கண்ணாடி கோணங்கள்

கண்ணாடி கோணங்கள்

“எனக்கு இதுல சம்மதம் இல்ல மாமா” சுமதியின் மெல்லிய குரல் அந்த கசகசப்பின் இரைச்சல்களுக்கு இடையே அழுத்தமாக ஒலிக்க, அங்கிருந்த அனைவரும் அவள் பக்கம் திரும்பினார்கள். சூழலில் சட்டென்று ஏறிய கனம். சில முகங்களில் அதிர்ச்சி. சிலருக்கு சுவாரஸ்யம். அண்ணிகள் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. இதில் மட்டும் ஒற்றுமையாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். நாகராஜனும், பிரதாப்பும் கூட அப்படியே.

நாகா திரும்பி சுமதியையும், அவள் அருகில் எட்டுமாத வயிற்றை தாங்கியபடி கீழே அமர்ந்திருந்த ராகவியையும் முறைத்தான். ராகவியைப் பார்த்த பார்வையில் ‘நீயும் இதுல கூட்டா?’ மறைமுகக் கேள்வி பொதிந்திருந்தது.

“உன் சம்மதத்தை யாரும் இப்ப கேட்கல, போதுமா?” அதுவரை ஆன செலவுகளை எழுதிக் கொண்டிருந்த பிரதாப் விருட்டென்று எழுந்தான். அது என்னவோ சின்னதிலிருந்தே சுமதியைக் கண்டால் அவனுக்கு ஆகாது. அமைதியாக இருக்கிற மாதிரியே இருப்பாள். சந்தர்ப்பம் வந்தால் பாயின்ட் பாயிண்டாக எடுத்து வைத்து எதிரில் நிற்பவரை ஒரு வழி பண்ணிவிடுவாள் என்ற மறைமுக எரிச்சல் நீருபூத்த நெருப்பாக உள்ளே கனிந்து கொண்டே இருக்கும்.

“சும்மா இருப்பா… நான்தான் இருக்கேன்ல” அவனைத் தடுத்த குளித்தலை மாமா “என்னம்மா, வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ இப்படிப் பேசலாமா?” சிறு அதிருப்தியுடன் ஏறிட்டார்.

கூடத்தையும் சமையலறையையும் இணைக்கும் தூணில் சாய்ந்து நின்ற சுமதி, ரொம்ப நாள் யோசித்து வைத்ததை சொல்வது போல முகத்தில் ஒரு உணர்ச்சியும் காட்டாமல் திரும்பவும் சொன்னாள். “எங்க பங்கை விட்டுக் கொடுக்கிற எண்ணம் எதுவும் இல்ல மாமா. எதுவா இருந்தாலும் நாலா போடச் சொல்லுங்க”

“சுமதி, என்னாச்சு உனக்கு? எல்லார் முன்னாடியும்…” தன்னை அடக்க முயன்ற கணவனையும் அதே பார்வை. “எதுவும் சொல்லாதீங்க. எங்க தாய் தகப்பனோட உழைப்பு இந்த சொத்து, இதை நாங்க யாருக்காகவும் விட்டுத் தரத் தயாரா இல்ல” முகிலன் தன் மச்சினர்களைப் பார்த்து கையைப் பிசைந்தான்.

“எனக்குத் தெரியும்டி, எல்லாத்தையும் மொத்தமா சுருட்டணும்கிறதுதான் உன் எண்ணம்னு நல்லா தெரியும்” நாகா அடிக்க வருகிற மாதிரி அருகே வர, பெரிய அண்ணி கவலையாய் தன் இடுப்பில் சொருகியிருந்த கொத்து சாவியைத் தொட்டுப்பார்த்தாள். எட்டு நாட்களாக உரிமைக்காரியாக சொருகிக்கொண்டு கேட்பவர்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்தபடி வீடெங்கும் வளைய வந்த பெருமை!

தன்னை சுற்றி ஏக்கமாக பார்வை ஓடியது.. கல்லுக்கல்லாக காரைக்கட்டிடம், இரண்டாள் சேர்ந்தாலும் அணைத்துப் பிடிக்கமுடியாத மரத்தூண்களும், கம்பி ரேழியிட்ட முற்றமும், கீழே மேலே என எண்ண முடியாத அறைகளும், பழைய இரும்பில் பாரம்பரியமாக சுழல் பூட்டு வைத்த பொக்கிஷ அறையும்…

முன்னே பின்னே இடம் விட்டு நடுவில் சொப்புச் சித்திரமாய் வீடு. பெங்களூரில் ரயில் பெட்டி போன்ற அறைகள் கொண்ட அபார்ட்மெண்டில் வசிப்பவளுக்கு இது எவ்வளவு பெரிய சொர்க்கம்!?

‘சின்னவன் லண்டன்ல, நமக்குதான் முழுசான்னு நினைச்சா, இப்ப?’ பக்கென்று தொண்டையை அடைத்த உணர்வில் அருகில் ஒலித்த சலசலப்புகளை கவனிக்கத் தவறியிருந்தாள்.

பிரதாப் சுமதியை கை ஓங்க, முகிலனை முந்திக் கொண்டு ராகவியின் கணவன் அவனைத் தடுக்க, “நீங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து தானே இத்தனையும் பண்றீங்க? உங்களை வைக்க வேண்டிய இடத்தில வைக்கிறோம்” என்று நாகா கத்த… “ஷ்.ஷ்.. யாரோ விசாரிக்க வராங்க” நொடியில் வீடு அமைதியானது.

வந்தவர்கள் மூத்த மகன்களை கண்டுக் கொள்ளாமல் சுமதியை துக்கம் விசாரித்தது எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்ற, “எப்படியோ கடைசிவரை பார்த்து உங்க அப்பாவை கரை சேர்த்துட்டமா…” ஆறுதல் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.

வழியனுப்பி விட்டு வந்த சுமதி “அத்தை நீங்க வடையை போட்டு எடுங்க, நான் படையலுக்கு எடுத்து வைக்கிறேன்” ஒன்றுமே நடக்கவில்லை போன்ற சுவாதீனத்தில் உள்ளே போய் விட்டாள். கூடவே ராகவியும்.

சர்புர்ரென்று சீறிக்கொண்டு இருந்த சரவெடிகள் காரியம் முடிந்த இரவு வரை தணியாமல் கனன்றபடியே இருந்தன. கிட்டத்தட்ட சாபம் கொடுக்காத ரீதியில் கத்திவிட்டு நாகா பெங்களூருக்கும், பிரதாப் அவன் மாமனார் வீட்டுக்கும் கிளம்பி விட, வீடு அப்படி அப்படியே கிடந்தது.

‘எப்படியோ தொலைஞ்சு போங்க, எங்களுக்கென்ன?’ என்கிறமாதிரி விருந்தினர்களுக்கு முந்தி கிளம்பி விட்ட சகோதரர்களின் பொறுப்புணர்வு புல்லரிக்க வைக்க, உதவ வந்த ராகவியை உட்கார சொல்லிவிட்டு சுமதி ஒழுங்கு செய்தாள். கூட  பிள்ளைகளும், முகிலனும் கை கொடுத்தார்கள்.

அடுத்த நாள் மாலை கிளம்பிய ராகவியை அனுப்பி விட்டு பிறந்த வீட்டில் அக்கடா என்று உட்கார்ந்தபோது வெறிச்சென்று இருந்த அந்த சூழல் சுமதிக்கு வினோத உணர்வு கொடுத்தது.

கல்யாணம் ஆகாத அத்தைகள், பாட்டி என ஜே ஜே என்றிருந்த வீடு, பிறகு பிள்ளைகள் ஒவ்வொருவராய் படிப்பு, திருமணம் என சிறகடித்து பறந்து விட, அம்மா அப்பா மட்டும் என குறுகிப் போனதும், பத்து வருடங்களுக்கு முன்பு சரியாய் ஜீவன் பிறந்த வருடம் அம்மா தவறிய பின் தனி மனிதராக அப்பா நின்றதும்….

“என்ன உட்கார்ந்துட்ட, கிளம்பலாமா?” முகிலன் வண்டியை மாமரத்து நிழலில் நிறுத்தி விட்டு படிக்கட்டில் அமர்ந்திருந்தவள் அருகே வந்தான். “போலாங்க… பசங்க வந்துட்டாங்களா?” “ம்ம்… வீட்டுல விட்டுட்டு டிபன் கொடுத்துட்டு தான் வரேன்.” என்றவன், “சுமதி..” இழுத்தான்.

“இது தேவையா நமக்கு, என்னமோ சொத்துக்கு ஆசைப்பட்டு இத்தனை நாளும் கவனிச்சிக்கிட்ட மாதிரி உன் அண்ணனுங்க இரண்டு பேரும் என் காது படவே கேவலமா பேசுறாங்க. இந்த பேச்சை இங்கேயே விட்டுட்டு வா.. நமக்குள்ளதே நமக்கு போதும்னு இல்லாம…”

“என்ன பேசுறீங்க நீங்க? இது யாரோ மூணாம் மனுஷங்களோட உடமை இல்ல. எங்க அப்பா அம்மாவோடது. எனக்கும் என் தங்கைக்கும் முழு உரிமை இருக்கு.. யார் என்ன பேசினாலும் கவலை இல்ல, நான் ஒன்னு கேட்கிறேன். நம்ம ஜீவனுக்கு இருக்கிற உரிமை உங்க செல்லப்பொண்ணு ஹரிணிக்கு இல்லையா இல்ல நாளைக்கு நீங்க எதுவும் அவளுக்கு தர மாட்டீங்களா?”

“கண்டிப்பா கொடுப்பேன். ஆனா, நம்ம காலம் வேற சுமதி. சொத்து பசங்களுக்குன்னும், கல்யாணம் பண்ணி வைக்கிறதோட பொண்ணுங்களுக்கான கடமை முடிஞ்சுருச்சுன்னும் நினைச்சு வாழ்ந்த போன தலைமுறை உங்க அம்மா, அப்பா. இது தான் இங்குள்ள நடைமுறை. இதை மாத்தி புரட்சி பேசி சொந்தக்காரங்களுக்கு நடுவுல வீணா அசிங்கம் பண்ணாதே”

“அப்ப வாங்கிக்கிற கடமை மட்டும் தான் அவங்களுக்கு… பார்த்துக்கிற கடமை எதுவும் இல்ல, அப்படித்தானே?”

“ஸோ, உங்கப்பாவை நீ பார்த்துகிட்டதால இப்ப அடிச்சு கேட்கிறேன்னு சொல்றியா? கேட்கவே நாராசமா இருக்கு. இதோட இந்த பேச்சை விடு”

“முடியாதுங்க”

இதே பதிலைத் தான் அடுத்த வாரம் அழைத்த பெரியப்பாவிடமும் சொன்னாள். ஏற்கனவே தோல்வி அடைந்திருந்த மாமா இவரை உசுப்பி விட்டிருப்பது தெரிந்தது. “கேஸ் போடுற ஐடியா எல்லாம் இல்ல. ஆனா, அதுதான் முடிவுன்னா அதுக்கும் தயாராகவே இருக்கோம் பெரியப்பா”

“நம்ம பக்கத்துல இதுதான் பழக்கம். நகை, புடவை, சாமான் செட்டு எல்லாம் நீங்க இரண்டு பேரும் எடுத்துக்குங்க… மத்தபடி..” முடிந்தவரை பேரம் நடக்க, “இல்ல பெரியப்பா” அவர் மனதுக்குள் திட்டுவது நன்றாகத் தெரிந்தது. சிரித்துக்கொண்டே போனை வைத்தாள் சுமதி.

எத்தனை சட்டங்கள் வந்தால் என்ன? பெண்களுக்கான சொத்து உரிமையை வீடும் சமூகமும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளாதவரை ஒரு புண்ணியமும் இல்லை.

பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் வியாபாரம் படிந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் பத்திரங்கள் கைமாறின.

“நினைச்சதை சாதிச்சிட்ட. நீ மட்டும் கடைசி வரை நல்ல பேரு வாங்கணும், நாங்க நாமத்தை போட்டுக்கணும்” ஏதோ விட்டுக் கொடுத்ததைப் போல ஏகமாய் புலம்பியபடி அண்ணன்கள் இரண்டு பேரும், “அவங்க கிடக்குறாங்க, நீ ஆக வேண்டிய வேலையை கவனி” என்று சந்தோசமாக ராகவியும் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க, வீடு சுமதி வசம் வந்தது.

திருச்சி ஹைவே அருகே ஐம்பது ஏக்கர் நிலமும், டவுனில் வாடகைக்கு விட்டிருந்த கடைகளும் வீட்டை விட கவர்ச்சிகரமாகத் தோன்ற, விட்டுக் கொடுக்கும் சாக்கில் தங்கமும், வெள்ளியும், வங்கி இருப்பையும் மொத்தமாய் எடுத்துக்கொண்டு சகோதரிகள் இருவரின் பங்காக வீட்டை கொடுத்ததற்கே இத்தனை தள்ளுமுள்ளு!?

வாசல் கதவுக்கு நேரெதிரே மாட்டியிருந்த அப்பாவின் புகைப்படம் சந்தனமாலையுடன் தன்னையே உறுப்பது போலத் தோன்ற, சுமதி பக்கத்தில் வந்து நிமிர்ந்து பார்த்தாள். அந்த கண்கள் அவளை அரூபமாய் ஊடுருவின.

‘அப்பா நீங்களும் சொத்துக்கு ஆசைப்பட்டுதான் நான் பிரச்சனை பண்ணினதா நினைக்குறீங்களா?’ தீர்க்கமான அந்த பார்வையைத் தாங்கமுடியாமல் விழிகளை தணித்துக் கொண்டாள் சுமதி.

எப்படி இருந்த அப்பா? யோகா, தியானம், உடற்பயிற்சி என ஆரோக்கியமாய், திடகாத்திரமாய் உடம்பை கவனித்துக் கொண்டு, அம்மா போய் நான்கைந்து வருடம் வரை கூட தானே சமைத்து சாப்பிட்டு, அப்புறமும் உதவிக்கு ஆள் வைத்தபடி தனிக்காட்டு ராஜாவாய்… நன்றாய் இருந்தவர் வைத்த பொருளை, வைத்த இடத்தை, ஆட்களை, நேரத்தை என கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து போகத் துவங்க, முதலில் வயதுக்குரிய ஞாபகமறதி என்று தான் நினைத்தார்கள்.

சாப்பிட்டு முடித்த ஐந்தாம் நிமிடம் ‘சாப்பாடு கொடு’ என்றும், நடுராத்திரி எழுந்து மருந்து கொடு என்றும் சண்டை போட ஆரம்பித்தபோது சின்னதாய் என்னமோ உறுத்தியது.

ஒரு மாலை வேளை, திடீரென்று சுமதியை அழைத்து “எனக்கு வீட்டுக்குப் போக வழித்தெரியலம்மா” கோவிலுக்கு வந்தவர் அங்கிருந்து தடுமாறிப்பேச, ஏதோ விபரீதம் என மண்டையில் பலமாக உரைக்க, இவள் தான் ஓடினாள்.

மருத்துவர் கொடுத்த ஆலோசனைகளுடன் மருந்துகள் எடுக்கத் தொடங்கிய இரவே தோட்டத்தில் அடமாய் அமர்ந்து வீட்டுக்குள் போக மறுத்தவர் நள்ளிரவில் தெருவில் இறங்கி ஓட, அதற்குமேல் அப்பாவை தனியாக விட முடியாது என்று தன் வீட்டுக்கு அழைத்து சென்றாள்.

மெல்ல மெல்ல சுற்றி இருந்தவர்களை மறந்து, தன்னை மறந்து, சுயம் மறந்து, உணர்வுகள் மறந்து… உதவிக்கு அருகில் யாரும் இல்லாமல் ஒற்றை ஆளாக சுமதி மிகவும் திண்டாடிப் போனாள்.

நாளுக்கு நாள் அப்பாவின் நிலை மோசமாகத் தொடங்கி, ஒருகட்டத்தில் இயற்கை உபாதைகளைக் கூட சொல்லத் தெரியாமல் நின்றது நின்ற இடத்தில், கொஞ்சம் கண்டித்தால் கூட பச்சைப் பிள்ளை போல முடியை பிய்த்துக் கொண்டு, வீம்புக்கு ஆடைகள் களைந்து… அப்பப்பா.. போதும் அவர் பட்ட பாடு. நீரேறிய விழிகளுடன் தன்னைச் சுற்றி ஒருமுறைப் பார்த்தாள்.

வீட்டின் அமைப்பில் லேசான மாற்றங்கள் செய்து அசிஸ்டட் லிவிங் கூடம், ஓய்வு அறை, படுக்கை வசதிகள், இன்டோர் விளையாட்டுத் திடல் மற்றும் கவுன்சிலிங் அறை என சுவரில் வரிசையாக அம்புக் குறியிட்ட அறிவிப்பு பலகைகள் மாட்டியிருந்தன. தோட்டத்தில் சீரான நடைபாதை, அங்கங்கே நான்கைந்து பேர் சேர்ந்து அமர கல் இருக்கைகள்.

“அப்பா மாதிரி எத்தனையோ பேர் வயசான காலத்துல அல்சைமரால் கடுமையா பாதிக்கப்பட்டு கஷ்டப்படுறாங்க. இந்த மாதிரி பெரியவங்களை வைச்சு பராமரிக்க குடும்பத்துல இருக்குறவங்களுக்கு ரொம்ப பெரிய மன உறுதி வேணும். முழுநேரமும் வீட்டுல வச்சு பார்க்கமுடியாம, ஹாஸ்பிடல்லயும் சேர்க்க முடியாம, அதுவும் பெரும்பாலான பிள்ளைகள் வெளியூர்ல இருக்கிற இன்னிய சூழ்நிலைல”

‘முதியோர் இல்லமாக்கா?’ ராகவியும் முதலில் அப்படித்தான் கேட்டாள்.

“கண்டிப்பா இல்ல… நம்ம ஊர்ல புதுசு புதுசா முளைக்கிற முதியோர் இல்லங்கள் போதாதா? நான் சொல்றது முதியவர்களுக்கான ட்ராப்-இன் சென்டர். எளிமையா சொன்னா பெரியவங்களுக்கான ப்ளேஸ்கூல், டே-கேர் மாதிரி.”

“டிமென்ஷியா மறதி குறைப்பாட்டால பாதிக்கப்பட்டவங்களுக்கு வெளிநாடுகள்ல இந்த வித வசதிகள் ரொம்ப பிரபலம். காலைல வந்துட்டு சாயந்திரம் வீட்டுக்குப் போற மாதிரி. சத்தான சாப்பாடு, மருத்துவ வசதி, அவங்களுக்குத் தேவையான நினைவு விளையாட்டுகள், கண்காணிப்புடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள், அவங்க குடும்பத்துக்கு தேவையான கவுன்சிலிங்னு எல்லாம் சேர்ந்த சேவை மையம்”

சுமதி விளக்கியபோது ராகவி “கண்டிப்பா செய்யலாம்கா” ஆர்வமுடன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். ஆனால், இதையே அண்ணன்களிடம் சொன்னபோது ?

‘நாங்க நாலு பேரும் சேர்ந்து ட்ரஸ்ட் அமைச்சு இந்த நல்ல காரியத்தை செய்யணும்னு தான் ஆசை. ஆனா, அவங்க ஒத்து வராத போது, சொத்து கொடுங்கன்னு வற்புறுத்தி வாங்குறது தவிர வேற வழியில்லாம போயிடுச்சு. என்னை மன்னிச்சுடுங்கப்பா…’

தான் நின்ற கோணத்தில் இருந்து அப்பா முகத்தைத் திரும்பிப் பார்த்தவள், அந்த நொடி திகைத்துப் போனாள். நேருக்கு நேராக முகம் பார்த்து சிரிப்பவர் போல அப்பாவின் உதடுகளில் புன்னகை மேவியிருக்க, அந்த கண்கள் வழிப் பாய்ந்த ஒளி கண்ணாடி சட்டத்தின் ஊடே சூட்சமமாய் அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்ததை உணர்வுப்பூர்வமாய் உணர்ந்த அவள் சரீரம் லேசாய் நடுங்கியது.

  • தென்றல் – ஆகஸ்ட் 2019 இதழில் வெளிவந்த சிறுகதை