை அவனிடமிருந்து உருவ முயற்சித்துக்கொண்டிருக்க அவளின் முயற்சியை சட்டை செய்யவே இல்லை. 

ஹால் வந்ததும் அவள் கையை உதற, அவன் உதறிய வேகத்தில் ஸ்ரீ தடுமாறி சோஃபாவின் மேல் விழுந்தாள். நிதானமின்றி விழுந்ததால் சோபாவின் மர கைப்பிடியில் அவளின் நெற்றி இடித்துக்கொள்ள,”ம்மா…”என்றாள் தீனமான குரலில்.

“ஹையோ ஸ்ரீ …”என்று பதறி அவளை நெருங்கிய கணவனை கையமர்த்தி தூரத்திலேயே நிறுத்தினாள். 

ஒரு கையால் வலித்த இடத்தை தடவியபடியே,”எதுக்கு இப்போ என்னை மாடியிலிருந்து இழுத்துட்டு வந்தீங்க, இப்படி தள்ளி விடவா …? என்றாள் வேதனையில் முகம் சுணுங்க.

“சாரி …சாரி ஏதோ டென்க்ஷனில் தள்ளி விட்டுட்டேன், சரி சொல்லு இவ்வளவு நேரம் எங்கிருந்தே, உன்னை காணாவில்லைன்னு பயந்து போய் வண்டியை எடுத்துக்கிட்டு ரோட் ரோடா அலைஞ்சி திரிஞ்சிட்டு வர்றேன். நீ எப்போ வீட்டுக்கு வந்தே…? என்று படபடக்க ஸ்ரீயின் விழிகள் கணவனை வினோதமாக நோக்கியது. 

“என்ன என்னையே பேன்னு பார்த்துக்கிட்டு நிற்க்கிறே, எங்கே போனே, எப்போ வீட்டுக்கு வந்தே. வர லேட்டாகும்ன்னு ஏன் போன் செய்து சொல்லலை …”என்றான் மீண்டும்.

கணவனின் கேள்விக்கு ஸ்ரீயின் இதழ்களில் கசப்பான புன்னகை நெளிந்தது.

“நீங்க ஏன் என்னை காணாமல் பயப்படணும், முதலில் நான் யார் உங்களுக்கு…? என்றாள் மிக மிக நிதானமாக.

“என்ன முட்டாள்த்தனமா கேட்கிறே, நான் உன்னோட புரு…”என்று கோபத்தோடு ஆரம்பித்தவன் சட்டென்று தன் பேச்சின் அர்த்தம் புரிந்து நிறுத்தினான். 

“சொல்லுங்க மிஸ்டர் அத்வைத், நான் யார் உங்களுக்கு. ஒ இந்த தாலியை கட்டினதால் புருஷன் என்ற நினைப்பு இருக்கோ…”என்று தாலியை உள்ளிருந்து இழுத்து காட்டி கேட்க அத்வைத் வாயடைத்து நின்றான். 

சூழ்நிலைக்கு பொருந்தாத வண்ணம் சிரித்து,”முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாய், ஆயிரம் பேர் முன்னிலையில் ஒரு உறவையும், அதன் மூலம் ஒரு குடும்பத்தை உருவாக்க, கட்டப்பட்ட கயிறு. அந்த உறவே என்னை கைவிட்ட பிறகு இந்த கயிருக்கு எந்த அர்த்தமும் இருப்பதாக எனக்கு தோணலை. இது வெறுமே மஞ்சள் சாயம் பூசின கயிறு. இது எப்போ வேண்டுமானாலும் என் கழுத்தை விட்டு இறங்கலாம். இதற்கெல்லாம் மதிப்பில்லை சார். அப்புறம் வேறென்ன காரணமிருக்கு உங்கள் பயத்திற்கு…”என்றாள் வெறுமையான குரலில். 

ஸ்ரீ பேச பேச அவனின் வார்த்தைகள் அவனிடமிருந்து விடைபெற்று போக அதிர்ச்சியில் ஊமையாய் நின்றிருந்தான். 

“ஆஹாங் அப்புறம் காலையில் தானே சொல்லிட்டு போனீங்க. உங்க உரிமையில் நான் தலையிட கூடாது, என் உரிமையில் நீங்க தலையிட மாட்டேன்னு. அதன் பிறகு நான் எங்கே போனால் என்ன? எங்கிருந்தால் தான் என்ன? அப்படியே நான் வெளியே போய் பஸ்ஸிலோ, காரிலோ அடிபட்டு செத்து போனால் தான் என்ன? நீங்க எதுக்கு சார் பயப்படணும்…”என்று முடிக்குமுன்னரே அத்வைத் பதட்டத்துடன் குறுக்கிட முயல அவசரமே இல்லாமல் கையமர்த்தினாள்.

“ஓ எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் உங்களை என் வீட்டிலோ, அல்லது உங்க வீட்டிலோ கேள்வி கேட்பார்கள் என்று பயப்படறீங்களா? பயப்படாதீங்க. அப்படி ஏதாவது நடந்தால் உங்கள் மீது தப்பில்லைன்னு நான் ஸ்டேட்மென்ட் கொடுக்கிறேன். கொஞ்ச நாளைக்கு உங்க மனைவி என்ற வேஷத்தை போட்டிருக்கேன். சீக்கிரமே வேஷம் கலைந்ததும் நானே போய்டுவேன். அதுவரைக்கும் உங்களுக்கு எவ்வித பயமும் வேண்டாம், டென்க்ஷனும் வேண்டாம். என் மீது அக்கறையும் வேண்டாம்…” என்று தன் மனதிலிருந்தவைகளை கொட்டிவிட்டு அவனின் பதிலை கூட எதிர்பாராமல் புடைத்து போயிருந்த நெற்றியை தேய்த்துவிட்டபடி அவள் அறையை நோக்கி சென்றவள் நின்று திரும்பினாள்.

“அப்புறம் உங்க போன் நம்பர் என்னிடம் இல்லை. புருஷனா இல்லாதவங்க நம்பரை வைச்சிக்கிறது எனக்கு முக்கியமா தோணலை…”சுருக்கென சொல்லிவிட்டு அவளின் அறைக்குள் புகுந்துக்கொண்டாள். 

மனைவி பேசின பேச்சில் உறைந்து போய் நின்றிருந்தவன், அவளின் பேச்சில் ஒளிந்திருந்த வேதனையும், வலியும் புரிய தளர்ந்து போய் தலையை கையால் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.

அரை தூக்கமும், விழிப்புமாக சோஃபாவில் படுத்திருந்தவன் மெல்லிய கொலுசொலி சத்தத்தில் முழுவதுமாக விழிப்பு தட்ட, வேகமாக எழுந்து அமர்ந்தான். முதல் நாளிரவு மனைவி பேசியதை கேட்டு குற்ற உணர்வு வாட்ட அங்கேயே அமர்ந்திருந்தவன் அப்படியே உறங்கிவிட்டிருந்தான். பொழுது நன்றாக விடிந்திருந்தது. முகத்தை தேய்த்துவிட்டபடி எழ, ஸ்ரீ பூஜை ரூமிலிருந்து வரவும் அவளை ஆவலோடு நோக்கினாள்.

தான் செய்த தவறுக்கு ஒரு பாவமும் அறியாத பெண் வேதனைப்படுகிறாளே என்ற குற்ற உணர்வும், அவளின் தனிமை உணர்வும் அவனை வாட்டவும் தான் அவளிடம் மன்னிப்பு கேட்க நினைத்து அவளை எதிர்நோக்கினான்.

ஆனால் அங்கே ஒருத்தன் இருக்கிறான் என்ற ஸ்மரணை இல்லாமல் ஸ்ரீ தோட்டத்து பக்கம் செல்ல, அத்வைதின் விழிகள் அவளையே பின்தொடர்ந்தது.  குல்மொஹர் மரத்தின் கீழே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்தில் ஆழ்ந்து விட, அவளை பின்தொடர்ந்து வந்தவன் அவள் பெஞ்சில் அமர்ந்து புத்தகம் படிக்க தொடங்கியதும் சற்று நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். 

திடிரென்று இவள் ஏதாவது சாப்பிட்டாளா என்ற சந்தேகம் எழ அவளை கேட்கலாமா என்றெண்ணி அவளிடம் செல்ல ஒரு அடி எடுத்து வைத்தான் அடுத்த நொடியே அந்த எண்ணத்தை கைவிட்டு சமையலறை நோக்கி சென்றான். சமையலறை வழக்கம் போல மிகவும் சுத்தமாக எதையும் சமைத்த மாதிரி இல்லாமல் இருக்கவும் அவனுள் கோபம் சுழன்றடித்தது. 

“இடியட் இன்னும் எத்தனை நாளைக்கு சரியாக சாப்பிடாமல் பட்டினி கிடக்க போகிறாள்…”என்று கோபத்தோடு மனைவியை திட்டியப்படி பிரிட்ஜை திறந்து என்னென்ன இருக்கு என்று சோதித்தான். 

அம்மா வாங்கி வைத்துவிட்டு போன காய்கறிகள், முட்டைகள், பால், பிரிக்கப்படாத சப்பாத்தி மாவு, அரைத்து வைத்த தோசை மாவு என்று எல்லாமே உபயோகிக்கப்படாமல் அப்படியே இருந்தது. 

இந்த மூன்று நாளில் ஸ்ரீ சற்றே மெலிந்த மாதிரி தோன்ற,”ம்ஹீம் இதை இப்படியே விடக் கூடாது. ஸ்ரீயின் உண்ணாவிரதத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்…”என்று பேசியபடி அப்போதைக்கு வேகமாக தயாரிக்க கூடிய உணவான தோசையும், சட்னியும் செய்ய ஆரம்பித்தான் யூட்யூபின் உதவியுடன்.

சட்னி அரைத்து தாளித்து, மாவை ரெடி செய்து வைத்தான். ஒரு குளியல் போட்டுவிட்டு தோசையை ஊற்றி ஹாட்பேக்கில் வைத்துவிட்டு காஃபிக்கு பாலை அடுப்பில் ஏற்றி சிம்மில் வைத்தான். சமைத்தவற்றை டேபிளில் வைத்துவிட்டு மனைவியை அழைத்துவர கார்டனுக்கு சென்றான். 

கொன்றை பூக்கள் தரையெங்கும் உதிர்ந்து கிடக்க, அதில் ஒன்றை எடுத்து அப்படியும், இப்படியும் திருப்பி பார்த்து ரசித்துக்கொண்டிருக்க, அத்வைதின் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. 

அவளை நெருங்கியவன் அழைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, ஏதோ யோசனையிலிருந்தவளின் விழிகள் தன் முன்னே இருந்த பாதங்களில் படிந்து மெல்ல முகத்தை நோக்கி உயர்ந்தது. 

அத்வைதை கண்டதும் கேள்வியாக ஸ்ப்ரிங் மாதிரி எழுந்து நிற்க,”கம் வித் மீ…”என்றுவிட்டு முன்னால் நடக்க ஆனால் ஸ்ரீயோ ஒரு இன்ச் கூட அங்கிருந்து நகரவில்லை. 

ஏதோ தோன்ற திரும்பியவன் மனைவி தன்னுடன் வரவில்லை என்றதும், கொஞ்சமும் யோசிக்காமல் அவளின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே நடக்க ஸ்ரீ அவனிடமிருந்து கையை உருவ முயற்சி செய்யாமல் அவனுடன் சென்றாள் ஏனென்று புரியாமல். 

டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்று அவளை டேபிளில் அமர்த்த, ஸ்ரீயின் விழிகள் கணவனை புரியாமல் நோக்கியது. அவனோ அவளின் பக்கத்தில் அமர்ந்து அவளுக்கும், தனக்கும் தட்டுக்களை வைத்து தோசையை வைத்து சட்னியை பரிமாற அப்பொழுதும் ஸ்ரீயின் பார்வையில் மாற்றம் ஏற்படவில்லை. 

“என்ன அப்படி பார்க்கிறே, முதலில் சாப்பிடு. அதன் பிறகு எந்த கேள்வியென்றாலும் கேள். பசியோடு நாம பேச வேண்டாம். ஹேவ் இட், ஏதோ எனக்கு தெரிஞ்சதை செய்திருக்கிறேன்…”என்று சாப்பிட ஆரம்பித்தான்.

 சில நொடிகள் மௌனமாக சாப்பாட்டை பார்த்துக்கொண்டிருந்தவள் அத்வைத் நிமிர்ந்து புருவத்தை உயர்த்தி சாப்பிடு என்று சைகை செய்யவும் ஸ்ரீயும் சிறு தயக்கத்துடன் சாப்பிடலானாள்.

சாப்பிட்டு முடித்து கையை கழுவிக்கொண்டு அறைக்குள் புக எத்தனிக்க, ஒரு நிமிஷம் என்று நிறுத்தினான் அத்வைத்.

“உட்கார், உன்னிடம் பேசணும், இதோ வர்றேன் …”என்று உள்ளே சென்றவன் வரும் பொழுது இரண்டு காஃபியுடன் வந்தான். 

ஒன்றை மனைவியிடம் கொடுத்துவிட்டு, ஒன்றை தான் எடுத்துக்கொண்டு அவளெதிர் சோஃபாவில் அமர்ந்தான். ஒரு சிப் காஃபியை பருகிவிட்டு கப்பை கையில் வைத்து உருட்டியபடி சில நொடிகள் மௌனித்தான்.

“சொல்லுங்க ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்க…? என்று மௌனத்தை கலைத்தாள். 

“ஹ்ம்ம் சொல்றேன், அதற்கும் முன்னே, நாம இரண்டு பேருக்குள் புருஷன் பொண்டாட்டி என்ற பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு ப்ரெண்டா இருக்கலாமே. இருக்கலாம் தானே. பீ பிரெண்ட்ஸ் …”என்று கையை நீட்ட ஸ்ரீயின் விழிகள் அவனை ஆராய்ச்சியோடு தடவியது. 

“இவ்வளவு சந்தேகமா பார்க்க வேண்டிய அவசியம் இல்லை ஸ்ரீ. உண்மையா தான் கேட்கிறேன் இனி நாம ஒரு நல்ல ப்ரெண்ட்ஸா இருக்கலாம் தானே…”

“ஹ்ம்ம்…”என்று கையை குலுக்க எத்தனிக்க சட்டென்று கையை இழுத்துக்கொண்டான். 

கோபத்தோடு முறைத்தவளை கையமர்த்தி,”அமைதி …அமைதி, நாம் ப்ரெண்ட்ஸா இருக்கணும்ன்னா சில பல கண்டிஷன்ஸ் இருக்கு. அதுக்கு ஓகேன்னா நாம ப்ரெண்ட்ஸா இருக்கலாம்…” என்றான் அமர்த்தலாக.

“ஓ இதுக்கு தான் எலி அம்மணமா ஓடுச்சா…”என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு வேகமாக எழுந்து செல்ல முயல, அத்வைத் எட்டி அவளின் கையை பிடித்து நிறுத்தினான். 

“மேடம் அதற்குள் கோபப்பட்டால் எப்படி, என்ன கண்டிஷன்ஸ்ன்னு கேளுங்க…”

“சரி சொல்லுங்க என்ன கண்டிஷன்ஸ் …? என்றாள் உஷாராக.