நெஞ்சில் வலம் வா தேவதையே…

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் -13

போனை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவள் சேர்மனை எதிர்பார்க்காததால் திடுக்கிட்டு பின் தன்னை சுதாரித்து மெலிதாக புன்னகைத்தாள்.

“ஹலோ ஸார்…” என்றாள் பார்மலாக.

“தென் ஹவ் இஸ் யூர் ட்ரைனிங் கோயிங், டூ யூ கெட் இட் ஆஷிக்ஸ் டீச்சிங்…”

“எஸ் ஸார், ரீலி ஆஸம், ஹீ இஸ் எ குட் ட்ரைனர், ஐ ம் எ பாஸ்ட் லேர்னர். சோ நோ ப்ராப்ளம்…”என்றாள்.

“ஹ்ம்ம் குட், லன்ச் கொண்டு வரலையா, வாங்க ரெஸ்ட்டாரெண்ட் போகலாம், இன்று என் ட்ரீட் …”என அவசரமாக மறுத்தாள்.

“ஹையோ சாரி ஸார் மறுக்கிறேன்னு நினைக்காதீங்க. எனக்கு ரெஸ்ட்டாரெண்ட்ல சாப்பிட்டு பழக்கம் இல்லை. இங்கே கேண்டீன் இல்லையா…? 

“ஓ இருக்கே…” என்னும் பொழுதே அவளின் கைபேசி மாமனாரின் அழைப்பில் சிணுங்கியது.

அவனிடம் மன்னிப்புகேட்டுக்கொண்டு பேசிவிட்டு வைத்தாள்.

“அங்கிள் வந்திருக்காங்க அழைச்சிட்டு போக. வீடு பக்கத்தில் தான். வர்றேன் சார்…”என்றவள் தன் பேகை மாட்டிக்கொண்டு வெளி பக்கம் செல்ல கார்த்திக் ஆர்யனின் இதழ்களில் ரசனையான புன்னகை மலர்ந்தது. 

மாமனாருடன் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஆபிஸ் வந்தவள் ஆஷிக் சொல்லித்தந்த விஷயங்களில் மூழ்கி போனாள். மொத்தத்தில் அன்றய நாள் மிகவும் சுவாரஸ்யமாக இனிமையாக கழிந்தது. வீட்டுக்கு வந்து மாமியாருடன் பேசியபடி காஃபியை அருந்திவிட்டு அவருடன் பேசிக்கொண்டே சமைத்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தன்னறையில் புகுந்துக்கொண்டாள். 

அதை தொடர்ந்து வந்த ஒரு வாரமும் ஸ்ரீக்கு நிமிடமாய் பறந்து போக, கிட்டத்தட்ட அத்வைதை மறந்தே போனாள். அவள் கணவனாக இருக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் அறுந்து விழும் தொங்கு பாலம் போல தான் அத்வைத்துக்கும், அவளுக்குமான உறவு இருக்கிறது. இதில் அத்வைதை நினைத்து ஏங்குவதில் எந்த புண்ணியமுமில்லை என்ற புரிந்த காரணத்தினாலேயே அவள் மனதளவில் அவனை விட்டு விலக ஆரம்பித்து அதை செயல்படுத்தியும் வருகிறாள். 

அதற்கேற்றாற் போல மாமனாரும், மாமியாரும் அவளை எந்த விதத்திலேயும் தொல்லை செய்வதில்லை. அவளின் மனதறிந்து அவளின் போக்கிலேயே நடந்துக்கொண்டார்கள் இதமாக. ஆனால் மகன் இன்னும் பெங்களூரிலிருந்து வரவில்லை என்ற கவலை பெற்றவர்களுக்கு இருந்ததை அவள் அறியாள். 

 ஆபிஸிலும் அவளுக்கு சில பெண் தோழிகள் கிடைத்தார்கள். ஒருத்தி ஷாலினி திருமணம் நிச்சயமானவள். இன்னொருத்தி நிமிஷா திருமணம் என்பது ஹம்பக் என்ற கொள்கை உடையவள். மூன்றாமவள் தாட்சாயிணி திருமண வாழ்க்கையை மிகவும் ஜாலியாக அனுபவிக்கிறவள். இதில் ஸ்ரீ மட்டுமே திருமணமாகியும் பிரம்மச்சாரியாக இருக்கிறவள். திருமணம் என்ற சொல்லே அவளை பொறுத்தவரை எட்டிக்காயாக மாறிவிட்டது. 

அங்கு வேலை செய்கிற ஆண்களிடம் வேலை விஷயமாக பேசுவதோடு சரி, அனாவசியமாக வழிந்து சிரித்து பேசுவதோ, அவர்களுடன் ஒன்றாக காண்டீனில் அமர்ந்து சாப்பிடுவதோ வைத்துக்கொள்ள மாட்டாள். அதற்காக முகத்தை திருப்பிக்கொண்டு செல்வதும் இல்லை. அவ்வப்பொழுது சேர்மன் கார்த்திக் ஆர்யன் வந்து அவளின் வேலைகளை பற்றியும், எந்தளவு அவள் கற்று தேர்ந்திருக்கிறாள் என்பதை பற்றியும் கேட்கும் பொழுது அதற்கு தேவையான பதிலை தேங்காய் உடைத்தது போல கொடுப்பாள். 

ஆனால் அவளின் பெர்சனல் கேள்வி அவனிடமிருந்து வந்தால் மென்மையாக சிரித்து அதை நாசூக்காக தவிர்த்து விடுவாள். வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து அவளின் உடைகள் கழுத்தை மறைத்த மாதிரி தான் தேர்ந்தெடுத்திருந்தாள். அதற்கு காரணம் அவள் கழுத்திலிருந்த புதுக்கருக்கு அழியாத மஞ்சள் கயிறு. 

ஆபிசில் யாரிடமும் அவளின் பெர்சனல் பற்றி பேசுவதில்லை. அவளின் தோழிகளிடம் கூட. எங்கிருந்து வருகிறாய் என்றால் அங்கிள், ஆன்ட்டி  வீட்டில் தங்கியிருக்கிறேன் என்று மட்டும் தான் சொல்லியிருக்கிறாள். கணவன் தனக்கு இல்லையென்று தெரிந்த வினாடியே அர்த்தமில்லாத அந்த மஞ்சள் கயிறை கழற்ற நினைத்தாள் தான். ஆனால் மாமனார், மாமியார் வருத்தப்படுவார்களே என்றெண்ணி அப்படியே விட்டுவிட்டாள். 

இதற்கு நடுவில் ஒரு நாள் பெற்றவர்கள் வந்து பார்த்துவிட்டு அளவளாவி விட்டு சென்றார்கள். மகள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற அவர்களின் நினைப்பை கெடுக்க மனது வரவில்லை ஸ்ரீக்கு. மூன்று நாள் காரில் அழைத்துச் சென்ற மாமனார் நான்காம் நாள் அவளை அழைத்துச் சென்று ஹோண்டா ஆக்டிவா ஒன்று வாங்கி கொடுத்துவிட்டார். முதல் நாள் அவள் ஒட்டிக்கொண்டு செல்ல அவளுடன் காரில் பின்தொடர்ந்து மருமகள் நல்லபடியாக ஒட்டுகிறாளா, ரூட்டு சரியாக தெரிகிறதா என்று சோதித்தவர் அவள் மிக நேர்த்தியாக ஒட்டவும் அடுத்த நாள் அவளை தனியாக செல்ல அனுமதித்தார். 

ஒரு நாள் ஆபிஸ் முடிந்து பார்க்கிங்கிலிருந்து தன் ஸ்கூட்டியை உருவிக்கொண்டிருந்தவள் அவளின் கைப்பேசி சிணுங்கவும், அத்தை அழைக்கிறார்களோ என்று நினைத்து நம்பரை பார்க்காமல் எடுத்து காதில் வைத்து ஹலோ என்றாள். 

“ஸ்ரீ …” என்ற ஆண்குரல் ஈனசுவரத்தில் கேட்க சட்டென்று காதிலிருந்து போனை எடுத்து நம்பரை பார்த்தாள். 

டிஸ்பிளேயில் ப்ரெண்ட் அத்வைத் என்றிருக்க அவளின் விழிகள் விரிந்தது. 

‘அத்வைத் நம்பரா, இவர் நம்பர் என் போனில் எப்படி வந்தது? யார் ஆட் செய்திருப்பா என்ற யோசனைகளிடையே இரண்டு முறை அத்வைதின் குரல் அழைத்துவிட்டது. 

 அப்பொழுதும் அவளுக்கு குரல் எழும்பவில்லை. இவரின் குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு, ஒரு வேளை தூக்க கலக்கத்தில் பேசுகிறாரா. பெங்களூரிலிருந்து பேசுகிறாரா, இல்லை சென்னைக்கு வந்துவிட்டாரா…

“ஸ்ரீ லைனில் இருக்கியா, நான் உன்னை பார்க்கணும். நம் வீட்டுக்கு வர்றியா…”என ஸ்ரீ சுத்தமாக குழம்பிப்போனாள். 

‘இவர் சென்னை வந்துவிட்டாரா, ஆனால் அத்தை மதியம் பேசும்பொழுது கூட சொல்லவே இல்லையே இவர் வந்ததை பற்றி…

“வேளச்சேரி வீட்டில் தான் இருக்…”என்று பேசும்பொழுதே தொடர்பு துண்டித்துவிட ஸ்ரீக்கு கணவன் பேசியதின் அர்த்தம் புரியவில்லை. 

சென்னைக்கு வந்தவர் ஏன் வேளச்சேரி வீட்டில் இருக்கிறார். ஏன் பள்ளிக்கரணை வீட்டிற்க்கு வரவில்லை. எதற்காக என்னை அங்கே வர சொல்கிறார் என்று குழம்பியபடி வண்டியை வேளச்சேரி வீட்டிற்கு விட்டாள். வீட்டை அடைந்து கேட்டை திறக்க போகும் சமயம் தோட்டக்காரன் பாஸ்கர் ஓடி வந்து கதவை திறந்துவிட்டான்.

“வாங்கம்மா, சின்னய்யா ஊரிலிருந்து வந்துட்டாங்க. மாடி ரூமில் இருக்கார், போங்க…”என ஸ்ரீ புரியாமலே மாடி அறைக்கு சென்றாள். 

இந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் அவள் அத்வைத் அறை பக்கம் சென்றதே இல்லை. இப்பொழுதும் அங்கே செல்ல கால் வரவில்லை. ஆனால் கணவனின் குரலும், வீட்டின் அமைதியும் அவளுள் ஏதோ உறுத்த வேக வேகமாக மாடியேறி சென்று கணவனின் அறையை எட்டி பார்த்தாள். கணவன் கட்டிலில் அலங்கோலமாக படுத்திருக்க ஸ்ரீயின் புருவங்கள் நெரிந்தது. லேசாக கதவை தட்டி அனுமதி கேட்க அத்வைதிடமிருந்து எவ்வித அசைவுமில்லை. 

என்னவோ நெருட, தயக்கத்துடன் உள்ளே சென்று அழைத்தாள். அப்பொழுதும் அவனிடமிருந்து அசைவில்லை என்றதும் பயத்தில் நெஞ்சம் துடிக்க கணவன் அருகில் சென்று தொட அவனின் உடம்பு அனலாய் கொதித்தது.  அவனை தொட்டு உலுக்கு அப்பொழுதும் எவ்வித உணர்வுமில்லாமல் இருக்க வேகமாக அவனை ஆராய்ந்தாள். அத்வைத்துக்கு எவ்வித கெட்ட பழக்கமும் இல்லை என்பது தெரியும். ஆனால் ஏன் அசைவின்றி இருக்கிறார், ஒரு வேளை ஜுரத்தால் இப்படி இருக்கிறாரா என்ற பயம் அவள் வயிற்றில் பட்டாம் பூச்சியாய் பறக்க அத்தை மாமாவுக்கு போன் செய்ய பேகை தேடினாள். அதை கீழே வைத்துவிட்டு வந்தது ஞாபகம் வர கீழே செல்ல எத்தனித்தவள் கணவனின் போன் கட்டிலிலே இருக்கவும் வேகமாக அதை எடுத்து ஓபன் செய்ய பாஸ்வேர்ட் கேட்டது. 

எரிச்சலுடன் அந்த போனை அங்கேயே போட்டுவிட்டு கடகடவென்று கீழே இறங்கி தன் பேகிலிருந்து போனை எடுத்தாள். கணவனின் பெற்றவர்களுக்கு விஷயத்தை சொல்லி அவர்களை வர சொல்லிவிட்டு, ஆம்புலன்ஸுக்கு கால் செய்தாள். பாஸ்கரிடம் சின்னையாவுக்கு உடம்பு சரியில்லை, ஆம்புலன்ஸ் வந்தால் கூப்பிடு என்று சொல்லிவிட்டு மீண்டும் புயல் வேகத்தில் மாடிக்கு சென்றாள்.

 ஆம்புலன்ஸ் வருவதற்குள் கணவனின் அறைக்கு சென்று அவனை கஷ்டப்பட்டு திருப்பி போட்டு அவன் கன்னத்தில் தட்டினாள் பதட்டத்துடன். 

“அத்வைத் எழுந்திருங்க, நான் ஸ்ரீ வந்திருக்கேன். எழுந்திருங்க. என்னாச்சு உங்களுக்கு …”என்று அழுகையோடு அவனை உலுக்க, அப்பொழுதும் அவனிடமிருந்து அசைவில்லை.

அவன் நெஞ்சில் தன் இரண்டு கையையும் வைத்து பலங்கொண்ட மட்டும் அழுத்தியும் எவ்வித ரெஸ்பான்ஸும் கணவனிடம் இல்லை என்றதும் அவளின் சக்தியே வடிந்த மாதிரி இருந்தது. 

அதிக நேரம் அவளை தவிக்க விடாமல் ஆம்புலன்ஸ் வந்துவிட பாஸ்கரை அழைத்து ஆம்புலன்ஸ் பாய் உதவியுடன் கணவனை தூக்கி கொண்டு ஆம்புலன்ஸில் ஏற்ற, ஸ்ரீ தன் உடமைகளை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு வந்தாள். பாஸ்கரிடம் அத்தை மாமா வந்தால் ஹாஸ்பிடலுக்கு வர சொல்லிவிட்டு ஆம்புலன்ஸில் ஏறி செல்ல பாஸ்கர் கவலையோடு கேட்டை மூடிவிட்டு முதலாளிக்காக காத்திருந்தான்.

உணர்வின்றி படுத்துக்கிடந்த கணவனின் கையை தன் கைக்குள் அடக்கி, அவனின் முகத்தையே கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆம்புலன்ஸ் ஹாஸ்பிடலில் நின்றதும் வார்டபாய்கள் அத்வைத் ஸ்ட்ரெச்சரை தள்ளிக்கொண்டு வார்டுக்கு அழைத்துச் செல்ல ஸ்ரீ வராண்டாவிலேயே தளர்ந்து அமர்ந்தாள். 

அவளால் அத்வத்தை அப்படி ஒரு நிலையில் பார்க்க முடியாமல் கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிந்தது. அடுத்த சில நொடிகளிலேயே அரவிந்தனும், வத்ஸலாவும் பதறியடித்துக்கொண்டு வர, அவர்களை கண்டதும் ஆற்றாமை தாளாமல் ஸ்ரீ மாமியாரின் மார்பில் தஞ்சமடைந்தாள்.

சில மணி நேரங்கள் மிகவும் கனமாக நகர்ந்து செல்ல மூவருக்குமே மூச்சு விட மிகவும் சிரமமாக இருந்தது. அத்வைதை டாக்டர் சோதித்து கொண்டிருக்க ஸ்ரீக்கு நிலைகொள்ளவில்லை. இன்டென்சிவ் கேர் யூனிட்டின் கதவின் கண்ணாடி வழியாக கண்ணை பதித்து நினைவை இழந்து பொம்மை போல படுத்துக்கிடந்த கணவனை காண காண நெஞ்சம் துடித்தது. 

ஒரு வழியாக மூவரின் தவிப்பை டாக்டர் வெளியில் வந்து முடிவுக்கு கொண்டு வந்தார். 

“டாக்டர் என் மகன் எப்படி இருக்கான், ஏன் இப்படி சுயநினைவில்லாமல் இருக்கான்….”என்று வத்ஸலா படபடக்க அரவிந்தன் மனைவியின் தோளை ஆதரவாக அழுத்தினார். 

“உங்க பிள்ளைக்கு ஹை பீவர், அதுவுமில்லாமல் லோ ப்ரெஷர், ப்ளஸ் ஏகப்பட்ட மன உளைச்சல் எல்லாம் சேர்ந்து அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கு. நாங்க ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கோம். இன்னும் சில மணி நேரங்களில் அவருக்கு மயக்கம் தெளிந்துவிடும். இப்போ போய் பார்க்கிறது என்றால் போய் பாருங்க. ஆனால் டிஸ்டர்ப் பண்ணாதீங்க…”என்று அறிவுறுத்திவிட்டு செல்ல மூவருமே கவலையுடன் உள்ளே சென்றார்கள். 

சில நொடிகள் மகனையே கவலையோடு பார்த்துக்கொண்டிருந்த மூத்தவர்களை நினைத்தும், கணவனை நினைத்தும் ஸ்ரீக்கு கவலையாக இருந்தது.  விழிகள் கணவனையே பார்த்துக்கொண்டிருந்தாலும் டாக்டர் சொன்ன லோ ப்ரெஷர், மன உளைச்சல் என்ற வார்த்தைகள் அவளுள் யோசனையை உற்பத்தி செய்தது.

லோ ப்ரெஷர் வர என்ன காரணம், அதைவிட இவருக்கு என்ன மன உளைச்சல். இவர் வேலை விஷயமாக தானே பெங்களூர் சென்றார், அங்கே ஏதும் கம்பெனியில் பிரச்சினையா? அதனால் உண்டான மன உளைச்சலா. இவர் ஏன் இந்தளவு ஸ்ட்ரெஸ் ஆகணும். பிரச்சினை ஏதாவது என்றால் மாமாவிடம் டிஸ்கஸ் செய்தால் அவர் சொல்யூஷன் சொல்ல போகிறார். அத்வைத் ஏன் இந்தளவு கவலைப்பட்டு உடம்பை கெடுத்துகிறார் என்ற யோசனையில் இருந்தவளை நர்ஸின் குரல் இந்த உலகிற்கு அழைத்து வந்தது. 

“விசிட்டிங் ஹவர்ஸ் முடிஞ்சி போச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரை வார்டுக்கு மாற்றிடுவோம். அவருடன் ஒரு அட்டெண்டர் தான் தங்க முடியும். யார் தங்கறீங்களோ மற்றவங்க கிளம்புங்க…”என்று சொல்லிவிட்டு அத்வைதின் ஐவியை சோதித்துவிட்டு வெளியில் செல்ல அரவிந்தன் இரு பெண்களையும் நோக்கினார். 

“நான் பார்த்துக்கிறேன் வத்சு, நீ ஸ்ரீயை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு போ. நாளை காலையில் வந்தால் போதும்… “என ஸ்ரீ ஆட்சேபித்தாள். 

“இல்லை மாமா நான் பார்த்துக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிட்டு காலையில் வாங்க…”என வத்ஸலா பலமாக மறுத்தார். 

“நீ காலையில் ஆபிஸ் போகணும் ஸ்ரீ, நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. நான் பார்த்துக்கிறேன், அத்தையை அழைச்சிட்டு போ…”என அவளின் விழிகள் மாமியாரை உதவிக்கு கோரியது பரிதாபமாக. 

அவளின் மன நிலை புரிந்து,”அரவிந்த் நாம போயிட்டு காலையில் வரலாம். அதான் ஸ்ரீ சொல்றாளே. அவள் பார்த்துப்பாள். வாங்க …”என்று கணவரை வெளியில் அழைத்துச் செல்ல ஸ்ரீ ஒரு பெருமூச்சுடன் கணவனின் கட்டிலின் அருகே சேரை இழுத்துபோட்டுக்கொண்டு அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அத்வைதை வார்டபாய்கள் மூலமாக நர்ஸ் ஸ்பெஷல் வார்டிற்கு மாற்ற, ஸ்ரீக்கு காண்டீனிலிருந்து சாப்பாடு வாங்கி கொடுத்து அவளை சாப்பிட வைத்த பிறகு தான் அரவிந்தன் தம்பதிகள் கிளம்பினார்கள். கணவன் கண் விழிப்பான பல மணி நேரம் காத்திருந்து அவன் பக்கத்திலேயே ஒற்றை சோபாவை இழுத்து போட்டு அமர்ந்திருந்தவள் களைப்பில் தன்னை மறந்து உறங்கிவிட்டாள். 

திடிரென்று ஏதோ உறுத்த விழிகளை திறந்தவள் கணவனின் விழிகள் தன் மீதே நிலைத்திருக்கவும் அவளின் உறக்கம் உடனே கலைந்து போனது. 

“எப்படி இருக்கீங்க அத்வைத் , என்னாச்சு உங்களுக்கு…? இப்போ எப்படி இருக்கு …? என்னும் பொழுதே அவளின் விழிகளிலிருந்து கண்ணீர் கன்னங்களில் பயணிக்க அத்வைத் மனைவியின் கைகளை பிடித்து அழுத்தினான்.

“எனக்கு ஒன்றுமில்லை ஸ்ரீ, லோ பிரெஷர்ன்னு நினைக்கிறேன். அதான் உன்னிடம் பேசிட்டிருக்கும் பொழுதே மயங்கிட்டேன். பயப்படாதே…”என்று பேசும்பொழுதே அத்வைதின் விழிகள் களைப்பில் மூடியது. 

கணவனின் நிலை ஸ்ரீயை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.