நெஞ்சில் வலம் வா தேவதையே…

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் -11

கணவனின் பார்வைக்கு பதில் சொல்லும் முன் வேலைக்காரி மல்லிகா இருவருக்கும் காஃபி கொண்டு வர அத்வைத் மனைவியின் கையை பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமர்த்த ஸ்ரீயின் விழிகள் அகன்றது கணவனின் செய்கையில்.

“அம்மா காஃபி, அய்யா காஃபி …”என்ற மல்லிகாவின் குரலில் சட்டென்று சுதாரித்து, காஃபியை எடுத்துக்கொள்ள அத்வைத்தும் எடுத்துக்கொள்ள மல்லிகா அங்கிருந்து அகன்றாள்.

வேலைக்காரி சென்றதும் சட்டென்று எழ எத்தனிக்க, அத்வைத் அவளின் தோளை பிடித்து அமர்த்தினான்.

“வெளியே எங்கேயாவது போறியா…? என்றான் எதுவுமே நடவாத மாதிரி.

மனதிற்குள் அவனை அர்ச்சித்துக்கொண்டிருந்தவள், அவனின் கேள்வியில் நிமிர்ந்தாள்.

“ஆமாம் நாளை இன்டெர்வியூ, அதான் என் சர்டிபிகேட்ஸ் எடுத்து வர அம்மா வீட்டுக்கு போறேன்…”

“ஓ சூப்பர், கொஞ்சம் வெயிட் பண்ணு நானும் வர்றேன்…”என அவசரமாக மறுத்தாள்.

“வேண்டாம் உங்களுக்கு ஏன் சிரமம். நான் ஆட்டோவில் போயிட்டு வந்துடுவேன்…”என்றவள் அவசரமாக காஃபியை குடித்துவிட்டு கப்பை வைக்க சமையலறைக்கு சென்றாள்.

வேலைக்காரி என்ன சமைக்கட்டும் என்ற கேள்விக்கு சில நொடிகள் திரு திருத்துவிட்டு அப்போதைக்கு மனதில் தோன்றியதை சொல்லி சமைக்க சொல்லிவிட்டு வெளியே வர அத்வைத் ரெடியாகி காத்திருந்தான்.

அவனை பார்வையாலே அளந்து,”நான் தான் வேண்டாம் என்றேனனே …”என்றவளை அதிகம் பேசவிடாமல் அவளின் கைப்பிடித்து வெளியே அழைத்துச் சென்று காரில் ஏற்ற ஸ்ரீக்கு பெரிய அவஸ்தையாக இருந்தது.

காரில் ஏறி அமர்ந்து இஞ்சினை உசுப்பி வீட்டை விட்டு வெளியே வர, ஸ்ரீக்கு தன் பேச்சு இவனிடம் ஈடுபடவில்லையே என்ற எரிச்சலில் இருந்தாள்.

“மேடம் என்ன யோசனையில் இருக்கீங்க. ஏன் நான் உன் வீட்டுக்கு வரக் கூடாதா …?

எரிச்சலில் அமர்ந்திருந்தவள் அவனின் கேள்வியில் மேலும் கடுப்பாக வேகமாக திரும்பினாள்.

“நீங்க ஏன் என் வீட்டுக்கு வரணும். என் வாழ்க்கையே திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிற மாதிரி அந்தரத்தில் தொங்குது. இப்படி நீங்க என்னுடன் வந்தால் என் அப்பா, அம்மாவுக்கு அதிக சந்தோஷமாகிடும். அது எதிர்காலத்தில் நடக்க போகிற அனர்த்தங்களுக்கு நல்லதல்ல. அது மட்டுமில்லை இன்னும் எத்தனை நாள் நீங்க என்னுடன் வர முடியும். அதன் பிறகு நான் தனியாகத்தானே இருக்கணும். இப்போவே நான் என் வேலைகளை தனியாக செய்து பழகினால் தானே நல்லது. போதும் வண்டியை நிறுத்துங்க, நான் இங்கேயே இறங்கிக்கிறேன்…” என்றாள் அலுப்பும் சலிப்புமாக.

அவளை சொல்வது அத்தனையும் சரி என்றாலும் ஏனோ அந்நேரத்திற்கு அத்வைதால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளை தனியாக அனுப்பி அவளுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் என்ற பயம் தான் அவனுள். பிறந்த வீட்டில் அவளை எங்கேயும் அனுப்பாமல் தங்க கூண்டுக்குள் வைத்தது வளர்க்க பட்ட கிளி ஸ்ரீ என்று அவனுக்கு தாயின் மூலம் தெரிந்ததிலிருந்தே அவளை தனியா எங்கேயும் அனுப்ப கூடாது என்று முடிவெடுத்திருந்தான்.

“இப்போ என்ன ஆயிடிச்சு என்று டென்ஷனாகிறே. நான் உன் புருஷனாக இல்லாமல் இருக்கலாம் உன் வரைக்கும். ஆனால் இந்த சமூகத்தில் நீயும், நானும் புருஷன் பெண்டாட்டி. நானிருக்கும் பொழுது நீ தனியாக உன் வீட்டிற்கு சென்றால் உன்னை பெற்றவர்களுக்கு பயமாகவும், கஷ்டமாகவும் இருக்கும். நமக்குள் இருக்கும் பிரச்சினையை ஏன் இப்பொழுது வெளிச்சம் போட்டு காட்டணும். என்னுடன் இருக்கும் வரை என்னுடன் காரில் வந்துவிட்டு போயேன்…”என்றான் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.

“ம்கூம் சொல்லிட்டார் நாட்டாமை. இவர் சொல்படி ஆட நானென்ன பொம்மையா. இவரோடு போனால் தான் சந்தோஷப்படுவாங்களாம்…” என்று கோபத்தில் மெலிதாக முணுமுணுக்க அத்வைதின் விழிகள் அவள் பக்கம் அனிச்சையாக திரும்பியது.

“என்ன ஸ்ரீ உனக்குள் ஏதோ பேசிக்கிறே. கொஞ்சம் சத்தமாவே பேசு. ஏதோ என்னை திட்டறே என்று மட்டும் புரியுது, ஆனால் என்னவென்று தான் தெரியலை…”என்று சிரித்தான்.

அவனின் சிரிப்பில் நெஞ்சம் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கொள்ளை போக துடிக்க, அதை இழுத்து வலிய கோபத்தை வரவழைத்துக்கொண்டு அவனை முறைத்துவிட்டு பார்வையை வெளிப்பக்கம் திருப்பிக்கொண்டாள்.

“ஆ ஸ்ரீ சொல்ல மறந்துட்டேனே, நாளை விடியற்காலை நான் பெங்களுர் போறேன். எப்போ திரும்பி வர முடியும்ன்னு தெரியலை. அதுவரை நீ உன் அம்மா வீட்டில் தங்கிக்கொள்கிறாயா, இல்லை நம் வீட்டிலேயே இருக்கிறாயா…?

அம்மா வீட்டில் தங்கிக்கொள்ள ஆசை தான். ஆனால் தாய் ஏதாவது மாப்பிள்ளையை பற்றி கேட்டால் அப்புறம் எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று என் முகமே எட்டப்பனாக காட்டிக்கொடுத்துவிடும் இப்போதிருக்கிற மனநிலைக்கு.

“இல்லை அம்மா வீட்டுக்கு போகலை…” என்று பட்டு கத்தரித்தார் போல வந்தது பதில்.

“ஓ ! அப்போ ஓகே மல்லிகாவை உனக்கு துணையாக தங்க சொல்லிடறேன்…”என்று முடிக்குமுன்னரே வேகமாக இடையிட்டாள்.

“வேண்டாம் நானே பார்த்துக்கிறேன். யாரும் துணைக்கு வேண்டாம்…”என்றாள் சுருக்கென.

“சரி அதை அப்புறம் பார்த்துக்கலாம். உன் இன்டெர்வியூ நடக்கும் இடத்திற்கு போக தெரியுமா? இல்லை நான் ஹெல்ப் பண்ணவா …? என்றான் அக்கறையுடன்.

“நோ நீட் நான் பார்த்துக்கிறேன்…”என்று மீண்டும் சுருக்கென வர அத்வைத்க்கு கோபம் வருவதற்கு பதில் சிரிப்பு தான் வந்தது அவளின் கோபத்தை கண்டு.

“ஓகே ஓகே , வேலைக்கு அப்பளை செய்த ஆபீஸ் எங்கே இருக்கு …”என்றான் விடாமல்.

ஸ்ரீக்கு அவனின் தொடர் கேள்வி அலுப்பை உண்டு பண்ணியது. பதில் சொல்லாமல் விட்டாலும் அவனும் அப்படியே விடுகிற ரகமில்லை என்று சில நாட்களிலேயே புரிந்து போயிருந்தது அவனின் குணம். அதனால் எரிச்சலை அடக்கி அவனுக்கு தேவையான பதிலை சொன்னாள்.

“கிண்டி …”என்றாள் ஒற்றை வார்த்தையில்.

“ஓ குட், பக்கத்தில் தான். சரி வீட்டிலிருந்து நான் காரை கொண்டு வர சொல்லிடறேன் டிரைவரிடம். நீ அதிலேயே போயிட்டு வந்திடு…” என இம்முறை ஸ்ரீயின் கோபம் அடக்கப்படவில்லை.

அவன் பக்கம் திரும்பி அமர்ந்து,”நான் இன்னும் இன்டெர்வியூக்கு கூட போகவில்லை. இப்பொழுது தான் சர்ட்டிபிகேட் எடுக்க போயிட்டு இருக்கேன். அதற்குள் ஆபிஸ்க்கு எப்படி போவது என்று திட்டமிடறீங்க. அப்படியே எனக்கு வேலை கிடைச்சாலும் எனக்கு கார் தேவையில்லை. ஆட்டோவில் போயிட்டு வந்திடுவேன். நான் தனியாக என் வாழ்க்கையை வாழ நினைக்கிறேன். என் சுதந்திரத்தில் தலையிட கூடாதென்று கண்டிஷன்ஸ் போட்டிருக்கேன் மறந்துட்டீங்களா. மறந்துவிட்டால் நினைவு படுத்திக்கங்க. எனக்கு யாருடைய உதவியோ, சப்போர்ட்டா தேவையில்லை. முக்கியமாக உங்களுடையது…”என்று படபடவென்று பொரிந்துவிட்டு பார்வையை வெளியே திருப்பிக்கொண்டாள்.

‘என்னாச்சு இவளுக்கு நேற்று நன்றாக தானே இருந்தாள், ஆனால் இன்று விடிந்ததிலிருந்து சிடு சிடுவென்று இருக்காள் என்று யோசித்தவனுக்கு அப்பொழுது தான் ஒரு விஷயம் உரைத்தது அவள் நேற்று காலையிலிருந்து பேசியதை கணக்கிட்டால் பத்து வாக்கியத்தில் அடக்கிடலாம். திருமணத்திற்கு முன்பு கூட அவள் பேசி அவன் கேட்டதில்லை. திருமணமான பின்பு முதலிரவில் அவளை பேச விடாமல் நானே பேசியதால் இப்படி இருக்கிறாளோ. ஸ்ரீயை பேச விட்டிருக்கணுமோ. ச்சே எவ்வளவு பெரிய முட்டாள். ப்ச் நிதானமாக என் காதலை பற்றி சொல்லி புரிய வைத்திருக்கணும், அதை விட்டு பெரிய இவன் மாதிரி பேசிட்டேன். பாவம். நான் பேசியதிலும், அவள் வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதிலும் மருகி தனக்குள்ளே ஒடுங்கிட்டாள். நான் செய்த தப்பை எப்படியாவது சரி செய்தாகணும். எப்படி…எப்படி என்று யோசித்தபடி காரை கையாள ஸ்ரீயின் வீட்டை அடைந்தது.

அவளின் வீட்டை கண்டதும் அதுவரை இறுகியிருந்த முகபாவனை சற்று தளர புன்னகையை பூசிக்கொண்டு காரைவிட்டிறங்க, அதற்குள் கார் சத்தம் கேட்டு பத்மாவும், பார்த்திபனும் வெளியே வந்தார்கள். மகளையும், மாப்பிள்ளையையும் கண்டதும் இருவரின் முகமும் ஒரு சேர மலர்ந்தது.

“வாம்மா ஸ்ரீ, வாங்க மாப்பிள்ளை, என்ன திடிரென்று இங்கே தரிசனம் கொடுக்கறீங்க. வர்றதா சொல்லவே இல்லை…”என்று சந்தோஷத்தில் படபடக்க இரு சிறுசுகளும் புன்னகைத்தார்கள்.

இத்தனை நாள் மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் தாயை கண்டதும் அவர் மார்பில் தஞ்சமடைய வைக்க, பத்மாவும் மகளை பாசத்தோடு அணைத்துக்கொள்ள அத்வைதின் இதழ்களில் சிறு புன்னகை.

நால்வரும் உள்ளே செல்ல, மகளையும், மாப்பிள்ளையையும் அமரவைத்து உபசரிக்க, ஸ்ரீ தாயுடன் சமயலறைக்கு சென்றாள். மகளை கண்ட சந்தோஷத்தில் வாய் ஓயாமல் பேசிக்கொண்டு காஃபியை தயாரிக்க, ஸ்ரீக்கு தான் பேச்சே வரவில்லை. தாயின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலும், ஹ்ம்ம் கொட்டியும் சிரித்தும் சாமாளித்துக்கொண்டிருந்தாள்.

மகளிடம் ஒரு கப் காஃபியை கொடுத்துவிட்டு மருமகனுக்கு எடுத்துக்கொண்டு மகளுடன் ஹாலுக்கு வந்தார்.

“மாப்பிள்ளை சொன்னாரும்மா, உன் சர்டிபிகேட்ஸ் எடுக்க வந்தேன்னு. எந்த கம்பெனியில் இன்டெர்வியூம்மா…”என்று விசாரித்த தந்தைக்கு பதில் சொல்லிவிட்டு மீண்டும் தாயுடன் தன் அறைக்கு சென்றாள்.

அலமாரியில் வைத்திருந்த சர்டிபிகேட் அடங்கிய பைலை எடுத்து திறந்து பார்க்க பத்மாவுக்கு மகளின் அமைதி அவரின் வயிற்றில் புளியை கரைத்தது. அவள் கையிலிருந்த பைலை வாங்கி கட்டிலில் போட்டுவிட்டு, அவளை அமர்த்தி தானும் அமர்ந்தார்.

” உன்னிடம் ஏதோ சரியில்லை. மாப்பிள்ளையோடு ஏதேனும் பிரச்சினையா ஸ்ரீ, தனிக்குடித்தனம் போனீங்களே, அங்கே மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துக்கிறாரா. சொல்லும்மா எனக்கு படபடன்னு வருது…”என்று பதற ஸ்ரீயின் உள்ளம் அழுதது.

ஆனால் தன் வலியை மறைத்து முகத்தில் கேலி புன்னகையை பூசிக்கொண்டாள்.

“என்னாச்சும்மா சீரியல் அம்மா மாதிரி பக்கம் பக்கமா டயலாக் பேசறே. எனக்கு என்ன பிரச்சினை வந்துவிட போகுது. உன் மாப்பிள்ளை என்னை கண்ணுக்குள்ளே வைச்சி பார்த்துக்கிறார். என் மாமியார், மாமனார் பற்றி தான் உனக்கு தெரியுமே…” என்று தாயின் கன்னத்தை கிள்ளி கொஞ்சினாள்.

மகளின் கையை பிடித்து விலக்கி,”ஆனால் நீ ஏன் வேலைக்கு போறே. அப்படி போக வேண்டிய அவசியமென்ன. உன் மாமியார் வீட்டில் பணத்திற்க்கா குறைச்சல்…”என்றார் சந்தேகத்துடன்.

“ஹையோ என் மக்கு அம்மாவே, நான் வேலைக்கு போறது என் ஆத்ம திருப்திக்காக. படிச்சிட்டு வீட்டில் உட்கார்ந்திருக்கிறது போரடிக்குதும்மா. அவர் காலையில் போனால் சாயங்காலம் தான் வர்ரார். அதுவரை நான் வீட்டில் போரடிச்சி போய் இருக்கிறேன்னு தான் உங்க மாப்பிள்ளை என்னை வேலைக்கு போக சொன்னார். போதுமா. முதலில் சீரியல் பார்க்கிறதே நிறுத்தும்மா …”என்று பூவாய் சிரிக்க பத்மாவின் நெஞ்சம் குளிர்ந்தது மகளுக்கு ஏதும் பிரச்சினை இல்லையென.

“சரிம்மா ரொம்ப நேரம் இங்கே நாம பேசிட்டிருக்கோம். வாங்க உங்க மாப்பிள்ளை ஹாலில் தனியா இருப்பார்…”என்றபடி பைலை எடுத்துக்கொண்டு தாயுடன் வெளியே வர அத்வைதின் விழிகள் அவளை பார்த்து சிரித்தது.

பெற்றவர்களின் முன்னிலையில் முகத்தை திருப்பிக்கொண்டு செல்லாமல் உதட்டை இழுத்து வைத்து சிரித்து வைத்தாள்.

“ஓகே அங்கிள் நாங்க கிளம்பறோம், வர்றோம் ஆன்ட்டி. ஸ்ரீ கிளம்பலாமா …”என்றபடி எழுந்தான்.

ஸ்ரீயும் பெற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப இருவரும் வெளியே வந்து கார் கிளம்பும் வரை நின்று விடைகொடுக்க, கார் சாலையை தொட்டு போக்குவரத்தில் கலந்தது.

ஸ்ரீ தாயின் கேள்வியை ஆராய்ச்சி செய்துக்கொண்டு யோசித்தபடி விழிகளை வெளியில் பதிந்திருக்க, அத்வைத்தின் பார்வை அவளிடம் போய் போய் மீண்டு வந்தது.

“ஸ்ரீ ஆர் யூ இண்ட்ரோவெர்ட் ஆர் எக்ஸ்டராவெர்ட் …? என்றான் திடிரென்று.

தாயை பற்றிய யோசனையில் மூழ்கியிருந்தவள் கணவனின் கேள்வியில் புரியாமல் திரும்பினாள்.

“ஹெய்ன் ….”

“சொல்லு இதில் இரண்டில் நீ எப்படிப்பட்டவள்…?

“இதை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க. வேஸ்ட் ஆப் டைம். லீவ் இட். உங்க ஆராய்ச்சி, உங்க அக்கறை, ப்ளா, ப்ளா எல்லாம் உங்களை சார்ந்தவர்களோடு வைச்சிக்கங்க. என்னோடு வேண்டாம். உங்களை பொறுத்தவரை நான் வெளியாள், என்னை பற்றி தெரிஞ்சிக்க முயற்சி செய்து உங்க எனர்ஜியை வீணாக்காதீங்க…”

“ஓகே ஓகே டோன்ட் பீ டென்ஷன், மேடம் படு சூடா இருக்கீங்க. ஆனாலும் ப்ரெண்ட்ஸ் என்று ஒப்பந்தம் போட்ட பிறகும் முகத்தை திருப்பிக்கிட்டு போறது ப்ரெண்ட்ஷிப்க்கு அழகில்லை. சரி இப்போ போனா போகுதுன்னு மன்னிச்சி விடறேன். இன்னும் நாலு நாலைஞ்சு நாளைக்கு என் தொல்லை உனக்கு இருக்காது. பிரீயா இரு…”என ஸ்ரீக்கே ஒரு மாதிரி இருந்தது.

“ச்ச்சே நன் ஏன் இப்படி கடுகடுவென்று பேசறேன், பாவம் அவரும் தான் என்ன செய்வார். ஆரம்பத்தில் வீட்டேத்தியா என்னிடம் பேசினாலும் அதன் பிறகு அவரை எனக்காக மாற்றிக்கிட்டு எனக்காக பார்த்து பார்த்து செய்யறார். அந்த வீட்டில் இருக்கும் வரை என்னை கம்போர்ட் ஸோன் ல (comfort zone ) வைக்க முயற்சிக்கிறார். ஆனால் நான் எரிஞ்சி விழறேன், எனக்கு என்னாச்சு…”

வண்டி திடிரென்று குலுங்கி நிற்க தன் யோசனைகளிலிருந்து கலைந்து வண்டியின் வெளியே பார்க்க வீட்டின் போர்டிகோவில் வண்டி நிற்கவும் மௌனமாக இறங்கி பைலுடன் உள்ளே செல்ல, அத்வைதும் அவளை பின்தொடர்ந்தான்.

அவளை எதிர்க்கொண்ட மல்லிகா,”அம்மா டிபன் ரெடி, கொண்டு வந்து வைக்கவா…”என்றாள் பணிவாக.

ஒரு நொடி கணவனை பார்த்துவிட்டு,”எனக்கு பசியில்லை. அய்யாவுக்கு எடுத்து வை. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு…”என்று முணுமுணுத்துவிட்டு அவளின் அறைக்குள் புகுந்துக்கொள்ள மல்லிகாவின் விழிகள் அத்வைதிடம் தாவியது.

“நீங்க எடுத்து வையுங்க. உங்க அம்மாவுக்கு லேசா தலைவலி. அதான் பசியில்லைன்னு சொல்லிட்டு போறாங்க. நான் அவங்களை சாப்பிட அழைச்சிட்டு வர்றேன்…”என்று அவளை அனுப்பிவிட்டு ஸ்ரீயின் அறை கதவை நாசூக்காக தட்டினான்.

கட்டிலில் அமர்ந்து தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு கதவு தட்டும் ஓசை காதில் கேட்காமல் தாயின் பயத்தை பற்றிய நினைவில் இருக்க, அத்வைதே கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தான்.

“ஸ்ரீ …” என்ற குரலில் துள்ளி குதித்து எழுந்தவள் கணவனை புரியாமல் நோக்கினாள்.

“எ …என்ன வேண்டும்…?

“எனக்கு என்ன வேண்டுமென்று கேட்கிறது இருக்கட்டும், நீ ஏன் சாப்பாடு வேண்டாமென்று சொல்லிட்டு வந்தே. எதுவாக இருந்தாலும் தள்ளி வைச்சிட்டு முதலில் வந்து சாப்பிடு. காலி வயிறு சின்ன விஷயத்தை கூட பூதாகரமா காட்டும்…”என ஸ்ரீயின் விழிகள் அவனை முறைத்தது.

இரு கைகளையும் தூக்கி,”ஓகே ஓகே , உன் கோபம் என் மேல் தானே, அதையேன் சாப்பாட்டின் மேல் காட்டறே. நாளை காலையில் இண்டர்வியூ இருக்கு. இப்பொழுது சாப்பிடாமல் படுத்தால் சரியா தூக்கம் வராது. முதலில் வந்து சாப்பிடு, அப்புறம் வந்து கூட என்னை திட்டு. வா ஸ்ரீ ப்ளீஸ் …”என்று தாழ்ந்து போக அதற்கு மேல் அவள் பிகு செய்யவில்லை.

அவனுடன் சென்று டைனிங் டேபிளில் அமர, மல்லிகா இருவருக்கும் சாப்பாடு பரிமாறினாள். மௌனமாக இருவரும் சாப்பிட்டு முடிக்க, ஸ்ரீ எழுந்து கைகழுவிக்கொண்டு மீண்டும் அறையில் தஞ்சமடைய எத்தனிக்க அவளை நிறுத்தினான் ஒரு நிமிஷம் ஸ்ரீ என.

திரும்பியவளிடம்,”பெஸ்ட் விஷேஸ் பார் யூர் இண்டர்வியூ. நாளை காலையில் பெங்களுர் கிளம்பிடுவேன். திரும்பி வந்ததும் சந்திக்கிறேன். எதை நினைத்தும் மனதை போட்டு குழப்பிக்காதே. கோ வித் ப்ளோ மாதிரி லைஃப் போகட்டும். போய் தூங்கு. குட் நைட் அண்ட் பை …”என மெலிதாக தலையை உருட்டிவிட்டு அறைக்குள் புகுந்துக்கொண்ட ஸ்ரீயின் மனதில் புயலடித்துக்கொண்டிருந்தது.