நெஞ்சில் வலம் வா தேவதையே …

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் -12

பலமணி நேரம் தன் எண்ணங்களோடு போராடிவிட்டு கண்ணயர்ந்தாள். வைத்த அலாரத்தின் உதவியால் காலை ஏழு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு கீழே வர மல்லிகா அவளை எதிர்க்கொண்டாள்.

“அம்மா காஃபி எடுத்திட்டு வரட்டுமா…? என மெலிதாக தலையை உருட்டிவிட்டு பூஜை ரூமுக்கு சென்று விளக்கேற்றி இந்த வேலை கிடைக்க வேண்டுமே என்ற வேண்டுதலை வைத்துவிட்டு வெளியே வர மல்லிகா அவளுக்கு காஃபியை நீட்டினாள்.

நன்றி சொல்லி எடுத்துக்கொண்டவளிடம்,”அம்மா என்ன டிஃபன் செய்யட்டும்…”என்று வினவ ஸ்ரீக்கு சாப்பிட மனதில்லை.

இந்த காபியே வயிற்றை சமாதானப்படுத்திவிடும். மதியத்திற்கு போகிற இடத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்ற தனக்கு டிபன் வேண்டாம் என்றவள் மல்லிகாவின் பதிலை எதிர்பாராமல் தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள். அடுத்த சில நிமிடங்களில் கல்கட்டா காட்டன் சாரியில் ரெடியாகி, நீள கூந்தலை ஒரு ரப்பர் பேண்ட்டில் அடக்கி, பேக், பைல் சகிதம் வெளியே வர மல்லிகா ஜீனி பூதம் மாதிரி அவள் முன் வந்து நின்றாள்.

ஒரு நொடி மல்லிகாவை யோசனையுடன் நோக்கிவிட்டு,”மல்லிகா நீ ஒரு வாரத்திற்கு லீவ் எடுத்துக்கோ. சார் ஊருக்கு போயிருக்கார். நானும் வேலை முடிந்து என் மாமியார் வீட்டுக்கு போய்டுவேன். அதனால் நான் போன் செய்த பிறகு வந்தால் போதும்…”என்றவள் தன் பேகை திறந்து கொஞ்ச பணத்தை எடுத்து நீட்ட அதை சந்தோஷமாக வாங்கிக்கொண்டாள்.

உள்ளே சென்று தன் பேகை எடுத்துக்கொண்டு வந்து,”சரிம்மா நான் கிளம்பறேன், நீங்க இங்கே வந்ததும் போன் பண்ணுங்க…”என மெலிதாக தலையை உருட்டினாள்.

மல்லிகா தன் பையுடன் வெளியே நடக்க ஸ்ரீ பெருமூச்சுடன் வீட்டை பூட்டிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்து சாலையில் சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள்.

தான் போக வேண்டிய இடத்தை சொல்லிவிட்டு ஆட்டோவில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டு விழிகளை சாலையில் பதித்திருந்தாலும் மனமோ இந்த வேலையை கிடைக்க வேண்டுமே என்று பரிதவிப்பாக இருந்தது. அடுத்த சில நொடிகளிலேயே ஆட்டோ அவள் சொன்ன கம்பெனியின் முன் நிற்க பணத்தை கொடுத்துவிட்டு நிமிர்ந்து ஒரு முறையை கம்பெனியை பார்த்தாள்.

வீட்டிலிருந்து மிகவும் அருகில் இருக்கிறது, கம்பெனியும் பார்க்க டீசண்டாக இருக்கு. இங்கே பிளேஸ்மென்ட் கிடைத்தால் நன்றாக இருக்கும். கடவுளே என் வாழ்க்கையில் இருக்கிற பிரச்சினைகளை ஓவர்கம் செய்து மூவ் ஆன் ஆகணும்ன்னு நினைக்கிறேன். அதுக்கு இந்த வேலை எனக்கு மிகவும் அவசியம். நீ தான் உதவணும் என்று மனதிற்குள் கடவுளை வேண்டிக்கொண்டு கம்பெனியின் உள்ளே அடியெடுத்து வைத்தாள்.

பெரிய ஹால் நடுவில் சிறிய கேபினிலிருந்த ரிசப்ஷன் பெண்ணிடம் தான் வந்த நோக்கத்தை கூற, அவள் போன் எடுத்து யாரிடமோ பேசிவிட்டு அவளை உள்ளே போக சொன்னாள். பிரம்மாண்டமாக இருந்த கண்ணாடி தள்ளு கதவை திறந்துக்கொண்டு உள்ளே செல்ல இரண்டு பக்கமும் வரிசையாக நிறைய கேபின் அமைக்கப்பட்டிருந்தது. அதில் நிறைய பேர் அமர்ந்து மும்மரமாக வேலை பார்த்துக்கொண்டிருக்க, அந்த ஹாலில் கம்ப்யூட்டர் கீ போர்டு சத்தம் மட்டும் தான் கேட்டது. இத்தனை பிரம்மாண்டமான ஆபிஸை கண்டதும் அவளுள் சிறு மிரட்சி உண்டானது. ஆனால் உடனேயே தன் பயத்தை தலையில் தட்டி அடக்கி, தனக்குள் பீ பிரேவ் என்று உருபோட்டபடி முடிந்தவரை பயத்தை வெளிக்காட்டாமல் நிமிர்ந்து நடந்தாள்.

சேர்மன் ரூம் கதவில் கார்த்திக் ஆர்யன் என்ற பெயர் வெள்ளி போர்டில் தங்க எழுத்துக்களாக மின்னியது. நாசூக்காக தட்டி அனுமதி கேட்டு உள்ளே செல்ல முப்பது வயது மதிக்க இளைஞன் அமர்ந்திருக்க, அவளை காலை வணக்கம் சொல்லி வரவேற்று அமரவைத்தான்.

பதிலுக்கு காலை வணக்கத்தை சொல்லி அமர்ந்தவளை தன் பைலை அவளிடம் நீட்ட, அதை வாங்கி விழிகளை ஓட்டினான்.

சில நிமிடங்கள் கழித்து நிமிர்ந்தவன்,”சோ யூ ஆர் ஸ்ரீ நிஹா, ஹ்ம்ம் வெரி இம்ப்ரெஸ்ஸிவ், நீங்க டேட்டா சைன்டிஸ்ட் போஸ்ட்க்கு தானே அப்பளை செய்தீங்க ரைட் …”என்றவன் சில கேள்விகளை கேட்க ஸ்ரீ சற்றும் தயங்காமல் பதில் சொன்னாள்.

“வெல் உங்களுக்கு ஒரு மாசம் ட்ரைனிங் கொடுப்போம். அதன் பிறகு உங்க போஸ்ட் கன்பார்ம் ஆகும். சாலரி பேக்கேஜ் எல்லாம் இந்த கான்டராக்டில் இருக்கு. படிச்சி பார்த்துட்டு சைன் பண்ணுங்க. இரண்டு நாள் கழித்து நீங்க ஜாயின் செய்தால் போதும். காங்கிராட்ஸ் …”என்று புன்னகையுடன் கையை நீட்ட ஸ்ரீ அமர்த்தலாக குலுக்கினாள்.

“தேங்க் யூ ஸார் …”என்று நன்றிகூறிவிட்டு தன் பைலை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி செல்ல கார்த்திக்கின் விழிகள் அவளை சுவாரஸ்யமாக வருடியது.

கம்பெனியை விட்டு வெளியே வர ஸ்ரீக்குள் பெரும் நிம்மதி பரவியது. என் எதிர்கால வாழ்க்கைக்கு வேலை கிடைத்துவிட்டது. இனி அப்பா அம்மாவிடம் நடந்தது பொம்மை கல்யாணம் என்று சொல்லி அவர்களை கன்வின்ஸ் செய்துவிட்டால் பிரச்சினை சால்வ்ட். இந்த கம்பெனியின் பிரான்ச் பெங்களூரில் இருப்பதால் கொஞ்ச நாள் கழித்து அங்கே மாற்றல் வாங்கிக்கொண்டு போய்விடலாம். யாரையும் தேவையில்லாமல் சந்திக்க வேண்டி வராது. அம்மாவையும், அப்பாவையும் அங்கேயே அழைச்சிட்டு போய்டலாம். அத்வைத்துக்கும் என்னால் பிரச்சினை இருக்காது. அவர் ஆசைப்படி நீதாவை திருமணம் செய்துக்கட்டும்.

“ஆட்டோ வேண்டுமா…”என்ற கேள்வியில் தூக்கிவாரி போட நிமிர்ந்தவள் தன் முன்னே ஒரு ஆட்டோ நின்று கொண்டிருக்கவும் தான் புரிந்தது. கம்பெனியிலிருந்து யோசித்தபடியே ரோட்டில் நடந்து வந்துக்கொண்டிருக்கிறோம் என.

ஆமாம் என்றபடி ஏறி அமர்ந்து வீடு முகவரியை கூற ஆட்டோ சீறிக்கொண்டு பாய்ந்தது அவளது வீட்டை நோக்கி. வேலை கிடைத்த திருப்தியில் உலகமே அழகாக தெரிய இதழில் உறைந்த புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு வர வீடு நெருங்கியதும் தன் கைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்து விட்டு இறங்கி கேட்டை திறந்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

வீட்டை திறந்து உள்ளே சென்று சோஃபாவில் அமர்ந்து சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தவளுக்கு பசியெடுக்க, சமையலறைக்கு சென்று சாப்பிட என்ன இருக்கு சோதித்தாள். ஏதும் இல்லாததால் இருந்த காய்கறிகளை வைத்து வெஜ் பிரியாணி செய்து சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்று படுத்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள்.

திடிரென்று கேட்ட காலிங் பெல் சத்தத்தில் உறக்கம் கலைந்தது ஸ்ரீக்கு.

“யார் இந்த நேரத்தில், ஒரு வேளை அத்வைத் வந்துவிட்டாரா…”என்று தனக்குள் பேசியப்படி பக்கத்திலிருந்த கைபேசியை எடுத்து பார்க்க மணி மூன்றாகி இருந்தது.

‘அவர் காலையில் தான் பெங்களுர் கிளம்பினார், அதெப்படி வேலை முடிந்து இந்த நேரத்திற்கு திரும்ப முடியும். அது மட்டுமில்லை அவர் எப்பொழுது வர முடியுமென்று சொல்லவே இல்லையே. ஒரு வேளை மல்லிகாவா’ என்று யோசித்தபடி முகத்தை கழுவி துடைத்தபடியே கதவை நெருங்கி பீப் ஹோல் வழியாக பார்த்தாள்.

வெளியே நின்றிருந்த மாமனார், மாமியாரை கண்டதும் ஸ்ரீயின் முகம் மலர்ந்தது. வேகமாக கதவை திறந்து அவர்களை உள்ளே வரவேற்றாள்.

“என்னம்மா தூங்கிட்டு இருந்தியா, தொல்லை செய்திட்டோமா …”என்று கேட்டபடி வந்த மாமனார் ஹால் சோஃபாவில் அமர, வத்ஸலாவின் விழிகள் வீட்டை அலசியது.

“ஒரு இன்டெர்வியூக்கு போயிட்டு வந்தேன் மாமா, அதான் களைப்பில் தூங்கிட்டேன், நீங்க ராமேஷ்வரத்தில் இருப்பதாக நேற்று அத்தை சொன்னாங்க. இன்று இங்கே இருக்கீங்க? எப்போ வந்தீங்க…?

“நேற்று நைட்டே அங்கிருந்து கிளம்பிட்டோம். உன் குரலில் சுரத்தே இல்லைன்னு உன் அத்தைக்கு அங்கே நிலைகொள்ளவில்லை. சரி அத்வைத் உன்னிடம் சரியா நடந்துக்கிறானா …?

அவரின் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வதென்று அவளுக்கு தெரியவில்லை. புருஷனாக இல்லை, ப்ரெண்டாக இருக்கிறார் என்று சொல்வதா? இல்லை நீதாவின் காதலனாக இருக்கிறார் என்று சொல்வதா ..?

“என்ன ஸ்ரீ மாமா கேட்ட கேள்விக்கு யோசிக்கிறே. சரி அத்வைத் ஆபிஸ் போய்ட்டானா ? மதியம் சாப்பிட வந்தானா …? என்று விசாரிக்க ஸ்ரீயிடம் இந்த கேள்விக்கும் பதில் இல்லை.

“சொல்லும்மா எங்கே அவன்…”என்று கேட்டவர் கைபேசியை எடுத்து அத்வைத்க்கு அழைக்க ரிங் செல்லாமல் கன்னடத்தில் ரெகார்டர்ட் வாய்ஸ் பேச வத்ஸலா காதிலிருந்து போனை எடுத்து பார்த்தார் குழப்பமாக.

“என்னங்க இது ஏதோ ஒரு பாஷையில் பேசறாங்க, என்ன பேசறாங்கன்னே புரியலையே …” என அரவிந்தன் சிரித்தார்.

“அது கன்னடா, ரோமிங் கால்…”என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டிருந்தவர் சட்டென்று ஏதோ தோன்ற,”அத்வைத் ஊரில் இல்லையா, பெங்களூர் போயிருக்கானா…?

ஸ்ரீ தயக்கத்துடன் ஆமாமென்று தலையை உருட்ட அரவிந்தனுக்கு கோபம் தலைக்கேறியது.

“என்ன முட்டாள்த்தனம், இங்கே புது பொண்டாட்டியை தனியே விட்டுட்டு இவன் ஏன் பெங்களுர் சென்றான்…”என்றவர் மருமகள் தங்களையே பார்த்துக்கொண்டு நிற்கவும் அவளிடம் திரும்பினார்.

“நீ சாப்பிட்டியா ஸ்ரீ …”என்று விசாரித்து பதிலை பெற்றுக்கொண்டு, “காஃபி போடும்மா..” என்றார்.

“இதோ அத்தை …”என்றவள் சமயலறைக்கு செல்வதை பார்த்துவிட்டு, கணவரிடம் திரும்பினார்.

“அந்த மேனாமினுக்கி எனக்கு போன் செய்தாள் அரவிந்த் நேற்று. உன் பையனை பிரிச்சி சீக்கிரமே பெங்களூருக்கு அழைச்சிட்டு போய்டுவேன்னு. ஒருவேளை அவளுடன் தான் போயிருக்கானா இவன். இருங்க அவளுக்கு கால் பண்றேன்…”என்றபடி நீதாவின் நம்பருக்கு அழைத்தார்.

அவளின் நம்பரும் என்கேஜ்டா இருக்க, கன்னடா ரெகார்டர்ட் வாய்ஸை கேட்டதும் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“அப்போ நான் நினைச்சது சரி தான். இங்கே நம்ம மருமகளை தனியே விட்டுட்டு அந்த கேடுகெட்டவ கூட இவன் ஜாலியா சுற்ற போயிருக்கான், இவனை என்ன செய்யலாம். இனியும் ஸ்ரீயை இங்கே விட்டு வைப்பது சரி வராது…”என்று கொந்தளிக்க அரவிந்தனுக்கும் அதே எண்ணம் தான்.

“ப்ச் புருஷனையும், பெண்டாட்டியையும் ஒன்று சேர்க்க நாம போட்ட கடத்தல் நாடகம் இப்படி ஊத்திக்கிச்சே. அன்று அவன் பதட்டத்தை பார்த்து நான் கூட அவனுக்கு பொண்டாட்டி மேலே அக்கறையும், காதலும் வந்துடுச்சோ என்று நினைச்சி ஏமாந்துட்டேன்…”என்று வத்ஸலா தளர்ந்து அமர அரவிந்தன் மனைவியை தட்டிக்கொடுத்தார்.

“விடு, ஸ்ரீயை நாம அழைச்சிட்டு போய்டலாம். பாவம் மனதளவில் உடைஞ்சி போயிருக்கிறாள். நம்மிடம் புருஷனை விட்டு கொடுக்க கூட முடியவில்லை. ஹ்ம்ம் தங்கத்துக்கும், தகரத்துக்கும் நாம பெற்ற பிள்ளைக்கு வித்யாசம் தெரியலை…” என்று அங்காலாய்க்க ஸ்ரீ காஃபியுடன் வந்தாள்.

“சரி பேச்சை விடு…”என ஸ்ரீ பெரியவர்களை நெருங்கி காஃபியை கொடுத்தாள். அவளுக்கும் ஒரு காஃபியை எடுத்துக்கொள்ள வத்ஸலா அவளை தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்.

“அப்புறம் எப்படி போச்சு இண்டர்வியூ..”என்று வேலை தொடர்பாக பேச தொடங்க சற்று நேரம் அதிலேயே பேச்சு சென்றது.

“சரிம்மா , அத்வைத் இல்லாமல் இந்த வீட்டில் தனியாக இருக்க வேண்டாம். கிளம்பு நம் வீட்டுக்கு…” என்றார்.

அவளுக்கும் அதே எண்ணம் இருந்ததால் உடனே கிளம்ப சம்மதித்தாள்.

அவளை அறைக்கு அனுப்பிவிட்டு, குடித்த காஃபி கோப்பைகளை எடுத்துக்கொண்டு போய் கழுவி போட்டுவிட்டு சமயலறைக்கு சென்று காய்கறி, மாவு, பால் போன்ற ஐட்டங்களை எடுத்து பேக் செய்துக்கொண்டு வெளியே வர ஸ்ரீயும் ரெடியாகி தன் ஏர்பேகோடு வெளியே வந்தாள். அதற்குள் அரவிந்தன் வீட்டின் எல்லா கதவுகளை பூட்டி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சோதித்துவிட்டு வர, மூவரும் வீட்டை பூட்டிக்கொண்டு காரில் கிளம்பினார்கள்.

“அத்தை செடிக்கு தண்ணீர் ஊற்றணுமே…”என்று வருத்தப்பட்டவளை கண்டு வாஞ்சையுடன் புன்னகைத்தார்.

“அதைப்பற்றிய கவலை உனக்கு வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் குடி வர்றதுக்கு முந்தி தோட்டக்காரன் பாஸ்கர் தான் வீட்டையும், தோட்டத்தையும் பார்த்துக்கிட்டான். உங்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து அவனை வரவேண்டாமென்று சொல்லி வைத்திருந்தேன். அவன் வந்து பார்த்துக்குவான். அவன் தான் அங்கிருக்கிற செடியெல்லாம் வைத்தது…” என அமைதியாக கேட்டுக்கொண்டாள்.

மூவரும் அதன் பிறகு மௌனமாகிவிட, வண்டி அவர்கள் வீட்டின் முன் நின்றது.

“நீ போய் ரெஸ்ட் எடும்மா…”என அவளுக்கென்று கொடுத்த அறையில் போய் தஞ்சமடைந்தாள்.

அடுத்த நாள் ஆபிஸ் செல்ல சில உடைகள் வாங்க வேண்டி இருக்க, மாமியாருடன் சென்று தனக்கு தேவையானதை பர்ச்சேஸ் செய்தாள். மாமனாருடன் கேரம், செஸ் விளையாடினாள். பெரியவர்களுக்கு சமைத்து போட்டாள். வீட்டின் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள். பூச்சாடிகளில் பூவை மாற்றி வைத்தாள். இரண்டு நாள் எவ்வித யோசனையுமில்லாமல் ஒரே ஓட்டமாக ஓட, வேலைக்கு செல்லும் நாள் வந்தது.

ஆபிஸ்க்கு ரெடியாகி கீழே வந்தவள் வழக்கம் போல கடவுளை சேவித்துவிட்டு, மாமனார், மாமியார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, சாப்பிட்டுவிட்டு கிளம்ப அவள் மறுத்தும் கேளாமல் அரவிந்தன் அவளை ஆபிஸில் கொண்டு போய் இறக்கிவிட்டார்.

“ஆபிஸ் முடிந்ததும் போன் செய்யும்மா, நீ தனியாக வரவேண்டாம் பழகும் வரை. ரூட்டை பார்த்துக்கோ. உனக்கென்று ஒரு வண்டி வாங்கிடலாம். அதில் ஆபிஸ் போகலாம்…”என புன்னகையுடன் தலையாட்டினாள்.

“ஓகே மா பெஸ்ட் விஷஸ், கான்டீன் இருந்தால் இங்கேயே சாப்பிடு. இல்லையென்றால் எனக்கு கால் பண்ணு. நான் வந்து ரெஸ்ட்டாரெண்ட் அழைச்சிட்டு போறேன்…”என தலையாட்டிவிட்டு மாமனாரிடம் விடைபெற்று உள்ளே சென்றாள்.

அதுவரை மாடி ஜன்னல் அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக் ஆர்யனுக்கு வண்டியில் இருப்பது யாரென்று தெரியாமல் குழப்பமாக இருந்தது.

தன் இருக்கையில் அமர்ந்து ஐ மேக்கையே முறைத்துக்கொண்டிருக்க,”மே ஐ கமின் ஸார்…”என்ற குரல் கேட்டு நிமிர்ந்து அமர்ந்து அனுமதி கொடுத்தான்.

உள்ளே வந்தவள், “குட் மார்னிங் ஸார்…”என்று புன்னகைக்க, கார்த்திக்கும் புன்னகையுடன் காலை வணக்கத்தை கூறினான்.

இண்டெர்வியூ வரும் பொழுது நேட்டிவிட்டியாக காஞ்சி காட்டன் சாரியில் வந்தவள் இன்று காலர் நெக் வைத்த சுரிதார் அணிந்து முடியை பிரெஞ்சு பிளேட் போட்டு ஒதுக்கி, அதிக ஒப்பனையில்லாமல் இதழில் மட்டும் லிப் க்ளாஸ் மினுமினுக்க பார்க்கவே அம்சமாகவும், கம்பீரமாகவும் இருந்தது.

அவனிடம் கான்டராக்ட் சைன் செய்த பேப்பரை நீட்ட, அதை சரி பார்த்தான்.

“உங்க டீடைல்ஸை எச் ஆரிடம் கொடுத்திடுங்க. இன்றிலிருந்து ஆஷிக் தான் உங்கள் ட்ரைனர். வாங்க உங்க கேபினை காட்டறேன்…”என்று எழுந்து கதவை திறந்து வெளியே செல்ல, ஸ்ரீயும் அவனை பின்தொடர்ந்தாள்.

அவளின் கேபினை காட்டிவிட்டு, அங்கிருந்த மற்ற ஸ்டாப்ஸ்க்கு அவளை அறிமுகம் செய்து வைத்துவிட்டு அவளின் கையை குலுக்கி வாழ்த்துக்கூறிவிட்டு அவன் கேபின்க்கு சென்றான். மற்றவர்கள் சொன்ன வாழ்த்துக்களை ஏற்று நன்றி சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது தனக்கும் வேலை கிடைத்துவிட்டது என்றெண்ணி.

சற்று நேரத்திலேயே சேர்மன் சொன்ன ஆஷிக் வர, அவளின் வேலை தொடங்கியது. மதியம் வரை அவளுக்கு பிசினெஸ் பீப்பிளிடம் எப்படி காண்டாக்ட் செய்யணும் என்பதை சொல்லிக்கொடுக்க கவனமாக கற்றுக்கொண்டாள். மதியம் எல்லோரும் லஞ்சுக்கு செல்ல ஸ்ரீக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

மாமனாருக்கு போன் செய்ய பேகிலிருந்து கைபேசியை எடுக்க அவள் முன் ப்ரசன்னமானான் சேர்மன் கார்த்திக் ஆர்யன்.